பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு / சுற்றுச் சூழல் பிரச்சினைகள் மற்றும் தொலை நுண்ணுணர்வு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச் சூழல் பிரச்சினைகள் மற்றும் தொலை நுண்ணுணர்வு

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் தொலை நுண்ணுணர்வு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

சுற்றுச்சூழல் என்னும் சொல் நம்மைச் சுற்றியுள்ள ஒட்டு மொத்த உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கிய இயற்கை சூழலைப் பற்றிய விளக்கம் அளிப்பதாகும்.

சுற்றுச்சூழல் மாசடைதல்

சுற்றுச்சூழல் மாசடைதல் என்பது வசதியின்மை, நிலையற்றதன்மை, ஒழுங்கற்ற தன்மை, தீங்கு விளை விக்கக்கூடிய செயல்பாடுகள் முதலியவற்றால் உலகின் செயல்பாடுகளிலும், மற்றும் வாழும் உயிர்களின் வாழ்க்கை முறையிலும் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பாகும்.

மாசடைதல் என்பது வேதியியல் பொருட்களாலோ அல்லது சப்தம், வெப்பம், மற்றும் ஒளி ஆற்றல் மூலமாகவோ ஏற்படலாம். இம்மாசு, சூழலில் உள்ள உயிரியல் தன்மைக்கு பாதிப்பினை உருவாக்குகிறது. அவற்றுள் சில பின்வருமாறு

 1. காற்று மாசடைதல்
 2. நீர் மாசடைதல்
 3. நிலம் மாசடைதல்
 4. ஒலியினால் ஏற்படும் மாசு
 5. உயிரி மருத்துவ கழிவுகளில் ஏற்படும் மாசுக்கள்.
 6. மின்னியல் கழிவுகளால் ஏற்படும் மாசுக்கள்
 7. சுரங்கம் தோண்டுவதால் ஏற்படும் மாசுக்கள்.

காற்று மாசடைதல்

தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் வெளியிடப்படுவதால் காற்று மாசடைகிறது. இது மக்களின் நல் வாழ்வினை பாதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு நபர் சராசரியாக 20000 லிட்டர் காற்றை சுவாசிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் மாசடைந்த காற்றையே நாம் சுவாசிக்கின்றோம். தீங்கு விளைவிக்கக்கூடியவைகள் வாயுக்களாகவோ நுண்பொருட்களாகவோ இருக்கலாம்.

காற்றிலுள்ள மாசுக்கள் இயற்கையாலும் மனிதர்களாலும் உருவாக்கப்பட்டது.

 • எரிமலை வெடிப்பு,
 • காற்றரிப்பு,
 • மகரந்தத் தூள் பரவல்,
 • உயிரினங்களின் கூட்டுப்பொருட்கள் ஆவியாதலால் உண்டாகும்.

வாயுக்கள் மற்றும் அலைக்கதிர்வீச்சு போன்றவைகளால் காற்று மாசடைகிறது. இயற்கையினால் காற்று மாசடைவதனால் அதிகபாதிப்பு உண்டாவதில்லை எனினும் மனித உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் சிறிய பயத்தை ஏற்படுத்துகிறது. நாட்டில் காற்று 70 சத வீதம் மாசடைதலுக்கு வாகனங்கள் வெளியேற்றும் புகையே காரணம்.

வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் தரச் சான்று அளிக்கப்படுகிறது.

பாரத் நிலை ஐ – ஐஏ வாகனப்புகை நிலைவிதிகள் தானியங்கி வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுக்கள் மற்றும் பிற வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுக்களை ஒழுங்குப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

நிலக்கரியை பயன்படுத்தும் மின் நிலையங்களிலிருந்து கந்தக-டை-ஆக்ஸைடு வெளியேறுகிறது. நைட்ரஜன் ஆக்ஸைடு உருவாக்கத்தில் தானியங்கி வாகனங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ளவை முக்கிய காற்று மாசுக்களாகும். கந்தக-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு மற்றும் அங்கக வேதியியல் பொருட்கள் ஆவியாதல் மூலம் வளி மண்டலத்தில் நுழைகின்றன. கார்பன்புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

உலகில் நிகழ்ந்த தொழிலக பேரழிவில், 1984ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் போபால் வாயுக்கசிவு மிக மோசமான, வருந்தத்தக்க நிகழ்வாகும். இதில் 8000 மக்கள் உயிரிழந்தனர்.

காற்றில் உள்ள மாசுக்களை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு நேரிடையாக தீங்கு விளைகிறது. மேலும் மறைமுகமாக நீர், உணவு, தோல் மூலம் ஊடுருவி தொற்று நோயை உண்டாக்குகிறது. காற்றில் உள்ள மாசுக்கள் இரத்தக் குழாய் மற்றும் மூச்சுக் குழல் உள்ளே நுழைந்து மனிதர்களுக்கு சுவாசக்கோளாறு, நுரையீரல் நோய், ஒவ்வாமை, இதயநோய் போன்றவற்றிற்கு காரணமாகிறது.

