பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வளிமண்டலம் - ஓர் கண்ணோட்டம்

வளிமண்டலம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பரந்த இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் காற்று மிக இன்றியமையாதது. புவியைச் சுற்றி எங்கும் பரவியுள்ள வாயுக்களால் ஆன காற்று மண்டலத்தை வளி மண்டலம் என அழைக்கின்றோம். புவியைச் சுற்றிலும் அதன் மேற்பரப்பில் சுமார் 10000 கி.மீ உயரம் வரை வளிமண்டலம் பரவியுள்ளது. இவ்வளிமண்டலம் புவியின் சுழற்சியுடனே சுற்றி வருகிறது. வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களில் நைட்ரஜன் (78.08%), ஆக்ஸிஜன் (20.94%) ஆகிய வாயுக்கள் மிகுதியாகவும், கார்பன்-டை-ஆக்ஸைடு, ஆர்கான், ஒசோன் போன்ற வாயுக்கள் குறைவாகவும் உள்ளன. இத்துடன் புவியை ஒட்டிய வளிமண்டலத்தின் கீழ்பகுதியில் நீராவியும் அமைந்துள்ளது. இந்நீராவி இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் வேறுபடுகிறது. நாம் அன்றாடம் அனுபவித்து உணரக் கூடிய வானிலைக் காரணிகளான வெப்பநிலை, அழுத்தம், காற்று, மற்றும் மழைப் பொழிவில் ஏற்படும் மாற்றங்களுக்கு வளிமண்டலம் முக்கிய காரணமாகிறது. எனவே, வளிமண்டலத்தின் தன்மை, அமைப்பு, வானிலை மற்றும் காலநிலைக் காரணிகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

வளிமண்டலத்தின் தன்மை

வளிமண்டலத்தில் பரவியுள்ள காற்றானது கண்ணிற்குப் புலப்படாத பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.

 • இவை வேகமாக சுருங்கி, விரியும் தன்மை கொண்டது.
 • கிடையாவும், செங்குத்தாகவும் தங்கு தடையின்றி இயங்கும் ஆற்றல் பெற்றது.
 • புவியின் ஈர்ப்புச் சக்தியால் வளிமண்டலம் புவியின் மையப் பகுதியை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இதனால் காற்றுக்கு எடை ஏற்படுகிறது. எனவே வளிமண்டலத்தில் காற்று எடையுடன் கூடிய தன்மையை பெறுகின்றது.
 • ஒலி அலைகள் ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்ல வளிமண்டல காற்றின் இயக்கமே காரணமாகிறது.

வளிமண்டலத்தின் அமைப்பு

புவியைச் சுற்றி அமைந்துள்ள வளிமண்டலம் புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10000 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது. இதற்கு மேல் விண்வெளியோடு கலந்து விடுகிறது. வளிமண்டலத்தில் உள்ள மொத்த காற்றில் 97% அளவுள்ள காற்று புவியின் மேற்பரப்பிலிருந்து 29கி.மீ உயரத்திற்குள்ளேயே அடங்கி விடுகிறது. வளிமண்டலத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள அதன் அடுக்குகளின் பண்புகள் பற்றியும் அறிதல் அவசியம்.

வளிமண்டலத்திலுள்ள காற்றின் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு, அதைக் கீழ்கண்ட 5 முக்கிய அடுக்குகளாக பிரிக்கலாம். அவையாவன :

 1. கீழடுக்கு
 2. படுகையடுக்கு
 3. இடையடுக்கு
 4. வெப்பஅடுக்கு
 5. வெளி அடுக்கு

வானிலைக் கூறுகள்

வானிலை இடத்திற்கு இடம், நாளுக்கு நாள் மாறுபட்டு காணப்படுகிறது. இம்மாறுபாடுகளுக்கு வளிமண்டலத்தில் உள்ள வானிலைக் கூறுகளே காரணம் ஆகும்.

அவையாவன,

 1. வெப்பம்
 2. அழுத்தம்
 3. காற்று
 4. ஈரப்பதம்
 5. மழைப்பொழுவு

வானிலையும் காலநிலையும்

புவியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலவும் வளிமண்டலக் காற்றின் வெப்பநிலை, அழுத்தம், காற்றின் ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவின் அளவு போன்றவற்றைப் பற்றிக் குறிப்பிடுவது வானிலை எனப்படும். 35 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒவ்வொரு நாளும் நிலவும் வானிலையின் தொகுப்பை காலநிலை என்கிறோம். வானிலைக் கூறுகளே காலநிலைக் கூறுகளாக செயல்படுகின்றன. இனி காலநிலைக் கூறுகளை பற்றி ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

வெப்பநிலை

நாம் வாழும் இடத்தில் ஏற்படும் அன்றாட வானிலை மாற்றங்களுக்கு மூல காரணமாக விளங்குவது வளிமண்டல வெப்பமாகும். புவி சூரியனிடமிருந்து வெப்பத்தைப் பெறுகிறது. புவி தான் பெற்ற வெப்பத்தை வெப்பக்கடத்தல், வெப்பச்சலனம், வெப்பக் கதிர்வீசல், மற்றும் நீராவியாதலின் உள்ளுறை வெப்பம் ஆகிய நான்கு வழிகளில் வளிமண்டலத்தை வெப்பப்படுத்துகிறது. இத்தகைய வளிமண்டல வெப்பநிலையே உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உறுதுணை புரிகின்றது.

வெப்பநிலை அளவு

வெப்பநிலை, உச்ச, தீச்ச வெப்பமானி என்ற கருவியால் அளக்கப்படுகிறது. அளவிடுதலில் இரண்டு வகையான அளவுகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

பாரன்ஹீட் அளவுமுறை

இதனை 1714ல் அமெரிக்காவைச் சேர்ந்த காபிரியேல் பாரன்ஹீட் என்பவர் கண்டறிந்தார். இம்முறையில் குறைந்தபட்ச வெப்பநிலை 329 F எனவும் அதிகபட்ச வெப்பநிலை 2129 F எனவும் குறிக்கப்படுகிறது.

செல்சியஸ் அளவுமுறை

இதனை ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்ட்ரூ செல்சியஸ் என்பவர் 1742ல் இந்த அளவீட்டு முறையைக் கண்டறிந்தார். இம்முறையில் குறைந்தபட்ச வெப்பநிலை 0°C எனவும், அதிகபட்ச வெப்பநிலை 100°C எனவும் குறிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை பகல் 2.00 மணிக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை காலை 6.00 மணிக்கும் குறிக்கப்படுகிறது. ஒரிடத்தின் வெப்பநிலை என்பது அவ்விடத்தில் உள்ள வளிமண்டலக் காற்றின் வெப்பத்தைக் குறிப்பதாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தின் ஒருநாளில் நிலவும், மிக அதிகமான வெப்பநிலையை அதிகபட்ச வெப்பநிலை என்றும் அந்த இடத்தின் குறைவான வெப்பநிலையைக் குறைந்தபட்ச வெப்பநிலை என்றும் குறிப்பிடுவர்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலவும் ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலைக்கும், குறைந்தபட்ச வெப்பநிலைக்கும் உள்ள சராசரியே அந்நாளின் சராசரி வெப்பநிலை ஆகும். (உம்) அதிகபட்ச வெப்பநிலை 32°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28°C எனில், சராசரி வெப்பநிலை 30°C எனக் கணக்கிடப்படுகிறது. இது போல ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலவும் ஒர் ஆண்டின் சராசரி வெப்பநிலை என்பது அவ்விடத்தின் ஒவ்வொரு நாளின் சராசரி வெப்பத்தினை அந்த ஆண்டின் மொத்த நாட்களால் வகுத்தால் கிடைக்கப் பெறுவது ஆகும்.

வெப்பப்பரவல்

சூரியனிடமிருந்து கிடைக்கும் வெப்பம் புவியையும், புவியின் மூலமாக வளிமண்டலமும் வெப்பம் அடையச் செய்கிறது. வளிமண்டலம்

 1. கிடைப்பரவல்
 2. செங்குத்துப்பரவல்

ஆகிய இரு முறைகளில் வெப்பமடைகிறது.

வெப்பத்தின் கிடைப்பரவல்

புவியின் மேற்பரப்பில் ஒர் இடத்தின் வெப்பநிலை மற்றோர் இடத்தில் காணப்படுவதில்லை. (உம்) நவம்பர் மாதத்தில் 6ம் தேதி சென்னையில் காணப்படும் வெப்பநிலை அதேநாளில் டெல்லியில் காணப்படுவதில்லை. இதற்குக் காரணம் என்ன? என்பதை அறிதல் வேண்டும். அதற்கான காரணங்கள் பின்வருமாறு,

 1. ஒரு குறிப்பிட்ட இடம் அமைந்துள்ள அட்சரேகை
 2. கடல் மட்டத்திலிருந்து அவ்விடம் அமைந்துள்ள உயரம்
 3. அவ்விடம் கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்.
 4. அவ்விடத்தில் வீசும் காற்று
 5. அவ்விடத்தில் பாயும் கடல் நீரோட்டங்கள்
 6. அவ்விடத்தில் அமைந்துள்ள மலைகளின் சரிவு

ஒரு குறிப்பிட்ட இடம் அமைந்துள்ள அட்சரேகை :

வெப்பநிலை புவியிடைக் கோட்டிலிருந்து துருவங்களை நோக்கிச் செல்லச் செல்ல குறைந்து கொண்டே செல்கின்றது. இதற்குக் காரணம் சூரியனின் நேர் வெப்பக் கதிர்கள் புவியுடைக் கோட்டுப் பகுதியில் குறைந்த தூரமே கடந்து வந்து வெப்பப்படுத்துகின்றன. குறைந்த பரப்பை செங்குத்து வெப்பக் கதிர்கள் தாக்குவதால் வெப்பநிலை மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் துருவங்களை நோக்கிச் செல்லச் செல்ல சூரியனின் சாய்வான வெப்பக்கதிர்களே அதிகத் தூரத்தைக் கடந்து வந்து துருவப்பகுதிகளில் அதிக இடங்களை வெப்பப்படுத்துகிறது. இதனால் வெப்பத்தின் அளவு குறைவாகக் காணப்படுகிறது. எனவே, புவியிடைப் பகுதியிலிருந்து துருவத்தை நோக்கிச் செல்லச் செல்ல வெப்பநிலைக் குறைந்து கொண்டே செல்கிறது.

கடல் மட்டத்திலிருந்து அவ்விடம் அமைந்துள்ள உயரம் :

ஓரிடத்தின் வெப்பநிலை அந்த இடம் கடல்மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளதோ, அதைப்பொறுத்து அமையும். கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு 1000 மீட்டருக்கு 6.5°C வீதம் வெப்பம் குறைந்து கொண்டே செல்கின்றது. (உம்) உதகமண்டலம்

கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்

கடலுக்கு அருகில் உள்ள நிலப்பகுதிகள் மிதமான வெப்ப நிலையினையும், தொலைவில் உள்ள பகுதிகள் அதிகமான வெப்ப நிலையினையும் பெற்றுள்ளன. கடலோரப் பகுதிகளில் கடற்காற்று வீசுவதால் கோடையில் மிதவெப்பமும், குளிர் காலத்தில் மித குளிரும் நிலவுகிறது. மேலும் நிலப்பரப்பு, நீர்பரப்பை விட விரைவில் வெப்பமடைவதால் பகல் நேரத்தில் நீர்பரப்பிலிருந்து, குளிர்க்காற்று நிலப்பரப்பினை நோக்கியும், இரவு நேரத்தில் இதற்கு எதிர்மறையாகவும் வீசுகின்றது. இத்தகைய நில மற்றும் கடற்காற்றுகள் கடல்களுக்கு அருகாமையில் வீசுவதால் இந்நிலப்பகுதிகளில் மிதமான தட்பவெப்பம் நிலவுகிறது. ஆனால் கடலிலிருந்து வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கு கடல் காற்றுகள் வீசாததால் அதிக வெப்பம் காணப்படுகிறது. கடலுக்கருகில் (உ.ம்) மும்பை, கடலுக்கு தொலைவில் (உ.ம்) டெல்லி

வீசும் காற்றுகள்

ஓரிடத்தின் வெப்பநிலை, அவ்விடத்தினை நோக்கி வீசும் காற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றது. வெப்பக்காற்று அது வீசுகின்ற பகுதியிலுள்ள இடங்களின் வெப்பத்தை அதிகப்படுத்துகின்றது. அதே போன்று குளிர்ந்த காற்று அது வீசுகின்ற பகுதிகளில் உள்ள இடங்களின் வெப்பத்தைக் குறைக்கின்றது.

கடல் நீரோட்டங்கள்

கடற்கரையோரப்பகுதிகளின் வெப்பநிலை அப்பகுதியை ஒட்டியுள்ள கடல் நீரோட்டங்களினால் பாதிக்கப்படுகின்றது. கடற்கரையோரப் பகுதிகள் வெப்ப நீரோட்டத்தால் வெப்பத்தையும், குளிர்ந்த நீரோட்டத்தால் குளிர்ச்சியையும் பெறுகின்றன. உதாரணமாக பிரிட்டிஷ் தீவுகளின் கடற்கரைப்பகுதிகள், வெப்பநீரோட்டத்தினால் வெப்பமடைகின்றன. இவற்றின் வெப்பம் அருகிலுள்ள மற்ற இடங்களின் வெப்பத்தைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது.

மலைகளின் சரிவு

வட அரைக் கோளத்திலுள்ள மலைகளின் வடக்கு நோக்கி சரிவினைக் கொண்ட மலைகளும், தென் அரைக்கோளத்திலுள்ள மலைகளில் தெற்கு நோக்கிச் சரிவினைக் கொண்ட மலைகளும் சூரிய ஒளியை அதிகம் பெறுவதில்லை. எனவே, இங்கு வெப்பம் குறைவு. மாறாக வட அரைக்கோளத்தில் தெற்குச் சரிவினையும், தென் அரைக்கோளத்தில் வடக்குச் சரிவினையும் கொண்ட மலைப்பகுதிகளில் சூரிய ஒளி நன்கு படுவதால் இங்கு வெப்பம் சற்று அதிகமாக காணப்படுகின்றது.

வெப்பத்தின் செங்குத்துப்பரவல்

வெப்பத்தின் கிடைப்பரவல் இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் மாறுபடுவது போன்று, புவியின் மேற்பரப்பிலிருந்து வளிமண்டலத்தை நோக்கி உயரே செல்லச் செல்ல வெப்பநிலை மாறிக்கொண்டே செல்கின்றது. இவ்விதம் ஒர் இடத்தின் வெப்பநிலை வளிமண்டலத்தின் உயரே பரவுதலை வெப்பத்தின் செங்குத்துப் பரவல் என்கிறோம். சராசரியாக வெப்பம் குறையும் வீதம் ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் 6.5°C அளவில் குறைகிறது. இச்சராசரி குறையும் விதத்தை “லேப்ஸ்” சில இடங்களில் இயல்பாக லேப்ஸ் வீதப்படி குறைவதற்கு பதில் வெப்பநிலை அதிகரிக்கவும் செய்யலாம். இதனை வெப்பநிலைக் கிரம மாறுகை (Inversion of Temperature) என்பர்.

சம வெப்பக் கோடுகள்

உலகின் வெப்பநிலைப் பரவலைத் தெளிவாக விளக்கப் பயன்படுகின்றன. ஒரே அளவு வெப்பநிலை கொண்ட பல்வேறு இடங்களை இணைக்க வரையப்படும் கற்பனை கோட்டிற்கு சமவெப்பக் கோடு என்று பெயர். வெப்பநிலை உலக நாடுகளில் எவ்விதம் பரவியுள்ளது என்பதை அறிய சமவெப்பக் கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. சமவெப்பக் கோடுகள் தேச வரைப்படங்களில் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். சமவெப்பக் கோடுகள் உலகின் நில நீர்பரவலைச் சார்ந்து அமையும். வட அரைக் கோளத்தில் நிலமும் நீரும் அடுத்தடுத்துக் காணப்படுவதால், வெப்பப் பரவலில் வேறுபாடு அதிகமாகக் காணப்படுகிறது. வெப்ப வேறுபாடுகளுக்கு ஏற்ப சமவெப்பக்கோடுளின் போக்கு காணப்படுகின்றன. தென்அரைக்கோளத்தில் நீர்ப்பரப்பு அதிகம் காணப்படுவதால் வெப்ப வேறுபாடுகளும் சீராகவே நிலவுகின்றன. இதனால் சமவெப்பக் கோடுகளும் சீராக அமைந்துள்ளன.

வெப்பமண்டலங்ள்

சூரியனின் வெப்பம் புவிக்கு கிடைக்கும் அளவினைப் பொறுத்து புவிக்கோளத்தை ஆறு வெப்பமண்டலங்களாகப் பிரிக்கலாம்.

பூமத்தியரேகை மண்டலம்

இது பூமத்தியரேகைக்கு குறுக்காக 109 வட அட்சம் முதல் 109 தென் அட்சம் வரை பரவியுள்ளது. இந்த மண்டலத்தில் ஆண்டு முழுவதும் சூரியனின் கதிர்வீச்சு செங்குத்தாக விழுகின்றது. எனவே இம்மண்டலம் அதிக வெப்பத்தை உடைய மண்டலம் ஆகும்.

அயன மண்டலங்கள்

புவியின் சுழற்சி அச்சானது செங்குத்துத் தளத்திலிருந்து 23% சாய்ந்துள்ளது. எனவே ஏதேனும் ஒரு நாளில் சூரியனின் செங்குத்துக் கதிர்களைப் பெறும் இடங்கள் அனைத்தும் வட அயனக் கோட்டிற்கும் (23% வ), தென் அயனக் கோட்டிற்கும் (23%) தெ) இடைப்பட்ட பகுதியில் அமைகின்றன. இப்பகுதி அயனமண்டலம் எனப்படுகிறது. இப்பகுதியில் ஆண்டு முழுவதும் வெப்பத்தின் அளவு அதிகம்.

துணை அயன மண்டலங்கள்

இவை அயன மண்டலங்ளையொட்டி அயன மண்டலங்களிலிருந்து துருவங்களை நோக்கிய பக்கங்களில் (வடஅரைக் கோளத்தில்) அயன மண்டலத்திற்கு வடக்கிலும், தென்அரைக் கோளத்தில் அயனமண்டலத்திற்குத் தெற்கிலும் அமைந்துள்ளன. ஏறத்தாழ இவை 259-359 வட, தென் அட்சங்களில் பொருந்துகின்றன.

மிதவெப்ப மண்டலங்கள்

இவை 359 முதல் 559 வரையிலான வட, தென் அட்சங்களுக்கிடையில் பரவியுள்ளன. கோடைகாலத்தில் மிதவெப்பமும், குளிர்காலத்தில் மித குளிரும் நிலவுகின்றன.

குளிர் மண்டலங்கள்

இவை 66% வட, தென் அட்சங்களில் ஆர்க்டிக், அண்டார்க்டிக் வட்டங்களின் மீது அமைகின்றன. பகல், இரவு கால நீட்சியில் பெருத்த மாறுபாடுகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.

துருவ மண்டலங்கள்

புவியில், வட அரைக்கோளத்தில் 66% ஆர்க்டிக் வட்டம் முதல் 90° வடதுருவம் வரை உள்ள பகுதியும், தென் அரைக்கோளத்தில் 66% அண்டார்க்டிக் வட்டம் முதல் 90° தென் துருவம் வரை உள்ள பகுதியும் முறையே வட, தென் துருவ மண்டலங்கள் என்று அழைக்கப்படுன்றன. சூரியன் வட அயனக்கோட்டில் செங்குத்தாக பிரவேசிக்கும் பொழுது வடதுருவ மண்டலத்தில் சூரியனின் சாய்வுக் கதிர்கள் விழுவதால் தொடர்ந்து 3 மாதங்கள் மிதமான கோடையைப் பெறுகின்றன. அவ்வாறே தென் துருவ மண்டலத்தில் சூரியன் தென் அயனக்கோட்டில் செங்குத்தாக பிரவேசிக்கும் பொழுது தென் துருவ மண்டலம் தொடர்ந்து 3 மாதங்கள் மிதமான கோடையைப் பெறுகிறது. மீதமுள்ள 9 மாதங்களும் கடுமையான குளிர்காலமும், மிகக்குறைந்த சூரிய வெளிச்சத்தையும் மட்டுமே பெறுகின்றது.

அழுத்தமும் காற்றும்

காலநிலையின் பிறகூறுகளை நம்மால் உணர முடிவது போன்று, வளிமண்டலத்திலுள்ள காற்றின் அழுத்தத்தினை உணர இயலாது. நம்மைச் சூழ்ந்துள்ள வளிமண்டலக் காற்று புவியின் மீது ஏற்படுத்தும் அழுத்தமே (thrust) வளிமண்டல அழுத்தம் எனப்படும். காற்றுக்கு எடை உண்டு என்பதை நாம் அறிவோம். இந்தக் காற்றின் எடையே புவியின் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனையே வளிமண்டல அழுத்தம் என்கின்றனர். காற்று வீசுவதற்கு வளிமண்டல அழுத்த வேறுபாடுகளே காரணம் எனில் அழுத்தத்தின் முக்கியத்துவத்தை அறிகிறோம் அல்லவா?

அழுத்தத்தின் அளவீடுகள்

புவியைச் சுற்றியுள்ள காற்றின் எடை முழுவதும் புவியின் மேற்பரப்பை அழுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த அழுத்தத்தையே நாம் காற்றழுத்தம் என்கிறோம். காற்றின் அழுத்தம் 'பாரமானி’ என்ற கருவியால் அளக்கப்படுகிறது. காற்றழுத்தம் மில்லிபார்' என்ற அலகின் மூலம் குறிக்கப்படுகின்றது. 1 சதுர சென்டிமீட்டர் பரப்புள்ள புவியின் மேற்பரப்பின் உயரே உள்ள மொத்த காற்றின் எடை 1 கிலோ கிராம் ஆகும். கடல் மட்டத்தில் காற்றின் அழுத்ததின் அளவு சராசரியாக 1013 மில்லி பார்களாக உள்ளது. வானிலை வரைபடத்தில் அழுத்தப் பரவல் ‘சம அழுத்தக் கோடுகள் மூலம் காண்பிக்கப்படுகின்றது. சம அழுத்தம் கோடுகள் என்பது புவியின் மீது சமமான காற்று அழுத்தமுள்ள பல்வேறு இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகளாகும்.

அழுத்த வகைகள்

வளிமண்டல அழுத்தம் சில இடங்களில் குறைவாகவும், சில இடங்களில் மிகுதியாகவும் உள்ளது. இவ்வழுத்த வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அழுத்தத்தை இருவகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன,

 1. அதிக அழுத்தம் (High pressure)
 2. குறைந்த அழுத்தம் (LOW pressure)

இவ்விரு வகை அழுத்தங்கள் தோன்ற வளிமண்டல வெப்பமும், புவியின் சுழற்சியுமே காரணமாகும்.

