பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆல்காக்கள் - பொதுப்பண்புகள்

ஆல்காக்களின் பொதுப்பண்புகள் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிமுகம்

ஆல்காக்கள் தற்சாற்பு ஊட்டமுறையை உடையவை. பச்சையம் உண்டு. இவை ஆக்ஸிஜனை வெளியிடும் வகையான ஒளிச் சேர்க்கை புரியும் உயிரிகள். நீருள்ள சூழலில் தோன்றி, வளர்ந்து வெற்றிகரமாக நிலைபெற்றுள்ளன. ஆல்காக்களைப் பற்றிய அறிவியல் துறை ஆல்காலஜி அல்லது ஃபைக்காலஜி என்று அழைக்கப்படுகிறது.

ஆல்காக்களின் உடலத்தில் வேர், தண்டு, இலை என்று வேறுபாடு காணப்படுவதில்லை. இது போன்ற உடலமைப்பை 'காலஸ்" என்று அழைக்கிறோம். இவை வாஸ்குலார் திசுக்களையும் பெற்றிருப்பதில்லை. தாவர உலகத்தைச் சார்ந்த இந்த ஆல்காக்களின் இனப்பெருக்க உறுப்புகள் வளமற்ற செல்களால் சூழப்பட்டிருப்பதில்லை.

வளரிடம்

பெரும்பான்மையான ஆல்காக்கள் நீரில் வாழ்பவை, நன்னீரில் அல்லது கடல் நீரில் வாழ்பவை. மிகச் சில ஆல்காக்களே நிலத்தில் வாழ்பவை. மிக அரிதாகச் சில இனங்கள் அதிவெப்ப வெந்நீர் ஊற்றுகளிலும், சில ஆல்காக்கள் பனிபடர்ந்த மலைகளிலும், பனிச் சறுக்கல்களிலும் காணப்படும்.

தன்னிச்சையாக நீரில் மிதக்கும் அல்லது தனித்து நீரில் நீந்தும் நுண்ணிய ஆல்காக்கள் ஃபைட்டோ பிளாங்க்டான்கள் (Phytoplanktons) எனப்படும். கடல்கள், ஏரிகளின் ஆழமற்ற கரை ஓரப் பகுதிகளில் அடியில் ஒட்டி வாழும் ஆல்காக்கள் பெந்திக் (Benthic) எனப்படுகின்றன. சில ஆல்காக்கள் உயர் தாவரங்களுடன் கூட்டுயிர்களாகவும் வாழ்கின்றன. ஆல்காக்களின் சில சிற்றினங்களும் பூஞ்சைகளும் சேர்ந்து காணப்படும் தாவரப் பிரிவு லைக்கன்கள் (1ichens) எனப்படுகின்றன. ஒரு சில ஆல்காக்கள் மற்ற ஆல்காக்கள் அல்லது ஏனையத் தாவரங்களின் மீது தொற்றுத்தாவரமாக வாழ்கின்றன. இவை எப்பிஃபைட்டுகள் (Epiphytes) என்று அழைக்கப்படுகின்றன. சில ஆல்காக்கள் லித்தோஃபைட்டுகள் (lithophytes) அல்லது பாறை வாழ் ஆல்காக்கள் ஆகும்.

ஆல்காக்களின் அமைப்பு

ஆல்காக்களில் சில ஒற்றை செல்லால் ஆனவை. சில கூட்டமைவை (colony) தோற்றுவிக்கின்றன. சில இழைகளால் (filamentous) ஆனவை. ஒரு செல் ஆல்காக்கள் கிளாமைடோ மோனாஸ் போல நகரும் திறன் உள்ளதாகவோ அல்லது குளோரெல்லா போல நகரும் திறனற்றோ காணப்படும்.

