பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச் சூழல் மேலாண்மை

சுற்றுச் சூழல் மேலாண்மை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை என்று மாறியதோ, அன்றே துவங்கிவிட்டது சுற்றுச்சூழல் மாசுபடுதல். இந்தியாவின் சந்தை வளர்ச்சி படிப்படியாக (1930களில் துவங்க சுய தேவை பூர்த்தி, பண்டமாற்று முறை, உற்பத்தி சார்ந்த வளர்ச்சி, விற்பனை சார்ந்த வளர்ச்சி, சந்தை சார்ந்த வளர்ச்சி என்று தற்போது நுகர்வோர் சார்ந்த உற்பத்தி என்று இப்போது (2012களில்) பரிணாமம் பூதாகரமாக மாறிவிட்டது. அறிவியல் வளர்ச்சிதான் இதற்கு முக்கிய காரணி என்றால் இந்த சமுதாயம் இன்று இந்த அசுரகதி வளர்ச்சி அடைந்திருக்காது. அதே சமயத்தில் அடிப்படைத் தேவைகளாக நிலம், நீர், காற்று, ஆகாயம் அதன் தன்னிலையை இழக்கும்போது பல்வேறு இன்னல்களை உயிரினங்கள் அனுபவிக்க வேண்டி உள்ளது. இந்நிலை நீடித்தால் அடுத்த தலைமுறை, வரலாற்றில் தான் முன்னோர்களையும், அரிய வகை விலங்குகளையும், தாவரங்களையும் தெரிந்து கொள்ளும் சூழ்நிலை வரும். மனிதன் தற்பெருமைக்காகவும், சுய தேவைகளுக்காகவும் வனங்களை அழித்ததோடு வனவிலங்குகளையும் வேட்டையாடினான். சமுதாயமும் மக்களும் ஒன்றையொன்று சார்ந்தவை. இயற்கையுடன் இணைந்த அறிவியல் வளர்ச்சி ஒன்றே இச்சமுதாயத்தை பல நூற்றாண்டுகளுக்கு கொண்டு செல்லும் வலிமை மிக்க ஆயுதம்,

சுற்றுச்சூழல்

நம்மைச் சுற்றியுள்ள, நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள், பறவைகள் இவற்றின் இயக்கம், தன்மை இதன் ஒட்டுமொத்தம் தான் சுற்றுபுறச்சூழல். இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குபவை. புறக்கண்ணுக்கு புலப்படாததும் அகக்கண்ணால் உணரக் கூடியதுமான ஒரு பண்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம். உயிரற்றவையும், உயிருள்ளவையும் சமமான அளவில் இருந்தால் சுற்றுச்சூழல் சமநிலை என (Eco balance) உணரலாம்.

இந்த விகிதாசாரம் மாறிக்கொண்டிருக்கும் சூழல்தான் சுற்றுப்புறத்தை ஆக்கப்பாதையிலிருந்து அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கிறது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணிகள் மனிதர்களின் பேராசை மற்றும் அறியாமை, தொழிற்சாலை, வாகனங்கள் வெளிப்படுத்தும் புகை, காடுகளின் பரப்பளவு குறைதல், சுற்றுலாத் தளங்களின் மாசு, அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளால் ஏற்படும் மாசு இரசாயன உரங்கள், ஒரு முறை பயன்படுத்தி வீசும் பொருட்கள்

  • கடுமையான சட்டங்களும் மற்றும் இடைவெளி குறைவான உயரமான கட்டிடங்கள்.
  • இயற்கை மாற்றங்கள் மாறுதல்கள்.
  • இரசாயன திட, திரவ கழிவுகள் (சுத்திகரிக்கப் படாதவை)

சுற்றுச்சூழல் மேலாண்மை

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்தியாவின் மக்கள் தொகை சமார் 121 கோடியாகும். சீனா முதலிடமாக இருந்தாலும் பரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு அதிகமான நாடு. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் சுமார் முப்பது கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை ஒரு நூற்றாண்டில் நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. ஆனால் இயற்கையில் எவ்வித மாற்றமும் ஆக்கபூர்வமாக இல்லை. நகரமயமாக்கலும், தொழிற்புரட்சியும் கிராமங்களை தவிர்த்து இடம் பெயர்வு சதவீதம் அதிகரித்து இன்று கிராமங்களில் எவ்வித இயற்கை சார்ந்த இயக்கங்களும் இல்லை என்றே சொல்லலாம்.

அறிவியல் புரட்சியினால், அன்றாடம் பயன்படுத்தும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பதப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு முறைகள் இரசாயன மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்களால் பல பரிணாமங்களை கடந்து விட்டது.

இன்றைய சூழ்நிலையில் நாம் பயன்படுத்தி வெளியேற்றும் குப்பை தினமும் பல டன்களை தாண்டுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக எல்லாப் பொருட்களும் பாலித்தின் மற்றும் அதன் சார்பு பொருட்களையே அதிகமாக பயன்படுத்தி (Package) செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழல் மேலாண்மை என்பதை இருவேறு கோணங்களில் பகுத்தாராயும்போது முதலாவதாக தற்போதைய நிலையை தொடர்ந்து பராமரித்தல், இரண்டாவதாக கட்டுப்படுத்துவது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் 100 சதவீதம் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தாத மாவட்டமாக உள்ளது. அங்கு பாலித்தீன் பை, ஒரு முறை பயன்படுத்தும் டம்ளர்கள், முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதால் சற்றேறக்குறைய நீலகிரி பிளாஸ்டிக் பயன்படுத்தாத மாவட்டமாக உள்ளது.

சுற்றுச் சூழல் மேலாண்மை வழிமுறைகள்

  1. தற்போதைய மாசுபடாத இயற்கையை பாதுகாத்தல்.
  2. சுற்றுச் சூழல் பாதித்த பகுதிகளை சீராக்குதல்.

மாசுப்படாத இயற்கையை பாதுகாத்தல்

இந்தியாவில் பெரும்பகுதி சுற்றுச்சூழல் பாதித்திருந்தாலும் எஞ்சியிருக்கும் இடம் குறிப்பிட்ட சதவீதம் உள்ளது. மேலும் மாசுபடாவண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், கடுமையான சட்டங்களும் அமல்படுத்துவது இன்றிமையாதது. நம் நாட்டில் சட்டங்களை செயல்படுத்துவதிலும் பாரபட்சமான போக்கு நீடிப்பதால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை வர வேண்டும். சுற்றுலாவை முதன்மையாக நம்பி இருக்கும் பல நாடுகள், பொது இடங்களில் குப்பை போடுவதையும், மாசுபடுத்துவதையும் முற்றிலும் தடைசெய்து, மிக அதிகமான அபராதக் கட்டணங்களை நிர்ணயித்து வசூல் செய்கின்றனர். தாய்லாந்து ஹாங்காங் பகுதிகளில் பொது இடங்களில் குப்பை போட்டால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. விதியை மீறுபவர்களை கண்காணிக்க கண்காணிப்பு கருவிகளும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் இருந்து மக்கள் வேலைவாய்ப்பிற்காக நகரத்திற்கு குடி பெயர்வது தடுக்கப்பட்டு இயற்கை சார்ந்த வேளாண் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதில் திட்டங்கள் உறுதியாக செயல்படுத்துதல் வேண்டும். கல்வி கற்பது நகரத்தில் வேலைவாய்ப்பிற்கென்ற நிலைமாறி கற்ற கல்வி என்பது வேறு, வேலை வாய்ப்பு என்பது வேறு என்ற இருவேறு கோணங்களில் தெளிவாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் கல்வி ஒரு பாடமாக அனைத்து கல்லூரிகளில் இருந்தாலும் பெயரளவிலும் துணைப்பாடமாகவும் இருப்பதால் இதன் முழுப்பயன் இன்றும் மாணவர்களைச் சென்றடையவில்லை. இப்பாடங்கள் முதன்மைப் பாடத்தில் ஒன்றாக வைத்து சுற்றுச்சூழல் கல்வியின் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

பெரும்பாலான நகரங்கள், பெருநகரங்கள், மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகள் பெருக்கத்தால் நிரம்பி வழியும் நிலை இன்று உள்ளதால், புதிய தொழிற்சாலைகளின் வரவு பெருநகரங்களையும் அதைச் சார்ந்த துணை நகரங்களையும் குறிவைக்க ஆரம்பித்துள்ளது. இப்படிப்பட்ட விரிவாக்கப் பணிகளுக்கு உரிமம் வழங்கும்போது சுற்றச்சூழலை மனதில் வைத்து நல்ல சுற்றுச்சூழல் உள்ள பகுதிகளை தவிர்க்கலாம் அல்லது நாட்டிலுள்ள இதுவரை சுற்றுச்சூழல் மாசுபடாத பகுதிகளை தேர்வுசெய்து அரசின் நேர்க்கட்டுப்பாட்டில் அவ்விடங்களை புதிய நிர்மானத் திட்டங்களுக்கு தடைசெய்யப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபட மற்றொரு முக்கியமான காரணம் மக்கள் தொகை பெருக்கம். இந்தியாவில் சதுர கிலோ மீட்டருக்கு மிக நெருக்கமான மக்கள் தொகை உள்ளது. இதில் ஒவ்வொருவரின் பயன்பாடு. அவர்கள் வெளியேற்றும் கழிவுகள், பயன்படுத்தும் பொருட்கள் என்று குப்பையின் அளவு இன்று மாறிக்கொண்டே வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் நாம் பயன்படுத்தும் மளிகைப் பொருட்கள் முதல் அன்றாடம் உபயோகிக்கும் அனைத்தும் பிளாஸ்டிக் சார்ந்தது. இது ஒருமுறை பயன்படுத்தி வெளியேற்றும் திடக்கழிவுகளாக மலை போல் குவிகிறது. சாதாரண மை பேனாக்கள் முதல் மிகப் பெரிய தொலைக்காட்சி பெட்டி வரை இதில் உள்ளடக்கம். இவற்றை தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் பெரும்பாலும் சிதைக்க முடியாதவைகளாக இருப்பதால் குவிந்து கிடக்கும் இந்தக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுகிறது.

இந்த காரணத்தை பொருத்தமட்டில் அரசின் தெளிவான கொள்கை முடிவுகள் தயாரிப்பு நிறுவனங்களை, ஏற்றுமதி இறக்குமதி துறைகளில் வலியுறுத்த வேண்டும். தயாரிக்கும் பொருட்களுடைய மூலப் பொருட்களின் தன்மை, உற்பத்தி செய்யும் முறைகள், இரசாயன மாற்றங்கள், மீளப்பெறுதல் மற்றும் சுழற்சி முறைகளில் வல்லுனர்களின் பரிந்துரை பெற்ற பின் அப்பொருளை தயாரிக்கவும், பயன்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும். அதற்கு உற்பத்தியாளர்களுக்கும், அரசிற்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பும், அதை கண்காணிக்க வல்லுனர் குழுக்களையும் அமைத்து தொடர்ந்து பராமரித்து அப்படி தயாரித்த பொருட்களுக்கு முத்திரையும் வழங்கினால் எளிதில் சிதையக் கூடிய பொருள்களின் பயன்பாடு அதிகமாகும். தற்போது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பல நிகழ்ச்சிகள், திட்டங்கள் பெரும்பாலும் நகர மற்றும் பெரு நகர மக்களை மட்டுமே குறிவைத்து செயல்படுத்துவதோடு கிராமப்புற மாணவர்கள் மற்றும் மக்களையும் சென்றடைய வேண்டும். ஏனெனில் இந்தியாவில் அதிகம் மாசுபடாத இடங்கள் இன்னும் கிராமங்களில் தான் உள்ளது. அதனால் நகர, பெரு நகர மக்கள் பல்வித மாசுகளிலிருந்து விடுபட்டு ஒய்வெடுப்பதற்காக கிராமங்களை தேடிச் செல்கின்றனர். இந்நிலை நீடிக்கும்போது நகரங்களின் நிலை போல் கிராமங்களின் நிலையும் மாறிவிடும். ஆகவே தெளிவான விழிப்புணர்வு திட்டங்கள் கிராமப் பகுதிகளையும் சென்றடைய வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதித்த பகுதிகளை சீராக்குதல்

முதல் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்காத பகுதிகளை தொடர்ந்து பராமரித்தல் குறித்து கருத்துகள் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியாக சுற்றுச்சூழல் பாதித்த பகுதிகளை எப்படி சீராக்குதல் என்பதாகும். இது மிகக் கடினமானதும் முக்கியமானதும் ஆன பகுதி ஆகும். நகரமயமாக்கலின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் இன்றைய இந்தியாவில் ஏதாவது ஒரு வகை மாசு ஆக்ரமித்துள்ளது.

(அ) முதலில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் திட, திரவ வாயு கழிவுகளில் உள்ள நச்சுப் பொருட்களை கட்டுப்படுத்தும் முறைகளை தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆராய்ந்து அவற்றை செயல்படுத்த அரசு முன்வருவதோடு மானியங்கள் அறிவிக்கலாம். பெரும்பாலான தொழிற் சாலைகளில் திரவ கழிவுகள் தான் மிக அதிகமாக அருகில் உள்ள ஆற்று நீரோடு கலக்கப்படுகிறது. இங்கு ஆரம்பிக்கும் சுகாதார சீர்கேடு ஆற்று வளங்கள் (உயிரினங்கள்) ஆரம்பித்து, இந்நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தும்போது பயிர்களை பாதித்து, இப்படி விளைந்த பொருட்களை மக்கள் பயன்படுத்துவது என்று அனைத்து நிலைகளிலும் பாதிக்கிறது. இந்த சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ஆகும் செலவு மிகப் பெரிய காரணமாகிறது. மூன்று நான்கு தொழிற்சாலைகள் இணைந்து ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கலாம் அல்லது அரசே இதற்கு ஒரு கொள்கை முடிவெடுத்து சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகளை சுத்திகரிக்கும் பொது மையமாக இயக்கலாம். இதற்கு ஆகும் செலவை ஒவ்வொரு தொழிற்சாலையும் சேவை (Service Charge) வழங்கலாம், அல்லது சுத்திகரிப்பு நிலையங்களின் நிர்மாணச் செலவிற்கு மானியம் அளிக்கலாம்.

(ஆ) பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து வெளியேறும் திடக்கழிவு மேலாண்மை, நவீன தொழில்நுட்பங்களால் இன்று நாம் பயன்படுத்தும் பொருட்களில் சுமார் 5 முதல் 10% வரை திடக்கழிவுகள் மொத்தமாக மலைபோல் குவிகிறது. திடக்கழிவுகளை (Cary Bag) பிளாஸ்டிக் பொருளால் ஆன பைகளைப் பயன்படுத்தி அவற்றின் மேல் பகுதிகளை முடிச்சிட்டு பந்துபோல் தூக்கி எறிகிறோம். இப்படி கட்டப்பட்ட கழிவுகள் பல நாட்கள் ஆனாலும் மக்கிப் போகாமல் துர்நாற்றம் வீசி சுற்றுப்புறத்தை மாசடையச் செய்கிறது. திடக்கழிவு மேலாண்மையில் மக்களையும் இணைத்து செயல்பட வேண்டும்.

(இ) சுற்றப் புறச் சூழல் விழிப்புணர்வு குறித்து ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் ஆய்வுகளும், செயல்முறை திட்டங்களும் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என்பதுதான் உண்மை. இதுதான் சுற்றுபுறச்சூழல் மாசு அடைவதற்கான முதன்மை காரணி. இடப்பற்றாக்குறையும், வேலை வாய்ப்பும் பெரு நகரங்களை நோக்கி மக்களை படையெடுக்க வைக்கிறது. பெரு நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயர மற்றொரு காரணம் பள்ளி கல்வி, மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தால் தான் எதிர் காலத்திற்கு நல்லது என்ற பெற்றோர்களின் தவறான கண்ணோட்டம். நகரங்களில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் கிராமங்களையும் சென்றடையுமானால் நகரம் என்ன? கிராமம் என்ன எல்லாம் ஒன்றுதான் என்ற எண்ணம் ஆகும். அப்போது இடப்பெயர்வு பெருமளவில் குறைக்கப்படும்.

(ஈ) மின்னணுவியல் கழிவு (E-Waste) - இவற்றை மறுசுழற்சி செய்ய இரண்டு இடங்களில் மட்டுமே போதுமான வசதி உள்ளது. இவ்வசதிகள் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உற்று நோக்கினால் இயற்கையோடு இயைந்த சுற்றுச் சூழல் பாதுகாப்புதான் எதிர் விளைவு இல்லாதது. செயற்கையாக சுற்றுச் சூழலை உருவாக்க முற்படுவோமேயானால் நிலப்பரப்பின் சமநிலை சற்று மாறும். இப்படி ஆரம்பிக்கும் சிறுசிறு மாற்றங்கள் இயற்கையை இடம்பெயர வைக்கிறது என்று நம்பலாம். நம் இந்தியாவை பொறுத்தமட்டில் இயற்கையாகவே அனைத்து வகையிலும் 100 சதவீத சுற்றுப்புறச்சூழல் மேலாண்மையால் தக்க வைக்க முடியும்.

புதிய வீடு கட்டவதாக இருப்பினும், ஒட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தாலும், கல்லூரிகளில் சேர்க்கை வேண்டுமானாலும சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்து தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்த வேண்டும். எந்த ஒரு உரிமமும் வாங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் இந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் பணிக்கலாம். சுற்றுச்சூழலை யார் மாசு படுத்துகிறார்களோ அவர்களுக்குதான் விழிப்புணர்வு கருத்தரங்கம், நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இக்கருத்துகள் படிக்காத மக்களிடையே சேர்வதற்கு ஏற்றார் போல் செயல்முறை திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

தற்போதைய தேவை

அறிவியல், தொழில்நுட்ப புரட்சியை அனுபவிக்கும் அளவிற்கு மக்கள் இதன் எதிர் விளைவுகளை அறிந்துகொள்ள முயற்சிப்பதே இல்லை. இதற்கு அலைபேசி பயன்பாடு ஒரு உதாரணம். இந்தியாவில் மிக அதிகமாக சுமார் 19 கோடி பேர் இணைப்பை பயன்படுத்துகிறார்கள். இயற்கையோடு இயைந்த சுற்றுச் சூழலே மாசு அடைவதை தவிர்க்கும் அருமருந்து. இயற்கையை காப்போம் இனிதாக வாழ்வோம்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : முனைவர். சு. பாபு, உதவி பேராசிரியர், வணிக நிர்வாகம், அரசுக்கலைக்கல்லூரி, மன்னார்குழு

3.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top