பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / அழிந்து வரும் உயிரினங்கள் / மனித முரண்பாடுகளால் இடம்பெயரும் யானைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மனித முரண்பாடுகளால் இடம்பெயரும் யானைகள்

மனிதனின் செயல்களால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மனித இன முரண்பாடுகளால் யானைகள் வனப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து விவசாய நிலங்களை நோக்கி வருவது அதிகரித்து வருகிறது. ஆசியாவிலேயே யானைகள் ஒரே இடங்களில் கூடி வாழ்வது கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த வனப் பகுதிகளில்தான்.

இங்கு மட்டும் சுமார் 8 ஆயிரம் யானைகள் உள்ளன. பருவ காலங்கள் மாறும்போது யானைகளுக்கு உணவு முறைகள் மாறுபடுவது அவைகளின் உடல்ரீதியான மரபு. வனத்துறையினர் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடத்திய ஆய்வில் 2 முதல் 3 சதம் வரை யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மழைக்காலங்களில் வனப்பகுதிகளில் புற்கள், மரப்பட்டைகளை உண்டு வாழ்ந்து வரும் யானைகள், கோடைக்காலங்களில் வனங்கள் வறண்ட இலையுதிர் காடுகளாக மாறுவதால் யானைகள் இடம்பெயருகின்றன.

பருவகாலங்கள் மாறும்போது அவை மீண்டும் வனங்களை நோக்கிச் செல்கின்றன. பருவ நிலையால் இடம்பெயரும் யானைகள், அதற்கென வகுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று வரும்.

கடந்த 11 ஆண்டுகளாக யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சிறுமுகையில் இருந்து வாளையாறு வரை 25}க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் யானைகளின் வழித்தடங்களை அழித்துக் கட்டப்பட்டுள்ளதால் அவ் வழியே வரும் யானைகள் வழி தெரியாமல் குடியிருப்பு பகுதிகளிலோ அல்லது விவசாய நிலங்களிலோ புகுந்து விடுகின்றன.

கோவை மாவட்டத்தில் 80 சதவீதம் யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வனங்களில் குச்சி, மரப்பட்டை, புற்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வரும் யானைகள், விவசாய நிலங்களில் பயிரிட்ட சோளம், கரும்பு மற்றும் வாழைப் பயிர்களை ருசியாகச் சாப்பிட்டுப் பழகுவதால் அது அங்கேயே வசிக்கத்தான் விரும்பும்.

தான் உண்டதும் இல்லாமல் தனது சந்ததியினரை அழைத்து வந்து விவசாய நிலங்களில் நிரந்தரமாக வசிக்கவும் முயற்சிக்கும் என்று வன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

யானைகளின் வழித்தடத்தை அழித்து, கட்டடம் கட்டி அவை இருப்பிடத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பதால் அவை கோபம் கொண்டு குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களைத் தாக்குகிறது.

கடந்த ஓராண்டில் 45 கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் நிலங்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளன.

கடந்த வாரம் தடாகம் சாலையில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து வாழை மரங்களைச் சேதப்படுத்தியது. அவ்வழியே நடந்து சென்ற முதியவரையும் தாக்கிக் கொன்றது.

இந்தத் தவறுகளுக்கு யானைகளை மட்டும் குறை சொல்ல முடியாது. அதன் குணாதிசயமே அதுதான். நாம்தான் அதன் குணத்தை அறிந்து விலகிச் செல்ல வேண்டும். வனப் பகுதியையொட்டிய விவசாய நிலங்களில் யானைகளுக்குப் பிடித்த உணவு வகைகளை விவசாயிகள் பயிரிடுவதால் அவை இடம் பெயர்ந்து செல்லும்போது அவற்றைச் சாப்பிட்டு அதன் சுவை பிடித்துப்போய் அங்கேயே முகாமிடுகின்றன. யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளோ, விவசாய நிலங்களுக்குள்ளோ நுழைய விடாமல் முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும், அவற்றைக் கட்டுப்படுத்த வனத்துறையினருடன் இணைந்து பொதுமக்களும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

உயிரினங்களைப் பாதுகாத்தால்தான் வனங்கள் செழிப்பாக இருக்கும். வனங்கள் பசுமையாக இருந்தால்தான் நீர்வரத்து அதிகரிக்கும். சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களைக் குறைப்பது வனங்களும், அதைச்சார்ந்த உயிரினங்களும்தான். ஆனால்,

சமீபகாலமாக இரண்டும் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை யானைகள் வனங்களில் வசிக்கும். டிசம்பர் முதல் ஏப்ரல் வரை அவை இடம்பெயரும் காலம். யானைகளால் விவசாய நிலங்கள் அழிவதைத் தடுக்கவும் மனித உயிர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம். கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி, அனுவாவி, மருதமலை, தானிக்கண்டி, கல்கொத்தி, வாளையாறு, கல்லார், ஜக்கனாரி ஆகிய பகுதிகள் வழியே யானைகள் இடம்பெயர்கின்றன.

மேற்படி, பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு யானைகளின் வழித்தடங்கள் மிகவும் குறுகலாக உள்ளன. அந்த இடத்தை ஆய்வு செய்து யானைகளின் வழிதடங்களை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதற்கட்டமாக, மேட்டுப்பாளையம் அருகே கல்லார், ஜக்கனாரி வழியே யானைகள் அதிக அளவில் இடம்பெயர்வதால் அந்த இடத்தை அரசு வாங்கி யானைகள் எளிதாகக் கடக்கும் வகையில் அப் பாதையை அகலப்படுத்த வேண்டும்.

அழிந்துபோன யானைகளின் வழித்தடங்கள் சீரமைத்துக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் வராமல் தடுக்கவும், மனிதர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் அரசு திட்டம் வகுக்க வேண்டும்.

சுமார் 340 கி.மீ. தூர வனப் பகுதிகளைச் சுற்றி மின்வேலி அமைக்க வேண்டும். சேதமடைந்த மின்வேலியை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, யானைத் தடுப்பு அகழிகள் அமைக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் யானைகளைத் துன்புறுத்தாமல் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

யானைகளால் பல விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் யானைகளைப் பாதுகாப்பதால் வனங்கள் செழிப்படையும்.

ஆதாரம் : கல்விச்சோலை

 

2.84848484848
Ramalingam Jul 15, 2015 08:52 PM

100 kludge 100 unnmai

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top