பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / புவித்தொகுதி அறிவியல் – ஓர் தொகுப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

புவித்தொகுதி அறிவியல் – ஓர் தொகுப்பு

புவித்தொகுதியின் அறிவியல் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

புவியின் மேற்பரப்பில் காணப்படும் உயிரினங்களினால் தான் நமது புவி, சூரியத் தொகுதியில் தனித்த சிறப்புடன் விளங்குகின்றது. அண்மைக்காலத்தில் புவி, ஒருத் தொகுதி என அறியப்பட்டது. இத்தொகுதியில் நிலம், நீர், மற்றும் காற்று முதலான உயிரற்ற கூறுகளுடன் உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிந்திருந்தது. இத்தகைய செயல் விளக்கத்தைப் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்ட போதிலும், அதன் அடிப்படையில் உலகளாவிய மாற்றங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

முக்கியத்துவங்கள்

 • மனிதர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக உலகளாவிய மாற்றங்களை எந்த அளவிற்குக் கொண்டுவந்துள்ளனர் என்பதைப் பற்றிய அறிவு பன்மடங்காக உயர்ந்துள்ளது.
 • புவித்தொகுதியில் இயற்கை மற்றும் மனிதர்களால் புகுத்தப்படும் வேறுபாடுகளை பாகுபடுத்தி அடையாளம் காட்டும் பல முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
 • புவித்தொகுதியின் கடந்த கால வரலாற்றை அறிந்து கொள்கின்ற திறன் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்த காரணத்தினால் இயற்கை இயக்கங்களைப் பற்றிய மனிதர்களின் அறிவும் மேம்பாடு அடையலாயிற்று.
 • எனவே தற்பொழுது மனிதர்களை எதிர்நோக்குகின்ற சுற்றுப்புறச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றான உலகளாவிய மாற்றங்கள் என்பதே முதன்மையானது என்று நமக்குத் தெளிவாக புரிகின்றது.

கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாகக் கீழ்க்கண்ட கருத்துகள் வெளிவந்துள்ளன.

 • புவி ஒரு தொகுதியாக இயங்குகிறது. இத்தொகுதிக்கு பகுதிகள் (Components) உண்டு. அப்பகுதிகளே அத்தொகுதியைக் கட்டுப்படுத்துகின்றன.
 • நிலத்துடனும், நீருடனும் காற்றுடனும் உயிரினங்கள் புரிகின்ற செயலெதிர்வுகளினால் (interaction) கோள் தொகுதியில் சுற்றுப்புறச் சூழல்கள் உருவாகின்றன.
 • உலகளாவிய மாற்றங்கள் காலநிலை மாற்றங்களைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தன. இந்நிகழ்ச்சி உண்மையானது. தற்சமயம் நடைபெற்று வருகின்றது. அதிவேகமாகவும் நடைபெறுகின்றது. மனிதர்கள் தங்களின் நடவடிக்கைகளின் மூலமாகக் குறிப்பிடத்தக்க அளவு புவித்தொகுதியின் இயக்கத்தைப் பல வழிகளில் தாக்குகின்றனர்.
 • இருப்பினும் புவித்தொகுதியில் மனிதர்களால் புகுத்தப்படும் வேறுபாடுகளை இயற்கை மாற்றங்களிலிருந்து பிரித்து அடையாளம் கண்டுகொள்ளலாம். இவற்றில் சில அதன் பரவலிலும் தாக்கத்திலும் இயற்கை சக்திகளுக்குச் சமமாக இருக்கின்றன. காரணங்கள் - விளைவுகள் என்ற விதிக்குள் உலகளாவிய மாற்றங்களை ஆராய்வது கடினமாகும். ஏனெனில் மனிதர்களின் கண்டுபிடிப்புகளாலும் தொழில் நுட்பங்களாலும் ஏற்படுகின்ற செயலெதிர்வுகளின் தாக்கங்கள் படிப்படியாகப் புவித்தொகுதியில் பல வழிகளில் புகுத்தப்படுகின்றன.
 • இந்த தாக்கங்களுக்கிடையேயும் செயலெதிர்வுகள் நடைபெறுகின்றன. அவற்றின் விளைவாக ஏற்படும் மாற்றங்கள் வட்டாரம், மண்டலம் போன்ற பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றன.
 • எனவே, மாறிக்கொண்டு வரும் புவித்தொகுதியைப் புரிந்து கொள்ள சமூக மற்றும் இயற்கை அறிவியல்களுக்கிடையில் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகின்றது. அத்தகைய அணுகுமுறைகளில் ஒன்றாகப் புவித்தொகுதிக் கோட்பாடு கருதப்படுகின்றது. முதன்முதலில் இக்கோட்பாடு 1920 ஆம் ஆண்டுகளில் வால்டீர் வெர்னான்ஸ்கி (Valdimir Vernadsky) என்ற இரஷ்ய நாட்டைச் சார்ந்த கனிம வல்லுநரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரின் கூற்றுப்படி,
 • "புவி சுற்றுப்புறச்சூழல் என்பது வளிமண்டலம், பேராழி, நிலம் மற்றும் உயிரினங்கள் ஆகியவற்றினிடையே குறிப்பிடத்தக்க அளவு தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு உலகளாவிய தொகுதியாகும்”.

புவித்தொகுதி (The Earth System)

சூரியக்குடும்பத்தில் நமது புவியின் அமைவிடம் மிகச் சிறப்பானது. சூரியனிடமிருந்து புவி சரியான தொலைவில் அமைந்துள்ளதால், அந்த அமைவிடத்தில் உயிரினங்கள் தோன்றி வளர உகந்த வெப்பநிலை காணப்படுகின்றது. புவித்தொகுதியில் உயிரினங்களின் தோற்றத்திற்கான வழிமுறைகள் தெரியவில்லை. எனினும், புவி தோன்றிய காலத்தில் உருவான வளிமண்டல மீதேன், கார்பன் - டை - ஆக்ஸைடு, நீர், அமோனியா ஆகியவையும், கடல்களும் காரணிகளாக இருந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. புறஊதாக் கதிர்கள் மற்றும் மின்னலில் ஆற்றல் வளிமண்டல வேதியல் கூட்டுப்பொருட்களை ஒருங்கிணைத்து அமினோ அமிலத்தை உருவாக்கியிருக்கலாம். இதுவே வளர்ச்சிக்கு அடிப்படையான புரதசத்தின் கட்டமைப்புக்கும் புவியில் அனைத்து உயிரினங்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாக அமைந்தது. ஆரம்ப காலத்தில் புவியை ஆக்கிரமித்திருந்த முதல் உயிரினம் தாவரங்களேயாகும். அதனைத் தொடர்ந்து விலங்கினங்களும் மனித இனமும் தோன்றிப் பெருகின. இவையே புவித்தொகுதியின் உயிரினப் பகுதியாகவும் உள்ளன.

புவியின் மற்றொரு சிறப்பு அதன் வடிவமாகும். நெடுங்காலமாக மக்கள் புவியின் வடிவத்தைப் பற்றி பல்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் காரணமாகச் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இத்தகைய விண் வெளிக்கலங்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் புவி கோள வடிவமானது என்பதை உறுதி செய்கின்றன.

புவித்தொகுதிக்கு இரு அசைவுகள் உள்ளன. ஒன்று புவி அதன் அச்சில் தன்னைத் தானே சுற்றிக் கொள்வது. புவியின் அச்சுக்கோணம் 231/20 ஆகும். இந்த அச்சில் புவி சுழல்வதால் இரவு பகல் கோள்கள் யாவும் தங்களின் அச்சில் தனித்தனியாகச் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன. கோள்களின் அளவு எப்படி இருப்பினும் அவை ஒவ்வொன்றுக்கும் தனித்த கூறுகளும் இயக்கங்களும் உண்டு. புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்கள் சிறிய உருவத்துடன் பெருமளவு பாறைகளையும் சிறிதளவு வாயுக்களையும் கொண்டுள்ளன. இக்கோள்கள் பாறைக்கோள்கள் எனப்படுகின்றன. வியாழன், சனி, யுரேனஸ், மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் பெரிய உருவத்துடன் சிறிதளவு பாறைகளையும் பெருமளவு வாயுக்களையும் கொண்டுள்ளன. இக்கோள்கள் வாயுக்கோள்கள் எனப்படுகின்றன. கோள் தொகுதியின் கடைசியில் அமைந்துள்ள புளூட்டோ உருவத்தில் மிகச் சிறியது, தவிர சூரியனின் ஈர்ப்பு விசையினால் கோள்தொகுதியின் நீள்வட்டப்பாதைக்குக் கொண்டு வரப்பட்ட புளூட்டோ ஒரு பாறைத்துண்டாகும். மேலும் புளூட்டோவில் நிலவும் வெப்பநிலை காரணமாக (-2100 செல்சியஸ்) வாயுவும் திடமாக மாறியுள்ளதால் புளூட்டோ ஒரு பனிப்பந்து எனவும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோள் தொகுதி சூரியனால் பராமரிக்கப்படுகிறது. ஆதலால் கோள்தொகுதி சூரியத்தொகுதியின் துணைத்தொகுதியாகக் கருதப்படுகின்றது.

சூரியத்தொகுதி

சூரியன் கோள் தொகுதியின் ஆற்றல் மூலமாக திகழ்கிறது. ஒன்பது கோள்கள், அவற்றின் துணைக் கோள்கள் மற்றும் விண்வெளித் துகள்களை உள்ளடக்கியது சூரியத்தொகுதியாகும். சூரியன் வாயுக்களின் கலவையாகும். சூரியனில் 92% ஹைட்ரஜனும் 7.8% ஹீலியமும் 0.2% இதர வாயுக்களும் உள்ளன. சூரியனின் வெளிவிளிம்பில் 60000 செல்ஸியஸ் வெப்பநிலையும் அதன் மையத்தில் 15,000,000° செல்ஸியஸ் வெப்பநிலையும் காணப்படுகிறது. சூரியனின் மையத்தில் ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்றுகின்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுவதன் காரணமாகச் சூரியன் ஒளிருகின்றது. ஆகையினால் சூரியனைப் பேரண்டத்தில் எரிந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய நெருப்புப்பந்து என விண்வெளியாளர்கள் அழைக்கின்றனர்.

ஹைட்ரஜன் வாயு முழுமையாக தீர்ந்து போகும்பொழுது சூரியனின் இயக்கமும் நின்றுபோகும் என்று அறிவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அப்படியெனில், சூரியன் எவ்வளவு காலம் வரை எரிந்து கொண்டிருக்கும்? சூரியன் 10,000 மில்லியன் வருடங்கள் வரை இயங்கக் கூடிய அளவு எரிபொருளை கொண்டிருந்தது. இதுவரை 5000 மில்லியன் ஆண்டுகளுக்கான எரிப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே சூரியனை 'நடுவயது நட்சத்திரம்' என அழைக்கின்றோம்.

சூரியனையும் அதன் பகுதிகளான கோள்களையும் உள்ளடக்கிய சூரியத்தொகுதி பேரண்டத்தொகுதியின் ஒரு துணைத்தொகுதியாகும். பேரண்டத்தில் மில்லியன் மில்லியன் கணக்கான நட்சத்திரத்தொகுதிகள் உள்ளன. அத்தகைய நட்சத்திரத்தொகுதிகளில் ஒன்றான நமது சூரியத்தொகுதி அமைந்திருக்கும் தொகுதியைப் பால்வழி மண்டலம் என்று அழைக்கிறோம். ஆதலால் பேரண்டம் ஒரு பொதுத்தொகுதியாக கருதப்படுகிறது. இத்தொகுதியில் பல துணைத்தொகுதிகள் உள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.77272727273
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top