অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பருவநிலை மாற்றத்தை தகவமைத்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை

பருவநிலை மாற்றத்தை தகவமைத்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை

அறிமுகம்

வளர்ச்சியின் வேகத்திற்கு பருவநிலை மாற்றமானது மிகப்பெரிய சவாலாக தற்போது உள்ளது. வெள்ளம், வறட்சி, வெப்ப அலைகள், சூறாவளி மற்றும் புயல்கள் முதலான நீரியல் வானிலை ஆபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதையும் அந்த ஆபத்துக்கள் தீவிரத்துடன் நிகழ்வதையும் எதிர்கொள்வது முதல் அம்சமாகும். உயிரினச் சூழலியல் அமைப்புகள் (அமைப்பு எல்லை, சேவைகள்) மாற்றப்படுதல் அல்லது சீர்கேடு அடைதல், குறைந்த அளவிலான உணவு உற்பத்தி, தண்ணிர் கிடைப்பது குறைந்து வருதல், வாழ்வாதாரங்களின் மீது பாதகமான தாக்கங்கள் இயற்கையான பேரிடர்கள் மற்றும் மனிதரால் தூண்டப்படும் பேரிடர்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன. ஏனெனில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விவசாயம் மற்றும் இதர இயற்கை மூலவளங்களே வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடித்தல், நிலச்சரிவு போன்ற புவி அமைப்பியல் பேரிடர்களைவிட பருவநிலை மாற்றத்தால் உருவாகும் பேரிடர்களின் தாக்கங்களே அதிகமானதாக உள்ளன.

உலகளாவிய வெப்பமாதல்

விஞ்ஞான ரீதியிலான விழிப்புணர்வின் வரலாறு 1980களில் தொடங்குகின்றது. அதற்கு முன்பே தொடங்கிவிட்டது என்றும் கூறலாம். இதைத் தொடர்ந்து சமூக அரசியல் சார்ந்த தீவிர எழுச்சி ஏற்பட்டது. மத்திய இந்தியாவில் ஆகஸ்ட் 1989ல் சுற்றுச்சூழல் அறிவியல் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த முதல் பயிலரங்கம் பனிப்பாறை ஏரியில் அதிகரித்து வரும் அபாயம், ஆபத்தான வெள்ளங்கள், பாலைவனமயமாதல், வறட்சி, புயல்கள் மற்றும் நோய்ப்பரவல் போன்ற பிரச்சனைகைளை எதிர்கொள்வதற்கான குரலாக அமைந்திருந்தது. என்றாலும், இந்த ஆபத்துக்கான மூல காரணங்களை விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்வது என்பது குறைவாகவே இருந்தது. பேரிடர்களில் பருவநிலை மாறுதலின் தாக்கத்தை விஞ்ஞானரீதியாக உணர்தல் என்ற அடிப்படையை ஏற்படுத்த அரசுகளுக்கு இடையிலான பருவநிலை மாறுதல் குறித்த குழு (ஐ.பி.சி.சி) முக்கிய பங்காற்றியது.

பேரிடர் மேலாண்மையில் இரண்டாவது மடைமாற்றம் குறித்த பேரிடர் ஆபத்துக்காரணி மேலாண்மையோடு பருவநிலை மாறுதல் தகவமைப்பை ஒருங்கிணைப்பதற்கான அரசியல் ரீதியிலான அங்கீகாரத்தை உலக அளவில் பெறுவதற்கு ஐ.பி.சி.சியின் 4ஆவது மதிப்பீடு அறிக்கை(2007) மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

பருவ மாற்றத்திற்கான மூன்று அம்சங்கள்

 1. ஆபத்துக் காரணிகளை எதிர்கொள்ளுதல்
 2. பாதிப்புக்கு உள்ளாவதைக் குறைத்தல் (பாதிப்பு தணிவிப்பு)
 3. சுற்றுச்சூழல் அறிவு சார்ந்த அணுகு முறைகள்.

முதல் மடைமாற்றம் என்பது பேரிடர் மேலாண்மையில் "பதில்வினை மற்றும் நிவாரணம்” என்பதில் இருந்து "முன்தடுப்பு மற்றும் தயார்நிலையில் இருத்தல்” என்பதற்கு மாறியதாகும்.

சர்வதேச அளவில் "பேரிடர் மேலாண்மை” என்பது பொருளாதாரம், பொறியியல் துறைகள் போன்று தற்போது மாறி வருகின்றது. சுற்றுச்சூழல் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு இந்த மாற்றங்கள் செயல்படுகின்றன.

சுற்றுச்சூழல் மாற்றங்களில் மூன்று அம்சங்கள்

 1. பருவநிலை மாறுதல்
 2. நிலப் பயன்பாடு
 3. உயிரினச் சூழலியல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்பவை ஆகும். இவையே அச்சுறுத்தும் கூறுகளைத் தீவிரப்படுத்துகின்றன. மேலும் பாதிப்புக்கு உள்ளாவதையும் அதிகரிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் இயற்கைப் பேரிடர் குறைப்புக்கான பத்தாண்டுகள் (ஐ.டி.என்.டி.ஆர். 1990-99) என்ற முயற்சியின் தொடக்கத்தில் இருந்த பொறியியல் சார்ந்த பாதிப்பு குறைப்பு கொள்கைகள் என்ற அணுகுமுறையானது தயார்நிலையில் இருத்தல் என்பதற்கு முக்கியத்துவம் தந்தது. இது சமூகம் மற்றும் சமுதாய பொருளாதார அடிப்படையில் பாதிப்புக்கு உட்படுதல் அணுகுமுறையாக பின்பு மாறியது. உலக உச்சி மாநாட்டில் (1994) ஏற்றுக் கொள்ளப்பட்ட யோகோஹாமா உத்தி மற்றும் அதன் செயல்திட்டம் உலகத்திற்கு முக்கியமானதாகும். பேரிடர் குறைப்புக்கும் வளர்ச்சிக்குமான நெருங்கிய உள் உறவை இது அங்கீகரித்தது. ஐக்கியநாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாட்டையும் அஜென்டா 21ஐயும் சுட்டிக்காட்டி இந்த உள்உறவு வலியுறுத்தப்பட்டது. ஹையோகோ செயல்படுவதற்கான வரைவுத் திட்டத்தின் முன்னுரிமை 4 பற்றி மீளாய்வு செய்யப்பட்டது. இந்த முன்னுரிமை 4 என்பது "பேரிடர் ஆபத்து மற்றும் ஆபத்துக்கு ஆட்படுதலில் உள்ள உள்ளார்ந்த காரணங்களை எதிர்கொள்ளுதல்” என்பதாகும். பல நாடுகள் இந்த முன்னுரிமை 4ஐப் பூர்த்தி செய்யவில்லை என இந்த மீளாய்வு எடுத்துக்காட்டி உள்ளது. தாய்லாந்தின் பேரிடர் ஆபத்துக் காரணிகளைக் குறைத்தல் தொடர்பான ஆறாவது ஆசிய அமைச்சர்கள் கருத்தரங்கு 2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்களில் ஹையோகோ செயல்படுவதற்தான வரைவுத் திட்டம் வகுக்கப்பட்டதற்கு பின் காலகட்டத்துக்கான ஆசிய பசிபிக் உள்ளீடு ஆவணம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்த ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த ஆவணம் மற்றும் பேங்க்காக் பிரகடனம் இரண்டிலும் பேரிடர் ஆபத்துக் காரணிகளை குறைக்கும் செயலுடன் பருவநிலை மாறுதலை தகவமைத்துக் கொள்ளுதலும் இணைக்கப்பட வேண்டும் என்பதும் ஆபத்துக் காரணிகளை மட்டுமின்றி ஆபத்துக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பு நிலைகளும் ஆபத்துக் காரணி மேலாண்மைத் திறன்களும் பருவநிலை மாறுதலால் பாதிக்கப்படுவதை அங்கீகரித்து இணைக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப் பட்டது. இந்த ஒருங்கிணைப்புக்கான தேவையும் அழைப்பும் உலக உச்சி மாநாடு 2015ன் விளைவாக உருவான பேரிடர் ஆபத்துக் காரணி குறைப்புக்கான சென்டாய் செயல்திட்ட வரைவு (2015-30) என்பதில் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.

