பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பல்லுயிர் வாழ்நிலை (BIODIVERSITY)

பல்லுயிர் வாழ்நிலை (BIODIVERSITY) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பல்லுயிர் வாழ்நிலை என்பது நிலம், கடல், பிற நீர்நிலைகள் உட்பட பூமியில் வாழும் பல்வகை உயிரினங்களை உள்ளடக்கியது தான் பல்லுயிரினங்கள் ஆகும். பல்லுயிர் வாழ்நிலை என்பது மொத்தம் மூன்று நிலைகளைக் கொண்டதாகும். அவை மரபணு ரீதியான பன்முகத்தன்மை, (உயிரினங்களுக்குள்) உயிரின பன்முகத்தன்மை, (உயிரினங்களுக்கிடையே) சுற்றுச்சுழல் அமைப்பு பன்முகத்தன்மை ஆகும்.

மிகப்பெரிய பல்லுயிர் வாழ்நிலைகளைக் கொண்ட 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலகில் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதமும், நீர்ப்பரப்பில் 4 சதவீதமும் இந்தியாவில் உள்ளது. உலகில் பதிவு செய்யப்பட்ட உயிரினங்களில் 7 முதல் 8 சதவீதம் இந்தியாவில்தான் இருக்கின்றன.

அரிசி, பருப்பு, தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நார்தாவரங்கள் உள்ளிட்ட ஒன்றுடன் ஒன்று நெருக்கமான உறவு கொண்ட 375 வகை தாவரங்கள் தோன்றிய 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், ஒட்டகங்கள், குதிரைகள், கோழியினங்கள் என 255 வகையான உயிரினங்கள் இந்தியாவில் தான் கண்டறியப்பட்டன. கலாச்சார பன்முகத் தன்மையில் வளமாக உள்ள இந்தியா, பழங்குடியின மக்களிடமுள்ள பாரம்பரிய அறிவிலும் அதிக வளத்துடன் காணப்படுகிறது.

பல்லுயிர் பெருக்கச் சட்டம் 2002

பல்லுயிர் வாழ்நிலைச் சட்டத்தை கடந்த 2002ம் ஆண்டில் இந்திய அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டம் அதிகாரப் பரவலாக்கப்பட்ட மூன்று அடுக்கு அமைப்பின் மூலம் தேசிய, மாநில மற்றும் உள்ளுர் அளவில் செயல்படுத்தப்படுகிறது.  இந்தச் சட்டத்தின் 8வது பிரிவின்படி தேசிய அளவில் தேசிய பல்லுயிர் ஆணையத்தை இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இது தன்னாட்சி அதிகாரமும், சட்ட அங்கீகாரமும் கொண்ட ஆணையம் ஆகும். பல்லுயிர் வாழ் நிலையை பாதுகாத்தல், அதன் நீடித்த பயன்பாடு, அத்தகைய உபயோகத்தால் கிடைக்கும் பயன்களை நியாயமாகவும், சமமாகவும் பகிர்ந்து கொள்வதை உறுதிசெய்தல் ஆகியவை தொடர்பாக இந்திய அரசுக்கும் பல்வேறு அமைச்சகங்களுக்கும் அறிவுரைகளை வழங்குதல், ஒழுங்குமுறைப் பணிகளை செய்தல், உதவிகளை வழங்குதல் ஆகியவைதான் இந்த ஆணையத்தின் பணிகள் ஆகும். வல்லுனர் குழுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஆலோசனைகளை நடத்துதல் மற்றும் வழங்குதல் மூலம் இந்த ஆணையம் செயல்படுகிறது.

தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம்

 • பல்லுயிரின ஆணையத்தின் பணிகள் மிகவும் முக்கியமானவையாகும். அவற்றின் மிகவும் முக்கியமான சில பணிகளின் விவரம் வருமாறு:
 • பல்லுயிர் வாழ்நிலை பாதுகாப்பை மேம்படுத்துதல், அதன் நீடித்த பயன்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல்.
 • பல்லுயிர் வாழ்நிலையை பாதுகாத்தல், அதன் கூறுகளை நீடித்த வகையில் பயன்படுத்துதல், உயிர்வளங்களை உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் பயன்களை நியாயமாகவும், சமமாகவும் பயன்படுத்துதல் போன்ற விஷயங்களில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்குதல்.
 • உயிர் வளங்களை அணுகுதல், அவற்றினால் கிடைக்கும் பயன்களை பல்லுயிரின வாழ்நிலை சட்டம் 2002ன் பிரிவுகள் 3, 4 மற்றும் 6ன் படி நியாயமாகவும், சமமாகவும் பகிர்ந்தளித்தல் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் அதற்கான விதிமுறைகளை வகுத்தல், பல்லுயிர் ஆதாரங்கள் மற்றும் / அல்லது அவை சம்பந்தப்பட்ட தகவல்களை பயன்படுத்த தனிநபர்கள் / அமைப்புகள் தேசிய பல்லுயிர் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
 • இந்தியாவிலிருந்து பெறப்பட்ட பல்லுயிர் ஆதாரங்கள் அல்லது இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக எடுத்து செல்லப்பட்ட பல்லுயிரினங்கள் சார்ந்த தகவல்களுக்கு இந்தியாவுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு அறிவு சார் சொத்துரிமை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தல் மற்றும் தடுத்து நிறுத்துதல்,
 • பல்லுயிர் வாழ்நிலை முக்கியத்துவம் கொண்ட பகுதிகளை பாரம்பரிய பகுதிகளாக தேர்வு செய்து அறிவிக்கவும் அவற்றை நிர்வகிக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்குதல்.

