பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அழிந்து வரும் வனஉயிரினங்கள்

அழிந்து வரும் வன உயிரினங்களைப் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

அழிந்து வரும் வனஉயிரினங்கள்

முன்னுரை

இயற்கை சூழ்நிலையில் தானாக வளரும் எல்லா உயிரினங்களையும் வன உயிரினங்கள் எனலாம். வீட்டுவளர்ப்பு பிராணிகள், கால்நடைகள், உணவுக்காக வளர்க்கப்படும் பயிர்கள் தவிர்த்து மற்ற அனைத்து தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றை வனஉயிரினங்கள் என்று பொதுவாக அழைக்கிறோம்.

இந்தியாவில் பலவகையான தாவரங்களும், விலங்குகளும் காணப்படுவதற்கு காரணம் பலதரப்பட்ட சீதோஷ்ணநிலை மற்றும் புவியமைப்பும் முக்கிய காரணமாகும்.

இந்தியாவின் வன உயிரின பரவல்

உலகின் 2 சதவிகித நிலபரப்பே இந்தியாவில் உள்ள போதிலும் 8 சதவிகித வன உயிரிகள் இங்கு காணப்படுவதால் உலகிலுள்ள 12 மிகப் பெரிய பல்லுயிர் பெருக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. உலகளவில் கண்டறிப்பட்டுள்ள 1.75 மில்லியன் சிற்றினங்களில் இந்தியாவில் மட்டும் 1,26,188 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவில் 10 உயிர் பரவல் மண்டலங்களும், 26 உயிர் பரவல் மாகாணங்களும் இருப்பதால் பலதரப்பட்ட அரிய, அழியகூடிய, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை பாதுகாத்து வருகிறது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மொத்த உயிரினங்களின் எண்ணிக்கை 89,450ற்கும் மேல் ஆகும். இது உலகில் காணப்படும் விலங்கினத்தில் 7.31 % ஆகும். இதே போன்று நமது நாட்டில் 47,000ற்கும் மேற்பட்ட தாவரவகைகள் உள்ளன. இது உலகில் உள்ள தாவரவகையில் 12% ஆகும்.

அபரிதமான பல்லுயிர் பெருக்கப் பகுதி

உலகில் உள்ள அதிக பல்லுயிர் பெருக்க பகுதிகளில், இமயமலையின் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய இரண்டும் இந்தியாவில் உள்ளன.

பல்லுயிர் பெருக்கப்பகுதி என்பது, அதிக அளவிலான உயிர் பெருக்கம், அதிக அளவில் அவ்விடத்திற்கே உரிய இயல்பான உயிரினங்கள் மற்றும் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள் வாழும் பகுதியாகும்.

கிழக்கு இமாலயப்பகுதி

கிழக்கு இமாலயப்பகுதியில் அதிக அளவில் மிகப்பழமையான தாவரங்கள் இருப்பதால் இப்பகுதியை ”சிற்றின உயிர்களின் தொட்டில்” என்றழைக்கப்படுகிறது. இப்பகுதியில் 63 % நிலவாழ் பாலுட்டிகள், 60% க்கு மேலான இந்திய பறவைகள், இவ்விடத்திற்கே உரிய 2 வகையான பல்லியினங்கள், 35 ஊர்வன மற்றும் 68 வகையான இருவாழ்விகளில் 20 வகை உலகிலேயே இங்கு மட்டும் காணப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி

மேற்கு தொடர்ச்சி மலை 1500 கி.மீ. நீளத்தில் மேற்கு கடற்கரையை ஒட்டி உள்ள மலைப் பகுதியாகும். இம்மலைப் பகுதி இந்தியாவில் 5 சதவிகித நிலப்பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. இங்கு 490 மர வகைகள் உள்ளது. இதில் 308 மர வகைகள் இம்மலைப் பகுதியில் மட்டுமே காண கூடியது. இங்கு 75 பேரினத்தை சார்ந்த 245 ஆர்கிடுகள் காணப்படுகின்றன. இவற்றில் 10 பேரினத்தில் உள்ள 112 சிற்றினங்களும், 1500 இருவித்திலை தாவரங்களும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே காணக் கூடியவை.

மேலும், 22 பேரினத்தை சார்ந்த 315 சிற்றினங்கள் அதாவது, 12 வகையான பாலூட்டிகள், 13 வகையான பறவைகள், 89 வகையான ஊர்வன, 87 வகையான இருவாழ்விகள் மற்றும் 104 வகையான மீன்கள் இம்மலைப் பகுதிக்கே உரித்தனவையாகும்.

