பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / உயிரினப்பன்மை / பல்லுயிர்தன்மை - இனத் தொடர்பு தொகுப்பியல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பல்லுயிர்தன்மை - இனத் தொடர்பு தொகுப்பியல்

பல்லுயிர்தன்மை தொடர்பான தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பல்லுயிர் தன்மை

பூமியில் காணப்படும் பல வகையான உயிரினங்களிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றின் அமைப்பு, வளரியல்பு, வாழுமிடம், உணவு ஊட்ட முறை மற்றும் அவற்றியின் செயலியல் ஆகிய பல பண்புகளில் அவை வேறுபடுகின்றன. பூமியில் காணப்படும் உயிரினங்களின் பலதரப்பட்ட தன்மை மிகவும் பிரமிப்பை ஊட்டக் கூடியது. சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின் படி இப்பூமியில் பத்து முதல் நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. அனால் இவற்றுள் 1.7 மில்லியன் உயிரினங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 750,000 பூச்சிகளும், 250,000 பூக்கும் தாவரங்களும், 47,000 முதுகெலும்புப் பிராணிகளும் அடங்கும். பல்வேறு உயிரினங்களிடையேக் காணப்படும் வேறுபாடுகளை நாம் பல்லுயிர் தன்மை (Biodiversity) என்கிறோம். இவ்வாறு பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் பல உயிரினங்களும் ஒத்த தன்மைகளையும் பொதுவான சில பண்புகளையும் கொண்டிருப்பதனால் இவைகளைப் பல குழுக்களாகப் பிரிக்க முடிகிறது. இவ்வுயிரினங்கள் அனைத்தையும் முறையாக அறியவும் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் பலவகைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

உயிரினங்களை இனம் கண்டறிதல், பெயரிடுதல் மற்றும் வகைபடுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய உயிரியலின் பிரிவு "வகைபாட்டியியல்’ (Taxonomy) எனப்படும். இதற்கு முறைப்படுத்துதல், ஒன்று சேர்த்தல் ஆகிய பொருள்களும் வரும். ஸிஸ்டமேடிக்ஸ் என்ற இந்தச் சொல்லை முதன் முதலில் கரோலஸ் லின்னேயஸ் தனது “ஸிஸ்டமா நேச்சுரே” (Systema Natural) என்ற நூலில் பயன்படுத்தினார். உயிரினங்களிடையேக் காணப்படும் இனத்தொடர்புகளின் அடிப்படையில் அவைகளை குழுமங்களாகப் பிரித்து முறையாக வகைபடுத்துதலே இனத்தொடர்பு தொகுப்பியல் (Systematics) என்று வரையறுக்கலாம்.

வகைபாட்டின் இன்றியமையாமை

எவரொருவரும் அனைத்து உயிரினங்களையும் அறிய இயலாது. ஆனால் இவ்வுயிரினங்களை ஒரு குறிப்பிட்ட வசதியான முறையில் குழுக்களாகப் பிரித்து ஆராய்ந்தால் அவற்றைப் பற்றி அறிவது எளிதாகின்றது. ஏனெனில் ஒரு குழு அல்லது ஒரு குடும்பத்தின் பண்பு அக்குழுவில் உள்ள அனைத்து தனிப்பட்ட 1 உயிரினங்களுக்கும் பொருந்தும். பல்லுயிர் தன்மையை (Diversity) அறிந்து கொள்ளுதல் வகைபாட்டின் மூலம் எளிதாகிறது.

வகைபாட்டின் வரலாறு

மூன்று மற்றும் நான்காவது நூற்றாண்டுகளில் அரிஸ்டாடிலும் அவரது காலத்தைச் சேர்ந்தவர்களும் உயிரினங்களை தாவரங்கள் மற்றும் விலங்குகள் என்று பிரித்தறிந்தனர். சில நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட உயிரிகளை அவர்கள் இனமும் கண்டறிந்தனர். அயூர்வேத மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட பண்டைய கால இந்திய மருத்துவர் சாரக் சில தாவரங்களையும் விலங்குகளையும் இனம் கண்டறிந்து, விவரிக்கவும் செய்தார்.

மருத்துவத்தின் தந்தை என் அழைக்கப்பட்ட ஹிப்போகிரெட்டஸ் (460 - 377 கி.மு) மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த சில உயிரினங்களைப் பட்டியலிட்டார். அரிஸ்டாட்டிலும் அவரது மாணவர் தியோஃபரஸ்டஸிம் (370-282 கி.மு) முதன்முறையாக மருத்துவப் பயனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காமல் உயிரினங்களை வகைப்படுத்த முயற்சி செய்தனர். தாவரங்களையும் விலங்குகளையும் அவற்றின் வடிவம் மற்றும் வாழிடத்தின் அடிப்படையில் வகைப்படுத்த அவர்கள் முயன்றனர். இதைத் தொடர்ந்து ப்ளைனி த எல்டர் (Pliny the Elder) (23 -79 கி.பி) என்பவர் தன்னுடைய "ஹிஸ்டோரியா நாச்சுராலிஸ்’ (Historia Naturalis) என்ற நூலில் முதன் முறையாக செயற்கை வகைபாட்டு முறையை அறிமுகப் படுத்தினார். ஜான்ரே (Johm Ray) என்ற ஆங்கில இயற்கை அறிஞர் முதன் முறையாக எந்த ஒரு உயிரினத்தின் வகைக்கும் சிற்றினம் (Species) என்ற சொல்லை அறிமுகப் படுத்தினார். பின்னர் 18ம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்வீடன் நாட்டு இயற்கை அறிஞர் கரோலஸ் லின்னேயஸ் (Carolus Limnaeus) என்பவர்தான் தற்போதைய இரு சொல் பெயரிடு முறையை உருவாக்கினார். இவர் வகைபாட்டியலின் தந்தை என்று தற்போது அறியப்படுகிறார். ஸ்பீஷிஸ் ப்ளேண்ட்டேரம் (Species Plantarum 1753) என்ற அவரது நூலில் 5900 தாவரச் சிற்றினங்களையும் ஸிஸ்டமா நேச்சுரே (1758) என்ற நூலில் 4200 விலங்குச் சிற்றினங்களையும் விவரித்துள்ளார்.

உயிரினங்களை இனம் கண்டறிதல், பெயரிடுதல் மற்றும் அவற்றினிடையேக் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளின் அடிப்படையில் அவைகளை வகைபடுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய உயிரியலின் ஒரு பிரிவே வகைபாட்டியல் எனப்படும். அகஸ்டின் - பராமஸ்டே கண்டோல் (Augustin - Pyramusde Candole) (1778-1841) என்ற ஸ்விஸ்-பிரெஞ்சுத் தாவரவியல் நிபுணர் வகைப்பாட்டியல் என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தினார்.

சிற்றினம் வகைபாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினம் ஆகும். புறத் தோற்றம் மற்றும் இனப்பெருக்கப் பண்புகளில் ஒத்து காணப்பட்டு தங்களுக்குள்ளாகவே இனப் பெருக்கம் செய்து வளமான சந்ததிகளை உருவாக்கும் உயிரிகளின் கூட்டமே சிற்றினம் என்று வரையறுக்கப்படுகிறது. சிற்றினம், அதற்கும் மேலாக உள்ள குழுமத்தில் அடங்கும். இவ்வகைபாட்டுப் படி அமைப்பில் மேலேச் செல்ல செல்ல அவற்றுக்குள் அடங்கிய குழுமங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த ஒரு வகைபாட்டிலும் காணப்படும் ஏழு முக்கிய குழுமங்களாவன.

 1. உலகம் அல்லது பேரரசு
 2. ஃபைலம் அல்லது பிரிவு
 3. வகுப்பு
 4. துறை
 5. குடும்பம்
 6. பேரினம்
 7. சிற்றினம்.

குழுமப்பரிணாமம் (Phylogeny)

குறிப்பிட்ட ஒரு குழுமத்தின் பரிணாம வரலாறு ஃபைலோஜெனி எனப்படும். இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட வகைபாடு பரிணாம அடிப்படையிலான வகைப்பாடு எனப்படும். ஆனால் இந்த பரிணாம அடிப்படையிலான வகைபாடு எப்போதும் சாத்தியமில்லை. ஏனெனில் பரிணாம வகைப்பாட்டுக்கு ஆதாரமாக அமையும் தொல்லுயிர் படிம குறிப்பேடுகளில் நிறைய இடைவெளிகள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் பரிணாமம் எப்போதும் ஒரே நேர்க்கோட்டுப் பாதையில் நடப்பதும் இல்லை. உயிரினங்களின் பரிணாமத் தொடர்பின் அடிப்படையில் அமையாத வகைபாடுகளை செயற்கை வகைப்பாடுகள் என்று அழைக்கிறோம்.

உயிரினங்களை அவற்றின் பயன்தரு தன்மைக்கு ஏற்றவாறு வகை படுத்துதல், அளவின் அடிப்படையில் வகை படுத்துதல் (சிறு செடி, புதர்ச் செடி), பூக்களின் நிறம் மற்றும் சூழ் நிலையியலில் உயிரினத்தின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் வகைபடுத்துதல் ஆகியவை செயற்கை முறை வகைபாடுகளுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். இம்மாதிரியான செயற்கை வகைபாட்டினையும் (Nonsystematic classification) உயிரியல் வல்லுநர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இரண்டு உலக வகைப்பாட்டு முறைகள்

கரோலஸ் லின்னேயஸ் (1758) அனைத்து உயிரினங்களையும் இரண்டு உலகங்களாகப் பிரித்துள்ளார்.

அவை

 1. தாவர உலகம்
 2. விலங்கு உலகம்.

தாவர உலகம்

இதில் பாக்டீரியங்கள் (புரோகேரியாட்டுகள்), ஒளிச் சேர்ககைத் தாவரங்கள் மற்றும் ஒளிச் சேர்க்கை புரியாத பூஞ்சைகள் இவை யாவும் அடங்கும். இத் தாவர உலகின் முக்கியப் பண்புகளாவன.

 1. தாவரங்கள் கிளைகளை உடையவை. இலைகளுடன் கூடிய சமச்சீர் அற்ற உடலம் உடையவை.
 2. தாவரங்கள் நகராது. ஒரே இடத்தில் நிலையானவை.
 3. பகல் நேரங்களில் தாவரங்கள் சுவாசித்தலைக் காட்டிலும் ஒளிச் சேர்ககையில் அதிகமாக ஈடுபடுகின்றன.
 4. எனவே அதிகமாக CO வை எடுத்துக் கொண்டு O வை வெளியிடுகின்றன.
 5. இரவு நேரங்களில் இதற்கு எதிர்மறையாக நடக்கின்றது. அதாவது O வை எடுத்துக் கொண்டு CO வை வெளிவிடுகின்றன.
 6. தானே தம் உணவைத் தயார் செய்து கொள்வதால் இவை தற்சார்வு ஊட்டமுறை உடையவை என்கிறோம்.
 7. தாவரங்கள் வரம்பற்ற வளர்ச்சியுடன் கூடிய வளர்நுனிகளைக் கொண்டவை. கழிவு நீக்க மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம் கிடையாது. தரசம் (Starch) சேமிப்புப் பொருளாக உள்ளது.
 8. தாவர செல்களில் செல்சுவர் உண்டு. செல்களில் பெரிய வாக்குவோல் (Vacuole) உள்ளது.
 9. தாவர செல்களில் சென்ட்ரோ சோம்கள் கிடையாது. அவற்றில் அனங்ககப் படிகங்கள் காணப்படலாம்.
 10. காற்று, நீர் மற்றும் பூச்சிகளின் உதவியின் மூலம் இனப்பெருக்கம் நடைபெறும்.
 11. பாலிலா மற்றும் உடல் இனப்பெருக்கமும் பொதுவாக நடைபெறலாம்.

விலங்கு உலகம்

தில் ஒரு செல்லால் ஆன புரோட்டோ சோவன்களும் பலசெல்களால் ஆன விலங்குகள் அல்லது மெட்டா சோவான்களும் அடங்கும். இவற்றின் பண்புகளாவன.

 • விலங்குகள் குறிப்பட்ட வடிவம் உடையவை. கிளைகள் கிடையாது. இடம் விட்டு இடம் நகரும் தன்மை உடையவை.
 • இரவு, பகல் ஆகிய இரு நேரங்களிலுமே ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிடுகின்றன.
 • பச்சையம் இல்லாமையால் ஒளிச் சேர்க்கை புரிவது கிடையாது. பிற ஊட்ட முறையைக் கொண்டவை.
 • வரம்புடைய வளர்ச்சிக் கொண்டவை. ஒரு குறிப்பட்ட அளவையும் வயதையும் அடைந்தவுடன் விலங்குகளின் வளர்ச்சி நின்றுவிடும்.
 • கழிவு நீக்க மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம் நன்கு தெளிவாகக் காணப்படும்.
 • சேமிப்பு உணவாகக் கிளைக்கோஜன் காணப்படும்.
 • செல்களுக்கு சுவர் கிடையாது. செல்களில் சிறிய வாக்குவோல்களே காணப்படும்.

இரண்டு உலக வகைபாட்டு முறைகளின் குறைபாடுகள்

வின்னேயஸினால் உருவாக்கப்பட்ட இரண்டு உலக வகைபாட்டு முறையே நீண்ட காலத்துக்கும் பின்பற்றப்பட்டது. ஆனால் பிற்காலத்தில், மேம்பாடு அடையாத உயிரினங்களைப் பற்றிய தகவல்களும் கண்டுபிடிப்புகளும் தோன்றத், தோன்ற இவ்வகைபாடு போதுமானதாகவும், திருப்திகரமாகவும் இல்லை. இவ்வகைபாட்டில் காணப்பட்ட குறைபாடுகள் பின்வருவன ஆகும்.

 1. சில உயிரினங்கள் தாவரப் பண்புகள் மற்றும் விலங்குப் பண்புகள் ஆகிய இரண்டையுமே பெற்றிருந்தன. (எ.கா.) யூக்ளினா, ஸ்பாஞ்கள் (Sponges). யூக்ளினாவில் சில சிற்றினங்களில் பச்சையம் உள்ளது. எனவே இவை தாவரங்களைப் போல தற்சார்பு ஊட்ட முறையைக் கொண்டவை. ஆனால் வைட்டமின்கள் B, ஆகியவற்றை இவை உற்பத்தி செய்ய முடியாததால் விலங்குகளைப் போன்று இவை அவற்றை வெளியிலிருந்துப் பெறுகின்றன. சில யூக்ளினா சிற்றினங்களில் பசுங்கணிகங்கள் கிடையாது. எனவே நிறமற்றவை. பிற ஊட்ட முறையைக்கொண்டவை. செல்லுக்கு வெளியே நடைபெறும் செரித்தல் முறையில் ஈடுபடுகின்றன. சில சிற்றினங்கள் சிறிய சிறிய உணவுப் பொருட்களை விழுங்கி செல்லுக்குள்ளேயே நடைபெறும் செரித்தல் முறையில் ஈடுபடுகின்றன. பச்சையம் உடைய யூக்ளினா சிற்றினங்களை இருட்டில் வைத்தால் அவை பசுங்கணிகங்களை இழந்து பிற ஊட்ட முறையில் ஈடுபடுகின்றன. மீண்டும் ஒளியில் வைத்தால் அவை பசுங்கணிகங்களை மீண்டும் பெறுகின்றன. யூக்ளினாவின் கண்புள்ளியில். (eye spot) ஆஸ்டாக்ஸாந்தின் (விலங்குகளில் காணப்படும் நிறமி) காணப்படுகிறது.
 2. பூஞ்சைகள் எனப்படும் பிரிவைச் சேர்ந்த உயிரினங்கள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. இவைகளுக்குப் பச்சையம் கிடையாது, விலங்குகளைப் போல பிறசார்பு ஊட்டமுறைக் கொண்டவை. ஆனால் பூஞ்சைகள் இவ்வகைபாட்டு முறையில் பசுமையைான தாவரங்களுடன் சேர்த்து வகைபடுத்தப்பட்டுள்ளன.
 3. பாக்டீரியங்கள் போன்ற மேம்பாடு அடையாத உயிரினங்கள் தாவரப் பண்புகளையும் கொண்டிருப்பதில்லை. விலங்குப் பண்புகளையும் கொண்டிருப்பதில்லை. அதுபோல ஸ்லைம் மோல்டுகள் என்று அழைக்கப்படும் உயிரினங்கள் அமீபா போன்ற உடலத்தைக் கொண்டிருந்தாலும் பூஞ்சைகளைப் போல கனியுறுப்புகளை உண்டாக்குகின்றன.
 4. வைரஸ்கள் உயிருள்ளனவா அல்லது உயிரற்றவைகளா என்பது இன்றளவும் விவாதத்திற்குரிய ஒரு கருத்தாகவே உள்ளது. மேற்கூறிய இக்காரணங்களினால் 250 ஆண்டு காலமாகிய இந்த லின்னேயஸின் வகைப்பாடு (உயிரினங்களைத் தாவரங்கள் விலங்குகள் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்தல்) மிகவும் செயற்கையானது.

