பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வைரஸ்கள்

வைரஸ்கள் பற்றிய பொதுவான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உயிருள்ளவற்றின் பண்புகளையும் உயிரற்றவைகளின் பண்புகளையும் பெற்றுள்ளதால் வைரஸ்கள், இன்றளவும் உயிரியல் வல்லநர்களுக்கு பெரிய புதிராகவே உள்ளன. எனவே வைரஸ்களுக்கு வகைபாட்டியலில் தனி இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மிக நுண்ணிய, எலக்ட்ரான் நுண்ணோக்கியினால் மட்டுமே காணக்கூடிய, நோயை உருவாக்கும், செல்லுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று தற்போது வைரஸ்கள் வரையறுக்கப்படுகின்றன.

வைரஸ்களின் தோற்றம்

வைரஸ்களின் மிக நுண்ணிய அளவின் காரணமாக அவைகளைப் பற்றிய அறிவு உயிரியல் வல்லுநர்களுக்கு நீண்ட காலமாக இல்லாமலேயே இருந்தது. ஆனால் பாக்டீரியங்கள் அல்லாத வேறு சிலவும் நோயை உண்டாக்கும் திறனுடையதாக இருந்ததும் தெரியவந்தது. 19ம் நூற்றாண்டில் புகையிலையின் பல் வண்ண இலை நோய் (மொசைக்) வைரஸ் (TMV), வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த புகையிலையைக் கடுமையாக தாக்கி சேதம் உண்டாக்கிய போதுதான் வைரஸ்கள், ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.

நோயுற்ற இலையின் சாற்றினை நோயில்லாத இலையில் தெளித்தாலே அது நோய்வாய்ப்பட்டது என்பதனை மேயர் என்பவர் நிரூபித்துக் காட்டினார். நோயுற்ற இலையின் சாற்றினை பாக்டீரிய வடிகட்டி மூலம் வடிகட்டின பிறகும் கூட அச்சாறு தொற்றுத்தன்மை வாய்ந்ததாக இருந்ததால், இத்தொற்றுத்தன்மைக்குக் காரணம் பாக்டீரியங்கள் அல்ல என்பதனை ஐவோனோஸ்க்கி என்ற ரஷிய அறிவியல் அறிஞர் வெளிப்படுத்தினார். டச்சு நுண்ணுயிர் வல்லுநர் பெய்ஜிரிங்க் (1898) என்பவர் ஐவோனோஸ்க்கியின் கண்டுபிடிப்புகளை ஊர்ஜிதப்படுத்தினார். நோயை உண்டாக்கும் துகள்கள் வைரஸ்கள் என அழைக்கப்பட்டது. W.M. ஸ்டான்லி (1935) என்ற அமெரிக்க உயிர் வேதியியல் நிபுணர் வைரஸ்களை படிகவடிவில் தனிப்படுத்தினார். இப்படிக வடிவிலும் அவை நோய் உண்டாக்கும் திறன் உடையவையாய் இருந்தன. இதுவே வைராலஜி என்ற புதிய அறிவியல் பிரிவு ஆரம்பமாக அடிகோலியது.


வைரஸ்

பொதுப்பண்புகள்

வைரஸ்கள் எலக்ட்ரான் நுண்ணோக்கியில் மட்டுமே காணவல்லன. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நோயை உண்டாக்கும் திறன் உள்ளவை. புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தை உடையவை. நியூக்ளிக் அமிலம் டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ ஆகும். ஆனால் இவை இரண்டையும் சேர்ந்து கொண்டிருப்பதில்லை. வைரஸ்கள் சாதாரண செல் அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. எந்த ஒரு வளர்சிதை மாற்றத்திற்கும் தேவையான அமைப்பையும் இவை பெற்றிருக்கவில்லை. இவை செல்லுக்குள்ளே வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள். ஒம்புயிர் செல்லுக்குள் மட்டுமே பெருக்கமடைகின்றன. ஒம்புயிர் செல்லுக்கு வெளியே இவை முழுமையாக செயலற்றவை.

