অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

எட்டாக் கனியாகும் எளிமை

எட்டாக் கனியாகும் எளிமை

எளிமையான வாழ்க்கை என்பது மிகவும் செலவு பிடிக்கக் கூடியதாக மாறி வருகிறது. குளிர்பானங்களும், குடிநீரும் குக் கிராமங்களில் கூட கிடைக்கும் நிலையினை நுகர்வு கலாசாரம் உருவாக்கி வருகிறது,

ஒரு முறை புத்தரிடம் அவரது சீடர் ஒருவர் ஒரு மாற்றுத் துணி கேட்டாராம். உடனடியாக புத்தர் ஏன் நீங்கள் உபயோகப்படுத்திய துணி என்னாயிற்று என்று வினவினாராம். அதற்கு சீடரோ அது கிழிந்துவிட்டது. எனவே, சமையலறையில் பாத்திரம் ஏற்ற இறக்கப் பயன்படும் கரிக்கந்தலாக்கிவிட்டேன் என்றாராம். அப்படியா இதற்கு முன்பு கரிக்கந்தலாக இருந்த துணி என்வானது என்றாராம். அதற்கு சீடரோ உடனடியாக அதனை காலை மிதித்து துவைக்கும் சுரணையாகப் (காலை மிதித்து துடைக்கும் துணி) பயன்படுத்திக்கொள்ளப் போட்டிருக்கிறேன் என்றாராம்.

அடுத்தபடியாக புத்தர் ஏற்கெனவே இருந்த சுரணையை என்ன செய்தீர்கள் என்றாராம். அதனை நன்றாகத் துவைத்து விளக்குகளுக்கான திரிகளாக பயன்படுத்த உள்ளேன் என்றாராம். அப்படியா அந்த அறையைத் திறந்து ஒரு புதிய துணியை எடுத்துக்கொள்ளுங்கள் என்றாராம். அந்த அளவுக்கு எந்த ஒரு பொருளையும் வீணாக்காது பயன்பாட்டுக்குள்ளாக்கும் கலாசாரப் பெருமை மிக்கது நமது நாடு.

சாப்பிட இலையைப் பயன்படுத்தி, கோயில் பிரசாதங்களை தொன்னையில் கொடுத்து, முதன் முதலாகப் பயன்படுத்திச் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாமல் பயன்படுத்திய தூக்கி எறியும் கலாசாரத்தின் பெருமைக்குரியவர்கள் நாம். ஆனால், இன்றைய நுகர்வு மய கலாசாரம் நமக்கு கொடுத்திருக்கும் கொடை மண்ணை மாசடையச் செய்யும் மறுசுழற்சியினை மறுதலிக்கச் செய்யும் கலாசாரமாகும்.

இன்று கிராமப்புறத்திற்குச் சென்றால் பலரது தாகத்தை தணிப்பதாக அன்னிய நாட்டு பானங்கள் பல நேரங்களில் விருந்தோம்பல் என்ற பெயரில் தனது வீட்டுத் தண்ணீரை கொடுக்கத் தயங்குவோர் பின்பற்றும் வித்தை இது.

எளிமை என்ற வார்த்தை மிகவும் ஆடம்பரமாக போனதன் விளைவால் நாம் அனுபவிக்கும் சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சாதாரண வாழ்க்கை முறையினை தொலைத்ததன் விளைவாக எந்த நேரமும் பணம் செலவழித்தால் மட்டுமே வாழ்க்கையினை நகர்த்த இயலும் என்ற நிலையினை அடைந்துவருகிறோம்.

சில ஆண்டுகளுக்குப் முன்னர். தூய்மையான காற்று, தண்ணீர், பால் என்ற பண்டங்களை விரும்பி கிராமங்களை நோக்கிப் பலரும் படையெடுக்கத் துவங்கினர். இதேநேரத்தில் விவசாயம் லாபமற்றதாகி, விளை நிலங்களைப் பலரும் விற்கவும் முன்வந்தனர். இதன்பயன் விளை நிலங்களில் பலவும் வீட்டுமனைகளாகும் கொடுமையும் நிகழ்ந்தது.

சமீபகாலத்தில் அரசின் நடவடிக்கைகள் இதனை மட்டுப்படுத்துவதாக உள்ளது ஓரு ஆறுதலான விஷயமே. மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்றோரின் புறா திட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தும் வாய்ப்புகள் ஒரு பக்கம் பரிசீலிக்கப்பட்டு வந்தாலும், கிராமப்புறங்களை நகரமயமாக்கத்தின், நுகர்வு கலாசாரத்தின் தாக்கம் கிராமங்களின் சுற்றுச்சுழலையும் மிகவும் மாசடையச் செய்து வருகிறது.

காந்தி, எளிமை போன்ற வார்த்தைகள் எல்லாம் மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்களாகும் போது புத்தராவது அவரது போதனைகளாவது என்று இளம்தலைமுறையினர் கூறுவது எங்கோ காதில் விழுந்தது. நாம் எவ்வளவு செல்வந்தர்களாக வேண்டுமானாலும் ஆகலாம். எவ்வளவு பெரிய வாழ்க்கையையும் வாழலாம்.

ஆனால், உணவையும், தண்ணீரையும், காற்றையும் உபயோகிக்காமல் வாழ இயலாது என்பதை இளைய தலைமுறையினருக்கு யார் போதிக்கப்போகிறோம். ஸ்மார்ட் போனில் உணவைக் கொண்டுவர ஆணைதான் இட முடியும். உணவைத் தயாரிக்க விவசாய விளைபொருள்கள் தேவை என்பது உணவு தயாரிக்கும் ஊழியருக்கு மட்டுமே தெரியும் காலம் வரும் முன் சமூகம் விழித்துக்கொள்ளுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ஆதாரம் : முனைவர் என். மாதவன்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate