பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பாக்டீரியங்கள்

பாக்டீரியங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நுண்ணுயிர்களின் உலகத்தை முதன் முதலாக 1676ம் ஆண்டு ஆண்டன்வான் லூவன்ஹாக் என்ற அறிவியல் அறிஞர் தனது எளிய நுண்ணோக்கியின் மூலம் கண்டறிந்தார். பிறகு ஹீக் என்பவர் கூட்டு நுண்ணோக்கியைக் கண்டறிந்ததின் மூலம், பாக்டீரியங்கள் வெளி உலகுக்குத் தெரிய வந்தன. இவை மிகச் சிறிய உயிரிகள் ஆனதால் இவை “மிகச் சிறிய நுண்ணுயிரிகள்” அல்லது நுண்ணிய விலங்குகள் (infusorial animalcules) என்றழைக்கப்பட்டன. பாக்டீரியங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்த லூயி பாய்ஸ்டர் (1822-95) "நோய்கள் பற்றிய ஜெர்ம் கொள்கையை’ வெளியிட்டார். இராபர்ட் சோச் என்ற ஜெர்மன் நாட்டு நுண்ணுயிரியலறிஞர் விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு இந்த நுண்ணுயிரிகள்தான் காரணம் எனக் கூறி நோய்களுக்கும் நுண்ணுயிர்களுக்குமான தொடர்பினை நிருபித்தார். முதன் முதலில் பாக்டீரியா என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் ஏரன்பர்க் (1829) என்பவராவார். பாக்டீரியங்களைப் பற்றி விரிவாகப் படிக்கும் பிரிவுக்கு "பாக்டீரியாலஜி அல்லது "பாக்டீரியயியல்’ என்று பெயர். பாக்டீரியங்கள் அனைத்தும் புரோகேரியோட்டிக் அமைப்புடைய ஒரு செல் உயிரிகளாகும்.

வாழுமிடம்

பாக்டீரியங்கள் அநேகமாக எல்லா இடங்களிலும் காணப்படும். எல்லா சுற்றுப்புறங்களிலும், அங்ககப் பொருட்கள் அதிகமாக உள்ள இடங்களிலும் இவை காணப்படும். காற்று, நீர், மண் மற்றும் அனைத்து தாவர, விலங்கு உடலங்களிலும் காணப்படுகின்றன. சில பாக்டீரியங்கள் பொதுவாக காமென்சல் (Commensals) ஆக வாழ்கின்றன. காமன்சல் என்பது இரண்டு சேர்ந்து வாழும் உயிரிகளில் ஒன்று பயனடையும், மற்றொன்று எந்தவிதப் பயனும் இன்றிக் காணப்படும்) உ.ம். மனிதச் சிறு குடலில் வாழும் எஸ்செரிசியா கோலை. சில பாக்டீரியங்கள் கூட்டுயிர் வாழ்க்கை முறையில் ஈடுபடுகின்றன (எ.கா. ரைசோபியம்) இவை லெகூம் தாவரங்களில் உள்ள வேர் முடிச்சுகளில் காணப்படுகிறது. பல பாக்டீரியங்கள், தாவரங்களிலும் விலங்குகளிலும் மற்றும் மனிதர்களுக்கும் நோய்களை உண்டாக்குகின்றன.

அளவு

பாக்டீரியங்கள் மிக நுண்ணியவை. இவை சராசரியாக 0.5 முதல் 1 மைக்ரான் விட்டமும் 3 முதல் 5 மைக்ரான் வரையிலான நீளமும் உடையன.

பாக்டீரியங்களின் வடிவம் மற்றும் அமைப்பின் அடிப்படையிலான வகைப்பாடு

பாக்டீரியாவின் வடிவ அமைப்பை அதன் உறுதியான செல்சுவர் நிர்ணயிக்கிறது. பொதுவாக பாக்டீரியங்கள் கோளவடிவம் (Coccus) கோல் வடிவம் (Bacillus) மற்றும் திருகு வடிவம் (Spirium) உடையவை. சில பாக்டீரியங்களின் வடிவங்கள் மாறும் தன்மை உடையவை. அதாவது இவை ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் காணப்படும் (Pleomorphic) எ.கா. ஆர்த்ரோபாக்டர். இவை பிளியோமார்ஃபிக் என்று அழைக்கப்படுகின்றன.