பெரும்பான்மையானவை இழைகளால் ஆன உடலத்தை உடையவை (எ.கா.) ஸ்பைரோகைரா. இழைகள் கிளைத்தும் காணப்படலாம். இவ்விழை ஆல்காக்கள் தன்னிச்சையாக மிதந்தோ அல்லது ஒட்டிவாழ்பவைகளாகவோ காணப்படும். இழையின் அடிச்செல்லானது பற்றுறுப்பாக (hold fast) மாற்றம் அடைந்து ஊன்றுதலில் உதவுகிறது. சில ஆல்காக்கள் மிகப் பெரிய உடலத்தை உடையன. (எ.கா.) காலெர்ப்பா (Caulerpa) சர்காஸம் (Sargassum) லாமினேரியா (Laminaria) ஃபியூகஸ் (Fucus).

மேக்ரோஸிஸ்ட்டிஸ் என்ற ஆல்காவில் வேர், தண்டு, இலை போன்ற அமைப்புகளும் உள்ளன. ஆல்காக்களின் பசுங்கணிகங்கள் பலவகையான வடிவங்களை உடையவை. எடுத்துக்காட்டாக கிளாமைடோமோனாஸில் கிண்ண வடிவமும், ஸ்பைரோகை ராவில் ரிப்பன் வடிவமும் சைக்னீமாவில் நட்சத்திர வடிவமும் உடையன.

செல் அமைப்பும் நிறமிகளின் அமைவும்

தற்போது சயனோபாக்டீரியங்கள் என்று அழைக்கப்படும் நீலப் பசும் பாசிகளைத் தவிர அனைத்துப் பாசிகளும் (algae) யூகேரியோட்டிக் செல் அமைப்பை உடையவை. செல்சுவர் செல்லுலோஸ் மற்றும் பெக்டினினால் ஆனவை. திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட நியூக்ளியசும் சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகளும் உண்டு.

ஆல்காக்களில் மூன்று வகையான ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படுகின்றன.

அவை

1. பச்சையம் (Chlorophylls)

2. காரோட்டினாய்டுகள் (carotenoids)

3. பிலிபுரதங்கள் (biliproteins).

பச்சையம் a அனைத்து வகுப்பு ஆல்காக்களிலும் காணப்படும். ஆனால் பச்சையம் b, c, d மற்றும் e ஆகியவை சில ஆல்கா வகுப்புகளில் மட்டுமே காணப்படும் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிற நிறமிகள் கரோட்டினாய்டுகள் எனப்படுகின்றன. இதில் கரோட்டின்களும், சாந்தோஃபில்களும் அடங்கும். நீரில் கரையக்கூடிய பிலி புரதங்களான ஃபைக்கோ எரித்திரின் (சிகப்பு) மற்றும் ஃபைக்கோசயனின் (நீலம்) நிறமிகள் பொதுவாக ரோடோஃபைசி வகுப்பிலும் சயனோஃபைசி (தற்போது சயனோ பாக்டீரியங்கள்) வகுப்பலும் முறையே காணப்படுகின்றன. இந்நிறமிகள் சூரிய ஒளியின் சிகப்பு மற்றும் நீல ஒளி அலைகளை ஈர்த்து ஒளிச்சேர்க்கைக்கு உதவிபுரிகின்றன. ஆல்காக்களின் நிறமிகளின் அமைவு அவற்றின் வகைபாட்டில் ஒரு முக்கிய பண்பாகக் கருதப்படுகின்றது.

ஆல்காக்களின் நிறம், அவற்றில் எந்த நிறமி அதிகமாகக் காணப்படுகின்றதோ அதன் அடிப்படையில் அமைகின்றது. இதற்கு சான்றாக ரோடோஃபைசி (சிகப்பு ஆல்கா) வகுப்பில் ஃபைக்கோ எரித்திரின் என்ற சிகப்பு நிற நிறமி அதிகமாகக் காணப்படுவதால் இவை சிகப்பு நிறமாக உள்ளன. நிறமிகள், பசுங்கணிகங்களில் உள்ள சவ்வுகளில் அமைத்துள்ளன.

ஆல்காக்களின் உணவூட்ட முறையும் சேமிப்புப் பொருட்களும்

ஆல்காக்கள் தற்சார்பு ஊட்டமுறையைக் கொண்டவை. ஆல்காக்களின் பலவேறு வகுப்புகளிலும் கார்போஹைட்ரேட்டு சேமிப்புப் பொருட்கள், பலவிதமான ஸ்டார்ச்சாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக குளோரோஃபைசி வகுப்பில் சேமிப்புப் பொருள் ஸ்டார்ச் ஆகும். ரோடோஃபைசி வகுப்பில் ஃபுளோரிடியன் ஸ்டார்ச்சும் ஃபேயோஃபைசி வகுப்பில் லேமினேரியன் ஸ்டார்ச்சும் யூக்ளினோஃபைசி வகுப்பில் பாராமைலானும் சேமிப்புப் பொருட்களாக உள்ளன. கார்போஹைட்ரேட்டைத் தவிர ஃபேயோ ஃபைசி வகுப்பு ஆல்காக்கள் மானிட்டாலையும் சேமித்து வைக்கின்றன. சேந்தோஃபைசி மற்றும் பேசில்லேரியோஃபைசி ஆல்காக்கள் கொழுப்பு, எண்ணெய் மற்றும் லிப்பிடுகளை சேமித்து வைக்கின்றன. ஆல்காக்களின் வகைபாட்டில் சேமிப்பு பொருட்களும் ஒரு முக்கிய பண்பாகக் கருதப்படுகின்றன.

கசையிழைகளின் அமைவு

பெரும்பான்மையான ஆல்கா வகுப்புகளில் கசையிழைகள் அல்லது சிலியாக்கள் அவற்றின் நகரும் திறனுக்கு காரணமாகின்றன. இருவகையான கசையிழைகள் காணப்படுகின்றன.

1. சாட்டை (acronematic) வகை

2. டின்சல் (pantonematic) வகை.

சாட்டைவகை மிருதுவான மேற்பரப்பை உடையன. டின்சல் வகை மயிரிழை போன்ற மெலிந்த நுண்வளரிகளை மைய அச்சில் கொண்டிருக்கும். கசையிழைகளின் எண்ணிக்கை, அவை செல்லுடன் இணைக்கப்பட்டிருக்கும் விதம், அமைப்பு ஆகிய பண்புகள் ஆல்காக்களின் வகைபாட்டில் பயன் படுத்தப்படுகின்றன.

இனப் பெருக்க முறைகள்

 1. உடல் இனப்பெருக்கம்
 2. பாலிலா இனப்பெருக்கம்.
 3. பால் இனப் பெருக்கம்

உடல் இனப் பெருக்கம் : வேற்றிடக் கிளைகள் தோன்றுதல் முறையில் உடல் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

பாலிலா இனப்பெருக்கம் : பலவகையான ஸ்போர்களின் மூலம் நடைபெறுகின்றது. சூஸ்போர்கள், ஏபிளானோஸ்போர்கள் மற்றும் ஏகைனேட்டுகள் ஆகியவை சிலவகையான பாலிலா ஸ்போர்கள் ஆகும். சூஸ்போர்கள் செல் சுவரற்றவை. கசையிழைகளுடன் கூடியவை, நகரும் தன்மை உடையவை (எ.கா.) கிளாமைடோமோனாஸ். ஏபளானோஸ்போர்கள் மெல்லிய சுவரை உடையவை. நகரும் தன்மை அற்றவை. (எ.கா.) குளோரெல்லா. ஏகைனேட்டுகள் தடித்த சுவருடன் கூடியவை. நகரும் திறன் அற்றவை. (எ.கா.) பித்தோஃபோரா.

பால் இனப்பெருக்கம் : பால் இனப்பெருக்கத்தில் இரண்டு கேமிட்டுகள் இணைகின்றன. இணையும் கேமிட்டுகள் ஒரே தாலஸிலிருந்து தோன்றினால் அதை ஹோமோதாலிக் என்றும் வெவ்வேறான தால்ஸிலிருந்து தோன்றினால் அதை ஹெட்டிரோதாலிக் வகை என்றும் அழைக்கிறோம். இணையும் கேமிட்டுகள் ஐசோகேமிட்டுகள் அல்லது ஹெட்டிரோகேமிட்டுகள் ஆகும்.

ஐசோகேமி : இதில் புற அமைப்பு, செயல் தன்மை ஆகிய இரண்டிலும் ஒத்த ஒரே மாதிரியான இரு கேமீட்டுகள் இணைகின்றன. (எ.கா.) ஸ்பைரோகைரா மற்றும் கிளாமைடோ மோனாஸின் சில சிற்றினங்கள்.

ஹெட்டிரோகேமி : இவ்வகையில் வேறுபாடு உடைய இரண்டு கேமிட்டுகள் இணைகின்றன. இது இருவகைப்படும்)

1) அனைசோ கேமி (anisogamy)

2) ஊகேமி (00gamy)

1. அனைசோகேமி வகையில் இணையும் கேமிட்டுகள் வெவ்வேறான தோற்றம் உடையன. ஆனால் செயல் தன்மையில் ஒத்தவை (இரண்டு கேமீட்டுகளும் நகரும் திறன் உடையவை அல்லது இரண்டு கேமிட்டுகளும் நகரும் திறன் அற்றவை).

2. ஊகேமி வகையில் இணையும் கேமீட்டுகள் தோற்றத்திலும் செயல் தன்மையிலும் வேறுபடுகின்றன. இவ்வகை இணைவில் ஆண்கேமிட்டு ஆந்தரோசுவாய்டுகள் என்றும் பெண் கேமீட்டு அண்டம் என்றும் அழைக்கப்படுகின்றன. பெண் கேமீட்டு பொதுவாக ஆண்கேமீட்டைவிடப் பெரியதாகவும் நகரும் திறனற்றும் காணப்படும். ஆந்தரோசுவாய்டுகளை உருவாக்கும் ஆண் இனப்பெருக்க உறுப்புகள் ஆந்தரிடியம் (antheridium) என்றும் அண்டத்தை உண்டு பண்ணும் செல் ஊகோனியம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆந்தரோசுவாய்டும் அண்டமும் இணைந்து உருவாகும் செல் சைகோட் ஆகும். சைகோட் மயோசிஸ் பகுப்பிற்குப் பின் நேரடியாக முளைத்துப் புதிய தாலஸைத் தோற்றுவிக்கிறது.

ஆல்காக்களின் வகைபாடு

F.E.ஃபிரிட்ச் தனது "ஆல்காக்களின் அமைப்பு மற்றும் இனப்பெருக்கம்" (Structure and Reproduction of Algae) என்னும் நூலில் ஆல்காக்களை 11 வகுப்புகளாக, கீழ்க்காணும் பண்புகளின் அடிப்படையில் வகைபடுத்தியுள்ளார்.

 1. நிறமிகளின் சேர்க்கை
 2. சேமிப்புப் பொருட்கள்
 3. கசையிழைகளின் அமைவு
 4. தாலஸ் அமைப்பு
 5. இனப்பெருக்கம்.

ஆல்காக்களின் 11 வகுப்புகளாவன

 1. குளோரோஃபைசி,
 2. சேந்தோஃபைசி,
 3. கிரைசோஃபைசி,
 4. பேசில்லேரியோஃபசிை,
 5. கிரிப்டோஃபைசி,
 6. டைனோஃபைசி,
 7. குளோரோமோனாடினி,
 8. யூக்ளினோஃபைசி ,
 9. ஃபேயோஃஃபைசி
 10. ரோடோஃபைசி,
 11. மிக்சோஃபைசி.

ஆல்காக்களின் பொருளாதார முக்கியத்துவம்

சமீபத்திய கணக்கெடுப்பின் படி உலகின் பாதி உற்பத்தித்திறன் (கார்பன்நிலை நிறுத்தப்படுதல்) கடலிலிருந்தே உண்டாகிறது. கடலில் வாழக்கூடிய ஒரே தாவர இனமான ஆல்காக்களே இவ்வுற்பத்தித் திறனுக்கு ஆதாரம். ஆல்காக்கள் முதல் நிலை உற்பத்தியாளர்களாக முக்கிய பங்க வகித்து பல நீர் நிலை உணவுச் சங்கிலிகளின் ஆரம்பமாக உள்ளன.

