பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / நிலவரைமேப்புகள் - விவரங்களும் குறியீடுகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நிலவரைமேப்புகள் - விவரங்களும் குறியீடுகளும்

நிலவரைமேப்புகள் பற்றிய விவரங்களும் குறியீடுகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

புவியின் மேற்பரப்பில் காணப்படும் தோற்றங்களின் சீரமைப்பினை வரைப்படமாக அல்லது கணிணித்திரையில் காணுவதற்கு மிகச் சிறந்த கருவியாக மேப்புகள் பயன்படுகின்றன. சாலை மேப்புகள், அரசியல்பிரிவு மேப்புகள், நிலப்பயன்பாட்டு மேப்புகள், உலகமேப்புகள், நிலவரைமேப்புகள் போன்ற பல்வேறு மேப்புகள் பலவகைகளில் பயன்படுகின்றன. அவற்றுள் நிலவரைமேப்புகள் (Topographic maps) பரவலாக பயன்படுத்தப்படும் மேப்புகளாகும். நிலவரைமேப்புகளில் நிலத்தோற்றங்களின் வடிவத்தையும் உயரத்தையும் காட்டுவதற்காக வரையப்பட்டுள்ளன; இதனால் இதர மேப்புகளிலிருந்து நிலவரைமேப்புகள் வேறுபடுகின்றன. மேடு பள்ளங்களைக் கொண்ட நிலத்தோற்றங்கள் முப்பரிமாணங்களைக் கொண்டவை. அவை இரு பரிமாணங்களைக் கொண்ட நிலவரைமேப்பில் சித்தரிக்கப்படுகின்றன.

நிலவரைமேப்புகள் இயற்கையை மட்டுமன்றி மனிதர்கள் உருவாக்கிய தோற்றங்களையும் சித்தரிக்கின்றன. மலைகள், பள்ளதாக்குகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் இயற்கைதாவரங்கள் போன்ற இயற்கையின் வேலைபாடுகளை காட்டுகின்றன. அவற்றின் பெயர்களையும் தெரிவிக்கின்றன. தவிர மனிதர்களின் வேலைபாடுகளான சாலைகள், எல்லைகள், அனுப்பீட்டுத் தடங்கள் (transmission lines), முக்கியக் கட்டிடங்கள் முதலானவற்றையும் அடையாளம் காட்டுகின்றன. நிலவரைமேப்புகளிலிருந்து பெறப்படும் விவரங்கள் வாழ்க்கைத்தொழிலாளர்கள் (Professionals) பொழுதுப்போக்காளர்கள் போன்றவர்கள் பயன்படுத்தக் கூடியவைகளாக இருக்கின்ற காரணத்தினால் இத்தகைய மேப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. பொறியியல், ஆற்றல் ஆய்வுகள், இயற்கை வளங்களைப் பேணிகாத்தல், சுற்றுப்புறச்சூழல் மேலாண்மை, பொதுப்பணித்துறைப்பணிகள், வணிகம்-குடியிருப்புத்திட்டங்கள், மலையேற்றம், கூடாரம் அமைக்க, மீன்பிடிப்புப் போன்ற வெளிப்புறப் பணிகள் முதலானவற்றிற்கு நிலவரைமேப்புகள் பயன்படுகின்றன.

நிலவரைமேப்புகளின் குறியீடுகள்

மேப்பியலில் ஒவ்வொன்றும் குறியீடுகளாகும். மேப்புகள் புவியின் சுருக்கமாக (abstract) கருதப்படுகின்றன. புவியின் விவரங்களை சுருக்குவதற்குக் குறியீடுகள் தேவைப்படுகின்றன. குறியீடுகள் வேண்டாமெனில் மேப்புகளும் வேண்டாம் எனக் கொள்ளலாம். குறியீடுகளைப் பற்றி நினைக்கும் பொழுது பாலங்கள், வீடுகள் போன்றவை காணப்படுகின்ற இடங்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கின்ற வரைப்படங்கள் நமது நினைவிற்கு வருகின்றன. இக்குறியீடுகள் சாலைகள், இருப்புபாதைகள், ஆறுகள் முதலான நீள்தோற்றங்களையும் சித்தரிக்கின்றன. இவற்றைத் தவிர பரப்பளவுகளையும் மேப்புகளில் காட்டவேண்டியுள்ளது. காடுகளின் பரப்பு அல்லது காடுகள் வெட்டப்பட்ட நிலப்பரப்பு ஆகியவற்றை மேப்புகளில் காட்ட நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முறைக்குறிகளும் குறியீடுகளும்

மேப்பின் ஒவ்வொரு பகுதியும் ஒரு குறியீடாகும். தவிர மேப் என்பதே ஒரு குறியீடாகவும் கருதப்படுகிறது. அது குறியீடுகளின் குறியீடாகும்.

குறியீடுகள்

எழுத்துகள் போன்றவை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழியில் ஒரே பொருளாகத் தரக்கூடிய வார்த்தைகள் வேறுபடுவது போல ஒரு மேப்பிலிருந்து மற்றொரு மேப்பில் குறியீடுகள் வேறுபடுகின்றன. ஒரு சில முறைக்குறியீடுகளைத் தவிர பயனீட்டாளர்களுக்காக வேறுகுறியீடுகளை வடிவமைக்க மேப்பியளாலர்களுக்குச் சுதந்திரம் உண்டு. குறியீடுகள் அதன் பொருளை மேப்பியளாலர்களிடமிருந்து பெறுகின்றன.

வார்த்தைகள் பலவற்றை ஒன்றுச் சேர்த்து முறைபடுத்தும் பொழுது சொற்றொடர் ஒன்று உருவாகிறது. அதுபோலவே குறியீடுகள் பலவற்றை ஒன்றுச் சேர்த்து முறைபடுத்தும்பொழுது மேப்பு ஒன்று உருவாகிறது. சொற்றொடர்கள் பல சேர்ந்து பத்தியாகிறது. ஒழுங்காக வரிசைப்படுத்தப்பட்ட குறியீடுகள் தரக் கூடிய பொருளை தனித்த குறியீடு தர இயலாது. ஆகையினால் ஒரு மேப்பை வடிவமைக்கும் செயல் முறையில் குறியீடுகளை உருவாக்குதலும், அவற்றை ஒழுங்குப்படுத்துதலும் சோதனையான கட்டமாகும். தேர்ந்தெடுக்கும் சொற்கள் தவறுதலாக இருப்பின் அப்புத்தகம் பிரபலமடைவதில்லை. அதுபோன்றே தேர்ந்தெடுக்கும் குறியீடுகள் தவறுதாலாக இருப்பின் அம்மேப்பும் பிரபலமடைவதில்லை. நமது செயல்பாடுகளுக்காக குறியீடுகளை மூன்று விதமாக வகைப்படுத்தலாம்.

அவையாவன:

புள்ளிக் குறியீடுகள்

ஒரு தோற்றத்தின் அமைவிடத்தை அல்லது மதிப்பீட்டு எண்ணை மிகச்சரியாக அதன் அமைவிடப்புள்ளியில் காட்டுவது புள்ளிக் குறியீடுகள் எனப்படுகின்றன. புள்ளிக் குறியீடுகள் இருவகைப்படும் அவையாவன:

பண்புவகைக் குறியீடுகள்

ஒரு தோற்றத்தின் அமைவினைக் காட்டுவதற்கு பண்புவகைக் குறியீடுகள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக நகரத்தை சித்தரிக்க புள்ளி அல்லது மருத்தவமனையை சித்தரிக்க பெருக்கல் குறி ஆகியவற்றைக் குறிக்கலாம். இத்தகைய குறியீடுகள் எவ்வித எண் அளவுகளையும் குறிப்பதில்லை. எடுத்துக்காட்டாக சாலை மேப்பில் காணப்படும் அனைத்தும் ஒரு சொல்லாகவோ, ஒரு எண்ணாகவோ அல்லது ஒரு குறியீடாகவோ இருக்கின்றன. ஒரு நகரத்தின் வழக்கமான குறியீடாக வட்டம் உள்ளது

வட்டத்திற்குள் ஒரு நட்சத்திரம் குறிக்கப்பட்டிருப்பின் அந்நகரம் தலைநகரமாகும். குறியீடுகளில் சில சிறிய படங்களாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு விமானம், விமானதளத்தைக் குறிக்கிறது. கோடுகளும் குறியீடுகளேயாகும். கோடுகளில் சில சாலைகளின் மேற்பரப்புத் தன்மைகளை எடுத்துரைக்கின்றன. ஏனைய குறியீடுகள் கால்வாய், இருப்புபாதைகள் அல்லது எல்லைகளைக் குறிக்கின்றன. நிறங்களுக்கும் பொருளுண்டு. எல்லா மேப்புகளும் ஒரே மாதிரியான குறியீடுகளை பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு சாலை மேப்பிலும் குறியீடுகளின் பொருள் விளக்கக் குறிப்புகளாகத் தரப்பட்டிருக்கும்.

எண் மதிப்புக் குறியீடுகள்

நீளம், மதிப்பு அல்லது கொள்ளளவு ஆகியவற்றை எண் மதிப்புக் குறியீடுகள் விளக்குகின்றன. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை எண் மதிப்பு முறையில் ஒரே மாதிரியான புள்ளிகளைப் பயன்படுத்திச் சித்தரிக்கலாம். ஒரு தோற்றம் அல்லது கருத்து ஆகியவற்றின் பண்புகள் மதிப்புகளைக் கொண்டிருப்பின் அவற்றை புள்ளிவிவரங்களின் வகைகளை அடிப்படையாகக் கொண்டு பட்டைகள் (Bar), அல்லது வட்டங்கள் அல்லது கோளங்கள் மூலமாக சித்தரிக்கலாம். பட்டைகள் நீளம் அல்லது உயரம் ஆகியவற்றை சித்தரிக்கின்றன; வட்டம் அல்லது சதுரம் ஆகியன அளவுகளையும், கனசதுரம் (Cubes) அல்லது கோளம் ஆகியன கொள்ளளவுகளையும் சித்தரிக்கின்றன. இவற்றுள் கனசதுரங்களும் கோளங்களும் முப்பரிமாண தோற்றங்களாகும். எனவே வட்டங்களையும் சதுரங்களையும் விட குறைவான பரப்பை எடுத்துக் கொள்கின்றன.

கோட்டுக் குறியீடுகள்

புள்ளிக் குறியீடுகளைப் போலவே கோட்டுக் குறியீடுகளும் புள்ளிவிவரங்களின் பண்புகள், மதிப்புகள் போன்றவற்றை விளக்கிக் காட்டப் பயன்படுகின்றன. அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள், எல்லைக்கோடுகள், போக்குவரத்துத் தடங்கள் போன்றவை பண்புவகைக் குறியீடுகளாகும். இக்குறியீடுகள் நிலத்தின் மீது காணப்படும் தோற்றங்களின் எண்மதிப்புகளை அடிப்படையாக கொண்டிருப்பதில்லை. புவியின் மீது இயற்கையாக ஓர்வரிசைப் புள்ளிகளும் (Coordinates) கடற்கறைக் கோடுகளும் (Coastlines) காணப்படுவதில்லை. போக்குவரத்து மற்றும் தொடர்பு சாதனங்கள், சிற்றோடைகள், எல்லைகள் போன்றவற்றின் அகலங்களும் மிகைப்படுத்திக் காட்டப்படுகின்றன. அவை அளவைகளுக்கு உட்பட்டு வரையப்படுவதில்லை. இருப்பினும் எண்மதிப்பு முறையிலும் கோட்டுக்குறியீடுகள் வரையப்படுகின்றன. இயற்கை மற்றும் கலாச்சாரப் புள்ளி விவரங்கள் எண்மதிப்பு முறையில் பலவகையான சமக்கோடுகள் வரையப்படுகின்றன. அதுபோலவே போக்குக் கோடுகள் (flowlines) ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகருகின்ற பொருள்களின் அளவுகளை விளக்குகின்றன.

பிரிவுகள், மண்வகை போன்றவை மேப்பில் பண்புவகைக் குறியீடுகளாகக் காட்டப்படுகின்றன. அரசியல் அலகுகள் அல்லது சமக்கோடுகள் போன்றவை நடைபெறும் நிகழ்ச்சியின் அடர்த்தியை விளக்குகின்ற குறியீடுகள் எண்மதிப்பு வகையாக மாறுகின்றன.

மேப்பை பயன்படுத்துபவர்கள் பார்த்தறிவதற்கு ஏதுவாக புவி மேற்பரப்பில் ஏதாவது ஒரு பரப்பில், அப்பரப்பிற்கேற்ற தோற்றங்களை அதன் அமைவிடக் காட்சிகளாக மாற்றி அமைப்பதே மேப்புகளின் நோக்கமாகும். ஒவ்வொரு மேப்பிலும் பொறிப்புகள் (legends) காட்டப்பட்டிருக்கும் அப்பொறிப்புகள் மேப்புகளில் பயன்படுத்தப்பட்ட முறைக்குறியீடுகளை மட்டுமே கொண்டிருக்கும். நிலவரைமேப்பில் உள்ள பொறிப்புகள் அம்மேப்பு பரப்பில் அமைந்துள்ள நிலவடிவங்களை வரைய பயன்படுத்தப்பட்ட முறைக்குறியீடுகளை மட்டுமே கொண்டிருக்கும். ஆகையினால் நிலவரைமேப்புகளை படித்தறியும் வேளைகளில் அதன் பொறிகளை குறிப்புகளாக பயன்படுத்துதல் அவசியமாகின்றது. தோற்றங்களைச் சித்தரிக்கின்ற ஏற்புடைய குறியீடுகளை வடிவமைப்பதில் ஒவ்வொரு முறையும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு மேப்பின் பரப்பில் காணப்படக் கூடிய தோற்றங்கள், அவற்றின் அளவு, அமைவிடம், வடிவம் ஆகியவற்றில் உண்மை நிலையைப் பிரதிபலிப்பவைகளாக இருக்கின்றன. அத்தகைய விவரங்கள் நிலவரைமேப்பில் எல்லையோரக் குறிப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எல்லையோரக் குறிப்புகள் (Marginal Informations)

நிலவரைமேப்புகளை படித்தறிபவர்களுக்குத் தேவைப்படுகின்றவை எல்லையோரக் குறிப்புகளாக தரப்பட்டுள்ளன. எல்லையோரக் குறிப்புகளின் வகைகளாவன:

  1. வெளி எல்லையோரம்,
  2. இடைபட்ட எல்லையோரம்,
  3. உள் எல்லையோரம்.

வெளிஎல்லையோர விவரங்களாக வரிசை எண், மாநிலம், மாவட்டத்தின் பெயர்கள், ஏனைய பொதுவிவரங்கள் ஆகியன தரப்படுகின்றன. இடைப்பட்ட எல்லையோர விவரங்களாக கோட்டுச்சட்ட விவரங்கள், காண்டூர் மதிப்புகள், அடுத்த குடியிருப்பின் பெயர், தொலைவு கிலோமீட்டரில் தரப்படுகின்றன. உள்எல்லையோர விவரங்களாக முறைக்குறிகளையும் குறியீடுகளையும் பயன்படுத்தி வரையப்பட்ட நிலத்தோற்றங்களை சித்தரிக்கின்றன. அடுத்த ஆண்டு உள்எல்லையோர விவரங்களைப் பற்றி விரிவாக படிக்க உள்ளோம். வெளிஎல்லையோர விவரங்கள் விரிவாக இப்பாடத்தில் தரப்பட்டுள்ளது. தவிர மேப்பை படித்தறிய விரும்புவர்களுக்கு தேவைப்படுகின்ற விவரங்கள் வரிசை எண்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

வெளிஎல்லையோர விவரங்கள் :

மேப்பின் பெயர் (1) (Sheet name) : மேப்பின் மேல்பகுதியில் இடது மூலையில் எடுப்பாக அம்மேப்பின் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. பொதுவாக அரசியல் பிரிவின் துணைப்பிரிவின் பெயரே மேப்பின் பெயராக தரப்படுகிறது. இப்பெயர் வரையறுக்கப்பட்ட புவியில் பரப்பை குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பெயர்

மேப்பின் வருடம் (2) (Sheet Year)

மேப்பு எல்லையின் மேல்பகுதியில் இடதுபுறத்தில் மேப் பெயருக்கு அருகில் மேப்பின் வருடம் அச்சிடப்பட்டுள்ளது. நில அளவீடு (Survey) மேற்கொள்ளப்பட்ட வருடம் மிகச்சிறிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளது.

நில அளவீடு வருடம்

மேப்வரிசை பெயர் (3) (Series Name)

மேப்பு எல்லையின் மேல்பகுதியில் மையத்தில் எடுப்பாக மேப்வரிசையின் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. மேப் தயாரிக்கப்பட்ட பொழுது அம்மேப்பின் பரப்பு அமைந்திருந்த அரசியல் எல்லையின் பெயர் மேப்வரிசைப் பெயராக அச்சிடப்படுகிறது.

மாநிலத்தின் பெயர்

பதிப்பு எண் (4) (Edition Number) :

மேப் எல்லையின் மேல்பகுதியில் வலதுபக்கத்தில் பதிப்பு எண் எடுப்பாக அச்சிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பதிப்புகளின் வரிசைப்படி எண்கள் அச்சிடப்படுகிறது; ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்பாக இருப்பின் அதிக எண்ணைக் கொண்டிருக்கும் மேப்பு அண்மை வெளியீடாகும். பதிப்பு எண்ணிற்கு கீழ் குறிப்பிட்ட வருடத்தில் உண்மையான வடக்கிலிருந்து காணப்படும் காந்த விலக்கம் அச்சிடப்பட்டிருக்கும்.

பதிப்பு எண் மற்றும் காந்த விலக்கம்

மேப்பு எண் (5) (Sheet Number)

மேப் எல்லையின் மேல்பகுதியில் வலதுபக்கத்தில் பதிப்பு எண் எடுப்பாக அச்சிடப்பட்டுள்ளது. இந்த எண் மேப்பின் வரிசையை சுட்டிக் காட்ட (Reference) பயன்படுகிறது.

சுட்டுக் குறியீட்டு எண்

பொறிப்பு (6) (Legend)

இயற்கை தோற்றங்களைக் காட்டுகின்ற பொறிப்பு மேப்பின் கீழ்பகுதியில் இடது புறத்திலும் (6 அ), கலாச்சார தோற்றங்களைக் காட்டுகின்ற பொறுப்பு வலதுபுறத்திலும் (6 ஆ) அமைந்துள்ளது. மேப்பில் வரையப்பட்டுள்ள எடுப்பாகத் தெரியப்கூடிய நிலத்தோற்றங்களை சித்தரிக்கும் குறியீடுகளை அடையாளம் கட்டுகின்றன. எல்லா நேரங்களிலும் அனைத்து மேப்புகளிலும் ஒரே மாதிரியான குறியீடுகள் காணப்படாது. மேப்புகளை பயன்படுத்தும் பொழுது பொறிப்புகளை ஆதாரமாக எடுத்து கொள்ள வேண்டும்.

மேப்பு குறிப்பு எண் (7) (Index to sheet)

மேப்பின் கீழ்பகுதியில் இடது புறத்தில் (7) மேப்பின் எல்லைகளையும் வலதுபுறத்தில் (7ஆ) அடுத்த மேப்பின் நிர்வாக எல்லைகயையும் மேப்பு குறிப்பு எண் காட்டுகிறது. இந்த படம் மேப்பின் பரப்பிற்குள் அடங்கும் மாநிலம், மாவட்ட எல்லைகளைக் குறிக்கிறது.

இயக்க குறிப்பு (8) (Control Note)

இயக்க குறிப்பு மேப்பின் கீழ் பகுதியின் நடுவில் அமைந்துள்ளது. இதில் மேப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் தொழில் நுட்ப பண்புகளை கட்டுபடுத்துகின்ற செயல்நிறுவனக் குறிப்பு தரப்பட்டுள்ளது.

இயக்க குறிப்பு

அளவைகள் (9) (Scale)

இயக்க குறிப்புக்கு கீழே நடுவில் அளவைகள் வரையப்பட்டுள்ளன. இந்த அளவை பிரதிபின்னமாகவோ நீள் அளவைக்கோலாகவோ வரையப்பட்டிருக்கும். இவை மேப்பில் உள்ள தூரத்திற்கும் நிலத்தில் அமைந்துள்ள அதே தூரத்திற்கும் இடையேயான விகிதமாகும். எடுத்துக்காட்டாக 1: 50000 என்பதை பின்வருமாறு எடுத்துரைக்கலாம். மேப்பில் தூரம் 1 என்றால் அதே தூரம் நிலத்தில் 50,000த்தைக் குறிக்கிறது.

நீள் அளவைக்கோல்

மேப்பில் பயன்படுத்தப்படும் நிறங்கள்: மலைகள், குன்றுகள் ஆகியனவற்றை பழுப்பு நிறங்களிலும் ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை நீலநிறங்களிலும், தாவரங்களை பச்சை நிறத்திலும் சாலைகள் மற்றும் சிறப்பான விவரங்களை சிவப்பு நிறத்திலும் காட்டப்படுகின்றன. நவீன மேப்புகளின் பொறிப்புகளை பார்க்கும்பொழுது நிறப்பயன்பாட்டில் கடந்த பல வருடங்களாக பெரிய மாற்றம் ஏதும் காணப்படவில்லை. மேப்புகளில் நில அமைப்புகளையும் கலாசார விவரங்களையும் வேறுபடுத்தி அடையாளம் காட்டுவதற்காக பல நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறங்கள் மேப்பிற்கு மேப்பு மாறுபடுகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.09523809524
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top