பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உயிர்க்கோளம் - ஓர் கண்ணோட்டம்

உயிர்க்கோளம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

புவி ஒரு உயிர்க்கோளம். இதில் உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டு, இயற்கை சூழ்நிலையைச் சார்ந்து வாழ்கின்றன. இத்தகைய உயிர்களுக்கும், இயற்கைச் சூழ்நிலைக்கும் உள்ள தொடர்பை விவரிப்பதே சூழ்நிலையியல் (Ecology) ஆகும். இத்தகைய தொடர்பில் உள்ள சிக்கலான அமைப்பை ஆராய்ந்து விவரிப்பதே இயற்கைச் சூழ்நிலை அமைப்பு' என்பதாகும். இந்த அமைப்பானது எந்த அளவிலும் இருக்கலாம். அதாவது மிகச் சிறிய குட்டை நீரிலிருந்து, மிகப் பெரிய அமேசான் மழைக்காடுகள் வரை அமையலாம். இத்தகைய இயற்கை சூழ்நிலை அமைப்பு' எவ்வாறு அழைந்துள்ளது என்பதை விரிவாகக் காண்போம்.

இயற்கை சூழ்நிலை அமைப்பு  (Eco System)

இயற்கை சூழ்நிலை அமைப்பு என்பது நிலம், நீர், காற்று மற்றும் உயிரினங்களான தாவரங்கள், பிராணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,

(1) பெளதிக சூழ்நிலை

(2) உயிர்நிலை சூழ்நிலை

பெளதிக சூழ்நிலையானது நிலம், நீர், காற்று ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். உயிர்நிலை சூழ்நிலையானது தாவரங்களையும், பிராணிகளையும் உள்ளடக்கியதாகும். எனவே இவ்விரண்டும் ஒருங்கிணைந்த தொகுதிதான் உயிர்க்கோளம் (BioSphere) என்று அழைக்கப்டுகிறது. புவியியலில் இந்த உயிர்க்கோளமானது ஒரு தனித்தன்மை வாய்ந்த அமைப்பைக் கொண்டதாக விளங்குகின்றது. ஏனெனில், எல்லா உயிரினங்களும் ஒன்றினை ஒன்று சார்ந்து வாழ்வதோடு, தான் வாழும் பரப்பிலுள்ள பெளதிகச் சூழ்நிலையையும் சார்ந்து வாழ்கின்றன. எனவே இந்த உயிர்க்கோளம் என்பது புவியில் மட்டும் காணப்படும் ஒரு சூழ்நிலையாகும். வளர்ந்து வரும் மனித நாகரிகத்திற்கும், வாழ்வின் அடிப்படைக்கும் இந்த உயிர்கோளம் இன்றிமையாததாகும்.


சூழ்நிலை உயிரியல்

உயிர்கோளத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

அவை,

நிலக்கோளம்

மனிதனின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக நிலக்கோளம் அமைகின்றது. மனிதன் தன் உழைப்பாலும், சக்தியாலும் இயற்கை சூழ்நிலையை மாற்றுகின்றான். மனிதன் கனிவளங்களைத் தோண்டி எடுக்கிறான். மரங்களையும், விலங்குகளையும் அழிக்கின்றான். ஆற்று நீரை மின் சக்திக்கும், நீர்வழிப் பயணத்திற்கும் பயன்படுத்துகிறான். நிலத்தோற்றத்தில் வயல்வெளிகளையும், நகரங்களையும், தொழிற்சாலைகளையும் உருவாக்குகிறான். இதனால், சில குறிப்பிட்ட பிரதேசங்கள் பயிர் தொழில் செறிந்தும், உற்பத்தித் தொழில் மையங்களாகவும், வியாபாரப் பிரதேசங்களாகவும் முன்னேற்றமடைகின்றன. ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு வகையில் இயற்கை வளத்தை பயன்படுத்தித் தனிச்சிறப்பு வாய்ந்த தொகுதிகளை ஏற்படுத்துகின்றது.

நீர்க்கோளம்

நீர்கோளம் எனப்படுவது நீர்ப்பரப்புகளான பேராழிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் உள்ள இதர நீர்நிலைகளை உள்ளடக்கியதாகும், புவியின் மொத்தப் பரப்பில் 71% மேலாக நீர்நிலைகள் காணப்படுகின்றன.

நீர் ஆதாரங்கள் சதவீகிதம்

பெருங்கடல்கள் (உப்பு நீர்)                   - 97.5

பணியாறுகள், பனிக்குவிப்புகள் மற்றும் பணி - 2.05

நன்னீர்                                     - 0.5

மொத்தம்                                   100.0

இந்த நீர்ப்பரப்பில் மீன் போன்ற உணவு வகைகளும், கனிமங்கள், எண்ணெய் வளம், இயற்கை வாயு, நிலக்கரி போன்ற சக்திப் பொருட்களும் கிடைக்கின்றன.

வளிக்கோளம்

வளிக்கோளம் எனப்படுவது புவிக்கோளத்தை முழுமையாகச் சூழ்ந்த வாயுக்களால் ஆன ஒரு போர்வையாகும். புவி தேவையான அளவு வெப்பமடைவதற்கும், இரவில் நிலப்பகுதியை வெதுவெதுப்பாக வைத்திருக்கவும் வளிமண்டலம் ஒரு ஊடகமாகச் செயல்படுகிறது. புவியில் பல்வேறு காலநிலை நிலவுவதற்கும் வளிமண்டலம் காரணமாக அமைகிறது. தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்க்கையானது காலநிலை பருவ வேறுபாட்டிற்கு ஏற்ப சீராக அமைந்துள்ளது. வெப்பமும், மழையும் மனிதனைப் பாதிக்கிறது. எனவே நிலவும் காலைநிலைக்கு ஏற்றவாறு மனிதன் தன் உடை, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொள்கின்றான்.

மனிதனுக்கும் இயற்கை சூழ்நிலைக்கும் உள்ள தொடர்புகள்

மனிதனுக்கும், இயற்கை சூழ்நிலைக்கும் உள்ள தொடர்பினை பற்றி மானிடப் புவியியல் (Human Geography) மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் மனிதன் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயற்கை சூழலோடு இணைந்து செயல்படும் முறையின் மூலமும் அறிந்து கொள்ளலாம். ஆனால் விரைவாகப் பெருகி வரும் உலக மக்கள் தொகைப் பெருக்கம் இந்த இயற்கை சூழ்நிலையின் சமநிலையை மிகவும் பாதித்துள்ளது. மக்கட் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இயற்கை வளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எல்லா உயிரினங்களும் அவற்றின் இனப்பெருக்கத்திற்கும், வளர்ச்சிக்கும், தேவையான ஆற்றலுக்கும், உணவையே நாடியுள்ளன என்பதை நாம் அறிவோம். ஆற்றலின் ஒரே மூலம் சூரிய சக்தி மட்டுமே. தாவரங்கள் தங்கள் உணவை சூரிய சக்தியைக் கொண்டு தயாரிக்கின்றன. அதை தாவரங்கள், தங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. தாவரங்கள் உணவாக (சாகபட்சிணிகள்) மான்கள், ஆடுகள், பாக்டீரியாக்கள் போன்றவற்றிற்கு பயன்படுகின்றன. ஊன் உண்ணிகளான சிங்கம், புலி போன்றவை சாகபட்சிணிகளை உண்டு ஆற்றலைப் பெறுகின்றன. மனிதன் சாகபட்சிணிகளையும், தாவரங்களையும் உணவாகக் கொள்கிறான். பாக்டீரியா, மண்புழு போன்றவை மடிந்த தாவரங்களையும், மிருகங்களையும் சிதைத்து, சத்துள்ள தாதுவாக மாற்றுகிறது. அவற்றை தாவரங்கள் உணவாக எடுத்துக் கொள்கின்றன.

சூழ்நிலை மண்டலத்தின் உறுப்பினர்களுக்கு இடையேயுள்ள தொடர்பு எனவே சூழ்நிலை மண்டலத்தின் சக்தியானது ஒரு உணவு நிலையிலிருந்து மற்றோர் உணவுநிலைக்குச் செல்வதே "உணவு சங்கிலித் தொடர்” எனப்படும்.

உணவுச் சங்கிலி என்பது மிகவும் எளிமையானது அல்ல. ஏனெனில் சில உயிரினங்கள் பல வகையான உணவுகளை உட்கொள்கின்றன. அவையும் பல உயிரினங்களுக்கு உணவாக அமைகின்றன. இந்த உணவுச் சங்கிலித் தொடரில் ஏதாவது ஒரு பகுதி தொந்தரவு செய்யப்பட்டால் சூழ்நிலையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும். சுற்றுப்புறத் தொடர்களில் ஏதாவதொரு சிறிய அமைப்பை மாற்றுவதானாலும் அது முழு சுற்றுப்புற அமைப்பையுமே மாற்றிவிடும். எனவே எந்த ஒரு சூழ்நிலை மண்டலத்திலும் அதில் வாழும் உயிரினங்கள் சூழ்நிலையை சமப்படுத்தும் முறையிலேயே தங்களை அமைத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதன் இந்த இயற்கைக்கு மாறாக சூழ்நிலையை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு வருகிறான். இதன்விளைவாக இயற்கைச் செல்வங்கள் குறைந்து கொண்டு வருவதும், பொருளாதார செயல்முறையின் அமைப்பு வேறுபடுவதும் நாம் அறிந்த ஒன்றாகும். புவியில் பெரும்பாலான பாகங்கள் பயன்படுத்தப்பட்டுவிட்டன. இதன் விளைவாக பெரும்பான்மையான இடங்களில் மண் அரிப்பு, நிலச்சரிவு, வறட்சி போன்ற இடையூறுகள் ஏற்படுகின்றன. மக்கள் பெருக்கம் நகர்புறங்களில் பெருகுவதன் விளைவாகப் பலத்த இரைச்சல்களும், வெப்பமும், கழிவுப்பொருட்களும் பெரிய அளவில் இயற்கைச் சூழ்நிலை சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது.

இயற்கை வளங்களும் மனிதனும்

வளங்கள் எனப்படுபவை மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியவை ஆகும். இயற்கைவளம் என்பது புவியிலிருந்து திடப்பொருளாகவோ, திரவப் பொருளாகவோ அல்லது வாயுப் பொருளாகவோ கிடைக்கக் கூடிய ஒரு பொருளாகும். எனவே, மனிதன் தன் தேவைக்காக புவியின் மேற்பரப்பிலும், புவிக்கடியிலும் திட, திரவ மற்றும் வாயுப் பொருட்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்துகின்றான்.

இத்தகைய இயற்கை வளங்களை உருவாக்குவதில் இயற்கை சூழ்நிலை அமைப்பு பெரும்பங்கு வகிக்கிறது. மலை, மண், ஆறு, புவி அமைப்பு, காலநிலை போன்றவற்றைப் பொறுத்து ஒரு நாட்டின் இயற்கை வளம் அமைகிறது. 4A.4 இயற்கை வளங்களின் வகைகள்

இயற்கை வளங்களை அது தோன்றிய விதத்தில் அடிப்படையில் இரு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அவை

உயிருள்ள வளங்கள்

இயற்கையில் காணப்படும் வளங்களில் எளிதாக அடையாளம் காணப்படுவது உயிருள்ள பொருட்களே ஆகும். மனிதன் உயிருள்ள வளங்களில் தலைசிறந்த வளமாகக் கருதப்படுகின்றான். தாவரங்களும், விலங்குகளும் உயிர் வளத்தில் அடங்கும். உயிர் வளங்கள் அனைத்தும், சூழ்நிலைக் கூறுகள் சாதாகமாக உள்ளவரை, தங்களது இனங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். எனவே அனைத்து உயிருள்ள வளங்களும் புதுப்பிக்கத்தகுந்த வளங்களே ஆகும். அவற்றின் தன்மைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் அவை மாறுபடுகின்றன.

உயிரற்ற வளங்கள்

உயிரற்ற வளங்கள் எனப்படுவது, புதுப்பிக்க இயலாததாகும். தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது தீர்ந்துவிடக் கூடியவை. ஒருமுறை எடுக்கப்பட்டால் மீண்டும் அப்பகுதியில் கிடைப்பது அரிதாகும். தாதுக்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு போன்றவை உயிரற்ற வளங்களின் சில முக்கியச் சான்றுகளாகும். இரும்பு, அலுமினியம் போன்ற தாதுக்கள், உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. தங்கம் போன்ற ஒரு சில உயிரற்ற வளங்கள் குறைவாகவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. கிடைக்கும் வளங்களின் அளவு மற்றும் அவற்றை அடைய நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பொருத்து உயிரற்ற வளங்கள் தீரும் கால வரையறை அமைகிறது. உயிரற்ற வளங்கள் பல தற்போது நிலத்தில் குறைந்து வருவதால் கடலடியில் அமைந்துகிடக்கும் வளங்களை தேடிப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

அடுத்து இத்தகைய இயற்கை வளங்களை புதுப்பிக்கும் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம் அவை,

புதுப்பிக்கக் கூடிய வளங்கள்

எந்த வளங்களை புதுப்பிக்க இயலுமோ, அவையாவும் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் எனப்படுகின்றன. இவை மனிதன், காடுகள், மீன்வளம், கால்நடைகள் போன்ற உயிர்வளங்களை உள்ளடக்கியுள்ளன.

a) மனித வளம்

மனிதவளம் அனைத்து வளங்களிலும் சிறப்பு மிக்கது. இன்று அனைத்து நிறுவனங்களும், அமைப்புகளும், நாடுகளும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து திட்டமிட்டு பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம், அந்நாடுகள் தங்கள் மனித வளத்தை முறைப்படி பயன்படுத்திக் கொண்டதே ஆகும்.

b)காடுகள்

காடுகள் மனிதனுக்கு பல்வேறு வகைகளில் பயன்படுகின்றன. முக்கியமாக அவை மண் மற்றும் நீர் பாதுகாப்பிற்கும், வனவிலங்கு பாதுகாப்பிற்கும், சூழல் சமன்பாட்டிற்கும் பெரிதும் பயன்படுகின்றன. காடுகள் காலநிலையையும் மிதப்படுத்துகின்றன. காடுகள் உற்பத்தி தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே காடுகள் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வளமாகும். இதனால் மண் அரிப்பு, நிலச்சரிவு போன்றவை தடுக்கப்பெற்று மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் மிகப்பெரிய ஆறுகள் உற்பத்தி ஆகும் இடங்களாகவும், வனவிலங்கு சரணாலயங்களாகவும் மனிதன் இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்கும் பொழுதுபோக்கு இடங்களாக உள்ளது.

உலகில் 2/3 பங்காக இருந்த காடுகள் தற்பொழுது 1/3 பங்காகக் குறைந்ததுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள காடுகளை அவை அமைந்துள்ள மண்டலங்கள், மரவகை மற்றும் காலநிலையைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

  அவை,

 • வெப்ப மண்டலக் கடின மரவகைக் காடுகள்
 • மிதவெப்பமண்டலக் கடின மரவகைக் காடுகள் மற்றும்
 • மிதவெப்ப மண்டல மென் மரவகைக் காடுகள்

இவ்வகைக் காடுகள், தென் அமெரிக்காவின் அமேசான் பகுதியிலும், ஆப்பிரிக்காவின் காங்கோ பகுதியிலும், ஆசியாவில் இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மலேசியா, மியான்மர், இந்தோனேஷியாவின் சில பகுதிகளில் மட்டுமே தற்பொழுது காணப்படுகின்றன. இவ்வகைக் காடுகளில் மகோகனி, எபனி, தேக்கு, சால், சீசாம், மூங்கில், இரப்பர் போன்ற கடின வகை மரங்கள் உள்ளன.

இன்று இவ்வகைக் காடுகள் பெரிதும் அழிந்து வருகின்றன. ஏனெனில் வெப்பமண்டலக் காடுகள் உள்ள அனைத்து நாடுகளுமே மக்கள் தொகையை அதிகமாகக் கொண்டு, உற்பத்திக் தொழிலுக்கும், விளை நிலங்களுக்கும் காட்டை அழிக்கின்றன. மேலும் கனிம மற்றும் எண்ணெய் வளங்களை எடுக்கும் பொழுதும், அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் போன்றவற்றை கட்டும் பொழுதும் காடுகள் அழிக்கப்படுகின்றன.

i) மிதவெப்ப மண்டல கடின மரவகைக் காடுகள்

இவை வடகிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பாவின் மத்திய சமவெளி, வடசீனா மற்றும் ஜப்பான், கிழக்கு ஆஸ்திரேலியாவின் மலைப்பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவ்வகைக் காடுகளின் முக்கிய மரங்கள் ஒக், வால்நட், மேப்பிள் போன்றவை ஆகும். வெப்ப மண்டலக் காடுகள் போன்று இவையும் உற்பத்தி தொழிலுக்காக பெரிதும் அழிக்கப்பட்டு வருகின்றன.

i) மிதவெப்ப மண்டல மென்வகை மரக் காடுகள்

இவ்வகை மரங்கள், மித வெப்ப மண்டல குளிர் பிரதேசங்களான கனடா, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, சைபீரியா, நியூசிலாந்து, இந்தியாவில் இமயமலையின் உயர் அட்சப் பிரதேசம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இதில் ஒக், செஸ்தம், பைன், ஃபிர் வகை மரங்கள் காணப்படுகின்றன. இதில் பெறப்படும் மரங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலைகள், மரபொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள் போன்ற உற்பத்தித் தொழில்களில் பயன்படுகின்றன.

தற்பொழுது அழிந்து வரும் காடுகளை பாதுகாக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அவை :

 • வியாபார நோக்கத்துடன் மரம் வெட்டுதலை, அரசின் பல்வேறு கொள்கைகள் மூலம் கட்டுப்படுத்துகின்றது.
 • இந்திய வன இலாகா எடுத்து வரும் முயற்சிகளாலும், மரங்களை நடுவதன் மூலமும் காடுகளின் அழிப்பைக் குறைக்கின்றது.
 • டேராடுனில் (Dehra Dun) உள்ள இந்திய வனஆராய்ச்சி நிறுவனம் (FRI-Forest Research Institute) காடுகளை வளர்க்கின்றது. அதில் ஒன்றுதான் சமூகக் காடு வளர்ப்பு (Social Forestry) என்பது.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்களும், விவசாயிகளும் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். மேலும் 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, மரம் நடு விழா' எனும் கொள்கை, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

மீன்வளம் மற்றும் கால்நடை வளங்கள் பெருகி வரும் மக்கள் உணவு தேவைகளுக்கேற்ப உணவுகளான மீன், பால், முட்டை, இறைச்சி போன்றவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. தற்பொழுது மீன் பிடித்தலின் அளவு உயர்ந்துள்ளதால் நாம் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. அவை,

 • நவீன படகுகளின் மூலம் மீன் பிடிப்பதால், அளவிற்கு அதிகமாகப் பிடிக்கப்படுகிறது.
 • படகுகளும், கப்பல்களும் உரங்கள், பூச்சிகொல்லிகள், கிருமி நாசினிகள் மற்றும் எண்ணெய் தாதுக்களை எடுத்துச் செல்லும் பொழுது விபத்துகளினால், கடலில் கலந்து இவ்வகை வளங்கள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.
 • அணு ஆராய்ச்சி மற்றும் அணுக்கழிவு முதலியன கடலில் சேர்வதால் ஏற்படும் கதிரியக்கங்களினாலும் இவ்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.
 • கடலுக்கடியில் எண்ணெய் வளம் எடுப்பதற்காகப் போடப்படும் குழாய்களில் ஏற்படும் பாதிப்பினால் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு மீன்வளம் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே அரசு மீன்வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம், தன்னுடைய வளர்ச்சிப் பணிகளை தகுந்த சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் மேற்கொண்டு இவ்வளத்தைப் பாதுகாத்தல் மிக அவசியம். மீன்வளங்கள் போன்றே கால்நடைகளும் ஒரு மிகச்சிறந்த புதுப்பிக்கக் கூடிய வளங்களாகப் போற்றப்படுகின்றது. ஆனால் உணவு தேவைக்காக அவை புதுப்பித்தலைவிட, மிக வேகமாக அழிக்கப்பட்டு வருவதே அதிகம் உள்ளது. எனவே அரசு தன் சீரிய திட்டங்களின் மூலம் கால்நடை வளங்களை தொடர்ந்து புதுப்பிக்க விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ச்சல் தொழில் புரிபவருக்கும், கடன் வசதிகளையும், நவீன தொழில் நுட்பங்களைப் பற்றிய அறிவையும் தந்து இவ்வளத்தைப் புதுப்பித்தல் அவசியம் ஆகும்.

புதுப்பிக்க முடியாத வளங்கள் கனிம வளம்

இவ்வகை வளங்களில் கனிம வளங்களான இரும்புத்தாது, தாமிரம், மாங்கனீசு, பாக்ஸைட், துத்தநாகம், தகரம் போன்றவைகளும், சக்தி வளங்களான நிலக்கரி, எண்ணெய்த்தாது போன்றவையும் அடங்கும். ஒருமுறை இத்தாதுக்கள் புவியில் இருந்து எடுக்கப்பட்டால் அவற்றை மீண்டும் புதுப்பிக்க இயலாது. தொடர்ந்து சுரங்களிலிருந்து ஒரு கனிமத்தை எடுத்துக்கொண்டே இருந்தால் அவை தீர்ந்து விடுகின்றன. இதனால்தான், சுரங்கத் தொழிலை, கொள்ளைத் தொழில்’ என்றும் கூறுவர். இவ்வளங்களை புதுப்பிக்க இயலாது என்பதால் இவற்றைப் பயன்படுதுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது.

எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நமது அன்றாடப் பயன்பாட்டில் முக்கிய இடத்தை வகிக்கிறது. நமது நாட்டில் மும்பையிலும், காவேரி டெல்டா பகுதியிலும் 40% எண்ணெய் எடுக்கப்படுகிறது. மீதம் 60% உபயோகத்திற்கு வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

மண் வளம்

நமது முதன்மைத் தொழிலான விவசாயம் மண்வளத்தைச் சார்ந்துள்ளதால் மண்வளம் மிகவும் அவசியமாகிறது. தாவரங்கள் மற்றும் விலங்குகளினால் மண்ணின் வளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒடும் நீர், காற்று, வெப்பம் ஆகியவை மண் உருவாவதற்குக் காரணமாக இருந்தாலும் அவையே மண் அரிப்பிற்கும் காரணமாகிறது. மேலும் அளவிற்கதிகமான இரசாயன உரங்கள் பயன்படுத்துதல், தொடர்ந்து பயிரிடுதல் மூலமும் மண்ணின் வளம் பறிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஏற்படும் மண் அரிப்பையும், மண்ணின் வளம் பாதிக்கப்படுதலையும் தடுப்பதற்கான வழிமுறைகள்;

 • மரம் வெட்டுதலைத் தவிர்த்தல்
 • மரங்களை நடுதல்
 • சம உயரமுறை மற்றும் படிக்கட்டு முறையில் வேளான்மை (Contour Farming)
 • காற்றின் வேகம் அதிகமாக உள்ள இடங்களில் மரங்களை அரண்களாக வளர்த்தல்.
 • இரசாயன உரங்களைத் தவிர்த்து உயிர் உரங்களையும், தழை உரங்களையும் அதிக அளவில் பயன்படுத்துதல்.
 • பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல்.

இவை அனைத்துமே புதுப்பிக்க முடியாத வளங்களாக உள்ளதால் மக்களுக்கு இதனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும், சீரான மற்றும் மாற்று உபயோகத்தை வலியுறுத்துவதன் மூலமும் மட்டுமே இதனை நாம் பேணிக் காக்க முடியும். எனவேதான் வற்றாத வளங்களாக உள்ள சூரிய சக்தி, காற்று, கடல் அலைகள் ஆகியவற்றிலிருந்து சக்தி பெறப்படுவதற்குத் திட்டங்கள் அரசினால் தீட்டப்படுகின்றன. ஆனால் இம்முறையில் தொழில் நுட்பத்தின் ஈடுபாடு அதிகமாக இருப்பதாலும், முதலீடு அதிகம் தேவைப்படுவதாலும், இவற்றின் மூலம் கிடைக்கும் சக்தியின் அளவு மிகக் குறைவாகும். இன்று குப்பைகளில் இருந்து மின்சாரம் (Bio Fuel) எடுக்கும் முறை பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வற்றாத வளங்களிலிருந்து பெறப்படும் சக்தியை பயன்படுத்தும் முறை மட்டுமே நடைமுறையில் உள்ளது.