அழுத்தப் பரவல்

ஓரிடத்தின் காற்றின் அழுத்தம் அந்த இடத்தின் உயரத்தைப் பொறுத்தும், வெப்பநிலையைப் பொறுத்தும் மாறுபடுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு, புவியின் மேற்பரப்பில் அழுத்தம் இருவகைகளில் பரவுகின்றது.

அவை,

 1. செங்குத்துப்பரவல்
 2. கிடைமட்டப் பரவல் ஆகும்.

அழுத்தத்தின் செங்குத்துப்பரவல்

வளிமண்டல அழுத்தம் புவியின் மேற்பரப்பிலிருந்து வளிமண்டலத்தை நோக்கி உயரே செல்லச் செல்ல குறைகிறது. இது 1000 மீட்டர் உயரத்திற்கு சுமார் 100 மில்லிபார் வீதம் குறைந்து கொண்டே செல்கிறது. இதனால்தான் உயரமான மலைகளில் ஏறுபவர்கள் காற்றின் அளவு குறைந்திருப்பதால், அதில் தமக்கு தேவையான ஆக்ஸிஜன் குறை நேரிடும் என்பதால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.

அழுத்ததின் கிடைப்பரவல்

புவியின் மேற்பரப்பில் வெப்பம் சமமாக பரவிக் காணப்படுவதில்லை. இதற்கு காரணம் புவியின் நிலநீர்ப்பரவல் மற்றும் புவியின் அச்சு 23%" சாய்ந்துள்ளதே ஆகும். வெப்பம் சமச்சீரற்று பரவியுள்ளதால் அழுத்தமும் சமமாக நிலவுவதில்லை.

அழுத்த மண்டலங்கள்

புவியில் காணப்படும் காற்றழுத்த வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு புவியை நான்கு பெரும் காற்றழுத்த மண்டங்களாகப் பிரிக்கலாம்.

அவை,

 1. பூமத்தியரேகை குறைந்த அழுத்தமண்டலம்
 2. துணை வெப்ப அதிக அழுத்தமண்டலம்
 3. துணை துருவ குறைந்த அழுத்தமண்டலம்
 4. துருவ அதிக அழுத்த மண்டலம்

பூமத்தியரேகை குறைந்த அழுத்த மண்டலம்

பூமத்திய ரேகை குறைந்த அழுத்த மண்டலம் 0° முதல் 59° வட மற்றும் தென் அட்சம் வரை பரவியுள்ளது. இப்பகுதியில் ஆண்டு முழுவதும் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் செங்குத்தாகவே விழுகின்றன. செங்குத்துக் கதிர்கள் சாய்வான கதிர்களை விட அதிக வெப்பத்தை அளிக்கும். இதனால் பூமத்தியரேகைப் பகுதி அதிக வெப்பமாக உள்ளது. எனவே பூமத்தியரேகைப் பகுதியில் உள்ள காற்றும் அதிக வெப்பமடைந்து விரிவடைகிறது. எனவே அடர்த்தி குறைந்து, குறைந்த அழுத்தம் ஏற்படுகின்றது.

துணை வெப்ப அதிக அழுத்த மண்டலம்

துணை வெப்ப அதிக அழுத்த மண்டலம் புவியின் வட மற்றும் தென் அரைக்கோளங்களில் 30 அட்சத்திலிருந்து 359 வரை காணப்படுகிறது

பூமத்தியரேகைப் பகுதியில் அதிக வெப்பத்தால் காற்று விரிவடைந்து, இலேசாகி உயரே செல்கிறது. இவ்வாறாக மேலெழும்பும் காற்று, பூமத்தியரேகையின் வடபுறம் வடக்காகவும், தென்புறம் தெற்காகவும் புவியின் சுழற்சி காரணமாகத் திசை திருப்பப்பட்டு வீசுகிறது. இக்காற்று உயர்வான பகுதிகளை அடைந்தவுடன் குளிர்வடைந்து, சுருங்கி, 309 வட மற்றும் தென் அட்சங்களில் கீழிறங்குகிறது. இப்பகுதிகளில் காற்றின் அடர்த்தி அதிகரிக்கின்றது. எனவே இப்பகுதிகளில் அதிக அழுத்தம் ஏற்படுகின்றது.

துணை துருவ குறைந்த அழுத்த மண்டலம்

துணை துருவ குறைந்த அழுத்த மண்டலம் வட மற்றும் தென் அரைக்கோளத்தில் 60 முதல் 659 வரை அமைந்துள்ளது. துணை வெப்ப மண்டலத்திலும், துருவ மண்டலத்திலும் அதிக காற்றழுத்தம் காணப்படுகின்றது. இதனால் துணை வெப்ப அதிக அழுத்த மண்டலத்திற்கும் துருவ அதிக அழுத்த மண்டலத்திற்கும் இடையே உள்ள துணை துருவ மண்டலத்தில் குறைந்த அழுத்தம் காணப்படுகிறது.

துருவ அதிக அழுத்த மண்டலம்

வட மற்றும் தென் துருவப் பகுதிகளில் மிகக் குறைந்த வெப்பம் காரணமாக, அங்குள்ள காற்றும் குளிர்ச்சியாக அடர்த்தி மிகுந்து காணப்படுவதால், வட மற்றும் தென் துருவங்களில் அதிக அழுத்தம் ஏற்படுகின்றது.

வானிலை வரைப்படங்களில் அழுத்தப்பரவலைத் தெரிந்து கொள்வதற்கு சம அழுத்தக் கோடுகள் (isobar) மூலம் வரைந்து காட்டுகின்றனர். சமமான அழுத்தமுள்ள பல்வேறு இடங்களை இணைக்கும் கற்பனைக் கோட்டிற்கு சம அழுத்தக் கோடு என்று பெயர்.

காற்று

புவியின் மேற்பரப்பில் கிடையாக நகரும் வளியை காற்று என்கிறோம். செங்குத்தாக நகரும் வளியைக் குத்துவளியோட்டம் (Air Current) என்று கூறுவர். அழுத்த

ங்களில் வேறுபாடுகள் ஏற்படும்போது காற்று தோன்றுகிறது. காற்று அதிக அழுத்தமுள்ள இடங்களிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள இடங்களை நோக்கி வீசுகின்றது. எத்திசையிலிருந்து காற்று வீசுகின்றதோ, அத்திசையை வைத்து அக்காற்றிற்கு பெயரிடுவர் (எ.கா) தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வீசும் காற்றை தெற்குகாற்று என்று அழைப்பர். இவ்வாறு வீசிச்செல்லும் காற்று புவியின் சுழற்சியால் வட கோளத்தில் வலப்பக்கமாகவும், தென்கோளத்தில் இடப்பக்கமாகவும் திசை திருப்பப்படுகிறது. காற்றின் வேகம் இடத்திற்குத் தக்கவாறும், பருவத்திற்கு தக்கவாறும் அமைகின்றது.

புவியில் வீசும் காற்றுக்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன,

 1. கோள்காற்றுகள்,
 2. பருவக்காற்றுகள்,
 3. தலக்காற்றுகள்,
 4. மாறும் காற்றுகள்

கோள்காற்றுகள், (Planetory Winds)

இக்காற்றுகள் புவி முழுவதிலும் வீசுகின்றது. இக்காற்றுகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி அதிக அழுத்தப் பகுதியிலிருந்து குறைவழுத்தப் பகுதியை நோக்கி வீசுகின்றன. (உம்) கிழக்குக் காற்றுகள் அல்லது வியாபாரக் காற்றுகள், மேற்குக் காற்றுகள் மற்றும் துருவக் காற்றுகள் ஆகும்.

பருவக்காற்றுகள்

'மெளசிம்’ என்ற அராபியச் சொல்லிருந்து பெறப்பட்டதே "மான்சூன் என்ற சொல்லாகும். 'மெளசிம்’ என்பதற்கு பருவம் (Season) என்பது பொருளாகும். ஒரு நாளில் ஒரு பகுதியில் அல்லது ஒரு ஆண்டின் ஒரு பகுதியில், ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து வீசும் காற்றுகளும், அந்நாளின் அல்லது ஆண்டின் மறு பகுதியில் எதிர்திசையில் வீசும் காற்றுகளும் பருவக்காற்றுகள் எனப்படும். கடல் மற்றும் கண்டம் ஆகியவற்றில் ஏற்படும் வெப்ப ஏற்புத்திறனின் வேறுபாடே, பருவக்காற்றுகள் உருவாகக் காரணமாக அமைகின்றன.

கோடையில் நிலம் விரைவில் மிகுதியாக வெப்பப்படுத்தப்படுவதால் குறைந்த அழுத்தத்ததைப் பெறுகிறது. இக்குறைந்த அழுத்தம் கடலிலிருந்து காற்றை ஈர்க்கின்றது. குளிர்காலத்தில் நிலம் விரைவாகவும் மிகுதியாகவும் குளிர்ந்து விடுவதால் உயர்அழுத்தத்தைப் பெறுகிறது. இவ்வுயர் அழுத்தத்திலிருந்து காற்று கோடையில் வீசிய திசைக்கு நேர் எதிர் திசையை நோக்கி வீசுகிறது. கோடையில் கடலிலிருந்தும், குளிர் காலத்தில் நிலத்திலிருந்தும் வீசும் காற்றே பருவக்காற்றாகும். பருவக் காற்றுகள் வெப்பமண்டலத்தில் நன்கு அமைந்துள்ளது. ஆசியாவில்தான் இவ்வகைக் காற்று மித வெப்பமண்டலம் வரை வீசுகிறது. இந்தியா, வடக்கு ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம், மியான்மர், சீனா, ஜப்பான் முதலிய நாடுகளில் இவ்வகைக் காற்று சிறப்பாக அமைந்துள்ளது.

(a) இந்திய பருவக் காற்றுகள்

மே மற்றும் ஜூன் மாதங்களில் வட இந்தியப் பகுதிகளில் சூரியனின் செங்குத்துக் கதிர்களினால் வெப்பநிலை அதிகமாகி தாழ் அழுத்தம் உருவாகின்றது. இதனால் அதிக அழுத்தமான கடற்பகுதியில் இருந்து (இந்தியப் பெருங்கடல்) காற்றானது இந்திய நிலப்பரப்பினை நோக்கி வீசுகிறது. இக்கோடைப் பருவக் காற்றானது (தென் மேற்குப் பருவக்காற்று) பங்களாதேஷ் வழியாக மேகாலாயாவை அடைந்து சிரபுஞ்சி, மெளசின் ராம் ஆகிய இடங்களுக்கு அதிக மழையும், தெற்கில் மலபார் கடற்கரை - மும்பை, கேரளா பகுதிகளுக்கு அதிக மழையும் வடஇந்தியச் சமவெளிப் பகுதிகளுக்கு மிதமான மழைப் பொழிவையும் கொடுக்கின்றது.

குளிர்ப்பருவக் காற்று அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை வீசுகிறது. இந்திய நிலப்பகுதியிலிருந்து வட கிழக்கிலிருந்து வீசுவதால் இதனை வட கிழக்குப்பருவக் காற்று என அழைப்பர். இக்காற்று வீசுவதால் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் அதிக மழையைப் பெறுகின்றன.

கடற்காற்று (Sea breeze)

நிலப்பகுதியானது நீரைவிட விரைவில் சூடாகி விரைவில் குளிரும் தன்மை கொண்டது. இதனால் பகலில் நிலப்பகுதியில் குறைவான அழுத்தமும், நீர்பரப்பில் அதிகமான அழுத்தமும் நிலவுகிறது. இந்த அழுத்த வேறுபாட்டின் காரணமாக காற்றானது அதிக அழுத்தமுள்ள கடலிலிருந்து, அழுத்தம் குறைவான நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது. இவ்வாறு காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுவதால் கடற்காற்று என அழைக்கப்படுகிறது.

நிலக்காற்று

இரவு நேரத்தில் நிலப்பகுதியில் அதிக அழுத்தமும், நீர்பரப்பில் குறைவான அழுத்தமும் நிலவுகிறது. இதனால் காற்றோட்டமானது நிலப்பகுதியிலிருந்து நீர்பரப்பை நோக்கி வீசுகிறது. இதனை நிலக்காற்று என்பர். அதாவது, இரவில் நிலப்பரப்பு கடற்பரப்பை விட வேகமாகக் குளிர்ச்சி அடைகிறது. ஆகையால் கடற்பரப்பில் வெப்பமான (அடர்த்திகுறைவான) காற்று மேலே செல்கிறது. இந்த இடத்தை அடைக்க, நிலப்பரப்பில் உள்ள குளிர்ந்த காற்று (அடர்த்தி அதிகமான) கடற்பகுதியை நோக்கி வீசுகிறது. இதற்கு நிலக் காற்று என்று பெயர்.

தலக்காற்றுகள்

தலக்காற்றுகள் என்பது ஒரு சிறிய பகுதியில் வீசும் நிலையான காற்றுகளுக்கு மாற்று திசையில் வீசும் காற்றுகளாகும். காற்று எந்த இடத்தில் இருந்து வீசுகின்றதோ அந்த இடம் வெப்பமானதாக இருந்தால் வெப்பக்காற்றாகவும், குளிர்ச்சியாக இருந்தால் குளிர்ந்த காற்றாகவும் வீசும். (உம்)

வெப்பக்காற்று - ஃபோன், லூ, சினுக், சிராக்கோ.

குளிர்காற்று - மிஸ்ட்ரல், போரா.

மாறும் காற்றுகள்

பருவக்காற்றுகளைப் போல ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்தோ, ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ வீசாமல், திசையையும், அதன் இடத்தையும் மாற்றி கொண்டு வீசுவதால் அவை மாறும் காற்றுகள் என அழைக்கப்படுகிறது. புயல் காற்று (Cyclones) மற்றும் எதிர் புயல்காற்று அல்லது மாறிவரும் புயல்காற்று (Anti Cyclones) ஆகியவை தகுந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

(a) புயல்காற்று

மிகக் குறைந்த காற்றழுத்தம் கொண்ட மையப் பகுதியை நோக்கி அனைத்து திசைகளிலிருந்தும் காற்று சுழன்று வீசுவது புயல் காற்றாகும். புயல்காற்று அதிக மழையை அளிக்கக்கூடிய தன்மை கொண்டதாகும். அத்துடன் அதிக வேகத்தில் காற்று வீசுவதால், மக்களின் உடைமைகளுக்கும், உயிரினங்களுக்கும் அதிக சேதத்தை உண்டாக்கும்.

பொதுவாக வங்கக் கடலில் புயல் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகின்றது. இப்புயல் கிழக்கு கடற்கரை ஓரமாக நகர்ந்து, அதிக மழையைக் கொடுக்கின்றது. சில நேரங்களில் மக்களுக்கும் உடைமைகளுக்கும் பெருத்த சேதத்தை விளைவிக்கின்றது.

புயல்காற்றுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றன. வட அமெரிக்காவிலும், மேற்கு இந்தியத் தீவுகளிலும் ஹரிக்கேன்ஸ் என்றும், சைனா மற்றும் ஜப்பான் நாடுகளில் டைபூன் என்றும், புயல் என்று இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவில் வில்லி வில்லி என்றும், அரேபியாவில் சமுனஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.