இம்மலைப் பகுதியிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவுக்கு உள்ளாகி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 235 சிற்றின பூக்கும் தாவரங்கள் அழியும் தருவாயில் உள்ளன. மேலும், சிங்கவால் குரங்கு, நீலகிரி லங்கூர், நீலகிரி வரையாடு, பறக்கும் அணில், மற்றும் மலபார் க்ரே ஹான்ஃபில் போன்றவை இப்பகுதியில் உள்ள அரிய விலங்கினங்களாகும்.

இந்திய வன உயிரிகளின் அழிவிற்கான காரணிகள்

பல்வேறு காரணங்களால் இந்திய வன உயிர்கள் அழிந்து வருகிறது. எண்ணிக்கையிலடங்காத பல சிற்றினங்கள் ஏற்கனவே அழிந்து விட்டது. எஞ்சியிருக்கும் உயிரினங்களில் அதிகமான சதவிகிதம் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தால், இருக்கும் வனங்களெல்லாம் விவசாயத்திற்காகவும், வீடுகளுக்காகவும் மற்றும் பிற தேவைகளுக்காகவும் அழிக்கப்பட்டு வருகிறது.

இந்திய வன உயிர்கள் அழிய முதல் காரணம் அவற்றின் உறைவிடங்கள் அழிக்கப்படுவதே ஆகும். உலகளவில் 89 சதவிகித பறவைகள், 3 சதவிகித பாலூட்டிகள் மற்றும் 9 சதவிகித தாவரங்கள், அவற்றின் உறைவிடங்கள் அழிக்கப்பட்டதால் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது என ஐ.யு.சி.என் ஆய்வு கூறுகிறது.

ஆற்று சூழலமைப்பு, விவசாயம் செய்வதாலும், மண்ணெடுப்பதாலும், திடக்கழிவுகளை கொட்டுவதாலும், கரிம கழிவுகள் கொட்டுவதாலும் பாதிக்கப்படுகிறது. கடல் சூழல் அமைப்பு, உயிரினங்களை சேகரித்தல் மற்றும் பலவகையான நச்சுக்கழிவுகள் கலப்பதாலும் மாசுபடுகிறது.

விலங்குகள், அவைகளின் தோல், உரோமம், தந்தம், கொம்பு, மற்றும் மாமிசம் போன்ற தேவைகளுக்காக வேட்டையாடப் படுகிறது. இதுவே பறவைகள், பாலூட்டிகள், தாவரங்கள் மற்றும் ஊர்வன ஆகியவைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். சில விலங்குகளின் உறுப்புகள் அல்லது மாமிசம் மருத்துவ தன்மை வாய்ந்தது என்ற மூடநம்பிக்கை பல சிற்றினங்கள் அழிய காரணமாகின்றன.

அந்நிய சிற்றினங்களின் வளர்ச்சியால் 350 பறவையினங்களும், 361 தாவர சிற்றினங்களும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. தைல மரங்களும், சில்வர் ஓக் மரங்களும், இயற்கையாக சிற்றினங்களின் வளர்ச்சியை தடை செய்து, நிலப்பரப்பையும் ஆக்ரமித்து கொள்கிறது.

சர்ச்சைக்குரிய சில அரசு சட்ட திட்டங்களும், சில சட்டங்களின் திறனில்லாத செயல்பாடும் வன உயிரினங்களை பாதித்துள்ளன.

காடுகள்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, காடுகளை அழித்து சாலை அமைத்தல், அணை கட்டுதல், தொழிற்சாலைகள் அமைத்தல், காடுகளில் பயிரிடுதல் போன்ற செயல்களால் 4,696 மில்லியன் ஹெக்டேர்ற்கும் மேலான காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. மனிதர்களாலும், இயற்கையான காட்டுத் தீயினாலும் காடுகள் அழிந்து புது உயிரினங்கள் வளர்வதை தடுக்கின்றன.

சதுப்பு நில காடுகள்

இயற்கையாக சதுப்பு நிலங்களில் தாவரங்கள் காணப்படுகின்றன. இச் சதுப்பு நிலங்கள் நதி முக துவாரங்களிலும், அந்தமான் நிக்கோபர் தீவுகளிலும் உள்ளன. உலகின் 7 சதவிகித சதுப்புநில காடு இந்தியாவில் காணப்படுகின்றது. 105 வகை மீன்கள், 20 வகை ஷெல் ஃபிஷ், 229 வகையான கிரட்டேஉஷியன்ஸ் மற்றும் 117 வகையான பறவைகள் உள்ளன. சுந்தர வனப்பகுதி, ராயல் பெங்கால் புலிகளுக்கு இருப்பிடமாக உள்ளன.

