பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஈரப்புலங்களைப் பாதுகாப்பீர்

எந்த நிலத்தின் நீர்மட்டம் ஓர் ஆண்டில் அனேக நாட்கள் தரைமட்டத்தை ஒட்டி அல்லது அதற்கு மேலே இருக்கின்றதோ, அந்த நிலங்கள் ஈரப்புலங்கள் என்றழைக்கப்படுகின்றன

எந்த நிலத்தின் நீர்மட்டம் ஓர் ஆண்டில் அனேக நாட்கள் தரைமட்டத்தை ஒட்டி அல்லது அதற்கு மேலே இருக்கின்றதோ, அந்த நிலங்கள் ஈரப்புலங்கள் என்றழைக்கப்படுகின்றன.   தொன்றுதொட்டு மனிதனுக்கும் ஈரப்புலங்களுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது.  இந்து, நைல், டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் போன்ற ஆற்றுச் சமவெளிகளில் தோன்றிய நாகரீகங்கள் ஈரப்புலங்களிலேயே ஆரம்பமாகியுள்ளன.  பூமியின் நிலப்பரப்பில் 6 விழுக்காடு ஈரப்புலங்களாகும். சதுப்பு நிலங்கள், கடல்தாங்கு, சேற்று நிலங்கள் மற்றும் சதுப்பு நில காடுகள் என ஈரப்புலங்கள் பல வகைப்படும்.  இவை பல்லுயிர் வளம் நிறைந்த, விலை மதிப்பற்ற, எளிதில் பாதிப்புக்குள்ளாகும் இயற்கை வளங்கள் நிறைந்த கருவூலமாகும்.  பல்வகை தாவர விலங்குகள் இதனை சார்ந்துள்ளதால் ஈரப்புலங்கள் அதிக பயன்தரும் சூழல் அமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.

இந்தியாவின் ஈரப்புலங்கள்

நம்நாடு செழுமைவாய்ந்த ஈரப்புல சூழலமைப்புகளைப் பெற்றிருக்கிறது. இவை பலவித புவியியல் பகுதிகளில் பரவி காணப்படுகின்றன. இவை  கங்கை, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி மற்றும் தபதி போன்ற பெரிய நதிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையனவாக உள்ளன.

இந்தியாவில் உள்ள 27,403 ஈரப்புலங்களில் உள்நாட்டில் 23,444ம், கடலோரத்தில் 3959ம், காணப்படுகின்றன.  ஆசிய ஈரப்புலங்கள் (1989) பற்றிய முகவரிப் பட்டியலில் இந்திய நிலப்பரப்பில் 18.4 விழுக்காடு (ஆறுகளைத் தவிர்த்து) ஈரப்புலங்கள் ஆகும்.  இதில் 70 விழுக்காடில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.  இந்தியாவில் உள்ள 4.1 மி.ஹெக்டேரில் (விவசாய நிலங்கள், ஆறுகள் மற்றும் சிற்றோடைகள் நீங்கலாக) 1.5 மி.ஹெக்டேர் இயற்கையாகவும், 2.6 மி.ஹெக்டேர் செயற்கையாகவும் அமைந்து உள்ளன.

பெருமளவு சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கிய கடலோர ஈரப்புலங்கள் 6,750 ச.கி.மீ. பரப்பளவில் காணப்படுகின்றன.  சுமார் 80 விழுக்காடு சதுப்பு நிலக்காடுகள் மேற்கு வங்கத்திலுள்ள சுந்தர வனக் காடுகளிலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் பரவி காணப்படுகின்றன.  எஞ்சிய 20 விழுக்காடு சதுப்பு நிலக்காடுகள் ஒரிஸ்ஸா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற கடலோர மாநிலங்களில் காணப்படுகின்றன.

நம் இந்திய தீப கற்பத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஈரப்புலங்கள் பெரும்பாலும் செயற்கையானவையாகும்.  இவற்றை ஏரிகள் என்றழைக்கிறோம்.  இவ் ஏரிகள் பல பறவையினங்களுக்கு புகலிடமாகவும் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் இருப்பதோடு, மனிதனின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நீரையும் தருகிறது.  தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் கோடியக்கரை, கேரளாவில் அஸ்தமுடி, சாஸ்தங்கோட்டை மற்றும் வேம்பநாடு கோல் ஏரிகள் மற்றும் ஆந்திரபிரதேசத்தில் உள்ள கொள்ளேரு ஏரி போன்றவை இயற்கையாக அமைந்துள்ள சில ஈரப்ப்புலங்கள் ஆகும்.