மாசுக்காற்றினால் ஏற்படும் தீமைகள்

ஓசோன் அடுக்கு சீரழிவு

வளிமண்டலத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 24 - 40 கி.மீ உயரத்தில் ஓசோன் மெல்லிய படலமாக காணப்படும். ஓசோன் படலம் தீமை விளைவிக்கும் சூரியனின் புற ஊதாக்கதிர்களை வெளியிடுகிறது. குளிர்சாதனப் பொருட்களில் பயன்படுத்தும் குளோரோ புளுரோ கார்பன் போன்ற வாயுக்கள் ஓசோன் படலத்தை சேதப்படுத்தி வருகிறது.

அண்டார்டிகா கண்டத்திலுள்ள ஓசோன் கண்காணிப்பு நிலையங்கள் சராசரியாக 30 சதவீதம் - 40 சதவீதம் ஓசோன் அளவு இழந்துள்ளதாக கண்டறிந்துள்ளன. 1 சதவீத ஓசோன் இழப்பு 2 சதவீத புற ஊதாக் கதிர்களை உள்ளே செல்லவிடுகிறது. இதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கண் நோய் மற்றும் தோல் புற்று நோய் ஏற்படுகின்றன.

உலக வெப்பமயமாதல் (பசுமை இல்ல வாயுக்கள் விளைவு):-

பசுமை இல்ல வாயுக்கள் என அழைக்கப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நீராவி, குளோரோ புளூரோ கார்பன் போன்றவற்றால் வளிமண்டலத்தில் வெப்ப தேக்கம் ஏற்பட்டு அதன் மூலம் அதிகரித்துக் கொண்டு வரும் வெப்பத்தால் உலகில் பருவகால மாற்றங்கள் பெரிய அளவில் ஏற்படுகின்றன.

வெப்ப அதிகரிப்பு துருவங்களிலுள்ள பனியை உருகச் செய்கிறது. இதனால் கடல் மட்டம் உயருகிறது. கடல் மட்டம் உயர்வதால் கடற்கரையோரங்களில் நிலப்பயன்பாடு மாறுகிறது. கடற்கரை அமைப்பு, துறைமுக வழி, மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. உலக வெப்பமயமாதல் வேளாண்மையைப் பாதிக்கிறது.

அமிழ மழை

1852ல் முதன் முதலில் அமில மழை கண்டறியப்பட்டது. வாகனங்களிலிருந்தும் நிலக்கரி எடுக்கப்படுதல் மூலமாகவும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் கேடாக, அமில மழை ஏற்படுகிறது. கந்தக-டை- ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்கள் அமில மழைக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. இவை நீராவியோடு சேர்ந்து ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளியால் நீர்த்த கந்தக மற்றும் நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இந்தக் கலவை மழையாகும் போது அமில மழை எனப்படுகிறது. தீ மற்றும் பொருட்கள் அழுகுவதால் ஏற்படும் வாயுக்கள் இயற்கை காரணிகளாகும். இவை காற்றில் நைட்ரஜன் ஆக்ஸைடை அதிகரிக்கம் செய்கின்றன.

அமில மழையால் இயற்தொகுதியில் ஏற்படும் பாதிப்புகள் பின்வருமாறு.

 • அமில மழையினால் கடலிலுள்ள மிக நுண்ணிய உயிரிகளான பிளாங்டன் உயிர் வாழ இயலாது.
 • மீனின் முக்கிய உணவான பிளாங்டன் இல்லாவிட்டால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். மேலும் உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படும். கடல் வெப்பம் அதிகரித்தால் பவளப் பாறைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

பவளப்பாறைகள்

கடல்நீரிலிருந்து சுண்ணாம்புப்பாறை ஓடுகளுக்கு கார்பன்-டை-ஆக்ஸைடை மாற்றிக் கொடுத்து கார்பனின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. மேலும் 100 செல்சியஸ் வெப்பத்திற்கு மேல் தான் முருகைகள் அல்லது பவளப்பாறைகள் வளர்கின்றன. மற்ற இயற்தொகுதிகளான காடுகள் மற்றும் பாலைவனங்களும் அமில மழையால் பாதிக்கப்படுகின்றன. உயிரினப் பன்மை இழப்பு மற்றும் இன மறைவுகள் இதனால் ஏற்படுகின்றன.

மண்ணில் அமில மழை விழும் போது மண்ணின் சத்து அரிக்கப்படுகிறது. இவ்வாறு இது தாவரங்களையும் பாதிக்கின்றன. மாண்ட்ரியல் மற்றும் வியன்னாவில் 30 நாடுகள் பங்கேற்ற கூட்டத்தில் குளோராஃபுளோரோ கார்பன் பயன்பாட்டினைக் குறைத்து ஓசோன் படலத்தை பாதுகாப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அமில மழை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள்:-

கந்தகத்தை சுத்திகரிக்கும் இயந்திரங்களை தொழிலகங்களில் நிறுவுவதன் மூலமும், நிலக்கரியை பயன்படுத்தி புதிய வழிமுறைகள் கண்டறிவதன் மூலம் அமில மழையைக் குறைக்கலாம் என சூழியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். எரிசக்தியை குறைவாக பயன்படுத்துவதன் மூலம் கழிவினைக் குறைக்கலாம். தீங்கு விளைவிக்காத எரிசக்தி உற்பத்திக்கு மாறலாம்.

