பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கிளாஸ்டிரிடியம் பாட்டுலினம்

கிளாஸ்டிரிடியம் பாட்டுலினம் எனும் நுண்ணுயிரி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

காற்றில்லா சூழலில் சுவாசிக்கும் கிளாஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற கிராம் பாஸிடிவ் பாசில்லஸ் நகரும் தன்மையுடைய பாக்டீரியா. இவை மண்ணிலும், காய்கறி, பழங்கள், இலைகள், எருவளம் மற்றும் கடலிலும், ஏரியிலும், உள்ள மண்ணிலும் காணப்படும். இவை உணவில் ஒரு சக்தி வாய்ந்த மூளை நச்சுப் பொருளை தயாரிக்கின்றன. இவை முட்டை வடிவ ஸ்போர்களை பாக்டீரிய முனைக்குக் கீழே தயாரிக்கின்றன. இவை வெப்பப்படுத்தலையும் கொதித்தலையும் எதிர்த்து 120°C ஈர வெப்பத்தில் 5 நிமிடங்களில் அழிகின்றன.

பாட்டுலினம் நச்சு பொருள்கள்

இயற்கையாக உள்ள அதிக நச்சுத் தன்மையுள்ள பொருட்களில் பாட்டுலினம் நச்சுப்பொருளும் உண்டு. A to G என்று 7 முக்கிய வகைகள் பாட்டுலினத்தில் உள்ளன. இவையெல்லாம் ஆன்டிஜன் தன்மையில் மாறுபட்ட நச்சு தயாரிக்கின்றன. ஆனால் இதனுடைய செயல் ஒரே மாதிரியாகவும் மனிதனுக்கு நோய்களை உண்டாக்குபவையாகவும் இருக்கும். இவற்றில் வழக்கமாக A, B மற்றும் E வகைகள் பொதுவாகக் காணப்படும். ஒரு நோயாளிக்கு அவசர காலங்களில் எதிர் நச்சு பொருட்கள் கொடுக்கப்பட்டால் குறிப்பிட்ட வகை எதிர் நச்சு மிகச் சிறப்பாக செயல்படும். Type E வகை, கடல் பொருட்களிலும் Type A மற்றும் B மண்ணிலும் காணப்படுகின்றன.

நோய்த் தோற்றம்

நச்சுப் பொருள் உட்கொள்ளப்படுதல் மற்றும் நோய் அறிகுறிகள் காணப்படுதல் ஒன்று முதல் இரண்டு நாட்களில் காணப்படும். சில நேரங்களில் நீண்டும் போகலாம். முதலில் வாந்தி வரும் மற்றும் வாந்தி வருவதுபோல் தோன்றும். கண் தசைகள் பாதிக்கப்படுகின்றன. தலை சுற்றல் மற்றும் மங்கலான பார்வை ஏற்படும். முன்னேறும் கீழ் நோக்கிய கட்டளை நரம்பு இழப்பு, தொங்கும் தன்மையுடைய பக்கவாதம் உண்டாகும். ஆனால் தொடு உணர்ச்சியும் ஞாபக சக்தியும் இழப்பதில்லை. நோயாளிக்கு உலர்ந்த வாய் மற்றும் நாக்குடன் தாகம் ஏற்படும். பேச்சுத் திறமை மற்றும் உணவு உட்கொள்ள முடியாமல் போக பின் விளைவாக சுவாசக் கோளாறு மனக்கசப்பு முதலியவை ஏற்படுகின்றன. வயிற்று வலியும், அமைதியின்மையும் காணப்படும். நுரையீரல் பாதிப்பு மற்றும் இதயம் பாதிக்கப்படுவதால் இறப்பு ஏற்படுகிறது.

பாட்டுலிசம்

பாட்டுலிசம் என்பது கடுமையான மரணம் கூட ஏற்படுத்தும், மூளையைப் பாதிக்கும் ஒரு உணவு நச்சுநோய். பலவிதமான உணவு பொருட்களால் பதப்படுத்தப்பட்ட மாமிசம், காய்கறிகள், மீன், கல்லீரல், கூழ் (liver paste), மற்றும் தேன் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவு மூலம் இந்த நோய் பரவுகிறது.

பாட்டுலிசத்தை உண்டாக்கும் உணவுப்பொருட்களில் கெட்டுபோன அடையாளம் தெரிவதில்லை. உணவில் உள்ள நச்சுப்பொருள் குடல் பகுதியில் உறிஞ்சப்படுகிறது. இந்த நச்சுப்பொருள் ஒரு புரதம், இது குடலில் காணப்படும். புரதம் சிதைக்கும் நொதிகளால் பாதிக்கப்படுவதில்லை. நச்சுப்பொருளை இரண்டு பாகங்களாக பிரிக்கலாம். A என்னும் சிறிய பகுதியும், B என்னும் பெரிய பகுதியும் ஆகும். பெரிய பகுதியானது மோட்டார் நரம்பு முடிவு தட்டுடன் இணைகிறது. கால்சியம் அடங்கிய அசிடைல்கோலினை சிறிய பகுதி வெளிவராமல் தடுக்கிறது. காயத்தினால் பாட்டுலிசம் உண்டாவது, அரிதாக காணப்படுகிறது.

குழந்தைகளில் காணப்படும் பாட்டுலிசம்

ஆறு மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் கி. பாட்டுலினம் வகையால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் தடுப்பு சக்தி குறைவாக உள்ளதால் குடல் பகுதியில் கூட்டமாக இவை வளர்கின்றன. பல வகையான அறிகுறிகள் காணப்படுகின்றன. குழந்தைகளுக்கு வாதம், சோர்வு மற்றும் தாய்பால் குடிப்பதில் குறைவு போன்ற அறிகுறிகள் இருக்கும். திடீரென்று உயிர் போவதற்கு இவையெல்லாம் காரணம். நுண்ணுயிரி மற்றும் அதன் நச்சுப்பொருள் குழந்தையின் மலத்தில் காணப்படுகிறது. இரத்தத்தில் தெரியாது. குழந்தைகளுக்கு ஊட்டும் தேனில் நுண்ணியிரியின் ஸ்போர்கள் இருக்கலாம். இந்த ஸ்போர்கள் கிளைத்து குழந்தையின் உணவு குழாயில் நச்சுப் பொருளை உருவாக்குகிறது.

ஆய்வக கண்டறிவு

சந்தேகப்படும் உணவு பொருட்கள், மலம் மற்றும் வாந்தி முதலியவை மாதிரிப் பொருட்களாக எடுக்கப்படுகின்றன. நுண்ணியிரி அல்லது அதன் நச்சுப்பொருள் சந்தேகப்படும் உணவில் காணப்படலாம். நச்சுப்பொருள் எதிர்நச்சுப்பொருள் (Neutralization) சோதனை எலியில் செய்து நோயாளியின் இரத்தத்தில் பாட்டுலினம் நச்சு இருப்பதை அறியலாம். இந்த நச்சுப் பொருள் அதிகப்படியான தீங்களிப்பதால் மாதிரிப்பொருள் மற்றும் அதன் நச்சுப்பொருளை கவனமாகக் கையாள வேண்டும்.

ஸ்போருடன் கூடிய பாசில்லையை கிராம் சாயமேற்றி காணலாம். ஸ்போர்கள் இல்லாத பாக்டீரியாக்களைத் தடுக்க 65-80C யில் சூடேற்ற வேண்டும். காற்றற்ற சுவாச முறையில் இவை வளர்க்கப்பட வேண்டும். உணவு பொருட்களில் இருந்த கி. பாட்டுலினம் வளர்க்கப்படலாம். காற்றற்ற பாத்திரத்தில் 10% Co, உடன் நைட்ரஜன் சேர்த்து மாதிரிப் பொருள் செலுத்தப்பட்ட ரத்த அகார் தட்டுகளை வைக்கலாம். வேகவைத்த மாமிச ஊடகம் தையோகிளைக்கோலேட் ஊடகத்திலும் இதனை வளர்க்கலாம். இளைக்கப்பட்ட எதிர் சீரம் இருந்தால் இம்யூனோ பூளுரெசென்ஸ் சாயமேற்றும் முறையில் அறியலாம். கி. பாட்டுலினம் அதன் உயிர்க்குணங்களாலும், நச்சுத்தன்மையாலும் இனம் அறியப்படுகிறது.

