பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு / சுற்றுச் சூழல் கல்வி - இன்றைய அவசரத் தேவை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச் சூழல் கல்வி - இன்றைய அவசரத் தேவை

சுற்றுச் சூழல் கல்வி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நமது சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நன்கறிந்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த செய்ய ஒட்டு மொத்தமாக இணைந்து பங்களிப்பது நம் முன் உள்ள சவாலாகும். இன, மத வேறுபாடின்றி, இளையவர், முதியோர் என ஒவ்வொருவருக்கும் முறையான, முறைசாரா சுற்றுச்சூழல் கல்வி அளிப்பதன் மூலம் இது சாத்தியமாகலாம்.

சுற்றுச்சூழல் கல்விக்கான பாடத் திட்டத்தில் மாற்றம்

சுற்றுச்சூழல் அனைவரும் பெரிதும் அக்கறை கொண்டுள்ள துறையே. நிபுணர்கள், கல்வியாளர்கள் சுற்றுச்சூழல் வல்லுனர்கள், மற்றும் இதர பங்களிப்பாளர்கள் ஆகியோரின் முனைப்பான ஈடுபாடு, மற்றும் ஆலோசனை இன்றி, வலுவான அடிப்படையில் அமைந்த பாடத் திட்டத்தை தயாரிப்பதில் உள்ள சவால்களை எதிர் கொள்ள முடியாது. கீழ்கண்ட அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்:

 • ஆரம்பக் கல்வி, இடைநிலை, மேல்நிலை பள்ளிக் கல்வி பாடத்தில், சுற்றுச்சூழல் கல்வியின் நோக்கம், விரிவு ஆகியவை தற்போதுள்ள பாடச்சுமையை அதிகரிக்காமல், சுற்றுச்சூழல் கல்வியை புகட்டுவதற்கான வழிமுறைகள்.
 • சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்றம் பற்றிய ஆரோக்கியமான தனிநபர் மற்றும் சமுதாய நோக்கு ஏற்படுத்தும் கருவியாக சுற்றுச்சூழல் கல்வியை அமைத்தல்
 • பள்ளிகளில், திறம்பட சுற்றுச்சூழல் கல்வி புகட்டுவதில் சமுதாயத்தின் பங்கு.
 • சுற்றுச்சூழல் கல்வியின் பாடத் திட்டங்கள், செயல் முறைகள், திட்ட அறிக்கைகள் தயாரித்தல், மற்றும் இதர தொடர்புடைய நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்கள்.
 • சுற்றுச்சூழல் கல்வியை மதிப்பீடு செய்தலுக்கான உத்திகள், மற்றும் பொதுத் தேர்வுகளில் அவற்றின் பங்கு.

சுற்றுச்சூழல் கல்வியில் ஆசிரியர்களின் பங்கு

நாளைய உலகை நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ளப் போகும் இன்றைய இளைய தலைமுறையினரிடையே இந்த அம்சங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும். பள்ளிக்கல்வி முறையும், பாடங்களுமே, அடிப்படை ஆதாரங்கள். இவ்வமைப்புகளின் மூலம் மட்டுமே பள்ளிக் குழந்தைகளை சென்றடைந்து இப்பிரச்சினைகள் குறித்து விளக்க முடியும்.

துவக்க நிலை

பள்ளியில் 1977-இல் சுற்றுச் சூழல் கல்வி பற்றி அரசாங்கங்களுக்கிடையே நடைபெற்ற மாநாட்டில், இந்த வகையில் முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச் சூழல் பிரச்சனைகளை அறிந்திருப்பது இன்றியமையாதது; சுற்றுச்சூழல் மற்றும் மனித உயிர்களுக்கிடையே உள்ள உறவுகளை தெரிந்து கொள்ளுதல் அவசியமானது என்பனவற்றை இம்மாநாடு அங்கீகரித்தது. சுற்றுச்சூழலோடு இயைந்ததே, கல்வி; அது வெறும் அறிவு பெறுவது மட்டுமல்ல என்பதுடன் பண்புகளும், எண்ணப் போக்குகளும் தொடர்பு கொண்ட ஒன்று என்றும் மாநாடு கூறியது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான திறமைகளை போதிப்பதுடன், சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் பொதுமக்களே சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று அவற்றை தீர்வு காணும் முயற்சியாக கல்வி இருக்க வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தியது.

சுற்றுச்சூழல் கல்வி நம் நாட்டில் பழமையான தொன்று என்பதுடன் நமது பண்பாட்டின் ஓர் அங்கமாகவும் திகழ்ந்து வந்தது. 1937- ஆம் வருடம் மஹாத்மா காந்தி துவக்கிய அடிப்படைக் கல்வி இயக்கம், உள்ளூர் சுற்றுச்சூழல் தேவைகளுடன் தொடர்புடையதாகச் செய்வதற்கான முதல் முயற்சி எனலாம். அதன் முக்கிய அம்சங்களாவன:

 • கல்வியை பயனுள்ள நடவடிக்கைகள் கொண்டதாகச் செய்தல்
 • சுற்றுச்சூழல், சமூக நிலைகளுடன் தொடர்புடைய பாடத்திட்டம்
 • பள்ளிக்கும் உள்ளூர் சமுதாயத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு.

