பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / புவித்தொகுதி அறிவியல் - மனிதனும் சுற்றுப்புறச்சூழலும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புவித்தொகுதி அறிவியல் - மனிதனும் சுற்றுப்புறச்சூழலும்

புவித்தொகுதி அறிவியல் - மனிதனும் சுற்றுப்புறச்சூழலும் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

காற்றும், நீரும், நிலமும் ஒருங்கிணையும் புவிப்பரப்பில் வாழ்க்கைக்கு ஆதாரமான சூழல் உருவாகிறது. இச்சூழலே புவியை உயிர்க்கோளமாக மாற்றி அமைக்கிறது. இந்த உயிர்க்கோளமே புவியின் மிகப் பரந்த சூழ்தொகுதியாகவும் அமைகிறது. சூழ்தொகுதி சுற்றுப்புறச்சூழல் புவியியலில் முக்கிய பரப்புச்சார்ந்த பாட அலகாக கருதப்படுகிறது. சுற்றுப்புறச்சூழலின் பகுதிகளை தனித்தும் இணைத்தும் படித்தறிவது, அப்பகுதிகளுக்கிடையே இயல்பு மற்றும் உயிரியியல் செயல்முறைகளின் காரணமாக பல நிலைகளில் காணப்படுகின்ற பிணைப்புகளை கண்டறிவது மற்றும் சுற்றுப்புறச்சூழலின் மீதான மனிதர்களின் தாக்கங்களை கற்றறிவது ஆகியன சுற்றுப்புறச்சூழல் புவியியலின் முக்கிய பண்புகளாக அமைகின்றன. இத்தகைய பண்புகளை தனித்தனியே படித்தறிவது இயலாத ஒன்றாகும். ஏனெனில் இவையாவும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி அவை சுற்றுப்புறச்சூழலுடனும் தொடர்பு கொண்டுள்ளன. ஆதலால் சுற்றுப்புறச்சூழலைப் புரிந்துகொள்ளப் புவியின் பகுதிகளான பாறைக்கோளம், நீர்க்கோளம் வளிக்கோளம் மற்றும் உயிர்க்கோளம் முதலானவற்றைப் படித்தறிதல் அவசியமாகின்றது.

புவியினுடைய இயல்பு மற்றும் உயிரியியல் பகுதிகள் ஒன்று மற்றொன்றுடன் ஒரு பின்னல் வேலைப்பாடு போலப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த வேலைப்பாட்டின் ஒரு முனையிலிருந்து நூலிழையை உருவத் துவங்கினால் அப்பின்னல் முழுமையாக உருக்குலைந்து விடும். அதுபோலவே சுற்றுப்புறச்சூழலில் உருவாகின்ற சிறிய மாற்றம் கூட வெள்ளம், வறட்சி மற்றும் இனமறைவு போன்ற பேரழிவுகளைத் தோற்றுவிக்கும். குறிப்பாக இன்றைய நாட்களில் இனமறைவு என்பது மிகப்பரவலாக நடைபெற்று வருகின்றது. சுற்றுப்புறச்சூழலில் இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் புவியின் தற்போதைய இனங்களில் கால்பகுதி இந்நூற்றாண்டின் இறுதியிலேயே மறைந்துவிடக் கூடும். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமெனில் மனிதர்களுக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் இடையே நிலவுகின்ற தொடர்புகளைப் பற்றி படித்துப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

மனிதர்களும் சுற்றுப்புறச்சூழலும்

மனிதர்களுக்கும் சுற்றுப்புறச்சூழல்களுக்கும் இடையேயான தொடர்புகள் புவியியலில் ஒரு பொதுத்தொகுதியாக அடையாளம் காட்டப்படுகிறது. இத்தொகுதியில் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், காலநிலை, பாறைகள் மற்றும் மண் ஆகிய காரணிகளிடையே செயலெதிர்ச்செயல்கள் நடைபெறுகின்றன. இத்தகைய செயலெதிர்ச்செயல்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. தவிர சுற்றுப்புறச்சூழலின் மீதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டது. தொழில்நுட்பக் கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. காலப்போக்கில் மனித இனம் தொழில்நுட்ப அறிவைப் பெற்றது. தொழில்நுட்பக்கருவிகளைக் கையாளும் திறனை வளர்த்துக் கொண்டது. அத்திறன் மனித சமுதாயத்தின் வாழ்க்கைத்தரம் உயரப் பயன்பட்டதால் நவீனகால மனித சமுதாயம் தொழில்நுட்ப சமுதாயமாக மாறியது. இந்தச் சமுதாயம் தொழில்களின் வளர்ச்சிக்காகவும், நகர்ப்புற மேம்பாட்டிற்காகவும் இயற்கை வளங்களை வரைமுறையின்றி சூறையாடியது, இன்றைய சுற்றுப்புறச்சூழல் பிரச்சனைகளில் பெருமளவு இத்தகைய நிகழ்ச்சிகளினால் உருவானவையே ஆகும்.

எனவே, வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து தொழிலில் வளர்ச்சியடைந்த இன்றைய காலம் வரையிலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களே மனிதர்களுக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் இடையேயான தொடர்புகளை பெருமளவு மாற்றியுள்ளன. ஆதலால் மனிதர்களுக்கும் அவர்களின் சுற்றுப்புறச்சூழலுக்கும் இடையேயான தொடர்பு ரீதியான மாற்றங்களை வரலாற்றின் அடிப்படையில் படித்தறிவதால் மனித நடவடிக்கைகளினால் சுற்றுப்புறச்சூழலில் அதிகரித்து வருகின்ற பாதிப்புகளை நாம் புரிந்துகொள்ள இயலும். இயற்கையான சுற்றுப்புறச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பு ரீதியான மாற்றங்களை வரலாற்றுக் காலத்திலிருந்து நவீன காலம் வரையில் நான்கு படிநிலைகளாகப் பிரித்தறியலாம்.

  1. உணவு சேகரித்தல் மற்றும் வேட்டையாடுதல் காலம்
  2. வளர்ப்பு விலங்குகள் மற்றும் மேய்ச்சல் காலம்
  3. வளர்ப்புப்பயிர்கள் மற்றும் வேளாண்மைக் காலம்
  4. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்மயமாதல் காலம்

உணவு சேகரித்தல் மற்றும் வேட்டையாடுதல் காலம்

இயற்கையான சுற்றுப்புறச்சூழலின் ஒரு பகுதியாக வாழ்ந்து வந்த பண்டைய மனிதர்களைக் இக்காலம் குறிக்கின்றது. இவர்களின் நடவடிக்கைகள் யாவும் இதர விலங்கினங்களைப் போன்றே அமைந்திருந்தன. அக்காலத்தில் உணவு மட்டுமே அடிப்படைத் தேவையாக இருந்த காரணத்தினால் பண்டைய மனிதர்கள் இயல்பு மனிதர்களாகவே வாழ்ந்து வந்தனர். அவ்வுணவும் அவர்களின் சுற்றுப்புறத்திலிருந்தே சேகரித்துக் கொள்ளப்பட்டது. மரங்களிலிருந்தும் செடிகளிலிருந்தும் எளிதாகப் பறிக்கப்பட்ட பழங்களை உண்டு பசியாற்றிக் கொண்டனர். இரவு நேரங்களை மரக்கிளைகளிலும் குகைகளிலும் கழித்தனர். இதனால் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையேயான தொடர்பு இணக்கமாக இருந்தது. பண்டைய மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் இயற்கையே நிறைவு செய்தது. ஆதலால் இக்கால மக்கள் முழுமையாக இயற்கையைச் சார்ந்து வாழ்ந்தனர். எனவே இம்மனிதர்கள் இயற்கையின் மக்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.

காலப்போக்கில் மனிதர்கள் தங்களின் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடக் கற்றுக்கொண்டனர். எனவே இயற்கை வளங்களின் சீரழிவிற்கு வேட்டையாடுதல் முதல்படியாக அமைந்தது. இருப்பினும் இத்தகைய நடவடிக்கைகள் சுற்றுப்புறச்சூழலைப் பெருமளவில் தாக்கவில்லை. மக்கள் தொகையும் மிகக் குறைவு ; அதனால் தேவைகளும் மிகமிகக் குறைவாகவே இருந்தன.

நெருப்பைக் கண்டுபிடித்ததினால் மனிதர்களின் மனப்பாங்கு குறிப்பிடத்தக்க அளவு மாறலாயிற்று, சாப்பிடுவதற்கு முன்னர் விலங்குகளின் இறைச்சியை சமைக்கக் கற்றுக்கொண்டர். இச்செயலுக்காக விறகுகள் தேவைப்பட்டன. அவை காடுகளிலிருந்து பெறப்பட்டன. இத்தகைய பொருட்களின் தேவை தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு மற்றுமொரு தூண்டுகோலாக அமைந்தது மனிதர்கள் விறகுகளுக்காக மரங்களையும் அவற்றின் கிளைகளையும் வெட்டி அவற்றைப் பிளக்கக் கருவிகள் சிலவற்றைத் தயாரித்தனர். விலங்குகளை வேட்டையாடிக் கொல்வதற்கும் கருவிகள் தயாரிக்கப்பட்டன. எனவே, நெருப்பும் கருவிகளும் ஆயுதங்களும் சுற்றுப்புறச்சூழலின் இயற்கை வளங்களை வேகமாக அழிக்கின்ற திறன் கொண்டவர்களாக மனிதர்களை மாற்றியமைத்தன. எனவே இயற்கை சுற்றுப்புறச்சூழலைத் மனிதர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள முக்கியமான சக்திகளில் ஒன்றான நெருப்பு பயன்பட்டது.

வளர்ப்பு விலங்குகள் மற்றும் மேய்ச்சல் காலம்

காலபோக்கில் பண்டைய மனிதர்கள் தங்களின் சுய தேவைக்காக விலங்குகளை வீடுகளில் வளர்க்கக் கற்று கொண்டனர். துவக்கத்தில் சில கால்நடைகளையும் பிற விலங்குகளையும் இறைச்சிக்காக வளர்க்கலாயினர். மெதுவாக வளர்ப்பு விலங்குகளின் எண்ணிக்கை பெருகலாயிற்று. வளர்ப்பு விலங்குகளுக்காக மரத்தினாலும் முட்புதர்களினாலும் வேலியிட்ட பாதுகாப்பான வாழிடங்களை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பண்டைய மனிதர்கள் தங்களின் வளர்ப்பு விலங்குகளுக்காகத் தற்காலிகமாக வீடுகளை கட்டுவதற்காகக் காடுகளை எரிக்கலாயினர். இவ்விலங்குகளின் தீவனம் மற்றும் தங்களின் உணவு ஆகியவற்றைச் சேகரிப்பதற்காகக் காட்டு வளங்களைச் சூறையாடத் துவங்கினர். பண்டைய மனிதர்களிடையே சமுதாய வாழ்வு மலர வளர்ப்பு விலங்குகள் தூண்டுகோலாக அமைந்தன. இத்தகைய வாழ்க்கை முறையின் மூலமாக விலங்குகளையும் தங்களையும் இதர காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிந்தது.

காலப்போக்கில் பண்டைய சமுதாயம் வளர்ப்பு விலங்குகளைப் பெருமளவில் அதிகரித்துக் கொண்டது. இச்சமுதாயம் வளர்ப்பு விலங்குகளின் தீவனத்திற்காகவும் தங்களின் உணவிற்காகவும் பசுமையான புல்வெளிகளையும் நீர்நிலைகளையும் நாடி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்தது. இருப்பினும் இக்காலகட்டத்திலும் சுற்றுச்சூழலின் இயல்பு நிலையில் பாதிப்பு ஏதும் பெருமளவில் ஏற்படவில்லை. ஏனெனில் இச்சமுதாயத்தின் மக்கட்தொகையும் அவர்களின் வளர்ப்பு விலங்குகளும் பராமரிக்கக்கூடிய எண்ணிக்கையில் இருந்தன. எனவே மனிதர்களின் நடவடிக்கைகளினால் சுற்றுச்சூழலின் மீது திணிக்கப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இயற்கையின் சுய ஒழுங்கு முறை இயக்கத்தின் வரையறைக்குள் அமைந்திருந்தன.

வளர்ப்புப்பயிர்கள் மற்றும் வேளாண்மைக் காலம்

காலப்போக்கில் தங்களின் உணவிற்காகத் தாவரங்களை வளர்ப்புப்பயிர்களாக மாற்றியமைத்தனர். இதுவே சுற்றுப்புறச்சூழலின் ஒரு பகுதியான உயிரினங்களைக் கட்டுப்படுத்தும் மனிதத்திறமைகளுக்கு ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. நாடோடிகளாக அலைந்து திரிந்து கொண்டிருந்த மனித சமுதாயத்தில் பழமையான வேளாண் முறைகளும் இடப்பெயர்வு வாழ்க்கை முறைகளும் தோன்ற வளர்ப்புப்பயிர்கள் தூண்டுகோலாக அமைந்தன, எனினும் பெரும்பான்மையோர் நாடோடிகளாவே வாழ்ந்து வந்தனர்.

முக்கிய உணவுப்பயிர்களின் வேளாண்மை "ஆற்றங்கரை நாகரிகங்கள்" என அழைக்கப்பட்ட முந்தைய நாகரிகங்கள் தோன்றியதற்கு அடிப்படையாக விளங்கியது. சமுதாயப்பிரிவுகளும் அமைப்புகளும் உருவாயின. வேளாண்மைக்கான நீரும் வளமான நிலமும் ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் கிடைத்தன. ஆதலால் பள்ளத்தாக்குப்பகுதிகளில் மனதர்கள் குடியேறலாயினர். இக்குடியேற்றத்தினால் சமுதாய அமைப்புடன் கூடிய மனித இனம் உருப்பெறலாயிற்று. அக்காலத்திய நாகரிக வளர்ச்சியும் புதிய வேளாண்முறைகளும் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நிலவிய இணக்கமான தொடர்புகளை மாற்றி அமைக்கலாயின. வேளாண்முறைகளில் படிப்படியாக ஆனால் தொடர்ச்சியாகக் காணப்பட்ட வளர்ச்சியின் காரணமாக மக்கட்தொகையும் பெருகியது. வளர்ப்பு விலங்குகளின் எண்ணிக்கையும் கூடியது. மேம்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி மேன்மேலும் காட்டு மரங்கள் வெட்டப்பட்டன.

கூடுதலாக, மனிதர்கள் காடுகளை எரித்து விளைநிலங்களை அதிகரித்தனர். தவிர வளமான நிலங்களைத் தேடியும் மனிதர்கள் இடம் திட்டமிடப்படும் பொழுது அத்திட்டங்களின் சாதக மற்றும் பாதக விளைவுகளை மக்கள் அறிந்திருந்தும், அவற்றைச் செயல்படுத்துவதினால் நேரடித் தாக்கங்கள் ஏற்படுகின்றன. அத்தகைய தாக்கங்களாக நிலபயன்பாடு மாற்றங்கள், கட்டுமானப் பணிகள், நீர்நிலை மற்றும் சுரங்க அகழ்வுகள், வேளாண் செயற்பாடுகள் வானிலையை மாற்றுகின்ற செயல்திட்டங்கள் முதலானவற்றைக் கூறலாம். மறைமுகத்தாக்கங்கள் திட்டமிடப்படுவது இல்லை. எனினும் பொருளாதார மேம்பாட்டினைத் துரிதப்படுத்த குறிப்பாகத் தொழில் முன்னேற்றத்திற்காகப் போடப்படும் திட்டங்களினால் சுற்றுப்புறச்சூழல் மறைமுகமாகத் தாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சுற்றுப்புறச் சூழ்தொகுதிகளுக்குள் செலுத்தப்படும் நச்சுப்பொருட்களும், தொழிற்சாலைக்கழிவுகளும் எரிவாயுவினால் உண்டாகும் நச்சுப்புகையும் அத்தொகுதியை மறைமுகமாகத் தாக்குகின்றன. சுற்றுப்புறச் சூழ்தொகுதித் தாக்கங்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காடுகளின் அழிவு

பயிர்நிலத்திற்காகவோ அல்லது வியாபாரத்திற்காகவோ காடுகள் அழிக்கப்படும் பொழுது மண் அரிப்பு விகிதமும் வெகுவாக அதிகரிக்கின்றது. இதன் விளைவாக மண்வளமும் குறைந்து விடுகின்றன. மறுபுறத்தில் ஆறுகளில் படிவுசுமையும் ஏராளமாக அதிகரித்து விடுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. தொடர்சங்கிலி போன்ற இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க வேண்டுமெனில் அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். அதுபோலவே சுற்றுப்புறச்சூழலில் எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவிக்கின்ற வேளாண்முறைகளைச் சுற்றுப்புறச்சூழலுக்கும் சூழலியலுக்கும் உகந்தவைகளாக மாற்றி அமைக்க வேண்டும்.

வானிலை மாற்றப்படுதல்

வானிலை நிகழ்ச்சியில் மேகவிதைப்பு" என்ற தொழில்நுட்பம் மண்டலக் காலநிலையை மாற்றி விடுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக மழைமேகங்களின் மீது திடநிலையிலுள்ள கார்பன் - டை - ஆக்ஸைடு மற்றும் அயோடின் கூட்டுப்பொருளைத் தெளித்து அம்மேகங்களைக் குளிர வைத்து செயற்கையாக மழை உருவாக்கப்படுகிறது. ஒரு கன கிலோ மீட்டர் வேகத்தை குளிர்விக்க திடநிலையிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடும் அயோடின் சேர்ந்த கலவை சில கிராம்களும் தேவைப்படுகின்றன.

நீர்த்தேக்கத்தின் விளைவுகள்

குடிநீருக்காவும், நீர்ப்பாசனத்திற்காகவும் நீர்த்தேக்கங்களையும் அணைகளையும் கட்டி நீரைச் சேமித்தல் போன்றவற்றினால் கீழே அமைந்துள்ள பாறைகளின் சமநிலை சீரழிகின்றது. குறிப்பாக, பெரிய ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி செயற்கையாக நீர்த்தேக்கங்களை அமைப்பதன் விளைவாக அப்பரப்பில் நீர்த்தேக்க அழுத்தம் கூடுகின்றது. இவ்வாறு நீரழுத்தம் கூடுவதால் அந்நீர்ப்பரப்பின் அடியிலுள்ள பாறைகள் அழுத்தப்பட்டு நில அதிர்வுகள் உருவாக ஏதுவாககின்றன.

நச்சுப்பொருட்களின் வெளியேற்றம்

பூச்சிக்கொல்லிகளும் உரங்களும் அவற்றின் பயன்பாட்டினால் வெளியேறுகின்ற நச்சுப்பொருட்கள் சூழ்தொகுதியில் உட்புகுந்து உணவுச்சங்கிலி மற்றும் உணவுவலைகளை மாற்றிவிடுகின்றன. அதுபோலவே தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் திட, திரவக் கழிவுப்பொருட்கள் குட்டை, ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளை மாசடையச் செய்கின்றன.

நச்சுப்பொருட்கள் நோய்கள் பரவுவதற்கும் உயிரினங்களின் அழிவிற்கும் வழிவகுக்கின்றன. அதுமட்டுமல்லாமல் நச்சுக்கள் உணவுச்சங்கிலி மூலமாக தாயின் தொப்புள்கொடி வழியாகக் கருவில் வளருகின்ற சிசுவையும் பாதிக்கின்றன. அதனால் கருச்சிதைவு மற்றும் குறைப்பிரசவம் போன்றவை ஏற்படுகின்றன.

ஹைட்ரோ கார்பன்களை எரித்தல்

ஹைட்ரோ கார்பன்களை எரிக்கும் பொழுது வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட்டின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் உட்புகும் சூரியக்கதிர்களின் ஆற்றலும், புவியின் மறுகதிர்வீசல் ஆற்றுலும் அதிக அளவில் உட்கிரகிக்கப்படுகின்றது. இதன் விளைவாக வளிமண்டலத்தின் இயல்பான வெப்பநிலையும் கூடுதலாகி வெப்பச்சமநிலை சீர்குலைகிறது.

ஓசோன் படலத்தின் சீரழிவு

வளி மண்டலத்தில் ஓசோன் படலத்தின் சீரழிவினால் புற ஊதா கதிர்களின் வெப்ப ஆற்றல் குறைவாக உட்கிரகிக்கப்படுகிறது. இதனால் புவி மேற்பரப்பில் வெப்பம் அதிகரிக்கின்றது. அதிகரிக்கும் வெப்பத்தினாலும் ஓசோன் படலச் சீரழிவினாலும் தோல் புற்றுநோய், குறைந்த ஒளிச்சேர்க்கை, உற்பத்தி குறைவு போன்றவை ஏற்படுகின்றன. தவிர, புறஊதாக்கதிர்களின் வெப்ப ஆற்றல் ஒளி வேதியல் பொருட்களை எரித்து நகர்ப்புறங்களின் மீது புகைமண்டலத்தை உருவாக்குகின்றது. வளிமண்டலத்தின் கூடுதல் வெப்பத்தினால் கடல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை அளவும் குறைகின்றது இதனால் ஃபைட்டோ பிளாங்டனின் உற்பத்தி குறைகின்றது. இத்தகைய உற்பத்தி குறைவினால் லார்வா மற்றும் பிளாங்டன் உயிரிகளின் இறப்பு விகிதமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இவ்வாறு ஒருசில உயிரினங்கள் புறஊதாக் கதிர்களினால் பாதிப்புக்கு உள்ளாவதால் கடல்சூழ்த்தொகுதி இனங்களின் கூட்டுப்பொருட்களும் மாற்றத்திற்கு உள்ளாகின்றது.

தொழில்நுட்பம் மேம்பாடு அடையும்பொழுது சுற்றுச்சூழலின் மீது மனிதர்களின் செல்வாக்கும் தீவிரமாகவும் பரவலாகவும் அதிகரிக்கின்றது என்ற அச்ச உணர்வு சூழலியல் வல்லுநர்களிடையே நிலவுகின்றது. ஆதலால் சுற்றுச்சூழலின் மீதான நமது வலிமையைக் கட்டுப்படுத்தப் புவியியலாளர்கள் கட்டுப்பாட்டுத் தொகுதி (Control system) என்ற புதிய கோட்பாட்டினைக் கையாளுகின்றனர்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top