சுழற்சிக்கு உட்பட்ட வளங்கள்

சுழற்சிக்கு உட்பட்ட வளங்களில் நீர் முக்கிய வளமாகும். ஒரு முறை பயன்பட்ட நீரானது சுழற்சி மட்டும் மறுசுழற்சிக்கு உட்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் உபயோகிக்கப்படுகிறது.

மண் வளத்தைப் போன்றே நீர் வளமும், நல்ல முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். உணவிற்கு அடுத்தப்படியாக நீர், வாழ்க்கைக்கு இன்றியமையாததாகிறது. மேலும் விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் நீர் மிகவும் அவசியம். எனவேதான் இதனைச் சிக்கனமாகவும், அதே நேரத்தில் சீர்கேடு இல்லாமலும் பயன்படுத்துதல் மிக அவசியமாகிறது. மேலும் இதனை சுழற்சி மற்றும் மறுசுழற்சியின் மூலம் பயன்படுத்துதல் ஒரு மிக முக்கியமான செயலாக உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கமானது பல்நோக்கு அணைக்கட்டுத் திட்டம் மூலம் பல்வேறு அணைகளை கட்டுவித்து நீர் மாசுபடுதலில் இருந்தும், வீணாக்கப்படுதலில் இருந்தும் பாதுகாக்கின்றது. எடுத்துக்காட்டாக, மேட்டூர், தாமோதர், பக்ராநங்கல், கோசி,ஹிராகுட், துங்கபத்ரா, நாகார்ஜூனசாகர் மற்றும் சம்பல் ஆகிய பல்நோக்குத் திட்டங்களை (Multipurpose Projects) கூறலாம். மேலும் இத்தைகைய நீர்வளத்தைக் கொண்டு நீர்மின்சக்தி தயாரிப்பதற்காகவே சிவசமுத்திரம், பைகாரா, மண்டி, ரிஹண்ட் (ம.பி), கொய்னா (மஹா), பாலிமேளா (ஒரிஸா) போன்ற அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.

வளங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை

தற்பொழுது மனிதன் இயற்கை வளங்களின் பயன்பாட்டை அதிகரித்துக் கொண்டே வருகின்றான். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தேவைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு இயற்கையான வளங்களை அதிகமாக பயன்படுத்தி முற்றிலும் அழிந்து போவதை தடுக்க இயற்கைப் பாதுகாப்பு கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே இயற்கை வளங்கள் அழிவதை ஒரு நல்ல திட்டமிடல் மற்றும் சிறந்த மேலாண்மை மூலம், ஒரு சீரான பயன்பாட்டிற்குக் கொணர்வதே இயற்கை வளப்பாதுகாப்பு’ எனப்படும்.

வழிமுறைகள்

 • எல்லா வளங்களையும் கவனத்துடனும், கால அட்டவணைத் திட்டத்துடனும் பயன்படுத்தப்படல் வேண்டும்.
 • வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள காரணத்தால் சுழற்சி மற்றும் மறுசுழற்சி முறைகளை பயன்படுத்தி, வற்றாத வளங்களாக்கிப் பயன்படுத்துவது நல்லது
 • வற்றாத வளங்களின் துணைக்கொண்டு வளங்களைப் பாதுகாக்கலாம். (எ.கா சூரிய சக்தி)
 • மாற்று வளங்களான சூரியசக்தி, காற்று மற்றும் கடலலைகள் போன்ற சக்தி வளங்களை நாடுதல் மிகவும் அவசியம்.
 • மண், நீர், காற்று, காடுகள் மற்றும் வனவிலங்கு, கனிம வளங்கள் போன்றவற்றை சீரிய முறையில் பயன்படுத்தி வளங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும்.
 • மனிதனும் தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு இயற்கை வளங்கள் மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் கிடைக்கக் கூடிய படி பயன்படுத்துதல் வேண்டும்.
 • பேணத் தகுந்த முன்னேற்றம் என்பது மனிதனின் மாறிவரும் தேவைக்கேற்ப, ஒரு வெற்றிகரமான மேலாண்மையுடன், இயற்கை வளங்களை அதிகப் பயன்பாட்டிலிருந்தும், மாசுபடுதலிருந்தும் இனிவரும் தலைமுறையினருக்காகப் பாதுகாத்தல் ஆகும்.