கோளவடிவ பாக்டீரியங்கள் அவற்றின் செல்பகுப்பின் அடிப்படையில் பல வடிவங்களைப் பெறுகின்றன.

அ. டிப்ளோகாக்கை (இரட்டைக் கோளம்) செல்கள் ஒரே ஒரு திக்கில் பகுப்படைந்து இரண்டிரண்டாக ஜோடியாகக் காணப்படுகின்றன.

ஆ. ஸ்டெரெப்டோகாக்கை (சங்கிலிக் கோளம்) - இவ் வகையில் செல்கள் ஒரே திக்கில் பகுப்படைந்து பல செல்கள் இணைந்து நீண்ட சங்கிலி வடிவில் காணப்படும்.

இ. டெட்ராகாக்கை (நான்கு கோளம்) செல்கள் இரண்டு திக்கில் பகுப்படைந்து நான்கு நான்கு தொகுப்புகளாகக் காணப்படும்.

ஈ ஸ்டெஃபைலோகாக்கை (கொத்துக் கோளம்) செல்கள் மூன்று திக்கில் ஒழுங்கற்ற ரீதியில் பகுப்படைந்து கோளவடிவ செல்களை கொத்துக் கொத்தாக உருவாக்குகின்றன.

உ. சார்சினே செல்கள் ஒழுங்கற்ற ரீதியில் மூன்று திக்கில் பகுப்படைந்து ஒரு கனசதுர அமைப்பை உருவாக்குகின்றன.

கோல்வடிவ பாக்டீரியங்கள் தனித்தனியாகவோ இரட்டையாகவோ அல்லது சங்கிலி போன்றோ காணப்படும். கோரினிபாக்டீரியம் டிஃப்தீரியே என்ற கோல் வடிவ பாக்டீரியத்தில் செல்கள் ஒன்றுக்கொன்று அருகாமையில் நெருக்கமாக தீக்குச்சிப் போல அடுக்கப்பட்டுக் காணப்படும். (பாலிசேட் அமைப்பு).

பாக்டீரியாவில் காணப்படும் கசையிழை அமைவு முறை

அனைத்து வகை திருகு பாக்டீரியங்களிலும் பெரும்பாலான கோல் வடிவ பாக்டீரியங்களிலும் ஒரு சில கோள வடிவ பாக்டீரியங்களிலும் கசையிழை அமைவு காணப்படுகின்றன. கசையிழை அமைவு எண்ணிக்கை மற்றும் அமைப்பு அடிப்படையில் இரண்டு பொதுப் பரிவுகளாக வேறுபடுகிறது.

 1. முனை அமைப்பு கசையிழைகள் : பாக்டீரிய செல்லின் ஒரு முனையிலோ அல்லது அதன் இரு முனையிலோ அமைந்து காணப்படும் விதத்தின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வகை படுத்தப்படுகிறது.
 2. அ) ஒற்றைக் கசையிழை வகை - ஒரு முனையில் ஒரே ஒரு கசையிழை மட்டும் காணப்படும்.

  ஆ) ஒரு கற்றைக் கசையிழை வகை - ஒரு கற்றை அல்லது ஒரு தொகுப்பாக கசையிழைகள் ஒரு முனையில் மட்டும் காணப்படும்.

  இ) இரு முனைக் கசையிழை வகை செல்லின் இரண்டு முனைகளிலும் கசையிழைகள் காணப்படும்.

 3. சுற்றுக்கசையிழை அமைப்பு இவ்வகையில் செல்லைச் சுற்றிலும் அதன் மேற்பரப்பில் பரவலாகக் கசையிழைகள் காணப்படும்.

கசையிழையற்றவை - இவ்வகை பாக்டீரியங்களில் கசையிழை காணப்படுவது இல்லை.

கசையிழையின் பணிகள்

வேதிச் சமிஞைகளைக் கசையிழைகள் கண்டறிந்து அதனை நோக்கி நகர்கின்றன. இந்த வகை இயக்க முறைக்கு வேதித் தூண்டல் நகர்வு (Chemotaxis) என்று பெயர். சில வகை பாக்டீரியங்கள் ஒரு குறிப்பட்ட திசையில் சாதகமான வேதிப்பொருட்கள் அல்லது உணவுப் பொருட்களின் தூண்டலுக்கு ஏற்ப அதனை நோக்கி நகர்தலை நேர்மறை வேதித் தூண்டல் நகர்வு (Positive Chemotaxis) என்கிறோம். வேதிப் பொருளை விட்டு (தீமை விளைவிக்கக்கூடிய) விலகிச் செல்லும் நிகழ்வு எதிர்மறை வேதித்தூண்டல் நகர்வு (Negative Chemotaxis) என்று அழைக்கப்படுகிறது.

பாக்டீரியாவின் உணவூட்ட முறை

தற்சார்பு ஊட்ட முறை பாக்டீரியங்கள்

சில பாக்டீரியங்கள் தங்களுக்குத் தேவையான உணவினைத் தாமேத் தயாரித்துக் கொள்கின்றன. எனவே அவை தற்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றுள் சில : ஒளி தற்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் (Photo autotrophs) எ.கா. ஸ்பைரில்லம். சில வேதிச் தற்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் (Chemo autotrophs) எ.கா. நைட்ரசோ மோனாஸ் மற்றும் நைட்ரோபாக்டர்.

ஒளி தற்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள்

இவ்வகை பாக்டீரியங்கள் சூரிய ஒளியை ஆதாரமாகக் கொண்டு உணவை உற்பத்தி செய்கின்றன. ஆனால் இவை யூகேரியோட்டிக் ஒளிச் சார்பு உயிரிகளைப் போன்று நீர் மூலக் கூறுகளைப் பிளந்து ஆற்றலைப் பெறுவதில்லை. எனவே பாக்டீரிய ஒளிச் சேர்க்கையின் போது ஆக்ஸிஜன் (O) வெளியிடப்படுவதில்லை. ஹைட்ரஜன் அளிப்பானின் அடிப்படையில் இவை கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

அனங்கக ஒளிதற்சார்பு ஜீவிகள் (Photolithotrophs)

இவ்வகையில் அனங்ககப் பொருட்கள் ஹைட்ரஜன் அளிப்பானாக செயல்படுகின்றன. பசும் கந்தக பாக்டீரியங்களில் (எ.கா. குளோரோபியம்) ஹைட்ரஜன் சல்ஃபைடு (HS) ஹைட்ரஜன் அளிப்பானாகச் செயல்படுகிறது. இதில் காணப்படும் பசுங்கணிகம் பாக்டீரியோவிரிடின் ஆகும்.

ஊதா கந்தக பாக்டீரியங்களில் (எ.கா. குரோமேட்டியம்) தயோ சல்ஃபேட்டு ஹைட்ரஜன் அளிப்பானாக செயல்படுகிறது. இதில் உள்ள பசுங்கணிகம் பாக்டீரியோ குளோரோஃபில் ஆகும்.

அங்கக ஒளி தற்சார்பு ஜீவிகள் (Photo Onganolithotrophs)

இவற்றில் அங்கக அமிலங்கள் அல்லது ஆல்கஹால்கள் ஹைட்ரஜன் அளிப்பானாகச் செயல்படுகின்றன (எ.கா. ரோடோஸ்பைரில்லம் போன்ற ஊதா கந்தகமற்ற பாக்டீரியங்கள்).

வேதி தற்சாபு பாக்டீரியங்கள்

இவ்வகை பாக்டீரியங்களில் ஒளிச்சேர்க்கை நிறமிகள் இல்லாததால் இவை ஒளி ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. அதற்குப் பதிலாக இவை அனங்கக மற்றும் அங்ககப் பொருட்களின் ஆகிஸிஜன் ஏற்றம் மூலம் ஆற்றலை ATP வடிவில் பெறுகின்றன. இவ்வகையில் பெறப்பட்ட ஆற்றல் கார்பன்-டை-ஆக்ஸைடை ஆக்ஸிஜன் ஏற்றம் செய்து அங்ககப் பொருட்களை உருவாக்க பயன்படுகின்றது. ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொருட்களின் அடிப்படையில் இவை கீழ்க்கண்டவாறு வகைப் படுத்தப்படுகிறது.

அ. அனங்கக வேதிச் சார்பு ஜீவிகள் (Chemolithotrophs)

இதில் அனங்ககப் பொருட்கள் ஆக்ஸிஜன் ஏற்றம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. எ.கா. கந்தக பாக்டீரியங்கள் (தயோபேசில்லஸ்), ஆற்றல் இரும்பு பாக்டீரியங்கள் (ஃபெர்ரோபேசில்லஸ்), ஹைட்ரஜன் பாக்டீரியங்கள் (ஹைடிரஜனோ மோனாஸ்), மற்றும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் (நைட்ரசோமோனாஸ், நைட்ரோபாக்டர்) ஆகியவை ஆகும்.

ஆ. அங்கக வேதிச் சார்பு ஜீவிகள்

இவ்வகைகளில் அங்ககக் கூட்டுப் பொருட்கள் ஆக்ஸிஜன் ஏற்றம் அடைந்து ஆற்றலை வெளிவிடுகிறது. எ.கா. மீத்தேன் பாக்டீரியா (மெத்தனோகாக்கஸ்) மேலும் அசிட்டோ பாக்டீரியா, லாக்டோபாசில்லஸ் ஆகியவையும் அங்கக வேதிச் சார்பு ஜீவிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.

பிற ஊட்ட முறை பாக்டீரியங்கள்

இவை தாமே உணவு தயாரிக்க இயலாததால் பிற ஊட்ட முறையைச் சார்ந்துள்ளன. அவை மட்குண்ணிகளாகவோ (எ.கா. பேசில்லஸ் சப்டிலிஸ்), ஒட்டுண்ணிகளாகவோ (எ.கா. தாவர ஒட்டுண்ணி - சாந்தோமோனாஸ் சிட்ரை / விலங்கு ஒட்டுண்ணியாகவோ எ.கா. பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்) மனித ஒட்டுண்ணியாகவோ (எ.கா. விப்ரியோ காலரே) அல்லது லெகூமினேசி குடும்பத் தாவர வேர்களில் இருப்பது போல கூட்டுயிர் வாழ்க்கை முறையிலோ இணைந்து வாழ்கின்றன.

பாக்டீரியாவில் காணப்படும் சுவாச முறை

கட்டாயக் காற்றுச் சுவாசிகள்

இவ்வகை பாக்டீரியங்களில் இறுதி எலக்ட்ரான் ஏற்பியாக ஆக்ஸிஜன் செயல் படுகிறது. இவை காற்றில்லா இடங்களில் வளர்வதில்லை (அதாவது ஆக்ஸிஜன் இல்லாத இடங்களில்) சில மைக்ரோகாக்கஸ் பாக்டீரியங்கள் கட்டாய காற்று சுவாசிகளாக வாழ்கின்றன (இவை உயிர் வாழ கட்டாயமாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது).

காற்றில்லா சுவாசிகள் (Amerobes)

இவ்வகை பாக்டீரியங்கள் வளர்வதற்கோ வளர்சிதை மாற்றத்திற்கோ ஆக்ஸிஜன் தேவைப்படுவதில்லை. ஆனால் நொதித்தல் வினைகளின் மூலம் இவை ஆற்றலைப் பெறுகின்றன. எ.கா. கிளாஸ்ட்ரிடியம்

கேப்னோஃபிலிக் பாக்டீரியங்கள் : இவை கார்பன்-டை- ஆக்சைடைப் பயன்படுத்தி வளரும் பாக்டீரியங்கள் ஆகும்.

நிலைமாறும் காற்றில்லா சுவாசிகள் (Facultative Anaerobes)

இவ்வகை பாக்டீரியங்கள் ஆக்ஸிஜனை எலக்ட்ரான் ஏற்பியாக பயன்படுத்தி ஆக்ஸிஜன் ஏற்ற முறையிலோ அல்லது காற்றில்லாமல் நடைபெறும் நொதித்தல் வினையின் மூலமாகவோ ஆற்றலைப் பெற்று வளர்கின்றன. இவ்வகை நிலைமாறும் காற்றில்லாச் சுவாசப் பாக்டீரியங்கள் “காற்றுச் சுவாசிகள்’ எனவும் அழைக்கப்படுகின்றன. எ.கோலை போன்ற நிலைமாறும் காற்றில்லாச் சுவாசிகள் சில நேரங்களில் சில வயிற்றுக் கட்டி போன்ற நோய் தொற்றும் இடங்களில் தங்கி மிக விரைவாக அங்கு இருக்கக்கூடிய அனைத்து ஆக்ஸிஜனையும் உபயோகித்துப் பின்பு காற்றில்லா வளர்சிதை மாற்றத்திற்கு மாறுகின்றன. இதனால் அங்கு காற்றில்லா நிலை உருவாகிறது. அங்கு உள்ள காற்றில்லா சுவாச பாக்டீரியங்கள் வளர்வதற்கும் நோயை உண்டாக்கவும் இவை வழிவகுக்கின்றன.