“கடலோரத்தில் வளரும் இத்தாவரங்கள், மண் அரிப்பை தடுக்கவும், கடல் கொந்தளிப்பை தடுக்கவும் உதவுவதோடு புயல் காற்றின் வேகத்தை கட்டு படுத்துகிறது. சதுப்பு நிலப் பகுதியில் மண் அரிப்பின் காரணமாக மண் படிதல், விவசாய கழிவு, வண்டல் படிதல், இரால் பண்ணை அமைத்தல், விறகு எடுத்தல் மற்றும் சுற்றுலா தொழில் காரணமாக சதுப்பு நில உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன”.

பவழப் பாறைகள்

பவழப் பாறைகள் விலங்கின வகையை சார்ந்தது. இந்திய கடல்களில் 17 பேரினத்தை சேர்ந்த 200 சிற்றினங்கள் உள்ளன. இவற்றில் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் மட்டும் 179 சிற்றினங்கள் உள்ளன. பவழப் பாறைகள் கடல் அரிப்பை தடுக்கவும் பல வகையான தாவர விலங்கினங்களின் இருப்பிடமாகவும் விளங்குகின்றன.

இந்திய வனஉயிரினங்களின் நிலை

உலக இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆய்வின்படி, உலகளவில் அழிந்து வரும் பறவைகளை பொறுத்தவரை 6ம் இடத்தில் இந்தியா உள்ளது. ஆசியாவில், மிக முக்கியமான 2 சிற்றினங்கள் 20ம் நுற்றாண்டில் அழிந்து விட்டன. இளம்சிவப்பு கொண்டை வாத்து 1935ம் ஆண்டும், சிறுத்தை (1949ம் ஆண்டும் கடைசியாக காணப்பட்டன.

ஹார்ன்பில்

இந்தியா 9 வகையான ஹார்ன்பில்களுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. இவற்றில் 5 வகை இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் காணப்படுகிறது. இதில் 3 வகை அப்பகுதியையே பூர்வீகமாக கொண்டுள்ளது, மற்ற 2 வகை வேறு மாநிலங்களில் அதிகமாக காணப்படுகின்றன. மொத்தமுள்ள 9 வகை ஹான்பில்களில், 8 வகை ஹான்பில்கள் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 1ன் கீழ் வருபவை. காடுகளை புனரமைக்க இப்பறவை விதை பரப்புதல் மூலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே இப்பறவையை பாதுகாப்பது மிக அவசியமாகும்.

கழுகு மற்றும் பருந்து

இப்பறவைகள் மனித வாழிடங்களில் அதிகமாக காணப்படக் கூடியவை. இவை கழிவுகள், இறந்த உயிரினங்களை எடுத்துச் சென்று அப்பகுதியை சுத்தப்படுத்துகிறது. இப் பறவைகளின் கழிவுகள் சிறந்த உரமாக பயன்படுகிறது. இவற்றின் வாழிடமான மரங்களை வெட்டுவதாலும், பூச்சி கொல்லி மருந்துகளை உபயோகிப்பதாலும் இவ்வினங்கள் அழிந்து வருகின்றன.

வரகு கோழி

இந்த பறவை அழிந்து விடும் தறுவாயில் உள்ள பறவையாகும். மழைக் காலங்களில் குஜராத்தின், சௌராஷ்ட்ரா மற்றும் மேற்கு மத்திய பிரதேசத்தில் உள்ள புல்வெளிகளுக்கு வருகின்றன. இப்பறவைகளின் இனவிருத்தி காலம் புல்வெளிகளின் வளமை மற்றும் மழைகாலங்களை பொறுத்து அமைகிறது.

ஹலாக் கிப்பான்

இப்பாலூட்டி நாகலாந்து, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மழைக் காடுகளில் காணப் படுகின்றன. அதிகாலை நேரத்தில் இதனுடைய சத்தம் வெகுதொலைவிற்கு கேட்கும். உலகில் உள்ள மற்ற மனித குரங்குகள் போல் இவ்வகை பாலூட்டியும் காடழிப்பினால் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

புலி

புலிகள் சூழல் அமைப்பிற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவும், தலையாய மாமிச உண்ணியாகவும் விளங்குகிறது. இயற்கைச் சூழலை பாதுகாப்பதின் மூலம் புலிகளை பாதுகாக்க முடிகிறது.