ஐந்து உலக வகைபாட்டு முறை

R.H. விக்டேக்கர் (R.H.Wittaker) (1969) என்ற அமெரிக்க வகைபாட்டியல் நிபுணர் அனைத்து உயிரினங்களையும் அவற்றிற்கிடையேக் காணப்படும் பரிணாமத் தொடர்பின் அடிப்படையில் ஐந்து உலகங்களாக வகைபடுத்தினார். இவ்வகைபாடு கீழ்க்கண்ட முக்கிய பண்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

 1. செல்லின் அமைப்பு - புரோகேரியோட் அல்லது யூகேரியோட்
 2. உணவூட்ட முறை - தற்சார்பு ஊட்டமுறை அல்லது பிற ஊட்ட முறை.
 3. உடல் அமைப்பு - ஒரு செல்லால் ஆனது அல்லது பல செல்களால் ஆனது.
 4. குழுமப் பரிணாமம் அல்லது பரிணாமத் தொடர்பு

மொனிரா (புரோகேரியோட்டுகளின் உலகம்)

இதில் அனைத்து புரோகேரியோட்டு உயிரினங்களும் அடங்கும் எ.கா. மைக்கோ பிளாஸ்மா, பாக்டீரியா, ஆக்டினோ மைசீட்டுகள் (இழை பாக்டீரியங்கள்) மற்றும் சைனோ பாக்டீரியங்கள் (நீலப் பசும் பாசி) இவை கீழ்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளன.

 1. இவை மிக நுண்ணியவை. இவை உண்மையான நியூக்ளியஸைக் கொண்டிருக்காது. சவ்வினால் சூழப்பட்ட நுண்ணுறுப்புகளும் கிடையாது. இவை தற்சார்பு அல்லது பிற ஊட்ட முறை உடையவை. சில பாக்டீரியங்கள் தற்சார்பு ஊட்டமுறை உடையவை. இவை ஒளிச் சேர்க்கை பாக்டீரியங்கள். இவை சூரிய ஒளி ஆற்றலின் மூலம் ஒளிச் சேர்க்கை செய்து கனிம ஊட்டப் பொருளை உற்பத்தி செய்யும் திறன் உடையவை. எ.கா. ஸ்பைரில்லம்.
 2. சிலபாக்டீரியங்கள் வேதிச் சேர்க்கை பாக்டீரியங்கள். இவை சில வேதி வினைகளில் ஈடுபட்டு அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல் மூலம் கனிம ஊட்டப் பொருளை உற்பத்தி செய்கின்றன. எ.கா. நைட்ரசோமோனாஸ், நைட்ரோ பேக்டர்.
 3. ரைசோபியம், அஸ்ட்டோபாக்டர் மற்றும் கிளாஸ்டிரிடியம் போன்ற பாக்டீரியங்கள் வெளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தி அம்மோனியாவாக மாற்றம் செய்கின்றன. இந் நிகழ்ச்சி உயிரியல் நைட்ரஜன் நிலை நிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
 4. சில பாக்டீரியங்கள் ஒட்டுண்ணிகளாகவும், கூட்டுயிர் பாக்டீரியங்களாகவும் உள்ளன. ஆர்க்கி பாக்டீரியா (Archaebacteria) போன்ற சில மொனிராக்கள் ஆக்ஸிஜன் அற்ற (anaerobic) நிலை, 80°C போன்ற மிக அதிக வெப்பநிலை, அதிக உப்புச் செறிவு உள்ள நிலை, அமிலத்தன்மை வாய்ந்த மண் போன்ற சில மிக அதீதமான சுற்றுப்புற சூழலிலும் வாழ்கின்றன.

புரோட்டிஸ்டுகள் உலகம்

இதில் ஒரு செல்லால் ஆன நீர் வாழ் யூகேரியோட்டுக்கள் அடங்கும். இவை கீழ்கண்ட பண்புகளைக் கொண்டிருக்கும்.