எண்டோஸ்போர்கள்

இவை கோல் வடிவ பாக்டீரியங்களில் சாதகமற்ற சூழ்நிலைகளின் போது உருவாகின்றன. அதிர்ஷ்ட்டவசமாக பெரும்பான்மையான நோய்களை உண்டாக்கும் பாக்டீரியங்கள் (டெட்டனஸ் மற்றும் ஆந்த்ரக்ஸ் பாக்டீரியங்கள் தவிர) எண்டோஸ்போர்களை உருவாக்குவதில்லை.

இனப்பெருக்கம்

இரண்டாகப் பிளத்தல் (Binary Fision) வகையிலான இனப்பெருக்க முறை வெகு பரவலாக பாக்டீரியங்களில் காணப்படுகிறது. இதன் காரணமாக பாக்டீரியங்கள் அதி விரைவில் பெருக்கமடைகின்றன. இதன் விளைவாகவே பால் தயிராக மாறுதல், உணவுப் பொருட்கள் கெட்டுப் போதல் ஆகியவை நிகழ்கின்றன.

பால் இனப்பெருக்கம்

காமீட்டுகளின் உருவாக்கம், காமீட்டுகளின் இணைவு ஆகியவற்றுடன் நிகழும் முறையான பால் இனப்பெருக்கம் என்பது பாக்டீரியங்களில் கிடையாது. எனினும், மூன்று வெவ்வேறு விதங்களில் பாக்டீரியங்களில் ஜின்களின் மறுசேர்க்கை நிகழ்கிறது.

பாக்டீரியங்களின் பொருளாதார முக்கியத்துவம்

மனிதனின் அன்றாட வாழ்வில் பாக்டீரியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சில பாக்டீரியங்கள் தீமைபயப்பன, சில மனிதனுக்குப் பயன்தருபவை ஆகும்.

தீமை பயக்கும் செயல்கள்

பாக்டீரியங்களால் தாவரங்களுக்கு உண்டாகும் சில நோய்கள்

 • எலும்பிச்சை - சிட்ரஸ் கேன்கர் - சேந்தோமோனாஸ் சிட்ரி
 • சேந்தோமோனாஸ் ஒரைசே - கோண இலைப்புள்ளி - சேந்தோமோனாஸ் மால்வேஸியேரம்
 • தீவெப்புநோய் - சூடோமோனாஸ் சோலனேஸியேரம் - எர்வினியா கேரட்டோவோரா

பாக்டீரியங்களால் விலங்குகளுக்கு உண்டாகும் சில நோய்கள்

 • ஆந்த்ராக்ஸ் - பேஸில்லஸ் ஆந்த்ராஸிஸ்
 • மாடுகள் - புருசெல்லோஸிஸ் - புருசேல்லா அபோர்டஸஸ்
 • செம்மறி ஆடுகள் - புரூசெல்லோஸிஸ் - புரோசெல்லா மெலிட்டென்ஸிஸ்

பாக்டீரியாக்களால் மனிதனுக்கு ஏற்படும் சில நோய்கள்

 • விப்ரியோ காலரே
 • டைஃபாய்டு சால்மொனெல்லா டைஃபி
 • ட்யூபர்குலோசிஸ் மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ்

பாக்டீரியங்களின் நன்மை பயக்கும் செயல்கள்

கழிவு நீக்கம்

மட்குண்ணி பாக்டீரியங்களால் கழிவுப் பொருட்களில் உள்ள அங்ககப் பொருட்கள் சிதைக்கப்படுகின்றன.

