பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / சுற்றுச்சுழல் வளர்ச்சி மற்றும் பேரிடர் - பஞ்சதத்துவ சமநிலை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சுழல் வளர்ச்சி மற்றும் பேரிடர் - பஞ்சதத்துவ சமநிலை

சுற்றுச்சுழல் வளர்ச்சி மற்றும் பேரிடர் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

"இந்த இளம் நூற்றாண்டு எதிர்கொண்டு வரும் மிகவும் சிக்கலான சவால்களில் ஒன்று தட்ப வெப்பநிலை மாற்றம் ஆகும். இந்த சவாலிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் திறன் எந்த நாட்டிற்கும் இல்லை."

பிரச்சினைகள்

இந்தியப் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, 35.4 கோடிமக்களின் (உலக ஏழைகளில் 27% பேர்) வறுமை ஆகியவற்றை எதிர்த்துப் போராட அதிவேக பொருளாதார வளர்ச்சி தான் நாட்டின் இப்போதைய தேவை ஆகும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது தொழில்துறையின் சிறப்பான செயல்பாடும், மின்னனுமாற்றம், தகவல் தொழில்நுட்பம், ஜவுளித்துறை, மருந்து மற்றும் அடிப்படை வேதிப்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்தித்துறையின் வியத்தகு வளர்ச்சியும் தான். அதிவேகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தியாவின் நுகர்வு கலாச்சார முறைக்கும் பங்கு உண்டு. கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவின் நுகர்வு கலாச்சார முறை பெருமளவில் மாற்றங்களை தந்திருக்கிறது. இந்த மாற்றம் அதிக வளர்ச்சியை எட்டுவதற்கான இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திறன்கள் மீதான அழுத்தம் ஏற்கனவே பெருமளவில் அதிகரித்திருக்கிறது.

எனவே, அதிக மக்கள் தொகை அடர்த்தி, எளிதில் பாதிக்கப்படும் தன்மை கொண்ட சூழலியல், மிகமோசமான தட்பவெப்பநிலை, பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கை வளம் சார்ந்த சுற்றுச்சூழலின் நீடிக்க வல்லத்தன்மையை குறிப்பிடத்தக்க அளவில் சார்ந்திருப்பது ஆகியவை இந்தியாவின் நீடித்த வளர்ச்சிப் பாதையில் மிகப்பெரிய சவால்களாக விளங்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான இலக்குகள் அனைத்தும் எல்லா நாடுகளாலும் வளர்ச்சியடைந்த அல்லது வளரும் நாடுகள், சந்தை சார்ந்த அல்லது மையத்திட்டமிடல் கொண்ட நாடுகள் - தாக்குபிடிக்கக்கூடிய வகையில் வகுக்கப்படவேண்டும். இதற்கான விளக்கங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் இந்த இலக்குகள் அனைத்தும் சில பொது அம்சங்களை பகிர்ந்துகொண்டிருப்பதுடன், நீடிக்கத்தக்க வளர்ச்சி மற்றும் அதை எட்டுவதற்கான விரிவான உத்தி மற்றும் செயல்திட்டம் என்ற அடிப்படை தத்துவத்தின் மீதான கருத்தொற்றுமையில் உருவானவையாக இருக்க வேண்டும்.

மனிதத் தேவைகளும், ஆசைகளும் மனநிறைவளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் வளர்ச்சியின் முக்கிய நோக்கங்கள் ஆகும். உணவு, உடை, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகள் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. அடிப்படைத் தேவைகளைத் தாண்டி தங்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு இந்திய மக்களுக்கு உண்டு. வறுமை, சமத்துவமின்மை என்பன போன்ற அடிக்கடி ஏற்படும் நோய்கள் நிறைந்த உலகம் சூழலியல் உள்ளிட்ட பிரச்சனைகளால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. நீடித்த வளர்ச்சி என்பது மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறை வேற்றுவதாகவும், உயர் தரமான வாழ்க்கை என்ற மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கான திறன்கள்

அகராதிப்படி, சுற்றுச்சூழல் என்பதற்கான பொருள் மக்கள், விலங்குகள் அல்லது தாவரங்களின் வளர்ச்சி, வாழும் அல்லது பணிபுரியும் சூழலில் மேம்பாடு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் வெளிப்புற காரணிகள் ஆகும். சுற்றுச்சூழல் எனப்படுவது ஏதேனும் ஒன்றை சுற்றியுள்ள இடம் மற்றும் காலச்சூழலை குறிப்பிடுவதாகும். சுற்றுச்சூழல் என்பதன் பொருள் காலப் போக்கில் வேகமாக மாறிவருகிறது. தொழில் வளர்ச்சி ஏற்படாத காலத்தில் பூமியின் நிலம், காற்று, நீர், பொதுமக்கள் தங்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் சுற்றுச்சூழல் என்பதன் திறனை விரிவுபடுத்திவிட்டனர்.

சுற்றுச்சூழல் என்பது கீழ்கண்ட 4 அம்சங்களைக் கொண்டதாகும்.

வளிமண்டலம்

வளிமண்டலம் எனப்படுவது பூமியை பாதுகாக்கும் வகையில் அதைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல் அமைந்துள்ள காற்று மண்டலம் ஆகும்.

நீர்மண்டலம்

நீர்மண்டலம் என்பது பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள், ஓடைகள், அணைகள் துருவப்பணி சிகரங்கள், பனிவயல்கள், நிலத்தடிநீர் என அனைத்து வகையான நீர் ஆதாரங்களையும் உள்ளடக்கியதாகும்.

பாறை மண்டலம்

பாறை மண்டலம் எனப்படுவது பூமியை சுற்றி அமைந்துள்ள உறை ஆகும். பூமி அடுக்குகள் மற்றும் மண்ணில் உருவாகும் தாதுப்பொருட்கள் இந்த மண்டலத்தில் உள்ளன. உதாரணம்: தாதுக்கள், இயற்கை பொருட்கள், தண்ணிர், காற்று ஆகியவை.

உயிர் மண்டலம்

உயிர்மண்டலம் எனப்படுவது உயிரினங்கள் வாழும் பகுதியையும் அந்த உயிரினங்கள் சுற்றுச்சூழலுடன் அதாவது வளிமண்டலம், நீர்மண்டலம், பாறைமண்டலம் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்வதையும் குறிக்கும்.

சுற்றுச்சூழலை பாதுாக்க வேண்டியதன் முக்கியத்துவம், கண்மூடித்தனமாக மாசுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி சுற்றுச்சூழலை சீரழிப்பதை தடுத்தல் ஆகியவை குறித்து விளக்குவதுதான் சுற்றுச்சூழல் கல்வி ஆகும். இந்தக் காலத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அளவில் மட்டுமின்றி, சிக்கலிலும் பெரிதாகி வருகின்றன. இவை பூமியில் உள்ள மனிதகுலத்தின் உயிர் வாழ்தலுக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அடிப்படையில் சுற்றுச்சூழல் கல்வி என்பது இயற்கை உலகின் சிறப்புகளைப் பற்றியும், அதன்மீது மனிதர்கள் ஏற்படுத்தும் மோசமான தாக்கங்களைப் பற்றியும் விளக்கும் பல்துறை பாடம் ஆகும். பூமயில் உள்ள அளவான வளங்களைக் கொண்டு மனித நாகரீகம் நீடித்து வாழ்வதற்கான நடைமுறை தீர்வுகளை இது தேடுவதால் அடிப்படையில் இது ஒரு பயன்பாட்டு அறிவியல் பாடம் ஆகும்.

சுற்றுச்சூழலின் நிலை

இந்தியா இன்னும் வளரும் நாடாகவே உள்ளது. மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. போதிய குடிநீர் வசதியின்மை, துப்பறவு வசதியின்மை உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் வறுமை தான் மிகவும் கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் இயற்கை வளங்கள் குறைந்து வருவதுடன் காடுகளும் படிப்படியாக அழிந்து வருகின்றன. இன்னொருபுறம், அதிக பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இயற்கைச்சூழலை கெடுப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதனால் காற்று, நீர், அணு உள்ளிட்டவை மாசுபடுகின்றன. மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது, மோசமடைந்து வரும் சூழலுக்கு ஏற்ற வேகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கொள்கைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துவரும் போதிலும் இவற்றில் பெரும்பாலானவை இன்னும் செயல்வடிவம் பெறவில்லை.

