பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஈர நிலம்

ஈர நிலம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

சேத்துநிலம் என்றும் சகதி என்றும் மக்களால் அசௌகரியமாக அழைக்கப்பட்டுக் கழிவுகள் கொட்டுகின்ற இடமாக மாறிக் கொண்டிருக்கின்ற இடங்களுக்கு சூழலியலாளர்கள் வைத்த பெயர்தான் ஈரநிலங்கள் (Wetlands). ‘தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீரால் மூடப்பட்டிருக்கும் இடங்கள் ஈரநிலங்கள் ஆகும். சேற்றுநிலம், சகதி, முற்றாநிலக்கரியுள்ள நிலம், நீர்நிலைகள் ஆகியவை ஈரநிலங்கள் எனப்படும். நீர் நிலைகள் இயற்கையாக அல்லது செயற்கையாக அமைந்தவையாகவோ, நிலையான, அல்லது பாயும் நீரைக் கொண்டவையாகவே நிரந்தரமானவையாகவோ, தற்காலிகமானவையாகவோ, நன்னீரை அல்லது உப்புநீரை உடையவையாகவோ இருக்கலாம். வற்றுப் பெருக்கின் போது ஆறு மீற்றருக்கு அதிகரிக்காத ஆழமுள்ள கடல் நீரைக் கொண்டுள்ள பகுதிகளும் ஈரநிலங்களுக்குள் அடங்கும் என கூறப்படுகிறது. சூழலியலாளர் றிச்சட் கமரோன் என்பவரின் கருத்துப்படி ‘அரைப்பங்கு வெள்ள நீரும் அரைப்பங்கு கடல் நீரும் வெளிப்படையாக கலக்குமிடமே ஈரநிலம்’ என கூறுகின்றார்.

ஈரநிலங்கள் மூன்று பிரிவுகள்

ஈரநிலங்கள் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. சலசலக்கும்  அருவிகள், பெருகி ஒடும் ஆறுகள் சமுத்திரமாக காட்சியளிக்கும் குளங்கள். உள்ளடங்கலாக உள்நாட்டு இயற்கையான நன்னீர் ஈரநிலங்கள் என்றும், பொங்குமுகங்கள் வெண்மணற் பரப்பில் அலைமோதும் கடற்கரைகள், அழகிய தீவுக் கூட்டங்கள், ஆழமற்ற விரிகுடாக்கள் கடல் நீரேரிகள், களப்புக்கள், கற்பாறை கடற்கரைகள் உள்ளடங்கலான கடல் மற்றும் உப்புநீர் ஈரநிலங்கள் என்றும், பனிபடர்ந்தாற் போல் காட்சியளிக்கும் உப்புப்பாத்திகள், பச்சைப் பசேலென்ற நெல் வயல்களும், வயல்களுக்கு நீர் தரும் நீர்த் தேக்கங்கள் உள்ளடங்கலாக மனிதனால் உருவான ஈரநிலங்கள் என மூவகைப்படுகின்றன. இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள ஈரநிலங்களானவை அவற்றின் பெயருக்கேற்றாற் போல் சூழலியல், பொருளாதார சமூக ரீதியில் மனிதனுக்கு மறைமுகமாக பங்களிப்பினை வழங்குகின்றன. ஈரநிலங்களின் தொழிற்பாடுகள், பயன்பாடுகள் அனைத்துமே சூழலுக்கும் மனிதனும் இன்றியமையாதவையே.

அதிக மழை கிடைக்கும் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருப்பதற்கு இவ் ஈரநிலங்கள் தம்மால் இயன்ற தொழிற்பாட்டினை வழங்குகின்றன. கட்டுக்கடங்காது காட்டாறாக பெருகி ஓடும் ஆறுகளை அடக்கியாண்டு குளங்களில் தேக்குவதும், வயல் நிலங்களில், வெள்ளச் சமவெளிகளில் பாய்ந்து அமைதியடைவதும் சதுப்பு நிலங்களில் வடிமானம் அடைய வைப்பதும் இதனது தொழிற்பாடே. வற்றுப் பெருக்குக் காலங்களிலும், கடலலை செயற்பாடுகளின் போதும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போதும் கடற்கரை அரிப்புச் செயற்பாடுகளை கண்டல் தாவரங்களாலும், முருகைகற்பாறைத் தொடர்களாலும் நிரை போட்டு வரும் ஆக்ரோஷ அலைகளினை தடைபோட்டு நிற்பதுவும் இவ் ஈரநிலங்களே.

அடையல்கள் கலந்த நீரானது ஈரநிலங்களினூடாக செல்கின்ற போது கண்டல்கள், கடற்கரை சதுப்புநிலத்தாவரங்கள் போன்றவற்றால் தடுக்கப்பட்டு அடையல்களை படிய வைப்பதும், அத்துடன் மண் இரசாயன செயன்முறைகளால் படியவிடப்பட்ட காபன்சேர்வைகளை பிரிகையடைய வைத்து காபனை நிரந்தரமாக தேக்கும் இடங்களாகவும் இவை தொழிற்பாடுகின்றன.

நீரைத் தூய்மையாக்குதல்

அத்துடன் ஈரநிலங்களின் பிரதான தொழிற்பாடுகளில் நீரை தூய்மையாக்குதலும் ஒன்றாகும். மேற்ப்பரப்பு நீர்களில் கரைந்துவரும் கனியங்களை நீக்கும் ஒரு வடிகட்டியாக இது தொழிற்படுகிறது. இதனால் தரைக்கீழ் நீரின் தரம் பேணப்படுகின்றது. ஒரு பிரதேசத்தின் இடம்சார் காலநிலை (Topo- Climate) நுண் காலநிலை (Micro Climate) ஆகியவற்றின் தன்மைகளை பேணுவதிலும் இவை முக்கியமான பங்களிப்பினையே வழங்கின்றன. இதனால் மிதமான வெப்பநிலை நிலவுவதற்கும் மனித சௌகரிய நிலையை ஏற்படுத்தவும் இவை காரணமாகின்றன. அத்துடன் கொங்கிறீற் சுவர்களால் சூழப்பட்ட நகர்களுக்கு அங்கே அமைகின்ற நீர்த் தேங்கங்கள், கால்வாய்கள் அருவிகள்தான் கழிவுகளை மெல்லவும், காலநிலையை சீர்ப்படுத்தவும் உதவுகின்றன.

ஊன்று கோள்

தொழிற்பாடுகளை மட்டுமல்ல மனிதனுக்கும் அவனது செயற்பாடுகளிற்கும் ஊன்று கோலாக இவை அமைந்து விடுகின்றன. விவசாய உற்பத்திகளையும் நீர்ப்பாசன தேவைகளையும், குடிநீரையும் பெற்றுக் கொள்ள குளங்கள், நீர்த் தேக்கங்கள் என்ற பெயரிலும் நீர் மின்சாரத்தை பெறுவதில் நீர் வீழ்ச்சிகள் எனும் பெயரிலும் மருத்துவத் தேவைக்காக  நீரமுள்ளி எனும் தாவரவர்க்கங்களாகவும், மரத்தளபாட தேவைக்களின் மூலபொருளாக கண்டல் தாவரங்களாகவும், மீன்பிடி, உப்பு உற்பத்தி போன்றவைற்றில் கடல்சார் மற்றும் களப்பு, கடல்நீரேரிகளாவும், மனோரம்மியமான பொழுது போக்கு மையங்களாகவும் இவை விளங்குகின்றன.

பல வகையினதான மீன்வகைகள், கடலட்டை இனங்கள், சிப்பிகள் சங்குகள், கடற்பாசி, கடற்புல்லினங்கள், இறால், நண்டு வகைகள் எனப்பலதரப்பட்ட உயிர்ப் பல்வகைமையை கொண்டு விளங்குகின்றது. கடல்நீரேரியின் இரு கரைகளிலும் குறிப்பாக அராலி (வழுக்கையாற்று கழிமுகப்பகுதி) வில்லூன்றிப்பகுதி, அரியாலைக் கிழக்குப் பகுதிகள், நாவற்குழி, கிளாலிப்பகுதிகள் என உவர் சேற்று நிலத்தாவரங்களான கண்டல் தாவரங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக கண்ணா, தில்லை, சோமுமுந்திரி, பனிதாங்கி, சிறுகண்டல், உமரி, பெரிய கொட்டானை, உப்புக்கண்டல் பூக்கண்டல் போன்றன கண்டல்களில் சிலவாகும்.

இக் கண்டல்களே இக் கடற்கரைகளின் பிளாந்தன்களின் வளர்ச்சிக்கும், மீனினங்கள் மற்றும் இறால் இனங்களின் இனப் பெருக்கத்திற்கும் காரணமாகின்றன. அது மட்டுமல்லாது பறவையினங்களினதும், விலங்கினங்களினதும் சரணாலயங்களாகவும் விளங்குகின்றன.

கடற்கரை சார் ஈரநிலங்களான நாவாந்துறை, கல்லுண்டாய் வெளி, பொம்மை வெளி, காக்கை தீவுப் பகுதிகள் திண்மக் கழிவுகளால் நிரப்பப்பட்டு அதன் சீரழிவிற்கு காரணமாகின்றன. எனவே இவ்வாறான ஈரநிலங்களில் சில பகுதிகளை மேடுறுத்தித்தான் யாழ்ப்பாண நகரம் கூட உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கடல்நீரெரிப் பகுதிகளில் காணப்படும் முறையற்ற மீன்படி முறைகளும் கடல்நீரேரியின் சீரழிவிற்கு காரணமாக காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் கடல்நீரேரிக்கு குறுக்காக பண்னைப்பாலம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இருந்த மீனினங்கள் அமைக்கப்பட்ட பின்னர். பாலத்தின் கிழக்கு பகுதியில் அருகியதாக கூறப்படுகின்றது.

மாலை வேளைகளில் நாவாந்துறை, அராலி,கல்லுண்டாய் வெளியினூடாக செல்லும் ஒருவருக்கு மனோரம்மியமான சூரிய அஸ்தமனத்தினையும், கண்டல் தாவரங்களுடன் கூடிய காட்சியை தரிசித்தாலும் மறுபுறத்தில் வேதனை தரக்கூடிய வகையில் திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டு ஈர நிலங்கள் சீரழிவிற்க்கு உள்ளக்கப்படுகின்றன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கையின்படி யாழ்ப்பாணக் கடல்நீரேரியும் அது சார்ந்த கடற்கரை ஈரநிலங்களும் மத்திம அளவில் (Moderate) சீரழிவுக்குட்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. மனிதன் மேல் ஈரநிலத்திற்கு உள்ள ஈரம் ஈரநிலத்தில் மனிதனுக்கு இல்லை என்பதற்கு இன்னும் பல உதாரணங்கள் கூறலாம்., சூழல் நட்புறவு சார்ந்து சிந்திக்கப்பட்டு செயலாற்ற வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

ஈரநிலப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்

தாவரப்போர்வையை பாதுகாத்தல்:- அலையாத்தி தாவரங்களின் முக்கியத்துவத்தை சகலருக்கம் உணர்த்துவதன் மூலம் அவற்றை அழிவிலிருந்து மீட்டுக்கொள்ளலாம்.

  • அத்துடன் அழிக்கப்பட்ட தாவரங்களுக்கு பதிலாகவும் மேலதிகமாகவும் கடல்தாவரங்களை மீள்நடுகை மூலம் உருவாக்குதல்.
  • பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவித்தல்:- ஈரநிலங்கள் அமைந்து காணப்படும் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவித்து அப்பிரதேசங்களில் ஈரநிலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோரை சட்டத்தின் முன்நிறுத்துவதன் மூலமும் ஈரநிலப்பகுதிகளைப் பாதுகாக்கலாம்.
  • நகரக்கழிவுகளை கொட்டுவதை தவிர்த்தல்:- ஈரநிலப்பிரதேசங்களில் நகரக்கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தொலைவான இடங்களில் அவற்றை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தோ அல்லது கூட்டுஉரம் தயாரிப்பதற்கோ பயன்படுத்தலாம். இதன் மூலம் ஈரநிலப்பகுதிகளில் திண்மக்கழிவுகள் சேர்வதனைக் குறைக்கலாம்.
  • தொழிற்சாலைகளை வேறுபகுதிகளில் அமைத்தல்:- ஈரநிலங்கள் உள்ள பகுதிகளில் அமைந்து காணப்படுகின்ற தொழிற்சாலைகளினால் வெளியேற்றப்படுகின்ற கழிவுகள் ஈரநிலங்களில் சேர்வதனைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், அக்கைத்தொழிற்சாலைகளை வேறு பகுதிகளில் அமைத்தல்.
  • ஈரநிலப்பகுதிகளில் நிலம்நிரப்பி குடியிருக்கும் தேவையை கருத்திற் கொண்டு அத்தகையவர்களுக்கு வேறு சமவெளிப்பிரதேசங்களில் வசிப்பிடவசதி அல்லது நிலத்திற்கான உரிமையைப் பெற்றுக்கொடுத்தல்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.95945945946
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top