பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / சத்துச்சுழற்சிகளும் சூழ்தொகுதிகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சத்துச்சுழற்சிகளும் சூழ்தொகுதிகளும்

சத்துச்சுழற்சிகளும் சூழ்தொகுதிகளும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பேரண்டத்தில் நமது புவிக்கோள் மட்டுமே உயிரினங்களைக் கொண்டிருக்கிறது. இதற்கு பல்வேறு வகையான உயிர் மற்றும் உயிரற்றச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய சத்துக்கள் உயிரினங்களுக்கும் அவற்றின் சுற்றுப்புறச்சூழல்களுக்கும் இடையே நடைபெறும் செயலெதிர்வுகளின் மூலமாகத் தொடர்ச்சியாக மறுச்சுழற்சி செய்யப்படுகின்றன. வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான வேதியியல் பொருட்களின் மறுச்சுழற்சிகள் நிலவியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளை கொண்டுள்ளன. இத்தகைய வழிப்பாதைகளை உயிர்- புவி-வேதியியல் சுழற்சிகள் என அழைக்கிறோம்.

பண்புகள்

  1. தேக்கங்கள்: வேதியியல் பொருட்களை அதிக அளவில் நெடுங்காலத்திற்குச் சேமித்து வைக்கின்ற இடங்களாகும்.
  2. பரிமாற்றமிடங்கள்: வேதியியல் பொருட்களை மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே தக்க வைத்துக் கொள்கின்ற இடங்களாகும்.
  3. இருப்பிடக்காலம்: ஒரு குறிப்பிட்ட வேதியியல் பொருள் தேக்கத்திலோ அல்லது பரிமாற்ற இடத்திலோ தங்குகின்ற காலமாகும்.

எடுத்துக்காட்டாக, நீர்சுழற்சிக்கு பெருங்கடல்கள் தேக்கங்கள் என்றால், மேகங்கள் பரிமாற்ற இடங்களாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக பெருங்கடல்கள் நீரின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். ஆனால் மேகங்களில் நீரின் இருப்பிடக்காலம் ஒரு சில நாட்களேயாகும். தவிர உயிரினச்சமுதாயங்களும் பரிமாற்ற இடங்களாகச் செயல்படுகின்றன. இவை வேதியல் பொருட்களை சுழற்சி இயக்கத்தின் ஒரு படிநிலையிலிருந்து மற்றொரு படிநிலைக்கு கொண்டு செல்கின்றன.

அயனமண்டல மழைக்காடுகளில் அமைந்துள்ள மரங்கள் அந்நிலப்பரப்பிலிருந்து நீரை மேலே கொண்டு வருகின்றன. அவ்வாறு மேலே கொண்டு வருகின்ற அந்நீர் வளிமண்டலத்திற்கு நீராவியாக சென்றடைகிறது. அதுபோலவே பவழப்பாளிப்புகள் கடல் நீரிலிருந்து கார்பனை எடுத்துக்கொண்டு அதனைச் சுண்ணாம்புப் பாறையாக மாற்றுகின்றன. இவ்வாறு வேதியியல் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கடத்துவதற்கு உரிய ஆற்றல் சூரியனிடமிருந்தோ அல்லது புவியின் கவசப்பகுதி மற்றும் கருவப்பகுதி ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பத்திலிருந்தோ பெறப்படுகின்றன.

புவி எண்ணற்ற சுழற்சி இயக்கங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் உயிரினங்களுக்கு தேவைப்படுபவை நான்கு சுழற்சி இயக்கங்களாகும் அவையாவன, நீர் சுழற்சி ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்ஸைடும் நீரும் எடுத்துக்கொள்ளப்பட்டு கார்போ ஹைட்ரேட்டுகளும் ஆக்ஸிஜனும் உற்பத்தி ஆகின்றன. சுவாசித்தலின் வெளிபடுப்பொருட்கள் ஒளிச்சேர்க்கைக்கு இடுப்பொருட்களாகின்றன. அதுப்போலவே ஒளிச்சேர்க்கையின் வெளிபடுப் பொருட்கள் சுவாசித்தலுக்கு இடுப்பொருட்களாகின்றன. இத்தகைய எதிர்செயல்களும் ஆற்றல் கையாளப்படுகின்ற முறையின் காரணமாக இணைச்செயல்களாகின்றன. ஒளிச்சேர்க்கையின் பொழுது சூரியனிடமிருந்து ஆற்றல் பெறப்படுகின்றது. அவ்வாறு பெறப்பட்ட ஆற்றல் கார்போ ஹைட்ரேட்டுகளாக சேமிக்கப்பட்டு, பின்னர் சுவாசிக்கும் பொழுது வெளியேற்றப்படுகின்றது. தாவரங்களும், விலங்கினங்களும் சுவாசிக்கின்றன. ஆனால் தாவரங்கள் மட்டுமே ஒளிச்சேர்க்கை செய்கின்றன.

பெருங்கடல்களும், பாறைகளும் கார்பனின் முக்கிய தேக்கங்களாக அமைந்துள்ளன. கார்பன் டை ஆக்ஸைடு நீரில் எளிதில் கரையக்கூடியது. அவ்வாறு கரைந்த பின்னர் திடமான கால்சியம் கார்பனேடுகளாக மாறுகிறது.

  1. கார்பன் சுழற்சி
  2. நைட்ரஜன் சுழற்சி மற்றும்
  3. பாஸ்பரஸ் சுழற்சி

கார்பன் சுழற்சி

சுவாசித்தலின் போது கார்போ ஹைட்ரேட்டுகளும் ஆக்ஸிஜனும் எடுத்துக்கொள்ளப்பட்டு கார்பன் டை ஆக்ஸைடும், நீரும் ஆற்றலும் உற்பத்தி ஆகின்றன. இத்தகைய எதிர்செயல்களை பவழப்பாளிப்புகளும் ஆல்கேக்களும் தூண்டுகின்றன. ஆதலால்தான் சுண்ணாம்பு பாறைத்தொடர்கள் கட்டமைக்கப்படுகின்றன.

நிலத்திலும் நீரிலும் வாழுகின்ற தாவரங்கள் கார்பன்டை ஆக்ஸைடு எடுத்துக் கொண்டு ஒளிச்சேர்க்கையின் போது கார்போ ஹைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன. தாவரங்களில் உள்ள இந்த கார்பன் மூன்று விதத்தில் சிதைந்து விடுகின்றது. தாவரங்கள் சுவாசிக்கும் பொழுது வளிமண்டலத்திற்கு திருப்பி அனுப்பப்படலாம்: விலங்குகளால் உண்ணப்படலாம் அல்லது தாவரங்கள் மடியும் போது அதனுடன் புதைந்தும் போகலாம்.

ஒரு விலங்கோ அல்லது தாவரமோ மடிகின்ற பொழுது அவற்றில் காணப்படும் கார்பனுக்கு இரண்டு விதமான முடிவுகள் ஏற்படுகின்றன. கார்பனை மட்டுண்ணிகள் வளிமண்டலத்திற்கு திருப்பி அனுப்புகின்றன அல்லது மண்ணில் புதைப்பட்டுப் பின்னர் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கைவாயு போன்ற படிமப் பொருட்களாக மாறி விடுகின்றன. இத்தகைய படிமப்பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கப்படும்பொழுது கார்பன்டை ஆக்ஸைடாக வளிமண்டலத்தை மீண்டும் சென்றடைகிறது. இல்லையெனில் எரிமலை வெடிக்கும் பொழுது மட்டுமே சுண்ணாம்புப்பாறைகள் மற்றும் இதர படிவுப்பாறைகளிலிருந்து கார்பன் வெளியேறுகின்றது. அல்லது இப்பாறைகள் மேற்பரப்பிற்கு தள்ளப்பட்டு மெதுவாகச் சிதைவுறும் வேளைகளிலும் கார்பன் வெளியேற்றப்படுகின்றது.

படிமப்பொருட்களை எரிக்கும் பொழுது கூடுதலாகக் கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தைச் சென்றடைகிறது. இதுபோன்ற மனித நடவடிக்கைகள் கார்பன் சுழற்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவை பெருங்கடலிலும் வளிமண்டலத்திலும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்து வருவதை குறிக்கின்றன. கார்பன்டை ஆக்ஸைடின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்து வருவதினால் உலகளவிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

நைட்ரஜன் சுழற்சி

சுழற்சி இயக்கங்களிலேயே நைட்ரஜன் சுழற்சியை புரிந்து கொள்வது சற்றுக் கடினமாகும். ஏனெனில் நைட்ரஜனுக்கு பல முக்கிய வடிவங்கள் உள்ளன. நைட்ரஜனின் பல வடிவ மாற்றங்களுக்கும் உயிரினங்களே காரணமாக அமைகின்றன. நமது உடலுக்கு புரதச்சத்து தேவைப்படுகின்றது. இப்புரதச்சத்தை அமினோ அமிலங்கள் உருவாக்குகின்றன. அமினோ அமிலத்தின் ஒரு பகுதியை உருவாக்க நைட்ரஜன் தேவைப்படுகிறது. புரதச்சத்து தோலாகவும், தசையாகவும் பிளவுபடுவதற்கும் கார்பன் அல்லது ஆக்ஸிஜன் போன்ற இதர வாயுக்களுடன் இணைவதற்கும் ஏராளமான ஆற்றல் தேவைப்படுகிறது.

வளிமண்டலத்திலிருந்து நைட்ரஜன் வாயு இரண்டு வழிகளில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. முதலில் மின்னலில் இருந்து வெளிப்படும் ஆற்றல் நைட்ரஜனை எரித்து நைட்ரேட்டாகப் பொருத்துகிறது. நைட்ரேட் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களுடன் கூடிய நைட்ரஜன் ஆகும். உரத்தொழிற்சாலையில் நைட்ரஜன் உரத்தைத் தயாரிக்க இத்தகைய செயல்முறை தான் கையாளப்படுகிறது. இரண்டாவதாக நைட்ரஜனைப் பொருத்தும் பாக்டீரியாக்களினால் நைட்ரஜனின் இதர வடிவங்கள் பொருத்தப்படுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் மின்னலிலிருந்து வெளிப்படும் ஆற்றலுக்குப் பதிலாக சிறப்பான என்சைம்களைப் பயன்படுத்துகின்றன. நைட்ரஜனைப் பொருத்தும் பாக்டீரியாக்கள் நைட்ரஜனை நைட்ரேட்டுகளாகவோ அல்லது அமோனியாவாகவோ பொருத்துகின்றன.

பெரும்பான்மையான தாவரங்கள் நைட்ரேட்டை எடுத்துக் கொண்டு அமினோ அமிலங்களாக மாற்றுகின்றன. விலங்குகள் தங்களுக்குத் தேவையான அமினோ அமிலத்தைத் தாவரங்களை அல்லது இதர விலங்கினங்களை உணவாகக் கொள்வதன் மூலமாக பெற்றுக் கொள்கின்றன. தாவரங்கள் அல்லது விலங்குகள் மடியும் பொழுதும் விலங்கினக்கழிவுகள் வெளியேறும் பொழுதும் நைட்ரஜன் மீண்டும் மண்ணுக்கே திரும்பி விடுகின்றன. விலங்கினங்களின் கழிவுகளாகவோ அல்லது மட்டுண்ணிகளின் வெளிபடு பொருட்களாகவோ மண்ணிற்கு திரும்புகின்ற நைட்ரஜன் அமோனியா வடிவத்தில் உள்ளது. இந்த அமோனியா நச்சுத்தன்மை வாய்ந்தது. ஆனால் மண்ணிலும், நீரிலும் இயற்கையாக காணப்படும் சில நைட்ரைட்-பாக்டீரியாக்கள் அமோனியாவை எடுத்துக்கொண்டு அதை மீண்டும் நைட்ரைட்டுகளாக மாற்றுகின்றன.

இந்த நைட்ரைட்டுகளும் சிறிது நச்சுத்தன்மைக் கொண்டவை. ஆனால் நைட்ரேட்பாக்டீரியா என்ற ஒரு வகை பாக்டீரியா நைட்ரைட்டுகளை மீண்டும் நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன. இந்த நைட்ரேட்டுகளை தாவரங்கள் எடுத்துக்கொள்வதால் மீண்டும் சுழற்சி தொடர ஏதுவாகின்றது. தவிர, சிதைக்கும் தன்மைக் கொண்ட சில பாக்டீரியாக்கள் நைட்ரேட்டுகளை நைட்ரஜனாக இணைத்து மீண்டும் நைட்ரஜன் வாயுவாக மாற்றிவிடுகின்றன.

பாஸ்பரஸ் சுழற்சி

சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது பாஸ்பரஸ் சுழற்சியாகும். பாஸ்பரஸிற்கு பாஸ்பேட் என்ற ஒரு வடிவம் மட்டுமே உண்டு. இதில் ஒரு பாஸ்பரஸ் அணுவும் நான்கு ஆக்ஸிஜன் அணுக்களும் உள்ளன. இந்த மூலக்கூறு வளிமண்டலத்திற்கு செல்லுவதேயில்லை, எப்பொழுதுமே ஓர் உயிரனத்தின் பகுதியாகவோ, நீரில் கரைசலாகவோ அல்லது பாறை வடிவத்திலோ அமைந்துள்ளது. குறிப்பாக பாஸ்பேட்டைக் கொண்டிருக்கும் பாறைகள் நீருடன் கலக்கும்பொழுது அதிலும் குறிப்பாக சிறிது அமிலத்தன்மை கொண்ட நீரில் சிதைவடைந்து கரைசலாக மாறி விடுகின்றன. மண்ணிலிருந்து இந்த பாஸ்பரஸை தாவரங்கள் தங்களின் வேர்கள் வழியாக மேலே எடுத்து வந்து பல வழிகளில் பயன்படுத்திக் கொள்கின்றன.

பாஸ்பரஸ் செல்மெம்பரேன்களின் முக்கியக் கூறாக விளங்குகின்றது. விலங்குகள் தாவரங்களை உண்ணுவதன் மூலமாக பாஸ்பரஸை பெற்றுக் கொள்கின்றன. விலங்குகள் தங்களின் பாகங்களான எலும்பு, பற்கள் மற்றும் கூடுகள் முதலானவற்றிற்கு பாஸ்பரஸைப் பயன்படுத்திக்கொள்கின்றன. விலங்குகள் அல்லது தாவரங்கள் மடிந்து மட்டுண்ணிகளால் சிதைக்கப்படும் பொழுது பாஸ்பரஸ் மண் அல்லது நீருக்கு மீண்டும் திரும்பி விடுகிறது. அங்கு மற்றொரு தாவரத்தினால் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. பாஸ்பரஸ் முழுவதுமாக நீக்கப்பட்டு பெருங்கடல்களின் வெகு ஆழத்தில் கொண்டு செல்லப்பட்டு படிவுப்பாறைகளாக உருப்பெறும் வரை இந்த பாஸ்பரஸ் சுழற்சி தொடர்ந்து மீண்டும் மீண்டும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மறுபடியும் இப்படிவுப்பாறைகள் புவி மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு சிதைவுறும் பொழுது பாஸ்பரஸ் அப்பாறைகளிலிருந்து வெளியேறுகின்றது.

பாஸ்பரஸ் சுழற்சியில் இருவித விலங்குகள் சிறப்பான பங்கினை வகிக்கின்றன. பெரும்பாலும் மனிதர்கள் பாஸ்பரஸை அதிகமாக கொண்டிருக்கும் பாறைகளை வெட்டி எடுக்கின்றனர். எடுத்துக்காட்டாக முன்னொரு சமயத்தில் கடலின் அடித்தளமாக இருந்த ஃபிளாரிடாவில் தற்பொழுது மிகப்பெரிய பாஸ்பேட் சுரங்கங்கள் உள்ளன. பாஸ்பேட் உரங்களாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பாஸ்பேட்டை வெட்டி எடுப்பது மற்றும் உரங்களாக பயன்படுத்துவது போன்றவை பாஸ்பரஸ் சுழற்சியை மிகவும் துரிதமாக செயல்பட வைக்கின்றன. அதனால் அவ்வட்டாரங்களில் குறிப்பாக கடற்கரைப்பகுதிகள், ஆற்று முகத்துவாரங்கள், கழிவுகள் நீருடன் கலக்குமிடங்கள் போன்ற இடங்களில் பாஸ்பரஸ் ஏராளமாக சேர்ந்து விடுகின்றன. இத்தகைய இடங்களில் சேருகின்ற அபரிமிதமான பாஸ்பேட்டினால் ஆல்கேக்களின் வளர்ச்சியும் நீரில் அதிகரிக்கிறது. ஆல்கேக்கள் அவற்றின் வளர்ச்சிக்காக அந்நீரிலுள்ள ஆக்ஸிஜனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதால் அந்நீரில் வாழ்கின்ற இதர உயிரினங்கள் அழிந்து போகின்றன. இவ்வாறு நீரில் ஆல்கேக்கள் மிக வேகமாக வளர்ச்சியடைவதை யுட்ரோஃபிகேஷன் என அழைக்கிறோம்.

மற்றொரு விலங்கினமான கடல் பறவைகளும் பாஸ்பரஸ் சுழற்சியில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. பாஸ்பரஸை சத்தாகக் கொண்டிருக்கின்ற மீன்களை பெருங்கடல்களிலிருந்து கடல் பறவைகள் எடுத்துவந்து நிலத்தில் போடுகின்றன. ஆதலால் கடல் பறவைகளும் பெருங்கடல்களிலிருந்து குறிப்பிட்ட அளவு பாஸ்பரஸை நிலத்திற்கு கொண்டு வருகின்றன. கடல் பறவைகளின் எச்சத்திலும் பெருமளவு பாஸ்பரஸ் காணப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து பாஸ்பரஸ் படிமங்களாக மாறுகின்றன. ஒரு சில நாடுகளின் பொருளாதாரம் இப்படிமங்களை வெட்டி எடுப்பதையே ஆதாரமாக கொண்டுள்ளது.

சூழ்தொகுதி

ஓர் உயிரினச்சமுதாயம் ஒரு சூழியல்தொகுதி எனலாம். அல்லது சுருக்கமாக சூழ்தொகுதி என அழைக்கலாம். ஏ. ஜி. டேன்ஸ்லே என்ற தாவரவியில் வல்லுநர் சூழ்தொகுதிக் கோட்பாட்டை 1935ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

ஒரு சூழ்தொகுதியின் முக்கிய பாகங்கள்:

சூழ்தொகுதிகள் பல வகையான உயிர் மற்றும் உயிரற்ற பாகங்களை கொண்டிருக்கின்றன. தவிர இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இயங்குகின்றன. சூழ்தொகுதியின் முக்கியமான சில பகுதிகளாவன: மண், வளிமண்டலம், சூரிய கதிர் வீச்சு, நீர் மற்றும் உயிரினங்கள்.

மண் என்பது சிதைந்த பாறைத்துண்டுகள், அதிகமாக மாற்றமடைந்த மண் கனிமதுகள்கள், உயிர்சத்துகள் மற்றும் உயிரினங்கள் போன்றவற்றை கொண்டிருக்கும் ஒரு கலவையாகும். இம்மண் உயிரினங்களுக்குத் தேவையான சத்துக்களையும் நீரையும் ஒரு இருப்பிடத்தையும் அமைப்புரீதியான வளர்ச்சிக்கான ஒரு ஊடகத்தையும் அளிக்கின்றது. மண்ணில் வளருகின்ற தாவரங்கள் சூழ்தொகுதியின் ஒரு பாகமாக மண்ணுடன் சத்துச்சுழற்சி மூலமாக பிணைக்கப்பட்டு உள்ளன.

சூழ்தொகுதிகளில் காணப்படுகின்ற உயிரினங்களின் ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன்டை ஆக்ஸைடையும் சுவாசத்துக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் வளிமண்டலம் அளிக்கின்றது. வளிமண்டலத்துக்கும் புவியின் மேற்பரப்பிற்கும் இடையே நீரானது நீராவியாதல், நீராவிப்போக்கு மற்றும் மழைப்பொழிவு போன்ற செயல்முறைகளின் மூலமாக சுழல்கின்றது.

சூழ்தொகுதிகளில் சூரியக்கதிர்வீசல் வளிமண்டலத்தை வெப்பப்படுத்தவும், நீராவியாதல் மற்றும் நீராவிப்போக்கு ஆகியவற்றின் மூலமாக நீரை வளிமண்டலத்துக்குள் செலுத்தவும் பயன்படுகிறது. ஒளிச்சேர்க்கைக்கும் சூரிய வெளிச்சம் மிக அவசியமானது. ஒளிச்சேர்க்கை தாவர வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு தேவைப்படுகின்ற ஆற்றலையும் இதர உயிரினங்களுக்கான சத்துணவுக்குத் தேவைப்படுகின்ற ஆற்றலையும் அளிக்கின்றது.

உயிரினங்களின் திசுக்களில் பெரும்பகுதி 90% வரையிலோ அல்லது அதற்கு மேலோ நீரைக் கொண்டுள்ளன. ஒரு சில செல்களில் காணப்படும் புரோட்டோபிளாசத்தில் நீரினளவு 10 சதவீதத்திற்கு கீழே குறைந்தாலும் அவற்றால் வாழ இயலும்.

ஆனால் புரோட்டோபிளாசத்தில் காணப்படும் நீரினளவு 30-50 சதவீதம் அளவிற்கு குறையும் பொழுதே பெரும்பான்மையான செல்கள் மடிந்து போகின்றன. நீர் ஒரு ஊடகமாக செயல்படுவதினால் கனிமச்சத்துக்கள் வேர்களின் வழியாக தாவரங்களில் நுழைந்து இடம் பெறுகின்றன. இலைகளின் பசுமை மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது நிகழுகின்ற ஒளிச்சேர்க்கைக்கான வேதியியல் எதிர்விளைவுகள் முதலானவற்றை பராமரிக்க நீர் அவசியமாகின்றது. இந்நீரை தாவரங்களும் விலங்குகளும் புவியின் மேற்பரப்பில் இருந்தும் மண்ணிலிருந்தும் பெற்றுக்கொள்கின்றன.