நாட்டின் வாழ்க்கைமுறை, தேவைகள், அபிலாஷைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக உள் மாற்றம் பெற்றதாக கல்வியை மாற்றுவதே, அடிப்படைக் கல்வியின் சிறந்த அம்சம் என (1964-66) இல் வெளியிப்பட கல்விக் கமிஷனின் அறிக்கை கூறுகின்றது. NCERT 1967- இல் ஏற்படுத்திய ஆராய்ச்சிக் குழுக்கள், இடைநிலை மற்றும் மேல்நிலை மட்டத்தில், உயிரியல் பாடத்திட்டங்களில் சுற்றுச்சூழல் தொடர்புடைய விஷயங்களை, அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியது. 1975க்கு முன் வரை, நாட்டில், தேசிய அளவில் இடைநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் பாடத்திட்டம், பெரும்பாலும், அறிவியல் விதிகள், கோட்பாடுகள், செயல்முறைகள் ஆகியவை பற்றியே இருந்தது. அதிலும் குறிப்பாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு தனிப்பாடமாக நடத்தப்பட்ட உயிரியல் பிரிவில், பெரும்பாலும் விரிவான கோட்பாடுகளும் மரபு சார்ந்த கல்வியுமே அதிகம் இருந்தன. சுற்றுச்சூழல் பிரச்சினைகள், தீர்வுகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சிறப்பு உத்திகள் மீது கவனம் செலுத்தப்பட்டன. புதுப்பிக்கக்கூடிய, புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களின் சரியான உபயோகம், மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் போன்றவை குறித்து தெரிந்து கொள்ளவே இவை கையாளப்பட்டன.

அதிக எண்ணிக்கையில் கல்வியாளர்கள் உழைத்ததன் பலனாக, பத்தாண்டு படிப்பிற்கான பாடத்திட்டங்கள் அணுகுமுறை (1975) மற்றும் பத்தாண்டு படிப்பிற்கான பாடத்திட்டம் ஒரு வடிவமைப்பு (1975) ஆகிய இரண்டு அறிக்கைகள் உருவாகின. NCERT, இவற்றின் அடிப்படையில், பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், மற்றும் இதர பயிற்றுவிக்கும் உபகரணங்களை உருவாக்கியது. அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள், நிபுணர்கள், மற்றும் மாநில கல்வி மற்றும் அறிவியல் கல்விக் கழகங்களின் பிரதி நிதிகளின் முனைப்பான பங்கேற்பினால் இது உருவாக்கப்பட்டது. NCERT உருவாக்கிய மாதிரிப் பாடத் திட்டங்களின் அடிப்படையில் தான் இன்று நாடு முழுவதும் இக்கல்வித் திட்டங்கள் செயல்படுகின்றன. சில மாநிலங்கள் இவற்றை மேம்படுத்தி திருத்தி அமைத்துள்ளன. அத்துடன் பாடத்திட்டத்தில் புதிய பகுதிகளைச் சேர்த்து செம்மையாக்கியுள்ளன. அறிவியல், சமூக அறிவியல், மற்றும் தாய்மொழிப் பாடங்களிலும் இவை நடத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழல் கல்வி மையங்கள்

1986-இல் NCERT. மிகப்பெரிய அளவில், ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஒன்றை மேற்கொண்டது. சுற்றுச்சூழல் கல்வி என்பது வெறும் புத்தகத் தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிப்பது மட்டுமல்ல; மாறாக, மாணவர்கள் இயற்கை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுதல், கூர்ந்து கவனித்தல், வெளியில் செல்லுதல், அவற்றுடன் வகுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிற்கு அங்கீகாரம் அளித்தது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் NCERT, சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்கான அமைச்சகம், அதன் மூலம் நிறுவப்பட அமைப்புகள், அவற்றின் பங்கேற்பு, அத்துடன், சுற்றுச்சூழல் கல்விக்கான மையம் (CEE), CPR சுற்றுச்சூழல் கல்வி மையம், பாரதி வித்யாபீட சுற்றுச்சூழல் கல்வி, மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (BVEERO), உத்தராகண்ட் சேவா நிதி, போன்ற அமைப்புகளின் பங்களிப்பில், சுற்றுச்சூழல் கல்வியை உள்ளூர் தேவைகளுக்கு தொடர்புடையதாக மாற்றி அமைக்கும் முக்கியமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏக்லவ்யா, கல்ப விருக்ஷா, - கேரள சாஸ்த்ர சாஹித்ய பரிஷத், - வோர்ல்டு வொய்டு பண்ட் பார் நேச்சர், WWF - INDIA, போன்றவை, சுற்றுச்சூழல் கல்விக்காக சிறப்பாக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாகும். அதிக முக்கியத்துவம் வாய்ந்த, நவீன முயற்சிகள் பல இத்துறையில் நம் 5 நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் கல்வியில் நிபுணத்துவம் பெறுதல்; இந்தியா எந்நாட்டிற்கும் சளைத்ததல்ல என்பதுடன் இன்றைய உலகில் முன்னணி நாடாகவும் உள்ளது.