வைரஸ்களின் புதிர்

வைரஸ்களின் உயிர்ப்பண்புகள்

 • ஓம்புயிர் தாவரசெல் அல்லது விலங்கு செல்லினுள்ளே பெருக்கமடையும் திறன் உடையவை
 • நோயை உருவாக்கும் திறன் உடையவை
 • நியூக்ளிக் அமிலம், புரதம் மற்றும் நொதிகளைக் கொண்டிருத்தல்
 • திடீர்மாற்றம் அடையும் திறன் உள்ளவை

வைரஸ்களின் உயிரற்ற பண்புகள்

 • செல்லுக்கு வெளியே பெருக்கமடையும் திறன் அற்றவை
 • எந்த ஒரு வளர்சிதை மாற்றமும் அற்றவை
 • புரோட்டோபிளாசம் அற்றவை.
 • படிகப்படுத்த முடியும்

அளவும் வடிவமும்

வைரஸ்கள் மிக நுண்ணியத் துகள்கள், அவற்றை எலக்ட்ரான் நுண்ணோக்கியில் மட்டுமே காணமுடியும். இவை நேனோ மீட்டர் என்ற அலகினால் அளக்கப்படுகின்றன. (1நேனோமீட்டர் = 10° மீட்டர் அல்லது 1 மீட்டர் = 10° நேனோமீட்டர்) பொதுவாக வைரஸ்களின் அளவு 20 நேனோ மீட்டரிலிருந்து 300 நேனோ மீட்டர் வரை உள்ளன. மிக நுண்ணிய அளவு, பாக்டீரிய வடிகட்டியில் ஊடுருவிச் செல்லும் தன்மை ஆகிய இவ்விரண்டும் வைரஸ்களின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

வைரஸ்களின் பல்வேறு வடிவங்கள்

அல்ட்ரா சென்ட்ரிஃபியூஜின் மூலம் வீழ்படிவு உருவாக்குதல்

இம்முறையில் வீழ் படிவாதலின் வீதத்திற்கும் துகள்களின் அளவு மற்றும் வடிவத்திற்கும் உள்ள தொடர்பினை பயன்படுத்தி துகள்களின் அளவைக் கணக்கிட முடியும்.

ஒப்பீட்டின் மூலம் அளத்தல்

கீழ்க்கண்ட விவரங்கள் ஒப்பீட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

கனசதுர வடிவம் (Cubic Symmetry)

பல கோணமுடையவை அல்லது கோள வடிவம். எ.கா. அடினோ வைரஸ்கள், எச்.ஐ.வி. சுருள் வடிவம் (helical Symmetry) (எ.கா.) புகையிலை மொசைக் வைரஸ் (TMV), இன்ஃபுளூயன்சா வைரஸ். சிக்கலான அல்லது அசாதாரண வடிவம். எ.கா. பாக்டீரியோஃபேஜ் பாக்ஸ் வைரஸ்

வைரஸ்களின் அமைப்பு

வைரஸ்கள் இரண்டு முக்கிய பாகங்களை கொண்டுள்ளன. 1. கேப்சிட் எனப்படும் புரத உறை 2. நீயூக்ளிக் அமிலம். கேப்சிட் எனப்படுவது வெளியேக் காணப்படும் புரத உறையாகும். இதன் பணி உள்ளே உள்ள நியூக்ளிக் அமிலத்தைப் பாதுகாப்பது ஆகும். இது கேப்சோமியர்கள் எனப்படும் ஒரே மாதிரியான சிறிய அலகுகளால் ஆனவை. சில வைரஸ்களைச் சுற்றிலும் வெளியே ஒரு உறையும் காணப்படுகிறது.

எச்.ஐ.வி.

இவை உறையுள்ள வைரஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனையவை உறைஅற்றவை அல்லது திறந்த வைரஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன. நியூக்ளிக் அமிலத்துடன் ஒட்டி காணப்படும் கேப்சிட் நியூக்ளிக் அமிலம் (RNA) நீயூக்ளியோ கேப்சிட் என்றழைக்கப்படுகின்றன. நியூக்ளிக் அமிலம் மையத்தில் உள்ளது. ஏனைய உயிருள்ள செல்களைப் போல அல்லாமல் வைரஸ்கள் டி.என்.ஏ வைக் கொண்டிருக்கும் அல்லது ஆர்.என்.ஏ வைக் கொண்டிருக்கும். ஒரு போதும் இரண்டையும் ஒரு சேரப் பெற்றிருக்காது. வைரஸின் தொற்றுத்தன்மைக்கு நியூக்ளிக் அமிலம் காரணமாகும். ஓம்புயிர் திட்டவட்டத்தன்மைக்கு அதன் புரத உறை காரணமாகிறது.