(b) எதிர் புயல்காற்று

எதிர்புயல் காற்று மிக அதிக காற்றழுத்த மையப் பகுதியிலிருந்தும் அனைத்து திசைகளுக்கும் காற்று வீசுவது எதிர் புயல் காற்றாகும். எதிர் புயல் காற்று வீசும்போது வானம் மேகமூட்டமின்றி தெளிவாக இருக்கும், மழை பெய்யாது.

மழைப் பொழிவு

காலநிலைக் கூறுகளில் ஒன்று மழைப்பொழிவாகும். அடிப்படை வளிமண்டலத்தில் உள்ள நீராவியே ஆகும். ஆவியாதலினால் மேலே செல்லும் நீராவியானது குளிர்ந்து வளிமண்டல பகுதியை அடையும் போது அவை நுண்ணிய நீர்த்திவலைகளாக மாறுகின்றன. இந்த நீர்த்திவலைகளின் தொகுப்பிற்கு மேகம் என்று பெயர். மேகத்தின் மூலம் மூன்று விதமான மழை பெறப்படுகிறது. அவை, 1. வெப்பச்சலன மழை, 2. மலைத் தடுப்பு மழை, 3. புயல் மழை ஆகும்.

நீர் சுழற்சி (Water Cycle)

நமக்குத் தேவையான நீர் மழைப் பொழிவின் மூலம் கிடைக்கின்றது. வளிமண்டலத்தில் நீர் ஒன்றே திட, திரவ, வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படுகிறது. கடல்நீரின் அளவு எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. இதற்குக் காரணம் நீர் சுழற்சியே ஆகும். நீர்சுழற்சி என்பது கடலில் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி நீராவியாக மாறுகிறது. நீராவி காற்றுடன் கலந்து உயரே சென்று மேகமாக மாறுகிறது. நீராவியின் அளவு வளிமண்டலத்தின் வெப்பநிலையைப் பொறுத்து பதங்கமாகி மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. மழைப்பொழிவின் மூலம் நீர் கடலை வந்து அடைகிறது. கடலிலிருந்து ஆவியாதலுக்காக எடுக்கப்பட்ட நீர் மழைப் பொழிவாக மீண்டும் கடலையே வந்து சேருகிறது. நீர் ஆவியாதல், சுருங்குதல், மற்றும் மழைப் பொழிவு என்ற மூன்று செயல் முறைகளின் மூலம் நீர்ச் சுழற்சி நடைபெறுகிறது.

வானிலைக் கருவிகள்

வளிமண்டலத்தின் வெப்பநிலை, அழுத்தம், ஈரப்பதம், காற்றோட்டம், மழையின் அளவு போன்றவை வானிலையின் உட்கூறுகளாகும். இவைகளில் ஏற்படும் அன்றாட மாற்றங்களை அறிவதன் மூலம் வானிலையை நன்கு அறிந்து முன்னறிவிக்க முடியும்.

வானிலை முன்னறிவிப்பு, பல்வேறு வானிலை நிலையங்களிலிருந்தும் முறையாக வானிலை உட்கூறுகளை ஒவ்வொரு 6 மணி நேர இடைவெளியில் அளக்கப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.

வெப்பநிலை (Temperature)

பாதரச வெப்பமானியை நிழலில் வைத்து, வெப்பநிலை அளவிடப்படுகிறது. ஸ்டீவன்சன் திரை என்ற அமைப்பில் பாதரசமானி வைக்கப்பட்டு வெப்பமானியை நிழலில் வைத்து, வெப்பநிலை அளவிடப்படுகிறது. 24மணி நேரத்தின் உயர்ந்த பட்ச வெப்பநிலையை பாதரச வெப்பமானியைக் கொண்டும் குறைந்தபட்ச வெப்பநிலையை, ஆல்கஹால் வெப்பமானியைக் கொண்டும் வானிலை ஆய்வாளர்கள் அளக்கின்றனர்.

அழுத்தம் (Pressure)

பாரமானியைக் கொண்டு அழுத்தம் அளவிடப்படுகிறது. பாரோகிராப் மூலம் தொடர்ச்சியாக காற்றழுத்தம் வரைபடத்தாளில் பதிவு செய்யப்படுகிறது. வானிலை வரைபடத்தில் மில்லிபார் முறையில் குறிக்கப்படும் கடல்மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லிபார் ஆகும்.

காற்றோட்டம் (Wind)

காற்று வேகமானியைக் (Anemometer) கொண்டு, காற்றின் வேகத்தை அளவிடலாம். இதில் மூன்று உலோகக் கிண்ணங்கள், செங்குத்தாகச் சுழலக்கூடிய தண்டில் படத்தில் காட்டியவண்ணம் பொருத்தப்பட்டுள்ளது. காற்று வீசும் போது கிண்ணங்கள் சுழல்கின்றன. அந்த சுழற்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில், காற்றின் வேகம் கணக்கிடப்படும். பியுபோர்ட் அளவுத்திட்டம் (Beaufort Scale) மூலம் காற்றின் வேகம் பற்றிய வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

காற்று, காற்று திசைமானி (Wind Vane) மூலம் அறியப்படுகிறது. எந்த திசையிலிருந்து காற்று வீசுகிறதோ, அதுதான் காற்றோட்டத் திசையாகும். பூமியின் பரப்பை ஒட்டி வீசுகின்ற, காற்றோட்டத்தின் திசையை, காற்றோட்டத் தகட்டைப் பயன்படுத்தி அறியலாம்.

மழை

மழையளவு, மழைமானி (Rain Gauge) மூலம் அளக்கப்படுகிறது. இதனுடைய மேல் மட்டத்தில் உள்ள ஒரு புனலில் மழை விழுகிறது. இந்தப்புனல் ஒரு உருளை வடிவமான அளவீடு குழாயில் பொறுத்தப்பட்டுள்ளது. மழை நீரானது புனலிலிருந்து அளவீட்டு குழாய்க்குச் செல்கிறது. அளவீட்டு குழாயின் குறுக்கு வெட்டுப் பரப்பு, புனல் வாய்ப்பரப்பில் பத்தில் ஒரு பாகம் ஆகையால் புனலில் விழும் ஒரு செ.மீ. மழை அளவீட்டு குழாயில் 10 செ.மீ உயரமாயிருக்கும். ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் உள்ள மழை நீரானது அளவிடப்படுகிறது.

சூரிய ஒளி பதிவு கருவி

இதில் ஒரு கண்ணாடி கோள வடிவத்தில் அமைக்கப்பட்டு, ஒரு லென்சு போன்று செயல்படும். இதன் மூலம் சூரியக் கதிர்கள் குவிக்கப்படுகின்றன. இவைகள் நீலநிற உணர்வுடைய அட்டையின் மீது பதிவு செய்யப்படுகின்றன. இதிலிருந்து ஒரு நாளில் எத்தனை மணி நேரம் சூரிய ஒளி இருந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மழைநீர் சேகரிப்பும், பயன்படுத்துதலும்

மழைக்காலத்தில் கிடைக்கும் மழைநீர் கூரைகள் மற்றும் கட்டிடங்களிலிருந்து பூமிக்குள் சென்று வீணாகமல் குழாய்கள் வழியாக தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தும் செயல்முறையே மழைநீர் சேகரிப்பு (Rain Water Harvesting) என்று கூறுகிறோம். இவ்வாறு சேகரிக்கப்படும் மழைநீரை வீடு மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறோம். மழைநீரைச் சேகரித்து பயன்படுத்தும் முறை உலகில் பல்வேறு நாடுகளுக்கும் இன்று பரவியுள்ளது. உதாரணமாக, ஆஸ்திரேலியா ஒரு வறண்ட கண்டமாகும். இதனால் இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் மழைநீரை சேமித்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை நீண்ட காலத்திற்கு முன்பே அறிந்து அதைப் பயன்படுத்துகின்றனர். பாலைவனமாக இருக்கும் இஸ்ரேல் நாடு இன்று வேளாண்மையில் புரட்சி செய்து உலகில் உன்னத நாடாகக் காட்சியளிப்பதற்குக் காரணம், அவர்கள் மழைநீரை வீணாக்காமல் சேமித்துப் பயன்படுத்துவதால்தான்.

மழைநீர் சுத்தமான நீராக இருப்பதால் அதனை நாம் நமது அன்றாடத் தேவைகளைப்பூர்த்தி செய்யப் பயன்படுத்திக்கொள்கிறோம். அணைகள் மற்றும் குளங்களில் சேகரிக்கப்பட்ட மழைநீரை அப்படியே பயன்படுத்துவதில்லை. அதிலுள்ள கிருமிகளை அழிப்பதற்கு குளோரின் போன்ற இரசாயனப் பொருள்களைக் கலக்க வேண்டியுள்ளது. ஆனால், மழைநீர் சுத்தமான நீராக இருப்பதால் மழைநீர் சேகரிப்பு மூலம் கிடைக்கும் நீரானது பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும், செலவு குறைவானதாகவும் இருக்கிறது.

மேலும் மழைநீரை தொட்டிகளிலோ, பாத்திரங்களிலோ சேமிக்காமல் கட்டிடத்திற்கு அருகில் சிறிய பள்ளம் தோண்டி அதில் மணல், கூழாங்கற்களைப் போட்டு நிரப்பி மழைநீரைச் சேமிக்கலாம். இதனால் கிணற்றின் நீர்மட்டம் உயர்வதுடன் வறட்சிக் காலத்திலும் நீர் கிடைக்கும். அங்கிருந்து மோட்டார் மூலம் நாம் நீரை எடுத்துப் பயன்படுத்தலாம்.

மழைநீரை வீணாக்காமல் அணைகள், குளம், குப்பைகளில் சேகரித்து வைத்து குடிநீர், விவசாயம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்துவதும் மழைநீர் சேகரிப்புதான்.

பேராழியியல்

புவியின் பரப்பில் நிலம் 29%, நீர் 71% பரவியுள்ளது. 71% பரப்பில் பரவியுள்ள இந்நீர்ப்பரப்பு நீர்க் கோளம் (hydrosphere) எனப்படும். இந்த நீர்க் கோளத்தை பேராழிகளாகப் (oceans) பிரிக்கின்றனர். ஒவ்வொரு பேராழியும் கடல் (Sea), விரிகுடா (Bay), வளைகுடா (Gulf), ஜலசந்தி (strait) எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஆழம்மிக்க பெரும்பரப்பில் அமைந்து கிடக்கும் பெருங்கடலே பேராழியாகும். புவியில் எத்தனைப் பேராழிகள் உள்ளன என்பதில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் பசிபிக் பேராழி, அட்லாண்டிக் பேராழி, இந்தியப் பேராழி, ஆரிக்டிக் பேராழி ஆகிய நான்கு பேராழிகள் உள்ளன என நாம் கொள்வோம். பேராழிகளில் மிகப் பெரியது பசிபிக் பேராழியே. பசிபிக் என்ற சொல்லுக்கு 'அமைதி” என்பது பொருள். அவ்வாறிருப்பினும் அப்பேராழி சுனாமி அலைகளுக்கு பெயர் பெற்றது வேடிக்கையே ஆகும். மெகல்லன் தன் கடற்பயணத்தில் பசிபிக்கின் அமைதிப் பகுதியைக் கண்டு, அப் பேராழிக்குப் பசிபிக் என்று பெயரிட்டார். இது முக்கோணம் போன்ற அமைப்பை உடையதாகும். அட்லாண்டிக் இரண்டாவது பெரும் பேராழியாகும். இப்பேராழி 'S' போன்ற அமைப்புடன் விளங்குகிறது. இந்தியப் பேராழி மூன்றாவது பெரும் பேராழி ஆகும். ஒரு நாட்டின் பெயரை வைத்துப் பெயரிடப்பட்ட ஒரே பேராழி இதுவே ஆகும். பேராழிகளில் மிகச் சிறியது ஆர்க்டிக் பேராழியே. இப்பேராழி வடதுருவத்தைச் சுற்றி அமைந்துள்ளது. கடல்நீர் உப்புத்தன்மை கொண்டது. கடல்நீருக்கு வெப்பமும், அழுத்தமும், அடர்த்தியும் உண்டு. இப்பேராழிகளைத் தவிர கடல் நீர் கண்ட நிலப் பரப்பிற்குள் சிறு வளைகுடா மூலம் உட்கடல்களாக அமைந்துள்ளன. உதாரணம் கருங்கடல், செங்கடல், காஸ்பியன் கடல், கரிபியன் கடல் போன்றவை.

கடல்நீர் மூன்றுவித அசைவுகளைக் கொண்டது.

அவையாவன

 1. அலைகள்
 2. ஒதங்கள்

நீரோட்டங்கள்

ஆறுகள்

கங்கை, காவிரி, தாமிரபரணி போன்ற ஆறுகளை நாம் அறிவோம். இருபுறமும் கரையமைத்து நடுவிலுள்ள பள்ளத்தாக்கின் வழியாய் மலையிலிருந்து கடலை நோக்கி ஒடிச் செல்லும் மழைநீரே ஆறு எனப்படும். ஒரு ஆற்றின் வேகம், அது ஒடும் பாதையின் நிலச்சரிவு, மழைப்பொழிவு, பள்ளத்தாக்கின் அமைப்பு அது சுமந்து வரும் சுமை முதலியவற்றைப் பொறுத்துள்ளது. மலையிலிருந்து ஒடிவரும் ஆறு சமவெளியை அடைந்தவுடன் நிலத்தின் சரிவு குறைவதால் வேகம் குறைத்து கொண்டே செல்கிறது. ஆற்றின் நீரின் அளவும் எப்போதும் ஒரே அளவில் காணப்படுவதில்லை. மழைக்காலத்தில் மிகுந்தும், வறண்ட காலத்தில் குறைந்தும் நீர் ஒடுகிறது.

ஆறுகள் அவை தோன்றிய மலைப்பகுதியிலிருந்து கடலுடன் கலக்கும் வரை ஆற்றின் பாதையை 3 வகைகளாகப் பிரிக்கலாம்.

அவையாவன :

 1. மேற்பகுதி,
 2. நடுப்பகுதி,
 3. கீழ்ப்பகுதி

ஆற்றின் மேற்பகுதியில் அரிப்பும், நடுப்பகுதியின் அரிப்பும் படிதலும் சமமாகவும், மூன்றாம் பகுதியில் படிதலும் சிறப்பாகக் காணப்படும். அரித்ததின் காரணமாக ஆறுகள் 'V' வடிவப் பள்ளத்தாக்கு, அருவி, குடைவு காரணமாகப் பள்ளத்தாக்கு போன்றவையும், அரித்தலும் படிதலும் சமமாக உள்ள காரணத்தினால் மியாண்டர்களும், குளம்பு வடிவ ஏரியும், படிதல் காரணமாக வெள்ளச் சமநிலம், டெல்டா போன்ற நிலத்தோற்றங்களையும் உருவாக்குகின்றன.