சுற்றுச்சூழல் கல்விப் பாடங்கள்

இன்று இந்தியாவில் பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், சுற்றுச் சூழல் கல்வி அதன் பல்வேறு அம்சங்கள் பற்றிய பாடங்களும், பொறியியல், நிர்வாகவியல் ஆகியவற்றின் முக்கிய பாடங்களாகவும் நடத்தப்படுகின்றன. பல தொண்டு நிறுவனங்களும், தேசிய அளவிலான நிறுவனங்களும், முறைசாரா அளவில், சுற்றுச்சூழல் கல்விக்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், முறையான சுற்றுச் சூழல் கல்வியின் அவசியம் உணரப்பட்டுள்ளது. பல வகை பாடத்திட்டங்கள், பாடப் புத்தகங்கள், துணைப் பாட புத்தகங்கள், பயிற்றுவிக்கும் உபகரணங்கள் ஆகியவை, பல்வேறு நிலைப் பள்ளிகளில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. NCERT, மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் SCERT, ஆகியவை இவற்றை உருவாக்கியுள்ளன. ஏறத்தாழ அனைத்து மொழிகளிலும், முதல் வகுப்பு முதலே இப்புதிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், நம் பிள்ளைகளின் மாறுபட்ட ஆர்வங்கள், மற்றும் திறமைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் போதுமான அளவில் சுற்றுச்சூழல் கல்விப் பாடங்கள் இல்லையென்றே கூறலாம்.

குறிக்கோள்கள்

பொதுமக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சரியாகப் புரிந்து கொள்ளச் செய்தல், அதன் மூலம், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன், அவற்றை சரியான முறையில் உபயோகிக்கச் செய்தல், ஆகியவையே சுற்றுச்சூழல் கல்வியின் அடிப்படைக் குறிக்கோள்களாகும். வெறும் புத்தக அறிவை மட்டும் வளர்க்காமல், விழிப்புணர்வு, திறமைகள், நல்ல நோக்கு, அவற்றை செயல்படுத்துதல் ஆகியவற்றையும் உருவாக்குவதே இதன் நோக்கம்.

1992 - ஆம் ஆண்டு UNCED மாநாட்டிற்குப் பின்னர், நீடித்த வளர்ச்சியை மையமாகக் கொண்ட நோக்கோடு, சுற்றுச்சூழல் கல்வி வெளியிடை முக்கியத்துவம் பெற்றது. சுற்றுச் சூழல் கல்வி, மக்கள் தொகைக் கல்வி, நல்லொழுக்கக் கல்வி, பண்புக்கல்வி, மனித உரிமைகள் கல்வி, உடல் நலக்கல்வி, குடும்ப இயல் கல்வி, சமுதாயத்திற்கு பயனுள்ள பணிக்கல்வி போன்றவற்றையும் உள்ளடக்கியதாகத் திகழ்கின்றது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகமும், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகமும், பல்வேறு சுயாட்சி பெற்ற, தனித்த அமைப்புகளின் மூலம், சுற்றுச்சூழல் கல்விக்கான கொள்கைகளை உருவாக்குவதில் முனைந்துள்ளன, முக்கியமான சிலவற்றைப் பற்றிக் காண்போம்.

NCERT (கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் கவுன்சில்)

கடந்த இருபதாண்டுகளில், சுற்றுச் சூழல் கல்விக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை உருவாக்கியதுடன் பல்வேறு பாடக் குழுக்களுக்கான வரைமுறைகளையும் ஏற்படுத்தியது. சுற்றுச்சூழல் கல்விக்கான பாடங்களைத் தயாரிப்பதில் இக்குழுக்கள் பணிபுரிந்தன. NCERT உருவாக்கிய புதிய பாடங்களில் பாடம் பயிற்றுவித்தல், கற்றல் ஆகியவை அதிகளவில் சுற்றுச்சூழல் சார்ந்ததாகவும், சமுதாயத்துக்கு ஏற்புடையதாகவும் இருக்கும்படி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுவான பாடப் புத்தகங்களை உருவாக்கும் போது, பாடங்கள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிறு பிள்ளைகளை வகுப்பறைகளுக்கு வெளியே அழைத்துச் சென்று சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புகள் பற்றி சொல்லித் தரும்படி அவை உள்ளன. கடந்த பத்தாண்டுகளில், பல புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், யுனிசெப் ஆதரவுடனான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அவையாவன : - அறிவியல் கல்வித் திட்டம் (SW) ஆரம்பக்கல்வி பாடத்திட்டம் புதுப்பித்தல் திட்டம் (PCER) முழுமையான ஆரம்பக்கல்வி அணுகுமுறைத் திட்டம் (CAPE) ஊட்டச்சத்து, உடல் நலக் கல்வி, சுற்றுச்சூழல் சுகாதாரம் (NHEES) சமுதாயக் கல்வி மற்றும் பங்கேற்பில் அபிவிருத்தி நடவடிக்கைகள் (DACEP) பிள்ளைகளுக்கான தகவல் தொடர்பு பரிசோதனைக்கூடம் (CML) இளம் பிராயக் குழந்தைக் கல்வி (ECE) இத்திட்டங்களின் கீழ், ஏறத்தாழ் அனைத்து மாநிலங்களும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டங்களையும், பயிற்றுவித்தல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கை - சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஒரு பண்பு என்று 1986-ஆம் ஆண்டுக்கான தேசிய கல்விக் கொள்கை கூறுகின்றது. கல்வியின் அனைத்து மட்டங்களிலும், இதர பண்புகளுடன் இயைந்த பாடத்திட்டமாக அது திகழ வேண்டும் என்றும் கூறியது. தேசியக் கல்வி முறை என்ன என்பதையும் இக்கொள்கை விளக்கியுள்ளது. இதன்படி தேசிய அளவிலான பாடத் திட்டத்தில், ஒரு பொதுவான அம்சம் இருக்கும். அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தேசிய அடையாளத்தைப் பேணுவதற்கான பொருளடக்கம், அறிவியல் வேட்கையை உண்டு பண்ணுவது ஆகியவை உள்ளிட்ட, மாணவர்களின் இயற்கை மற்றும் சமுதாயச் சூழல் மீது நேரிடை தாக்கம் உண்டுபண்ணும் பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கும் பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி, வகுப்பறை, வகுப்பறைக்கு வெளியிலான நடவடிக்கைகள் என, பலவற்றிலும் இது குறித்த அம்சங்கள் முக்கிய இடம் பெறும். சுற்றுச் சூழல் சுகாதாரம், மரக் கன்றுகளை நடுதல் போன்ற நடவடிக்கைகளில் பிள்ளைகள் நேரிடையாக பங்குபெறும் வகையில், சமுதாயத்திற்கு பயன்படும் வேலை நடவடிக்கைகள் என்ற பாடமும் மாற்றி அமைக்கப்படுகின்றது.

NCERT மற்றும் தேசியக் கல்விக் கொள்கை

மேற்கூறிய கருத்துக்கள் அடங்கிய வகையில் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை, NCERT, மாதிரி பாடத் திட்டம் உருவாக்கியுள்ளது. புதுமையான உத்திகள் மூலம் பாடம் நடத்துதல் மற்றும் கற்றல் நடவடிக்கைள் இருக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. ஒன்று முதல் நான்கு வரையிலான வகுப்புகளில்

 • சுற்றுச்சூழல் பற்றி கற்றல், அறிதல்
 • சுற்றுச்சூழல் மூலமாக கற்றுக் கொள்ளல், போன்றவை இடம்பெற்றுள்ளன.

சுற்றுச் சூழலை கற்றல், அறிதல், ஆகியவை முன்னுரிமை பெறும். முதல், இரண்டாம் வகுப்பில், இயற்கை, பூகோளம், சமூக, கலாசார வேறுபாடின்றி, சுற்றுச்சூழல் என்பதை ஒரு முழுமையான விளக்கமாக பள்ளிகளில் படிக்கவேண்டும். மூன்று, நான்காம் ஐந்தாம் வகுப்புகளில், சுற்றுச்சூழல் என்ற பொதுவான அடிப்படையில், சமூக, அறிவியல் கண்ணோட்டங்களில் இரு வகையான சூழல்கள் அறிமுகப்படுத்தப்படும். முறையான கல்வி முறையில் சேர்ந்து படிக்காதவர்களும் முறை சாரா கல்வி மூலம் படிக்காதவர்களும் பயன்பெறும் பொருட்டு, முறைசாரா கல்வி மூலம் பெரும்பாலானவர்களுக்கு அறிவியல், கல்வி புகட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. NCERT - இன் புதிய புவியியல், மற்றும் குடிமைப்பயிற்சி பாடத்திட்டங்களில், கணிசமான அளவில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன. NCERT, SCERT - அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அனுபவங்களின் வாயிலாக, சுற்றுச்சூழல் கல்வியை, பள்ளிகளில் மேலும் வலுவான அடிப்படையில் சொல்லித்தர வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வியில் சுற்றுச்சூழல் சார்புத்திட்டம்

பள்ளிக்கல்வியில் சுற்றுச் சூழல் சார்புத்திட்டம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆதரவு அளிக்கப்படும் திட்டம். ஒரே சீரான இயற்கைச் சூழல் நிலவும் புவிப்பகுதியில், ஒரே மாதிரியான சுற்றுச் சூழல் பிரச்சினைகள் இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில், அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அங்குத் தேவையான சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தை வடிவமைத்து செயலாக்கலாம் என்ற நோக்கில் இத்திட்டம் அமைந்துள்ளது. பரிசோதனைகள், புதுமை உத்திகள், ஆகியவற்றை ஊக்குவிப்பதுடன், மாநில அரசுகள் இத்திட்டத்தை நன்கு செயல்படுத்த ஏதுவாக பல விதங்களில் உதவுவதும் இதன் நோக்கமாகும். உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சொல்லத்தகும், கற்றறியும் முறைகளையும், இடுபொருட்களையும் தயாரிக்கும் தகுதியுள்ள தன்னார்வ அமைப்புகளுக்கு, இத்திட்டத்தின்கீழ் நிதி உதவியும் அளிக்கப்படுகின்றது.

தேவையான செயல்திட்டங்கள், நவீன உத்திகள், பயிற்சி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள், உள்ளூர் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு ஏற்றபடி பள்ளிப் பிள்ளைகளின் செயல் நடவடிக்கைகளை உருவாக்குதல், இதர தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து செயல்படுதல், சமூக இயக்க குழுக்களை ஒருங்கிணைத்தல், ஆகியவை மூலம் சுற்றுச்சூழல் சார்ந்த கல்விக்கான செயல் நடவடிக்கைகளுக்கும் நிதி உதவி உண்டு. ஆமதாபாத் நகரிலுள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான மையம், சென்னையில் உள்ள CPR சுற்றுச்சூழல் கல்விமையம், அல்மோராவில் உள்ள உத்தரா கண்ட் சேவா நிதி ஆகிய மூன்று அமைப்புகளும் இதற்கான முக்கியமான ஏஜென்டுகளாகும்.

சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்கான அமைச்சகம்

திட்டமிடல், ஊக்குவித்தல், மற்றும் சுற்றுச் சூழல், காடு வளர்ப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுதல் ஆகியவற்றுக்கான மைய அமைப்பே இவ்வமைச்சகமாகும். சுற்றுச்சூழல் தகவல்களை அளித்தல், சர்வதேச அளவில் கூட்டுறவு மற்றும் அனைத்து தரப்பு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை இதன் முக்கியப் பணிகளாகும். அமைச்சகத்தின் முக்கிய முயற்சிகள் சில பின்வருமாறு.

முறைசாரா சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு

 • அனைத்து மக்களிடமும் முறைசாரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்விற்கு அமைச்சகம் முன்னுரிமை அளிக்கின்றது. மரபு வழி தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் நவீன முறைகள் இரண்டும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. முக்கிய நடவடிக்கைகள் ஆவன:
 • தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் - மேன்மை மிகு மையங்களை ஏற்படுத்துதல்
 • இயற்கை வரலாற்றுக்கான தேசிய மற்றும் பிராந்திய அருங்காட்சியகங்களை அமைத்தல்.
 • மாவட்டந்தோறும் பர்யாவரன் வாஹினி உருவாக்குதல்
 • பள்ளிகளில், இயற்கைச் சூழல் குழுக்களை ஏற்படுத்துதல்
 • திரைப்படங்கள், ஒலி - ஒளி நாடாக்கள், பிரபலமான பிரசுரங்களை வெளியிடுதல், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், மாநாடுகள் (சுற்றுச் சூழல் பிரச்சினைகள் குறித்து) நடத்துதல். விருதுகள், பெலோஷிப்புகள் அளித்தல் ஆகியவை.

தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

அனைத்து தரப்பு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 1986- இல் இது உருவாக்கப்பட்டது. இதன்கீழ் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பெண்கள், இளைஞர் மன்றங்கள், ராணுவப் பிரிவுகள், ஆகியவற்றுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்த, நிதி உதவி அளிக்கப்படுகிறது. பாதயாத்திரைகள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், கண்காட்சிகள், நாட்டுப்புற நடனங்கள் வீதி நாடகங்கள், போட்டிகள், கருத்தரங்குகள் ஆகியவை இவற்றில் அடங்கும். சுற்றுச்சூழல் கல்விக்கான ஆதார விவரங்களை தொகுத்து தயாரித்தலும் இதன் ஒரு பகுதியாகும்.

மேன்மைமிகு மையங்கள்

விழிப்புணர்வை செம்மைப்படுத்துதல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நிர்வாகத்தில் முன்னுரிமைப் பிரிவுகளில் ஆராய்ச்சி, பயிற்சிக்காக ஐந்து மேன்மை மிகு மையங்களை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காக இரண்டு மேன்மை மிகு மையங்கள் உள்ளன. அவையுடன் 1984-இல் ஏற்படுத்தப்பட்ட நேரு பவுண்டேஷன் ஆப் டெவலப்மெண்ட் அமைப்புடன் தொடர்புடைய, சுற்றுச்சூழல் கல்வி மையம் (CEE) நாடு முழுவதும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்க திட்டங்களையும், ஆதாரத் தகவல்களையும் அளித்தல் இதன் முக்கியப் பணி. இதற்கு ஐந்து மண்டல அலுவலகங்கள் உள்ளன. நாடு தழுவிய சுற்றுச்சூழல் கல்வி நடவடிக்கைகள், மைய அமைப்பின் திட்டங்களுக்கு சரியான ஆதரவு செயல்பாடுகள் ஆகிய பணிகளை இம்மண்டல மையங்கள் ஒருங்கிணைக்கின்றன. உள்ளூர் தேவைகளுக்கான நிகழ்ச்சிகளை தயாரிப்பதுடன், ஆதார கையேடுகளையும் அளிக்கின்றன. சிறு பிள்ளைகள் மற்றும் பள்ளிகளுக்கான சுற்றுச்சூழல் கல்வி, கல்லூரிகள், இளைஞர்களுக்கு பயிற்சி தரும் நிர்வாக அதிகாரிகளுக்கு விசேஷ பயிற்சிகள், இயற்கை, பண்பாட்டு வரலாற்றை சரியாக எடுத்துரைத்தல், போன்றவை இதன் இதர பணிகளாகும்.

இதைத் தவிர பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தை செயல்படுத்துவதில், சுற்றுச்சூழல் கல்விமையம், சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்கான அமைச்சகத்தின் தேசிய அளவிலான ஆலோசனை மையமாகவும் திகழ்கின்றது. தற்போது பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும், சுற்றச்சூழல் கல்வி குறித்து ஆய்வு செய்து தேவைப்படும் மாற்றங்களை பரிந்துரை செய்தலும் இதன் பணியாகும். முறையான சுற்றுச்சூழல் கல்விக்கு அணுகுமுறை 1998-என்ற கட்டுரையை தயாரிக்க உதவியதுடன், இம் மையம் தற்போது 18 மாநிலங்களுடன் இணைந்து இவ்வகையில் இயங்கி வருகின்றது. உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் பள்ளிக்கல்வி முறையில் சுற்றுச்சூழல் கல்வி (EESS) எனும் திட்டத்திலும் இம்மையம் இணைந்து பணியாற்றி வருகின்றது. பாடப்புத்தகங்களில் சுற்றுச் சூழல் கல்வி, ஆசிரியர் கையேடுகளை தயாரித்தல், வரைபடங்களை தயாரித்தல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், பயிற்சிக் கையேடுகளை உருவாக்குதல், மாதிரி பரிசோதனைகள் மற்றும் பல மாநிலங்களில் தெரிந்தெடுத்த பள்ளிகளில் செயல்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். பாடத்திட்டத்துடன் இணைந்த நிகழ்ச்சிகளையும் தயார் செய்தல் இத்திட்டத்தின் மற்றோர் அம்சமாகும். பாடங்கள் படிப்பதை மேலும் செம்மையாக்க இது உதவும். இதன் மூலம், செயல் திட்டங்களில் ஈடுபடும் வாய்ப்பை பிள்ளைகள் பெறுவர். சுற்றுச் சூழலின் பல பரிமாணங்களை அவர்கள் புரிந்து கொள்ள இது உதவும். பாடப்புத்தகங்களின் வாயிலாக தாம் கற்றவற்றை நடைமுறையில் செயல்படுத்த உதவுவதுடன், மாணவர்களை அடுத்துள்ள உடனடி சுற்றுச்சூழல் மீது அவர்களின் கவனம் திரும்பவும் உதவும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், பாடங்களை ஆசிரியர்களே நடத்துவர். இந்நிறுவனங்கள், பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நல்ல அனுபவம் பெற்றவை. 20 முதல் 25 பள்ளிகள் அடங்கிய ஒரு தொகுப்பில் இத்திட்டத்தை ஒட்டு மொத்தமாகக் கூட்டாக இணைந்து செயல்படுத்தும் பொறுப்பு இந்நிறுவனங்களுக்கு உண்டு.

மற்றொரு மேன்மைமிகு மையம், சென்னையில் உள்ள C.P.R. சுற்றுச்சூழல் கல்வி மையமாகும். இது ஸர். சி.பி. ராம சுவாமி ஐயர் பவுண்டேஷன் அமைப்புடன் தொடர்புடையது. இம்மையம் 1989-இல் ஏற்படுத்தப்பட்டது. நாடு எதிர்நோக்கியுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை இம்மையம் நடத்துகின்றது. பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், மகளிர், இளைஞர் மற்றும் சிறுபிள்ளைகளுக்கான நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றது. அந்தமான் தீவிலும், நீல்கிரி பயோஸ்பியர் ரிசர்வ் பகுதியிலும் இரண்டு கிளை அலுவலகங்கள் இதற்கு உள்ளன.

இயற்கை வரலாறு பற்றிய தேசிய மற்றும் மண்டல அருங்காட்சியகம்

இயற்கை வரலாறு பற்றிய தேசிய அருங்காட்சியகம் முறை சாரா சுற்றுச் சூழல் கல்வியை ஊக்குவிப்பதுடன், பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டங்கள் மூலம், மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றது. பல்வேறு கண்காட்சிக் கூடங்கள், ஒரு பயோ சயின்ஸ் கம்ப்யூட்டர் அறை, ஒரு செயல் விளக்க அறை ஆகியவற்றுடன் நடமாடும் அருங்காட்சியக வசதியும் இதில் உண்டு. மைசூரில் உள்ள மண்டல இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் நிரந்தர கண்காட்சிக் கூடங்களுடன், உள்வகுப்பு நிகழ்ச்சிகள், வெளிப் புற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. தற்காலிக கண்காட்சிகள், கோடைக்கால சிறப்பு நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்.

பள்ளிகளில் இயற்கை குழுமங்கள்

பள்ளிகளில் சுற்றுச் சூழல் கல்வியை ஊக்குவிக்கவும், சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க பள்ளிப் பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டவும், பள்ளிகளில் இயற்கை குழுமங்கள் ஏற்படுத்த மத்திய அமைச்சகம் நிதி உதவி அளிக்கின்றது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் இக்குழுமங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் 20-30 பேர் ஒவ்வொரு குழுமத்திலும் உறுப்பினர்கள். ஒன்று அல்லது மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட குழுமங்களை ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு கவனித்துக் கொள்ளும். அது ஒரு கல்வி ஸ்தாபனம் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்லது அமைப்பு ரீதியான சிறப்பு நிறுவனமாக இருக்கலாம். இதுவரை 4500 இயற்கை குழுமங்களுக்கு (ECO Clubs) அமைச்சகம் நிதி உதவி அளித்துள்ளது. பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய தங்களது அறிவை பகிர்ந்து கொள்ள மாணவர்களுக்கு இது உதவும்.

பெற்றோர், நெருங்கிய சுற்றம், நட்பு, ஆகியோரை ஒன்று திரட்டி உள்ளூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்வதுடன், உள்ளூர் சமுதாய மக்கள் தங்கள் பங்களிப்பிற்கு முன் வரவும் ஊக்குவிக்கும். இயற்கை குழுமத் தொகுப்புகள், புகழ் பெற்ற தொண்டு நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்படும்.

கல்லூரிக் கல்வி

1991 - இல் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் மீது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அனைத்து உயர் மட்டக் கல்வியிலும் சுற்றுச்சூழல் பாடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு உத்திரவிட்டது. இதனையடுத்து அனைத்து பட்டப் படிப்புகளிலும், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும். அடிப்படை சுற்றுச்சூழல் கல்வி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்தது.

எதிர்காலத்திற்கான கட்டமைப்பு

அறிவியல், சமூகவியல், கணிதம் உள்ளிட்ட பாடல்களை ஒருங்கிணைக்கும் பிரிவு, சுற்றுச்சூழல் கல்வி எனலாம். இக்கல்வி மூலம் தான் கற்றவற்றை , குறிப்பாக நீர் மாசுபடுவது, வேதியியல் அல்லது குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிலவும் குறிப்பிட்ட இயற்கைச் சூழல், புவியியல் என எதுவாயினும், அதன் தன்மை குறித்து அறிய உதவுகின்றது. அறிவியல் கண்ணோட்டம் வரை இது உதவும். DDT, மருந்து (டிடிடி) ஏன் தடை செய்யப்பட்டது? நீர் அடைப்பு ஏற்பாடு ஏன் தேங்குகிறது? இனங்கள் ஏன் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன? நவீன விவசாயம் நீடிக்குமா! போன்ற வினாக்கள் எழும்புகின்றன.

செயல்முறை அடிப்படையிலான போதனை மற்றும் கற்றல் ஆகியவை NCERT பாடப் புத்தகங்களில் வலியுறுத்தப்படுகின்றன. எனினும் வகுப்பறைகளில் இவை அதிகம் நடைபெறுவதில்லை. இதற்கு காலம் பிடிக்கும். இதற்கு முறைசார்ந்த கல்வியில் படிப்படியான மாறுதல் தேவை. படித்து முடித்த பின் கிடைக்கும் நல்ல வேலைவாய்ப்பை பொறுத்தே தெரிந்தெடுக்கும் கல்வி அமைகிறது. எனவே கற்றல், கற்றறிதல் ஆகியவை செயல் விளக்க அடிப்பாட்டில் அமைய பெருமுயற்சிகள் தேவை.

அணுகுமுறைகளை உருவாக்குதல்

பொருளடக்கம் மற்றும் கற்றுக்கொள்ளும் முறை ஆகியவற்றின் மீது சுற்றுச்சூழல் கல்வி அதிக முக்கியத்துவம் செலுத்துகின்றது. 'செய்து பார்த்து அறிந்து கொள்ளுதல்' இக்கல்வியில் முக்கிய இடுபொருள், இதற்கான செயல் திட்டங்கள் பல்வேறு வகைபட்டவையாக இருக்க வேண்டும். வெவ்வேறு வயதுப் பிரிவினர் மற்றும் பல்வேறு சூழ்நிலைகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏற்கெனவே நாட்டில் வெற்றிகரமான செயல்திட்டங்கள் தயாராக உள்ளன. இவற்றை ஒரு தொகுப்பின் கீழ் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் கல்வி நிறுவனங்கள் மூலம் உள்ளூர் ஆதாரவளத்துடன் செயல்படுத்த முடியும். சாதாரண பாடமாக அதை நடத்தி விடக்கூடாது . இதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு வேண்டும். பாடத் திட்டங்கள், நடத்தும் முறை, ஆகியவற்றுக்கு சரியான முன்னுரிமையை நிர்வாகமும், ஆசிரியரும் அளிக்க வேண்டும்.

