பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / இந்திய சுற்றுச்சூழல் கரிசணங்கள் / வளமான சுற்றுச் சூழலும் இந்தியாவின் பங்கும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வளமான சுற்றுச் சூழலும் இந்தியாவின் பங்கும்

வளமான சுற்றுச் சூழலில் இந்தியாவின் பங்கு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பெருகிவரும் மக்கள் தொகையும், குறைந்துவரும் இயற்கை வளங்களும் மனித சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. உயர் பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இணையாக வளரும் நாடுகளும் செயல்படத் துவங்கியிருப்பது இயற்கை மாசுபடும் வேகத்தை அதிகரித்து வருகிறது. கரியமில வாயு மற்றும் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தினால் எழுந்துள்ள பிரச்னைகளை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. எனினும் இதைக் கட்டுப்படுத்துவதற்கும் வரையறை செய்வதற்கான முயற்சிகளில் பொதுக் கருத்தை எட்டுவது எளிதாக இல்லை. எனினும், இது உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரச்னைதான் என்பதில் உலக நாடுகளிடையே கருத்து வேற்றுமை இல்லை என்றாலும் அணுகு முறைதான் மாறுபட்டுள்ளன. இந்தப் பின்னணியில் தொடர் வளர்ச்சியும் அதை பராமரித்தலிலும் முக்கிய கவனம் பெறுகின்றன. எனவே இவை பற்றிய விழிப்புணர்வு, இப்பிரச்னையை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள துணையாக இருக்கும்.

வளமான சுற்றுச் சூழல்

‘சஸ்டெய்னபிலிட்டி' என்ற ஆங்கில வார்த்தைக்கு வளப்பத்தை தொடர்ந்து பராமரித்து வருவது என்று பொருள்படும். இந்த வார்த்தை சுற்றுச் சூழல் அமைப்பை பொறுத்த வரையில் ‘உயிரியல் அமைப்பு பன்முகமாகவும் உற்பத்தித் திறன் மிக்கதாகவும் இருப்பது’ என்று புரிந்து கொள்ளப்படும். வளமான நஞ்சை நிலமும், வனங்களும் தொடர்ந்து செழித்து இருப்பது, உயிரியல் அமைப்பின் தொடர் வளர்ச்சிக்கு அடையாளமாகக் கொள்ளப்படும் . மனித சமுதாயத்தின் நலத்தை நீண்ட கால அடிப்படையில் பேண இயற்கை வளத்தை தொடர்ந்து பராமரிப்பது அடிப்படைத் தேவையாகும். இது சுற்றுச் சூழல், பொருளாதாரம் அரசியல் கலாசாரம் என பன்முகப்படும். மனித சமுதாயமும், பிற உயிரினங்களும், தொடர்ந்து மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்க ஆரோக்யமான சுற்றுச் சூழலும் வளமான அமைப்பும் மிகவும் தேவையானதாகும். இதற்கான சூழலை உருவாக்கும் வகையில், மனித சமுதாயத்தினால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கத்தைக் குறைக்க பல வழிமுறைகள் உள்ளன. இதில் முதலிடத்தில் இருப்பது சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகும். புவியியல், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, உயிரியல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பெறப்பட்ட நுண்ணறிவு, இதற்கான அணுகுமுறைக்கு வழிவகுத்துள்ளது எனலாம். அடுத்து இடம் பெறுவது இயற்கை வளங்களை மனித சமுதாயம் பயன்படுத்துவது குறித்தான மேலாண்மை ஆகும். இது பொருளாதாரம் சார்ந்த அம்சம் என்பது அனைவரும் அறிந்ததுதான். வளங்களை தொடர்ந்து பராமரிக்கும் பிரச்னையில் இப்பொழுது கலாசார அம்சங்களும் இடம் பெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில், மனித சமுதாயத்தின் தொடர் வளர்ச்சியை பேணும் வகையில், புவியின் வளம் பராமரிக்கப்பட வேண்டுமென்ற பொருளில், புவியின் வளப்பம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1980ம் ஆண்டில் இந்த வார்த்தை முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. எதிர்கால சந்ததியினரின் வளமான வாழ்விற்கு பாதகம் ஏற்படாமல், இப்போதைய தலைமுறையினரின் வளர்ச்சித் தேவையை நிறைவு செய்வதே தொடர் வளர்ச்சியாகும் என்று ஐ.நா. ஆணையம் 1987ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி வரையறை செய்தது. இதைத் தொடர்ந்து 2005ம் ஆண்டு நடைபெற்ற உயர்நிலை மாநாடு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, சமுதாய சமுத்துவம், பொருளாதார எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றிற்கு இடையிலான ஒருங்கிணைப்பு, சமுதாய மேம்பாட்டிற்கு அவசியம் என்பதை வலியுறுத்தியது. தொடர் வளர்ச்சிக்கான மூன்று வலுவான தூண்கள் இவை என்று இம் மாநாடு வர்ணித்தது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடர் வளர்ச்சிக்கான வரையறைகளும் சான்றிதழ் முறைகளும் வகுக்கப்பட்டன. இந்த மூன்று அம்சங்களும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக இருப்பவை என்றும், அவை தனித்து இயங்குபவை அல்ல என்றும் அம் மாநாடு சுட்டிக் காட்டியது. எனினும் உலக நாடுகள் இவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளுவதில் தயக்கம் காட்டுகிறது.

தொடர் வளர்ச்சி அதன் குறிக்கோள், அதை எட்டுவதற்கான வழிமுறைகள் குறித்து பல்வேறு சிந்தனைகள் உள்ளன. சுற்றுச் சூழல் பராமரிப்பும் வளர்ச்சிப் பணிகளும் முரணானவை போன்ற தோற்றமும் ஏற்படுத்தப்படுகிறது. இந்தப் பின்னணியில் மனித சமுதாயத்தின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்ற குறிக்கோளில் ஒருமித்த கருத்து உள்ளது. எனினும் வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையும் வளர்ந்த நாடகளின் நுகர்வோர் கலாசாரமும் வளத்தைத் தொடர்ந்து பராமரிக்கும் முயற்சிகளுக்கு பெருஞ் சவாலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலைமை, புவியின் ஏற்கும் திறனுக்கும் மீறி, மனித சமுதாயம் வாழ்ந்து வருகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அறிவியல் தகவல்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. இதனால் புவியின் வளத்தில் பற்றாக்குறை ஏற்படத் தொடங்குகிறது. இதை ஈடுகட்ட தொடர் வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாத வெளி ஆதாரங்களை நாட வேண்டிய நிலைமையை உருவாக்கி வருகிறது. இந்த நிலை தொடருமேயானால், மனித சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்று புவியியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். அந்த அபாயகரமான நிலையை எட்டுமுன் இப்போதைய போக்கை மாற்றி புவியின் வளத்தை பராமரிப்பதுடன் வீணாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான மாற்று வழிமுறைகள் காணப்பட வேண்டும் என்பதை இயற்கை ஆர்வலர்களும் புவியியல் அறிஞர்களும் வலியுறுத்தி வருகின்றனர். உலக நாடுகளும் இந்த நிலைமையை உணர்ந்துள்ளன. ஐ.நா. போன்ற அமைப்புகளும் முன் முயற்சி எடுத்து வருவதால், இப் பிரச்சினையில் பொதுவான கருத்து எட்டப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளைக் காண்பதிலும், உலக நாடுகள் ஆர்வம் காட்டி வந்தாலும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்தப் பின்னணியில், மனித சமுதாயம் வளமான எதிர்காலத்திற்கு ஆற்ற வேண்டிய பங்கினை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது.

