অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி

பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி

முன்னுரை

இரண்டு பெரும் நிகழ்வுகள் இன்றைய உலகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ஒன்று பூமி வெப்பம் அதிகரிப்பது, மற்றொன்று பட்டினிச் சாவுகள்.

வளர்ச்சி அடைந்தவை என்று சொல்லப்படுகிற பணக்கார நாடுகள் இந்த கேடுகளுக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால், ஏழை நாட்டு மக்கள் இதன் பாதிப்புகளை சந்திக்கின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மலைவாழ் மக்கள், நதிக்கரை ஓரம் வாழும் மக்கள், கடலோர மக்கள் மற்றும் நிலமற்ற உழைக்கும் மக்கள் என விளிம்புநிலை மக்கள்தான் அதிக அளவில் உயிர் இழந்திருக்கின்றனர்.

பூமியைச் சுற்றி சரிப்பசை வளையம் உருவாகுவதனால் ஒளி உள்ளே வருகிறது. பூமிக்கு வந்த ஒளி வானத்திற்குத் திரும்புவது தடைபடுகிறது. இதனைப் “பசுமை இல்ல விளைவு’’ என்று அழைக்கின்றார்கள். இதற்கு அடிப்படையாக சூழும் காற்றுக்களை பசுமை இல்லாக் காற்றுக்கள் என்கிறார்கள். இத்தகைய காற்றுக்களில் கரி அமிலகாற்றே (கார்பன் டை ஆக்சைடு) முதல் இடத்தைப் பிடிக்கிறது. காற்றும் பங்களிப்பும் கீழே தரப்படுகிறது.

 • கரி அமிலக் காற்று              49%
 • மீதேன்                          18%
 • குளோரோ ஃபுளோரோ கார்பன்    14%
 • நைட்ரசன் காற்று                 6%
 • மற்றவை                        13%

கடந்த நூறு ஆண்டுகளில் வான்வெளி வெப்பம் 35% உயர்ந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் சராசரி வெப்பம் 0.740 டிகிரி சென்சியஸ் உயர்ந்துள்ளது. 2100 ஆம் ஆண்டு இரண்டு முதல் மூன்று டிகிரி உயரக்கூடும் என்று கணிக்கிறார்கள். பனி உருகுவதால் நதிகள் கடலுக்கு நீர்க் கொடுப்பது குறையும். கடல்நீர் நிலத்திற்கு உள்ளே புகுவதால் குடிப்பதற்கான நீரின் அளவு குறையும். வெள்ளமும், வறட்சியும் மாறி மாறி வரும். பயிர் வளர்ச்சி நேரம் குறையும். விளைச்சலும் குறையும் என்றெல்லாம் கூறுகிறார்கள். கடலோரங்களில் புயலும், வெள்ளமும் பெருகுவதால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்வார்கள். உயிரிழப்பும், பொருளிழப்பும் பெரிய அளவில் நிகழும்.

குடிநீர்ப் பற்றாக்குறை

 • வடக்கு ஆசிய நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும், தட்ப வெப்ப மாற்றத்தைத் துல்லியமாக ஆய்ந்தறியும் அரசுகளுக்கு இடையிலான குழு (IPCC) கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
 • வடக்கு ஆசியாவில் 50 கோடி மக்கள், சீனாவில் 25 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். பனிப்பாளம் உருகி ஆற்றோட்டம் குறைவதால் இந்திய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
 • 2020ஆம் ஆண்டில் ஆசியாவில் 12 கோடி மக்கள் முதலாக 120 கோடி மக்கள் வரை சிக்கல்களுக்கு ஆளாவார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் 7 கோடி 50 லட்சம் மக்கள் வரை பாதிப்புக்கு ஆளாவார்கள். தென் அமெரிக்க நாடுகளில் 1 கோடி 20 லட்சம் முதல் 8 கோடி 10 லட்சம் வரையான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

பயிர் விளைச்சல் சரியும்

பயிர்களின் வளர்ச்சிப் பருவம் சுருங்கும். அதனால் 2020 ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்க நாடுகளில் 50 விழுக்காடு விளைச்சல் குறையும். மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் 2050ஆம் ஆண்டு வாக்கில் 50சதவீதம் விளைச்சல் குறையும்.

உலக உற்பத்தி பாதிப்புக்கு ஆளாவதால் ஏழை நாடுகள் உணவை இறக்குமதி செய்வதிலும் பெரும் சிக்கல் ஏற்படும்.

