பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / சூழ்தொகுதி மேலாண்மை – ஓர் அறிமுகம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சூழ்தொகுதி மேலாண்மை – ஓர் அறிமுகம்

சூழ்தொகுதி மேலாண்மை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

புவியில் மிக வறட்சியான பாலைவனத்தில் இருந்து அடர்ந்த மழைக்காடுகள் வரை, மிக உயரமான மலை சிகரத்தில் இருந்து மிக ஆழமான பெருங்கடல் வரை பல வகைப்பட்ட உயிரினங்கள் வாழ்ந்து பெருகுகின்றன. புவியில் சுமார் 3 மற்றும் 30 மில்லியன் அளவில் உயிரினங்கள் காணப்படுகின்றன என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்; இவை அளவு, நிறம், வடிவம், வாழ்க்கை சுழற்சிகள் போன்றவற்றில் வேறுபடுகின்றன. கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள் கூட சூழலியல் செயல்முறைகளுக்கு தேவையான கூறுகளை அளிக்கின்றன.

அண்மைக்காலத்தில் மனிதர்களின் செயல்பாடுகள் புவியில் வாழ்ந்து வருகின்ற ஏனைய உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. குறிப்பாக, அதிவேகமாக வளர்ந்து வருகின்ற மக்கள்தொகை, மக்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் தொழில்நுட்பங்களின் சக்தியும் ஒருங்கிணைந்து உயிர்கோளத்தில் காணப்படுகின்ற உயிரினப்பன்மையை (Bio-diversity) முழுவதுமாக அழித்து விடக்கூடிய அபாயம் நிலவுகிறது. மலைகளை சமதளமாக்குதல், புதிய கால்வாய்கள் அமைத்து ஆற்றின் போக்கை மாற்றி அமைத்தல், உலகளவில் ஆண்டொன்றுக்கு 25 பில்லியன் அளவுக்கு மண் அரிப்பு முதலானவற்றை தோற்றுவிக்கின்ற மனித இனமும் இயற்கையின் ஆற்றலுக்கு ஈடாக மாறிக் கொண்ட வருகிறது; தங்களின் தேவைகளுக்காக தாவரங்களையும் விலங்குகளையும் உணவுக்காகவும் வியாபாரத்திற்காகவும் அறுவடை செய்கின்றனர். இத்தகைய செயல்களின் மூலமாக காட்டு விலங்குகளும் நேரடி தாக்குதல்களுக்கு ஆளாகின்றன. இவற்றின் விளைவாக இனமறைவு (Extinction) தூண்டப்படுகிறது. அதனால் உயிர்க்கோளம் அதன் தனித்தன்மையையும் பன்மைப் பண்புகளையும் நிரந்தரமாக இழக்க நேரிடும்.

இனமறைவு (Extinction)

இனமறைவு புதிதாக நடைப்பெறக் கூடிய நிகழ்ச்சியுமல்ல; மனிதர்களின் செயல்பாடுகளினால் மட்டுமே விளைவதுமல்ல. புவியில் வாழ்ந்த 99 சதவீதத்திற்கும் மேலான உயிரினங்கள் மறைந்து விட்டதாக படிம பதிவேடுகளின் கருத்து தெரிவிக்கின்றன.

இவற்றில் பல, மனிதர்கள் புவியில் தோன்றுவதற்கு முன்னரே மறைந்து போயின. புவியில் பரவலாக நடைபெற்ற உயிரியல் பேரழிவுகளின் காரணமாக பல முறை இனமறைவுகள் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டன என்று நிலயியல் பதிவேடுகள் காட்டுகின்றன; அவற்றுள் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற “டயனோஸர்ஸ்” இனமறைவு ஏற்பட்டது. அதன் கூடவே உயிரினங்களில் 50 சதவீதத்திற்கு மேலாகவும் கடல்வாழ் உயிரின் குடும்பங்களில் 15 சதவீதமும் மறைந்து போயின. இதைவிட பெரிய அளவில் சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பேரழிவின் போது மூன்றில் இரண்டு மடங்கு கடல்வாழ் இனங்கள் அழிந்து போயின; அடுத்த 10,000 ஆண்டுகளில் பாதிக்கு மேற்பட்ட தாவரங்களும் விலங்குகளும் மறைந்து போயின.