வீரியான்

ஒம்புயிர்ச் செல்லுக்கு வெளியே பெருக்கம் அடைய முடியாத, தொற்றுத்தன்மை வாய்ந்த, ஒரு முழுமையான வைரஸ்களுக்கு வீரியான் என்று பெயர்.

வீராய்டுகள்

புரத உறையற்ற, வட்ட வடிவமான ஒரிழை ஆர்.என்.ஏ வே வீராய்டு என்று அழைக்கப்படுகிறது. வீராய்டுகள், சிட்ரஸ் எக்ஸோ கார்ட்டிஸ் (Citrus ex000rtis) போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல தாவர நோய்களை உண்டாக்குகின்றன

பிரியான்கள்

இவை நோயை உண்டாக்க வல்ல புரதத்துகள்கள். மனிதன் மற்றும் ஏனைய விலங்குகளின் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் பல நோய்களுக்கு இவை காரணமாக உள்ளன. எ.கா. க்ரூயிட்ஸ்ஃபெல்ட் - கோளாறு நோய் என்று பொதுவாக அழைக்கப்படும். போவைன் ஸ்பாஞ்சிபார்ம் என்சிஃபலோபதி (BSE). இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இவை டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ போன்ற எந்த மரபுப்பொருளையும் கொண்டிருக்காததுதான். ஸ்டான்லி புரூசினர் பிரியான்களில் ஆராய்ச்சி செய்து 1998ல் நோபல் பரிசைப் பெற்றார்.

வைரஸ்களின் வகைப்பாடு

ஐந்து உலக வகைப்பாட்டில் வைரஸ்கள் ஒரு உலகமாகக் கருதப்படவில்லை என்றாலும் இவை தனித்த ஒரு வகைபாட்டினை ஏற்படுத்தும் அளவுக்கு தனித்துவம் வாய்ந்தவை.

ஒம்புயிரியின் அடிப்படையில் வைரஸ்கள் கீழ்க்கண்ட நான்கு வகைகளாக வகை படுத்தப்படுகின்றன.

 • தாவர வைரஸ்கள் : ஆல்கா வைரஸ்களையும் இவை உள்ளடக்கியவை - RNA அல்லது DNA உடையவை.
 • விலங்கு வைரஸ்கள் : மனித வைரஸ்களையும் இவை உள்ளடக்கியவை. RNA அல்லது DNA உடையவை.
 • பூஞ்சைகளின் வைரஸ்கள் (மைக்கோவைரஸ்கள்) : ஈரிழை RNA உடையவை.
 • பாக்டீரியாவின் வைரஸ்கள் (பாக்டீரியோஃபேஜ்கள்) இவை சயனோ பேஜ்களையும் உள்ளடக்கியவை. DNA உடையவை.

தாவர வைரஸ்கள்

இவை தாவரங்களைத் தாக்கி நோயை உருவாக்குகின்றன. சில தாவர வைரஸ் நோய்கள் பின்வருமாறு.

 • புகையிலை, வெள்ளரி மற்றும் காலிஃபிளவரின் பல்வண்ண இலை நோய் (TMV Loppi CMV) .
 • வாழையின் உச்சிக் கொத்து நோய்
 • உருளையின் இலைச் சுருள் நோய்
 • தக்காளியின் புள்ளி அழுகல் நோய்
 • காலிஃபிளவர் மொசேய்க் வைரஸ் தவிர அனைத்து தாவர வைரஸ்களும் ஆர்.என்.ஏ வைக் கொண்டிருக்கும்.