தாவர, விலங்கு எச்சங்கள் சிதைக்கப்படுதல்

தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் இறந்த உடலங்கள் மட்குண்ணி பாக்டீரியங்களால் சிதைக்கப்படுகின்றன. சிதைத்து வாயுக்கள் மற்றும் உப்புக்களை இவை மண்ணிலும், வளி மண்டலத்திலும் வெளிவிடுகின்றன. எனவே இவ்வகை பாக்டீரியங்கள் இயற்கை கழிவு நீக்கிகள் (இயற்கை தோட்டி) எனவும் அழைக்கப்படுகின்றன.

மண்வளம்

 1. பேஸில்லஸ் ராமோஸஸ் மற்றும் பேஸில்லஸ் மைகாய்டஸ் போன்ற அம்மோனியாவாக்கும் பாக்டீரியங்கள் இறந்த தாவர, விலங்கு உடலங்களிலிருக்கும் சிக்கலான புரதங்களை அம்மோனியாவாக மாற்றிய பின்பு அம்மோனியம் உப்புகளாக மாற்றுகின்றன.
 2. நைட்ரோபாக்டர் மற்றும் நைட்ரசோமானாஸ் போன்ற நைட்ரேட்டாக்கும் பாக்டீரியங்கள் அம்மோனியம் உப்புக்களை நைட்ரைட்டு மற்றும் நைட்ரேட்டாக மாற்றுகின்றன.
 3. அஸட்டோபாக்டர், கிளாஸ்டிரிடியம் மற்றும் ரைசோபியம் (கூட்டுயிர் பாக்டீரியம்) போன்ற நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் வளிமண்டல நைட்ரஜனை அங்கக நைட்ரஜனாக மாற்றுகின்றன. இதுபோன்ற பாக்டீரியங்களின் செயல்களால் மண் வளம் அதிகரிக்கின்றது. நைட்ரஜன் அடங்கிய கூட்டுப் பொருட்களும் நைட்ரஜனாக ஆக்ஸின் ஏற்றம் அடைகின்றன.

பொருட்களின் மறு சுழற்சி

கார்பன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் கந்தகம் ஆகிய தனிமங்களின் சுழற்சியில் பாக்டீரியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறாக சூழ்நிலையில் இவை ஒரு சமநிலையை உண்டாக்குகின்றன. இயற்கை கழிவு நீக்கியாக பாக்டீரியங்கள் செயல்பட்டு அங்ககப் பொருட்களை ஆக்ஸிஜன் ஏற்றம் செய்து கார்பன்டை-ஆக்ஸைடை வெளிவிடுகின்றன. நைட்ரஜன் அடங்கிய அங்ககக் கூட்டுப் பொருட்கள் அம்மோனியாவாக முதலில் சிதைக்கப்பட்டு பின்பு நைட்ரைட்டு அயனியாகவும் நைட்ரேட்டு அயனிகளாகவும் நைட்ரேட்டாக்கும் பாக்டீரியங்களால் ஆக்ஸிஜன் ஏற்றம் செய்யப்படுகின்றன. உயர் தாவரங்கள் இந்த அயனிகளைப் பயன்படுத்தி அங்ககக்கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. நைட்ரஜனை நீக்கும் பாக்டீரியங்களும் நைட்ரஜன் அடங்கிய கூட்டுப் பொருட்களை ஆக்ஸிஜன் ஏற்றம் செய்கின்றன.

தொழிற்சாலையில் பாக்டீரியங்களின் பங்கு

பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களின் தொழிற்சாலை

லாக்டிக் அமில பாக்டீரியா (எ.கா. ஸ்டெரெப்டோகாக்கஸ் லாக்டிஸ்) பாலில் உள்ள லேக்டோஸ் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றுகின்றன. CHO + HO -----------> 4CH,O, + ஆற்றல் லோக்டோஸ் லாக்டிக் அமிலம் பாலைத் தயிராக மாற்ற லேக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ் பாக்டீரியமும் பாலாடைக் கட்டியாக மாற்ற லேக்டோ பேசில்லஸ் அஸிடோஃபோபஸ் என்ற லேக்டிக் அமில பாக்டீரியமும் உபயோகப்படுகின்றன.