சூழ்தொகுதியின் வகைகள்

உயிர்கோளத்தில் சூழியல் சமுதாயங்கள் அவற்றின் சுற்றுப்புறச்சூழலின் மீது புரிகின்ற செயலெதிர்வுகளினால் பலவகையான சூழ்தொகுதிகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இத்தகைய சூழ்தொகுதிகள் இருபெரும் பிரிவுக்குள் அடங்குகின்றன.

நீர் சூழ்தொகுதிகள் மற்றும் நில சூழ்தொகுதிகள்.

கடல் நீரிலும் நிலத்தின் மேலுள்ள நன்னீரிலும் வாழ்கின்ற உயிரினங்களை உள்ளடக்கியது நீர் சூழ்தொகுதிகளாகும். பெருங்கடல்கள், கடற்கரையோர முகத்துவாரங்கள் மற்றும் பவழத்தொடர்கள் முதலியன கடல் சூழ்தொகுதிகள் ஆகும். ஏரிகள், குளங்கள், ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் முதலியன நன்னீர் சூழ்தொகுதிகள் ஆகும்.

கண்ட உயர்நிலங்களின் பரவலாக காணப்படும் தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கியது சூழ்தொகுதிகளாகும். காலநிலையும் மண்ணும் நில சூழ்தொகுதிகளை நிர்ணயிக்கின்றன. ஆதலால் நில சூழ்தொகுதிகள் இயற்புவியியலுடன் மிக நெருக்கமாக பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது எனக் கூறலாம். நில சூழ்தொகுதிகளில் இருபிரிவுகள் உள்ளன. அவையாவன: இயற்கை சூழ்தொகுதிகள் மற்றும் கலாச்சார சூழ்தொகுதிகள்.

இயற்கை சூழ்தொகுதிகளில் அடையாளம் காணத்தக்க அளவு மிகப் பெரிய பிரிவாக உயிரின சூழ்வாழிடங்கள் (Biomes) உள்ளன. உயிர்கோளத்தில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் போன்றவற்றின் அமைப்புகளிடையே காணப்படும் செயலெதிர்வுகளை உயிரின சூழ்வாழிடங்கள் உள்ளடக்கியுள்ளன. இருப்பினும் இதர உயிரினங்களுடன் ஒப்பிடும் பொழுது பசுந்தாவரங்களே பெருமளவில் உயிரின் சூழ்வாழிடங்களை ஆக்கிரமித்துள்ளன.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களுடன் இயற்கை தாவரங்களை பிரதிபலிக்கின்ற உயிரின சூழ்வாழிடங்களையும் மனிதர்களால் மாற்றப்பட்டு அவர்களால் பேணப்படுகின்ற தாவரங்களையும் ஒப்பிடலாம். நிலநடுக்கோட்டு மழைக்காலநிலைக் கொண்ட பகுதிகளில் பெரும்பான்மையான பரப்புகளில் இன்றளவும் இயற்கை தாவரங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் அமைந்துள்ள மழைக்காடுகளில் மனிதர்கள் காலடிபட்ட இடங்கள் மிக சொற்பமே ஆகும். ஆர்க்டிக் தூந்திரமும் துணை குளிர்மண்டலத்தில் காணப்படும் ஊசியிலைக் காடுகளும் இன்றளவும் இயற்கையாகவே அமைந்துள்ளன. அதற்கு எதிர்மாறாக மிதவெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கண்டப்பரப்புகள் வேளாண்மை, மேய்ச்சல் மற்றும் நகரமயமாதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக அந்நிலப்பரப்பு முழுவதுமாக மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டன.

மனிதர்கள் தாவர இனங்களை அவற்றின் வாழிடத்திலிருந்து வெளிநிலங்களுக்கும் புதிய சுற்றுப்புறச்சூழலுக்கும் கொண்டு சென்று விட்டனர். இதற்கு யூக்கலிப்டஸ் மரம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இம்மரங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து மிக தொலைதூரத்தில் அமைந்துள்ள வட அமெரிக்கா, வடஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியல் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

3.15
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top