ஆசிய யானை

இந்தியாவில் யானை, வடக்கு மற்றும் வடகிழக்கு மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன. எங்கெல்லாம் யானைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மற்ற விலங்கினங்கள் அதாவது சாம்பார், புள்ளிமான், குறைக்கும் மான் மற்றும் புலி, சிறுத்தை ஆகியவைகளும் காணப்படும். யானை தந்தத்திற்காக வேட்டையாடப்படுகிறது. இதனால், இவை அழிந்து வருகின்றன.

ஆசிய சிங்கம்

சிங்கம், இந்தியாவில் அரிதாக காணப்படும் விலங்கு ஆகும். இவை கிர் காடுகளில் மட்டும் காணப்படுகின்றன. வாழிடங்கள் அழிக்கப்படுவதால்தான் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.

வன உயிரினங்களின் முக்கியத்துவம்

சூழல் அமைப்பின் பங்கு

பல வகையான சூழல் அமைப்பில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளிடையே காணப்படும் சார்பு தன்மையே சூழல் அமைப்பின் பங்கு ஆகும்.

காற்று, நீர், நிலம், மரங்கள் முதல் நுண்ணியரி வரை உள்ள அனைத்தும் சூழல் அமைப்பின் அங்கமாகும். ஒரு ஆரோக்கியமான சூழல் அமைப்பில் இந்த அங்கங்கள் அனைத்தும் ஒன்றி இருப்பதையே சூழல் அமைப்பு சமநிலை என்று கூறுகிறோம்.

சூழல் அமைப்பின் முக்கிய பங்கு

  • மண்ணின் உப்பு தன்மையை குறைத்தல்
  • கழிவுகளை பதப்படுத்தி சக்தியை வெளியேற்றுதல்
  • ஆற்றல்
  • கரியமில வாயுவை உட்கொண்டு மற்ற வளி மண்டல வாயுக்களை சமன்படுத்தல்
  • சீதோஷ்ண நிலைமை ஸ்திரப்படுத்தி அதில் ஏற்படும் மாற்றங்களை குறைத்தல்
  • காற்று மற்றும் நீரின் தரத்தை மேம்படுத்துதல்
  • வெள்ளம் மற்றும் வறட்சியை கட்டுப்படுத்தல்
  • ஒரு சிற்றினத்தை பாதுகாக்க அதன் வாழ்விடத்தை பாதுகாப்பது மிக அவசியமாகும்.

ஜீவனாதாரம்

ஏறத்தாழ 70 சதவிகித இந்திய மக்கள், காடுகள் மற்றும் கடலை நம்பி உள்ளனர். சுமார் 10,000 வகையான தாவரங்கள் மற்றும் நூற்றுகணக்கான விலங்கினங்கள் மனித வாழ்க்கைக்கும் உயிரின பெருக்கத்திற்கும் இடையே உள்ள நேரடி தொடர்பில் ஈடுபட்டுள்ளன.

ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம்

அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி, மனித ஆரோக்கியத்திற்கு, விலங்கினங்கள், மற்றும் தாவரங்கள் மூலாதாரமாக உள்ளது. இதற்கு சுமார் 8000 வகையான தாவரங்களும், சில நூற்றுக்கணக்கான விலங்கினங்களும் பயன்படுகிறது.

பொருளாதார முக்கியத்துவம்

சூழலமைப்பின் சேவை மற்றும் பல்லுயிர் பெருக்க அங்கங்களின் பொருளாதார மதிப்பு ரூபாய் 1650 பில்லியன்கள் ஆகும், அதாவது உலக மொத்த உற்பத்தியை விட 1.8 மடங்கு அதிகமாகும். மருந்தகத் தொழிற்சாலைகள் மட்டும் அதிகமான வன மூலாதாரங்களை நம்பியுள்ளதோடு, 660 வகையான வன உயிர்கள் இந்திய வர்த்தகத்தில் பங்கேற்கிறது. இதன் மதிப்பு ஒரு வருடத்திற்கு 12,000 லட்ச ரூபாய் என கணக்கிடப் பட்டுள்ளது.