வளரும் நாடுகளும் தட்பவெப்ப மாற்றமும்

தட்பவெப்ப மாற்றம் உலகளாவியதாக இருந்தபோதிலும், வளரும் நாடுகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. ஏனெனில், தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் சவாலை சமாளிக்க இந்த நாடுகளுக்கு உள்ள திறனும் வளமும் ஒரளவுதான். இந்தியாவும் தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. 21வது நூற்றாண்டின் இறுதியில், நமது நாட்டில் மழைப்பொழிவு 15 முதல் 40 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்றும், இது பகுதிக்கு பகுதி வேறுபடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. நிலப்பகுதியில் வெப்ப நிலை உயர்வு நன்றாக உணரப்படும் என்றும், வட மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் பதிவாகும் என்றும், குளிர்காலத்திலும், பருவ மழைக்குப் பிறகும் வெப்பம் அதிகமாக உணரப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆண்டு சராசரி வெப்ப உயர்வு 3 டிகிரி சென்டிகிரேடு முதல் 6 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும். இதனால் பல்வேறு துறைகளில் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றி குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பிடப்பட்டு வருகிறது. நமது நான்கு முக்கிய துறைகளான நீர்வளம், வேளாண்மை, வளங்கள், மனித உடல் நலம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் விரிவான ஆய்வை மேற்கொண்டது. இமயமலைப்பகுதி, வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, கடல் ஒர மாநிலங்கள் ஆகிய நான்கு முக்கிய பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தட்பவெப்ப மாற்றமும், இந்தியாவும் என்ற தலைப்பிலான இவ்வறிக்கை விரிவானதாகும்.

பசுமை இல்ல வாயுக்கள்

பருவ மாற்றத்தை எதிர்கொள்ளுவதற்கான சர்வதேச உடன்பாடு, ஐ.நா. மாநாடு மற்றும் கொயிட்டோ உடன்படிக்கை மூலம் எட்டப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளின் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 1990ம் ஆண்டு நிலையிலிருந்து 5.2 சதவீதம் குறைக்க கொயிட்டோ உடன்பாடு குறியளவு நிர்ணயித்துள்ளது. இதில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொறுப்பை இந்த உடன்பாடு வலியுறுத்துகிறது. சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆண்டு மாநாட்டில், உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

தட்பவெப்ப மாற்றமும் இந்தியாவின் செயல்பாடுகளும்

தட்பவெப்ப மாற்றத்தால் எழும் சவாலை இந்தியா பெரிதும் உணர்ந்துள்ளது. இப்பிரச்னையை எதிர்கொள்ளுவதில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவானதே ஆகும். இந்தியாவின் கரியமில வாயு வெளியேற்றம், உலகளாவிய வெளியேற்றத்தில் 4 சதவீதம்தான். சர்வதேச உடன்படிக்கைக்கு ஏற்ப, இந்தியா தேசிய தகவல் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் பற்றிய அட்டவணை, இதன் தாக்கம் மற்றும் பாதிப்பு பற்றிய மதிப்பீடு போன்ற தகவலை இந்த அமைப்பு அளிக்கும்.

பருவ மாற்றம் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள நிறுவன அளவில் திறமையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுற்றுச் சூழல் அமைச்சகம், 127 ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு தட்பவெப்ப மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுவதுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளின் பொருளாதாரத் துறையில் ஏற்படும் தாக்கத்தையும் கணக்கிடும். இத்துறையில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கும் முதலாவது வளரும் நாடு இந்தியாதான் என்பதை பெருமையுடன் பதிவு செய்யலாம். பருவ மாற்றத்தை எதிர் கொள்ளுவதற்கான இந்தியாவின் அணுகுமுறை, சமூக பொருளாதாரத் திட்டங்களில் பிரதிபலிப்பதை எளிதில் அறிந்து கொள்ள இயலும். இத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து சுற்றுச் சூழல் அமைச்சகம் செயலாற்றி வருகிறது. சூரிய ஒளிசக்தி, எரிசக்தித் திறன் மேம்பாடு தொடர் வளர்ச்சியுடனான வேளாண்மை, வளமையான குடியிருப்பு பகுதிகள், நீர்வளம், இமயமலை சுற்றுச்சூழல், வன வளம், தட்பவெப்ப மாற்றம் பற்றிய நுண்ணறிவு ஆகிய 8 துறைகளில் இந்த ஒருங்கிணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் ஆலோசனைக்கு ஏற்ப மாநில அரசுகளும் செயல்திட்டங்களை வரைந்து செயல்படுத்தி வருகின்றன.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : கே.என். பூரீனிவாசன், (ஒய்வு) இந்திய தகவல் பணி அதிகாரி

3.02272727273
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top