சுற்றுச்சூழலை பொறுத்தவரை மிகவும் கவலையளிக்கும் விஷயங்கள் என்னவெனில், தட்பவெப்ப நிலைமாற்றம், புவி வெப்பமயமாதல், இயற்கை பேரிடர்கள், மண் மற்றும் நிலம் சீரழிவு, பல்லுயிர் வாழிட இழப்பு, நீர் மற்றும் காற்று மாசுபடுதல் ஆகியவை ஆகும். இவைதான் மனிதர்கள் வாழும் சுற்றுச்சூழல் சமநிலையை பெரிய அளவில் பாதிக்கின்றன. நிறைவாக ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி வளையத்தில் உணர்ந்து கொண்ட விஷயம் என்னவென்றால், அமைதியான மனித வாழ்க்கை என்பது பகல் கனவாக மாறிவருகிறது என்பதுதான். பூமியில் மனிதர்களின் நல்வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பெரிய அளவில் பேரிடர்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்து வருகிறது. மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான, அதாவது நாம் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளான பஞ்சதத்துவங்களின் (நீர், காற்று, பூமி, நெருப்பு, நிலம்) சமநிலையை நாம் இழந்ததால் தான் இவை அனைத்தும் நிகழ்கின்றன. பஞ்ச தத்துவத்தின் சமநிலை பாதிக்கப்பட்டால் மனித வாழ்க்கையும் பாதிக்கப்படும். மனத வாழ்க்கையின் பாதிப்புகள் பலமடங்கு அதிகரிக்கும். பஞ்சதத்துவத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாகத் தான் எல்லா இயற்கைப்பேரிடர்களும் ஏற்படுகின்றன.

அதிகரித்துவரும் முரண்பாடுகள்

30 ஆண்டுகளுக்கு முன்பு உலகிலுள்ள வளரும் நாடுகளில் மக்களில் பாதி பேர் கடுமையான வறுமையில் நாள்தோறும் 1.5 அமெரிக்க டாலருக்கு குறைவான வருமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இன்று வளரும் நாடுகளின் மக்களில் கால்வாசி பேர் கடுமையான வறுமையில் வாடுகின்றனர். முன்னேற்றம், அதிவேக பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக உலகின் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் தனிநபர் வருமானம் இருமடங்காக உயர்ந்துள்ள போதிலும் அங்குள்ள மக்களின் தேவைகள் தொடர்ந்து பெரிய அளவிலேயே உள்ளன. பல பேர் வறுமையிலும் பட்டினியிலும் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வளரும் நாடுகளின் வளர்ச்சியும், வறுமை ஒழிப்பும்தான் முன்னுரிமை அளிக்கப்படும் அம்சங்களாக உள்ளன.

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் தட்பவெப்ப நிலை மாற்றம் இந்த சவாலை சிக்கலானதாக மாற்றியுள்ளது. முதலாவதாக தட்பவெப்ப நிலை மாற்றத்தின் விளைவுகள் அதிக வெள்ளம், வறட்சி, கடுமையான சூறாவளி, அதிக வெட்பம், கடுங்குளிர் ஆகியவற்றின் வடிவில் ஏற்கெனவே தெரியத்தொடங்கிவிட்டன. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் தனிமனிதர்கள் நிறுவனங்கள், அரசு என அனைத்துத் தரப்பினரையும் பாதிப்பதுடன், நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தவிடாமல் பறித்துக்கொள்கிறது. இரண்டாவதாக, தட்பவெப்ப நிலை மாற்றம் இப்போதுள்ள அளவிலேயே தொடர்ந்தால் அது வளர்ச்சிக்கு இன்னும் அதிக மற்றும் கடுமையான சவால்கள் ஏற்படும்.

தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் சராசரி வெட்பநிலை, உலகம் தொழில் மயமாவதற்கு முன்பு இருந்ததைவிட, 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். தட்பவெப்ப நிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுப்பதற்காக நாம் எவ்வளவு சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்கு குறைவாக கட்டுப்படுத்த முடியாது. தட்பவெப்ப நிலை மாற்றத்தை தாங்கிக்கொள்வதற்கு வெப்பநிலை உயர்வு 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. எனவே, நம்முன் தற்போதுள்ள மிகப் பெரிய சவால் என்னவென்றால், வளர்ச்சியின் தேவைக்கும் தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கும் இடையே சமநிலை எவ்வாறு பராமரிப்பது? என்பதுதான்.