அறிவியல் முக்கியத்துவம்

இயற்கை, அறிவியல் சம்பந்தப்பட்ட சிந்தனைகளுக்கு தூண்டுகோலாக உள்ளது. இன்றைய அறிவியல் படிப்பு, இயற்பியல், வேதியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் உயிரியல் பகுதி ஆகும். ஆயுர்வேதம், விருக்ஷ ஆயுர்வேதம் ஆகிய நமது பாரம்பரிய அறிவியல் நூல்களில் வன உயிரினங்களின் முக்கியத்துவம் பற்றி மேற்கோள்கள் காணப் படுகின்றன.

உலகில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களில், மனித இனமும் ஒரு அங்கமாகும். மனிதனுடைய தலையீடில்லாமல், ஒவ்வொரு சிற்றினமும் ஒரு தனித்தன்மையோடு படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆகவே பூமியில் வாழ ஒவ்வொரு உயிருக்கும் உரிமை உண்டு.

கலாசார முக்கியத்துவம்

இந்திய மொழிகளில் இயற்கைக்கும் கலாசாரத்திற்கும் உள்ள தொடர்பை ”ப்ரக்ருதி” *சம்ஸ்க்ருதி” என்ற இரண்டு வார்த்தைகள் குறிக்கின்றன. பல்வேறு வகையான தாவரங்களும், விலங்குகளும், மதம் மற்றும் கலாச்சாரத் தேவைகளுக்காக பயன்படுகின்றன.

இயற்கை அழகின் முக்கியத்துவம்

வன உயிர்களின் அழகு, அவை அதன் இயற்கையான வாழ்விடங்களில் உள்ள போது மட்டுமே மனிதனால் அனுபவிக்க முடியும். இயற்கை அழகை பிரதிபலிக்கும் வகையில் வீட்டில் தோட்டங்கள், பொது பூங்காக்கள், தாவர பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், ஆகியவை அமைக்கப்படுகின்றன.

வன உயிர்களை பாதுகாக்கும் வழிவகைகள்

பாரம்பரிய முறைகள்

“கோயில் காடுகள்” என்பது பழமையான இந்திய பாரம்பரிய பாதுகாப்பை குறிக்கும் ஒரு சிறிய வனப்பகுதி ஆகும். மக்களின் பக்தி, பயம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் இக்கோயில் காடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவை அப்பகுதியின் மிருகங்கள் மற்றும் தாவரங்களுக்கு வாழ்விடமாகிறது. மரங்கள் வெட்டுதல் மற்றும் மிருகங்களை வேட்டையாடுதல் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இலைகள், காய்கள் மற்றும் வேர்கள் மருத்துவ தேவைகளுக்காக மட்டும் எடுத்துக் கொள்ளப் படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்க இக்கோயில் காடுகளை பலவித நம்பிக்கைகளோடும், புனித நோக்கங்களோடும் சம்பந்த படுத்தப்பட்டுள்ளது.

நவீன முறைகள்

தாவரங்களையும், விலங்குகளையும் அவற்றின் இயற்கை சூழ்நிலையில் வைத்து பாதுகாப்பதை “அதே நிலையில் காப்பாற்றுவது” என கூறப்படும். இதற்கென உண்டாக்கப்படுவதே தேசிய பூங்காக்கள், வனவுயிர் சரணாலயங்கள் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு இடங்களாகும். இயற்கையான வாழிடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் வைத்து காப்பாற்றுவது “மாறிய நிலையில் காப்பாற்றுவது” என கூறப்படும். இதற்காக உயிரியல் பூங்காக்கள் தாவரவியல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புலி பாதுகாப்பு திட்டம்

இந்தியாவில் 1900 ஆம் ஆண்டில் 40,000 புலிகள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,800 ஆக குறைந்து விட்டது. புலிகளின் எண்ணிக்கையை அதிகமாக்க 1973 ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப் பட்டது. தற்போது இந்தியாவில் சுமார் 3,800 புலிகளும், 27 புலி சரணாலயங்களும் உள்ளது.

யானை பாதுகாப்பு திட்டம்

இத்திட்டம் அதிக காட்டு யானைகள் உள்ள மாநிலங்களை வழி நடத்தவும் அவை நீண்ட காலம் அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் வாழவும் 1991-92 ஆம் ஆண்டில் செயல் படுத்தப்பட்டது.

