பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு / தமிழகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அதன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இயற்கை வளம்

மனித இனம் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் வளர்ச்சிக்கும் வளர்ச்சியுற்ற பல்வேறு உயிரினங்கள் சிறப்புடன் வாழ்ந்திடவும் சூழல் அமைப்புக்குள் அமையப்பெற்ற பல்வேறு சுற்றுச்சூழல் அங்கங்களின் செயல்பாடுகள் சிறப்பாக விளங்குவதோடு அவை வருங்கால சந்ததியினரும் வளமுடன் வாழ்ந்திட உகந்ததாக சூழலியல் அமைந்திருத்தல் அவசியமான ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அதனை மேம்படுத்தவும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளவும் கடந்த 1996ஆம் ஆண்டு தமிழக அரசால் சுற்றுச்சூழல் துறை உருவாக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அந்நாட்டின் சிறப்பான சுற்றுச்சூழலுக்கும் அந்நாட்டின் இயற்கை வளமே பிரதானம் என்பது நிதர்சனம். தாவரங்கள், விலங்கினங்கள், உயிர்பன்மயம், நீர், காற்று ஆகியவை மனிதன் உயிர்வாழ துணைநிற்கும் இயற்கையின் அங்கங்களாகும். இயற்கை வளங்கள் இல்லாமல் மனிதன் உயிர்வாழ்தல் இயலாது என்பது மறுக்க முடியாத உண்மை. இயற்கை வளங்கள் காடுகளில் பொதிந்து கிடக்கிறது. பல்வேறு வகைப்பட்ட விலங்குகள் மற்றும் தாவங்களுக்கு புகலிடம் காடுகள் தாம் என்பதை நாம் அறிவோம்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

மக்கள்தொகை பெருக்கத்தாலும் அறிவியல் தொழில் நுட்பத்தாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும். சுற்றுச்சூழல் பாதிப்புகளினால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூற மாணவச் சமுதாயமே உகந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது. மாணவர்களிடத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லை.

குடும்பத்தில் குழந்தைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவது எளிது. அது மட்டுமல்லாது இளம் வயதில் மாணவர்களின் மனதில் பதியும் சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் அவர்கள் பெரியவர்களாகும் போதும் கடைப்பிடிப்பது எளிது. எனவே பள்ளிகளில் சூழல் மன்றங்களை அமைத்து மாணவர் சமுதாயம் மூலம் மக்கள் மனதில் சுற்றுச்சூழல் குறித்த சிந்தனைகளை விதைக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

தேசிய பசுமைப்படை

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் நாட்டில்தான் 1998 ம் ஆண்டில் மூன்று மாவட்டங்களில் 170 பள்ளிகள் / 10 கல்லூரிகளில் சூழல் மன்றங்கள் துவங்கப்பட்டு அதன் பின்னர் மாவட்டந்தோறும் 40 பள்ளிகள் வீதம் 1200 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு தற்போது சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பணிகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்பது உண்மை.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தேசிய பசுமைப்படை என்னும் திட்டத்தினை 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தி தமிழ் நாட்டின் 32 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு 250 பள்ளிகள் வீதம் 8000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சூழல் மன்றங்கள் நிறுவப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தேசிய பசுமைப்படை திட்டம்

விழிப்புணர்வு நடவடிக்கைகள்

சூழல் மன்றங்களில் அங்கம் வகித்துக் கொண்ட மாணவர்கள் மூலம் கருத்துக் காட்சிகள், கடற்கரையை தூய்மைப்படுத்துதல், சுற்றுச்சூழல் குறித்த வினாடிவினா, கட்டுரைப் போட்டிகள், ஒவியப் போட்டிகள், மனித சங்கிலி ஆகிய நிகழ்வுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போகிப்பண்டிகை தினத்தில் டயர் டியூப் மற்றும் பழைய பொருட்களை எரிப்பதைத் தடுத்தல், தீபாவளிப் பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்தல் ஆகிய விழிப்புணர்வுப் பணிகளும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலை நிகழ்ச்சிகள், நடைப்பயணம், பேரணிகள் மூலமாகவும், கருத்தரங்குகள் மூலமாகவும் சுற்றுச்சூழல் சிந்தனைகள் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு வருகிறது.

எரிசக்தி

மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் இன்றியமையாத ஒன்றாகும். நீரின் சிறப்போ மகத்தானது. அதனால்தான் சர்.சி.வி.ராமன் அவர்கள் நீரை “காயகல்பம்’ என்று கூறினார். வள்ளுவப் பெருந்தகையோ "நீரின்றி அமையாது உலகு" என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

உலக மக்களிடையே சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இயற்கை வளங்களை சேமித்து வைப்பதற்கும் மாசுக் கேட்டைத் தடுப்பதற்கும் நிலம் சீர்கெடுவதைத் தவிர்க்கவும் அரசு மட்டுமல்லாது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமக்குப் பின்னர் வரவுள்ள சந்ததியினரின் மீது அக்கறை கொண்டு செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனி மனிதர்கள் கெளரவிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் என மொத்தம் 10 விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் நெருக்கடிகள் அனைத்து மக்களாலும் உணரப்படுவதும் அவர்களது விழிப்புணர்வும் அதிகரித்து வருவதும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். நமது அரசும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் பிரச்சனைகளை களைவதற்குப் பெரிதும் முயற்சிக்கின்றன. இருப்பினும் தனிமனித அக்கறை வளமான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதனை அவரவரது இல்லத்திலிருந்தே தொடங்கலாம்.

எரிசக்தி சிக்கனத்திற்கான குறிப்புகள்

தேவையில்லாத மின் விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

  • தண்ணீர் குழாய்களை கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு வீணாகத் தண்ணிர் குழாய்கள் திறந்து கிடக்காமல் மூடி வைக்க வேண்டும்.
  • வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மக்கும் குப்பை, மக்காத குப்பை என வீட்டிலேயே தனித்தனியாக குப்பைகளை பிரித்து வைத்து முறையாக வெளியேற்றம் செய்தல் வேண்டும்.
  • கழிவு நீர் குழாய்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வீட்டில் மழை நீர் சேகரிப்புத் தொட்டியைத் தவறாமல் அமைக்க வேண்டும்.
  • வீட்டிற்கு முன்புறமோ அல்லது பின்புறமோ சிறிய அளவில் தோட்டங்கள் அமைத்து வீட்டுக் கழிவுகளை உரமாக்கி பயன்படுத்துதல் வேண்டும்.
  • அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தோ அல்லது சைக்கிள் மூலமாகவோ செல்ல வேண்டும். முடிந்தவரை பொது வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஆதாரம் : திட்டம், மாத இதழ்

ஆக்கம் : டாக்டர் மல்லேசப்பா, ஐ.எஃப்.எஸ். இயக்குனர், சுற்றுச் சூழல் துறை, தமிழக அரசு.

2.92857142857
Anonymous Jan 19, 2019 01:26 PM

அழகான இயற்கையை மனிதா அழிக்கலாமா உன் செய்கையில்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top