இந்திய ஈரப்புலங்கள் பொதுவாக 8 வித பகுதிகளில் காணப்படுகின்றன (ஸ்காட், 1989)

தென்மேற்கு கடற்கரைப்பகுதி மற்றும் கடல்தாங்குகளை உள்ளடக்கிய தக்காண  பீடபூமியில் காணப்படும் நீர்த்தேக்கங்கள்

ராஜஸ்தான், குஜராத் மற்றும் கட்ச் வளைகுடா பகுதிகளில் காணப்படும் உப்பளங்கள்

குஜராத்தின் கிழக்குப்பகுதி, ராஜஸ்தானின் கீலாதேவ் கானா தேசீய பூங்கா மற்றும் மத்தியபிரதேசத்தில் காணப்படும் நன்னீர் ஏரிகளும், நீர் தேக்கங்களும்

இந்தியாவில் சிலிக்கா ஏரியை உள்ளடக்கிய கிழக்கு கடலோரம் மற்றும் கழிமுக ஈரப்புலங்கள்

கங்கைச் சமவெளியில் உள்ள நன்னீர் சதுப்பு நிலங்கள் மற்றும் பிரம்மபுத்திராவின் வெள்ளப்பெருக்கு பகுதிகள்

இமயமலை அடிவாரங்கள் மற்றும் வடகிழக்கிந்திய மலைகளில் காணப்படும் சதுப்புநிலங்கள்

காஷ்மீர் மற்றும் லடாக் மலைப்பகுதிகளில் காணப்படும் ஏரிகளும் மற்றும் ஆறுகளும்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகள் மற்றும் பிற ஈரப்புலங்கள்

ஈரப்புலங்களின் முக்கியத்துவங்கள்

இலட்சக்கணக்கான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களுக்காகவும் வேலைவாய்ப்புக்களுக்காகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈரப்புல அமைப்புக்களைச் சார்ந்துள்ளனர்.  வெள்ளப் பெருக்கு, கடலோர மண்ணரிப்பு, சூறாவளி  மற்றும் ஓதங்கள் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து ஈரப்புலங்கள் நம்மை பாதுகாக்கின்றன.  மேலும் நீரை நீண்ட நாட்களுக்கு தக்க வைக்கும் பண்பைப் பெற்றுள்ளன.

அதிகமான மழை பொழிவின்போது பெருமளவு நீரை தக்க வைத்துக் கொள்வதால் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. இதன் விளைவாக ஓடைகளின் நீர்வரத்தை சீராக்குகிறது. நீரின் தன்மையை பாதுகாப்பதோடு அப்பகுதியில் வாழும் மனிதர்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியை பெருக்குகின்றது. வெள்ளப் பெருக்கு பகுதியில் உள்ள ஈரப்புலங்கள், மழைநீரை அதிகமாக தக்கவைத்து நிலத்தடி நீர் நிலைகளை மறுசெறிவடையச் செய்யும் முக்கிய ஆதாரப்பகுதியாகும்.

நாரை, கொக்கு போன்ற நீர்ப்பறவைகள் ஈரப்புலங்களில் கூடுகட்டி வாழ்கின்றன. பாலூட்டிகளுக்கு உணவு மற்றும் வாழிடமாக ஈரப்புலங்கள் விளங்குகின்றன.  கழிவுநீரிலிருந்து கேடு விளைவிக்கும் வைரஸ் மற்றும் கனஉலோக கழிவுகளை அகற்றும் இயற்கை வடிப்பானாக செயல்படுகின்றன.  நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை தக்க வைத்து பெரிய ஏரிகள், குளங்கள் மாசுபடாமல் பாதுகாக்கின்றன.  மீன்கள், தீவனம், விறகு, கட்டுமானப் பொருட்கள், மருத்துவம், தேன், மெழுகு, தோல் பதனிடத்தேவையான இரசாயனங்கள், தோட்டங்கள் மற்றும் மீன் உற்பத்தி போன்றவற்றிற்காக சதுப்புநிலக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சமூக-பொருளாதார மதிப்புள்ள ஈரப்புலங்கள் நீர் வழங்குதல், மீன் வளர்ப்பு, போக்குவரத்து, விறகு, மருந்து, விவசாயம், ஆற்றல் மூலங்கள், சுற்றுலா, கலாச்சாரம், பாரம்பரிய சொத்து மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு போன்ற பலவித நன்மைகளை அளிக்கின்றன.

ஆதாரம் : சி.பி. ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம்.

Filed under:
3.01960784314
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top