விலங்கு வைரஸ்கள்

இவை விலங்குகளைத் தாக்கி நோயை உண்டாக்கும். இவற்றின் நீயூக்ளிக் அமிலம் டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ ஆகும். மனிதனுக்கு வைரஸால் உண்டாகும் சில நோய்கள் சளி, அம்மை, பெரியம்மை (தற்போது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது), சிற்றம்மை, மஞ்சள் காமாலை, ஹெர்ப்பிஸ், ஹெப்பாட்டைட்டிஸ் A,B,C,D,E,G, இன்ஃபுளூயன்ஸா, இளம்பள்ளை வாதம் (Polio), பொன்னுக்கு வீங்கி (Mumps), வெறிநாய்க்கடிநோய் (Rabies), எய்ட்ஸ் (AIDS) மற்றும் சார்ஸ் (SARS). ஆடு, மாடு போன்ற கால்நடைகளிலும் வைரஸ்கள் நோயை உண்டாக்கும். எ.கா. கால் நடைகளுக்கு வரும் கோமாரி நோய் (Foot and mouth disease of cattle) குதிரைகளுக்கு வரும் என்ஃஸெஃபெலோமயலைட்டிஸ், நாய்களுக்கு வரும் டிஸ்டெம்பர் நோய், வெறி நாய்க்கடி நோய் ஆகியவை.

பூஞ்சைகளுக்கு நோய் உண்டாக்கும் வைரஸ்கள் மைக்கோ வைரஸ்கள் எனப்படுகின்றன. நீலப்பசும்பாசி (சயனோ பாக்டீரியங்கள்)களைத் தாக்கி நோய் உண்டாக்கும் வைரஸ்கள் சயனோஃபேஜ்கள் எனப்படுகின்றன.

பாக்டீரியோஃபேஜ்கள்

பாக்டீரியங்களைத் தாக்கி நோயுண்டாக்கும் வைரஸ்கள் பாக்டீரியோஃபேஜ்கள் அல்லது ஃபேஜ்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. இவை தலைப்பிரட்டை வடிவம் உடையவை. நியூக்ளிக் அமிலம் DNA ஆகும்.

ஃபேஜின் வாழ்க்கைச் சுழற்சி

இவை இரண்டு வகையான வாழ்க்கைச் சுழற்சியை உடையது.

 • வீரியமுள்ள அல்லது லைட்டிக் சுழற்சி
 • வீரியமற்ற அல்லது லைசோஜெனிக் சுழற்சி

வீரியமுள்ள அல்லது லைட்டிக் சுழற்சி

இதில் பேஜ்கள் செல்லுக்கு உள்ளேப் பெருக்கமடைவதால் ஒம்புயிர் பாக்டீரிய செல் வெடித்து அழிகிறது. வீரியான்கள் வெளியேற்றப்படுகின்றன.

வீரிமுள்ள ஃபேஜின் பெருக்கம் கீழக்கண்ட படிகளில் நடைபெறுகிறது.

 1. ஒட்டிக்கொள்ளுதல்
 2. ஊடுருவுதல்
 3. ஃபேஜின் பாகங்கள் உற்பத்தி செய்யப்படுதல்
 4. சேர்க்கை
 5. முதிர்ச்சி அடைதல்
 6. சேய் ஃபேஜ்களின் வெளியேற்றம்.

ஒட்டிக்கொள்ளுதல்

பாக்டீரிய செல்லில் ஃபேஜ் தனது வால் பகுதியின் மூலம் இணைதலையே ஒட்டிக்கொள்ளுதல் என்கிறோம். ஃபேஜின் ஒம்புயிரி திட்டவட்டத்தன்மை இந்த நிலையிலேயேத் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. ஃபேஜினால் எளிதில் தாக்க முடியாத பாக்டீரிய செல்லில் கூட செயற்கை முறையில் ஃபேஜின் டி.என்.ஏ வை எடுத்து ஊசி மூலம் செலுத்த முடியும். இது போன்று திறந்த (புரத உறை அற்ற) நீயூக்ளிக் அமிலத்தை மட்டும் எடுத்து ஓம்புயிர் செல்லில் செலுத்துவது DNA உட்செலுத்தல் (Transfection) என்று அழைக்கப்படுகிறது.

ஊடுருவுதல்

நியூக்ளிக் அமிலத்தின் ஊடுருவுதல், ஊசி மூலம் மருந்தினை உட்செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஒப்பாக நடைபெறுகிறது. ஃபேஜின் டி.என்.ஏ, அதன் மையக்குழாய் வழியாக பாக்டீரிய செல்லுக்குள் செல்கிறது. ஊடுருவலுக்குப் பிறகு, ஃபேஜின் தலைப்பகுதியும் வால் பகுதியும் பாக்டீரிய செல்லுக்கு வெளியே வெறும் கூடு போல காட்சி அளிக்கிறது.

ஃபேஜின் பாகங்கள் உற்பத்தி செய்யப்படுதல்

இந்நிலையில் பாக்டீரியபுரதம், பாக்டீரிய டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ ஆகியவற்றின் உற்பத்தி தடைபடுகிறது. அதற்கு பதிலாக ஃபேஜின் டி.என்.ஏ., அதன் தலைப்பகுதியில் உள்ள புரதம், வால் பகுதியில் உள்ள புரதம் ஆகியவை தனித்தனியாக பாக்டீரிய செல்லில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல கோண தலைப்பகுதியில் டி.என்.ஏ திணிக்கப்படுகிறது. இறுதியாக வால் பகுதியில் உள்ள அமைப்புகளும் சேர்ககப்படுகின்றன. இது போன்று ஃபேஜின் பல பாகங்கள் தொகுக்கப்பட்டுப் பின்பு நோயுண்டாக்கும் வைரஸ் துகள்களைத் தோற்றுவிப்பதற்கு முதிர்ச்சி அடைதல் என்று பெயர்.

ஃபேஜ்களின் வெளியேற்றம்

ஃபேஜ்களின் வெளியேற்றம் சாதாரணமாக பாக்டீரிய செல் வெடித்து அழிவதால் ஏற்படுகிறது. ஃபேஜ்களின் பெருக்கத்தின்போது பாக்டீரிய செல் சுவர் நலிவடைந்து, வட்ட வடிவத்தைப் பெறுகின்றது. பின்பு வெடிக்கிறது அல்லது சிதைந்து விடுகிறது. உள்ளேயிருந்து முதிர்ச்சியடைந்த சேய் ஃபேஜ்கள் வெளியேற்றப்படுகின்றன.

லைசோஜெனிக் சுழற்சி

இவ்வகையில், வீரியமற்றஃபேஜ்கள் ஒம்புயிரிச் செல்களுடன் ஒருவித கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஒம்புயிர்ச் செல்கள் அழிவதோ, சிதையுறுவதோ கிடையாது. உள்ளே நுழைந்தவுடன் வீரியமற்ற ஃபேஜின் டி.என்.ஏ பாக்டீரிய ஜினோமுடன் ஒருங்கிணைந்து விடுகிறது. ஃபேஜின், இது போன்ற ஒருங்கிணைந்த நியூக்ளிக் அமிலத்திற்கு புரோஃபேஜ்கள் என்று பெயர்.

ஒம்புயிர் செல்லின் குரோமோசோமின் ஒரு பகுதி போலவே செயல்பட்டு இந்த புரோஃபேஜ் அதனுடனேயேப் பெருக்கமடைகிறது. இதற்கு லைசோஜெனி என்று பெயர்.

புரோஃபேஜைத் தன் ஜீனோமில் கொண்டிருக்கும் பாக்டீரிய செல் லைசோஜெனிக் பாக்டீரியம் என்றழைக்கப்படுகிறது. இந்த புரோஃபேஜ், சில புதிய பண்புகளை பாக்டீரியத்திற்கு வழங்குகிறது. இதற்கு லைசோஜெனிக் மாற்றம் அல்லது ஃபேஜினால் ஏற்படும் மாற்றம் என்று பெயர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு டிஃப்தீரியா பேசில்லஸ் என்ற பாக்டீரியத்தினால் உண்டாக்கப்படும் சில நச்சுப்பொருட்கள் ஆகும். இந்த நச்சுப்பொருட்கள் உண்டாவதற்கு காரணம் இதில் உள்ள பீட்டா புரோஃபேஜ் (Prophage beta) ஆகும். புரோஃபேஜை நீக்கினால், இந்நச்சப்பொருள் உண்டாக்கும் தன்மையும் நீங்கி விடுகிறது.