கடலோரப் பகுதி வெள்ளம்:

 • கடல் மட்டம் உயர்வதால் மக்கள் நெருக்கம் மிகுந்த கல்கத்தா, டாக்கா, ஷாங்காய் போன்ற பெருநகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். வறட்சியினாலும் மக்கள் இடம் பெயருவார்கள். இதனால் உலகத்தில் பாதுகாப்பும் அமைதியும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அரசாங்கங்களின் கவனம் முழுவதும் இப்பிரச்சனையின் மீது குவிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
 • இரசாயன உரங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் புகையைக் கக்குகின்றன. உரத்தைச் சுமந்து செல்லும் வாகனங்கள் புகையைக் கக்குகின்றன. உப்பு உரம் நைட்ரசன் காற்றைக் கக்குகிறது. பயிர்த் தொழிலில் பயன்படுத்தும் இதர பொருள் உற்பத்தி செய்யும் ஆலைகளும் புகையைக் கக்குகின்றன. நிலத்தில் பயன்படுத்தும் எந்திரங்கள் புகையைக் கக்குகின்றன. ஆக மொத்தம் பூமி சூடாவதற்கான காரணிகளில் பயிர்த்தொழிலின் பங்கு 35 விழுக்காடாகும். அதே போல, தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பயிர்த்தொழிலும் பாதிப்புக்கு ஆளாகிறது.
 • ஆழிப்பேரலை தொடங்கி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் சாகுபடிக்கு ஒவ்வாததாக மாறியுள்ளது.
 • இவ்வளவு உண்மைகள் அம்பலமான பின்பும் உழவாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் உழவாண்துறை அலுவலர்களும் இரசாயன உரம், பூச்சி கொல்லிகள், பூஞ்சானக் கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவற்றை பரிந்துரை செய்வதை நிறுத்தவில்லை. இவையாவும், இவற்றை விற்று இலாபம் பார்ப்பதற்காகவே குள்ளரகப் பயிர்களைப் புகுத்தினார்கள் என்ற வாதத்தை உறுதிப்படுத்துவனவாக உள்ளன. இந்தியாவில் பசிப் பிணியைப் போக்குவதற்காகவே பச்சைப் புரட்சி வந்ததாக ஒரு கட்டுக்கதை உலவுகிறது. உண்மையோ வேறு விதமாக உள்ளது. ஒட்டுக்கட்டி உருவாக்கிய குட்டை ரகத்தை அமோக விளைச்சல் ரகம் என்று உழவர்களுக்கு விளம்பரம் செய்தார்கள். ஆனால், விஞ்ஞானிகள் மத்தியில் அதிகம் இரசாயன உரம் ஏற்கும் ரகம் என்ற கருத்துப் பரிமாறினார்கள். அதிக ரசாயன உரம் இட்டபோது நாட்டு நெல் ரகம் சாய்ந்து போனது. அதனால் அதிக ரசாயனத்தை இந்திய உழவர் தலையில் கட்டுவதற்காகவே குள்ளரகத்தைப் புகுத்தினார்கள். அதனால்தான், ஆல்பர்ட் ஓவார்டு சொன்னதை ஏற்கவில்லை. ரிச்சார்யா சொன்னதை ஏற்கவில்லை. எக்ன நாராயன் ஆவணத்தை சீர்தூக்கவில்லை.
 • பச்சை புரட்சியினுடைய கொடுமைகளிலிருந்து உழவரையும் உண்போரையும் காப்பாற்றும் வகையில் இயற்கை உழவாண்மை வளர்ந்து கொண்டிருக்கும் போது அப்படி ஏதும் நடந்துவிடாதபடி அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த மான்சாண்டோ கம்பெனி இந்திய அரசாங்கத்தை நெருக்குகிறது. இந்தியாவில் ஒட்டுவிதை விற்றுக் கொண்டிருந்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மகிக்கோ கம்பெனியின் பங்கு தொகைகளை மேலே சொல்லப்பட்ட மான்சாண்டோ கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. அதே போல சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து விற்றுக் கொண்டிருந்த ராசி கம்பெனியின் பங்குத் தொகைகளையும் மான்சாண்டோ கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. இந்திய கம்பெனிகளை வாங்கிவிட்டதன் அடையாளமாக மான்சாண்டோ மகிக்கோ என்றும் மான்சாண்டோ ராசி என்றும் கடைப்பெயர்களையும் மாற்றிவிட்டது. இதன் பிறகு மான்சாண்டோ மகிக்கோ கம்பெனியின் பெயரில் பி.டி. கத்திரிக்காய் விற்பதற்கு நடுவண்அரசிடம் அனுமதி கேட்டு கம்பெனி அழுத்தம் கொடுக்கிறது.
 • “பச்சைப் புரட்சி’’ என்று பெயர் சூட்டியதே ஒரு அமெரிக்கன் என்று எம். எஸ். சுவாமிநாதன் எழுதியுள்ளார். “உலக வரலாற்றில் நடந்தேறியுள்ள புரட்சிகள் அனைத்தும் சிவப்பாக இருந்ததுதான் சரித்திரம் “பச்சைப் புரட்சி’’ என்ற பெயர் புரட்சியையே இழிவுபடுத்துவதாக அமைந்தது.

