பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / தட்பவெப்ப மாற்றம் / பருவநிலை மாற்றமும் நிலைபெறு வளர்ச்சியும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பருவநிலை மாற்றமும் நிலைபெறு வளர்ச்சியும்

பருவநிலை மாற்றமும் நிலைபெறு வளர்ச்சியும் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

உலகின் ஒரு பகுதியிலோ அல்லது ஒரு சில பகுதிகளிலோ அல்லது உலகம் முழுவதுமோ தட்ப-வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் கால அளவிலும், பரப்பளவிலும் வழக்கத்தை விட அதிகமாக மாறுபடுவதை பருவநிலை மாற்றம் என்கிறோம். பூமிப்பந்தில் வாழும் பூமியின் சுழற்சி மாற்றத்தினாலும், பெருங்கடல்களின் எதிர் வினைகளாலும், சூரிய மண்டலத்தினால் பூமியில் ஏற்படும் மாற்றத்தாலும், பணி உருகுவதாலும், எரிமலைச் சீற்றத்தினாலும், பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. இவை தவிர, முக்கியமாகக் காடுகளை அழித்தல், கழிவுக் குப்பைகளை எரித்தல், பெட்ரோலிய எரிபொருள்களை மிகுதியாக பயன்படுத்துதல், ஏர்கண்டிஷனர், குளிர்சாதனப்பெட்டி, குளிர்ப்பதன கிடங்கு, தொழிலக எந்திரங்கள் போன்ற நவீன கருவிகளுக்காக அளவுக்கதிகமாக மின் சக்தியைப் பயன்படுத்துதல் போன்ற மனிதனின் செயல்பாடுகளாலும் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

புவி வெப்பமாதல்’ என்பது மனிதனின் செயல்பாடுகளால் நிலப்பரப்பின் வெப்ப நிலை அதிகரிப்பதைக் குறிக்கும். பருவநிலை மாற்றம் என்பது புவி வெப்ப மாதல் உள்ளிட்ட ஏனைய தட்ப – வெப்ப மாறுபாடுகளையும் அவற்றால் நிகழும் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தையும் குறிக்கும் விரிந்த பொருளுடையது. பருவநிலை மாற்றத்தைத் தூண்டிவிடுவதாகப் பல அகவயக் காரணிகளும் புறவயக் காரணிகளும் இருப்பதை அறிவியலாளர்கள் பலரும் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

கரியமில வாயுக்களை வெளியேற்றும் நாடுகளின் வகைகள்

உலக அளவில் கரியமில வாயுக்களை வெளியேற்றும் நாடுகளை மூன்று வகையாகப் வகுத்துள்ளனர்.

1. சராசரியாக ஒவ்வொரு குடிமகனுக்கு 2.3 டன் கரியமில வாயுவை வெளியேற்றும் சராசரி தனி நபர் வருமானம் 1768 டாலர் கொண்ட 60 நாடுகள்.

2. ஒவ்வொருவரும் சராசரியாக 4.5 டன் வரை கரியமில வாயு வெளியேற்றும் 3058 டாலர் சராசரி தனி நபர் வருவாய் கொண்ட 74 நாடுகள்.

3. சராசரியாக ஒவ்வொருவருக்கும் 10 டன்னுக்கும் மேல் கரியமில வாயுவை வெளியேற்றும் சராசரி தனிநபர் வருவாய் 33700 கொண்ட 13 நாடுகள்.

நெருக்கடிகள்

தற்பொது உலகச் சூழலியல் இருபெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

ஒன்று பருவநிலை மாற்றம் மற்றொன்று பல்லுயிரின அழிவு. மேற்கு ஐரோப்பாவில் தொழில்புரட்சி ஏற்பட்டதில் இருந்து புவிப்பரப்பின் வெப்ப நிலை பெரிதும் உயர்ந்துவிட்டது. இனியும் வெப்பநிலையைத் தணிக்க நாம் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காவிட்டால், 2100ஆம் ஆண்டில் பூமியின் சராசரி வெப்ப நிலை இப்போதுள்ளதைவிட இன்னும் நான்கு டிகிரி அதிகரித்து விடும். இந்த ஆண்டிலேயே இந்தியாவின் மூன்றில் இரண்டு பகுதியில் அதீத பருவநிலை மாற்றங்களைக் கொண்டு முகமையான உணவு வேளாண் அமைப்பு, தொழிற்சாலைகளின் தேவைக்காக உணவுப் பயிர்களை விடுத்து வாணிகப் பயிர்களைப் பயிரிட்ட வழக்கமே 70 முதல் 90 சதவீத காடுகள் அழிப்புக்குக் காரணம் என்று கூறியுள்ளது. மேலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படுத்தப்படும் பசுங்குடில் வாயுவில் 44 முதல் 57 சதவீதம் வரை உணவுப் பதப்படுத்துதல் மற்றும் சேமிப்புத்துறையால் வெளியாகிறது என்று வேறொரு அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

நம் நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 68 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலம் கிடைக்கின்றன என்பது கசப்பான உண்மை. அவற்றில் பெரும்பாலும் நிலக்கரியும், ஒரளவுக்கு எரிவாயும், கச்சா எண்ணெயும் பயன்படுத்துப்படுகின்றன. போக்குவரத்து வாகனங்களைப் போலவே, பெருமளவு கரியமில வாயுவை வெளிப்படுத்துபவை இந்த அனல் மின் நிலையங்கள். மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்த அனல்மின் நிலையங்கள் மிக அதிக அளவில் மகாராஷ்ட்ரத்திலும் (28, 294 மெகாவட்), குஜராத்திலும் (23160 மெகாவாட்) சத்தீஷ்கரிலும் (13234 மெகாவாட்) உ.பி.யிலும் (12228 மெகாவாட்) தமிழ்நாட்டிலும் (1513 மெகாவாட்) ம.பி.யிலும் (141 மெகாவாட்) ராஜஸ்தானிலும் (10226 மெகாவாட்) உள்ளன.

கணிப்புகள்

இந்தப் பின்னணியில், பருவ நிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றி சர்வதேச அரசுகளிடையேயான குழுவின் அறிக்கைகளின்படி கீழ்க்காணும் போக்குகள் நிலவுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

 1. மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குத் தற்போது பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் மனிதகுலத்திற்கும் இயற்கை முறைக்கும் பெருங்கேடாக முடியும்.
 2. கரியமில வாயுவை கடல்பரப்புகள் உள்வாங்கிக் கொள்ளும் அளவு அதிகரித்துக் கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரித்துவிட்டது. 1882 முதல் 2012 வரையிலான காலத்தில் கடல் நீரின் வெப்பம் 0.85 டிகிரி உயர்ந்துவிட்டது. 1901 முதல் 2010 வரையிலான காலத்தில் கடல் மட்டம் 19 செ.மீ. உயர்ந்து விட்டது.
 3. 1961-1880ஆம் ஆண்டு இருந்த புவி வெப்ப அளவை விட இரண்டு டிகிரி செல்ஷியல் அளவுக்குள் புவி வெப்பம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதனைச் சாத்தியமாக்குவதற்காக, 1870ஆம் ஆண்டில் இருந்து வெளியாகியுள்ள கரியமில வாயுவின் அளவை 2900 Gt என்ற நிலையில் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் 2011ஆம் ஆண்டு வரையிலுமே சுமார் 1900 Gt என்ற நிலையில் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் 2011ஆம் ஆண்டு 1900 Gt அளவிற்குக் கரியமிலவாயுவை மனிதகுலம் வெளியேற்றிவிட்டது.
 4. . கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்குத் தற்போது உள்ள ஏற்பாடுகள் தவிரக் கூடுதலாக எதுவும் செய்யாத பட்சத்தில் 2100ஆம் ஆண்டில், மீட்டெடுக்கவே முடியாத மோசமான பேரழிவினையே மனிதகுலம் எதிர் கொள்ளும்.
 5. அடுத்த சில பத்தாண்டுகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தணிக்கும் வகையில் பலமுனை உத்திகள் வேண்டும். 2100ஆம் ஆண்டில், பசுங்குடில் வாயுவும், கரியமிலவாயுவும் வெளியேறலாகாது. இதனைச் செயல்படுத்தத் தொழில்நுட்ப, பொருளாதார, சமூக மாற்றங்கள் அவசியம்.
 6. 2001 - 2100 ஆண்டு காலகட்டத்தில், 1986-2005ஆம் ஆண்டுகால கட்டத்தை ஒப்பிடும்போது கடல்மட்டம் 26 செ.மீ முதல் 55 செ.மீ வரை உயர்ந்துவிடும். 21ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் உலகக் கடல்பரப்பில் 95% உயர்ந்துவிடும்.
 7. 2100ஆம் ஆண்டில், பசுங்குடில் வாயு வெளியேற்றத்தால் காற்றில் கரியமில வாயுவின் அளவு பத்து லட்சத்திற்கு 450 என்ற அளவில் (450 ppm) இருக்க வேண்டும். இதற்கென 2050 ஆண்டளவில், 2010 ஆண்டில் இருந்ததைவிடச் சுமார் 40 முதல் 70 சதவீதம் வரை, மனிதர்களால் வெளியேறும் பசுங்குடில் வாயுவின் அளவு குறைய வேண்டும்.

