பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ்

ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் எனும் நுண்ணுயிரி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இப்பேரினத்தைச் சார்ந்த அனைத்து உயிரிகளும் மைக்ரோகாக்கேசியே குடும்பத்தைச் சார்ந்தவை ஆகும். இவைகள் கிராம் பாசிடிவ் காக்கை. இவை அனைத்தும் திராட்சை போன்று கொத்துகளாகத் தோன்றுகின்றன. இதனுடைய அளவு 0.5- 1.5(p) மைக்ரான் விட்டமாகும். இவை அனைத்தும் நகரும் தன்மை அற்றவை. ஸ்போர்களைத் தோற்றுவிக்காது கேட்டலைஸ் பாசிடிவ் மற்றும் மேலுறையற்றவை.

ஸ்டபைலோகாக்கை இயற்கையில் பரந்து காணப்படுகிறது. இவை முக்கியமாக உயிருள்ள அனைத்து உயினங்களின் தோல்களிலும், தோல் சுரப்பிகளிலும், (மனித) பாலூட்டிகளின் கோழை படலங்களிலும் பறவைகளிலும் காணப்படுகின்றன. பொதுவாக இவை அனைத்தும் விருந்தோம்பியோடு ஒட்டுறவு வாழ்க்கையை மேற்கொள்கின்றன. ஆனால் சில சமயங்களில் இவைகள் திசுக்களின் காயத்தில் செலுத்தப் பெற்றாலோ (அ) நேராக ஊசிகளின் மூலமாகவோ (அ) நோய்க் கிருமிகள் உள்ள வேற்றுப் பொருட்கள் மூலமாகவோ செலுத்தப்பெற்றால் இவை நோய்க் கடத்திகளாக மாறிவிடுகின்றன.

எப்பி டெர்மிடிஸ், ஸ்டபைலோகாக்கஸ் சாப்ரோபைடி கஸ், ஸ்டபைலோகாக்கஸ் ஹிமோலைடிகஸ் மற்றும் ஸ்டபைலோ காகஸ் லக்டன்னென்சிஸ். இவை அனைத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ்.

ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸின் இயல்பான குணங்கள்

ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் பல பொருட்களைச் சுரந்து விருந்தோம்பியின் மீது தாக்குதலை மேற்கொள்கிறது. இவை நொதிகளாகவும், நச்சுக்களாகவும் சுரக்கப்படுகிறது.

கேட்டலேஸ்

இது ஒரு நொதி ஆகும். இந்த நொதி ஹைட்ரஜன் பராக்சைடை நீர்மூலக்கூறுகளாகவும், ஆக்சிஜனாகவும் பிரித் தெடுக்கின்றன. கோயகுலேஸ் : இது ஒரு புரத வகை நொதி ஆகும். இது பிளாஸ்மாப் படலத்தை உறையச் செய்கிறது. ஃபைபிரின் (Fibrin) ஸ்டபைலோகாக்கையைச் சுற்றி மூடிக்கொள்வதால் செல் விழுங்குதலிலிருந்து தப்பிவிடுகின்றன. ஹைலோரானிடேஸ் இது ஒரு பரவும் காரணியாக விளங்குகிறது. இதனுடைய துணைகொண்டு, ஸ்டபைலோகாக்கை திசுக்களில் பரவுகின்றன,

ஸ்டபைலோகைனேஸ்

இது ஃபைபிரின் உறையை அழிக்கக் கூடியது.

புரோட்டியோஸஸ்

இந்த நொதிகள் புரோட்டின்களை சிதைவடையச் செய்கின்றன.

லைபேஸ்

இவை லிப்பிடுகளை அழிக்கக் கூடியது.

லாக்டமேஸ்

இந்த நொதிகளை குறிப்பிட்ட சில ஸ்டபைலோ காக்கஸ் புள்ளினம் (strain) உற்பத்தி செய்கிறது. இவை பெனிசிலின் மூலக்கூறுகளைச் சிதைவடையச் செய்கிறது.

புற நச்சுக்கள்

(i) 0- நச்சுக்கள் இரத்த சிவப்பு அணுக்களை அழித்தும் பிளேட்லைட்ஸ்களை பாதிக்கவும் செய்கின்றன,

(ii) 3-நச்சுக்கள் ஸ்பிங்கோமைலினையயும் மற்றும் பல செல் களையும் குறைக்கின்றன.

லியூகோசிடின்ஸ்

இந்த நச்சுகள் இரத்த வெள்ளை அணுக்களை அழிக்கின்றன.