இன்று இந்தியா 1000 மில்லியன் மக்கள் தொகையைத் தாண்டி விட்டது.  பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, அனைத்துத் துறைகளிலும் உற்பத்தித் திறனை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவ்வாறு உற்பத்திக்காகத் தொடர்ந்து நாம் வளங்களைப் பயன்படுத்தும்பொழுது, அதனால் ஏற்படும் எதிர் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல் அவசியம். எனவே, கிராம மக்களிடமிருந்து துவங்கி நகர்ப்புற மக்கள் வரை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் மாசுபடுதலினால் ஏற்படும் தீமைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல். (எ.கா) நச்சுப்பொருட்களை வெளியேற்றும் ஆலைகளைத் தகுந்த அரசு நடவடிக்கைகள் மூலம் தடுத்தல், சிறு குடும்ப நெறி, காடுகளை வளர்த்தல் போன்றவை. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் சீரான விகிதத்தில் இயற்கை வளங்களின் பயன்பாடு ஆகிய இரண்டையும், பேணத் தகுந்த முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு கொள்கைகளாகக் கொள்ளுதல். புவியில் உள்ள வளங்களை, தற்போதைய சந்ததியினருக்கு வேண்டிய தேவைகளை வருங்கால சந்ததியினரின் தேவைகளையும், பூர்த்தி செய்யும்படி பயன்படுத்துதல். தொடக்கக் கல்வியிலிருந்தே சுற்றுப் புறத்தை பேண வேண்டியதன் அவசியத்தை பற்றிய கல்வியறிவை வலியுறத்துதல். நம் நாட்டின் வளங்களையும், சுற்றுப்புறத்தையும் பாதுகாத்தலில் உள்ள தனிமனித பொறுப்பையும் உணர வைத்தல். நவீன காலங்களில், மனிதன் ஆடம்பரப் பொருட்களைச் சேகரிப்பதிலும், அதன் மூலம் அவன் வாழ்க்கைத் தரம் உயர்கிறது என்ற போலியான எண்ணங்களையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வளங்களை அதிக அளவில் உற்பத்தித் திறனில் பயன்படுத்துவதைத் தவிர்த்து வளங்களை பாதுகாக்கலாம். தனிநபர் தன் பொறுப்பை உணர்கிற அதே நேரத்தில், இது ஒரு உலகப் பிரச்சினை என்பதையும் உணர்ந்து செயல்படுதல்.

எனவே தற்பொழுது இருக்கும் வளங்களைத் திட்டமிடாமல் உபயோகித்தால் இனிவரும் சந்ததியினருக்கு மொத்தமாக மாசடைந்த ஒர் உலகத்தையும், ஒரு வளமற்ற வாழ்க்கையையும் மட்டுமே தர இயலும். அப்போது நாகரிகம் இல்லாத அறிவியல், மனிதத்தன்மை இல்லாத ஒரு சமுதாயம் போன்றவை உருவாகிவிடும். எனவே மேற்கத்திய அறிவியல் புரட்சியை அப்படியே நம் தேவைகளை ஒட்டி மாற்றி அமைக்காமல், தேவைக்கேற்ப செயல்படுத்தி, சமுதாயமும், சுற்றுப்புறமும் சீர்கெடாமல் காக்க வேண்டியது நம் தலையாய கடமையாகும். எனவே தற்பொழுது நமக்கு வேண்டிய தேவைகளையும் பூர்த்தி செய்து, இனிவரும் சந்ததியினருக்கும் வளங்களைப் பாதுகாத்தல் மிகவும் அவசியம். இதுவே பேணத் தகுந்த முன்னேற்றமும் ஆகும்.

முடிவுரை

உயிர்க்கோளத்தில் மனிதனின் செல்வாக்கு உயர்ந்திருந்தாலும், இயற்கைச் சூழ்நிலைக்கு முரண்பாடாக மனிதன் வாழவே முடியாது என்பதை இந்த அலகின் மூலம் நாம் உணரலாம். எனவே இயற்கைச் சூழ்நிலை சமன்பாடு பாதிக்காதவாறு மனிதன் தன் செயல்களை அமைத்து வாழ வேண்டும். அதே நேரத்தில் வருங்கால சந்ததியினரும் வாழ வழி வகுக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை

3.20512820513
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top