நச்சுப்புகை

புகையும் மூடு பனியும் கலந்த கலவையே நச்சுப்புகை எனப்படும். இது புகை மூட்டமான வளிமண்டலத்தினால், குறிப்பாக நகர்ப்புறங்களில் உருவாகும். பார்வைக் குறைவான மற்றும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். தானியங்கி வண்டிகளின் புகை, குப்பைகளின் முடிவு, எண்ணெய் உற்பத்தி, தொழிலக கரைசல்கள், வண்ணங்கள், பெயிண்டுகள் போன்ற பல்வேறு காரணங்களால் நச்சுப்புகை உருவாகும். சாதாரணமாக பரவியுள்ள நச்சுப்புகையில் கார்பன் மோனாக்சைடு, தூசி, புழுதி, ஓசோன் கலந்துள்ளன. சூரிய ஒளியுடன் ஹைட்ரோகார்பன்கள் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு கலந்து நச்சுப்புகை விளைவினை உருவாக்குகிறது. நிமோனியா முதலான நுரையீரல் தொடர்பான நோயை உருவாக்குகிறது.

காற்று மாசடைவதை எவ்வாறு குறைக்கலாம்

 • வாகனங்களைப் பயன்படுத்தாமல் அருகிலுள்ள கடைகளுக்கு நடந்து செல்லலாம்.
 • முடிந்த போதெல்லாம் மிதி சக்கர வண்டியை பயன்படுத்தலாம்.
 • பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம்
 • பள்ளிக்குச் செல்லும்போது தனித்தனியாக வாகனங்களைப் பயன்படுத்தாமல் பள்ளி வாகனத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம்.
 • அலுவலகம் செல்லவும், திரும்பவும், அலுவலக நண்பர்கள் குழுவினரோடு ஒரே காரில் செல்லலாம்.
 • வீட்டுப் பயன்பாட்டிற்கு குளிர்விப்பானின் பயன்பாட்டினை குறைக்கலாம்.
 • வீட்டைச் சுற்றி மரங்களை வளர்க்கலாம்.
 • குளிர்சாதன அறையை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
 • தேவையில்லாத பொழுது குளிர்சாதனங்களை நிறுத்தி வைக்கலாம்.
 • உலர்ந்த இலை, தழைகளை எரிக்காமல் மக்கும் வண்ணம் குழியில் போடலாம்.
 • நீங்கள் பயன்படுத்தும் வாகனங்களை அடிக்கடி புகை பரிசோதனை செய்யலாம்
 • காரீயமற்ற பெட்ரோலியத்தைப் பயன்படுத்தலாம்.
 • கார்களில் வினையூக்கிக் கருவிகளைப் பொருத்தலாம்

நீர் மாசடைதல்

நீர் மாசடைதல் என்பது வேதியியல், இயற்பியல் அல்லது உயிரியல் மாற்றம் நன்னீரின் தரத்தில் ஏற்படுவதாகும். அதைப் பயன்படுத்தும் அல்லது அதில் வாழும் உயிரினங்களுக்குத் தீங்கினை விளைவிக்கும்.

நீர் மாசடைய முக்கிய காரணிகள்:-

நீர் மாசடைய பல காரணிகள் உள்ளன. முதலாவது நோய்க்கான காரணிகள். பாக்டீரியா, வைரஸ், கிருமிகள், புரோட்டோஸோவோ. மற்றும் ஒட்டுண்ணிகள், புழுக்கள் ஆகியன. கழிவுநீர்மூலமும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மூலமும் பரவுகின்றன.

இரண்டாவது ஆக்ஸிஜன் உறிஞ்சும் பாக்டீரியா. இவை பொருள்களை அழுகச் செய்வதன் மூலம் ஆக்ஸிஜனைப் பெறுகின்றன. இவ்வகை பாக்டீரியாக்கள் அதிக அளவில் நீர் நிலைகளில் காணப்படுகின்றன. இவை மீன் போன்ற நீர் வாழ் உயிரிகளின் இறப்புக்குக் காரணமாகின்றன.

நீர்மாசுக்கள்

நீரில் கரையக்கூடிய உயிரற்ற மாசுக்கள், அமிலங்கள், உப்பு மற்றும் நச்சு உலோகங்கள் போன்றவை ஆகும். நீர் எண்ணற்ற வேதியியல் கூட்டுப் பொருட்களால் மாசடைகிறது. எண்ணெய், பிளாஸ்டிக், பூச்சிக் கொல்லி, போன்றவைகளால் மாசடையும் நீர், மனிதர்கள் மற்றும் நீர் வாழ் விலங்கினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

நீரானது, மாசுக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக கொண்டு செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 63,56,000 டன் கழிவு நீர், குப்பை மற்றும் சேறு உலகிலுள்ள பெருங்கடல்களில் கொட்டப்படுகின்றன.