எக்ஸ்போலியேட்டிவ் நச்சு

இது தோலில் உள்ள எபிதீலியல் செல்களை பிரித்தெரிகிறது. இந்த நச்சுகள் தோல் செதில் நோய்க்கு காரணமாகின்றன. தற்பொழுது ஸ்டபைலோகாக்கஸ் பேரினமானது 35 சிற்றினங்களைக் கொண்டுள்ளது. சில சிற்றினங்கள் மனிதனையும், விலங்குகளையும், எளிதில் தாக்க்ககூடிய தன்மை கொண்டுள்ளன.

ஸ்டெபைலோகாக்கல் பாக்டீரியா உடலில் ஸ்டெபைலோகாக்கல் தொற்றுவிலிருந்து தோன்றக்கூடும். இது பொதுவாக உள் சிரையின் வழியாக இரத்த நாளங்களுக்குச் சென்று உள்ளுறுப்புகளை பாதிக்கின்றன. இது அதிர்ச்சியையும், உயர் காய்ச்சலையும் ஏற்படுத்தக் கூடும். எலும்பு அழற்சி நோய், தோல் இரணப்படுதல், படுக்கையில் வியர்த்தல், ஆகியவை இதன் பாதிப்புகளாகும்.

எலும்பு அழற்சி நோயின் அறிகுறிகள் எலும்பில் வலியேற்படுத்துதல், குளிர் காய்ச்சல், ஆகியவையாகும். எலும்பில் வீக்கம், சிவந்த நிறமாதல், எலும்பு இணைப்புகளில் நீர் கோத்தல் ஆகியவையும் உண்டாகும்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடங்களில் இவை இலகுவில் பெருக்கமடைகின்றது. அதோடு சிக்கல்களையும் ஏற்படுத்தும். அறுவை சிகிச்சைத் தையல்களை அழிக்கின்றது. இந்த ஸ்டபைலோகாக்கை நோய் தாக்கம் சிலருக்கு நச்சு அதிர்ச்சி நோயையும் ஏற்படுத்தும்.

நோய்த் தோன்றுதலுக்கு மூலக்காரணங்கள்

பாதிப்படையக்கூடிய பகுதிகள்

ஸ்டபைலோகாக்கையானது நோய் தாக்கம் அடைந்து சீழ் மூலமும், காய்ந்த புண்ணில் இருந்து விழுந்த செதில் மூலமும், ப்ராங்கோ நிமோனியா நோயாளியின் கோழை மூலமும் வெளியுலக சுற்றுச் சூழலுக்கு வந்தடைகிறது.

நோயற்ற கடத்திகள்

எவ்வித பாதிப்பு ஏற்படுத்தாமல் ஸ்டபைலோ காக்கை நோயற்ற கடத்திகளின் ஈரப்பதமான தோலிலும், மூக்கிலும் வரக் கூடும்.

விலங்குகள்

ஸ்டெபைலோகாக்கை விலங்குகளிலிருந்து மனிதனை எளிதில் தாக்கும். எடுத்துக்காட்டாக மாஸ்டைடிஸ் என்ற நோய் கொண்ட பசுவில் இருந்து எடுத்த பால்மூலம், என்ட்ரோடாக்சிஜனிக் ஸ்டபைலோகாக்கை உணவுப் பொருட்களில் சேர்ந்து உணவு நஞ்சாதலை (Food poisoning) ஏற்படுத்தும்.

நோய்ப் பரவல்

பாதிக்கப்பட்ட பொருட்களோடு நேரடியான தொடர்பு, காற்றுவழியாக, நோய் அதிகம் காணக்கூடிய இடங்களில் வசித்தல், சுகாதாரமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், சரியாகக் கைகழுவாமல் இருத்தல், உணவு பாத்திரங்களை தூய்மையின்றி வைத்திருத்தல், பிறந்த குழந்தைகளுக்கு தாயிடமிருந்தும், தூய்மையற்ற சூழலிலிருந்தும் ஸ்டபைலோகாக்கை பரவுகிறது.