பச்சைப் புரட்சியின் விளைவுகள்:

 1. 1947இல் அன்றைய பிரதமர் ஜவகஹர்லால் நேரு சொன்னார், “வேறு எதுவும் காத்திருக்கலாம், ஆனால் உழவுத் தொழில் காத்திருக்க முடியாது’’ என்று. ஆனால் 59 ஆண்டுகள் கடந்த பின்பும் உருப்படியான கொள்கை ஏதும் உழவுக்காக உருவாக்கப்படவில்லை.
 2. 65 கோடி மக்களுக்கு உழவைத் தவிர வேறு வழி இல்லை. உழவொன்றே அவர்கள் வாழ்கைக்கு ஆதாரம்.
 3. 65 கோடி மக்களுக்கு வருவாய் குறைந்தவண்ணம் உள்ளது. செலவுகளும், எதிர்பாராத இழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
 4. உழவர்கள் வாங்கியுள்ள கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது.
 5. விளைபொருட்களை விற்பதற்கான உட்கட்டமைப்பு மிகவும் சொற்பம்.
 6. காய்கறி, பழம் போன்ற அழுகும் பொருட்களுக்கு சந்தையும், சேமிப்புக் கிடங்கு வசதிகளும் மிக மிக சொற்பம்.
 7. உருப்படியான கொள்கை ஏதும் இல்லாமையால் கால்நடை பராமரிப்பு நொறுங்கிப் போயுள்ளது.
 8. உழவை நம்பியுள்ள குடும்பங்களில் நான்கில் ஒருவருக்கு மட்டுமே வங்கிக்கடன் கிடைக்கிறது.
 9. உழவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்வது மட்டுமல்ல, அதிகரித்த வண்ணம் உள்ளது.
 10. முப்பதாயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
 11. தற்கொலைக்கு அடிப்படைக் காரணங்கள்: அ. வாங்கிய கடனுக்கு வட்டி மிக அதிகம். ஆ. அதிகரித்து வரும் இடுபொருள் செலவு. இ. விளைபொருளுக்கான நியாயமான விலை கிடையாது.
 12. கம்பு, தினை, சாமை போன்ற சத்து மிகு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்து, கிழங்கு போன்றவை அனாதைப் பயிர்கள். இவற்றுக்குச் சந்தையோ, நியாயமான விலையோ கிடையாது.
 13. பள்ளி செல்லும் வயது வராத குழந்தைகளில் நான்கில் மூவருக்கு சத்துணவுப் பற்றாக்குறை, இரும்புச் சத்து குறைவு (சோகை)
 14. 55% குழந்தைகளுக்கு வைட்டமின் கி பற்றாக்குறை. அதனால் பார்வைக் கோளாறு.
 15. பயிர்த் தொழிலில் அரசு முதலீடு குறைந்தவண்ணம் உள்ளது.
 16. கோதுமையும், நெல்லும் தீவிரமாக சாகுபடி செய்ததால் நிலம் உப்பாகிப் போனது. நிலத்தடி நீர் குறைந்தவண்ணம் உள்ளது.
 17. நுண்ணூட்டங்களின் பற்றாக்குறை அதிகரித்தவண்ணம் உள்ளது.
 18. ஆண்டு சராசரி மழை போதுமானதாகத் தோன்றுகிறது. ஆனால், மழையின் பெருமளவு 100 மணி நேரத்தில் கொட்டி விடுகிறது.
 19. கிடைக்கும் நீர் அனைத்தும் பூச்சிக்கொல்லி நஞ்சாலும், மிகக் கொடிய நச்சுப் பொருட்களாலும் மாசுபட்டுக் கிடக்கின்றன.
 20. மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், பயிருக்குப் பாய்ச்சவும் மேலும் மேலும் குழாய்க் கிணற்றையே சார்ந்துள்ளார்கள். இந்தக் குழாய்க் கிணறுகளில் மிகக்கொடிய ஆர்சனிக் நஞ்சு வருகிறது. மேலூற்று கிணறுகள் வற்றிப்போய் விட்டன.

ஆதாரம் : கோ.நம்மாழ்வார்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate