புவியிலே தொடர்ந்து நிகழ்ந்து வருகின்ற காலநிலையின் குழப்பமான நிலைமைகள் காரணமாக தற்போது மின்னலின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. ஒரே தடவையில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் புவிநடுக்கம், வெள்ளப்பெருக்கு போல்லலாமல், சிறு சிறு பாதிப்புக்களை அடிக்கடி ஏற்படுத்துகின்ற ஓர் இயற்கை அனர்த்தமாக மின்னல் தாக்கம் (Lightning) காணப்படுகின்றது.
மின்னல் தாக்கமானது மழைக்காலங்களில் பெருமளவில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்வாகும். இலங்கையைப் பொறுத்தவரை மார்ச், ஏப்ரல், ஒக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் மின்னல் தாக்கம் இடம்பெறுகின்றது. அதுவும் குறிப்பாக மேற்காவுகை மழை , சூறாவளி மழை நிகழும் காலப்பகுதிகளில் இவற்றின் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.
மின்னல் எனும் அனர்த்தமானது வளிமண்டலவியல் அனர்த்தத்திற்குள் அடங்குகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. ஏற்றம் பெற்ற முகில்களிலிருந்து ஏற்றமற்ற நிலத்திற்கு அல்லது ஏணைய முகில்களுக்கு பெரியளவிலான மின்னேற்றங்கள் பாயும்போது மின்னல் தோற்றம் பெறுகின்றது. இவ்வாறு பெரியளவிலான மின்னேற்றமானது நிலத்தையோ அல்லது முகிலையோ நோக்கி பாய்ந்துசெல்லல் மின்னிறக்கம் எனப்படுகின்றது.
மின்னேற்றமானது நிலத்தில் அல்லது முகிலினைச் சென்றடைகின்றபோது தோன்றுகின்ற ஒளியே மின்னல் எனவும் இவ்வாறு மின்னேற்றமானது இறக்கமடையும்போது அதற்கு அண்மையில் உள்ள வளியானது வெப்பமடைந்து விரிவடைவதினால் ஏற்படும் பெரிய சத்தம் இடி எனவும் அழைக்கப்படுகின்றது.
முகில்கள் மிக நுண்ணிய நீர்த்துளிகளினால் உருவானவையாகும். முகில்கள் பரம்பிக் காணப்படும் பகுதிக்கூடாக காற்றானது வேகமாக வீசும்போது நீர்த்துளிகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதனால் முகில்கள் மின்னேற்றமடைகின்றன. முகில்களின் மேற்பகுதிகள் பொதுவாக நேர்மின்னேற்றத்தையும், முகில்களின் கீழ்ப்பகுதிகள் பொதுவாக மறை மின்னேற்றத்தையும் கொண்டு காணப்படும். முகிலினுள் அதிகளவில் மின்னேற்றங்கள் சேருகின்றபோது அம்மின்னேற்றங்கள் இறக்கமடைய முற்படுகின்றன. அதிகரித்த மின்னேற்றங்கள் மின்னிறக்கமடையும்போது மின்னல் ஏற்படுகின்றது. மின்னல் செய்முறை அல்லது மின்னிறக்கச் செயல்முறையானது பின்வரும் மூன்று வகைகளில் காணப்படுகின்றது.
முகில்களுக்கிடையிலான மின்னிறக்கம் (முகில் - முகில்) - முகில் தொகுதிகளுடன் தொடர்புபட்டு ஏற்படும் மின்னிறக்கம் முகில்களுக்கிடையிலான மின்னல் எனப்படுகின்றது. குறிப்பாக ஏற்றங்கொண்ட முகில்களினுள்ளும், இரு ஏற்றம்கொண்ட முகில்களுக்கிடையேயும், ஏற்றம்கொண்ட மற்றும் ஏற்றமற்ற முகில்களுக்கிடையேயும் இந்த மின்னிறக்கம் ஏற்படுகின்றது.
முகில்களிலிருந்து புவிக்கு ஏற்படும் மின்னிறக்கம் (முகில் - புவி) – ஏற்றங்கொண்ட முகில்களிலிருந்து மின்னேற்றங்கள் புவிக்குப் பாய்வதால் ஏற்படும் மின்னிறக்கம் புவிமின்னல் எனப்படும்.
முகில்களிலிருந்து வளிக்கு ஏற்படும் மின்னிறக்கம் (முகில் - வளி) – மின்னேற்றம் அடைந்த முகில்களிலிருந்து மின்னேற்றங்கள் வளிக்கு பாய்வதனால் ஏற்படும் மின்னிறக்கம் வளிமின்னல் எனப்படுகின்றது.
மின்னிறக்கமடையும் பகுதியின் அடிப்படையில் இவ்வாறு முகில்மின்னல், புவிமின்னல், வளிமின்னல் என மூன்றாக அழைக்கப்படுகின்றன. இவற்றில் புவிமின்னல் வகையைச் சேர்ந்தவையே புவிமேற்பரப்பில் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
நேரடிமின்னல் தாக்கம் - உயரமான இடங்களில் அல்லது திறந்த வெளிகளில் இருக்கும் மனிதர்களையும் கட்டடங்களையும் நேரடியாக மின்னல் தாக்குவதனை நேரடி மின்னல் தாக்கம் என அழைக்கின்றனர்.
தொடுகை மின்னல் தாக்கம் - தொலைபேசி, மின்தொடுகைக்கம்பி, அண்டனா மற்றும் மரங்கள் போன்றவற்றினூடாக மனிதர்கள் அல்லது உயிரினங்கள் அல்லது கட்டடங்கள் தொடர்பு பட்டிருக்கின்றபோது தொடுகையிலுள்ள மனிதர்களையும் உடமைகளையும் மின்னல் தாக்குவதனை தொடுகை மின்னல் தாக்கம் என அழைக்கின்றனர்.
பக்கப்பாய்ச்சல் - உயர்ந்த மரங்களை தாக்குகின்ற மின்னலானது தொடுகையில் இல்லாததும், அருகில்; உள்ளதுமான மனிதர்களையும் கட்டடங்களையும் மின்னல் தாக்குவதனை பக்கப்பாய்ச்சல் மின்னல் தாக்கம் என அழைக்கின்றனர்.
படிமுறைப் பாய்ச்சல் - மரத்தை அல்லது கட்டங்களை தாக்கிய மின்னல் நிலத்தை அடைந்து மனிதரின் ஒரு காலினூடாக உடலினுள் கடத்தப்பட்டு மறுகாலினூடாக வெளியேறுவதனால் ஏற்படும் மின்னல் தாக்கத்தினை படிமுறைப் பாய்ச்சல் மின்னல் தாக்கம் என அழைக்கின்றனர்.
இடிமின்னல் நிகழ்வுகளினால் உலகில் அதிகளிவில் உயிராபத்துக்கள் ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள ஒரு புள்ளிவிபரவியல் தகவல்களின்படி ஒவ்வொரு வருடமும் மின்னல் தாக்கி சுமார் நூறுபேர் மரணமடைகின்றனர் எனவும், பலநூறுபேர் ஊணமடைகின்றனர் எனவும் குறிப்பிடுகின்றது. இது அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சூறாவளி போன்றவற்றினால் ஏற்படும் தாக்கத்தை விட அதிகமாகும்.
ஆதாரம் : அக்ஷயன்