பருவநிலை சார்ந்த பேரிடர்களுக்கு ஆட்படக் கூடிய வாய்ப்பு ஆசிய பிராந்தியத்தில் அதிகமாக உள்ளன. மும்பை நகரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மற்றும் அதைத் தொடர்ந்து டாக்கா, இஸ்லாமாபாத், சூரத், போபால், பெங்களூர், கொல்கத்தா, தில்லி மற்றும் ஹைதராபாத் முதலான ஆசிய நகரங்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளும் பருவநிலை மாறுதலின் விளைவுகள் குறித்த தீவிர பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்தன. இந்தியாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்கள், இந்தப் பகுதியின் ஏனைய நாடுகள், ஃபைலின் மற்றும் ஹரட்ஹட் போன்ற தீவுகள் ஆகியவற்றில் புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரித்து வருகின்றன. உத்தர கண்ட் மற்றும் காஷ்மீரில் ஏற்படும் வெள்ளப் பெருக்குகள், மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் நிலவும் தாங்க முடியாத வெப்பஅலைகள், ஆண்டுக்கு ஆண்டு வறட்சி பாதிக்கும் பகுதிகள் அதிகரித்து வருதல் போன்றவை விஞ்ஞானிகளையும் கொள்கை உருவாக்குபவர்களையும் ஒன்றாக நெருங்கி இணைத்து நீடித்த மற்றும் பாதுகாப்பான வளர்ச்சி குறித்து பணியாற்ற நிர்ப்பந்தித்துள்ளன. வளர்ச்சி என்ற அம்சத்தில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நாடுகள்பல நிலைகளில் உள்ளன. எனவே அவை நிலம் மற்றும் பருவநிலை ஆகியவற்றின் தாக்கத்துக்கு ஆட்படும் வாய்ப்போடு தங்களது சமூக பொருளாதார மூலவளங்கள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. தாய்லாந்து மற்றும் மியான்மரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள் அந்த நாடுகளின் மக்கள் மீதும் பொதுச்சேவைகளுக்கான அடிப்படை வசதிகள் மீதும் உயிரினச் சூழலியல் அமைப்புச் சேவைகள் மீதும் ஏற்படுத்திய பாதிப்புகள் நீண்டகாலம் நீடிக்கும். இதனால் அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார நிலையும் பாதிப்புக்கு ஆட்பட்டு உள்ளன. 2015ல் நேபாளின் கோரக்கா நிலநடுக்கத்தின் துணைவிளைவுகளும் பிந்தைய அதிர்வுகளும் மலைச்சரிவுகளில் நிலச்சரிவுகளைத் தூண்டி விட்டன. பருவநிலை மாறுதலும் சுற்றுச்சூழல் சீர்கேடும் இந்த ஆபத்துக் காரணியை மேலும் முடுக்கிவிட்டன. பிராந்திய சீதோஷ்ண நிலை மற்றும் பருவநிலை அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களோடு சிக்கன்குனியா, டெங்கு போன்ற நோய்களின் தீடீர்ப்பரவலும் இணைத்துப் பார்க்கப்படுகின்றது.