தாவர வைரஸ் நோய்கள்

வாழையின் உச்சிக் கொத்து நோய்

வாழையின் உச்சிக்கொத்து வைரஸ் இந்நோயை உண்டாக்குகிறது. நோயுற்ற தாவரம் மிகவும் வளர்ச்சி குன்றிப் போகிறது. இலைகள் குறுகலாகவும் சிறியதாகவும் மாறுகின்றன. தாவரத்தின் உச்சிப் பகுதியில் பாதிக்கப்பட்ட இலைகள் ஒரு வட்ட வடிவில் ரோசெட் போன்று காட்சி அளிக்கின்றன. பச்சைய சோகை (chlorosis), மற்றும் இலைகள் சுருண்டு மடங்குதல் ஆகியவை தோன்றுகின்றன. நோய் தாக்கப்பட்ட தாவரங்களை உடனடியாக வேருடன் பிடுங்கி எடுத்து தீயிலிட வேண்டும். அப்போதுதான் நோய் அடுத்துள்ள தாவரங்களுக்கு பரவாது.

புதிதாகத் தோன்றும் வைரஸ் நோய்கள் (மனிதனில்)

உலகின் பல்வேறு பாகங்களிலும் அண்மையில் தோன்றியுள்ள வைரஸ் நோய்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் : எபோலாவைரஸ் (Ebolavirus), எச்.ஐ.வி (HIV), (lassa fever), (Rift Valley Fever), சார்ஸ் (SARS), எய்ட்ஸ் (பெறப்பட்ட நோய் எதிர்ப்புசக்தி குறை (Acquired Immuno Deficiency Syndrome).

எய்ட்ஸ்

எய்ட்ஸ் பாலுறவினால் பரவக் கூடிய சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸால் உண்டாகும் ஒரு நோய் இது. இந்த வைரஸ் மனித நோய் எதிர்ப்புசக்தி (Human Immuno Deficiency Virus (HIV), ரெட்ரோ வைரஸ்கள் எனும் ஒரு வகை வைரஸ் பிரிவைச் சார்ந்தவை. உதவும் செல்கள் (helper cells) என்றழைக்கப்படும் ஒரு T லிம்ஃபோசைட்டுகளை இவ்வைரஸ்கள் தாக்கி மனித உடலின் எதிர்ப்பு சக்தியை குறைக்கின்றன. HIV, T, லிம்போசைட்டுகளை தாக்கி அழிப்பதால் அவை எண்ணிக்கையில் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன. இது பலவிதமான தொற்றுக் கிருமிகளும் தாக்க வழி வகுக்கிறது. எய்ட்ஸ் நோய் மட்டுமே ஒரு ஆட்கொல்லி நோய் இல்லை. எய்ட்ஸைச் சாதகமாக வைத்து நுழையும் பல விதமான தொற்று நோய்களே எய்ட்ஸ் நோயை ஒரு ஆட்கொல்லி நோயாக்குகின்றன.

நோய்க்குறிகள்

HIV யினால் காய்ச்சல், உடல் எடை குறைதல், நீடித்த நிணநீர் முடிச்சுகள் வீக்கம், நோய் எதிர்ப்புசக்தி குறைவால் ஏற்படும் எலும்புருக்கி (TB.) போன்றவை ஏற்படுகின்றன. மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீராத தலைவலி, அசதி, நீடித்த வயிற்றுப்போக்கு, வறண்ட இருமல், நிணநீர் செல் புற்றுநோய் (lymphomas) ஆகியவற்றால் அவதியுறுவர். சில சமயங்களில் மைய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம். வாயிலும் தொண்டைப் பகுதியிலும் மென்புடைப்புகள் தோன்றலாம். இரவில் அதிகமாக வியர்க்கும். சில சமயங்களில் மனக்கோளாறு, நடத்தையில் கோளாறு ஆகியவையும் தோன்றலாம்.

நோய் தொற்றும் வகை

HIV முக்கியமாக பாலுறவினால் பரவக் கூடிய ஒரு வைரஸாகும். இது அதிகமாக ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களிடையே (homosexuals) அதிகமாகக் காணப்படுகிறது. பாலுறவு நோய் உடையவர்கள், பலருடன் உடலுறவு கொள்பவர்கள், விலை மாதர்கள் ஆகியோர்களுக்கு இந்த வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். இந்த வைரஸ் பலருடன் உடலுறவு கொள்வதின் காரணமாகவே அதிகம் பரவுகிறது.