இவ்வாறாகக் கடந்த சில பதிற்றாண்டுகளாகவே பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளின் முடிவுகளை உணர்த்தும், விளைவுகளை அனுபவித்தும் வருகிறவர்கள், தீவிர நடவடிக்கைகளை வலியுறுத்துகின்றனர். நுகர்வு நாட்டம் கொண்டோரும், வளர்ச்சிவாதிகளும், எல்லா கட்சி அரசியல் தலைவர்களும் பருவ நிலை மாற்றத்தின் வேகத்தைத் தணிக்க உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

2007ஆம் ஆண்டு பாலித்தீவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு ஒப்பந்தப்படி வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளிடம் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நிர்பந்திப்பதைவிட, நாடுகள் தாமே முன்வந்து தமது கரியமிலவாயு வெளியேற்ற அளவை நிர்ணயிக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஏற்பாட்டின் படி எல்லா நாடுகளுமே காற்று மாசு, எரிசக்திப் பயன்பாடு போன்றவற்றில் அந்நாடுகளே சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்க அறிவியலாளர்களும், சூழல் - ஜனநாயக வாதிகளும் கருத்துரைத்தனர். இந்தியாவும் தேசப்பிதாவின் கூற்றான “இந்தப் பூமி நம் ஒவ்வொருவரின் தேவையைப் பூர்த்தி செய்யும்; ஆனால் ஒருவரது பேராசையைக் கூட நிறைவேற்ற முடியாது” என்பதை முன் மொழிந்தது. தேவை என்பதற்கும் பேராசை என்பதற்கும் தற்போது நிகழும் கருத்துப் பரிமாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இயற்கையோடு இயைந்த வாழ்வு முறை என்ற கூற்று வெறும் கூட்டாகவே இருக்கும் என்று சொல்வோர், இந்தியர்களில் சுமார் 60 சதவீதம் பேர் இன்னும் திறந்த வெளிகளையே கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும், உலகின் மிக மோசமான மாசுபட்ட நகரங்களில் ஒன்றாகப் புது தில்லி திகழ்கிறது என்றும் மும்பை நகரின் 60 சதவீத மக்கள் சுகாதாரமற்ற குடிசைப் பகுதிகளிலேதான் வாழ்கிறார்கள் என்றும், கிராம மக்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் சமையல் செய்வதற்கு இன்னும் விறகடுப்புகளையே பயன்படுத்துகின்றனர் என்றும், இந்தியாவின் எரிபொருள் தேவையில் சுமார் 75 சதவீதம் மரபார்ந்த மூலங்களில் இருந்தே பெறபடுகிறது என்றும், முப்பது கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேயே வாழ்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூன்று வாக்குறுதிகள்

2030ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றுவதென மூன்று விஷயங்களை இந்தியா அறிவித்துள்ளது.

 1. 2005 ஆண்டினை அடிப்படையாகக்கொண்டு கரியமில வாயு வெளியேற்றத்தை 33 முதல் 35 சதவீதம் வரை குறைப்பது.
 2. மொத்த மின்சார உற்பத்தியில் நிலக்கரி, எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உபயோகம் இல்லாத வகையிலான மின்னுற்பத்தியின் அளவை 40 சதவீதமாக அதிகரிப்பது.
 3. கூடுதலாக 250 கோடி டன் முதல் 30 கோடி டன் வரை கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் அளவிற்கு வனப்பரப்பினை அதிகரித்தல்.