பருவநிலை மாறுதலில் பேரிடர்களை தீவிரப்படுத்தும் முறை

பருவநிலை மாறுதல் குறித்த கொள்கை இடையீடுகள் பெரும்பாலும் பாதிப்புத் தணிப்பு என்பதை மையமாகவும் புவி அமைப்பியல் கூறுகளை அடிப்படையாகவும் கொண்டவை. ஆனால் இப்போது பாதிப்புக்கு ஆளாகக்கூடிய தன்மை என்பதை மையமாகக் கொண்ட அணுகுமுறையாகக் கவனம் மாறி உள்ளது. இந்த அணுகுமுறையை அரசுகளுக்கு இடையிலான பருவநிலை மாறுதலுக்கான குழு (IPCC) தனது "தீவிர நிகழ்வுகள் மற்றும் பேரிடர்கள் அபாயக் காரணிகள் கண்காணித்தல் என்பதில் இருந்து மேம்பட்ட பருவநிலை மாறுதல் தகவமைப்புக்கு கவனம் செலுத்தல், 2012" அறிக்கையில் முன்வைத்துள்ளது. பேரிடர் ஆபத்துக் காரணி குறைப்பு குறித்த சர்வதேச மதிப்பீட்டு அறிக்கை மாறிவரும் பருவநிலையில் ஆபத்துக் காரணிகளும் வறுமையும் 2009ன்படி, எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களை அதிகப்படுத்திவிடக் கூடிய முக்கிய அம்சமாக உயிரினச்சூழலியல் அமைப்பு சீர்கேடு அடைவது இருக்கும் என அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. உலகவங்கிக் குழுவினர் 2006ல் "பருவநிலை ஆபத்துக் காரணிகளை சமாளித்தல்: உலக வங்கிக்குழு செயல்பாடுகளோடு தகவமைப்பை ஒருங்கிணைத்தல்” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. தெற்காசியாவில் சுற்றுச்சூழல் மாறுதல்களினால் ஏற்படும் விளைவுகள் எனச் சிலவற்றை இந்த உலக வங்கிக்குழு அறிக்கையாக பட்டியல் இட்டுள்ளது. அந்த அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

 • வறண்ட மற்றும் ஒரளவு வறண்ட பிராந்தியங்கள் பலவற்றில் தண்ணிர் கிடைப்பது குறைவதோடு தண்ணிரின் தரத்திலும் குறைபாடு இருக்கும்.
 • பல பிராந்தியங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி அதிகரிக்கும்.
 • மலைப்பகுதி குடியிருப்புகளில் நீரோட்டங்கள் குறையும்.
 • நீர்மூலம் மின் உற்பத்தி, பயோமாஸ் உற்பத்தி குறையும்.
 • மலேரியா, டெங்கு, காலரா போன்ற நீர்மூலம் பரவும் நோய்கள் பரவுவது அதிகரிக்கும்.
 • தீவிரமான சீதோஷ்ண நிலையால் ஏற்படும் சேதங்களும் மரணங்களும் அதிகரிக்கும்.
 • விவசாய உற்பத்தித் திறன் குறையும், மீன்வளம மீது பாதிப்பு ஏற்படும்.
 • பல உயிரினச் சூழலியல் அமைப்புகள் மீது பாதகமான தாக்கங்கள் ஏற்படும்.

பேரிடர்கள் மீதான பருவநிலை மாறுதலின் தாக்கம் தனிப்பட்ட அம்சமாகப் பார்க்கப்படத் தேவையில்லை. மாறாக நிலப் பயன்பாட்டில் மாற்றம், இயற்கை மூலவளச் சீரழிவு போன்ற இதர சுற்றுச்சூழல் மாற்றங்களோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். திட்டமிடாத அல்லது மோசமாகத் திட்டமிடப்பட்ட நகரமயமாதல், தொழிலகக் கூட்டமைப்புகள், பாதிக்கும் பகுதிகள், அரிப்பு ஏற்படும் சரிவுகள், மலைச் சரிவுகளில் வடிகால்கள் போன்ற ஆபத்தான பகுதிகளை ஆக்கிரமித்தல், விவசாயத்தில் ஒற்றைப் பயிர் சாகுபடி முறை, இதர விவசாய முறைகள், பாரம்பரியமான பாதுகாப்பான வீடுகள் என்பதில் இருந்து பாதுகாப்பற்ற வீட்டமைப்புக்கு மாறியது, தொழில்நுட்ப பயன்பாடுகளின் போதாமை ஆகிய ஆபத்துக் காரணிகள் பேரிடர்களாக மாறுகின்றன.

பேரிடர் ஆபத்துக் காரணி மேலாண்மை மூலம் பருவநிலை மாறுதலை தகவமைத்தல்

பேரிடர் ஆபத்துக் காரணி மேலாண்மை என்பது மூன்று அடுக்கு குறிக்கோள்களை முறைமையாக ஒருங்கிணைத்த செயல் எனப் புரிந்து கொள்வது அவசியமாகும். அந்த மூன்று குறிக்கோள்கள் எவையென்றால்:

 1. ஆபத்துகளை எதிர்கொள்ளுதல்
 2. பாதிப்புக்கு ஆட்படுவதைக் குறைத்தல்
 3. திறன்களை அதிகப்படுத்துதல் (முன் தடுப்பு பாதிப்பைக் குறைத்தல் மற்றும் ஆபத்துக்கால தயார்நிலை ஆகியவற்றில் திறன்களை அதிகப்படுத்துதல்) ஆகும்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரக்கூடிய வெள்ளப்பெருக்கு காலகட்டமானது இப்போது பத்து ஆண்டுகளிலேயே மீண்டும் வருதல்; கடல் மட்டத்தின் உயரம் அதிகமாகும் செயலானது கடலோர புயல்களின் தீவிரத்தை அதிகரித்தல் மற்றும் அவை அடிக்கடி நிகழ்தல்; வலிமைமிக்க சூறாவளிகள்; அழிவை ஏற்படுத்தும் சுழல்காற்றின் தீவிரமும் எண்ணிக்கையும் அதிகரித்தல்; வறட்சியினால் ஏற்படும் காட்டுத்தீ பரவுதல்; பழக்கமில்லாத சீதோஷ்ண நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் உள்ளாதல் போன்றவற்றால் நிலைமை மோசமாகின்றது. மக்கள், சொத்து, உயிரினச் சூழலியல் அமைப்புகள், மூலவளங்கள் மற்றும் கலாச்சார, பொருளாதார, சமூக நடவடிக்கைகள் ஆகியன தீங்கு ஏற்படுத்தும் நிலைமைக்கு அல்லது நிகழ்வுக்கு எந்த அளவிற்கு உள்ளாகின்றன என்பதே ”ஆபத்துக்கு உள்ளாதல்” என்பதன் வரையறையாகும். அதாவது ஆபத்தான சுற்றுச்சூழலின் விளைவுகளை எதிர்கொள்ள முடியாத தன்மையை இது சுட்டிக்காடடுகிறது எனக் கூறலாம். தற்காப்பு நடவடிக்கைகள் குறைவது, அல்லது போதாமல் இருப்பதை உள்ளடக்கிய ஒரு காலச் சட்டகமே "ஆபத்துக்கு ஆட்படும் காலகட்டம்” (Window of Vulnerability - WOV) எனப்படுகிறது.

பாதிப்பைக் குறைத்தல் என்பது அழுத்தம் ஏற்படாமல் முன்தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது முதல் தாங்குதிறன் வரையிலான பல தரப்பட்ட நடவடிக்கைகளை குறிக்கும். மேலும் இது சமூகப் பொருளாதாரத்தின் சுற்றுச்சூழல் கூறு ஆபத்துக்கு உள்ளானால் அதை செய்தல் என்பதாகவும் உள்ளது. எனவே பாதிப்பைக் குறைத்தல் என்பது பேரிடர் மேலாண்மைப் பின்னணியில் இருப்பதைவிட பருவநிலை மாறுதலில் வித்தியாசமான கருத்தாக்கத்தில் கையாளப்படுகிறது. தகவமைத்தல் என்பது விளைவுகளைச் சமாளித்தல் என்பதாகும். “பருவநிலை மாறுதல் தாக்கங்களுக்கு ஏற்ப தகவமைத்தல்” என்பது ஒரு மாயாஜால கருத்தாகும். இது பேரிடர் மேலாண்மையில் புதிய சிந்தனை முறையாகும். "முன்தடுப்பு பாதிப்பைக் குறைத்தல் தயார்நிலையில் இருத்தல்" ஆகியவை ஒன்றோடு ஒன்று சேர்ந்த கருத்தாக்கமாக இது உள்ளது. பாதிப்பை ஏற்படுத்தும் சிக்கலான நிகழ்வை தாக்குப் பிடிக்கக் கூடிய திறன்களின் தொகுப்பை உருவாக்குவதுதான் இதன் நோக்கமாகும்.

