பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திட கழிவுகளின் வகைகள்

திட கழிவுகளின் வகைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வீட்டுக் கழிவுகள், நகரக் கழிவுகள், வணிகக் கழிவுகள், குப்பைகள், கழிவுக் கப்பிகள், கட்டிடக் கழிவுகள், சாம்பல் கழிவுகள், தொழிற் கழிவுகள், அபாயகரக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் சாக்கடைக் கழிவுகள்.

வீட்டுக் கழிவுகள்

பொதுவாக இவை சமைத்தல், சுத்தம் செய்தல், பழுது பார்த்தல், பழைய துணி, பழைய புத்தகம், செய்தித்தாள், பழைய தட்டுமுட்டு சாமான்கள் போன்றவைகளால் உண்டாக்கப்படுகிறது.

வணிகக் கழிவுகள்

இக்கழிவுகள் அலுவலகங்கள், மொத்த விற்பனைக் கூடங்கள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், வணிக வளாககங்கள், பண்டக காப்பகங்கள் (குடோன்) மற்ற வணிக துறை சார்ந்த பிரிவுகள் மூலம் வெவ்வேறு கழிவுப் பொருட்களாக வெளியாகின்றன.

நிறுவனக் கழிவுகள்

குப்பைகள், கழிவுக் கப்பிகள் மற்றும் அபாயகரக் கழிவுகள் போன்றவை பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவைகள் மூலம் வெளியாகின்றன.

நகரக் கழிவுகள்

இவை தெருக் குப்பைகள், இறந்த உயிரினங்கள், வியாபாரக் கழிவுகள், பயன்படுத்தப் படாத வாகனங்கள், நகரத்தை உள்ளடக்கிய வீட்டுக் கழிவுகள், நிறுவனங்கள் மற்றும் வியாபார கழிவுகள் போன்றனவாகும்.

மட்கும் குப்பைகள்

விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றின் மூலம் பெறப்படும் அனைத்தும் மட்கும் குப்பைகளாகும்.

சாம்பல் கழிவு

வீடுகளிலும், தொழிற் கூடங்களிலும், எரிக்கும் மரம் மற்றும் நிலக்கரி போன்றவற்றால் ஏற்படும் சாம்பல்களும், செங்கல், உலோகம் மற்றும் கண்ணாடி தொழிற்சாலைகளின் மூலம் பெறப்படும் சாம்பல் கழிவுகளும் குறிப்பிடத்தக்க கழிவுகளாகும்.

கழிவுக் கப்பிகள்

வீடு, வணிகவியல் நிறுவனங்கள், போன்ற இடங்களில் உருவாக்கப்படும் குப்பைகளும், சாம்பலும் அல்லாத திட நிலையில் உள்ள மக்காத கழிவுகளே கழிவுக் கப்பிகள் எனப்படும்.

பெரிய அளவிலான கழிவுகள்

வீட்டு உபயோகப் பொருட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு ஒட்டு மொத்தமாக தூக்கிய எறியப்பட்டு உடனடியாக பெரிய அளவில் கழிவுகள் உண்டாக்கப் படுகின்றன.  குறிப்பாக வீட்டுச் சாமான்கள், வாகன உதிரிப் பாகங்கள், மரம், நவீன குளிர்சாதன மற்றும் சலவை இயந்திரங்கள், போன்றவற்றை குறிப்பிடலாம்.

தெருக் கழிவுகள்

தெருக்களிலும் அதை ஒட்டியுள்ள நடைபாதை, சந்து மற்றும் பூங்காக்களிலும் இலை, தூசி, பிளாஸ்டிக், காகிதம், அட்டைகள் மற்றும் இதர மரப் பொருட்கள் தெருக்களை அசுத்தப்படுத்துகின்றன.

இறந்த விலங்கு கழிவுகள்

விலங்கினங்கள் இயற்கையாகவோ அல்லது விபத்திலோ மரணமடைவதும்,  இறைச்சிக் கூடங்களில் கழிவுகள் வெளியேற்றப்படுவதும் பொது இடங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள்

இந்தியாவில் கட்டுமானத் தொழிற்சாலைகளினால் ஓர் ஆண்டிற்கு 10 முதல் 12 மில்லியன் டன் கழிவுகள் உண்டாகின்றன. சிமென்ட், செங்கல், கம்பிகள், கற்கள், மரம், பிளாஸ்டிக், மற்றும் இரும்பு குழாய்கள் போன்ற முக்கிய கட்டுமான  பொருட்கள் மூலம் உண்டாகும் கழிவுகளில் 50% கூட மறுசுழற்சி செய்வதில்லை.  மேலும் இந்திய கட்டுமான தொழிற்சாலைகளில் 70% மறுசுழற்சி பற்றிய தொழில்நுட்பங்களை அறிந்திருக்கவில்லை.