 1. இவை பொதுவாக யூகேரியோட்டு செல் அமைப்பையேக் கொண்டிருக்கும். இவற்றில் இடம் விட்டு இடம் நகர ஸிலியா (Cilia) அல்லது கசையிழைகள் (Flagella) காணப்படும்.
 2. பெரும்பாலானவை ஒளிச் சேர்க்கை செய்யும் தற்சார்பு ஜீவிகள். நன்னீர் மற்றும் கடல்களில் இவையே பிரதான உற்பத்தியாளர்களாகத் திகழ்கின்றன. அனைத்து ஒரு செல் தாவரங்களும் ஃபைட்டோப்ளாங்க்ட்டன் (Phytoplanktons) எனவும் அனைத்து ஒரு செல் விலங்குகளும் சூப்ளாங்டன் (Zooplanktons) எனவும் பொதுவாக அழைக்கப்படுகின்றன. ஃபைட்டோ ப்ளாங்ட்டன்கள் ஒளிச்சேர்க்கை புரிவன. செல்சுவர் உண்டு.
 3. சூப்ளாங்ட்டன்கள் கொன்று தின்னும் (Predatory) வகையைச் சார்ந்தவை. செல் சுவர் கிடையாது. அமீபாவைப் போன்று ஹோலோ சோயிக் (Holozoic) ஊட்ட முறையைக் கொண்டவை.
 4. சில புரோட்டிஸ்டுகள் ஒட்டுண்ணிகள், சில கூட்டுயிர்கள், ஏனையவை சிதைப்பவை. யூக்ளினா என்ற புரோட்டோசூவா இரண்டு வகையான ஊட்டமுறையைக் கொண்டுள்ளது. சூரிய ஒளி கிடைக்கும் நேரங்களில் தற்சார்பு ஊட்டமுறையையும் சூரிய ஒளி இல்லாத நேரங்களில் பிற ஊட்டமுறைகளையும் கொண்டுள்ளது. இதற்கு கலப்பு ஊட்டமுறை (Myxotrophic) என்று பெயர். எனவே யூக்ளினா, தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ளதால் இவற்றை தாவரங்களாகவும் சில சமயங்களில் விலங்குகளாகவும் வகை படுத்தலாம்.

பூஞ்சைகள் உலகம்

இதில் மோல்டுகள், மஷ்ரூம்கள் எனப்படும் காளான்கள், நாய்க்குடைகள், நிலக்குடைகள், பஃப் பந்துகள் (Puft balls) அடைப்புக் குறிபூஞ்சைகள் (Bracket fungi) ஆகியவை அடங்கும். இவை யூகேரியோட்டுச் செல் அமைப்பைக் கொண்டவை. இவை கீழ்காணும் பண்புகளை உடையவை.

 1. இவை ஒரு செல் அல்லது பல செல்களால் ஆன உயிரிகள்.
 2. இவற்றில் பச்சைய நிறமிகள் கிடையாது. ஆகையால் இவை பிற ஊட்டமுறையைக் கொண்டுள்ளன. பக்சீனியா போன்ற பூஞ்சைகள் ஒட்டுண்ணிகளாகவும் ரைசோப்பஸ் போன்ற ஏனைய பூஞ்சைகள், இறந்த அங்ககப் பொருட்களைச் சார்ந்து வாழும் மட்குண்ணிகளாகவும் உள்ளன.
 3. இவற்றின் உடலும் மெல்லிய இழை போன்ற எண்ணற்ற ஹைஃபாக்களால் ஆனவை.
 4. இவற்றின் செல் சுவர் கைட்டின் என்ற பொருளால் ஆனது.

தாவர உலகம்

பல செல்களால் ஆன அனைத்து நிலவாழ்த் தாவரங்களும் நீர் வாழ்த் தாவரங்களும் இவ்வுலகில் அடங்கும். மிகப் பெரிய பிரிவுகளான ஆல்காக்கள், பிரையோஃபைட்டுகள், டெரிடோஃபைட்டுகள் ஜிம்னோஸ்பெர்ம்கள் மற்றும் ஆஞ்சியோ ஸ்பெர்ம்கள் இத்தாவர உலகத்தைச் சார்ந்தவை இவைக் கீழேக் கூறப்பட்டுள்ள பண்புகளைக் கொண்டுள்ளன. செல்கள் செல்லுலோஸினால் ஆன உறுதியான செல்சுவரைக் கொண்டுள்ளன. பலவகையான ஊட்டமுறை உடையன. பச்சையம் என்ற நிறமியைப் பெற்றிருப்பதால் பெரும்பாலானவை தற்சார்பு ஊட்ட முறை உடையவை. அரிதாக சில தாவரங்கள் பிற ஊட்ட முறையைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக “கஸ்குயூட்டா’ (Cuscuta) ஒரு ஒட்டுண்ணி. நெப்பந்தெஸ் மற்றும் டிராஸெரா பூச்சியுண்ணும் தாவரங்கள் ஆகும்.

விலங்கு உலகம்

இதில் பல செல்களால் ஆன யூகேரியோட்டு உயிரினங்கள் அடங்கும். இவை மெட்டாசோவன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவைக் கீழேக் கூறப்பட்டுள்ள பண்புகளைக் கொண்டுள்ளன. விலங்குகளில் சில ஒட்டுண்ணிகளாகவும் காணப்படுகின்றன. எ.கா. தட்டைப் புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள்.

ஐந்து உலக வகைபாட்டின் நிறைவுகள்

 1. உயிரினங்களிடையேக் காணப்படும் பரிணாமத் தொடர்பினை இவ்வகைபாடு பிரதிபலிக்கிறது.
 2. எளிய அமைப்பினைக் கொண்டுள்ள புரோகேரியோட்டு செல் அமைப்பிலிருந்து சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ள யூகேரியோட்டு செல் அமைப்பின் அடிப்படையில் இந்த வகைபாடு அமைந்துள்ளது.
 3. ஒரு செல் உயிரியா அல்லது பல செல் உயிரியா என்ற உடலைமைப்பின் அடிப்படையிலும் இந்த வகைபாடு அமைந்துள்ளது.
 4. இவ்வகைபாடு ஊட்ட முறை அடிப்படையிலும் அமைந்துள்ளது. தற்சார்பு ஊட்ட முறையா அல்லது பிற ஊட்ட முறையா என்பதன் அடிப்படையிலும் அமைந்துள்ளது.

ஐந்துலக வகைபாட்டின் குறைகள்

 1. கிளாமைடோமோனாஸ் மற்றும் குளோரெல்லா ஆகியவை தாவர உலகில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை ஒரு செல் உயிரிகள். ஆதலால் இவற்றை புரோட்டிஸ்டா உலகில் சேர்த்திருக்க வேண்டும்.
 2. விலங்கு புரோட்டோசோவன்கள் விலங்கு உலகத்தில் சேர்க்கப்படவில்லை.
 3. விலங்கு புரோட்டோ சோவான்கள் புரோட்டிஸ்டா உலகில் ஒரு செல் தாவரங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. அவை வேறு வகையான ஊட்ட முறையைக் கொண்டுள்ளன.
 4. ஒரு செல் யூகேரியோட் உயிரியான ஈஸ்ட்டுகள், புரோட்டிஸ்டா உலகில் சேர்க்கப்படவில்லை.

வகைப்படுத்துதலில் உள்ள சில சிரமங்கள்

உயிரினங்கள், வேறுபட்ட தன்மை உடையதாலும் அவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளதாலும், பல தொகுப்புகளுக்கிடையே நிறைய இடைவெளிகள் காணப்படுவதாலும் திட்டவட்டமான, சரியான ஒரு வகை பாட்டினை உருவாக்க முடிவதில்லை. உயிரினங்களின் வகைபாடு எப்போதும் மனித அறிவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றது. புதுக் கண்டுபிடிப்புகளும், அறிவும், வளர வளர வகைபாடும் மாற்றம் அடைகின்றன. 1970ம் ஆண்டு வாக்கில் மூலக்கூறு அறிவியலறிஞர்கள், புரோகேரியோட்டுகள் முற்றிலும், வேறுபட்ட தொடர்பில்லாத இரு பிரிவுகளைக் கொண்டுள்ளன எனக் கண்டறிந்தனர்.

ஆதாரம் : National Biodiversity Board (NBA), Chennai

Filed under:
2.94736842105
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top