எய்ட்ஸ் பரவும் ஏனைய வகைகளாவன: இரத்த மாற்று, மற்றும் திசு, உறுப்பு ஆகியவற்றை நோய் வாய்பட்டவரிடமிருந்து தானமாகப் பெறும்போது, சரியாக கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள், சிரிஞ்சுகள் போன்றவற்றை உபயோகித்தல், போதை ஊசியை உபயோகிப்பவர்கள் பலர் மாறி, மாறி அதே ஊசியை உபயோகப்படுத்துவது எனப் பலவகைகளிலும் எய்ட்ஸ் பரவுகிறது. எய்ட்ஸ் நோயினால் தாக்கப்பட்ட தாயின் கருவிலுள்ள சிசுவும் இந்த நோயினால் பாதிக்கப்படக்கூடும். தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சேய்க்கு இந்நோய் பரவும்.

தடுப்புமுறை

எய்ட்ஸை குணப்படுத்தும் வழி கிடையாது. ஆகையால் இந்நோய் வராமல் காப்பதுதான் நல்ல நோய் தடுப்பு முறை ஆகும். வரையறை அற்ற ஆண், பெண் உடலுறவைத் தவிர்த்தல், ஆணுறைகளை உபயோகித்தல் ஆகியவற்றால் உடலுறவின் மூலம் இந்நோய் பரவுதலைத் தவிர்க்க முடியும். போதை ஊசியைப் பயன்படுத்துவர்கள் திரும்ப திரும்ப ஒரே ஊசியைப் பயன்படுத்தி அதனால் எய்ட்ஸ் வருவதை தகுந்த கல்வியறிவின் மூலம் தடுக்க முடியும். இரத்தத்தை உரிய முறையில் பரிசோதித்துப் பின்பு ரத்தம் மாற்றுதல் மூலம் இரத்தம் மற்றும் ரத்த சம்பந்தமான பொருட்களைத் தானம் பெறுவதன் மூலம் பரவுவதைத் தடுக்க முடியும். நோயுற்ற தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதை கருவைக் கலைத்தோ அல்லது கருவுறுதலைத் தடுத்தோ தவிர்க்கலாம். அஸிடோதைமிடின் (AZidothymidin) போன்ற மருந்துகள் இந்நோயினால் தாக்கப்பட்டவர்களின் வாழ்நாளை ஒருசில மாதங்கள் அதிகரிக்க மட்டுமே பயன்படுகின்றன. முழுமையாக நோயைத் கட்டுப்படுத்த இயலாது.

வைரஸ்களும் புற்று நோயும்

புற்றுநோய் என்பது கட்டுக்கடங்காத ஒழுங்கற்ற முறையில் செல்கள் பகுப்படைந்து வளர்ந்து பரவும் கட்டிகளாக உருவாவதுதான். இக்கட்டிகளில் உள்ள செல்கள் உடலின் பல பகுதிகளுக்கும் வரம்பற்ற ரீதியில் பரவுகின்றன. சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவின் படி சைமன் வைரஸ் (SV - 40) என்னும் டின்.ஏ. வைரஸும் ரெட்ரோ வைரஸ்கள் எனப்படும் ஆர்.என்.ஏ. வைரஸ்களும் புற்று நோயைத் தோற்றுவிக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்று நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ்கள் ‘புற்று நோயை உருவாக்கும் வைரஸ்கள்’ (Oncogenic Viruses) என்று அழைக்கப்படுகின்றன. இரத்தப் புற்றுநோய் (leukemia), எலும்புப் புற்று நோய் (Sarcoma) மற்றும் மார்புப் புற்று நோய் ஆகியவற்றிலும் வைரஸ்களுக்குப் பங்கு உண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார்ஸ் (SARS) என்றழைக்கப்படும் புதியதொரு நோய் (Severe Acute Respiratory Syndrome) (SARS) தற்போது தென் கிழக்கு ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி உலக மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி இருப்பதோடு சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது.

