பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தட்பவெப்ப மாற்ற தடுப்பு

தட்பவெப்ப மாற்ற தடுப்பை பற்றிய குறிப்புகள்.

தட்பவெப்ப மாற்ற தடுப்பு- தனிமனித செயல்பாட்டின் மகத்துவம்

நம் அன்றாட வாழ்க்கையில் சூழலுக்குகந்து செயல்களை செய்வதால் சக்தி மூலாதாரங்களை காக்க உதவமுடியும். சரியான நோக்கங்களை கொண்ட செயல்கள் செய்வது, குறைவான நுகர்வு, புலால் உண்ணாமை, நடைப்பயணங்கள் மற்றும் வளங்களை வீணாக்காமை ஆகியவை சிறந்த ஆரோக்கியம் மட்டுமல்லாது தட்பவெப்ப மாற்றத்தைக் குறைக்கவும் உதவும்.

குறைவான தொலைவிலுள்ள வேலை மற்றும் கடைகளுக்கு நடை பயணம், பொது போக்குவரத்தை பயன்படுத்துதல் மற்றும் குறைவான எரிசக்தி மூலம் இயங்கும் வாகனங்களை உபயோகிக்க முயற்சிக்க வேண்டும்.

 • வீட்டில் பயன்படுத்தப்படும் எரிசக்தி மூலங்களை சரியாக பராமரிக்க வேண்டும்
 • மின்சார நீர் சூடேற்றிக்குப் பதிலாக சூரிய சக்தி மூலம் தண்ணீரை சூடேற்ற முயற்சிக்க வேண்டும்
 • சக்தியை சேகரிக்கும் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்
 • தேவையற்ற விளக்குகளை அணைக்க வேண்டும்
 • தேவையற்ற வெளிப்புற மற்றும் அழகு படுத்தக்கூடிய விளக்குகளின் பயன்பாட்டை தவிர்த்தல் வேண்டும்.
 • பயன்படுத்தாத மின்சாதனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்
 • அருகாமையில் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சமுதாயம் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
 • காய், கனித் தோட்டம் அமைத்தல் நலம்.
 • தேவையற்ற கழிவுகள் மற்றும் மீதமுள்ள உணவுகளைக் கொண்டு உயிர் உரங்களை தயாரிக்க வேண்டும்
 • மறுசுழற்சி முறையை பயன்படுத்த வேண்டும்

மின்சக்தி

 • தற்போது உள்ள எரி-ஒளி விளக்குகளுக்குப் பதிலாக மின்-மிளிர் ஒளி விளக்குகளை பயன்படுத்தலாம். இவை சாதாரண விளக்குகளை விட பத்து மடங்கு அதிகம் பயன்படுத்த முடியும். மேலும் இவற்றிற்கு 75 சதவிகிதம்  குறைவான மின் சக்தியே போதுமானது.
 • மிளிர்-ஒளி விளக்குகளை பொருத்துவதன் மூலம் எரி-ஒளி விளக்குகளிலிருந்து வெளிப்படும் அரை டன் கரியமில வாயு வளி மண்டலத்தில் கலக்கப்படுவதை தடுக்கலாம். இவை சாதாரண விளக்குகளைக் காட்டிலும் சற்று கூடுதல் விலையாக இருந்தாலும் இவற்றின் பயன்பாட்டின் மூலம் மின்சார சேமிப்பு அதிகம் செய்து அதை ஈடுகட்டவும் லாபமீட்டவும் முடியும்.
 • அதிக திறன்  கொண்ட ஒரு மின்விளக்கை பயன்படுத்துவதற்குப் பதிலாக இரண்டு திறன் குறைவான மின் ளிளக்குகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக ஒரு நூறு வாட்ஸ் மின் விளக்குக்குப் பதிலாக இரண்டு நாற்பது வாட்ஸ் மின் விளக்குகளை பயன்படுத்தலாம்.
 • மின்கருவிகளின் பயன்களை குறைக்க முயற்சிக்க வேண்டும்.
 • வெயில் காலங்களில் சன்னல்கள், திரைச்சீலைகளை தேவையான அளவு மூடி, கதவுகளை திறந்து வைப்பதின் மூலம் வீடு குளுமையாக இருக்கச் செய்யலாம்.

நீர் சூடேற்றி

 • விரைவில் நீரை சூடேற்றும் நீர் சூடேற்றியை பயன்படுத்தலாம். குளித்து முடித்தவுடன் நீர் சூடேற்றியை நிறுத்த வேண்டும். இவைகள் மின்சக்தியை அதிகம் ஈர்க்கும் தன்மை கொண்டவை.
 • நீர் சூடேற்றியை அதிக வெப்ப நிலையில் நிலைநிறுத்துவதை தவிர்க்கவும். இது மின்சக்தியை வீணாக்க ஏதுவாகும்.
 • நீர் சூடேற்றியின் வெப்ப சீராக்கியை குறைவான - சரியான வெப்ப நிலையில் நிலைநிறுத்துவதின் மூலம் சக்தி வீணாவதை தடுக்கலாம்.
 • சூரிய சக்தி மூலம் நீர் சூடேற்றும் முறையை வீடுகளில் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

அடுப்புகள்

 • சமைத்த உடன் அடுப்பை அணைக்கவும்.
 • முடிந்தவரை நீராவி அழுத்த சமைப்பானைக் கொண்டு சமைக்க வேண்டும்.
 • சமைக்க ஆரம்பிக்கும் முன் தேவையான பொருள்கள் மற்றும் பாத்திரங்கள்  தயாராக வைத்தல் மற்றும் திட்டமிட்டு செய்தல் அரிதான எரிசக்தியை சேமிக்க உதவும்
 • சமைக்கும்போது சமைக்கும் கலனை மூடியும், சிறிய பாத்திரத்தில் சமைத்தும், எரிசக்தியை சேமிக்கலாம்.
 • சமையல் முடிந்தவுடன் எரிவாயு அடுப்பினை நிறுத்தி, சமைத்த உணவினை மூடிவைக்க வேண்டும்.
 • எரிவாயு அடுப்பினை பயன்படுத்திய பிறகு கசிவு ஏற்படாத வண்ணம் ‘ரெகுலேட்டரை’ சரிபார்த்து மூடி வைக்க வேண்டும். இதனால் எரிவாயு கசிவினை தடுக்கலாம்.
 • மண்ணெண்ணை அடுப்பிற்குப் பதிலாக இந்திய தர முத்திரை பதித்த எரிவாயு அடுப்புகளை பயன்படுத்த வேண்டும்.

குளிர்விப்பான்

 • குளிர்விப்பானை திறப்பதற்கு முன்பாக நாம் என்ன எடுக்கப்போகிறோம் என்பதை தெளிவாக முடிவு செய்து கொண்டு திறப்பது மின்சக்தி வீணாவதை தடுக்க உதவும்.
 • குளிர்விப்பானை பயன்படுத்திய பிறகு அது சரியாக மூடப்பட்டுள்ளதா என சரி பார்க்க வேண்டும்
 • உங்களுடைய குளிர்விப்பான் தேவைக்கதிகமாக 5 டிகிரி குறைவான வெப்ப நிலையை பயன்படுத்தும் போது அதற்கு சக்தி 25 சதவிகிதம் அதிகம் தேவைப்படுகிறது.
 • குளிர்விப்பானை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். உணவுப் பொருட்கள் கதவு இடைவெளிகளில் சிக்கி சரிவர மூடாமல் இருந்தால், குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படும்.
 • குளிர்விப்பானில் திரும்ப வாயு நிரப்பப்பட வேண்டுமெனில் குழாய்களில் ஏதாவது துவாரம் உள்ளதா என்று சோதித்து துவாரத்தை முதலில் சரிசெய்தல்  அவசியம்.
 • குளிர்விப்பானில் முழு கொள்ளளவும் பயன்படுத்துவது மின்சார சிக்கனத்திற்கு ஏதுவாகும்.
 • மிகவும் சூடான உணவுப் பொருளை குளிர்விப்பானுக்குள் வைப்பதற்கு முன் சராசரி வெப்ப நிலைக்கு கொணர்ந்து உள்ளே வைத்தல் நல்லது.

மோட்டார் வாகனங்கள்

மோட்டார் வாகனங்களை சரிவர பாராமரித்தல் எரிபொருள் சிக்கனத்தின் முதல்படி. சரியாக பராமரிக்கப்பட்ட மோட்டார் வாகன இன்ஜினின் பெட்ரோல் பயன்பாடு 9 சதவிகிதம் குறைகிறது. உதாரணமாக கார் மோட்டார் இன்ஜினை சரிவர பராமரிக்காதவர்கள் 1,00,000 பேர் தங்கள் கார் இன்ஜினை சரியாக பராமரிப்போம் என்று உறுதி கூறினால் வளிமண்டலத்தில் 90 மில்லியன் டன் கரியமில வாயு கலப்பது தடுக்கப்படும்.

எரிபொருள் வடிகட்டியை சரியான முறையில் சுத்தப்படுத்த வேண்டும். சுத்தமற்ற வடிகட்டி எரிபொருளை வீணடிக்கும்.

தேவையற்ற எடைகளை வாகனத்தில் இருந்து தவிர்ப்பது எரிபொருள் சிக்கனத்திற்கு உதவும்

வாகனத்தை வாங்கும்பொழுது எரிபொருள் சிக்கனம் செய்யும் வாகனத்தை வாங்க வேண்டும். எடுத்துக்காட்டாக பவர் ஸ்டெயரிங் மற்றும் தானுந்துத் திறன் ஆகியவைகளை பயன்படுத்த அதிக சக்தி தேவைப்படுகிறது.

டயர்களில் உள்ள காற்று அழுத்தம் சீராக இருக்க வேண்டும் இது 5 சதவிகித எரிபொருள் விரயத்தைக் குறைக்கும்.

பொறுமையாக வாகனத்தை இயக்க வேண்டும். இயந்திரங்களை அதிக வேகத்திற்கு உந்தக்கூடாது. நிதானமாக வாகனத்தை வேகமூட்டி பின்பு சீரான வேகத்தில் இயக்க வேண்டும். இதன்மூலம் 15 சதவிகிதம் அதிக தொலைவு செல்ல எரிபொருள் கிடைக்கிறது.

வாகனத்தை இயக்கும்பொழுது 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் இயக்க வேண்டும். வேகமாக இயக்கும்போது வாகனத்திற்கு அதிக காற்றை எதிர்க்கும் திறன் தேவைப்படுகிறது. ஆகவே 80 கி.மீ. வேகத்தில் செல்வதைக் காட்டிலும் 40 கி.மீ. வேகத்தில் செல்வதால் 40 சதவிகிதம் அதிக தொலைவு செல்ல எரிபொருள் கிடைக்கிறது.

கூட்டாக சேர்ந்து வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும். உறவினர்கள் மற்றும் வேலையாட்களுடன் பகிர்ந்து பயணம் மேற்கொள்வது எரிபொருள் சிக்கனம் செய்ய உதவும்.

பேருந்து மற்றும் தொடர்வண்டி போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்தலாம்.

மிதிவண்டி பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. இதற்கு தேவைப்படும் இடமோ குறைவு. இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு இல்லை. இது உடற்பயிற்சி என்பதால் உடலுக்கும் நல்லது.

வாகனத்தில் கருவண்ணம் ஊட்டப்பட்ட கண்ணாடி சன்னல்களை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தினுள் சீரான வெப்ப நிலை இருக்கும். இதனால் குறைவான குளிரூட்டி பயன்பாடு தேவைப்படுகிறது.

வாகனம் ஓட்டுவதைக் காட்டிலும் முடிந்தவரை நடைபயணம் மேற்கொள்வது நல்லது. நடைபயணம் நமது உடலுக்கு சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

மனித செயல்களால் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் எண்ணற்கறிய அளவில் பருவமாற்றங்களையும் புவி மாற்றங்களையும் ஏற்படுத்தலாம். இத்தகைய விளைவுகள் சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகம் மற்றும் பல்வேறு காரணிகளையும் உட்கொண்ட கூட்டு விளைவாக மனித இனம் மற்றும்  உயிர்களின் மீது தாக்கமாக விடியும் அபாய நிலை உள்ளது.

மேற்கூறிய சில யோசனைகளை கையாண்டாலே இப்பூமியை மேலும் வெப்பமடைவதிலிருந்து காப்பாற்ற முடியும்.

 

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்.

2.93023255814
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top