பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / தமிழர்களின் பண்பாட்டில் தாவரங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழர்களின் பண்பாட்டில் தாவரங்கள்

தமிழர்களின் பண்பாட்டில் தாவரங்களின் பங்கு என்னவென்று இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முக்கியத்துவம்

நமது பூமியில் தாவர இனம் தோன்றி சுமார் 400 மில்லியன் ஆண்டுகள் முதல் 450 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

நீர், மண், காற்று, வெப்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிரோட்டமுள்ள பாரம்பரிய செல்களின் பிரதிபலிப்பு வடிவமாக தாவரங்கள் இப்புவியில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.  ஒரு செல் உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியில் தோன்றிய கடைசி இனமான மனிதஇனம் வரை நீரையும், காற்றையும், வெப்பத்தையும் வெளியிலிருந்து எடுத்துக் கொண்டு நமது உடல் வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலும் பெற்று ஒரு உருவத்துடன் இருப்பது இத்தாவரத்தால் தான். தாவரங்கள் இல்லையெனில் மற்ற உயிரினங்கள் இவ்வுலகில் இல்லை என்பது உண்மை.

நமது தினசரி தேவைகளான உணவு, தங்குமிடம், மருந்து போன்ற பொருட்களில் தாவரங்களின் பங்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே இடம்பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை.  சுருங்கச் கூறின் இன்றைய அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையிலும் மனிதன் உருவாக்கும் எந்த ஒரு பொருளும் இயற்கையிலிருந்துதான் பெறப்படுகிறது. தாவரங்கள் அடர்ந்த பகுதியில் தான் அதிக மழை கிடைக்கின்றது என்பதும் அவ்விடத்தில் தான் நீர் பிடிப்பு அதிகம் உள்ளது என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாகவுள்ளது.

அன்று காட்டுக்குள் மரம் என்ற நிலையிலிருந்து மாறி இன்று வீட்டுக்குள் மரம் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.  உலகளவில் இயற்கை வள பாதுகாப்பிற்காக குரல் கொடுத்துக் கொண்டு வருகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

வரலாற்றில் தாவரங்கள்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் நமது இயற்கை வளத்திற்காக இந்தியாவிற்குள் வந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குமட்டூர் கண்ணனார் எழுதிய பதிற்றுப்பத்து பாடல்கள் மூலமும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கம்பர் எழுதிய இராமாயணத்திலும் தாவரங்களின் மூலம் அளித்த உவமைகளிலிருந்து அக்காலத்தில் தாவரங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.

பழம்பெரும் நூல்களாக கருதப்படும் வேத நூல்களிலிருந்தும் (கி.மு. 1500 ஆண்டு முதல் கி.மு. 800 ஆண்டு வரை), சங்ககால நூல்கள் மூலமும் (கி.மு. 300 ஆண்டு முதல் கி.பி. 300 வரை) தாவரங்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை உணர முடிகிறது.

வேதகாலத்தில் தாவரங்களை தெய்வங்களின் உறைவிடமாகவே கருதியுள்ளனர். உதாரணமாக ஆல் (வடபத்ரவிருட்சம்).

இம்மரத்தின்

 • வேர் பகுதி பிரம்மாவாகவும்,
 • தண்டு பகுதி சிவனாகவும்,
 • கிளைபகுதி விஷ்ணுவாகவும்

ஆக மும்மூர்த்திகளாக எண்ணி வழிபட்டு வந்தனர்.  அரச மரத்தை விஷ்ணுவாகவும் (ஏனெனில் கீதையில் கண்ணன் விருட்சத்தில் அஸ்வதவிருட்ஷமாக (அரசு) இருப்பேன் என்று கூறியுள்ளதால்) அத்தி மரத்தை பிரம்ம விருட்சம் என்றும், வேம்பு சக்தி (அம்மன்) யின் உறைவிடமாகவும் பாவித்து மரங்களை வழிபட்டு வருகின்றனர்.

ஒரு மரம் நட்டு வளர்ப்பது பத்து குழந்தைகளை பெற்று வளர்ப்பதற்கு சமம் என்று அக்னி புராணம் கூறுகிறது.  தமிழகத்தில் பழங்கால இயற்கை வளங்கள் பல கல்வெட்டுக்கள், ஓலைசுவடிகள் மற்றும் நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

ஒவ்வொரு கோயில்களிலும் காணப்படும் ஸ்தல விருட்ஷங்கள் வாணசாஸ்திர நூல்களில் கூறியுள்ளபடி கிரகம், நட்சத்திரம், இராசி ஆகியவைகளுக்கு உகந்த தாவரங்களே ஆகும்.  இவைகள் தெய்வ நம்பிக்கையில் இன்று கோயில் கட்டும் நேரம் அமைப்பு போன்ற வழிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு கோயிலுக்கென்று ஒரு ஸ்தலவிருட்சம் பாதுகாக்கப்படுகிறது.  மேலும், இறைவழிபாட்டிற்கு நந்தவனங்களும், பழமரங்களும் வளர்க்கப்படுவதை தொன்றதொட்டு காணமுடிகிறது.  பெரும்பாலும் மன்னர்கள் காலத்தில் தான் நந்தவனங்கள், பூங்காக்கள், ஸ்தல விருட்சங்கள் கோயில்காடுகள் ஏற்படுத்தப்பட்டன.

அக்காலத்தில் சமய சடங்குகளும், பொதுக்கூட்டங்களும், ஊர்பஞ்சாயத்துகளும் ஒரு குறிப்பிட்ட மரத்தை தெய்வ நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்து அம்மரத்தடியில் நடத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.  தமிழகத்தில் இன்றளவும் சில கிராமங்களில் இது நடைமுறையில் உள்ளது.  இந்நிகழ்வு பொதியல், அம்பலம் மற்றும் மன்றம் என்ற பெயரில் வழங்கியுள்ளனர். சமஸ்கிருதத்தில் பஞ்சவட்டி என்பது, தமிழில் ஐந்து புனித மரங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இவைகள் எந்த திசையில் நடவேண்டும் என்பதை

 • அரசு - கிழக்கு,
 • ஆல் - மேற்கு,
 • வில்வம் - வடக்கு,
 • நெல்லி - தெற்கு,
 • அசோகா - தென்கிழக்கு

என்று வகுக்கப்பட்டுள்ளது.  தாவரத்தின் இலைகள் சுத்தமான காற்றை தருகின்றன.  ஞானிகள் ஞாளம் பெற உகந்த மரமாக இவை கருதப்படுகிறது.

உ.ம். புத்தர் ஞானம் பெற்றது அரசு மரத்தடியில்.

ஆதி மனிதன் தனது வசிப்பிடங்களில் உள்ள தாவரங்களின் பெயரை வைத்தே அழைத்துள்ளான்.

(உ.ம்.) –

 • திருநெல்வேலி (திரு + நெல் + வேலி),
 • திருவல்லிக்கேணி (திரு + அல்லி + கேணி),
 • திருவாலங்காடு (திரு + ஆல் + காடு),
 • பனையூர் (பனை + ஊர்),
 • குறிஞ்சிப்பாடி (குறிஞ்சி + பாடி).

ஆனால் இன்றளவும் அவையே நிலைத்துவிட்டது.  இடத்திற்கு மட்டுமின்றி தங்களுக்கும் தாவரங்களின் பெயர்களையே வைத்துக்கொண்டார்கள்

உ.ம்.

 • மருதமுத்து (மருதம் + முத்து),
 • திருநாவுக்கரசு (திரு +  நாவல் + அரசு),
 • கமலக்கண்ணன் (கமலம் + கண்ணன்),
 • குறிஞ்சிசெல்வன் (குறிஞ்சி + செல்வன்),
 • வில்வாரணி (வில்வம் + ராணி),

தாமரை, துளசி போன்ற பெயர்கள் இன்றும் வழக்கத்தில் உள்ளதன் மூலம் உணரமுடிகிறது.

மன்னர்களும் தாவரமும்

தாவரங்களை அடிப்படையாகக் கொண்டே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங்களையும், அவற்றிற்குரிய இசையையும் குறிஞ்சிபண், முல்லைபண், மருதப்பண், நெய்தல்பண், பாலைப்பண் என தாவரத்தின் பெயரில் அமைத்துள்னனர்.

மன்னர்கள் ஏதேனும் ஒரு மரத்தை தேர்வு செய்து அதை காவல் மரமாக கருதி அதையே காடுகளாக வளர்த்து எதிரிகள் அழிக்காவண்ணம் பாதுகாப்பாக வளர்த்து வந்துள்ளார்கள். இதுவே அந்த மன்னனின் அடையாள சின்னமாக விளங்கியது.  பகையரசன் அக்காட்டை அழித்துவிட்டால் தான் தோற்றுவிட்டதாக கருதி அந்நாடு பகையரசனுக்கு ஒப்படைக்கப்படும் வழக்கம் இருந்துள்ளது.

 • சேரமன்னன் - பனம்பூவையும்,
 • சோழமன்னன் - ஆத்திபூவையும்,
 • பாண்டியமன்னன் - வேப்பம்பூவையும்,
 • பல்லவர்கள் ஆதொண்டை பூவையும்

தங்களது அடையாளமாக வைத்திருந்தனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

மன்னர்கள் போர் புரியும் முறைகளிலும் பூக்களை வைத்தே போரின் தன்மையை பிறருக்கு எளிதில் புரியவைத்துள்ளனர்.

 • எதிரியின் பசுமந்தையை கவர்ந்துவரும்போது - வெட்சிபூமாலையையும்,
 • கவர்ந்த பசுமந்தையை மீட்டு வரும்போது - கரந்தை மாலையையும்,
 • போருக்கு புறப்படும்போது - வஞ்சி மாலையையும்,
 • எதிர்த்து வருபவர்கள் - காஞ்சி மாலையையும்,
 • மதில் காத்து நிற்பவர்கள் - நொச்சி மாலையையும்,
 • போர் புரியும் போது - தும்பை மாலையையும்,
 • வெற்றி பெற்று வரும்போது - வாகை மாலையையும்

அணிந்துகொள்வார்கள். இன்று கூட ஏதேனும் ஒரு போட்டிகளுக்கு செல்பவர்களை வெற்றி வாகை சூடிவா என்று கூறும் சொல் நடைமுறையில் உள்ளது.

பழங்காலத்தில் தாவரங்களை கொண்டே நேரத்தையும், காலத்தையும் உணர்ந்துள்ளனர். உதாரணமாக, காலையில் மலர்வது (பரங்கி), மாலையில் மலர்வது (அந்திமந்தாரை, பீர்க்கன்), இரவில் மலர்வது (அல்லி), யாமத்தில் (நடு இரவு) மலர்வது (பவழமல்லி), ஆண்டுக்கொருமுறை மலர்வது (காந்தள், பனை, புளி), பலஆண்டுக்கொருமுறை மலர்வது (குறிஞ்சி - 12 ஆண்டுகள், தாலிபனை - 15 ஆண்டுகள், மூங்கில் - 60 ஆண்டுகள்).

சேர, சோழ, பாண்டிய, மௌரியர்கள், குப்தர்கள், மொகலாயர்கள் கால அரசர்களும் நீர்ஆதாரங்களை பாதுகாத்து அதன்மூலம் விவசாயம் மற்றும் காடு வளர்ப்பில் ஆர்வமுடன் செயல்பட்டார்கள் என வரலாறு கூறுகிறது.  அக்காலத்தில் உருவாக்கிய நீர்தேக்கங்கள் சுமார் 39,202 என்ற எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் உள்ளதாக கணக்கெடுப்பு உள்ளது.  1800 ஆண்டுகளுக்கு முந்திய கல்லணையும், நதிநீர் பயன்பாட்டிற்கு ஒரு முக்கிய சான்றாக உள்ளது.  இந்நீர் தேக்கங்கள் மூலம் பல தாவர இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

புலவர்களும் தாவரமும்

ஒளவையார் ஒரு பாடலில் கடப்பாறையை கொண்டு பிளக்க முடியாத பாறையை கூட தாவரத்தில் நுண்ணிய வேர் முனை துளைத்து அப்பாறையை உடைத்து தூளாக்கிவிடும் வலிமையுடையது என்றும் மன்னனை வாழ்த்திப் பாடும் பொழுது “வரப்புயற" என்று ஒரே வார்த்தையில் வாழ்த்தி சபையோருக்கு வரப்புயற நீர் உயரும், நீர் உயர நெற்பயிர் நன்கு விளைந்து, குடிமக்கள் பசியின்றி வாழ்க்கை நடத்துவதன்மூலம் மன்னனின் ஆட்சி சிறப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.  மேலும் நெல்லிக்கனியை மன்னனுக்கு பரிசலித்ததிலிருந்து அத்தாவரத்தின் முக்கியத்துவத்தை அறியமுடிகிறது. பாரி வள்ளல் தனது தேரினையே முல்லைக்கொடி படர்வதற்காக கொடுத்ததிலிருந்து தாவரங்களையும் தன்னைப்போல் ஒரு ஜீவனாக கருதியவிதம் உணரமுடிகிறது.

அணிநிழற் காடுகள் உடையது ஒரு நாட்டிற்கு சிறந்த பாதுகாப்பு என்று திருவள்ளுவர் கூறுகிறார். பாரதியார் தமது பாடலில் “நல்ல காடு வளர்ப்போம்”  என்றும் “உணவியற்கை கொடுக்கும்"  என்றும் கூறியுள்ளார். ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி, மூங்கில்போல் கிளைத்து வாழவேண்டும் என்று தாவரங்கள்மூலம் உதாரணம் கூறி வாழ்த்தும், பழமொழிகளும் இன்ளறவும் உண்டு.

தாவரத்தின் பயன்பாடு

மருத்துவ குணம் கருதியே விழாக்காலங்களில் மா, வாழை தோரணங்களும், வீடுகளில் நோய் ஏற்படும் பொழுது வேம்புவையும், கோயில்களில் வில்வம், துளசி போன்றவற்றை பயன்படுத்தினர்.  பல்வேறு மரச்சாமான்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காகித உபயோகமும் ஏற்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது.  தாவரங்கள் மட்டும் நேரடியாக பயன்படுவதோடு அவை பூமியில் புதையுண்டு நிலக்கரியாகவும் எண்ணெய்களாகவும் இன்று மனிதனின் கனவுகளையெல்லாம் (ஆழ்கடலில் சென்று வருவதிலிருந்து விண்வெளி கிரகங்களுக்கு சென்று வருவது வரை) நினைவாக்கும் வண்ணம் இப்புவியில் பல்வேறு எளிய வாழ்க்கைக்கு வழிவகுத்துள்ளது.  நவரத்தினத்தில் ஒன்றான வைரமும் ஒரு தாவரம் தான்.

தாவர வளத்திற்கு நீர் ஆதாரங்கள் மிக அடிப்படை என்பதை நமது முன்னோர்கள் உணர்ந்து அதன்மூலம் பல்லுயிர்வளம் சிறப்பாக பாதுகாக்கப்பட்டது. மனித உடலுக்கு மேல் தோல் எவ்வாறு அவசியமோ அதுபோல் நீர், நிலம், காற்று ஆகியவற்றின் பாதுகாப்பிற்கும் தாவரங்கள் மிக அவசியமான ஒன்றாகும்.  இப்புவியில் மனிதனின்றி இயற்கை உயிர்வாழும், இயற்கையின்றி மனிதனால் உயிர் வாழ இயலாது.  எனவே இயற்கை வளத்தை பேணிக்காப்போம்.

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்

2.85185185185
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top