நோய்க்குறிகள்

கடுமையான ஜூரத்துடன் இந்நோய் ஆரம்பமாகிறது. தலைவலி, உடல் வலி மற்றும் உடல் செளகரியமின்மை ஆகிய நோய்க்குறிகளும் தோன்றுகின்றன. நோயாளிகள் வறட்டு இருமலும் மற்றும் மூச்சுவிட சிரமமும் அடைவர். சார்ஸ் பரவும் விதம் நோயுள்ளவர்களுடன் நெருக்கமாகத் தொடர்பு இருந்தால் குறிப்பாக தொற்றுத்தன்மை வாய்ந்த மூச்சுத் திரவம் போன்றவற்றின் மூலம் சார்ஸ் எளிதில் பரவுகிறது. சார்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் தொடர்ந்து வடிவத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கென்று தடுப்பு மருந்து (Vaccine) கண்டுபிடிப்பது மிக சிரமம் வாய்ந்ததாக உள்ளது. சார்ஸ் நோய், கோரோனா வைரஸ்கள் எனப்படும் உறையுள்ள வைரஸ்களால் உண்டாகிறது. இவற்றின் ஜீனோம் ஒற்றை இழையால் ஆன ஆர்.என்.ஏ. ஆகும். நியூக்ளியோகேப்சிட் சுருள் வடிவம் உடையது. சூரிய கோரோனா போன்று இந்த வைரஸ்களைச் சுற்றி இதழ்போன்ற நீட்சிகள் உள்ளன.

வைரஸ் தடுப்பு மருந்துகள்

ஒம்புயிரின் நோய்த் தடுப்பு ஆற்றலைப் பயன்படுத்தி வைரஸ் நோய்களைத் தடுப்பதே வைரஸ் தடுப்பு மருந்துகளின் நோக்கமாகும். வைரஸ் தொற்று நோய்களைத் தடுக்க மிகச் சிறந்த, செலவு குறைந்த வழி தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதே ஆகும்.

இன்டர்ஃபெரான்கள் (IFNS)

இவை ஒம்புயிரில் உருவாக்கப்படும், சைட்டோகைனின் வகையைச் சார்ந்த புரதங்களாகும். இவை, வைரஸ்களின் பெருக்கத்தை தடை செய்கின்றன. உயிருள்ள விலங்கு செல்களிலோ அல்லது ஆய்வுச் சாலையில் திசு வளர்ப்பின் மூலம் தோன்றும் செல்களிலோ வைரஸ்களின் தாக்குதல் போன்ற தூண்டுதல் காரணமாக இன்டர்ஃபெரான்கள் உருவாக்கப்படுகின்றன. வைரஸ் தாக்குதலுக்கு மனித உடலில் தோன்றும் முதல் எதிர்ப்புப் பொருள் இவையே என்று நம்பப்படுகிறது.

வைரஸ்களின் முக்கியத்துவம்

 1. வைரஸ்கள் உயிரியல் வல்லுநர்களுக்கு ஒரு புதிராகவே உள்ளன. ஏனெனில் இவை உயிருள்ளவற்றிற்கும் உயிரற்றவைக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டில் அமைந்து இரண்டுக்கும் உரித்தான பண்புகளைக் கொண்டுள்ளன.
 2. இவற்றின் எளிமையான அமைப்பு மற்றும் வேகமாகப் பெருகும் தன்மை ஆகியவற்றின் காரணமாக வைரஸ்கள் உயிரியல் வல்லுநர்களின் முக்கிய ஆய்வுக் கருவியாகப் பயன்படுகின்றன. குறிப்பாக மூலக்கூறு உயிரியல், மரபுப் பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் இவை பெரிதும் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
 3. தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகளை ஒழிப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. உயிரி தீங்குயிர்க்கொல்லி திட்டங்களில் (Biological Control Programes) இவைபெரிதும் உபயோகப்படுகின்றன.
 4. அவற்றின் நோய் பயக்கும் தன்மை காரணமாக வைரஸ்கள் விவசாயத்துறையில் உள்ளவர்களுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்குகின்றன. பாக்டீரியோ ஃபேஜ்கள் மண்ணில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்களைத் தாக்கி அழித்து மண்ணின் வளத்தைக் குறைக்கின்றன.
 5. தொழிற்சாலைகளில் வைரஸ்கள் சீரம், மற்றும் வாக்சின்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.03921568627
வீ.பாலா Jan 31, 2019 07:50 PM

மிக அருமை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top