எனினும் உலக நாடுகளை ஒப்பிடும்போது தனிநபர் சராசரி கரியமிலவாயு வெளியேற்றம் இந்தியாவில் மிகக்குறைவாகவே உள்ளது. உலகச் சராசரி 6.6 டன் என்ற அளவில் இருக்க, இந்தியனின் சராசரி கரியமிலவாயு வெளியேற்றம் 1.6 டன் மட்டுமே. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை 125 கோடியைத் தாண்டிவிட்டதால், மொத்த அளவு சுமார் 200 கோடி டன்னாக உள்ளது. எனினும் உலக நாடுகள் வெளியேற்றும் கரியமில வாயுவின் அளவில் இது 5.2 சதவீதம்தான்.

எனவே" தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு விருப்பம்' இந்தியாவில் ஏழை-பணக்காரர்களிடையே நிலவும் கரியமிலவாயு வெளியேற்ற வேறுபாட்டினைக் கருத்தில் கொள்ள வில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர். உதாரணமாக, பத்து லட்சம் டாலருக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்களில் உள்ளவர்களின் தனிநபர் சராசரி கரியமிலவாயு வெளியேற்றம் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ உள்ள தனிநபர் சராசரிக்கு இணையாக உள்ளது. இந்தியர்களில் ஏழையரில் 40 சதவீதம் பேர் வெளியேற்றும் கரியமிலவாயுவைவிட, பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேர் மட்டும் 17 மடங்கு அதிகமாக வெளியேற்றுகின்றனர். எனவே, வறுமை ஒழிப்பு, நிலைபெறு விவசாயம் மூலம் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம், உயிரி இனப் பல்வகைமையைப் பேணுதல், சுகாதார மேம்பாடு போன்றவற்றோடு கரியமிலவாயு வெளியேற்ற அளவுகளைத் தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்று சொல்லாமல், நிலக்கரி, எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றின் உபயோகம் இல்லாத மின்னுற்பத்தி என்பது அணுமின்னுற்பத்தியைத் தான் குறிக்கிறது என்றும் சுட்டிக் காட்டுகின்றனர். நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரம் சுத்தமானது என்பதும் சரியன்று. ஏனெனில் பெட்ரோலியப் பொருட்களை எரிக்கும் அனல்மின் நிலையங்களின் மாசு வெளியேற்றத்தைவிட 50 சதவீதம் அதிகமாகவும், எரிவாயு பயன்படும் அனல்மின் நிலையங்களைவிட 80 சதவீதம் அதிகமாகவும், நிலக்கரியைப் பயன்படுத்தும் மாசினை வெளியேற்றுகின்றன.

அனல்மின் நிலையங்கள் இன்னும் சொல்லப்போனால், உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும், நிலக்கரி இருப்பில் ஐந்தாம் இடத்திலும் உள்ள இந்தியா, 2011ஆம் ஆண்டில் தனது நிலக்கரி பயன்பாட்டில் பதினொரு சதவீதத்தை இறக்குமதி செய்துள்ளது. இவையாவும் பருவநிலை மாற்றத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையே. புதிய நிலப்பரப்புகளில் உருவாகுவதென்பதும் தோன்றுகிறது. ஒருபுறம் காடுகளை அழிவில் இருந்து நம்மால் தடுக்க முடியவில்லை. மறுபுறம், நகரவளர்ச்சி, தொழிற்சாலை அமைவு, மின்னுற்பத்தி, பாசன வசதி என்று பல காரணங்களுக்காக வேளாண் நிலங்களும், வன நிலங்களும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 1992 முதல் 2012ஆம் ஆண்டு வரை, வளர்ச்சித் திட்டங்களுக்காக ஆறு லட்சம் எக்டேர் வனப்பரப்பு அழிக்கப்பட்டதாக அறிவியல் - சூழலியல் மையத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

வளர்ச்சி நிலைபெறுவதற்கான வழிமுறைகள்

எனவே, பருவநிலை மாற்றத்தின் வேகத்தை மட்டுப்படுத்தவும், நமது வளர்ச்சி நிலைபெற்று நீடிக்கவும் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின் பற்றவும்.