வெப்பநிலை அதிகரித்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை கண்டறிவதற்காக, மலைப் பகுதிகளில் வெப்பநிலைகளை செயற்கை முறையில் அதிகரிக்கச் செய்து நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, வெப்பநிலை உயர்வால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிய வருகிறது. குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் வாழக்கூடிய உயிரினங்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் அழிந்துவிடும் என்றும், பணி வயல்களின் அளவும், பருவகாலங்களில் ஏற்படும் பனியின் அளவும், குறையும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், மழை மற்றும் பனிப்பொழிவில் மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, மண்ணின் நிலைத்தன்மையும், வேளாண்மை, சுற்றுலா, நீர் மின் உற்பத்தி, தண்ணிர் புகுதல் போன்ற சமூக பொருளாதார செயல்பாடுகளும் பாதிக்கப்படும். மக்களின் நல்வாழ்வுக்கான வளங்களும், பொழுதுபோக்கும் கூட பாதிக்கப்படும்.

இந்த மாற்றங்கள் இயற்கைச் சுற்றுச்சூழலில் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் மனித சமூகம் மற்றும் பொருளாதாரத்திலும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கும். தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் சமூக பொருளாதாரத் துறைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு மதிப்பீடுகளைச் செய்கிறார்கள். ஆனால் நிஜத்தில் விளைவுகள் இன்னும் மோசமானதாக இருக்கும். ஏனெனில், தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஒரு துறையில் ஏற்படும் பாதிப்பு மற்ற துறைகளிலும் மறைமுகமான தாக்கங்களை ஏற்படுத்தும். தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்களை மதிப்பிட வேண்டும் என்றால் தேசிய அளிவிலும், உள்ளூர் அளவிலும் தட்பவெப்ப நிலை மாற்றம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை மதிப்பிட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். தட்பவெப்ப நிலை அமைப்பு, தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகியவற்றை புரிந்துகொள்வதில் பெரிய அளவில் முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளபோதிலும், அவற்றால் எத்தகைய தாக்கம் என்பது, குறிப்பாக தேசிய மற்றும் உள்ளூர் அளவில் உறுதிப்படுத்திக் கூறமுடியாத நிலையிலேயே உள்ளது.

தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தண்ணிர் மீதான அழுத்தம் அதிகரிக்கும். தண்ணிர் என்பது வாழ்வதற்கு மிகவும் அவசியம் என்பது மட்டுமல்ல. உணவு உற்பத்தியில் நுண்ணூட்டச் சத்துக்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கோ அல்லது அதைவிட அதிகமாகவோ முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகின் ஒட்டுமொத்த தண்ணிர் பயன்பாட்டில் 70 சதவீதம் விவசாயத்திற்கானதாகும். (ஹசன்சாகி 2008) 2025ஆம் ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் உலகில் 180 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டிருக்கிறது. இதனால் மக்களின் சுகாதாரத்தில் குறிப்பாக கிராமப்புற மக்களின் சுகாதாரத்தில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படும். இதன் விளைவாக உழவர்களின் உற்பத்தி திறனும் பாதிக்கப்படும். தற்போதைய மதிப்பீடுகளின்படி உலகின் தண்ணீர் தேவை 2050ஆம் ஆண்டில் இருமடங்காக அதிகரிக்கும். 2025ஆம் ஆண்டிற்குள் பூமியிலிருந்து உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணிர் அளவு 22.32 சதவீதம் வரை அதிகரிக்கும். 2050ஆம் ஆண்டில் இந்த அளவு இருமடங்காக அதிகரிக்கும். ஏழை நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்தால் அதன் விளைவாக தண்ணிர் தட்டுப்பாடு ஏற்படும், அதனால் உருவாகும் உணவுப் பாதுகாப்பின்மை மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். வேளாண்மை, தொழில்துறை, நகர்ப்புறம் ஆகியவற்றிற்கான தண்ணீர் பயன்பாட்டைத் தாண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், வெள்ள நீரை தேக்கிவைக்க பயன்படும் நீர் ஆதாரங்களும் காடுகள் போன்ற இயற்கை நீர் கோபுரங்களும் அழிக்கப்பட்டு வருவதுதான்.

மாசுபடுதல்

நிலம், நீர், காற்று மாசுபாடு போன்ற வளர்ச்சி யுடன் சம்பந்தப்பட்ட தீங்குகள் அதிகரித்து வருகின்றன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சிவப்பு பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ள அதிக அளவில் மாசுக்களை வெளியிடும் 17 பெரிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட உற்பத்தித் துறையில் அதிக முதலீடு செய்யப் படுவதுதான் இத்தகைய தீங்குகள் அதிகரிக்க காரணமாகும். இந்தியாவின் ஏற்றுமதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் துறைகளில் பங்கு அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில்தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது என்ற அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மேலாண்மையில் அதிக முதலீட்டுக்கான தேவையைதான் இந்தப் போக்கு சுட்டிக்காட்டுகிறது.

இயற்கை வளங்கள், சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் வாழ்நிலை கிராமப் பகுதியில் வறுமை எனப்படுவது, வளங்களின் சீரழிவான மோசமான மண், குறைந்து வரும் நீர்மட்டம், சீரழிந்துவரும் காடுகள் ஆகியவற்றுடன் பிண்ணிப்பிணைந்தவையே ஆகும். தெளிவாகக் கூற வேண்டுமானால் இருக்கும் குறைந்த வளங்களை அளவுக்கதிகமாக சுரண்டி பயன்படுத்தும்படி ஏழைகள் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகும் நிலையும், சுற்றுச்சூழல் சீரழிவு மேலும் அதிகரிக்கும் நிலையும் ஏற்படுகிறது. உலக அளவிலான பல்லுயிர் வாழ்விடங்களில் சிறந்தவையாகத் திகழும் இந்திய பல்லுயிர் வாழிடங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வரும்போதிலும், அவற்றுக்கான அச்சுறுத்தல்களும் பெருகி வருகின்றன. இந்த இயற்கைச் சொத்துக்களை பாதுகாப்பதில் முதலீடு செய்யப்பட்டால் அது வறுமை ஒழிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட நீடித்த வளர்ச்சி என்ற இரட்டை பயன்களை அளிக்கும். கடலோரப் பகுதி மேலாண்மை இந்திய கடலோரப் பகுதி மாங்குரோ காடுகள், பவழப் பாறைகள், கழிமுகத் துவாரங்கள், கடலோர நீர் நிலைகள், தனித்துவமான கடல் மற்றும் கடலோர உயிரினங்கள் என தேசிய பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும் பொருட்கள் உள்ளிட்ட எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழல் அமைப்புகளைக் கொண்டிருக்கிறது. அதிக வேகத்தில் நடைபெற்று வரும் நகர்புற தொழில்மயமாக்கல், கடல் போக்குவரத்து, மீன்பிடிப்பு, சுற்றுலா, கடலோர மற்றும் கடல் படுகை மண் எடுத்தல், கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயுவை தோண்டி எடுத்தல், கடல்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு ஆகியவற்றாலும் அண்மையில் அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களாலும் இந்த வளங்கள் அதிகமாகச் சுரண்டப்படுகின்றன. பாரம்பரியமாக ஏழைகளாகவும், பொருளாதார அதிர்வுகளால் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் இருப்போரின் உயிர்க்கும் சொத்துக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தக்கூடிய கடுமையான தட்பவெப்ப நிலை நிகழ்வுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தல் தவிர கடலோர மேம்பாடு மற்றும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் நிர்வாகம்

கட்டமைப்புத் துறையில் செய்யப்படும் முதலீடுகளின் அளவு 12வது ஐந்தாண்டு திட்டகாலத்தில் 50,000 கோடி என்ற அளவுக்கு உயரும் என்பதை வைத்துப்பார்க்கும்போது ஒருங்கிணைந்த மற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் கூடிய முடிவெடுக்கும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். முழுமையான கொள்கைகள் இல்லாததாலும் பலவகையான சட்ட பொருளாதார, திட்டமிடல் செயல் திட்டங்கள் இருப்பதாலும், அவற்றின் நோக்கங்களும் அணுகுமுறைகளும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாலும் இது மிகவும் சவாலான ஒன்றாகும்.

சுற்றுச்சூழல் சுகாதாரம்

மாசுபாட்டால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள், நுண்ணூட்டச்சத்துக் குறைவால் சுகாதாரக் கேடுகளுடன் ஒப்பிடக்கூடியவை ஆகும். இவை மனிதர்களின் உற்பத்தித்திறன், சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். சுற்றுச்சூழல் சுகாதார சவால்கள் அனைத்தும் பெரும்பாலும் வறுமை சார்ந்த பாதிப்புகளால் ஏற்படுபவை ஆகும். பாதுகாப்பான குடிநீர் வசதி, துப்புரவு, மிக மோசமான தரத்தில் கிடைக்கும் காற்று போன்ற அடிப்படை சேவைகளைக் கூட பெற முடியாததே இதற்கு காரணம் ஆகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், நீர் ஆதாரங்களிலும் மாற்றங்களைச் செய்தல், தீவிர நகர்புறமயமாதல், தீவிர வேளாண்மை ஆகியவற்றால்தான் தரையில் உள்ள நீர்நிலைகள் மாசுபடுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புற குடிநீர் வழங்கும் மற்றும் துப்புறவு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும், குடிநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்தான், குழந்தைகள் இறப்புக்கு காரணமாக இருக்கிறது

தட்பவெப்பநிலை மாற்றம்

  • தட்பவெப்பநிலை மாற்றத்தால் இந்தியா அதிக அளவில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அதிக அளவிலான வறுமைக்கு, (i) மக்கள் தொகை அடர்த்தி(i) இயற்கை உள்ளிட்டவை தான் காரணமாகும். இந்த நூற்றாண்டின் மத்தியில், தட்பவெப்பநிலை மாற்றம் மிதமான அளவில் இருந்தால் இந்தியாவின் ஆண்டு சராசரி வெப்பநிலை 11 டிகிரி முதல் 2.3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். வேளாண்மை சார்ந்த தட்பவெப்பநிலை மோசமடையும் என்று தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக்குழு கணித்திருக்கிறது. இந்த அளவுக்கு வெப்பநிலை அதிகரித்தல், இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் ஏற்படும் இழப்பு சுமார் 5 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இது உலக சராசரியைவிட அதிகமாகும். அதுமட்டுமின்றி மழை அளவும் மாறுபடும் என்பதால் வறட்சி, வெள்ளம், புயல் ஆகியவை அடிக்கடி ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. உலக அளவில் பசுமையில்ல வாயுக்கள் அதிகம் வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடம். இது இந்தியாவின் மக்கள்தொகையும் அதன் பொருளாதார வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. ஆனால் வேறுபல வழிகளில் பார்க்கும்போது இந்தியா குறைந்த அளவு கார்பனை வெளியிடும் நாடாகவே உள்ளது.
  • நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பின் ஒவ்வொரு அளவுக்கும் (உலக சராசரியுடன் ஒப்பிடும்போது) மிகக் குறைந்த அளவே உள்ளது.
  • இந்தியாவின் தனிநபர் மாசு வெளியீடு உலக அளவில் மிகவும் குறைவாக உள்ளது. (உலக சராசரியில் 10ல் ஒரு பங்கு மட்டுமே)
  • வனத்தின் பரப்பளவு ஓரளவு நிலைப்படுத்தப்பட்டுள்ளது

உள்ளிட்ட காரணங்கள் இந்தியா குறைந்த அளவு கரியமில வாயுக்களை வெளியிடும் நாடாக அறிவிக்கப்பட்டதற்கு காரணமாகும். ஏனெனில் இந்தியாவின் நீடித்த பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா வெளியிடும் கரியமில வாயுக்களின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பேரிடர் பாதிப்பு மேலாண்மை மற்றும் தயார்நிலை இந்தியாவில் பேரிடர் நிகழ்வுகள் அதிகரித்து வருவதை உணர்ந்துகொண்ட இந்திய அரசு, பேரிடர் ஏற்பட்ட பிறகு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் அணுகுமுறையை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்காக தேசிய அளவிலும், மாநில, மாவட்ட அளவிலும் பேரிடர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடர் மேலாண்மை சட்டம்

2005ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாவட்ட அளவில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை கடந்த 2007ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. அனைத்து வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்களில் பேரிடர் பாதிப்பு அம்சங்கள் ஒருங்கிணைப்பதில் இக்கொள்கை அதிக கவனம் செலுத்துகிறது. பேரிடர் பாதிப்பு குறைப்பு, தட்பவெப்பநிலை மாற்றம், வளர்ச்சி ஆகிய மூன்றையும் புதிய வளர்ச்சி தத்துவங்களாகக் கருதி, அவற்றுக்கென ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்க இக்கொள்கை வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழல் சவால்களை ஒருங்கிணைந்த வகையிலும் விரிவான முறையிலும் சமாளிப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்தச் சட்டங்கள் செயல்படுத்தபடுவதை கண்காணிக்க தனி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சந்தை சக்திகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் மாண்பு, ஒழுங்குமுறை கருவிகளின் ஓர் அங்கமாக ஊக்குவிப்புகளை வழங்குதல் ஆகியவற்றை தேசிய சுற்றுச்சூழல் கொள்கை அங்கீகரிக்கிறது. சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் விவாதிப்பதற்காக பசுமைத் தீர்ப்பாயங்களை ஏற்படுத்தியுள்ள உலகின் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் நிர்வாகத்தைப் பொருத்தவரை சுற்றுச்சூழல் குறித்த மதிப்பீடுகளை செய்வதற்காக தேசிய மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு ஆணையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வளர்ச்சி, சுற்றுச்சூழல் சீரழிவின் தாக்கம், தட்பவெப்பநிலை மாற்றம், பேரிடர் பாதிப்பு குறைப்பு போன்றவற்றை இனியும் தனித்தனி பிரச்சனைகளாகக் கருத முடியாது. இவை அனைத்தும் முழுமையான, ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டம் ஆகும்.

பிற திட்டங்களும் அறிக்கைகளும்

11வது ஐந்தாண்டு திட்டத்தில் கடலோர பகுதி திட்டமிடுதலுக்கான ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறை, பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுகளை அகற்றுவதற்கான சிறந்த மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஏராளமான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதுபோல நதிகள் பாதுகாப்பு உத்திகள், தேசிய பல்லுயிர் வாழிட திட்டம் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளையும் அரசு வெளியிட்டது. புலிகள் போன்ற அழிந்துவரும அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் உதவுவதற்காக வனவிலங்கு குற்றங்கள் தடுப்பு அமைப்பு என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. தட்பவெப்பநிலை மாற்றத்தால் எழுந்துள்ள அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, இந்தியாவின் முதல் விரிவான தேசிய செயல் திட்டத்தை கடந்த 2008ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் பிரதமரின் தேசிய தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கான குழு வெளியிட்டது. கோபன் ஹேகன் நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு முன்பாக, இந்தியா அதன் பசுமையில்லா வாயுக்களை வெளியேற்றப்படும் அளவை வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட 20 முதல் 25 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது. அதுமட்டுமின்றி, இந்தச் சவாலை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக வல்லுநர் குழு ஒன்றையும் இந்திய அரசு ஏற்படுத்தியது.

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகமும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான சில சட்டங்களும்

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான இந்திய அரசின் தொடர்பு அமைச்சகமான வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் சீரழிவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு சட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்திருக்கிறது. தண்ணிர் மாசுபடுவதைத் தடுப்பதற்காக 1974ஆம் ஆண்டில் தண்ணீர் சட்டத்தை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டுவந்தது. இந்தியாவில் தண்ணிரை பராமரித்து நல்ல நிலையில் பாதுகாப்பதை மனதில் கொண்டுதான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. காற்று (மாசுப்படுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல்) சட்டம் 1981ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு, 1987ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. இந்தியாவில் காற்று மாசுபடுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தும் நோக்குடன் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த 1991ஆம் ஆண்டில் கடைசியாகத் திருத்தப்பட்டது. 1992ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ.நா. பல்லுயிர் வாழ்நிலை மாநாட்டில் முன்வைக்கப்பட்ட லட்சியங்கள் அனைத்திற்கும் செயல் வடிவம் தரும் வகையில் உயிரியல் பன்முகதன்மை சட்டம் கடந்த 2002இல் நிறைவேற்றப்பட்டது. அனைத்து உயிரியல் வளங்கள் மற்றும் அவை சார்ந்த தகவல்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை சரியான நடைமுறையில் நீண்ட காலத்திற்கு அணுகுதல் ஆகியவைதான் இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியாவிலுள்ள காடுகளைப் பாதுகாப்பதற்கு உதவி செய்யும் நோக்குடன் 1980ஆம் ஆண்டில் வனப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. காடுகளை அழித்தல் அல்லது காட்டு நிலத்தை அதன் பயன்பாட்டிற்காக அல்லாமல் வேறு பயன்பாட்டிற்காக மத்திய அரசு அமைதியின்றி பயன்படுத்துவது ஆகியவற்றை இந்தச் சட்டம் மிகவும் கடுமையான முறையில் தடுக்கவும் முறைப்படுத்தவும் செய்கிறது. காட்டு நிலத்தை மாற்றுத் தேவைகளுக்காக பயன்படுத்துவதற்காக சில விதிமுறைகளை இச்சட்டம் வகுத்துள்ளது. இந்தியாவிலுள்ள வன விலங்குகளைப் பாதுகாக்கவும், விலங்குகள் வேட்டையாடுவதைத் தடுக்கவும் வசதியாக வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தை 1972ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்தது. வன விலங்குகள் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருட்கள் பெறப்படுவதையும் சட்டவிரோதமாக கடத்துவதையும் தடுப்பதும் இந்தச் சட்டம் தடுக்கிறது. தீங்கு ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துக்களின் காரணமாக உருவாகும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு வசதியாகத் தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயச் சட்டம் 1995ன் படி தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் ஒன்றை 1995ஆம் ஆண்டில் மத்திய அரசு அமைத்தது.

1997ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் மேல் முறையீட்டு ஆணையச் சட்டம் காரணமாக தேசியச் சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. சில தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் அமைதி பெறுவது தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. முக்கியத் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியளிப்பதற்கு முன் அத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பதற்கான மதிப்பீடுகளைச் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் புதிய விதிமுறைகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. புதிய திட்டங்களைச் செயல்படுத்த முயலும்போது அதனால் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அம்சங்களைப் பாதுகாப்பதற்கு அத்திட்டத்தைத் தயாரிப்பவரே பொறுப்பேற்க வேண்டும் என்பதை உறுதிசெய்தல், புதிய திட்டத்தின் ஆயுட்காலம் எவ்வளவோ அதுவரை சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு வகைசெய்தல், புதிய திட்டத்தைச் செயல்படுத்தலாமா என்பது குறித்து முடிவெடுக்க உதவிசெய்தல், திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிப்பது என முடிவுசெய்தல் அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எத்தகைய மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கையாளுதல், எங்கெல்லாம் சட்டம் அனுமதிக்கும், சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் முடிவெடுத்தல் நடைமுறையில் சமுதாயம் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களுக்கு இடமளித்தல் ஆகியவற்றிற்காகத்தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படுகிறது.

  • திட்டமிடப்படாத மதிப்பீடுகளால் பஞ்சதத்துவத்தில் ஏற்படும் சமநிலையற்ற தன்மையால்தான் சுற்றுச்சூழல், வளர்ச்சி, தட்பவெப்பநிலை மாற்றம், பேரிடர் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. சுற்றுச்சூழல் என்பது மிகவும் பலவீனமானதாகவும் எளிதில் பாதிக்கப் படக்கூடியதாகவும் மாறுகிறது. ஏழைகளும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய தன்மைக் கொண்டவர்களும் தான் அதிக பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. Black Swain நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில், சுற்றுச்சூழலை முழுமையாகப் பார்ப்பது மிகவும் முக்கியமானதாகும்.
  • சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் ஒருங்கிணைந்த செயல்திட்டத்திலிருந்து உருவாக வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதே அளவுக்கு முக்கியமானது என்னவென்றால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான கொள்கைகள், சட்டங்கள், திட்டங்கள் அனைத்திற்கும் செயல் வடிவம் தருவதற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பங்குதாரர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். அப்போதுதான் சேதமடைந்த பஞ்ச தத்துவத்தின் சமநிலை சரிசெய்யப்படும் இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் இன்னும் மோசமானதாக இருக்கும்

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : டாக்டர். சந்தோஷ்குமார், போராசிரியர் மற்றும் தலைவர். கொள்கை. திட்டமிடுதல், பேரிடர் மேலாண்மை நிறுவனம்.

3.078125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top