"பேரிடர் பாதிப்பைக் குறைத்தல்” என்பது ஆபத்துக் காரணிகளைக் குறைத்தல், ஒரு தீங்கின் தாக்கம் அல்லது விளைவுகளைக் குறைத்தல் அல்லது அச்சுறுத்தும் பேரிடர் சூழலின் தாக்கத்தைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு மனிதர் எடுக்கும் நடவடிக்கைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. பல்வேறுபட்ட “அமைப்புக்குட்பட்ட” மற்றும் "அமைப்புக்கு உட்படாத" இடையீட்டுச் செயல்கள் "பேரிடர் பாதிப்பைக் குறைத்தலில்” அடங்கும். மாவட்ட மற்றும் உள்ளூர் நிலையில் தகவமைப்புத் திட்டங்களை உருவாக்கும்போது, திட்டமிடுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதலின் அனைத்து நிலைகளிலும் பேரிடர் ஆபத்துக் காரணிகளின் பாதிப்பைக் குறைத்தல் என்பதற்கு வெளிப்படையான முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

பேரிடர் ஆபத்து மற்றும் அதன் மேலாண்மை குறித்து பேசும்போது பொதுவாக நான்கு முதன்மை அணுகுமுறைகள் உள்ளன.

அவை:

 • சமுதாயத்தை மையமாகக் கொண்ட தயார்நிலை அணுகுமுறை
 • நிகழ்வைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பின் அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைவு
 • பேரிடர் ஆபத்துக் காரணி மேலாண் மைக்கான சுற்றுச்சூழல் சார்ந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை

சட்டம் மற்றும் நிறுவனச் சட்டக வரைவு

முன்தடுப்பு, பாதிப்பைத் தணிவித்தல், தயார்நிலை, மறுவாழ்வு, மறுகட்டுமானம், மீட்டெடுத்தல் முதலான கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக பருவநிலை மாறுதல் தொடர்பான பேரிடர் ஆபத்துக்காரணிகள் மேலாண்மை உள்ளது. இது கீழ்வருவனவற்றையும் தருகின்றது:

 • திறம்பட திட்டமிடல், சிறப்பாக செயல் படுத்துதல் மற்றும் நிதி ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப சட்டம், நிறுவன சட்டக வரைவை நிர்மாணித்தல்
 • திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்கள் மூலமாக வளர்ச்சி, பேரிடர் ஆபத்துக் காரணிகள் குறைப்பு நடவடிக்கை முறைகளில் பலதுறை சார்ந்த பேரிடர் ஆபத்துக் காரணி மேலாண்மையை சேர்த்தல்
 • பேரிடர் ஆபத்துக்குறைப்பு கொள்கைகள் மற்றும் திட்டமிடலை முழுமையான பங்கேற்பு முறையிலான, அனைவரையும் உள்ளடக்கியதாக, நீடித்து நிலைக்கும் வகையில் ஒருங்கிணைத்தல்

பருவநிலை மாறுதல் தகவமைப்பு மற்றும் பேரிடர் ஆபத்துக் காரணிகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முறை மூலமாக நீடித்த வளர்ச்சிக்கான குறிக்கோள்களை நடைமுறைப் படுத்துவதில் உள்ள தற்கால இடைவெளிகள், சவால்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கவனத்தில் கொண்டு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மியான்மர், கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வங்கதேசம் முதலான சிறிய நாடுகள் பாராட்டும்படியான தொடக்க நடவடிக்கைகளையும் புத்தாக்கச் செயல்பாடுகளையும் மேற்கொண்டுள்ளன. பல துறைகள், அரசாள்கை, நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக பேரிடர் ஆபத்துக் குறைப்பு பிரச்சனைகளும் இடையீட்டு நடவடிக்கைகளும் உள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் அதன் கூறுகளான இயற்கை மூலவளங்கள் தொடர்பான நெறி முறைப்படுத்தும் விதிகள்; செயல்முறைகள் மற்றும் திட்டமிடுதல்; சுற்றுச்சூழல் சேவைகள் ஆகியவற்றின் முதன்மை நோக்கம் என்பது சுற்றுச்சூழல் தரம் மற்றும் மூலவள மேலாண்மையே ஆகும்.

பல துறைகளுக்கான நெறிமுறைப்படுத்தும் விதிகள் மற்றும் சட்டங்கள் ஆகியன கீழ் வரும் மூன்று வகையான நீடித்த நிலையான மனிதவளக் கூறுகளோடு சேர்ந்து பேரிடர் ஆபத்து மேலாண்மைக்கு பொருந்தி வருவனவாக உள்ளன.