தற்போதைய இனமறைவு வீதம்

கடந்த நூறு ஆண்டுகளாக உயிரினங்களின் அழிவுவீதம் திடீரென உயர்ந்து கொண்டு வருகின்றது. மனிதர்களும் முக்கியமாக காரணியாக மாறுவதற்கு முன்னரே இயற்கை காரணிகளால் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இனம் என்ற வீதத்தில் இனமறைவுகள் நடந்து வந்தன. கி.பி. 1600 - கி.பி. 1900க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களின் செயல்பாடுகளினால் ஆண்டுக்கு ஓர் இனம் என்ற வீதத்தில் இனமறைவுகள் ஏற்பட்டன. குறிப்பாக, இந்த நூற்றாண்டில் இரண்டாம் உலக போரிலிருந்து இனமறைவு ஆண்டுக்கு ஒரு டஜனிலிருந்து நூற்றுக்கணக்கான இனங்கள் வரை என்று உயிரின அழிவு வீதம் மிகவேகமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய அழிவு வீதங்களை நம்மால் துல்லியமாகக் கணக்கிட இயலாது. ஏனெனில் உலகில் இன்றளவும் பல இடங்களில் முழுமையாக ஆராயப்படவில்லை . தவிர பல இனவகைகள் தாவரவியளாலர்கள் படித்தறிந்து வகைப்படுத்துவதற்கு முன்னரே மறைந்திருக்க கூடும்.

தற்போதைய இனமறைவு வீதத்திற்கு உயிரின வாழிடங்களின் இழப்பு முக்கிய காரணமாக திகழ்கிறது. புவியில் மில்லியன் கணக்கான இனமறைவுகளுக்கு வெப்பமண்டலக்காடுகள், பவழத்தொடர்கள், முகத்துவாரங்கள், செழிப்பான உயிரினங்களைக் கொண்ட சூழ்தொகுதிகள் ஆகியவற்றின் அழிவே முக்கிய காரணமாகும். இவ்வாறு மனிதர்களால் ஏற்பட்ட இனமறைவுகள் நிலயியல் வரலாற்று நிகழ்வுகளுடன் போட்டிபோடும் அளவிற்கு அமைகின்றன. உயிரினங்களின் வாழிடங்களை அழிப்பதன் மூலமாக அங்கு காணப்படுகின்ற முதன்மையான இனங்கள் மறைந்து போகின்றன; நமது அறிவிற்கு எட்டாத ஏனைய பலவற்றையும் சீரழித்து விடுகிறோம். இத்தகைய சீரழிவுகள் தொடர்ந்து நடைபெறுமேயானால் அடுத்த சில ஆண்டுகளில் மில்லியன் கணக்கில் இனமறைவுகள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

மக்கள்தொகை வளர்ச்சி, தொழில் நுட்ப மேம்பாடுகள் ஆகியன உயிரியல் அழிவிற்கும் புவியிலிருந்து இனங்கள் மறைவதற்கும் எவ்வாறு காரணமாக இருக்கின்றன என்று இனி விவாதிக்கலாம். முதலில் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள்தொகை பெருக்கம் ஏற்பட்டது. நெருப்பும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நமது முன்னோர்கள் ஆற்றல்மிக்கவர்களாக மாறினர். அடுத்ததாக சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தாவரங்களையும் விலங்குகளையும் வீட்டு பராமரிப்பின் கீழ் கொண்டு வந்த காலகட்டத்தில் மக்கள்தொகை பெருகலாயிற்று. மூன்றாவது முறையாக அறிவியல் தொழில்நுட்ப புரட்சியின் தூண்டுதலினால் மக்கள்தொகை பெருகியது; இதில் நாமும் பங்கு வகிக்கிறோம். இத்தகைய போக்கு தொடருமேயானால் உலகம் 2100 ஆம் ஆண்டு மிக நெரிசலாகி விடும்; அதிகமாக மாசடையும்; சூழலியல் ரீதியாக நிலையற்றதாகி விடும், இப்பொழுது நமது வாழ்க்கையில் நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் எதிர்காலத்தில் நம் குழந்தைகளுக்கு அமைகின்ற வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற கூறுகளாகும். ஆதலால் நமது புவித்தொகுதியை பேணிக்காப்பது நமது கடமையாகும்.

புவித்தொகுதி மேலாண்மையில் அடிப்படையான கூறுகள்

பிறப்பு, வளர்ச்சி, இனப்பெருக்கம், இறப்பு போன்ற உயிரியல் கட்டுபாடுகளைக் கொண்டுள்ள இதர விலங்குளைப் போலவே நாமும் விலங்குகளே; இயற்கை வளங்களை பெற்றுக்கொள்வதில் அடிப்படையாக ஒரே மாதிரியான போட்டி மனப்பான்மை நிலவுகிறது. கூட்டு மனபான்மை இயற்கை விலங்கின உலகின் நடத்தையாக அமைகிறது. பொதுவாக இத்தகைய நடத்தைகளினாலேயே தனிபட்ட உயிரினங்கள் பிழைத்திருக்கின்றன.

நெடுந்தொலைவு பறக்கும் காட்டுப்புறா

இவ்வினத்தைச் சார்ந்த கடைசி புறாவும் சின்சினாட்டி மிருகக்காட்சியகத்தில் 1947 ஆம் ஆண்டு மடிந்து போனது. இவற்றின் இனமறைவுக்கு மிகையான வேட்டையாடுதலும் வாழிடத்தின் சீரழிவும் காரணங்களாயின.

பசுமையான பரணி செடி

புழு பூச்சிகளை தின்று வாழ்கின்ற தாவரம். இவற்றின் வாழிட சீரழிவினால் தற்பொழுது 10,000 செடிகள் மட்டுமே உள்ளன.

செங்கரு நீலமலர் செடி

இந்த மலர் செடிகள் அவற்றின் வாழிடமான தென் ஆப்பிரிக்காவில் இருந்து முழுமையாக மறைந்து விட்டன.

சைபீரியன் புலிகள்

சைபீரியாவின் பெரிய வகை பூனை இனத்தைச் சேர்ந்த இவை உலகில் மறைகின்ற இனங்களில் ஒன்றாகும்.

கருப்பு காண்டாமிருகம்

இவை ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய 1,000,000 இருந்தன. ஆனால் தற்சமயம் 4000 க்கும் குறைவாக இருக்கின்றன. அவற்றின் கொம்புகளுக்காக மனிதர்கள் வேட்டையாடி அழிந்து போனது.

இயற்கையின் வியப்புகள்

வாலில்லா குரங்குகள்

சுவையான செல்களை அதன் கூட்டிலிருந்து வெளிக்கொணர குரங்குகள் அதன் கைகளை நுழைத்தால் கடித்துவிடும் என்பதால் குச்சியை உள்ளே நுழைக்கிறது.

கொறிக்கும் அணில்

பகல் நேரத்தில் மரத்தின் மீது தூங்குகிறது. இரவு வேளைகளில் தனது நீண்ட மூன்றாவது விரலை நீட்டி மரப்பட்டைகளில் உள்ள பூச்சிகளை பிடிக்கின்றன. அவற்றின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள தனது பெரிய காதுகளை பயன்படுத்துகிறது.

சிறுத்தை புலி

நிழல் தரும் காட்டுமரங்களின் மேல் அமர்ந்திருக்கும். இவற்றின் மீது காணப்படும் கரும்புள்ளிகளினால் இவை கண்ணுக்குப் புலப்படுவதில்லை.

மனிதர்களின் உலகில் தனிநபர், சமுதாயம், தேசிய அளவில் போட்டிப் போடுகின்ற இனஉணர்வு குறுகிய கால ஆதாயம் ஆகியன நடத்தைகளாக அமைகின்றன. இத்தகைய நடத்தைகள் புவியில் நீண்டகாலம் தொடர்ந்து வாழத் தகுந்த நிலையை சீரழிக்கின்றவைகளாக அமைகின்றன. எனவே இயற்கை வளங்களை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள், வலிமையற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பது போன்றவற்றில் கூட்டுறவு மனபான்மை தேவைப்படுகின்றது. இந்த மனப்பான்மையில் புதிய பரிணாம நிலைகளை அடைவதன் மூலமே மனித சமுதாயத்தை புவியில் தொடர்ந்து வாழவைப்பது இயலும். மனிதர்களின் பொறுப்புணர்வு, சாதனைகள் போன்றவை காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தும் சுற்றுச்சூழலின் கட்டுப்பாடுகளில் இருந்து நமக்கு விடுதலையை அளித்தன; சுற்றுச்சூழலை நமது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம் என்ற கருத்தும் வெளிபடலாயிற்று. பயன்படுத்தும்பொழுது ஏற்படக்கூடிய மிகையான, தவறுதலான பயன்பாடுகளின் விளைவுகளை தொழில்நுட்ப மேம்பாட்டினாலும் திறமையான மேலாண்மையினாலும் எதிர் கொள்ளலாம்.

மேற்கூறிய மூன்று கருத்துக்களையும் இனங்கண்டு கொள்ளுதலும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வும் நம் ஒவ்வொருவருக்கும் நமது குழந்தைகளின் குழந்தைகளுக்கும் இன்றியமையாத தேவைகளாகும். இவை பேணத்தகுந்த மேம்பாட்டிற்கு அடிப்படையான நடவடிக்கைகளுக்கு தூண்டுகோலாக அமைகின்றன. வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட சுற்றுச்சூழலில் வரையறை அற்ற மக்கள்தொகை வளர்ச்சி நடக்க கூடாத ஒன்றாகும். ஏனெனில் அத்தகைய வளர்ச்சி கிடைக்க கூடிய வளங்களை சீரழித்துவிடும். மக்கள் வாழ்வும் சீரழிந்து விடும். அவ்வாறு நிகழாமல் தடுப்பதற்கு நமது புவித்தொகுதி மற்றும் அதன் பகுதிகளுக்கு இடையே காணப்படும் பிணைப்புகளை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ள உதவுகின்ற ஒன்று “சிந்தனை மேப்புகள்” ஆகும்.

சிந்தனை மேப்புகள் (Concept Map)

நமது சிந்தனையில் உதிக்கின்ற கருத்துகள் மற்றும் அக்கருத்துகளின் இடையே காணப்படும் பிணைப்புகளின் விவரங்களை காட்சிப்படங்களாக சித்தரிப்பது சிந்தனை மேப்புகள் ஆகும். இத்தகைய பயிற்சிகள் பொதுவான கருத்துகளையும் முறையாக ஆராய்ந்து அறிதலையும் (Critical thinking) ஊக்குவிக்கின்றன. இத்தகைய சிந்தனை மேப்புகளின் மூலமாக மனிதர்கள் உலகளாவிய சூழ்தொகுதிகளின் இயக்கங்களைச் சார்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. சூழ்தொகுதிகளின் இயக்கங்களை மாற்றக் கூடிய அளவிற்கு மனிதர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டனர் என்பதும் தெளிவாகின்றது.

புவித்தொகுதியை சிந்தனை மேப்புகள் மூலமாக புரிந்து கொள்வதற்கு முன்னர் குறிப்பிட்ட சில பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

குறிப்பிட்ட பணிகள் (specific tasks)

 1. முதன்மையான கருத்துகளை மேப்புகளின் தலைப்பாக எடுத்துக் கொள்வது; அதனுடன் குறிப்பிட்ட பல கருத்துக்களை சேர்த்து வரிசைபடுத்துவது.
 2. கருத்துகளை நேர்க்கோடு மூலமாக இணைப்பது; இக்கோட்டின் மீது இரண்டு கருத்துகளின் இடையேயான விளக்கத்தை கொடுக்கக் கூடிய சொல்லை குறிப்பது. அச்சொல்லே ஒரு சொற்றொடராகவும் பொருள் தரச்செய்வது.
 3. மேப்பின் வெவ்வேறான பகுதிகளின் கருத்துகளுக்கு இடையில் காணப்படும் பிணைப்புகளை கண்டுபிடிப்பது; அவற்றை பெயரிடுவது. இப்பெயருடன் குறிப்பிட்ட கருத்துகளின் எடுத்துகாட்டுகளை இணைத்துக் காட்டுவது.
 4. ஒரே பிரிவைச் சார்ந்த கருத்துகளை வெவ்வேறு மேப்புகளாக சித்தரித்து காட்டுவது. இந்த பாடத்தில் இரண்டு சிந்தனை மேப்புகள் எடுத்துகாட்டுகளாக வரையப்பட்டுள்ளன. அந்த இரண்டு மேப்புகளும் கீழ் கண்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன.

விண்வெளியிலிருந்து எடுக்கப்படும் ஒளிப்படங்களிலிருந்து புவியில் நீர் முதன்மையானதாக உள்ளது என்பதை காட்டுகின்றது. மேலும் புவிக்கு பாதுகாப்பாக வளிமண்டலம் மெல்லிய படலமாக அமைந்துள்ளது. புவித்தொகுதி அறிவியலை முறையான ஒரு கண்ணோட்டத்துடன் அணுக விண்வெளி விவரங்கள் அடிப்படையாகின்றன. இத்தகைய அணுகு முறையினால் வட்டார செயல்கள் உலகளவில் விளைவுகளை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றது.

புவித்தொகுதி, செயலெதிர்வுகளால் பிணைக்கப்பட்ட நான்கு பகுதிகளைக் கொண்டது. அவையாவன:

 • வளிமண்டலம்,
 • உயிர்க்கோளம்,
 • பாறைக்கோளம்
 • நீர்க்கோளம்.

எனவே புவியின் மேற்பரப்பில் காணப்படும் தோற்றங்களும் மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றன; பரிணாம வளர்ச்சியும் தொடர்ந்து நடைபெறுகின்றன. உலகளவில் ஆராய்ச்சிகள், செயற்கைகோள்கள் மற்றும் தொலை நுண்ணுணர்வு ஆகிய தொழில்நுட்பவியல் கருவிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புவித்தொகுதி அறிவியல் (Earth system science)

பகுதிகளுக்கு இடையே செயலெதிர்ச் செயல்களை கொண்டிருக்கும் புவி ஒரு தொகுதி என்ற அறிவியலாகும். இத்தகைய கண்ணோட்டம் பகுதிகளுக்கு இடையே நிலவுகின்ற செயலெதிர்வுகளின் தன்மைகளை வலியுறுத்துகின்றது.

அப்பகுதிகளாவன:

 • பாறைக்கோளம்,
 • நீர்க்கோளம்,
 • வளிக்கோளம்,
 • உயிர்க்கோளம்.

இவற்றைப் பற்றிய குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

பாறைக்கோளம்

புவிமேற்பரப்பு இயற்கை கூறுகள், மேலோடு மற்றும் உள்ளமைப்பு ஆகியவை இதில் அடங்கும். எரிமலை வெடிப்பு மற்றும் புவி அதிர்வுகள் பாறைகோளத்தின் செயல்முறைகளாகும்.

நீர்க்கோளம்

து புவி மேற்பரப்பின் மீது அல்லது அருகாமையில் திரவ அல்லது திட அல்லது வாயு நிலையிலுள்ள நீரைக் கொண்டிருக்கும். அவையாவன மேகங்களில் காணப்படும் நீராவி, பனிகவிப்புகள் மற்றும் பனியாறுகள், பேராழிகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர், நீரோட்டங்கள், ஆறுகளின் போக்கு, நீராவியாதல், சுருங்குதல் மற்றும் மழைப்பொழிவு ஆகியன நீர்க்கோளத்தின் செயல்முறைகளாகும்.

வளிக்கோளம்

இது புவியைச் சுற்றி மெலிதாக காணப்படும் வாயு அல்லது காற்றுப் படலத்தை கொண்டிருக்கும். காற்றுகள், வானிலை மற்றும் உயிரினங்களுடன் வாயுக்களின் பரிமாற்றங்கள் வளிக்கோளத்தின் செயல்முறைகளாகும்.

உயிர்க்கோளம்

இது செழிப்பான மற்றும் பன்மைத் தோற்றத்தைக் கொண்ட உயிரினங்களை உள்ளடக்கியது. பிறப்பு, இறப்பு, வளர்ச்சி மற்றும் மறைவு ஆகிய செயல்முறைகளைக் கொண்டது.

இரண்டாவது சிந்தனை மேப்பில் உயிர்க்கோளத்தில் காணப்படும் உயிரற்ற சுற்றுச்சூழலில் மனிதர்கள் தொழில் நுட்பத்தைச் சார்ந்த சமுதாயத்தை உருவாக்கியுள்ளனர். வியாபாரம் நடைபெற பொருளாதார வளர்ச்சி என்ற உள்நோக்கம் பிணைப்பாக செயல்படுகிறது. மனிதர்களின் பொருளாதார வாழ்க்கையில் வியாபாரம் ஒரு பகுதியாகும். ஏனெனில் எந்த ஒரு சூழ்தொகுதியும் ஒரே அச்சாக இருப்பதில்லை.

உயிர்க்கோளத்தில் மனிதர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் திறமைக் கொண்டவர்கள். எனவே நாம் விரும்புகின்ற கூறுகளே நமது இன்றைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவை எதிர்காலத்தில் நமது குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதையும் நிர்ணயிக்கின்றன; எதிர்காலத்திற்காக சிலவற்றை நடைமுறைபடுத்துவதும் சிலவற்றை மாற்றமடையச் செய்வதும் உங்களால் முடியும் என்கிற எண்ணம் இருத்தல் அவசியமாகும்.

நாம் அனைவரும் வட்டார அளவில் செயல்பட வேண்டிய கட்டாயம் நிலவுகிறது; அதை நம்மால் செய்ய இயலும். சுருங்கக்கூறின், பன்னாட்டு அளவிலும் அரசாங்கங்களுக்கு இடையிலும் சூழ்தொகுதி மேலாண்மையை பேணிகாப்பதற்கான பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு வட்டார அளவில் நாம் எடுக்கின்ற முயற்சிகள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.15789473684
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top