பல்லுயிரின வாழ்நிலை விதிகள்

பல்லுயிரின வாழ்நிலை சட்டம் கடந்த 2002ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி பல்லுயிரின வாழ்நிலை விதிகள் கடந்த 2004ம் ஆண்டில் வகுக்கப்பட்டன. மாநில அளவில் பல்லுயிரின வாரியங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்வதே இந்த விதிகளின் நோக்கம் ஆகும்.

பல்லுயிர் பெருக்க நிர்வாகக் குழுக்கள்

 • பல்லுயிரின பாதுகாப்பை மேம்படுத்துதல், அவற்றின் நீடித்த பயன்பாடு, பல்லுயிரினங்களை ஆவணப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்வதற்காக ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்லுயிரின மேலாண்மைக் குழுக்களை அமைக்க வேண்டும். உயிரினங்கள் வாழும் இடங்களை பராமரித்தல், உயிரின நிலங்கள், நாட்டுப்புற வகைகள், தாவரங்கள் உள்ளுர் விலங்கு வகைகள், நுண்ணியிரிகள் போன்றவற்றை பாதுகாத்தல், பல்லுயிரினங்கள் தொடர்பான தகவல்களை பாதுகாத்தல் போன்றவை பல்லுயிரினங்களை ஆவணப்படுத்தும் பணிகளில் மிகவும் முக்கியமானவை ஆகும்.

பல்லுயிர் பெருக்க நிர்வாகக் குழுக்களின் முக்கிய பணிகள்

பல்லுயிரின மேலாண்மைக் குழுக்களின் பணிகளில் முக்கியமானவை பின்வருமாறு:

 • உள்ளுர் மக்களுடன் கலந்தாலோசனை நடத்தி மக்களின் பல்லுயிர் பதிவேடுகளை தயாரித்தல், பராமரித்தல் மற்றும் மதிப்பிடுதல்
 • உயிர் வளங்களையும், அவை சம்பந்தப்பட்ட தகவல்களையும் அணுகுவது தொடர்பான தகவல்கள், இதற்காக சேகரிப்பு கட்டணங்களை விதித்தல், கிடைத்த பயன்கள் மற்றும் அவை பகிர்ந்து கொள்ளப்பட்டது போன்றவை தொடர்பான தகவல்கள் அடங்கிய பதிவேட்டை பராமரித்தல்.
 • மாநில பல்லுயிரின வாரியம் அல்லது ஒப்புதல், அளிப்பதற்கான ஆணையத்தால் அனுப்பப்படும் விஷயங்கள் மீது அறிவுரை வழங்குதல் பல்லுயிரின வளங்களை பயன்படுத்துவோர் குறித்த விவரங்களை பராமரித்தல்

பல்லுயிர் ஆவணப்பதிவு

பல்லுயிரின மேலாண்மைக் குழுக்களின் முக்கியப் பணி என்னவென்றால், உள்ளுர் மக்களுடன் கலந்தாலோசனை நடத்தி மக்களின் பல்லுயிர் பதிவேடுகளை தயாரிப்பது தான். இந்தப்பதிவேட்டில் உள்ளுர் அளவில் காணப்படும் உயிர் வளங்கள் அவை குறித்த தகவல்கள் அவை தொடர்பான மருத்துவ / பிற பயன்பாடு அல்லது அவற்றுடன் சம்பந்தப்பட்ட பாரம்பரிய தகவல்கள் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். உள்ளுர் அளவிலான பல்லுயிரின வளம், பாரம்பரிய தவல்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை தொடர்பான தகவல்களை மக்களின் பங்களிப்புடன் ஆவணப்படுத்துவது தான் மக்களின் பல்லுயிரின பதிவேடு அமைப்பால் அதிக கவனம் செலுத்தப்படும் விஷயமாகும்.