தயார் செய்தல்

சுற்றுச்சூழல் கல்வியை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் எதை எப்படி, நடத்த வேண்டும் என்று நன்கு அறிந்திருக்க வேண்டும். இதற்கு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும், பணிக்கு சேரும் முன்பும் பயிற்சி அவசியம். B.Ed., DIET, கல்லூரிகள் இதில் முக்கிய பங்காற்றலாம். பயிற்சி நீண்ட காலத்திற்கு பயன்தர வல்லதாக இருக்கவேண்டும். ஆசிரியர் பணிக்கு சேரும் முன், அனைத்து மட்ட பயிற்சி முறைகளிலும் மாற்றம் தேவை. இதற்கு பயிற்சிப் பாடத்திட்டத்தில் சுற்றுச் சூழல் கல்வி இடம்பெறுதல் அவசியம். பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், தொண்டு நிறுவனங்கள் மூலம் சுற்றுச்சூழல் கல்விக்கு ஆதரவு இடவேண்டும்.

"மதிப்பீடு செய்தல்

தற்போதுள்ள தேர்வு முறை மனப்பாடம் செய்யும் திறனையே பரிசோதிக்கின்றது. இதையே சுற்றுச்சூழல் கல்விக்கும் பயன்படுத்தினால், ஆசிரியர்களும், மாணவர்களும் வெறும் தகவல்களை மனப்பாடம் செய்வார்கள். புதுமை உத்திகளைப் புகுத்த வேண்டும். தொண்டு நிறுவனங்களின் அனுபவங்களை ஒரு குடையின்கீழ் தொகுக்க வேண்டும்.

பாட உபகரணங்கள்

சுற்றுச்சூழல் கல்விக்கான பாட இடுபொருட்கள் அனைத்து மொழிகளிலும் கிடைப்பதில்லை. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப, அங்கு கிடைக்கும் இடுபொருட்களை பயன்படுத்த வேண்டும், இப்பெரும் பணிக்கு மனித வளமும், நிதிவளமும் தேவை. இதற்கான பொறுப்பை LLRI நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளலாம்.

சுற்றுச் சூழல் கல்வி ஆதரவான மையம் (EERC) இதற்கான ஒரு மாதிரியாகத் திகழலாம். EERC என்பது ஒரு பள்ளியாகவோ அல்லது தொண்டு நிறுவனமாகவோ இருக்கலாம். ஒரு குழுமத்திலுள்ள இதர கல்வி நிறுவனங்களுக்கு இது ஆதார வளமாகத் திகழும். இம்மையம் புத்தகங்கள், சுவரொட்டிகள் உள்ளிட்ட 'கல்வி உபகரணங்களைக் கொண்டிருக்கும். குழுமத்திலுள்ள இதர பள்ளிகள், மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விலங்கியல் பூங்காக்கள், இயற்கை தோட்டங்கள், சரணாலயங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் ஆகிய வெளிப்புற ஆதாரங்களும், சுற்றுச்சூழல் கல்விக்கு பெரிதும் உதவுகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் புற ஆதாரங்களுக்கு இடையே சரியான முறையில் ஒருங்கிணைப்பு அவசியம். முகாமிட்டு தங்கிப் பயில காடுகள் அவசியம் என்பதால், மாநில அரசு வனத்துறையின் ஈடுபாடு தேவை.

பயிற்சிகளை அவ்வப்போது மதிப்பீடு செய்தல் அவசியம்

இதற்கு மத்திய - மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பிரிவுகள், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த ஒருமித்த முயற்சிகள் இன்றி பலன்கிட்டாது. நீட்டித்த பொருளாதார முன்னேற்றத்திற்கு சுற்றுச்சூழல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மிகவும் அவசியமானது.

மேலை நாடுகளில் தூய்மையான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகம். அதற்காக போராடும் கிரீன்பார்டி போன்ற அமைப்புகளும் அதிகம். இந்தியாவில் நாம் மேற்கொண்டு செய்ய வேண்டியது அதிகம் உள்ளது. நமது சுற்றுச் சூழல் பிரச்சினைகளை நன்கறிந்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒட்டு மொத்தமாக இணைந்து பங்களிப்பது நம் முன் உள்ள சவாலாகும். இன, மத வேறுபாடின்றி, இளையவர், முதியோர் என ஒவ்வொருவருக்கும் முறையான, முறைசாரா, சுற்றுச்சூழல் கல்வி அளிப்பதன் மூலம் இது சாத்தியமாகலாம்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.20833333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top