தொழிற்சாலை கழிவுகள்

நகரக் கழிவுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட திடக்கழிவுகள் தொழிற்சாலைகளில்  பயன்படுத்தப்பட்டு இறுதியில் அவற்றிலிருந்து வெளிப்படும் கசடுகள் நகர்புற நிலங்களில் கொட்டப்படுகின்றன.  அதிக அளவு கழிவுகளை உற்பத்தி செய்யும் அணுஉலை தொழிற்சாலைகள், இரும்பு மற்றும் உலோக தொழிற்சாலைகளின் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் நிலக்கரி, சாம்பல் ஆகியவைகளின் வெளிப்பாடாக கசடு போன்றவை அதிக அளவு வெளியேற்றப்படுகிறது.  இரும்பு அல்லாத இதர தொழிற்சாலைகள், சர்க்கரை உற்பத்தி, காகித உற்பத்தி, உரத் தொழிற்சாலைகளும் கழிவுகள் போன்ற பல்வேறு தொழிற் கழிவுகள் திடக் கழிவுகளை உண்டாக்குகின்றன.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் திடக்கழிவுகளை பராமரிப்பதற்கு உள்ளூர் நிர்வாகம் பொறுப்பாகாது. அந்தந்த தொழிற்சாலைகளே அவற்றை நிர்வகிப்பதோடு, தேவையான முன் அனுமதியை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும்.

இறைச்சிக் கூட கழிவு

உலகில் அதிக அளவில் கால்நடைகள் உள்ள நாடு இந்தியா.  மத்திய அரசின் உணவு கொள்கையின்படி  ஆண்டிற்கு  2.0  மில்லியன்  மாடுகளும்,  50   மில்லியன்  ஆடுகளும், 1.5 மில்லியன் பன்றிகளும், 150 மில்லியன் கோழிகளும் உணவிற்காக பயன்படுத்தப் படுகின்றன.  இவ்விறைச்சிக் கூடத்தில் உணவுக்குப் பயன்படாத கழிவுகளான சாணம், எலும்பு, கூடு போன்றவை வெளியேற்றப்படுகின்றன.  ஆகஸ்டு 1998ல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இறைச்சிக்கூட சுகாதாரத்திற்கான வழிமுறைகளைப் பற்றிய வரைவு திட்டத்தைக் கொணர்ந்தது.

மருத்துவக் கழிவுகள்

மருத்துவக் கழிவுகள் என்பது மனிதன் மற்றும் விலங்கினங்ளுக்கு, நாள்பட்ட தொற்றுநோய் சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளும் பொழுதும், உரிய மருத்துவ வசதி அளிக்கும் பொழுதும் உற்பத்தியாகும் கழிவுகள் ஆகும்.  உதாரணமாக, உபயோகத்திற்குப்பின் தூக்கி எறியப்படும் ரத்தம் தோய்ந்த பஞ்சு மற்றும் காயக்கட்டுகள், மனித மற்றும் விலங்குக் கழிவுகள், வெட்டி எறியப்படும் வேண்டாத அழுகிய நிலையில் உள்ள உடல் உறுப்புக்கள், வேதியியல் கழிவுகள், நாட்பட்ட மருந்துகள் போன்ற கழிவுகளை மருத்துவக் கழிவுகள் எனலாம்.  உபயோகப்படுத்திய ஊசி மற்றும் மருந்துக்குப்பிகள், சிகிச்சை சமயத்தில் மனிதன் மற்றும் விலங்கினங்கள் வெளியேற்றும் கழிவுகள், காயக்கட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்ட துணி மற்றும் இதர வேதிப்பொருட்கள், மருத்துவப்பட்டிகள், போன்றவைகளை அறிவியல் முறைப்படி அகற்ற வேண்டும். இம்மாதிரியான மருத்துவக் கழிவுகள் சரியான முறையில் கழிவு மேலாண்மை யுக்திகளைக் கையாண்டு வெளியேற்றப்படாவிட்டால் பெரிய அளவில் மனித நலத்திற்குக்கேடு விளைவித்துவிடும். ஒரு மருத்துவமனையிலிருந்து சுமாராக வெளியேற்றப்படும் 4 கிலோ கழிவில் 1 கிலோ கழிவு தொற்று நோய் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இதுநாள் வரையிலும் மருத்துவமனைகள் அவர்கள் வெளியேற்றும் மருத்துவக் கழிவுகளையும் கவனக்குறைவாக அப்படியே குப்பைத் தொட்டிகளில் கொட்டி வந்தார்கள்.  நம் நாட்டில் மருத்துவக் கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்று பல ஆய்வுகளில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு வந்தது.  மத்திய அரசின் உயிரியல் மருத்துவக் கழிவுகள் (கையாளுதல் மற்றும் மேலாண்மை), 1998 விதிகளின் அறிக்கை வெளியானதற்குப் பிறகுதான் இம் மருத்துவக் கழிவுகளை தனியாக பிரித்தெடுத்து சேகரிக்கவும், பிறகு சுத்திகரிப்பு செய்து  வெளியேற்றும் முறைகளையும் கவனத்தில் கொள்ள மருத்துவமனைகள் ஏற்பாடுகளை மேற்கொண்டது. இருப்பினும், தற்போது பல பெரிய மருத்துவமனைகள் தகுந்த இயந்திரங்களை நிறுவி மருத்துவக் கழிவு மேலாண்மை முறைகளை நடைமுறைப் படுத்த முன்வந்துள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

உயிரிய மருத்துவக் கழிவு

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மருத்துவம் செய்தல், ஆய்வு செய்தல் போன்ற செயல் பாடுகளின்போது வெளிப்படும் திட மற்றும் திரவ நிலையில் ஒன்றுபட்டு வெளியேற்றப்படும் கழிவுகளே,  உயிரிய மருத்துவக் கழிவுகள் எனப்படும்.