அவை

 1. உள்கட்டமைப்பு வசதி மற்றும் தொழிற்சாலை
 2. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை மூல வளங்கள்
 3. சமூக நலம் மற்றும் கலாச்சாரச் சேவைகள் ஆகும்.

பேரிடரைக் கவனத்தில் கொண்ட தகவமைப்பு முயற்சிகள் - சில உதாரணங்கள்

மாறிவரும் பருவநிலை மற்றும் அதன் விளைவுகளின் பின்னணியில் பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதிலும், ஆசிய பசிபிக் நாடுகளிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பேரிடர் சட்டங்கள் பேரிடர் மேலாண்மையில் "சுற்றுச்சூழல்” என்பதை முதன்மைக் கூறாக தெளிவாக அங்கீகரித்துள்ளன. இதன் மூலம் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு வழி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன்படி "ஏதாவது ஒரு பகுதியில் இயற்கை அல்லது மனிதக் காரணங்களினால் அல்லது விபத்தால் சீர்கேடு ஏற்படும். இவற்றின் இயல்பு அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மரணமே பேரிடர் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மைக்கான தேசிய செயல் திட்டம்

பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன்படி தொடர்புடைய அமைச்சகங்கள்/ஏஜென்சிகள், மாநில அரசுகள் ஆகியன தரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு முழுமையான முறைமையில் இது தயாரிக்கப்பட வேண்டும். 2013ல் நிகழ்ந்த உத்தரகண்ட் பேரிடர் சம்பவத்திற்குப் பிறகு, தேசிய நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின்படி தேசிய திட்டத்தை உருவாக்க விரைந்து பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. ஆபத்துக் காரணி மற்றும் ஆபத்துக்கு ஆட்படும் தன்மை, பாதிப்புகளை குறைக்கும் திட்டம், எதிர்வினை ஆற்றும் திட்டம், மனிதவள ஆற்றல் திறன் வளர்த்தல் திட்டம் போன்றவை இதன் கூறுகளாகும்.

தேசிய மனிதவள ஆற்றல் திட்டம்

பலதுறைகளிலும் பல்வேறுபட்ட நிலைகளிலும் உள்ள திறன் வளர்ப்பு நிறுவனங்கள் மற்றும் நடவடிக்கைகளின் நிலைமையை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் திட்டம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாக்கும் போது பருவநிலை ஆபத்துக் காரணிகளை எதிர்கொள்வதில் மூலவளங்களை மேப்பிங் செய்வது என்பது முக்கிய செயலாக இருக்கிறது. பல்வேறு ஏஜென்சிகள், நிறுவனங்கள், பங்குதாரர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை இந்தத் திட்டம் வழங்குகிறது.

பேரிடர் மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகள்

வெள்ளப்பெருக்கு, நகரப்பகுதியில் ஏற்படும் வெள்ளங்கள், புயல், வறட்சி, நிலச்சரிவுகள் முதலான பருவநிலை சார்ந்த பேரிடர்களுக்கான வழிகாட்டி நெறி முறைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கித் தந்துள்ளது. இதன் உள் வுரத்துகள் பருவநிலை மாறுதலின் தாக்கங்களை எதிர்கொள்ளும் தகவமைப்பு வாய்ப்புகளை தருகின்றன.

முன்னறிதல் மற்றும் ஆரம்பநிலையிலேயே எச்சரிக்கை செய்தல்

பேரிடர்களைப் பொறுத்தவரையில் திறமையான மற்றும் சரியான நேரத்தில் பதில்வினை ஆற்றுவதற்கு முக்கிய தேவையாக இருப்பது ஆரம்பநிலை எச்சரிக்கை முறையை மேம்படுத்துவதுவே ஆகும். புயல் வருவதை முன்கூட்டியே உணர்ந்து முன்னெச்சரிக்கை விடுக்கும் செயல் இப்போது அபிவிருத்தி அடைந்துள்ளது. ஃபாய்லின் புயல் மற்றும் ஹ"த்ஹித் புயல் ஆகியவற்றை சமாளித்ததில் இந்த முன்னெச்சரிக்கை உதவி இருந்ததை கண்கூடாகக் கண்டோம். கண்காணிப்பு மற்றும் முன்னறிந்து அறிவித்தல் ஆகிய செயல்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கு தனது அலுவலகங்களை இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை விரைவுபடுத்தி உள்ளது.