ஆல்காக்கள் உணவாகப் பயன்படுதல்

மனிதன், வீட்டு விலங்குகள் மற்றும் மீன்கள் ஆகியவற்றிற்கு முக்கிய உணவாக ஆல்காக்கள் அமைகின்றன. போர்ஃபைராவின் சிற்றினங்கள் ஜப்பான், இங்கிலாந்து மற்றும் கலிஃபோர்னியா நாடுகளில் உட்கொள்ளப்படுகின்றன. அல்வா, லாமினேரியா, சர்காஸம் மற்றும் குளோரெல்லா ஆகிய ஆல்காக்களும் பலநாடுகளில் உணவாக உண்ணப்படுகின்றன. லாமினேரியா, ஃபியூக்கஸ் மற்றும் ஆஸ்கோஃபில்லம் ஆகிய ஆல்காக்கள் வீட்டு விலங்குகளுக்கும் கால்நடைகளுக்கும் உணவாக அளிக்கப்படுகின்றன.

விவசாயத்துறையில் ஆல்காவின் பங்கு

ஆஸில்லடோரியா, அனாபினா, நாஸ்டாக் மற்றும் அலோசிரா ஆகிய நீலப்பசும் பாசிகள் வளி மண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்வளத்தை அதிகரிக்கின்றன. சீனாவிலும் ஜப்பானிலும் பெரும்பாலான கடல்பாசிகள் பயிர்களுக்கு உரமாகப் பயன்படுகின்றன.

தொழில்துறையில் ஆல்காவின் பங்கு

அ. அகார் – அகார் பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகளை ஆய்வுச்சாலையில் வளர்க்கும் போது அகார் - அகார் வளர்தளமாகப் பயன்படுகிறது. சில மருந்துப்பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பிலும் இது உபயோகிக்கப்படுகிறது. அகார் - அகார் ஜெலிடியம் மற்றும் கிராஸீலேரியா ஆகிய சிகப்பு ஆல்காக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

ஆ. ஆல்ஜினிக் அமிலம் (Algenic Acid) : ஆல்ஜினிக் அமிலம் எனப்படும் கூழ்மம் (colloid) பழுப்பு ஆல்காக்களிலிருந்து பெறப்படுகிறது. ஆல்ஜின், ஐஸ்கிரீம், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பற்பசைகளில் நிலைப் படுத்தப்படும் பொருளாக உபயோகிக்கப்படுகிறது.

இ. அயோடின் : அயோடின் 'கெல்ப்' என்று அழைக்கப்படும் பழுப்பு ஆல்காக்களிலிருந்து பெறப்படுகிறது. குறிப்பாக இது லாமினேரியாவின் சிற்றினங்களிலிருந்து பெறப்படுகிறது.

ஈ. டையேட்டமைட்டு (Diatomite) : டையேட்டம் என்று அழைக்கப்படும் (கிரைசோஃபைசி) ஆல்காக்களின் சிலிக்கா நிரம்பிய செல் சுவர்களில் பாறை போன்று படியும் பொருளே டையேட்டமைட்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த செல்கள் இறக்கும்போது அவை கடலோரங்களிலும் ஏரிகளின் அடிப்பகுதியிலும் படிந்து பல காலம் படிவங்களாகக் காணப்படுகின்றன. இப்படிவங்களிலிருந்து பெறப்படும் டையேட்டமைட்டு மணல் அதிக சிலிக்கா நிரம்பியதாக உள்ளது. டையேட்டமைட்டு தீயால் தாக்கப்படாத பொருட்களை உண்டாக்குவதிலும், உறிஞ்சும் திறன் நிரம்பியதாகவும் உள்ளது. மேலும் இவை அரிக்கும் தன்மை வாய்ந்த இரசாயனப் பொருட்களை பாதுகாப்பான முறையில் அடுக்குவதில் பயன்படுகின்றன. டைனமைட்டு உற்பத்தி செய்வதிலும் இவை உபயோகப் படுத்தப்படுகின்றன.