இக்கழிவுகளில் மனித உடற்கூறு கழிவுகள் உதாரணமாக திசு, உள் உறுப்புக்கள் உடற்பாகங்களும் கால்நடை மருத்துவமனைகளில் ஆய்வு செய்தல் மற்றும் பரிசோதனைகள் மூலம் வெளியேற்றப்படும் விலங்கினக் கழிவுகள், நுண்ணுயிரி மற்றும் உயிரிய தொழில் நுட்பம் சார்ந்த கழிவுகளும் உடைந்த கண்ணாடி, குவி விளிம்பு கத்தி, நாட்பட்ட மருந்துகள், விஷ மருந்துகள் போன்றவைகளும் கட்டுத்துணி, பசை தடவிய ஒட்டும் துணி, பயன்படுத்த இயலாத இரத்தக் கழிவு குழாய்கள், சிறுநீர் வாங்கி குழாய்கள், திரவக்கழிவுகள், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகள், சாம்பல் துகள்கள் மற்றும் இரசாயன கழிவுகள்.

மோசமான பராமரிப்பின் காரணமாக பல சுகாதார இடையூறுகள் ஏற்படுகின்றன.  உதாரணமாக கத்தியினால் மருத்துவ ஊழியர்களுக்கு காயங்கள் ஏற்படுகின்றன. மற்றும் கழிவுகளைக் கையாள்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீர்கேடு அதிகரிப்பு போன்றவைகளும், நோய்கிருமிகள் பரவுதலும், பயன்படுத்த இயலாத நாட்பட்ட மருந்து மற்றும் அதனை சார்ந்த பொருட்களும் உடல்நலக்குறைவை ஏற்படுத்துகின்றன.

1998ல் கொண்டுவரப்பட்ட உயிரி மருத்துவ கழிவுகள் விதிமுறைகளின்படி அக்கழிவுகள் ஏற்பட முக்கிய காரணமான நபரோ அல்லது நிறுவனமோ பொறுப்பேற்க வேண்டும். அவைகள் முறையே நோய் பாதிப்பின்றி வெளியேற்றப்பட்டு, பிரித்தெடுத்து உரிய முறைகளைக் கையாண்டு அழித்தோ அல்லது மறுபயன்பாடு செய்வதோ மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிர்வாகத்தாரும் நுண் மருத்துவ கழிவை சுத்தம் செய்ய சில முறைகளைக் கையாள வேண்டும். சாம்பலாக்குதல் மற்றும் நுண் அலைகள் முறைகளில் சுத்தம் செய்து அகற்றும்போது சில கழிவுகள் உண்டாகின்றன.

மனித உடற்கூறு கழிவுகளை அகற்றும்போது (மனித தசைகள் தேக உறுப்புகள்) அவற்றை சாம்பலாக்கவும், ஆழமாக புதைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

ஊசி மருந்து, பீச்சுக்குழலி (சிரிஞ்); கத்தி, பிளேடு, கண்ணாடி மற்றும் பல கழிவுகளை வேதி முறையின் மூலமும் சுத்திகரிப்பு கருவியின் மூலமும் மற்றும் சிறு சிறு துண்டாகவும் சிதைக்க வேண்டும்.

கறைபடிந்த கட்டுத்துணிகள் படுக்கை துணிகள் மற்றும் இதர பொருட்களை சாம்பலாக்குதல், சுத்திகரிப்பு கருவி (அ) நுண்ணலைகள் மூலம் சுத்திகரிக்கலாம்.

பயன்படுத்தமுடியா திடக்கழிவுகளான குழாய்கள் சிறுநீர் வாங்கி, ஆகியவற்றை நோய் தொற்றாத வேதி முறையிலும் (அ) நுண்ணலைகள் மூலமும் சிதைத்தல் மூலமும் சிறுசிறு துண்டாக்குதல் வகையிலும் அகற்ற வேண்டும்.

உயிரிய மருத்துவக் கழிவுகளை மற்ற கழிவுகளுடன் கலக்கக்கூடாது.  தனியாக பிரித்து கொள்கலன்கள் (டின்கள்) (அ) பல வண்ணப்பைகளில் கழிவுகளைப் போட வேண்டும். சுத்தம் செய்ய முடியாத உயிரிய மருத்துவக் கழிவுகளை சேர்த்து வைக்காமல் 48 மணி நேரத்திற்குள் அரசாங்கம் பரிந்துரை செய்துள்ள தகுந்த வண்டிகள் மூலம் இடமாற்றம் செய்துவிட வேண்டும்.

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்.

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top