பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / வளிமண்டலமும் சூரிய ஆற்றலும் – ஓர் பார்வை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வளிமண்டலமும் சூரிய ஆற்றலும் – ஓர் பார்வை

வளிமண்டலமும் சூரிய ஆற்றலும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

புவியைச் சுற்றி ஒரு வளிமண்டலம் சூழ்ந்துள்ளது. இது வாயுக்களால் ஆன ஒரு போர்வை போன்றது; நிர்ணயிக்கப்பட்ட வெளி எல்லை கிடையாது. வளிமண்டலம் படிப்படியாக குறைந்து விண்வெளியில் கலந்து விடுகிறது. சுமார் 80 சதவிகித வளிமண்டல வாயுக்களை புவி தனது ஈர்ப்பு விசையினால் அதன் மேற்பரப்பிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திற்குள் தக்க வைத்துக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தின் இயல்பு மற்றும் வேதியியல் அமைப்புகள், சூரிய ஒளியுடன் வளிமண்டல வாயுக்களின் செயலெதிர்வுகள் வளிமண்டலம், நிலம், பேராழி ஆகியவற்றினிடையே காணப்படும் இயல்பு மற்றும் வேதியியல் செயலெதிர்வுகள் ஆகியன ஒருங்கிணைந்து வளிமண்டலத்தைப் புவித்தொகுதியின் பகுதிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

சூரியன்

சூரியன் ஒரு நட்சத்திரம். இதன் பெரும்பகுதி அணுப்பிளவிற்கு ஈடான வெப்பநிலையைக் கொண்டிருக்கும் ஹைட்ரஜன் வாயுவினால் ஆனது. சூரியனில் நிமிடத்திற்கு சுமார் 120 மில்லியன் டன் பருப்பொருள் குறிப்பாக, ஹைட்ரஜன்வாயு ஹீலியமாக மாற்றப்படுகிறது. வெப்பநிலை மற்றும் வெளிப்படும் ஆற்றல் முதலானவற்றை சூரியனின் அளவு நிர்ணயிக்கிறது. சூரியனிடமிருந்து வெளிப்படுகின்ற மின்காந்த ஆற்றல் கதிர்வீசலாக புவியை வந்தடைகின்றன. சூரியன் தனது கதிர்களை எல்லா திசைகளிலும் வீசுகின்றது. அத்திசையில் புவி இடைமறிப்பதால் சூரிய ஆற்றலில் ஒரு பகுதியைப் பெறுகிறது.

சூரிய நிறப்பிரிகை

சூரியனிடமிருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலின் வீச்சு எல்லைகள் சூரிய நிறப்பிரிகை என அழைக்கப்படுகின்றது. இந்த நிறப்பிரிகையில் முதன்மையாக மூன்று மண்டலங்கள் உள்ளன. அவையாவன புறஊதாக் கதிர்கள், பார்வைவயப்படும் கதிர்கள் (Visible rays) மற்றும்  அகச்சிவப்புக் கதிர்கள். சூரியன் புறஊதாக் கதிர்களை வீசினாலும் சூரிய ஆற்றலின் பெரும்பகுதி பார்வைவயப்பட்ட மற்றும் அகச்சிவப்பு மண்டலப்பகுதிகளில் ஒளியாகவும் வெப்பமாகவும் வெளிப்படுகின்றது. மனிதர்களுக்கும் இதர விலங்கினங்களுக்கும் ஒளியானது மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சூரிய நிறப்பிரிகையில் அமைந்துள்ள கண் என்ற நுணரி உறுப்பின் பரிணாம வளர்ச்சியினால் அம்மண்டல ஆற்றலை ஒளியாக நம்மால் காணமுடிகின்றது. வானவில்லின் நிறங்களை நாம் அனைவரும் அறிவோம். இந்நிறங்களின் வேறுபட்ட வீச்சு எல்லைகளே சூரிய வெளிச்சமாகின்றது. இந்த கருத்தை மிகச் சாதராண ஒரு அறிவியல் சோதனை மூலமாக நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு முப்பட்டைக்கண்ணாடி வழியாக ஒளிக்கற்றைகளை ஊடுருவச் செய்யும்பொழுது அவற்றின் நிறங்கள் பிரிகின்றன. அவ்வாறு மழைத்துளி ஒன்று விண்ணில் முப்பட்டைக்கண்ணாடியாக செயல்படும் வேளைகளில் வானவில் தோன்றுகிறது.

பார்வைவயப்படும் கதிர்களை கண்கள் வேறுபடுத்தி வெளிச்சமாக கண்டறிவது போல அகச்சிவப்புக் கதிர்களை தோல் வெப்பமாக உணருகிறது. இதை வெப்பக்கதிர்வீசல் என அழைக்கிறோம். ஏனெனில் அகச்சிவப்புக் கதிர்களை நம்மால் பார்க்க இயலாது ஆனால் நமது தோல் அக்கதிர்களை வெப்பமாக உணருகிறது. தோல் அந்த வெப்பத்தை மூலக்கூறுகளுக்கான ஆற்றலாக மாற்றுகிறது. புவி மற்றும் வளிமண்டலத்தின் வெப்பநிலையில் அகச்சிவப்புக் கதிர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதன் பலனாக புவியின் காலநிலையிலும் பங்கு வகிக்கிறது. வளிமண்டலத்தில் சூரியக்கதிர்வீசலுடன் செயலெதிர்வுகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இதன் விளைவாக பல கூட்டமைப்புகளுடன் மிக நுண்மையான சமநிலைத்தொகுதி ஒன்று உருவாகின்றது. தற்சமயம் புவியில் காணப்படும் உயிரினங்களைத் தொடர்ந்து பராமரிக்க இச்சமநிலைத்தொகுதி அவசியமாகிறது. வளிமண்டலம் ஒரு வடிப்பானாக செயல்பட்டு மனிதர்களுக்கும் இதர உயிரினங்களுக்கும் மின்காந்த நிறப்பிரிகையில் தீமைகளை விளைவிக்கக் கூடிய புறஊதாக்கதிர்களை உட்கிரகித்து ஒரு பகுதியை மட்டும் பிரதிபலிக்கின்றது. புவியில் உயிரினங்கள் படிப்படியாகத் தோன்றி நீடித்திருக்கத் தேவைப்படுகின்ற வெப்பநிலை மற்றும் காலநிலை ஆகியவற்றை பராமரிக்கும் வளிமண்டம் இயற்கையில் அவற்றை வெப்பப் பலன்களாக அளிக்கிறது.

புவியின் மேற்பரப்பை வந்தடையும் சூரியக்கதிர்வீசலின் அளவு வளிமண்டலத்தால் கட்டுபடுத்தப்படுகிறது. மேலும் புவியிலிருந்து விண்வெளிக்கு திரும்பிச் செல்லுகின்ற கதிர்வீசல் அளவையையும் ஒழுங்குபடுத்துகின்றது. ஆதலால் வளிமண்டத்திலுள்ள ஒருசில வாயுக்களின் அடர்த்தியில் ஏற்படுகின்ற சிறிய மாற்றமும் அவ்வாயுக்களின் எதிர்விளைவுகளில் காணப்படுகின்ற சமநிலையைச் சீர்குலைக்கும் அவ்வாறு சீர்குலையும் பொழுது புவியில் காணப்படும் உயிரினங்களுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே எனவே வளிமண்டல கூட்டுப்பொருட்களைப் பற்றி முதலில் விரிவாகப் படித்தறிவோம். ஸ்ட்ராட்டோஸ்பியரிலுள்ள ஓசோன் சீரழிவு மற்றும் உலகளாவிய காலநிலை மாற்றம் ஆகிய இரண்டு சுற்றுப்புறச்சூழல் பிரச்சனைகளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதையும் விவாதிக்கலாம்.

வளிமண்டல வேதியியல் கூட்டுப்பொருட்கள்

வளிமண்டல கூட்டுப்பொருட்களில் நைட்ரஜனும் (N,) ஆக்ஸிஜனும் (0) பெருமளவில் உள்ளன. ஏனைய வாயுக்களான ஆர்கன், கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் ஒசோன் வாயுக்கள் ஆகியன மிகக் குறைந்த அளவில் இயற்கையாக உற்பத்தியாகின்றன. இந்த வாயுக்களைத் தவிர நீராவியும் வளிமண்டத்தில் காணப்படுகிறது.

வளிமண்டத்தில் நீராவியின் அளவு இடத்திற்கு இடம் நாளுக்குநாள் மாறக்கூடியது. எவ்வாறு இருப்பினும், கடந்த நூற்றாண்டில் தொழில் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நடவடிக்கைகளினால் கார்பன் மோனாக்ஸைடு மற்றும் குளோரோ ஃபுலுரோ கார்பன் போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தில் புகுத்தப்பட்டு விட்டன. ஒரே குடும்பத்தைச் சார்ந்த வேதியியல் பொருட்களான இவற்றை இயற்கை உற்பத்திச் செய்வதில்லை. வேதியியல் செயலாற்றல் அற்ற இந்த கூட்டுப்பொருட்கள் ஸ்ட்ராட்டோஸ்பியர் வரை மேலெழுந்து ஓசோன் அடுக்கில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் இயற்கை சுழற்சியின் சமநிலையையும் ட்ராப்போஸ்பியரின் கதிர்வீசல் மற்றும் உட்கிரகித்தல் முதலானவை தடைப்படுகின்றன. இத்தகைய தடைகளினால் வட்டார வளிமண்டலப் பிரச்சினைகள் முதல் உலகளாவிய காலநிலை மாற்றங்கள் வரை ஏற்படுகின்றன.

வளிமண்டல அடுக்குகள் (Structure of the atmosphere)

வளிமண்டலம் ஐந்து அடுக்குகளால் ஆனது. அவையாவன ட்ரோப்போஸ்பியர், ஸ்ட்ராட்டோஸ்பியர், மீஸோஸ்பியர், தெர்மோஸ்பியர் மற்றும் எக்ஸோஸ்பியர். இந்த அடுக்குகளின் தடிமன் புவியைச் சுற்றி வேறுபடுகின்றது. அதுமட்டுமன்றி வெப்பநிலைக்கும் பருவகாலத்திற்கும் ஏற்ப வேறுபடுகின்றது. வளிமண்டல கீழடுக்குகள் மனிதர்கள் உருவாக்கும் மாசுக்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றது. ஆதலால் ட்ரோப்போஸ்பியர் மற்றும் ஸ்ட்ராட்டோஸ்பியர் அடுக்குகளை முதன்மையாக எடுத்துக்கொண்டு விவாதிப்போம்.

ட்ரோப்போஸ்பியர் (Troposphere)

புவியின் மேற்பரப்பிற்கு அருகில் காணப்படும் ட்ரோப்போஸ்பியரின் தடிமன் சுமார் 10-15 கிலோமீட்டராகும். இந்த அடுக்கில் நிலவுகின்ற தன்மைகள் உலகளவில் வானிலை நிகழ்வுகளை நிர்ணயம் செய்கின்றன. இந்த அடுக்கில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் உள்ளன. இவற்றைத் தவிர நீராவியும், தூசியும் காணப்படுகின்றன. ஆதலால் மேகம், இடி, மின்னல், புயல் மற்றும் மழை முதலான வானிலை நிகழ்வுகள் இந்த அடுக்கில் நடைபெறுகின்றன. மற்ற வாயுக்களின் எடையுடன் ஒப்பிடும்பொழுது கார்பன் டை ஆக்ஸைடு கனமானது. எனவே வளிமண்டல கீழ் அடுக்கில் அதன் அளவு அதிகமாக உள்ளது. இந்த வாயுவின் அளவு உயரம் அதிகரிக்கும் பொழுது குறைகின்ற தன்மையைக் கொண்டிருக்கிறது. ஆதலால் உயரம் அதிகரிக்கும்பொழுது ஒவ்வொரு 165 மீட்டருக்கும் 10 செல் வீதத்தில் வெப்பநிலை குறைகிறது. அதிகரிக்கும் உயரத்திற்கு ஏற்றார்போல குறைகின்ற வெப்பநிலை விகிதத்தை “லாப்ஸ் விகிதம்” என அழைக்கிறோம்.

ஸ்ட்ராட்டோஸ்பியர் (Stratosphere)

ஸ்ட்ரோப்போஸ்பியருக்கு மேலே ஸ்ட்ராட்டோஸ்பியர் அமைந்துள்ளது. இதன் தடிமன் சுமார் 40 கிலோ மீட்டர் ஆகும். ட்ரோப்போஸ்ஸ்பியரைப் போன்று இந்த அடுக்கில் நீராவி காணப்படுவதில்லை. ஆதலால் வானிலை மாற்றங்கள் நிகழ்வதும் இல்லை தவிர ஸ்ட்ராட்டோஸ்பியரில் மாசுக்களும் நெடுங்காலத்திற்கு நிலைத்து நின்றுவிடுகின்றன. இந்த அடுக்கில் காற்றுகள் கிடையாக வீசுவதால் நீண்ட தூரம் செல்லக் கூடிய ஆகாய விமானங்கள் மிக வேகமாக பறப்பதற்கு ஏற்ற சாதகமான சூழ்நிலை இந்த அடுக்கில் நிலவுகின்றது.

மீஸோ ஸ்பியர் (Mesosphere)

ஸ்ட்ரடோஸ்பியருக்கு மேல் 50 கி. மீ முதல் 80 கி. மீ வரை மீஸோஸ்பியர் பரவியுள்ளது. விண்வெளியில் இருந்து ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு புவியை நோக்கி விழும் விண்கற்கள் இந்த அடுக்கினுள் நுழையும்பொழுது அங்குள்ள காற்றுடன் ஏற்படும் உராய்வினால் எரிந்து சாம்பலாகிறது. இவ்வாறு உராய்ந்து விண்கற்கள் எரியாமல் புவியில் விழுந்தால், புவியில் பெருத்த சேதம் ஏற்படும். இவ்வித சேதத்தில் இருந்து நம்மைப் பாதுகாப்பது மீஸோ ஸ்பியராகும்.

தெர்மோஸ்பியர் (Thermosphere)

மீஸோ ஸ்பியருக்கு மேலே சுமார் 80 கி.மீ முதல் சுமார் 1600 கி.மீ தெர்மோஸ்பியர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஹீலியமும், ஹைட்ரஜனும் அதிகம் காணப்படுகின்றன. இந்த அடுக்கின் கீழ்ப்பகுதியில் அயனிகள் சுமார் 500 கி.மீ உயரம் வரை உள்ளன. வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பப்படும் நிகழ்ச்சிகள் இப்பகுதியில் உள்ள அயனிகளால் பிரதிபலிக்கப்படுவதால் தான் புவியில் நாம் வானொலி நிகழ்ச்சிகளை கேட்க முடிகின்றது.

எக்ஸ்ஸோஸ்பியர் (Exosphere)

தெர்மோஸ்பியரின் மேல் 1600 கி.மீ முதல் 10000 கி.மீ வரை எக்ஸ்ஸோ ஸ்பியர் பரவியுள்ளது. மிகவும் அடர்த்தி குறைந்த காற்றே இங்கு காணப்படுகின்றது. இப்பகுதி விண்வெளியுடன் கலந்து விடுகிறது. எக்ஸ்ஸோ ஸ்பியரருக்கு அப்பால் வெற்றிடமே உள்ளது. மேற்கூறிய அடுக்குகளில் ஸ்ட்ரடோஸ்ஸ்பியர் புறஊதாக் கதிர்களை உட்கிரகித்துக் கொள்கின்ற ஓசோன் படலமும் அமைந்துள்ளது. ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சீரழிவைப் பற்றியும் படித்தறியலாம்.

ஓசோன் படலமும் அதன் சீரழிவும்

ஓசோன் வாயு ஆக்ஸிஜனின் ஒரு வடிவமாகும். ஓசோன் (O, மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனது. வளிமண்டலத்தில் காணப்படும் ஆக்ஸிஜன் (O) வாயு இரண்டு அணுக்களால் ஆனது. வேதியியல் விதிப்படி ஒரு தனித்த ஆக்ஸிஜன் அணுவானது (O) நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கும். அதாவது வேறு ஏதாவது ஒரு அணுவுடன் இணையக் கூடிய தன்மையைக் கொண்டது. ஆதலால்தான் ஆக்ஸிஜன் எப்பொழுதும் இரண்டு அணுக்களாக காணப்படுகின்றது. ஈரணு (O) நிலையில் ஆக்ஸிஜன் நிலைத்த தன்மையைக் கொண்டிருக்கும். மூன்று அணுக்களைக் கொண்ட ஓசோன் மூலக்கூறு நிலையற்றதாக இருக்கிறது. அதிலிருந்து ஆக்ஸிஜன் அணு ஒன்றை விடுத்து ஈரணு ஆக்ஸிஜனாக மாறுக்கூடிய தன்மைக் கொண்டது.

ஓசோன் வேதியியல் அமைப்பு

வளிமண்டலத்தில் ஓசோன் மூலக்கூறுகள் நிறைந்திருக்கும் பொழுது இவ்விடத்தில் வாயு வெளிர்நீல நிறத்தைப் பெறுகிறது. ஓசோன் வாயு ட்ரோப்போஸ்பியர் அல்லது ஸ்ட்ரடோஸ்ஸ்பியர் அடுக்குகளில் எவ்விடத்தில் இருப்பினும் அதன் வேதியியல் பண்புகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ட்ரோப்போஸ்பியரில் ஓசோன் வாயு காற்றை மாசுபடுத்துவதால் தீமைகளை விளைவிக்கிறது. இது மனிதர்களின் உடல்நலத்தையும் தாவரங்களையும் பாதிக்கின்றன. இந்த வாயுவே நகரங்களில் உருவாகும் புகைப்படலத்திற்கும் முக்கிய காரணியாகவும் திகழ்கிறது. ஆனால் ஸ்ட்ரடோஸ்பியரில் ஓசோன் நமக்கு நன்மையை அளிக்கின்றது. அது சூரியனிலிருந்து வெளிபடும் புறஊதாக் கதிரிலிருந்து புவி உயிரினங்களைப் பாதுகாக்கின்றது.

வளிமண்டல ஆக்ஸிஜன் கூறுகளின் மீது புறஊதாக் கதிர்கள் விழுகின்றபொழுது இக்கதிர்களின் செயலெதிர்வுகளினால் வளிமண்டலத்தில் ஓசோன் வாயு உருவாகிறது. ஆக்ஸிஜன் மூலக்கூறிலிருக்கும் அணுக்களின் பிணைப்பை புறஊதாக் கதிர்களின் ஆற்றல் உடைத்து விடுகின்றன. அவ்வாறு உடைப்பட்ட ஆக்ஸிஜன் அணு (O) ஒன்று வேறொரு ஆக்ஸிஜன் மூலக்கூறுடன் (O) ஒன்றிணைந்து ஓசோன் (O-O, =0.) வாயுவாக உருவாகின்றது. அவ்வாறு உருவான ஓசோன் மூலக்கூறுகளை மீண்டும் புறஊதாக் கதிர்களின் ஆற்றல் எளிதாக பிரித்து விடுகின்றன. இந்த செயல்முறை தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் உள்ளன. புவியின் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள ஓசோன் வாயுவின் மொத்த அளவில் ஏறக்குறைய 90 சதவீதம் ஸ்ட்ரடோஸ்பியர் என்று அழைக்கப்படும் அடுக்கில் காணப்படுகிறது. ஏனைய இடங்களை விட இந்த அடுக்கில் ஓசோன்வாயு ஒரு மெல்லிய படலமாக அமைந்துள்ளது. ஆக்ஸிஜனும் ஓசோன் வாயுவும் புறஊதாக் கதிர்களின் ஆற்றலில் 95-99 சதவீதத்தை உட்கிரகித்துக் கொள்கின்றன. உயிரின அழிவிற்கு காரணமான ஆற்றல் மிக்க புறஊதாக் கதிர்களை முழுமையாக உட்கிரகிப்பது ஒசோன் வாயு மட்டுமேயாகும்.

ஓசோன் வாயுவை சீரழிக்கும் பொருட்கள்

குளோரோ ஃபுலுரோ கார்பன் (Chloro fluoro carbons) என்ற ஒரு குடும்பத்தைச் சார்ந்த இந்த வாயு ஓசோன் படலத்தை தாக்கக் கூடிய தன்மை கொண்டது இந்த வாயு மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவையாவன குளேபரைன் (CI) ஃபுலுரைன் (F) மற்றும் கார்பன் (C).

சுழற்சி மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பெற்று ஒரு சமநிலையை அடைந்துள்ளது. மேலே கூறிய செயலெதிர்வுகளின் விளைவாக, மற்றும் மூலக்கூறுகள் தொடர்ந்து மாறிக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு சுழற்சியின் பொழுதும் ஆற்றலானது புறஊதாக் கதிர்களின் மூலமாக பெறப்படுகின்றது. அதன் விளைவாக ட்ராபோஸ்பியரை வந்தடைகின்ற புறஊதாக் கதிர்களின் ஆற்றலில் பெருமளவு குறைக்கப்பட்டு விடுகிறது. இத்தகைய செயலெதிர்வுகளின் விளைவாக ஸ்டரடோஸ்பியரின் கீழ் பகுதிகளில் ஒசோன் வாயு நிறைந்து காணப்படுகிறது. இந்த வாயு பெருமளவில் புவியின் மேற்பரப்பிலிருந்து 2026 கி. மீ. உயரத்தில் காணப்படுகிறது. இப்பகுதியை ஓசோன் படலம் என அழைக்கிறோம். பொதுவாக புறஊதாக் கதிர்கள் நமது தோலை தாக்கி, தோல் புற்று நோயை ஏற்படுத்தக் கூடியது. ஆதலால் ஒசோன் படலம் ஒரு கவசம் போல செயல்பட்டு புறஊதாக் கதிர்களின் தாக்குதல்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.

குளோரோ ஃபுலுரோ கார்பன் வாயு மேட்க்லே (Medgley) என்ற வேதியியல் வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை CFC என்று வேதியியலில் குறிப்பிடுகின்றனர். CFC வாயு குளிர்சாதனங்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. CFC வாயு கண்டுப்பிடிக்கப்படுவதற்கு முன்னர் குளிர்சாதனங்களில் அமோனியா மற்றும் சல்பர்-டை- ஆக்ஸைடு வாயுக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அமோனியா வாயுவினால் நுரையீரல் பாதிப்பும் கண் எரிச்சல் போன்ற உடல் நலக்குறைவுகள் ஏற்படலாயிற்று. அச்சமயத்தில் CFC தீமைகளற்ற ஒரு வேதியல் வாயுவாகக் கருதப்பட்டது. ஏனெனில் CFC கள் இதர வாயுக்களுடன் இணையக்கூடிய (non reactive) தன்மையற்றது; நீரிலும் கரையாது, நச்சுத்தன்மை அற்றது.

கடந்த எழுபது ஆண்டுகளாக CFC வாயு குளிர்விப்பான்களாகவும் நுரைப்பான்களாகவும் (Foams) பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பயன்பாட்டின் விளைவாகவும் வேதியியல் பண்புகளாலும் CFCகள் வளிமண்டலத்தில் எவ்வித இடையூறும் இன்றி வேகமாக மேலெழுகின்றன. வளிமண்டலத்தில் குறிப்பிட்ட தூரம் வரை சென்றடைந்த CFC வாயுவின் மூலக்கூறுகளை புறஊதாக் கதிர்கள் தாக்குகின்றன. இந்த மூலக்கூறுலிருந்து புறஊதாக் கதிர்களின் ஆற்றலால் குளோரைன் (CI) அணு தனியாக பிரிக்கப்படுகின்றது. அவ்வாறு பிரிக்கப்பட்ட குளோரைன் அணு ஒன்று ஓசோன் மூலக்கூறுடன் எதிர்செயலாற்றுகின்றது இதன்விளைவாக வளிமண்டலத்தில் மீண்டும் உருவாக 0, மூலக்கூறு கிடைப்பதில்லை. ஒரு குளோரைன் அணு ஏறக்குறைய 100,000 ஒசோன் மூலக்கூறுகளை அழிக்க வல்லது.

நமது புவியில் உயிரினங்கள் நிலைத்திருக்க இயற்கையில் வெப்பசமநிலை ஒன்று தேவைப்படுகிறது. சிறிய அலைகளாக வருகின்ற சூரிய கதிர்வீசலை புவியின் மேற்பரப்பு உட்கிரகித்து மீண்டும் அக்கதிர்களை நீண்ட அகச்சிவப்பு கதிர்களாக திருப்பி அனுப்புவதன் மூலமாக இச்சமநிலை நடைபெறுகின்றது. ட்ராப்போஸ்பியரில் காணப்படும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு அகச்சிவப்புகதிர்களை உட்கிரகித்து, வெப்பத்தை தன்னிடம் தக்க வைத்துக் கொள்கிறது. ஆதலால் ட்ராப்போஸ்பியர் குறிப்பிடத்தக்க அளவு வெப்பநிலையைப் பராமரிக்கிறது.

தொழிற்புரட்சிக்கு பின்னர் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவு வீதம் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த வாயு 1800 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் 30% உயர்ந்துள்ளது. மேலும் இந்த வாயுவின் அளவு தொடர்ந்து 2010 ஆம் ஆண்டுகளில் தொழிற்புரட்சிக்கு முன்னர் இருந்த அளவை விட இரண்டிலிருந்து மூன்று பங்கு அதிகமாக கூடும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். தற்போது காணப்படும் அளவைவிட வெப்பத்தை உட்கிரகிக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரிக்குமேயானால் ஏற்படும் விளைவுகள் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். இவ்வாறு வளிமண்டலம் வெப்பமடைந்து வருவது உலகளவில் மட்டுமின்றி வட்டார அளவிலும் காணப்படுகின்றன. நகர வெப்ப தீவுகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நகர வெப்ப தீவுகள் வட்டார அளவில் காணப்படுகின்ற கூடுதல் வெப்பத்தின் ஒரு வகையாக கருதப்படுகின்றன. இவை கட்டிடங்கள் அமைந்துள்ள ஒரு நகரத்தின் பரப்பாகும். இப்பரப்பில் நாட்டுபுறத்தை சுற்றி காணப்படும் வெப்பத்தை விட குறிப்பிடத்தக்க அளவு அதிக வெப்பத்தை கொண்டிருக்கும்.

நகர வெப்ப தீவுகள்

  • வெப்பநிலையில் காணப்படும் வேறுபாடுகள், இயற்கை தோற்றங்களைக் காட்டிலும் கட்டிடங்களும் பூசி மெழுகப்பட்ட தரைகளும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட இதர தோற்றங்களும் அதிக அளவில் வெப்பத்தை உட்கிரகிப்பதால் ஏற்படுகின்றன. இவ்வாறு பகலில் புவித்தோற்றங்களால் உட்கிரகிக்கப்பட்ட வெப்பத்தை இரவு நேரங்களில் மீண்டும் புவி நீண்ட அலைகளாக வெளியிடுகிறது. இந்த வெப்பத்தை வளிமண்டலத்தில் மாசடைந்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு உட்கிரகித்துத் தன்னிடம் தக்க வைத்துக் கொள்கிறது. அவ்வாறு கார்பன் டை ஆக்ஸைடு வெப்பத்தை தக்க வைத்துக்கொள்வதால் நகரங்களில் மீது கூடுதல் வெப்பநிலைக் கொண்ட வட்டார வளிமண்டலம் ஒன்று உருவாகிறது.
  • நகரங்களில் வீசுகின்ற வெப்பக்காற்றுடன் அதைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் இருந்து வீசுகின்ற குளிர்ந்த காற்று கலப்பதால் இரவு நேரங்களில் மாநகரங்கள் அவற்றுக்கு என தனித்த வானிலையை உருவாக்கிக் கொள்கின்றன என்று வானிலையாளர்கள் கூறுகின்றனர். இவை நகரவெப்பத்தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன; வட்டார அளவில் ஏற்படுகின்ற விளைவுகள் ஆகும். ஆனால் பொதுவான ஒரு வளிமண்டலத்தில் ஏற்படும் வானிலை விளைவுகள் உலகளவில் காணப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • புவியில் உயிரினங்களின் வாழ்க்கைக்கு சில குறிப்பிட்ட கூட்டுப்பொருட்களைக் கொண்ட வளிமண்டலம் தேவைப்படுகிறது. அத்தகைய வளிமண்டலத் தொகுதி ஒன்று உருவாக பில்லியன் கணக்கான ஆண்டுகளாயின. மேலும் அத்தகைய ஒரு வளிமண்டலத்தை உயிர்தொகுதிக்கும் வளிமண்டலத் தொகுதிக்கும் இடையே நடைபெறுகின்ற செயலெதிர்வுகளின் மூலமாக பராமரித்துக் கொள்கின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.90476190476
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top