புளிக்காடி (வினிகர்)

அஸிட்டிக் அமில பாக்டீரியத்தின் (அஸிட்டோபாக்டர் அஸிட்டை) செயலால் வினிகர் (அஸிட்டிக் அமிலம்) உற்பத்தி செய்யப்படுகின்றது. கரும்புச் சக்கையிலிருந்து (molasses) பெறப்பட்ட எதத்தில் ஆல்கஹாலை இந்த பாக்டீரியம் நொதிக்கச் செய்து வினிகரை உண்டாக்குகிறது.

ஆல்கஹால் மற்றும் அஸிட்டோன்

கிளாஸ்டிரிடியம் அஸிட்டோபியூட்டிலிக்கம் என்ற காற்றில்லா சுவாச பாக்டீரியத்தின் நொதித்தல் செயல் மூலம் கரும்புச் சக்கையிலிருந்து பியூட்டைல் ஆல்கஹால், மெத்தில் ஆல்கஹால் மற்றும் அஸிட்டோன் ஆகியவை பெறப்படுகிறது.

புகையிலை, தேயிலை மற்றும் காஃபி பதப்படுத்துதல்

சில பாக்டீரியங்களின் நொதித்தல் செயல்களால் தேயிலை, புகையிலை மற்றும் காப்பிக்கொட்டை ஆகியவை அவற்றுக்குரித்தான மணத்தைப் பெறுகின்றன. இதுவே தேயிலை, புகையிலை மற்றும் காஃபியின் பதப்படுத்துதல் எனப்படுகின்றது.

நார்களைப் பிரித்தெடுத்தல்

கிளாஸ்டிரிடியம் போன்ற சில பாக்டீரியங்களின் செயல்களால் நார் தரும் தாவரங்களிலிருந்து நார்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதுவே ரெட்டிங் எனப்படுகிறது.

மருத்துவத்தில் பாக்டீரியங்களின் பங்கு

நுண்ணுயிர் கொல்லிகள்

நுண்ணியிர்கொல்லிகள் பல பாக்டீரியங்களிலிருந்தேப் பெறப்படுகின்றன. எ.கா. பாஸிட்ராஸின் (பேஸில்லஸ் சப்டிலஸ்) பாலிமிக்ஸின் (பேஸில்லஸ் பாலிமிக்சின்) ஸ்டெரப்டோமைசின் (ஸ்டெரப்டோமைசஸ் கிரசியஸ்).

வைட்டமின்கள்

மனிதக் குடலில் வாழும் எஸ்செரிஸியா கோலை வைட்டமின் K மற்றும் வைட்டமின் B ஆகியவற்றை பெருமளவில் உற்பத்தி செய்கின்றது. கிளாஸ்டிரிடியம் என்ற பாக்டீரியாவின் சிற்றினங்கள் பல சர்க்கரையை நொதிக்கச் செய்து வைட்டமின் B, வை உற்பத்தி செய்கின்றன.

மரபுப் பொறியியலில் பாக்டீரியங்களின் பங்கு

மரபியல் மற்றும் மூலக்கூறு அறிவியலில் இந்த நூற்றாண்டில் நாம் பெற்றுள்ள அறிவு, நுண்ணியிர்களில், குறிப்பாக, எ.கோலை போன்ற பாக்டீரியங்களில் மேற்கொண்ட அராய்ச்சிகளின் விளைவே ஆகும். மனித இன்சுலின் ஜினை பாக்டீரியாவுக்கு மாற்றி வணிக ரீதியாக, பெருமளவில், இன்சுலினை உற்பத்தி செய்வது இதில் ஒரு குறிப்படத்தகுந்த வெற்றி ஆகும்.

உயிரி தீங்குயிர் கொல்லிகளாக பாக்டீரியங்கள்

போஸிஸ்லஸ் வகையைச் சார்ந்த பேஸில்லஸ் துரிஞ்ஞென்சிஸ் போன்ற பாக்டீரியங்கள், பூசிகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் புழுக்களைக் கொல்ல பயன்படுன்றன. இது போன்ற பாக்டீரியங்களால் மற்ற தாவரங்களுக்கோ விலகுகளுக்கோ எந்த ஒரு பாதிப்பும் இல்லாததால் இவை பெருமளவில் ஏற்படும் பயிர் நோய்களைக் கட்டுப் படுத்தப் பயன்படுகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.08108108108
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top