மாசடைந்த நீர் நிலை சூழ்தொகுதியைப் பாதிக்கிறது. இயற்கை உணவுச் சங்கிலியையும் இது பாதிக்கிறது. காரீயம், காட்மியம் ஆகிய மாசுக்களை சிறிய உயிரினங்கள் உணவுடன் சேர்த்து உட்கொள்கின்றன. இந்த உயிரினங்கள் மீன்கள் மற்றும் நீர்வாழ் மெல்லுடலிகளுக்கு உணவாகின்றன. இவற்றை மனிதர்கள் உண்பதால் வயிறு சம்பந்தமான எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு உணவு சங்கிலிக்குள் மாசுக்கள் புகுந்து விடுகின்றன.

இவ்வாறாக, நச்சுப் பொருட்கள் ஏரிகள், ஓடைகள், கடல்களில் கலந்து நீர் நிலைகளைப் பாதிக்கின்றன. மேலும் நிலத்தில் ஊடுருவி நிலத்தடி நீரையும் மாசுபடுத்திவிடுகிறது.

மிகையூட்ட வளமுறுதல்

மிகையூட்ட வளமுறுதல் என்பது இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்கள் நீர் ஆதாரத்தில் கலப்பதால் ஏற்படுவது. வேதியியல் பொருள்களான பாஸ்பேட்டுகள், உரங்கள், மற்றும் கழிவு நீர் போன்றவை நீர்வாழ் சூழலில் கலப்பதால் நீர் வாழ் சூழியல் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக நீரிலுள்ள குறைந்த வீரியம் உள்ள பாக்டீரியா அதிக வீரியமுள்ளதாகி நீரிலுள்ள ஆக்ஸிஜனை முழுவதுமாக எடுத்துக் கொள்கிறது. அதனால் நீரிலுள்ள உயிரினங்கள் அழிந்து விடுவதோடு, உற்பத்திப் பெருக்கமும் குறைந்து விடுகிறது.

நிலம் மாசடைதல்

நகரக் கழிவுகள் ஓரிடத்தில் கொட்டப்படுவதாலும் சாக்கடைகள் அடைபட்டு, உடைபட்டு இருப்பதாலும் பூச்சிக் கொல்லி பயன்படுத்துவதாலும் எண்ணெய் மற்றும் எரிபொருள் கொட்டப்படுவதாலும் தொழிலகக்கழிவுகள் நேரடியாக மண்ணில் கலப்பதாலும் நிலம் மாசடைகிறது.

நிலம் மாசடைவதை எவ்வாறு தடுக்கலாம். வீட்டுக் கழிவுகளை மறுபயன்பாடு மற்றும் மறு சுழற்சி செய்யலாம். இரசாயனக் கழிவுகளை குடியிருப்புப் பகுதியிலிருந்து தொலைவில் கொட்டலாம். இரசாயனக் கழிவுகளையும் மறு சுழற்சி மூலம் பயன்படுத்தலாம்.

ஒலி மாசடைதல்

மனிதர்கள் அல்லது இயந்திரங்களினால் ஏற்படும் ஒலி செயல்பாடுகளுக்கு இடையுறாக உள்ளது. மனித மற்றும் விலங்குகளில் சமநிலையை பாதிக்கிறது. இதனை ஒலி மாசடைதல் என்கிறோம். தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்கும். அதிகமான அழுத்தம், படபடப்பு, கேட்கும் திறன் குறைதல், அதிகமான அழுத்தம் போன்ற தீமைகளை அதிக ஒலி ஏற்படுத்துகிறது.

ஒலி மாசடைதலைக் கட்டுப்படுத்துதல்:-

 • பசுமை மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் ஒலி அளவைக் குறைக்கலாம்.
 • நெடுஞ்சாலை ஓரங்களிலும், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களிலும், டெசிபல் மீட்டர் கருவிகளை பொருத்தலாம்,
 • வீடுகள், பள்ளிகள், மருத்துவமனை போன்ற இடங்களில் மதில் சுவரை ஒட்டி மரங்களை வளர்க்கலாம்.

கழிவுகள்

உயிரி மருத்துவக்கழிவுகள்:-

இவை உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பக்கூடியது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் டெல்லி மருத்துவமனையிலிருந்த கதிரியிக்க சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தை கழிவுப்பொருட்களோடு சேர்த்து கழிவுப்பொருட்கள் கொட்டும் இடத்திற்கு அனுப்பினர். கதிரியிக்க இயந்திரத்தினால் அங்கு வேலை செய்தவர்களுக்கு இறப்பு ஏற்பட்டது.

மின்னனுக் கழிவுகள்

இந்தியாவில் 3,80,000 டன் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள், கைபேசி, கணினி, குளிர்சாதனப்பெட்டி, அச்சு இயந்திரங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். சுற்றுச்சூழல் மாசடைதலில் இதன் பங்கு அதிகமாகி உள்ளது.

சுரங்கக் கழிவுகள்

சுற்றுச்சூழல் மாசடைவதற்கு சுரங்கத் தொழிலும் முக்கிய காரணமாகும். மகாநதி நிலக்கரி சுரங்கங்கள் நாள் ஒன்றுக்கு 25 கோடி லிட்டர் நீரை பிராமனி நதியிலிருந்து எடுத்துப் பயன்படுத்திய பின், ஆயிரக்கணக்கான காலன் கழிவு நீரை நாதிர் நதியில் விடுகின்றனர்.

இந்தக் கழிவுநீரில் சாம்பல், எண்ணெய், கன உலோகங்கள், மசகு எண்ணெய், பாஸ்பரஸ், அம்மோனியா யூரியா மற்றும் கந்தக அமிலம் ஆகியவை கலந்து உள்ளன. ராஜஸ்தானிலுள்ள ஆரவல்லி குன்றுகளிலிருந்தும், ஹரியானா பகுதியிலுள்ள பெரிய அளவிலான சுரங்கத் தொழில்களால் 90 சதவீதம் காடுகள் அழிக்கப்படுகின்றன. கிணறுகள் வறண்டு வேளாண்மை பாதிக்கப்படுகின்றது.

உயிரின பல்வகைமை

 • சுரங்கங்களுக்கான நிலங்களை கையகப்படுத்துவது உயிரின பன்மையை பாதிக்கிறது. உயிரினப் பன்மையின் வேறுபாட்டின் அளவு அச்சூழ்தொகுதியில் வாழ்கின்ற உயிரினங்களைப் பொறுத்தே அமைகிறது. இப்புவிக்கோளம் முழுவதும் சுற்றுசூழலில் ஏற்பட்டுள்ள வேகமான மாற்றத்திற்கு சுரங்கங்கள் மற்றும் அணைக்கட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக இருந்து இன மறைவிற்கு காரணமாகின்றன.
 • இந்தியாவின் பெரும்பாலான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மிக அதிக மக்கள் அடர்த்தியே காரணமாகும். இதனால் நாம் அனைவருமே இவற்றிற்கு பொறுப்பாவோம். எனவே, நாம் நம்முடைய சுற்றுச்சூழலைப் பாதுகாத்து சுகாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும். இது எவ்வாறு சாத்தியமாகலாம் என்றால் திறமையான, சுற்றுச்சூழலோடு இணைந்து செல்கின்ற நுட்பத்தினைப் பயன்படுத்த வேண்டும்.
 • நாம் நமக்கே உரிய வேளாண்மை நடவடிக்கைகளையும் மண் மற்றும் நீர் பாதுகாப்பு முறைகளையும் கையாள வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைநிறுத்தத்தில் சமுதாய பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

தொலை நுண்ணுணர்வு

புவியியல் என்பது புவியைப் பற்றிய குறிப்பாக, புவியின் மேற்பரப்பு, வளிமண்டலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களைப் பற்றி படிப்பதாகும்.

புவியின் எந்த பொருளையும் அல்லது பகுதியையும் நேரடியான தொடர்பு கொள்ளாமல் புவியின் விவரங்களை தொலைவிலிருந்து சேகரிப்பது தொலை நுண்ணுணர்வாகும். மனிதர்களும் மற்ற விலங்கினங்களும் தொலைவில் உள்ள பொருட்களைப் பற்றி அறிய, பார்த்தல், நுகர்தல் அல்லது கேட்டல் என்ற உணர்வுகளைப் பயன்படுத்துகின்றன. புவியியலாளர்கள் தொலை நுண்ணுணர்வு நுட்பத்தினை பயன்படுத்தி புவியின் பாறைக் கோளம், நீர்க்கோளம், வளிக்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகியவற்றினை அளவிடுகின்றனர். புவியியலாளர்கள் தொலை உணர்வுகள் என்ற கருவியை பயன்படுத்தி புவியைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்கின்றனர். இக் கருவிகள் பொருட்களைத் தொடாமல் விவரங்களை சேகரிக்கவும் பதியவும் செய்கிறது.

தொலை நுண்ணுணர்வின் ஆரம்பம்

வான் வழி புகைப்படங்கள், தொலை நுண்ணுணர்வு நுட்பத்தின் ஆரம்பமாகும். வரைபடத் தயாரிப்பாளர்கள் வான் வழிப்புகைப்படங்களைப் பயன்படுத்தி வரைபடம் வரைந்தனர். 1858ம் ஆண்டு பிரெஞ்சு வரைபடத் தயாரிப்பாளர்கள் பலூன்களையும், புகைப்படக்கருவிகள் பொருத்தப்பட்ட விமானங்களையும் பயன்படுத்தி நிலத்தோற்றங்களை சாய் கோணத்தில் படம் பிடித்தனர், முதல் உலகப் போரில் போர் நடைபெற்ற இடத்தை புகைப்படம் எடுக்க விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்புகைப்படங்கள் எதிரி நாட்டின் ராணுவ நடவடிக்கையை கண்காணிக்கவும். நிலையை அறிந்து கொள்ளவும் எடுக்கப்பட்டன. போருக்குப் பின் வான் வழிப் பதிமங்கள் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த எடுக்கப்பட்டது. வரைபடத் தயாரிப்பாளர்கள் வேறு வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்து குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பரப்பின் சரியான விவரங்களைக் கொண்ட வரைபடங்களை உருவாக்கும் திறமை பெற்றிருந்தனர்.