காண்டாமிருக பாதுகாப்பு திட்டம்

இந்த திட்டம் அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில், ஒற்றை கொம்புடைய காண்டா மிருகங்களை அழிவிலிருந்து பாதுகாக்க 1987 ஆம் ஆண்டு செயல் படுத்தப்பட்டது. அழிந்து வரும் காண்டாமிருகத்தின் இயற்கை வசிப்பிடமான இச் சரணாலயம் 430 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

முதலை பாதுகாப்பு திட்டம்

முதலை இனப்பெருக்க திட்டம் முதன்முதலில் ஒரிசாவில் 1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது. கேவியாலிஸ் கேஞ்சடிகஸ், க்ரோகடைலஸ் பேலஸ்ட்ரிஸ் , க்ரோகடைலஸ் போரோஸஸ், ஆகிய மூன்று அழிந்து வரும் முதலை சிற்றினங்களை பாதுகாப்பதே இத் திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

அபாய நிலையிலுள்ள வன உயிரினங்களை பாதுகாக்க சட்ட திட்டங்கள்

வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேசிய மற்றும் சர்வதேச அளவில் அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் பாதுகாக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அழிவு நிலையிலுள்ள வனவாழ் தாவர, விலங்கினங்களின் உலகளாவிய வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் (1973), மேற்கூறிய நோக்கத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது. இவ்வொப்பந்தத்தில் வனவாழ் தாவர, விலங்கினங்களை அவற்றின் வாழிடங்களில் வைத்து பாதுகாக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதோடு அவற்றின் முக்கியத்துவமும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம் மற்றுமொரு மைல்கல்லாகும்,

1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனவுயிர் பாதுகாப்பு சட்டம் தேசிய அளவிலான ஒரு முயற்சியாகும். வனவுயிர் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு வாரியங்கள் ஏற்படுத்துதல் போன்றவை இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. வனவிலங்குகளை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய செயலாக இச்சட்டம் குறிப்பிடுகிறது.

அழியும் தருவாயிலும், அபாய கட்டத்திலுமுள்ள உயிரினங்களையும், பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு சட்ட திட்டம் வழிவகை செய்கிறது.

தனி மனிதனின் பங்கு

தனி மனித முயற்சி பல்லுயிர் பெருக்க பாதுகாப்பில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் உணருவதில்லை. தற்போது மக்கள் சட்டங்களை மதிப்பதே இம்முயற்சிக்கு ஒரு நல்ல ஆரம்பமாகும். நமக்குள் ஒரு சுய கட்டுப்பாட்டை வளர்த்து கொண்டு, விலங்கினங்களின் ரோமம், தோல், கொம்பு, நகம், ஓடு, தந்தம் போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள பொருள்கள் மற்றும், வாசனை திரவியங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு முயற்சியும், பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே பரப்புவது தலையாய வேலையாகும். வனவுயிர் பாதுகாப்பில் எந்த மையங்கள் செயல்படுகிறது என்பதை தெரிந்து வைத்து கொண்டிருக்க வேண்டும். அம்மையங்களுக்கு உறுதுணையாக இருந்து நம்மால் இயன்ற சேவையை செய்ய வேண்டும்.

சூழல் சமநிலை இப்பூமியிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தேவை

இயற்கை சமநிலை ஒரு சிற்றினம் அழியும் போது அல்லது, அதன் எண்ணிக்கை குறையும் போது பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் உணவு சங்கிலியும், உணவு வலையும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதே ஆகும்.

சூழல் சமநிலையை நிலைபெற செய்ய, வனவுயிரினங்களையும், அதன் சூழல் அமைப்பையும் பாதுகாக்க வேண்டும்.

ஆதாரம் : சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம்.

Filed under:
3.1862745098
அகல்யா Nov 12, 2019 10:16 PM

உண்மை

Anonymous Jul 07, 2019 01:39 PM

அழிந்து கொண்டிருக்கும் விலங்குகள் தாவரங்கள் தொடர்பாக பதியப்படும் புத்தகத்தின் பெயர்

Shree dharshan Jan 29, 2019 09:45 PM

Super

Anonymous Nov 02, 2017 12:14 PM

நல்ல தகவல்கள் .

விஜய்சங்கர் . ஞா சமூக ஆர்வலர்

சர வன க்குமார Nov 13, 2016 03:03 AM

மிகவும் அருமையான தகவல்

தசரதி Sep 16, 2016 06:43 PM

நாட்டையும் நாட்டின் வளத்தையும் பாதுகாப்பது ஒரு குடிமகனின் கடமை .நான் என் கடமையை செய்வேன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top