பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழல் மேம்பாடு

சுற்றுச்சூழல் மேம்பாடு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐ.நா. அமைப்பால் 1972ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு பெரும் சவாலான பிரச்சனையாக சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்ந்து, மழை குறைகிறது. அண்டார்டிகா, இமய மலை பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதால், கடல் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது.

பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது. உலகளவில் 160 கோடி பேர் வாழ்வாதாரங்களுக்கு காடுகளை சார்ந்தே வாழ்கின்றனர். மேலும் காடுகள் 30 கோடி பேருக்கு வீடாக பயன்படுகிறது. பூமியின் நுரையீரல் போல் திகழ்கின்றன. உலகளவில் ஆண்டுதோறும் 1 கோடியே 30 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன. இது போர்ச்சுகல் நாட்டின் நிலப்பரப்புக்கு சமம். தண்ணிர் மழைப்பொழிவு, மண்வளம் மற்றும் மனிதர்களைப் போலவே உயிரினங்களின் வாழ்க்கைக்கு காடுகள் பயனுள்ளதாக உள்ளன. காடுகளால்தான் ஆறுகளில் தண்ணிர் ஒடுகிறது. இதன்மூலம் 50 சதவீத தண்ணிர் நகரங்களுக்கு கிடைக்கிறது. புயல், வெள்ளம் மற்றும் தீ ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு காடுகள் வளர்ப்பு அவசியம். காடுகள் வளர்பதின் மூலம் வேலை வாய்ப்பும் பெருகுகிறது.

மக்கள் தொகையில் 2வது இடத்திலும், பரப்பளவில் 7வது இடத்திலும் நம்நாடு உள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பால் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு, பெரும் பிரச்சனையாக விளங்குகிறது. கோல்டன்லங்கார் குரங்கு, ரால் பெங்கால் டைகர் உள்ளிட்ட உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் சில இந்தியாவில் உள்ளன. சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை அளிப்பதற்கு இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, அதிகளவில் மரக்கன்று நடுதல், மறுசுழற்சி முறையை கையாளுதல் போன்றவற்றை அனைவரும் விழிப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.

உலகமும், சுற்றுச்சூழல் மாசடைதலும்

உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வில் நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து, இந்த உலகம் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி கவலைப்படாமல் இருக்கும் அறியாமை பற்றியும், அதை தடுத்து நிறுத்த நம்மாலான முயற்சியை எடுக்க வேண்டும் என்ற உண்மையும் கூறப்படுகின்றது. நம்மைத் தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு நாம் எப்படிப் பட்ட உலகத்தை விட்டுச் செல்லப் போகின்றோம். நச்சு வாயுக்களால் நிரப்பப்பட்டு, அவர்களை அழிக்க கூடிய சூழலையா? சலசலத்தோடும் நீரோடை, காற்றில் அலையும் இலைகளின் சத்தம், பறவைகளின் இனிமையான குரல் இப்படியெல்லாம், நாம் அனுபவித்த இனிமைகளை நமது சந்ததிக்கு தெரியாமலே ஆக்கிவிடப் போகின்றோமா. தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். சுற்றுச்சூழல் மாசடைவது, வெளிப்பார்வைக்கு, வெட்ட வெளிச்சமாகத் தெரியாததாகவோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதாகவோ இல்லாமல் போவதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமல் நம்மை பாதிப்பதாலும், அதற்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் தரப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றது. பயங்கரவாதிகளின் பாதிப்பை விடக் கொடூரமானதாக சுற்றுச் சூழல் மாசு வந்து கொண்டிருக்கின்றது.

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனஜீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், கடல் வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்தச் சுற்றுச்சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி, உயிரினங்களின் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.

நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச்சூழலை மனிதன் பாதுகாக்கவே கடமைப்பட்டவன். சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வறட்சி மறுபுறத்தில் வெள்ளக் கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன.

தானியத்தின் இருபக்கங்கள்

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இறப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் குறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். மனித அபிவிருத்திக்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன.

புவி வெப்பமடைந்து வருவதும் ஒசோன் படலத்தில் மண்டலத்தில் ஒட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச்சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பெரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படலம் பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிர தேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம் இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் இன்றைய வறுமை, சீரழிவு என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவை இலட்சக்கணக்கான மக்களின் சுற்றுச்சூழல் பாதிப்புற காரணமாக அமைகின்றன. எனவே மக்கள் தம் வாழ்க்கை முறையை அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப மாற்றியமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும். எனவே சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச்சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு கடந்த 1974ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் தேதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

 • 1974 - ஒரே ஒரு பூமி
 • 1975 - மனித வாழ்விடம்
 • 1976 - தண்ணீர் வாழ்க்கையின் ஆதாரம்
 • 1977 - ஒசோன் படலம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம், நிலம் இழப்பு மற்றும் மண் சீர்கேடு
 • 1978- இழப்பில்லாமல் வளர்ச்சி
 • 1979 - நம் குழந்தைகளுக்கு ஒரே எதிர்காலம் இழப்பில்லாமல் வளர்ச்சி
 • 1980 - பத்தாண்டுக்கான புதிய சவால் இழப்பில்லாமல் வளர்ச்சி
 • 1981 - நிலத்தடி நீர் மனித உணவு பழக்கத்தில் நச்சு வேதிப் பொருட்கள்
 • 1982 - பத்தாண்டுகளுக்கு பிறகு ஸ்டாக்ஹோம் (சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை புதுப்பித்தல்)
 • 1983 - நச்சுக் கழிவு நிர்வாகம் மற்றும் அகற்றுதல் இரசாயன மழை மற்றும் ஆற்றல்
 • 1984 - பாலைவன மேலாண்மை
 • 1985 - இளமை மக்கள் தொகை மற்றும் சுற்றுச் சூழல்
 • 1986 - அமைதிக்கு ஒரு மரம்
 • 1987 - சுற்றுச்சூழல் மற்றும் வசிப்பிடம் ஒரு கூரையையும் தாண்டி
 • 1988 - சுற்றுச்சூழல் முதலெனில் மேம்பாடு தழைக்கும்
 • 1989 - புவி வெப்பமயமாதல், புவி எச்சரிக்கை 1990 - குழந்தைகள் மற்றும் சுற்றுச்சூழல்
 • 1991 - வானிலை மாற்றம், தேவை உலகளாவிய ஒற்றுமை
 • 1992 - ஒரே பூமி, பராமரிப்பு மற்றும் பங்களிப்பு.
 • 1993 - ஏழ்மை மற்றும் சுற்றுச்சூழல் வளையத்தை உடைத்தல்
 • 1994 - ஒரு பூமி, ஒரே குடும்பம்
 • 1995 - மக்களாகிய நாம் உலக சுற்றுச்சூழலுக்கு ஒன்றுபடுவோம்.
 • 1996 - நம் பூமி, நம் வசிப்பிடம், நம் வீடு
 • 1997 - பூமியில் வாழ்க்கைக்கு
 • 1998 - பூமியில் வாழ்க்கைக்காக கடல்களை பாதுகாப்போம்
 • 1999 - நம் பூமி நம் எதிர்காலம், காப்போம்
 • 2000 - சுற்றுச்சூழல் நூற்றாண்டு செயல்படும் நேரம்
 • 2001 - வாழ்க்கையை இணைப்போம்
 • 2002 - பூமிக்கு ஒரு வாய்ப்பு
 • 2003 - தண்ணீர் அதற்காக இரண்டு மில்லியன் மக்கள் இறப்பு
 • 2004 - கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் இறப்பு அல்லது வாழ்வு?
 • 2005 - பசுமை நகரங்கள் திட்டமிடுவோம்
 • 2006 - பாலைவனங்கள் மற்றும் பாலை வனமயமாக்கல் தரிசு நிலங்களை கைவிடாதீர் கிரகத்திற்காக
 • 2007 - உருகும் பனி ஒரு சூடான விஷயம்
 • 2008 - பழக்கத்தை உதருவோம் குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி

இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி, வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டின் செயற்திட்டத்தின் கீழ் சூழல் சம்பந்தமான விஷயங்களுக்கு மனித நேயத்தை வழங்குதல், மக்களை நிலையானதும், பொறுப்பானதுமான விருத்தியின் சுறுசுறுபபான பிரதிகளாகச் செயற்பட அதிகாரமளித்தல், சூழல் சம்பந்தமான விஷயங்கள் பற்றி சமூகத்தின் மத்தியில் மனப்பான்மை மாற்றம் பற்றிய நற்புரிந்துணர்வை வளர்த்தல், எல்லா நாடுகளுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியுடனும், மிக்க பாதுகாப்புடனும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் செயற்படல் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பருவ நிலை மாற்றம்

புவி வெப்பமடைதல் (Global Warming) என்ற பிரச்சனையின் வீரியத்தை அண்மைக்காலமாக மிகுதியாக உணர்ந்து வர முடிகின்றன. உலக நாடுகள், கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, சல்ஃபர் ஹெக்சா ஃப்ளுரைடு, ஹைட் ரோபுளுரோ கார்பன், பொஃப்ளுரோகார்பன்கள் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியீடு, காடுகள் அழிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் புவிவெப்பமடைகிறது. இதன் விளைவாக, பருவநிலை மாற்றம் (Climate Change) ஏற்பட்டு இயற்கைப் பேரழிவு அச்சுறுத்தல்கள் உள்ளிட்டமோசமான சூழல்கள் உண்டாகின்றன. பனிச் சிகரங்கள் உருகி பேராபத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கின்றன. ஒருபுறம் வறட்சியும் மோசமான விளைவுகளும், மறுபுறம் மழை வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரழிவுகளும் நிகழும் அபாயம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

கார்பன் அதிக அளவில் வெளியிடுவதில் இந்தியாவுக்கு 4ம் இடம்

உலகின் ஒவ்வொரு நாடும் வெளியிடும் கார்பன் அளவு குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. உலகில் கார்பன் அதிக அளவில் வெளியிடும் முதல் 20 நாடுகளில், வளர்ந்து வரும் வல்லரசான சீனா, வளர்ந்த வல்லரசான அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறது. இதன் கார்பன் வெளியீட்டு அளவானது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்தியாவுக்கு இதில் நான்காவது இடம். ஐரோப்பிய நாடுகள் கார்பன் டை ஆக்ஸைடு வெளியீட்டை கட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கார்பன் டை ஆக்ஸைடு அதிக அளவில் வெளியிடும் நாடுகளான ஜப்பான், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அதற்கான விரிவான திட்டங்களைக் கூட தீட்டவில்லை என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் உள்ளது.

புவி வெப்பமடைய கராணம்

தற்போதைய புவி வெப்பமடைதலுக்கான காரணமே, வளர்ந்த நாடுகளின் கடந்த கால செயல்பாடுகள்தான் என்றும், தொழிற்சாலைகளில் கட்டுப்படின்றி நச்சு வாயுக்களை வெளியேற்றுவதன் காரணமாகவே பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது வளரும் நாடுகளின் குற்றச்சாட்டு. தற்போது புவி வெப்பமடைவதை தடுக்கவும், கார்பன் வெளியீட்டை குறைக்கவும் வளர்ந்த நாடுகள் விதிக்கும் கட்டுபாடுகளை வளரும் நாடுகள் ஏற்க மறுக்கின்றன.

சுற்றுச்சூழல் மாற்றம் இந்திய - சீனா உடன்பாடு

பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியாவும், சீனாவும் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்கள், கொள்கைகள், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவும் சீனாவும் கூட்டாக செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. ஆற்றல் சேமிப்பு புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், தூய்மையான நிலக்கரி, மீத்தேன் பயன்பாடு, காடுகள் வளர்ப்பு காடுகளின் நீடித்த நிர்வாகம் ஆகிய துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இரு நாடுகளும் இதற்கான குழுவை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளது. பசுமைகுடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பான கொள்கைகள், திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாடு குறித்து இரு நாடுகளும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் அமைப்புகளாக இந்தியாவின் சுற்றுச் சூழல், வனத்துறை அமைச்சகமும் சீனாவின் தேசிய மேம்பாடு மற்றும் சீர்திருத்த ஆணையமும் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பரஸ்பர ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை அடிப்படையில் தீர்த்துக்கொள்ள இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

காலைநிலை மாற்றம்

 • தொழில்நுட்ப முன்னேற்றமும் சுற்றுச்சூழல் செலவுகளை குறைத்து வளர்ச்சி இலக்குகளை எட்டுவதுதான் வளர்ந்து வரும் உலகத்தின் முன்னுள்ள சவாலாகவுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் வளர்ச்சியில் சமரசம் செய்து கொள்ள முடியாது. அதே சமயம் மாசு வெளியேற்றத்தை குறைப்பதிலும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு பொறுப்புள்ளது. பருவ நிலை மாற்றம் குறித்த சவாலை எதிர்கொள்ள தொழில்நுட்பமும் அதனை பரவலாக்கிவரும் முக்கிய அம்சமாகும். இதற்கு பொருத்தமான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். குறைந்த செலவில் சிறந்த முறையில் தீர்வளிக்கும் தொழில்நுட்பங்களே நமக்குத் தேவை.
 • பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயல் திட்ட பிரகடனம், இந்த விஷயத்தில் சிறந்த மற்றும் கூட்டுறவான செயல்பாடுகளுக்கு முக்கிய பங்காற்ற வேண்டும். கியோட்டோ பிரகடனத்தின் கீழ் பல வளர்ந்து வரும் நாடுகளில் நீடித்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தூய்மையான வளர்ச்சி அணுகுமுறை சிறந்த சாதனமாக நிரூபணமாகியுள்ளது.
 • பருவ நிலைக்கு உகந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் உலக பொது சொத்துக்களாக கருதப்பட வேண்டும். குறைந்த செலவில் வளர்ந்துவரும் நாடுகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு பொருத்தமான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும். அத்தகைய அணுகுமுறை வளர்ந்து வரும் நாடுகளில் எச்ஐவி/எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களின் நன்மைக்கான மருத்துவ தொழில்நுட்பங்களில் வெற்றிகரமாக பின்பற்றப்பட்டது. இதே போன்ற அணுகுமுறை நம்முடைய அன்னை பூமியை பாதுகாப்பதிலும் தேவை.
 • பருவநிலை புதுமை கண்டுபிடிப்புகள் மையங்களின் சர்வதேச நெட்வர்க் ஒன்றை ஏற்படுத்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் வளர்ந்து வரும் நாடுகளின் திறன் மேம்பாட்டிலும் உதவ வேண்டும். பருவநிலை மாற்றத்தை பொருத்தவரை இந்தியாவின் வளர்ச்சிப் பாதை நல்ல முறையில் உள்ளது. அடிப்படை ஆற்றல் நுகர்வானது உலக சராசரியைவிட இந்தியாவில் குறைவாக உள்ளது. அத்துடன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றமும் இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது. அதே சமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்போது நம்முடைய எரிசக்தி பயன்பாடும், மாசு வெளியேற்றமும் உயரும். ஆயினும் வளர்ந்து வரும் நாடுகளின் சராசரி அளவை இந்தியாவின் மாசு வெளியேற்றம் தாண்டக் கூடாது என்பதில் உறுதியுடன் இருத்தல் வேண்டும்.

ஆதாரம் : திட்டம்

ஆக்கம் : முனைவர். ப. சென்ன கிருஷ்ணன், துணைப்பேராசிரயர், பொறியியல் துறை, திருவள்ளுவர்

3.07042253521
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top