1960களில் தொலைநுண்ணுணர்வு நுட்பத்துறையில் செயற்கை கோளைப் பயன்படுத்தியபின் ஒரு புரட்சி ஏற்பட்டது. செயற்கை கோளின் உயரத்திலிருந்து புவியின் பெரும்பரப்பை புகைப்படம் எடுக்க முடிகிறது. முதல் வானிலைச் செயற்கைகோள் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசால் விண்ணில் ஏவப்பட்டது. 1970ம் ஆண்டு புவி வள நுட்ப செயற்கை கோள் ஏவப்பட்டதன் மூலம் தொலை நுண்ணுணர்வு நுட்பத்துறையில் இரண்டாவது புரட்சி ஏற்பட்டது. 1975ல் இதன் தொடர்ச்சிக்கு லேண்ட்சாட் எனப் பெயரிடப்பட்டது. செயற்கைகோளை தொலை நுண்ணுணர்வு நுட்பத்துறையில் பயன்படுத்திய பின் தனியார் நிறுவனங்களும் தங்கள் கருவிகளை விண்ணில் ஏவத் தொடங்கின. 1986ல் பிரெஞ்சு நாட்டின் ஸ்பாட் செயற்கை கோள் தன் பணியினைத் தொடங்கியது. ஐந்து பிரெஞ்சு செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு 10 மில்லியனுக்கு மேல் பதிமங்களை எடுத்துள்ளன.

தொலை நுண்ணுணர்வின் பகுதிகள்

தொலை நுண்ணுணர்வு தொகுதி நான்கு பகுதிகளை கொண்டது. அவையாவன :

 1. இலக்கு
 2. ஆற்றல் மூலம்
 3. பிரதிபலிக்கும் வழி
 4. உணர்வி

எந்த பொருளைப்பற்றி தகவல் பெற விரும்புகிறோமோ அதனை இலக்கு என்கிறோம். புவியின் பொருட்களை நேரடியாக தொடர்பு கொள்ளாமல் தகவல்களை சேகரித்து பதிவு செய்வது இத் தொகுதியில் வேலையாகும்.

தொலை நுண்ணுணர்வு செயல்பாட்டில் தொடர்புடையவைகள்:-

சூரியன் ஒரு ஆற்றல் வளம்:-

தொலை நுண்ணுணர்வில், மிகத் தேவையான ஒன்று சூரிய ஆற்றல். இவ்வாற்றல் பொருட்களை ஒளிரச் செய்கிறது. அதன் மூலம் பொருட்களுக்குத் தேவையான மின்காந்த ஆற்றலை வழங்குகிறது.

சூரிய ஆற்றலுடன் வளிமண்டலக் கூறுகளின் இடைச்செயல்

சூரிய ஆற்றல் ஆதாரத்திலிருந்து இலக்கிற்கு வந்தடையுமுன் பல்வேறு வளிமண்டல கூறுகளை சந்தித்து இடைச் செயல் புரிகின்றது. அதாவது மின்காந்தத் தொகுப்பில் ஒரு பகுதியான வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் சூரிய ஆற்றலைக் கிரக்கின்றன. இதே செயல் மீண்டும் புவிப்பரப்பிலிருந்து பிரதி பலிக்கும் போதும் நடைபெறுகிறது.

புவிப்பரப்புத் தோற்றங்களுடன் சூரிய ஒளியின் இடைச்செயல்:-

சூரிய ஆற்றல் இலக்கினை நோக்கி வளிமண்டலத்தின் வழியே வருகிறது. இலக்குடன் செயல்புரிகிறது. இச்செயல் இலக்கின் தன்மையையும் கதிர்களின் தன்மையையும் பொருத்து அமைகிறது.

தகவல் அல்லது புள்ளி விபரம்:-

இலக்கிலிருந்து ஆற்றல் சிதறவோ அல்லது வெளிப்படும் பொழுதோ உணரி (இலக்கின் வெகு தூரத்திலிருந்து) மின்காந்த அலைகளை சேகரித்து பதிவு செய்து கொள்கிறது.

பதிமத்தை முறைப்படுத்துதல்:-

சேகரிக்கப்பட்ட மின்காந்த ஆற்றலை மின் குறியீடுகளாக மாற்றி உணரி புவி நிலையத்திற்கு அனுப்புகின்றன. உணரிகளிலிருந்து பெறப்படும் மின் குறியீடுகள் பல்வேறு பதிக எண்ணாக மாற்றப்படுகின்றன.

தரவுகளை பகுப்பாய்வு செய்தல்:-

முறைப்படுத்தப்பட்ட செயற்கைகோள் பதிமங்களை பகுப்பாய்வு செய்து தகவல் தொகுப்பினை பயன்படுத்துதல்

பயன்பாடுகள்:-

 • தொலை நுண்ணுணர்வின் மூலம் பெறப்பட்ட புதிய தகவல் பல்வேறு சூழ்நிலைகளால் எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகின்றன.
 • பரந்து விரிந்த நிலப்பரப்பினை பற்றிய விபரங்களை சுருக்கமாக அளிக்கின்றன.
 • அணுக முடியாத புவிப்பகுதியின் விவரங்களை தொலை நுண்ணுணர்விகளின் மூலம் கண்டறியலாம். உதாரணமாக ஆப்பிரிக்காவிலுள்ள அடர்ந்த காடுகள், பூமத்திய ரேகை காடுகள், காங்கோ வடிநிலம் ஆகியவற்றின் விவரங்களை அறிதல்
 • புவிப் பகுதியின் விவரங்களை எளிதாகவும் வேகமாகவும் சரியாகவும், தொடர்ந்தும் திரட்டித் தருகிறது. எடுத்துக்காட்டாக பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை பற்றிய தகவல்களை விவசாயிகளுக்குத் திரட்டி தருகிறது.
 • நாட்டு நலத்திட்டங்கள் தீட்டவும், தீட்டிய திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும் உதவுகிறது. எகா:- இயற்கைச் சீற்றங்களான சுனாமி, வறட்சி, வெள்ளம் புயல் ஏற்படும் இடங்களை முன்னரே கண்டறியவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்கவும், மறு சீரமைப்பு செய்தல் என எல்லாச் செயல்களிலும் பயன்படுகிறது.
 • வரைபடத் தயாரிப்பாளர்கள் மக்களடர்த்தி, மண்வகை போன்ற கருத்து நில வரைபடங்களை துல்லியமாகவும், விரைவாகவும் வரைய ஏதுவாயுள்ளன.

புவித் தகவல் தொகுதி

புவித்தகவல் தொகுதி கணினி, மென் கட்டளைத் தொகுப்பு மற்றும் பரப்பு சார்புள்ளி விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பாகும். இத்தொகுப்புகள் புவிசார்பு தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும், வகைப்படுத்தவும், பார்த்து அறியச் செய்யவும், கையாளவும், நிகழ்காலம் வரை சரி செய்யவும், பகுப்பாய்வு செய்யவும் பயன்படுகின்றன.

புவித்தகவல் தொகுதியின் முக்கிய அம்சங்கள்:-

ஒரு புவித்தகவல் தொகுதியில் கணினியினால் வரையப்பட்ட வரைபடத்தையும் புள்ளி விபரப் பேழையையும் இணைக்கிறது. இந்த விளக்கப்படும் புவித்தகவல் தொகுதியின் மூன்று துணைத் தொகுதிகளை விளக்குகிறது.

இடுப்பொருள்

 • உள்ளீட்டுத் தொகுதியில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களை உள்ளீடுப் பொருளாக மாற்றும் பகுப்பாய்விற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • கணினி வன்பொருள் மற்றும் மென் கட்டளைத் தொகுதி, இவை இரண்டும் புள்ளி விபரங்களை சேகரித்தும் பகுப்பாய்வு செய்தும் விவரப் பேழையாக மாற்றி, பின் பரப்பு சார்ந்த புள்ளி விவர பேழையை உருவாக்குகிறது. இவ்விரண்டு பேழைகளையும் தொடர்புபடுத்த நாம் வரைய வேண்டிய நிலவரைப் படத்தைப் பெறுகிறோம்.
 • வெளியீட்டுத் தொகுதியானது அச்சிடப்பெற்ற வரைபடங்களையும், பதிமங்களையும் மற்றும் இதர வெளியீட்டு விபரங்களையும் அளிக்கிறது.

புவித்தகவல் தொகுதிகளின் பயன்பாடுகள்:-

 • சுரங்கம் தோண்டுவதற்கும் மற்றும் கனிம வளங்களை கண்டறியவும் புவித்தகவல் தொகுதி பயன்படுகிறது.
 • புவித்தகவல் தொகுதியைப் பயன்படுத்தி மின்சக்தி நிறுவனங்கள் குறிப்பிட்ட பகுதியில் மின் சக்தியின் அளவு மற்றும் மின் கம்பியின் செயல்பாட்டினை கண்காணிக்கவும், ஆராயவும் பயன்படுத்துகின்றன.
 • போக்குவரத்து நிறுவனங்கள் புவித்தகவல் தொகுதியை பயன்படுத்தி மிகக் குறைந்த தூரமுடைய மாற்று வழிகளைக் கண்டறிந்து தங்களுடைய பொருட்களை விரைவில் கொண்டு சென்று அதனால் நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துகின்றனர்.
 • குற்றங்களை ஆராய்ந்து அதிகமாக குற்றங்கள் நடைபெறும் பகுதிகளை நில வரைபடத்தில் குறித்து அதன் மூலம் சட்ட ஒழுங்கினை பராமரிக்க உதவுகிறது.
 • சூழியில் நிபுணர்கள் இனங்களில் பரவல் மற்றும் வாழிடங்களை அடையாளம் காட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர்.