பல்லுயிர் பெருக்க நிதியம்

பல்லுயிர் வாழ்நிலைச் சட்டம் கடந்த 2002ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிறகு, அந்தச் சட்டத்தின் 27, 32, 43 ஆகிய பிரிவுகளின்படி தேசிய, மாநில உள்ளுர் அளவில் பல்லுயிரின நிதியங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பல்லுயிர் வளங்கள் மற்றும் அவை சார்ந்த தகவல்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், இதற்கான பணியில் ஈடுப்பட்டிருப்போருக்கு பயன்களை வழங்குதல், பல்லுயிர் வாழிடங்களின் சமூக, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்காக உதவி செய்தல் ஆகியவற்றுக்காகவே இந்த நிதியங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தேசிய பல்லுயிர் பெருக்க நிதியம்

பல்லுயிரின வாழ்நிலைச் சட்டத்தின் 27 (1) வது பிரிவின்படி தேசிய பல்லுயிரின ஆணையத்திற்கு கிடைக்கும் கடன், மானியம், அனைத்து வகை கட்டணங்கள் ராயல்டி ஆகியவை தேசிய பல்லுயிர் நிதியம் என்றழைக்கப்படும். பயன்களை கோருவோர் பல்லுயிர் வளங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், பல்லுயிர் வளங்கள் மற்றும் அவை சார்ந்த தகவல்கள் கிடைக்கும் பகுதிகளின் மேம்பாடு, அந்தப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்து பேசி அங்கு சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்தல் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குவதில் இந்த நிதியம் கவனம் செலுத்தும்.

மாநில பல்லுயிர் பெருக்க நிதியம்

பல்லுயிரின வாழ்நிலை சட்டத்தின் 32(1)வது பிரிவின்படி மாநில பல்லுயிரின நிதியம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தேசிய பல்லுயிர் ஆணையத்தால் மாநில பல்லுயிர் வாரியத்திற்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் மானியங்கள், பிற ஆதாரங்களிலிருந்து மாநில வாரியத்திற்கு கிடைக்கும் நிதி ஆகியவை மாநில பல்லுயிர் நிதியாக மாநில அரசால் கருதப்படும். பாரம்பரிய பகுதிகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாடு, பாரம்பரிய பகுதிகள் என்று அறிவிக்கப்படுவதால் பொருளாதார ரிதியாக பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பு அல்லது மறுவாழ்வு அளித்தல், பல்லுயிர் வளங்கள் மற்றும் அவை சார்ந்த தகவல்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு இவற்றுடன் சார்ந்த பகுதிகளின் சமூகப் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

உள்ளுர் பல்லுயிர் பெருக்க நிதியம்

மாநில அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ளுர் பல்லுயிரின நிதியம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அரசால் அறிவிக்கை செய்யப்படும் பகுதிகளில் ஏதேனும் உள்ளாட்சி அமைப்பு செயல்பட வேண்டும். தேசிய பல்லுயிரின ஆணையத்தால் வழங்கப்படும் மானியம் பல்லுயிர் வளங்கள் மற்றும் அவை சம்பந்தப்பட்ட தகவல்களை வணிகப் பயன்படுத்துவதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவை உள்ளுர் பல்லுயிரின நிதியமாக கருதப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்லுயிர் வளங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்காகவும், அங்குள்ள மக்களின் நலனுக்காகவும் இந்த நிதியம் பயன்படுத்துத்தப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் முக்கிய பணிகள்

 • பல்லுயிர் வளங்களை பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான தேசிய உத்திகள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை உருவாக்குதல்.
 • பல்லுயிர் வளங்கள் நிறைந்த பகுதிகளை பாதுகாத்தல், பல்லுயிர் வளங்களை அதிகம் பயன்படுத்துவதாலும் போதிய கவனிப்பு இல்லாததாலும் அழியும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள வளங்களை பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்தல்.
 • பல்லுயிர் வளங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட துறை அல்லது பல்துறை திட்டங்கள், கொள்கைகளுடன் ஒருங்கிணைத்தல், தேசிய பல்லுயிர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டவாறு பல்லுயிர் வளங்கள் சார்ந்த உள்ளுர் மக்களின் தகவல்களை மதித்தல் மற்றும் பாதுகாத்தல்.
 • சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் வளங்கள் தொடர்பான திட்டங்களின் தாக்கங்களை மதிப்பிடுதல், உயிர்வாழும் நுண்ணியிரிகளின் பயன்பாடு மற்றும் வெளியீட்டால் பராமரிப்புக்கு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மோசமான தாக்கங்களை ஒழுங்குபடுத்துதல், மேலாண்மை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல், பல்லுயிர் வளங்களை நீடித்து பயன்படுத்துதல்.

நிறைவுரை

பல்லுயிர் பெருக்கச் சட்டம் 2002 முறையாக செயல்படுத்தப்பட்டால் உயிர் வளங்களை இக்கால தலைமுறையினருக்கு மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறையினருக்கும் பாதுகாத்து வைக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : முத்துராஜ் I.T.S இணைத் தலைமை இயக்குநர், வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம், சென்னை

3.06578947368
பெரிய வேலப்பன் Oct 30, 2019 06:37 PM

இந்த பல்லுயிர் மேலாண்மை யில் நமது பாரம்பரிய நெல் ரகங்களை விரிவு படுத்துதல் மற்றும் அதன் மகத்துவம் சார்ந்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு ஏற்படுத்துதல் போன்ற அம்சங்களைசேர்க்கலாம் என்பது எனது கருத்து ஆகும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top