ஆய்வக சோதனை

சேகரிக்க வேண்டிய மாதிரி பொருள்கள் Specimens:

 1. ஒன்று அல்லது பலதரப்பட்ட பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. புண்ணிலிருந்து வரும் சீழ், சீழ் அல்லது புண்ணில் தோய்த்த பஞ்சு குச்சி (Swab)
 2. நுரையீரல் பாதிப்புகளில் இருந்து வரும் கோழையில் எச்சில் இல்லாமல் இருத்தல்
 3. பாக்டீரீமியா நோய் பாதிக்கப்பட்ட மனிதர்களில் இருந்து 5மிலி இரத்தம் 50மிலி கொள்ளவு கொண்ட பாட்டில்களில் சேகரித்தல்
 4. உணவு நஞ்சாதலால் பாதிக்கப்பட்ட நோயாளியின் மலம், வாந்தி, மற்றும் கெட்டுப்போன உணவு.
 5. சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட மனிதர்களின் சிறுநீர்.
 6. நோயற்ற கடத்திகளின் (carrier) மூக்கு துவாரத்திலிருந்தும் கழிவு நீக்கப்பகுதியிலிருந்தும் நேரடி சோதனை

பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து சோதிக்க எடுத்த பொருட்களில் இருந்து கண்ணாடிப் படர்வு (Smear) செய்து கிராம் சாயமேற்றும் பொழுது, அதில் கிராம் பாசிடிவ் காக்கை கொத்து கொத்தாய் இருந்தால் நோய் உறுதியாகிறது.

வளர்ப்பு (Culture)

மாதிரிகள் இரத்த அகார், பால் அகார், நியுடிரியன்ட் அகார் இவைகளில் செலுத்தி 37°Cல் 24 மணி நேரம் வைக்கப்படுகின்றன. இந்த தட்டுகள் சோதனைக்குட்படும் போது முதலில் தங்கநிறம் (அ) வெண்மை நிறத்தில் கூட்டமாக தோன்றுகின்றன. பின்னர் இவை கிராம் சாயமேற்றி சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. இரத்த அகாரில் மட்டும் ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் பீட்டா ஹீமோலைட்டிக் தொகுதிகளை தோற்றுவிக்கின்றன.

கண்டறிதல் சோதனைகள்

ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ், பிளாஸ்மா படலத்தை உறையச் செய்கிறது. இரண்டு வகை கொயகுலேஸ் சோதனைகள் செய்யப்படுகின்றன.

 1. சோதனைக் குழாய்
 2. கண்ணாடி வில்லை சோதனை,

நோய் எதிர் பொருள் விளைவு

முல்லர் - ஹின்டன் அகார் தட்டுகளின் மூலம் இவை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மருத்துவமனையில் இருந்து பரவும் (Nosocomial) தொற்றுகள் தோன்றக் காரணம் மெத்திலிசின் நோய் எதிர்ப்பு ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் (HRSA) ஆகும்.

சிகிச்சை

ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் இயல்பாகவே அநேக நோய் எதிர்பொருள்களுக்கு (Antibiotics) கட்டுப்படும். இதில் அதிக திறன் வாய்ந்தது பென்சைல் பெனிசிலின். ஆனால் மருத்தவமனைகளில் இருக்கும் 90 சதவீதம் ஸ்டபைலோகாக்கை பீட்டா லாக்டமேஸ் நொதிகளை உற்பத்தி செய்து பெனிசிலின் வளையங்களை உடைத்துவிடுகின்றன. மெத்திசிலினை எதிர்க்கும் ஸ்டபைலோகாக்கஸின் புள்ளினங்கள் (strain) சிகிச்சைக்கும், தொற்று தடுப்பு முறைகளுக்கும் பெரிய சவாலாய் உள்ளன. வாங்கோமைசின் அல்லது டீக்கோபிளானின் என்ற மருந்து இவைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. நோய் எதிர்பொருள் விளைவு சோதனை (Antibiotic sensitivity) செய்த பின்னரே எந்த எதிர் பொருள் தரலாம் என்று நிர்ணயம் செய்து சிகிச்சை செய்ய வேண்டும்.

நினைவில் கொள்ள வேண்டியவை

 1. ஸ்டபைலோ காக்கஸ் ஆரியஸ் கிராம் பாசிடிவ் கொத்துகளாக காணப்படும்.
 2. இது அநேக நொதிகளையும், நச்சுக்களையும் உண்டுபண்ணி ஒம்புனரின் எதிர்ப்புச் சக்தியை எதிர் கொள்கிறது.
 3. காட்டலேஸ், கோயகுலேஸ், ஹயலூரானிடேஸ், ஸ்டபைலோ கைனேஸ், லிப்பேஸ் பீட்டா லாக்டமேஸ் ஆகியவை சில நொதிகள் ஆகும்.
 4. ஸ்டபைலோகாக்கஸ் உண்டு பண்ணும் நச்சகள் : புற நச்சு, லூக்கோசிடின், எக்ஸ்போலியேடிவ் நச்சு, அதிர்ச்சி நச்சு (TSS toxin) குடல் நச்சு (Enterotoxin) ஆகியவற்றை ஸ்டபைலோ காக்கஸ் உண்டு பண்ணும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top