விண்வெளிப்பயணத்தில் ஆல்காக்களின் பங்கு

விண்வெளிப் பயணங்களின் போது CO, மற்றும் உடலிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் குளோரெல்லா பைரினாய்டோசா என்ற ஆல்கா உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த ஆல்கா மிக வேகமாகப் பெருகி, ஒளிச் சேர்க்கையின் மூலம் COவைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. மேலும் மனித கழிவுப் பொருட்களை சிதைத்து அதிலிருந்து வரும் நைட்ரஜனை புரதச் சேர்க்கை செய்ய பயன்படுத்திக் கொள்கிறது.

ஒற்றைச் செல்புரதம் (SCP)

குளோரெல்லா மற்றும் ஸ்பைருலினா போன்ற ஒரு செல் ஆல்காக்கள் புரதம் செறிந்து காணப்படுவதால் இவை புரத உணவாகப் பயன்படுகின்றன. மேலும் குளோரெல்லாவில் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அமினோ அமிலங்களும் புரதச் சத்து செறிந்தும் காணப்படுவதால் குளோரெல்லாவும் ஸ்பைருலினாவும் ஒற்றைச் செல் புரத சேர்க்கையில் பெரிதும் பயன் படுத்தப்படுகின்றன. குளோரெல்லின் என்ற நுண்ணியிர் கொல்லி (antibiotic) குளோரெல்லாவிலிருந்து எடுக்கப்படுகிறது. கழிவு நீக்கம் குளோரெல்லா போன்ற ஆல்காக்கள் மிகப்பெரிய கழிவு நீர் நிரம்பிய ஆழமற்ற தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆல்காக்கள் ஒளிச்சேர்கையின் மூலம் மிகுதியான ஆகிஸிஜனை வெளியிடுகின்றன. காற்றுச் சுவாச பாக்டீரியங்கள் போன்ற நுண்ணுயிர்கள் இந்த ஆக்ஸிஜனை பயன்படுத்தி சுவாசித்து உயிர் வாழ்கின்றன. இவை கழிவுப் பொருளில் அடங்கியுள்ள கரிமப் பொருட்களைச் சிதைத்து அதை தூய்மைப் படுத்துகின்றன.

ஆல்காக்களின் தீமை பயக்கும் விளைவுகள்

சில சமயங்களில் ஆல்காக்கள் ப்ளும்கள் (Blooms) எனப்படும் அடர்ந்த அமைப்பைத் தோற்றுவிக்கின்றன. குறிப்பாக வெப்பப் பகுதிகளில் அதிக ஊட்டச்சத்து உள்ள இடங்களில் இவை அதிகம் தோன்றுகின்றன. பல நேரங்களில் கழிவுப் பொருட்களை நீரில் கொண்டுச் சேர்த்தல், உரங்கள் விவசாய நிலங்களிலிருந்து வழிந்தோடி ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளைச் சேர்தல் போன்ற மனிதர்களின் நடவடிக்கைகளினால் இந்த ப்ளும்கள் தோன்றுகின்றன. இதன் விளைவாக திடீரென்று முதல் நிலை உற்பத்தியாளர்களான ஆல்காக்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கின்றது. அதிக அளவில் தோன்றுவதால் அவை உண்ணப்படுவதற்கு முன்பாகவே மடிகின்றன. இறந்த இதன் உடலங்களை காற்றுச் சுவாச பாக்டீரியங்கள் சிதைத்துப் பெருகுகின்றன. காற்றுச் சுவாச பாக்டீரியங்களின் பெருக்கத்தினால் நீர் நிலையில் ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் உள்ள மீன்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகிய அனைத்தும் அழிகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
2.77777777778
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top