உலக அமைவிடங்களை கண்டறியும் தொகுதி

உலக அமைவிடங்களை கண்டறியும் தொகுதி புற வெளி சார்ந்த உலகளாவிய, செயற்கை கோள் வழி நடத்தும் தொகுதி ஆகும். இது அமைவிடம், வேகம், மற்றும் காலம் ஆகியவற்றை பற்றிய தகவல்களை எல்லா நேரத்திலும், எல்லா கால நிலைகளிலும் அறிந்து கொள்ளும் வண்ணம் 24 செயற்கை கோள்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாதுகாப்புபடையினரால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. 1973ம் ஆண்டு உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி பழைய முறைகளிலிருந்து குறைகள் நீக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இவ்வாறு உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதிகளுக்கான வழி செயற்கை கோள்கள் புவியை வலம் வந்து கொண்டிருக்கின்றன.

உலக அமைவிடங்களை கண்டறியும் தொகுதி (புPளு), மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கி உள்ளது. அவையாவன:

பரப்புப்பிரிவு:-

24-32 செயற்கை கோள்களை உள்ளடக்கியது. இச்செயற்கைகோள்கள் புவிவலப்பாதையில் வலம் வருகின்றன. புவி வலப்பாதையில் செயற்கை கோளை ஏவுவதற்கு திறனை உயர்த்து கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன

கட்டுப்பாட்டுப்பிரிவு:-

தலைமை பின் தொடர் வழி (சுநஉநiஎiபெ ஊநவெசந), மாற்று தலைமை பின் தொடர் வழி (யுடவநசயெவந சுநஉநiஎiபெ ஊநவெசந) தலைமைக் கட்டுப்பாட்டுத்தளம் ஆகியவகை; கொண்டதாக கட்டுப்பாட்டுப் பிரிவு உள்ளது. மேலும் இப்பிரிவின் மூலம் புள்ளி விவரங்களையும் அண்டவெளி வாகனங்களின் ரேடியோ சங்கேதங்களையும் உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி பெறுவான்கள் பெறுகின்றன.

பயன்படுத்துபவர் பிரிவு

உலக அமைவிடங்களை கண்டறியும் தொகுதியின் இப்பிரிவு பெறுவான்களையும் பயன்படுத்தும் மக்களையும், உள்ளடக்கியது. இராணுவம், பொதுமக்கள், வர்த்தகம் மற்றும் அறிவியல் காரணங்களுக்கான உலக அமையவிடங்களைக் கண்டறியும் தொகுதி பயன்படுத்தப்படுகிறது.

அடிப்படைக் கருத்து:-

உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி (புPளு) பெறுவான்கள், அமைவிடம், அணுப்பரல் தரவுகள் மற்றும் செயற்கை கோள்களில் பொருத்தப்பட்டிருக்கும் துல்லிய கடிகாரங்களை சார்ந்து எல்லா நிலையங்களுக்கும் அனுப்புகின்றன. வான்வெளி முப்பரிமாணங்களைக் கொண்டிருப்பதால் செயற்கை கோள்களிலிருந்து வரும் சந்கேகங்களை அமைவிடம் காலம், மற்றும் வேகம் என 3 செயற்கை கோள்களைக் கொண்டு அளவிடும் நேர்வில் மிகச்சிறிய தவறு கடிகாரத்தினால் ஏற்பாட்டால் கூட பெருந்தவறாக மாறிவிடும். ஏனெனில் தவறான நேரக் கணக்கீட்டின் போது செயற்கைக் கோளின் வேகம் சரியான அமைவிடம் காட்டுவதை பாதிக்கும். அதனால் பெறுவான்கள் 4 அல்லது அதற்குமேல் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி அமைவிடம் மற்றும் காலம் இவற்றில் பிரச்சினைகள் ஏற்படாமல் செயல்படுகின்றன.

பயன்பாடுகள்:-

உலக அமைவிடங்களை கண்டறியும் தொகுதி இரட்டை பயன்பாடு கொண்டதாக கருதப்படுகிறது. ஏனெனில் ராணுவம் மற்றும் பொதுமக்களுக்குப் பயன்படுகிறது.

நில அளவை வரைபடம் வரைதல், கடல்வழி போக்குவரத்து, கைபேசி மற்றும் தொலைத் தொடர்புகளில் எல்லைக்கட்டுப்பாட்டுத் தகவல்கள் ஆகியவற்றில் (புPளு) பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பு காரணங்களான வழிநடத்துதல், ஏவுகணை, மீட்புப்பணி, எதிரி நாட்டின் ராணுவ பலம், போன்றவகைளில் இராணுவ, கடற்படையில் உதவுகிறது.

வர்த்தகம், அறிவியல் பயன்பாடுகள், பாதைகள், மேற்பார்வை போன்ற விவரங்களில் முக்கியமான கருவியாக பயன்படுத்தப் படுகிறது. துல்லியமாக நேரத்தைக் காட்டுதல், அன்றாட நடவடிக்கையில் வங்கி, கைபேசி, கட்டுப்பாடு மையங்கள் போன்றவைகளில் பயன்படுகிறது.

நில அளவை செய்வோர், புவியியலாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகவும், திறமையாகவும், பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும், துல்லியமாகவும். செயல்பட்டு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் உதவுகிறது.

ஆதாரம் : அறம், ஐ.ஏ.எஸ் அகடாமி, சென்னை

3.06896551724
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top