 1. எல்லா வகையான புதுப்பிக்கத்தக்க மின்சக்தி வாய்ப்புகளையும் காற்றாலை, சூரியசக்தி, நீர் மின்சக்தி, புவிவெப்ப சக்தி, உயிரின வெப்ப சக்தி ஆகியவற்றையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். காற்றாலை மின்சக்தியைவிட சூரிய சக்தி உற்பத்திக்குச் செலவு குறைவு.
 2. அணுமின் சக்தி தற்போது செலவு குறைந்ததாகத் தோன்றினாலும், நீண்ட கால நோக்கில் அது சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பானதன்று. எனவே, அணு மின் சக்தியைத் தவிர்க்கலாம்.
 3. மின்சக்திப் பயன்பாட்டின் விளைவை அதிகரிக்க அரசு - தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படவேண்டும். மத்திய மின்திறன் அமைப்பும், மாநில புதுப்பிக்கும் எரிபொருள் வளர்ச்சி முகமைகளும் இவ்விஷயத்தில் முனைந்து செயல்பட வேண்டும்.
 4. புதுப்பிக்கத்தக்க, தூய்மையான மின்னுற்பத்தியில் அரசு-தனியார் முதலீடுகள் பெருகி, இத்துறை மின்னுற்பத்தி அளவு பெருக வேண்டும். இதன்மூலம் அதிகப்படியான வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
 5. பருவநிலை மாற்றத்தின் வேகத்தைத் தணிக்க எல்லா மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் முழுமையான செயல்திட்டங்களை அறிவிக்க வேண்டும். இதுவரை 4 மாநிலங்கள் இதனைச் செய்யவில்லை. எனினும் அறிவிக்கப்பட்ட 31 திட்டங்களில், 20 திட்டங்கள் முறையாக இருப்பதாக பருவநிலை மாற்றத்தை நெறிப்படுத்தும் தேசியக்குழு அறிவித்துள்ளது. மாநில அரசுகள் அறிவித்துள்ள செயல்திட்டங்களுக்கான உத்தேச செலவுத் தொகை ரூ. 1,33,691 கோடி. இத்திட்டங்களின் செயல்பாடுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படைத் தன்மை பேணப் படவேண்டும்.
 6. க்யோட்டா ஒப்பந்தப்படி, கரியமிலவாயு / பசுங்குடில் வாயு வெளியேற்ற அளவீடுகளை வாங்கி விற்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2003 முதல் 2014 வரை உலக அளவில் சமர்ப்பிக்கப்பட்ட 7589 திட்டங்களில் இந்தியாவில் இருந்து 1541 திட்டங்கள் அனுப்பப்பட்டன. அவற்றின்மூலம் இந்தியத் திட்டங்களுக்குக் கிடைத்த சான்றளிக்கப்பட்ட வெளியீட்டுக் குறைப்புகள் 19.10 கோடியாகும். ஆனால், இரண்டாவது சுற்றில் இந்தியாவில் இருந்து 307 திட்டங்கள் மட்டுமே அனுப்பப்பட்டன. எனவே இந்தப்பிரிவில் மேலும் அதிக முயற்சிகள் தேவை.
 7. வேளாண்மை, நீர்வளம், வனவளம் போன்றவற்றில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பெரும் பாதிப்புகளை எதிர் கொள்ளவும், அத்துறைகளுக்கு ஆதரவான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் ரூ.100 கோடியில், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் தேசிய தகவலமைப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியா எதிர்கொள்ளும் பருவநிலை மாற்றச் சவால்களை எதிர்கொள்ள இத்தொகை போதாது.

முடிவுரை

நிறைவாக, முன்னூறாண்டுகளுக்கு மேலான காலனியாதிக்க சக்திகளால் வளர்ந்த நாடுகள் இழைத்த வரலாற்றுப் பிழைகளால் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தைத் தணிக்கவும், அதன் வேகத்தை மட்டுப்படுத்தவும் ஒரளவுக்கு மட்டுமே நாம் பொருப்பேற்கலாம் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், மக்கள் தொகையில் உலகில் இரண்டாமிடத்தில் இருக்கும் நாம் பல நுட்பங்களை கண்டறிந்து நம் பங்கினை நிச்சயம் ஆற்றுவோம்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

டாக்டர் சுபாஷ் சர்மா, கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர், மத்திய ஒலிபரப்பு அமைச்சகம், புதுதில்லி.

2.63636363636
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top