மாவட்ட திட்டங்களுடன் தகவமைப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்:

உத்திரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் பருவநிலை மீட்பு மற்றும் பேரிடர் ஆபத்து ஆகியவற்றை மையப்படுத்தி உருவாக்கப்படும் மாவட்ட அளவிலான துறைசார் திட்டங்கள் பயன் அளிக்கும் வகையில் உள்ளன. நல்ல விளைவுகளுக்கு உதாரணமாக இந்த தொடக்க முயற்சி அமைந்துள்ளது. இந்தச் செயல்முறை "பகிர்ந்து கற்றல்” என அழைக்கப்படுகின்றது. இது எதிர்கால பருவநிலை கணக்கீடுகளைப் பயன்படுத்திக் கொண்டு மாவட்டத்தின் பருவநிலை மீட்பு பேரிடர் மேலாண்மைத் திட்டத்திற்கு வழிவகுத்தது.

மேலாண்மைத் திட்டங்கள்

கடலோரப் பகுதிகளின் குறிப்பிட்ட சவால்கள் மற்றும் பருவநிலை மாறுதல், பேரிடர் ஆபத்துகளின் தாக்கத்தை உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசத்தில் முன்னோடித் திட்டங்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஏற்படும் விளைவுகள் பருவநிலை மாறுதலுக்கான மாநில செயல்திட்டம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டத்தோடு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பங்கேற்பு செயல்முறை மூலம் பருவநிலை மீட்பு கிராமத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்கள், செயல் திட்டங்களோடு பருவநிலை மாறுதல் மற்றும் பேரிடர் ஆபத்துக் குறைப்பை ஒருங்கிணைத்தல்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்டம், ஒருங்கிணைந்த குடிநீர் அபிவிருத்தித் திட்ம், ஜவகர்லால் நேரு நகரப் புதுப்பித்தல் இயக்கம், பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டம் முதலான அரசின் பல்வேறு திட்டங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அவற்றுடன் பருவநிலை மாற்றம் தொடர்பான பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அரசு, சமுதாயம், நிறுவனம், அரசு தனியார் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் பல களஅளவிலான இடையீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பருவநிலை மாறுதல் தகவமைப்பு மற்றும் பேரிடர் ஆபத்து மேலாண்மை போன்ற இணை பயன்கள் இதன்மூலம் கிடைத்துள்ளன.

இத்தகைய நடைமுறைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆவணப்படுத்தினால் அதன் அனுபவமானது கொள்கைகளை ஏற்படுத்துவதிலும் திட்டங்களை ஏற்படுத்துவதிலும் உதவியாக இருக்கும். 27 ஜனவரி 2014ல் பேரிடர்களை எதிர்த்து நிற்கும் வீட்டுவசதி குறித்த தில்லி பிரகடனம் முன்மொழியப் பட்டது. வெள்ளத்தை சமாளித்து நிற்கும் வகையில் வீடுகள், குறிப்பிட்ட கட்டிட முறைமைகளில்தான் கட்டப்பட வேண்டும் என இந்தப் பிரகடனம் கூறியது. பருவநிலை மாறுதல் குறித்த புதிய ஒப்பந்தம், புதிய நிலைத்த வளர்ச்சிக்கான குறிக்கோள்கள் ஆகிய குறிப்பிடத்தக்க அடையாளங்களுடன் 2015ஆம் வருடம் உள்ளது. இவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்த மேம்பட்ட திறன்கள், தேவைக்கேற்ற மற்றும் பரிசோதிக்கப்பட்ட உபகரணங்கள், மாவட்டம் முதல் கிராம நிலை வரையிலான கொள்கை திட்டமிடல் செயல்முறை தேவைப்படுகின்றன. நீடித்த நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தேவையான சமூக, தொழில் நிபுணத்துவ சூழலை உருவாக்க உள்ளார்ந்து ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

டாக்டர் அனில் குமார் குப்தா, துறைத் தலைவர், கொள்கை திட்டமிடல் பிரிவு, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், புதுதில்லி.© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate