பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு பற்றிய சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

மேற்கு தொடர்ச்சி மலை என்பது அதன் பெயருக்கு ஏற்றவாறு இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மிக நீளமான மலையை குறிக்கிறது. அது மிகவும் அழகான, இயற்கையின் விலை மதிப்பற்ற குவியலாகத் திகழ்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள் குறைந்தது 500 முதல் 700 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக, அதாவது இமயமலையை விட பழைமையானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதில் 5000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள், எங்கும் பார்த்திருக்க முடியாத 16 வகையான பறவைகள், 179 வகையான அனைத்துண்ணிவகைகள், 191 வகையான நன்னீர் மீன்களும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் நீளம் 1600 கிலோ மீட்டராகும். அதன் உயரம் 900 மீட்டர் ஆகும். குஜராத் மாநிலத்தில் உள்ள தபதி நதியில் தொடங்கி தமிழ் நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை மேற்குத் தொடர்ச்சி மலை நீண்டிருக்கிறது. குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய ஆறு மாநிலங்கள் வழியாக இந்த மலை பரந்து விரிந்து கிடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் மிகப் பெரிய சிகரம் ஆனைமுடி ஆகும். இது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஏழு மலைத் தொகுப்புகள்: அகஸ்திய மலை, பெரியாறு, ஆனைமலை, நீலகிரி, தலைக்காவிரி, குத்ரமுக், சையாத்ரி ஆகியவை. இந்த ஆறு மாநிலங்களில் உள்ள 30 கோடி மக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கான நேரடி மற்றும் மறைமுகத் தேவைகளை மேற்குத் தொடர்ச்சி மலைதான் நிறைவேற்றுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் சிறப்பு மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் 1.7.2012 அன்று சேர்க்கப்பட்டது. ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

பல்லுயிர் வாழ்நிலையின் கருவூலமாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 39 இடங்களை பாரம்பரிய இடங்களாக உலக பாரம்பரிய குழு அறிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பெருமைகள் குறித்து பட்டியலிட்டுள்ள உலக பாரம்பரிய குழு, “மேற்குத் தொடர்ச்சி மலை தனித்துவமான உயிர் இயற்பியல் மற்றும் சூழலியல் நடைமுறையுடன் மிக முக்கியமான பூகோள அம்சங்களை கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மனித குலத்தால் மிக மோசமான முறையில் சுரண்டப்பட்டு வருகின்றன. சூழலியல் சமநிலையற்ற தன்மை, மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதால் இயற்கை நிகழ்வுகள் சரியான காலத்தில் நடக்காமை ஆகியவற்றால் மேற்குத் தொடர்ச்சி மலை பாலைவனமாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 2012ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அபாய தகவல்கள் குறித்த அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் நுண்ணுயிர்கள் மற்றும் நுண் தாவரங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக குறைந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு மனிதர்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்துவிடக் கூடிய ஒன்றாகும். ஆனால் இயற்கையை மனிதர்கள் சுரண்டுவதன் விளைவாக இந்தப் பள்ளத்தாக்கும் அழிவின் விளிம்பில் உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை எதிர் கொண்டு வரும் முக்கிய அச்சுறுத்தல்கள்

1) அறிவியல் பூர்வமற்ற முறையில் மீன் பிடித்தல், டைனமைட்டை வெடிக்கச் செய்தல், தொழிற் சாலை கழிவுகளை கலத்தல் ஆகியவை கடல்வாழ உயிரினங்களை அழித்து விடும்.

2) கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்ட விரோத சுரங்கங்கள் அமைப்பது பெருமளவில் நடைபெற்று வருகிறது. சுரங்கம் தோண்டும் நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் தண்ணிர் தேவைப்படும். விவசாயத்திற்காக அதிக அளவில் தண்ணிர் தேவைப்படும் நிலையில் பாசனத்திற்கு உள்ள தண்ணீரை பைப்களுக்கு வழங்க வேண்டியிருக்கும் இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தண்ணிர் தட்டுப்பாடு ஏற்படும்.

3) கண்மூடித்தனமாக நடைபெறும் மணல் கொள்ளை, மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு கிடைக்கும் லாபம், மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஏற்படும் இழப்பை குறிக்கும்.

4) அதிக வெப்பத்தில் இயங்கும் சிமெண்ட், இரும்பு உருக்காலை போன்றவற்றிலிருந்து நச்சுத் தன்மைகொண்ட வேதிப் பொருட்கள் காற்றில் கலப்பதால் மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள மாநிலங்களில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்கள் மூலம் வெளியேற்றப்படும் உலர் சாம்பல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் கலந்துள்ள ஈயமும் பாதசரமும் ஆறுகளில் சேர்வதால் அவற்றில் உள்ள மீன்களின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது.

5) மலைப் பகுதிகளில் அமைந்துள்ள பண்ணைத் தோட்டங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. இதில் தங்க வருபவர்கள் அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால் மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

6) மேற்கண்ட இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள புனிதமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள பழங்குடியின மக்கள் தங்களின் உடைமைகளை இழந்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை வளர்ச்சித் திட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையையும் அதிலுள்ள வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டியதுதான் உடனடித் தேவை என்பதை உணர்ந்த இந்திய அரசு, மேற்குத் தொடர்ச்சி மலை வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டத்தை ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அறிவித்து செயல்படுத்தியது. தேசிய வளர்ச்சிக் குழு உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடக்கத்தில் பொருளாதார விரிவாக்க நடவடிக்கைகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்ற போதிலும் 9வது ஐந்தாண்டு கால திட்டத்திற்குப் பிறகு இதில் மாற்றம் ஏற்பட்டது. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வளர்ச்சி அணுகுமுறைதான் இப்போது முக்கிய அம்சமாக உள்ளது. இந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:

அ) இந்தப் பகுதியில் உள்ள நிலங்களையும் நீர்நிலைகளையும் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் அரிப்பு, வறட்சி போன்றவற்றை தடுக்க முடியும் என்பதுடன், தண்ணிர், உணவு, தீவனம், எரிபொருள் ஆகியவற்றின் இருப்பையும் அதிகரிக்க முடியும்.

ஆ) பள்ளத்தாக்கு சங்கத்தின் உதவியுடன் பாசனம் சார்ந்த வசதி திட்டங்களை உறுதியாகச் செயல்படுத்துதல்.

இ) உள்ளூர் தேவைக்கான திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவதற்காக வலிமையான திட்ட செயல்பாட்டு முகமையை தேர்வு செய்தல்.

ஈ) இயற்கை வளங்களை குறைவாக பயன்படுத்துதல், காடுகளின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

உ) பள்ளத்தாக்கு குழுவுக்கும் நிதி அமைப்புகளுக்கும் இடையே முறையான தொடர்பை ஏற்படுத்துதல்.

ஊ) நீர்நிலைகள் சார்ந்த ஆராய்ச்சி திட்டங்களை ஊக்குவித்தல்.

எ) குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாதுகாத்தல், கட்டமைப்பு மேம்பாடு, நடைபாலங்களை கட்டுதல், பொதுக் கிணறுகளை வெட்டுதல், மின்மயமாக்கல், திறந்தவெளி அரங்கங்களை கட்டுதல், பாசன பம்பு செட்டுகளை அமைத்தல், கழிவு நீர் கால்வாய் வசதிகளை செய்தல் போன்றவற்றுக்கான தொடக்கக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது?

மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் தலைமையில் வேளாண் அதிகாரிகளை அமைப்பாளர்களாகக் கொண்டு பள்ளத்தாக்கு குழுவை ஏற்படுத்த வேண்டும். ஊராட்சியில் உள்ள வள வரைபடத்தின் உதவியுடன் நீர்வடியும் பள்ளத்தாக்குகள் குறித்த விவரங்களை திரட்ட வேண்டும். அதன் பின்னர் அப்பகுதியில் வறுமை ஒழிப்பு கட்டமைப்பு மேம்பாடு, வேளாண் உற்பத்தியில் காணப்படும் போக்குகள் ஆகியவை குறித்த தகவல்களை திரட்டி அதை தீர்ப்பதற்கான யோசனைகளை தெரிவிக்க வேண்டும். பின்னர் உள்ளூர் மக்களின் உதவியுடன் அவற்றுக்கான தீர்வுகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிட வேண்டும்.

ஆதாரம் : திட்டம், மாத இதழ்,  ஜூன் - 2013

ஆக்கம் : டாக்டர் பி.கே. சுஜாதன், ஆராய்ச்சி அதிகாரி, மாவட்ட திட்ட அலுவலகம், பாலக்காடு

2.89743589744
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top