சிகிச்சை முறை

விலங்குகளில் நச்சுப்பொருள் செலுத்தப்பட்டு எதிர் நச்சுப்பொருள் தயாரிக்கப்பட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. A மற்றும் B வகை நச்சுப்பொருள் கொண்டு பைவாலன்ட் சீரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தலாம். E வகை எதிர் நச்சும் வாடிக்கையாக சேர்க்கப்படுகிறது. நோயாளிக்கு நல்ல கவனிப்பு கொடுக்கப்பட வேண்டும்.

நோய்க் கட்டுப்பாடு

மண்ணில் காணப்படும் ஸ்போர்கள் காய்கறி மற்றும் பழங்களை தாக்குகின்றன. பட்டாணி மற்றும் ஊறுகாய் போன்ற டப்பாக்களில் அடைக்கப்பட்ட பொருட்கள் வீட்டில் தயாரிக்கப்படுவதால் முக்கிய பிரச்சினையாகும். உணவு பதார்த்தங்களை வீட்டிலேயே தயார் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். டப்பாக்களில் அடைக்கப்பட்ட வியாபார பொருட்கள் கடுமையான கட்டுப்பாட்டுடன் செய்யப்பட வேண்டும். உணவுப் பொருட்களைப் பக்குவப்படுத்தி தயார் செய்வதில் முதிர்ச்சி பெறாதவர்கள் இதனை கையாளக்கூடாது. பழங்களை 100°C சூடு செய்து பக்குவப்படுத்தி சேமிக்க வேண்டும். அமில நிலையில் நுண்ணியிரி வளராது

பாட்டுலினம் தாக்கிய உணவினை உட்கொண்டவர்களுக்கு பல இணை திறம் கொண்ட எதிர் நச்சு கொடுக்கப்பட வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 3 தடவையாக கூட்டு நச்சுத் தன்மையுள்ள பொருள் பெறப்பட்ட நோய் தடுப்பாற்றலாக நோயாளிகளுக்கு கொடுக்கப்படலாம். வாடிக்கையாக கொடுக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் ஆய்வுக் கூடங்களில் வேலை செய்பவர்கள் மாதிரியப்பொருட்கள், நுண் கிருமிகள் மற்றும் இதன் நச்சு முதலியவற்றைக் கையாள்வதால் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும்.

நினைவில் கொள்ள வேண்டியவை

  1. இயற்கையில் காணப்படும் கடுமையான நச்சுப்பொருட்களில் கிளாஸ்டரிடியம் பாட்டுலினம் நச்சும் ஒன்றாகும்.
  2. பாட்டுலிசம் என்ற கடினமான, உயிரி நோய் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும்.
  3. அசிடைல் கோலின் வெளி வருவதை இதன் நச்சுப்பொருள் தடுத்து விடும் தளர்ந்த பக்க வாதத்தை (Flacid Paralysis) உண்டாக்கும். குழந்தைகளையும் பாட்டுலிசம் தாக்கும்.
  4. டப்பாக்களில் சேமித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவில் கி.பாட்டுலினம் இருந்தால் குடலில் கிளைத்து வளர்ந்து நச்சுப்பொருளை உருவாக்குகிறது.
  5. வீட்டில் பதப்படுத்தப்பட்ட உணவினை தயார் செய்வதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவினை செய்யத் தெரியாதவர்கள் கையாளக் கூடாது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top