பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / பாறைக்கோளமும் நிலவியல் பலகைகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பாறைக்கோளமும் நிலவியல் பலகைகளும்

பாறைக்கோளமும் நிலவியல் பலகைகளும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

சுமார் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் புவி தனது வாழ்க்கையைத் துவங்கியதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். புவி குளிரத் தொடங்கியவுடன் கண்டங்கள் சுமார் 4.2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் புவிக்கோளம் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது என்று அறிவியலாளர்கள் உறுதி செய்தனர். அவையாவன: உட்கருவம், வெளிக்கருவம், கவசம் (Mantle) மற்றும் மேலோடு. கருவத்தில் இரும்பு பெருமளவில் காணப்படுகிறது. தவிர இந்த அடுக்கில் நிலவும் உயர் வெப்பத்தினால் வெளிகருவம் குழம்பு நிலையில் இருக்கிறது. வெளிக்கருவத்தில் 10% சல்பர் உள்ளது. உட்கருவம் அதிக அழுத்தத்திற்கு உட்படுவதால் அப்பகுதி திடநிலையில் உள்ளது.

புவியின் மொத்த எடையில் பெருமளவு கவசப்பகுதியாக உள்ளது. கவச அடுக்கில் இரும்பு, மெக்னீஸியம், அலுமினியம், சிலிகான் மற்றும் ஆக்ஸிஜன் சிலிகேட் கூட்டுப்பொருட்களைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 1000° செல்ஸியஸ் வெப்பத்திலும் திடநிலையில் உள்ள கவசப்பகுதி மெதுவாகக் குழம்பு நிலைக்கு மாறக்கூடியது. புவியின் இதர அடுக்குகளைக் காட்டிலும் மேலோடு மிக மெல்லியது. இந்த அடுக்கில் அடர்த்திக் குறைவான கால்சியம், சோடியம் மற்றும் அலுமினியம் சிலிகேட் கனிமங்கள் உள்ளன. இதர அடுக்குடன் ஒப்பிடும்பொழுது மேலோடு குறைந்த வெப்பத்தைக் கொண்டிருக்கிறது. மேலோடு பாறைகளைக் கொண்டிருக்கிறது. உடையக்கூடிய தன்மை கொண்டது. எனவேதான் மேலோடு நிலநடுக்கத்தின் பொழுது விரிசலடைகிறது.

மேலோடும் கவச அடுக்கின் மேற்பகுதியும் சேர்ந்து உறுதியான ஒரு அடுக்கினை உருவாக்குகின்றன. இந்த அடுக்கு பாறைக்கோளம் என்று அழைக்கப்படுகிறது. உறுதியான இந்தப் பாறைக்கோளத்திற்குக் கீழே ஏறக்குறைய 50-100 கிலோ மீட்டர் வரை மிருதுவாகவும் குழம்பு நிலையில் ஒரு அடுக்கு காணப்படுகிறது. இந்த அடுக்கு அஸ்தினோஸ்பியர் என அழைக்கப்படுகிறது. அஸ்தினோஸ்பியர் கவச அடுக்கின் ஒரு பகுதியாகும். அஸ்தினோஸ்பியரின் அசையும் தன்மையினால் புவியினுடைய நிலவியல் பலகைகள் நகருகின்றன. மேலோட்டின் மீது பனிக்கவிப்பு, பனியாற்று ஏரி அல்லது மலைத்தொடர் போன்றவற்றின் சுமை காரணமாகப் பாறைக்கோளம் கீழ்நோக்கி அழுந்தும்பொழுது அஸ்தினோஸ்பியர் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றது. இத்தகைய சுமைகள் மிதப்பாற்றல் எல்லைவரை அழுந்துகிறது.

மேலோடு கிரானைட் மற்றும் பசால்ட் என்ற இருவிதமான பாறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது கண்ட ஓடு மற்றும் பெருங்கடல் ஓடு என்ற இரு பிரிவுகளை உள்ளடக்கியது. கண்ட ஓடு பெருமளவு கிரானைட் பாறைகளால் ஆனது. பெருங்கடல் ஓடு எரிமலை லாவாவினால் ஆன பசால்ட் பாறைகளால் ஆனது. பெருங்கடல் ஒட்டில் உள்ள பசால்ட் பாறைகள் கண்ட ஓட்டில் உள்ள கிரானைட் பாறைகளை விட அதிக அடர்த்தியாகவும் கனமாகவும் இருக்கின்றன. ஆகையினால் இலேசாக உள்ள கண்ட ஓடு அதிக அடர்த்தி கொண்ட பெருங்கடல் ஓட்டின் மீது மிதந்த வண்ணம் உள்ளன.

புவியின் வெளி அடுக்கான பாறைக்கோளம் ஏழு உறுதியான பெரிய துண்டுகளாக உடைபட்டுள்ளது. இந்தப் பாறைத்துண்டுகளே நிலவியல் பலகைகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, யுரேஷியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிக் மற்றும் பசிபிக் நிலவியல் பலகைகள். அரேபியா, நாஸ்கா மற்றும் பிலிபைன்ஸ் போன்ற சிறிய நிலவியல் பலகைளும் உள்ளன. இத்தகைய நிலவியல் பலகைகள் யாவும் எல்லாத் திசைகளிலும் பல்வேறு வேகத்தில் அதாவது வருடத்திற்கு 2செ.மீ. முதல் 10செ.மீ வரை நகருகின்றன.

குவியும் எல்லைகள்

இரண்டு நிலவியல் பலகைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்பொழுது ஒரு நிலவியல் தட்டின் விளிம்பு மற்றொரு நிலவியல் பலகைக்கு அடியில் தள்ளப்பட்டு இறுதியில் கவசப்பகுதியில் சிதைந்து விடுகிறது. இவ்வாறு இரண்டு நிலவியல் பலகைகளும் மோதுகின்ற அல்லது சேர்ந்து நசுக்கப்படுகின்ற பகுதியைக் குவியும் எல்லைகள் என்கிறோம். ஒரு வருடத்தில் ஒரு சில சென்டிமீட்டர் மட்டுமே நிலவியல் பலகைகள் நகருவதால் அவற்றின் இடையே மோதல்களும் மெதுவாகவே நடைபெறுகின்றன. தவிர இந்நிகழ்ச்சிகள் மில்லியன் கணக்கான வருடங்களுக்கும் நீடிக்கின்றன.

நிலவியல் பலகைகளின் மோதல் நெடுங்காலத்திற்கு நீடித்த பொழுதும் அதனால் விளையும் தோற்றங்கள் பல நமது ஆர்வத்தைத் தூண்டுவனவாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு பெருங்கடல் பலகை கண்டப்பலகையுடன் மோதுகின்றது. மோதுகின்ற இரண்டு நிலவியல் பலகைகளின் முன்பகுதியின் முனைகள் வளைந்து நெளிகின்றன. படத்தில் கண்டப்பலகையின் விளிம்பு மடிந்து மிகப்பெரிய மலைத்தொடராக மாறுகிறது. பெருங்கடல் பலகையின் விளிம்பு கீழ் நோக்கி வளைந்து புவியில் வெகு ஆழத்திற்குப் புதைந்து போகின்றது. அவ்வாறு வளைந்த அப்பகுதியில் ஒரு அகழி தோன்றுகிறது. இவ்வாறு ஏற்படும் மடிப்புகளாலும் வளைவுகளாலும் நிலவியல் பலகைகளிலுள்ள பாறைகள் உடைந்து நழுவுவதால் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.

பெருங்கடல் பலகையின் விளிம்பு பகுதியில் உள்ள சில பாறைகள் புவியின் உள்ளமைப்பில் காணப்படும் உயர் வெப்பத்தால் உருகுகின்றன. அவ்வாறு உருகிய பாறைக்குழம்பு கண்டபலகைகளில் காணப்படும் விரிசல்கள் வழியே மேலெழுகின்ற பொழுது நிலஅதிர்வுகள் உருவாகின்றன. இறுதியில் பாறைக்குழம்பு புவி மேற்பரப்பை வந்தடைந்து எரிமலையாக வெடிக்கின்றது. இத்தகைய மோதலுக்கு எடுத்துக்காட்டாக தென்அமெரிக்க கண்டத்தின் மேற்குக் கடற்கரைப்பகுதியில் காணப்படும் நாஸ்கா பெருங்கடல் பலகை தென் அமெரிக்க கண்டபலகையுடன் மோதுவதை கூறலாம். இந்த மோதலின் விளைவாக ஆண்டீஸ் மலைத்தொடரும், மலைமுகடுகளை ஒட்டி சங்கிலி தொடர் போன்று எரிமலைகளும் கடற்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் ஆழமான அகழியும் உருவானது. எனவே நிலவியியல் தட்டுகள் குவிகின்ற எல்லைகளில் மலைகள், நில அதிர்வுகள் மற்றும் எரிமலைகள் ஆகியன தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக வடஅமெரிக்காவில் ராக்கீஸ், ஐரோப்பாவில் ஆல்ப்ஸ், துருக்கியில் பான்டிக் மலைகள், ஈரானில் ஜாக்ராஸ் மற்றும் மத்திய ஆசியாவில் இமயமலை ஆகியன நிலவியல் பலகைகளின் மோதல்களால் உருவானவை ஆகும். நிலவியல் தட்டுகளின் மோதலால் உருவான மலைப்பகுதிகளில் மில்லியன் கணக்கான மக்கள் வசிக்கின்றனர். தவிர, அதன் அழகைக் கண்டு களிக்கவும் ஏராளமான மக்கள் மலைப்பிரதேசங்களை நாடிச் செல்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் நில அதிர்வு மற்றும் எரிமலை வெடிப்புகளினால் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். சில நேரங்களில் மிகப் பெரிய அளவில் வெடிப்பு அல்லது நிலநடுக்கம் ஏற்படும்பொழுது மக்கள் அதிக எண்ணிக்கையில் கொல்லப் படுகின்றனர். இந்தோனேசியாவில் கராகாடோ (Karakatau) எரிமலை 1883 ஆம் ஆண்டு வெடித்தபொழுது 37,000 மக்கள் இறந்தனர். சீனாவில் 1976 ஆம் ஆண்டு டான்ஷானில் ஏற்பட்ட நில அதிர்வினால் 750,000 மக்கள் இறந்தனர். அதுபோல கொலம்பியாவில் 1983 ஆம் ஆண்டு எரிமலை வெடித்து அதனால் ஏற்பட்ட மண் சரிவினால் 25,000 மக்கள் இறந்து போயினர்.

நிலவியல் பலகைகள் குவிகின்ற இடத்தை நாம் இருப்பிடமாக தேர்ந்தெடுத்தால் அப்பகுதிகளில் நில அதிர்வினை தாங்கும் திறன் கொண்ட கட்டிடங்களை கட்ட வேண்டும். அதுபோலவே எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்படும் வேளைகளில் அப்பகுதியிலிருந்து உடனடியாக இடம்பெயர்ந்துவிட வேண்டும். ஆதலால் நிலவியல் பலகைகள் குவிகின்ற இடத்தில் வசிப்பது அபாயகரமானது. ஆனால் முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும் இத்தகைய அபாயங்களின் விளைவுகளைச் சிறிதளவாவது குறைக்கும்.

விலகும் எல்லைகள்

ஒன்றை விட்டு மற்றொன்று பிரிந்து செல்லுகின்ற நிலவியல் பலகைகளின் பகுதிகளை விலகு எல்லைகள் என்று அழைக்கிறோம். புவியின் பாறைக்கோளம் இருபுறமும் இழுக்கப்படும் பொழுது, இணையாக அமைந்துள்ள பிளவுகள் வழியே பாறைகள் உடைகின்றன. பிளவுகளுக்கு இடையே அமைந்துள்ள பாறைதுண்டு விரிசலுற்று அதன் கீழே அமைந்துள்ள மிருதுவான அஸ்தினோஸ்பியரில் விழுகின்றது. இவ்வாறு தாழ்கின்ற பாறைத்துண்டினால் பள்ளதாக்கு தோன்றுகிறது. இப்பள்ளத்தாக்கைப் பிளவுப்பள்ளத்தாக்கு என்று அழைக்கிறோம். விரிசல்களை மேக்மா கீழிருந்து மேலெழுந்து நிரப்புகிறது. இவ்வாறாக எல்லையோரப்பகுதிகளில் புதிய புவிஓடு உருவாகிறது. பிளவுகளை ஒட்டி நில அதிர்வுகளும் புவி மேற்பரப்பை மாக்மா அடையும்பொழுது எரிமலைகளும் தோன்றுகின்றன.

நிலவியல் பலகைகளின் விலகல் கண்டங்களின் மீதோ அல்லது பெருங்கடல் தரைகளின் மீதோ நடைபெறலாம். கண்டங்களில் மீது நிலவியல் பலகைகள் விலகும்பொழுது தோன்றுகின்ற பிளவுப்பள்ளதாக்குகள் 30-50 கி. மீ அகலத்தைக் கொண்டிருக்கும் எடுத்துக்காட்டாக, கென்யா மற்றும் எதியோப்பியாவிற்கு இடையே அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்க பிளவுப்பள்ளதாக்கு நியூமெக்ஸிகோவில் அமைந்துள்ள ரியோகிராண்ட், பிளவுப்பள்ளத்தாக்கு ஆகியவற்றைக் கூறலாம்.

பெருங்கடல் தரைகளின் மீது நிலவியல் பலகைள் விலகும்பொழுது தோன்றுகின்ற பிளவுப்பள்ளதாக்குகள் மிகக் குறுகலாக அமையும். அவற்றின் அகலம் 1 கிலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும். இவை பெருங்கடல்களின் மத்தியில் காணப்படும் மலைத்தொடர்களின் மேல்பகுதிகளில் காணப்படுகின்றன. மத்திய - அட்லாண்டிக் மலைத்தொடரை ஒட்டி நிலவியல் பலகை விலகியபடி உள்ளதால் அட்லாண்டிக் பெருங்கடல் வருடத்திற்கு 2 செ. மீ என்ற அளவில் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

எரிமலைகளில் பெரும்பாலானவை இடம்பெயருகின்ற நிலவியல் பலகைகளுக்கு இடையில் அவற்றை ஒட்டி அல்லது அவற்றின் அருகில் அமைந்துள்ளன. இவற்றை நிலவியல் பலகை - எல்லை எரிமலைகள் என்று அழைக்கிறோம். இத்தகைய நிலவியல் பலகைகள் பல பசிபிக் பெருங்கடலின் விளிம்பு பகுதியில் காணப்படுகின்றன. இந்த விளிம்பு பகுதிகளில் நிறைந்திருக்கும் எரிமலைகள் செயல்படும் நிலையில் இருப்பதால் இப்பகுதி “நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படுகின்றது. செயின்ட் ஹெலனா என்ற எரிமலை உட்பட இந்த வளையத்தை நிலவியல் பலகைகளின் எல்லையோர எரிமலைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

புவியிலில், நிலவியல் பலகைகள் ஏழு கண்டங்களாகவும் ஐந்து பெருங்கடல்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டங்களும் அதன் தோற்றங்களும்

கண்டம் எனப்படுவது நீரால் சூழப்பட்ட உடைபடாத ஒரு பெரிய நிலப்பரப்பாகும். சில நேரங்களில் கண்டங்களை இணைக்கும் பாலங்களாகவும் நிலங்கள் காணப்படுகின்றன.

ஏழு கண்டங்களாவன

 1. வட அமெரிக்கா,
 2. தென் அமெரிக்கா,
 3. ஐரோப்பா,
 4. ஆசியா,
 5. ஆப்ரிக்கா,
 6. ஆஸ்திரேலியா,
 7. அண்டார்டிகா

இந்த கண்டங்கள் புவியின் மொத்த பரப்பில் 29 சதவீதமாகும். மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் முதலானவை கண்டங்களின் சிறப்பான தோற்றங்களாகக் கருதப்படுகின்றன.

மலை என்பது அதன் சுற்றுப்புறத்தைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு உயரமாகத் தோற்றமளிக்கும் ஒரு நிலப்பரப்பாகும். பெரும்பான்மையான மலைகள் நிலவியல் பலகைகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் அவற்றின் எல்லைப்பகுதிகளை ஒட்டிப் பாறைகள் நெளிந்து உயர்ந்ததால் உருவானவை ஆகும். இந்த மலைகளில் முகடுகளும் பள்ளத்தாக்குகளும் அரிப்புக் காரணிகளால் தோன்றியவை.

கண்டப்பரப்பின் மீது காணப்படும் மற்றொரு தோற்றம் பீடபூமிகளாகும். இவை, அதன் சுற்றுப்புறத்தைக் காட்டிலும் திடீரென உயருகின்ற அகன்ற உயர்நிலங்களாகும். பெரும்பான்மையான பீடபூமிகள் நிலவியல் பலகைள் இழுக்கப்படும் பொழுது ஏற்படும் பிளவுகளை ஒட்டியுள்ள நிலவியல் பலகைகளின் எல்லைப்பகுதி பாறைகள் கீழே நழுவுவதால் உருவானவையாகும். உலகிலேயே மிக உயரமான திபெத் பீடபூமி, கொலராடோ பீடபூமி, தக்காண பீடபூமி, கொலம்பியா பீடபூமி, கிழக்கு ஆப்பிரிக்க பீடபூமி முதலியன குறிப்பிடத்தக்கவை.

கண்டப்பரப்பில் பரந்த மிகத் தாழ்வான பகுதிகள் சமவெளிகளாகும். இவை பல்வேறு வகைகளில் உருவாகின்றன. ஆறுகள் கொண்டு வரும் வண்டல் மண் படிவினால் உருவானவை ஆற்றுச்சமவெளி எனப்படுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுச்சமவெளிகள் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா சமவெளிகளாகும்.

காற்றுப் படிவுகளால் உருவாகும் சமவெளியை காற்றடி வண்டல் சமவெளி என்கிறோம். சைனாவில், மஞ்சளாறு பாயும் பகுதி காற்றடி வண்டலால் உருவானதாகும். அதுபோலவே கடல் அலைகளினால் உருவாகும் சமவெளியைக் கடற்கரைச்சமவெளி என்கிறோம். இந்தியாவில் உள்ள கிழக்கு கடற்கரைச் சமவெளி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பாறைகள்

மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் அனைத்தும் பாறைக்கோளத்தின் ஒரு பகுதியாகும். பாறைக்கோளம் பல வகையான பாறைகளால் ஆனவை. பாறைகள் கருமையாகவும், வெண்மையாகவும் பல நிறங்களிலும் இருக்கின்றன. சில உடையும் தன்மை கொண்டதாகவும், சில கடினமானதாகவும் இருக்கின்றன. சில நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. சில நீரை உறிஞ்சும் தன்மையற்றவை. ஏனெனில் பாறைகள் பலவித தாதுக்களைக் கொண்டிருப்பவை. பாறைகளில் சிலிகா, அலுமினியம், இரும்பு மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இப்பாறைகளில் காணப்படும் தாதுக்களே அவற்றின் தன்மையையும் நிர்ணயிக்கின்றன. பாறைகளை அவை உருவான முறையின் அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம்.

தீப்பாறைகள் (Igneous rocks)

புவி தோன்றி ஏறக்குறைய 4600 மில்லியன் வருடங்கள் ஆகின்றன. புவியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பாறைகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடிப்பினால் உருவானவை. ஒவ்வொரு முறையும் எரிமலை வெடிக்கின்ற பொழுது தீப்பாறைகள் உருவாகின்றன. இத்தகைய பாறைகள் நிலத்தினடியில் மாக்மா மெதுவாகக் குளிருகின்ற பொழுதோ அல்லது எரிமலையாக வெடித்து புவி மேற்பரப்பை அடைந்து குளிரும்பொழுதோ உருவாகின்றன. புவி ஒட்டிற்குக் கீழே பாறைக்குழம்பை மாக்மா என அழைக்கிறோம். எரிமலையாக வெடித்து வெளியேறுகின்ற பாறைக்குழம்பை லாவா என அழைக்கிறோம். பொதுவாக இப்பாறைகள் மிகவும் உறுதியானவை. தீப்பாறைகள் படிகங்களைக் கொண்டிருக்கும். இப்படிகங்களின் அளவு பாறைக்குழம்பு குளிருகின்ற வீதத்தைப் பொறுத்து அமைகின்றது. மெதுவாகக் குளிர்ந்தால் பெரிய படிகங்களையும் வேகமாகக் குளிர்ந்தால் சிறிய படிகங்களையும் கொண்டிருக்கும். தற்சமயம் புவி ஓட்டில் காணப்படும் பாறைகளில் 95 சதவீதம் தீப்பாறை வகையைச் சார்ந்தவை.

படிவுப்பாறைகள் (sedimentary rock)

சிதைந்த தீப்பாறைத் துண்டுகளில் இருந்து தோன்றுகின்ற மணல், மண்துகள் மற்றும் மண்படிவு போன்றவை ஒன்றன் மேல் ஒன்று படிந்து இறுகுவதால் படிவுப்பாறைகள் உருவாகின்றன. படிவுப்பாறைகள் புவி ஓட்டில் 5 சதவீதம் மட்டுமே காணப்படினும் நிலப்பரப்பில் இப்பாறைகளின் பயன் 75 சதவீதமாகும்.

உருமாறிய பாறைகள் (Metamorphic rocks)

தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் புவி மேலோட்டிற்கு கீழே வெகு ஆழத்தில் புதைந்து வளையும் பொழுதோ அல்லது மாக்மாவுடன் தொடர்பு கொள்ளும் பொழுதோ அதிக வெப்பத்திற்கும் அதிக அழுத்தத்திற்கும் ஆட்படும்பொழுது உருமாறுகின்றன. இத்தகைய உருமாற்றத்தால் அத்தகைய பாறைகளிலுள்ள கனிமங்கள் முழுமையாக மாற்றப்பட்டு விடுகின்றன. தவிர கனிமங்களின் அமைப்புகளும் சிதைந்து புதிய அடுக்குகள் உருவாகின்றன. தற்சமயம் புவி மேலோட்டில் காணப்படும் பாறைகளில் உருமாறிய பாறைகள் ஒரு சதவீதமாகும்.

மேற்கூறிய பாறைகள் யாவும் பாறைச்சுழற்சியின் மூலமாகப் புவி மேலோட்டில் உருவாவதும் சிதைவதும் மீண்டும் படிய வைக்கப்படுவதும் நிலையாக நடைபெற்ற வண்ணம் உள்ளது. புவி மேற்பரப்பு மற்றும் உயிர்-புவி-வேதியியல் சுழற்சி ஆகியவற்றில் நடைபெறுகின்ற பல்வேறு செயல்முறைகளுக்கு பாறைகளின் சிதைவு முதல் படியாக அமைகிறது. தவிர நீர்க்கோளம், பாறைக்கோளம் மற்றும் உயிர்க்கோளத்தில் காணப்படும் பல பண்புகளுக்கு அடிப்படையாகவும் விளங்குகின்றது.

பாறைச்சிதைவு (Weathering)

பாறைச்சிதைவு என்பது பாறைகள் மற்றும் கனிமங்கள் புவி மேற்பரப்பின் மீதோ அல்லது அருகிலோ நிலவுகின்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சமநிலையைக் கொண்ட பொருட்களாகச் சிதைக்கப்படுவதாகும். பெரும்பான்மையான பாறைகளும் கனிமங்களும் புவி மேற்பரப்பைக் காட்டிலும் உயர் வெப்பத்தையும் அழுத்தத்தையும் கொண்ட புவி மேலோட்டின் கீழே வெகு ஆழத்தில் உருவானவை. அவ்வாறு உருவான பாறைகளின் இயல்பு மற்றும் வேதியல் பண்புகள் புவியின் மேற்பரப்பு நிலைகளுக்கு எதிரான சமநிலையைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய எதிர்சமநிலையைக் கொண்டிருக்கும் பாறைகள் புவி மேற்பரப்பில் காணப்படும் இயல்பு மற்றும் வேதியல் செயல்களின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைந்து எளிதில் அரிப்புக்கு ஆளாகின்றன.

பாறைச்சிதைவினால் உருவாகும் பொருட்களே அரிப்புக்கும் படிதலுக்கும் அடித்தளமாக அமைகின்றன. இவ்வாறு சிதைந்து அரிப்புக்கு உள்ளாகிக் கடத்திச் செல்லப்பட்டு இறுதியாகப் படுகைகளில் படிய வைக்கப்பட்ட துகள்கள் பெரும்பான்மையான படிவுப்பாறைகளில் காணப்படுகின்றன. மண் உருவாகத் தேவைப்படும் கனிமங்களான மணல், படிவுகள் மற்றும் களிமண் போன்றவையும் பாறைகளின் சிதைவினால் தோற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு பாறைகளிலிருந்தும் கனிமங்களிலிருந்தும் பெறப்படும் கூறுகளும் கூட்டுப்பொருட்களும் தாவர வளர்ச்சிக்குத் தேவைப்படும் சத்துகளையும் அளிக்கின்றன. பாறைச்சிதைவினால் உருவாகும் பொருட்கள் சிதைவினால் பாறைகளிலும் கனிமங்களிலும் கீழ்க்கண்ட மூன்று விளைவுகள் ஏற்படுகின்றன.

 • சிதைவுற்ற பாறைப்பரப்பு குறிப்பிட்ட அணுக்களை அல்லது கூட்டுப்பொருட்களை முழுமையாக இழந்து விடுகின்றது.
 • சிதைவுற்ற பரப்பில் சிறப்பான அணுக்கள் அல்லது கூட்டுப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.
 • ஒரு பருப்பொருளின் பாறைகளிலும் கனிமங்களிலும் வேதியல் மாற்றம் ஏதுமின்றி இரண்டாக அல்லது அதற்கு மேற்பட்ட பருப்பொருள்களாக உடைந்து விடுகிறது.

சிதைவினால் உருவாகும் படிவுகள் வேதியல் மாற்றத்துக்கு ஆட்பட்ட அல்லது ஆட்படாத பொருள்களைக் கொண்டிருக்கும். அவ்வாறு வேதியல் மாற்றத்துக்கு ஆட்படாமல் பரவலாகக் காணப்படுவது குவார்ட்ஸ் ஆகும். வேதியல் மாற்றத்துக்கு ஆட்படும் பொருட்களில் பெரும்பான்மையானவை எளிதான கூட்டுப் பொருட்களாக அல்லது தாவரச்சத்துக்களாக மாறிவிடுகின்றன.

இத்தகைய படிவுகள் நீரினால் கரைக்கப்படுகின்றன அல்லது கடத்திச் செல்லப்படுகின்றன. வளிமண்டலத்தை நோக்கி வாயுவாக வெளியேறுகின்றன அல்லது தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தாக மாறி விடுகின்றன. குறைந்த எதிர்ப்பு சக்தியைக் கொண்ட அலுமினோ-சிலிகேட் போன்றவை சிதைவினால் களிமண்ணாக மாறிவிடுகின்றன. மாறுபாடு அடைந்த பொருட்கள் படித்தல் அல்லது உருமாறுகின்ற செயல்முறைகளினால் புதிய பாறைகளாகவும் கனிமங்களாகவும் மாற்றப்படுகின்றன. இப்பாறைகள் சுழற்சி இயக்கத்தில் பல முறை சுழன்றும் படிந்தும் உருமாற்ற செயல்முறைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு இறுதியில் மண்ணாக உருபெறுகின்றன. பாறைச்சிதைவின் மூலமாக 1 செ. மீ. மண் உருவாக நூறு வருடங்கள் ஆகின்றன. சில இடங்களில் ஒரு சில சென்டிமீட்டர்கள் ஆழம் வரையிலும் இன்னம் சில இடங்களில் இருபது அல்லது முப்பது மீட்டர்கள் ஆழம் வரையிலும் மண் இருப்பதைக் காணலாம்.

மண்

மண் என்பது புவிப்பரப்பில் கெட்டிப்படாத கனிமங்கள் அல்லது உயிர்ச்சத்து மிக்க பொருட்களைக் கொண்டிருக்கிறது. நிலத்தின் மேல் வளரும் தாவரங்களின் வளர்ச்சிக்கு மண் ஒரு இயற்கை ஊடகமாகவும் விளங்குகிறது. மண்துகள்கள் அவற்றின் அளவுகளைப் பொறுத்து வகைப்படுத்தலாம். பெரிய துகள்கள் மணலாகவும் நடுதரமான துகள்கள் படிவுகளாகவும் மிக நுண்ணியவை களி மண்ணாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மணல் துகள்களை விடப் பெரியதாக இருப்பின் அவை பரல்கள் (gravel) என வகைப்படுத்தப்படுகின்றன.

தாவரங்களின் வேர்ப்பிணைப்பிற்கு மண் ஆதாரமாகிறது. மேலும் அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், தகுந்த வெப்பநிலை மற்றும் ஈரத்தையும் அம்மண்ணே தருகின்றது. தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியன மக்கிச் சிதைவதன் மூலமாக மண்வளம் பராமரிக்கப்படுகின்றது. தாவர வளர்ச்சி மண்வளத்தைப் பொறுத்து அமைகின்றது. இதர உயிரினங்கள் தாவரங்களைச் சார்ந்து வாழ்கின்றன. ஆனால் மனிதர்களின் குறுக்கீட்டின் காரணமாக மண்வளமற்றதாக மாற்றப்படுகின்றது. இயற்கை மற்றும் செயற்கை உரங்களை மண்ணில் இட்டு அதை வளமிக்கதாக மனிதர்கள் மாற்றுகின்றனர். பொதுவாக இரசாயன உரங்கள் மண்ணில் வாழுகின்ற நுண்உயிரிகளை அழிப்பதன் மூலமாக மண்வளத்தையும் அழித்து விடுகின்றன.

இது தொடருமேயானால் மண்-தாவரம்-உயிரிகள் பிணைப்பு பாதிக்கப்பட்டுப் பாறைச்சுழற்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எல்லா உயிரினங்களுக்கும் மண் இன்றியமையாததாகும். மண் இல்லையெனில் உயிரினங்கள் கிடையாது. உயிரினங்கள் இல்லாத மண்ணும் கிடையாது. இவை இரண்டும் இணைந்தே உருவானவை. ஆனால் மண்ணை நமது உடமையாகக் கருதும் மனப்பாங்கின் காரணமாக, மண்ணை மிக தவறாகக் கையாளுகின்றோம். மண்ணை ஒரு சமுதாயமாகவும் அச்சமுதாயத்தில் நாமும் ஒரு பகுதியாகவும் கருதும் பொழுதுதான் அதை அக்கறையுடன் கையாள்வதுடன் அதைப் பராமரிக்கவும் நம்மால் இயலும்.

இதுபோலவே நீரும் ஒரு முக்கிய இயற்கை வளமாகும். இந்நீரின் பெரும் பகுதி பெருங்கடல்களில் அமைந்துள்ளது. மீதமுள்ள நீர் ஆறுகளிலும் ஏரிகளிலும் குளங்களிலும் காணப்படுகின்றது. இவையனைத்தும் புவியின் நீர்க்கோளமாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.92592592593
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top