ஆறுகளின் பயன்கள்

புவி நீர் வளமும், நில வளமும் பெறுவதற்கு முக்கிய காரணம் ஆறுகள் தான். பூமியில் நீர்ச் சுழற்சிக்கு ஆறுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நீரோடைகள், காட்டாறுகள் மூலம் ஆறுகளுக்கு நீர்வரத்து வருவதாலும், ஆறுகளிலிருந்து கால்வாய்கள் மூலம், நீர் பகிர்ந்து செல்வதாலும் புவிக்கு நீர்வரத்து எப்போதும் இருந்து கொண்டே உள்ளது. மேலும் அதன் பயன்களாவன :

 1. புவியில் உள்ள நீர் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதனுக்கும் உயிர் ஆதாரமாக விளங்குகிறது.
 2. ஆற்றுச் சமவெளிகள் செழிப்பான மண்வளத்தைக் கொண்டவை. வறட்சி மிகுந்த இடங்களுக்கு நீர்ப்பாசன முறையின் மூலம் ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
 3. பொழுதுபோக்கு அம்சத்திற்கும், நீர் வழிப் போக்குவரத்திற்கும் ஆறுகள் பயன்படுகின்றன.
 4. ஆற்றல் வளத்திற்கு ஆறுகள் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. ஆரம்ப காலத்தில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆற்றுப் போக்கு மிகுந்த இடங்களில் அமைக்கப்பட்டன. இவற்றுக்குத் தேவையான ஆற்றல் பெற சக்தி வாய்ந்த இயந்திரங்களை ஆற்று நீரில் பயன்படுத்தினர். தற்போது புனல் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டு அதன் மூலம் ஆற்றுநீரில் மின் ஆற்றல் பெறப்படுகிறது.

ஆறுகள் சார்ந்தச் சொற்கள்

துணையாறு

சிறு நீரோடையானது பெரிய ஆற்று நீருடன் இணைந்து செல்லும் நீர்.

கிளை ஆறு

பெரிய ஆறுகள் பல கிளைகளாகப் பிரிந்து வளமிக்க டெல்டாப்பகுதிகளுக்குள் சென்றடைதல்.

மேலோட்டநீர் (Upstream)

நீரோட்டத்திற்கு எதிராக செல்லக் கூடிய ஆற்றுநீர்

கீழோட்ட நீர்

முகத்துவாரத்தை நோக்கி நீரோட்டப் போக்கில் செல்லக்கூடிய நீர்.

டெல்டா

ஆற்று முகத் துவாரத்தில் வண்டல் படிவுகள் அடங்கிய முக்கோண வடிவ நிலத்தோற்றம்

ஆற்று வளைவுகள் (Meander)

வளைவுகள் அடங்கிய ஆற்று நீர்

ஆற்றில் ஒடும் நீரின் அளவு

ஆற்றில் ஒடும் நீரின் அளவு, மழைக் காலத்தில் அதிகமாகவும். வறட்சிக் காலத்தில் குறைவாகவும் இருக்கும். அணைகளிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் போது குறிப்பிட்ட அளவாக இருக்கும்.

மலையில் தோன்றி சரிவில் வேகமுடன் பாய்ந்து பின் வேகம் குறைந்து சமவெளியில் தளர் நடையிட்டுக் கடலோடு கலப்பதால் ஆறும் வாழ்க்கை ஒன்றைப் பெற்றுள்ளது என்பர்.

ஏரிகள்

புவிப்பரப்பில் உள்ள பள்ளங்களில் நீர் நிறைந்திருப்பதால் அவற்றை ஏரிகள் என்பர். நன்னிர் ஏரிகள் மற்றும் உப்பு நீர் ஏரிகள் ஏரிகளில் ஆற்று நீர் கலக்குமாயின் ஏரியின் நீர் எப்பொழுதும் நன்னீராகவே காணப்படும். (உ.ம்) காஷ்மீர் ஏரி, டால் ஏரி இதற்கு மாறாக ஆற்றுநீர் நுழைவதற்கான வழிகள் இல்லையெனில், ஏரியினுள்ள நீரின் உப்புகள் ஆவியாதல் மூலம் படிகின்றன. இவை உப்புநீர் ஏரிகள் என அழைக்கப்படுகின்றன. (உம்) சாக்கடல், ஏரல் கடல். ஆனால் உலகில் காணப்படும் பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும்.

புவியின் மேற்பரப்பில் மலை மிகுந்த பகுதிகளிலும், பணியாறுகள் ஒடும் நிலப்பரப்பிலும் ஏரிகளின் எண்ணிக்கை அதிகம்.

ஏரிகளின் வகைகள்

 1. புவியின் இயக்கங்கள் மூலம் ஏற்படும் மடிப்புகள் மற்றும் பிளவுகள் மூலமாக ஏரிகள் உருவானால் அதற்கு (Tectonic Lakes) டெக்டானிக் ஏரி என்று பெயர்.
 2. மடிப்புகளின் விளைவாக புவி பாறை மடிப்புகளாகவோ அல்லது பள்ளங்களாகவோ மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற்படும் பொழுது அப்பள்ளங்களில் நீர் நிறைந்திருப்பின் ஏரிகள் உருவாகின்றன. (உ.ம்) டிட்டிக்காகா ஏரி.
 3. ஒரு சில சமயங்களில் பாறைப் பிளவுகள் ஏற்படும் பொழுது பள்ளங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்பள்ளங்களில் நீர் நிறைந்திருக்கும் பொழுது ஏரிகள் தோன்றுகின்றன. (எ.கா) சாக்கடல், நயாசா ஏரி, எட்வர்டு ஏரி ஆகும். இவை பிளவு பள்ளத்தாக்கு ஏரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
 4. பணியாறுகள் நகரும் பொழுது, அதன் வழிப்பாதையில் அரிப்பின் காரணமாகச் ‘சர்க்” பள்ளங்களை ஏற்படுத்துகின்றன. அப்பள்ளங்களில் பனி உருகி நீர் நிறைந்த ஏரிகள் தோன்றுகின்றன. அவை 'டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகின்றன.
 5. சில நேரங்களில் ஆறுகளின் படுகைகளில் மியாண்டர் ஆற்றின் வளைவுப்பகுதி துண்டிக்கப்பட்டு நீர் நிறைந்து காணப்படுகிறது. மியாண்டர்கள் குளம்பு வடிவில் காணப்படுவதால் ஏரிகளும் 'குளம்பு வடிவ ஏரி என்று அழைக்கப்படுகின்றது. பாலைவனப் பகுதியில் காணப்படும் ஏரிகளை பிளேயாஸ் (Playas) என்று அழைக்கின்றனர். இத்தகைய ஏரிகள் நிலையானவை அல்ல. பாலைவனக் காற்று மண் விரைவில் பள்ளங்களை அடைத்து விடுவதால், ஏரிகளும் மறைந்து விடுகின்றன. எரிமலை வெடிப்பிற்கு பின் ஏற்படும் எரிமலை வாய்ப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு நீர் நிறைந்து விடுகிறது. அத்தகைய ஏரிகளை ‘கிரேட்டர் ஏரி’ என்பர்.

ஏரிகளின் முக்கியத்துவம்

 1. ஆற்று நீர்ப்போக்கினை முறைப்படுத்த ஏரிகள் உதவுகின்றன. அதிக மழைப்பொழிவு காலங்களில் ஏரிகள் மழைநீரைனை உட்கிரகித்து வெள்ளப்பெருக்கினைத் தடுப்பதுடன், வறட்சியான காலங்களில் ஆறுகளில் நீர் வரத்தினை ஏற்படுத்தவும் உதவுகின்றன. நீர்ப்பாசனத்திற்கு உதவுகின்றன. கால்வாய்களுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
 2. நீர்வழிப் போக்குவரத்திற்கும் ஏரிகள் பயன்படுகின்றன. கனமான பொருட்களான மரக்கட்டைகள், நிலக்கரிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்கு ஏரிகள் பயன்படுகின்றன.
 3. தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் நீர் மின்சக்தி எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
 4. முக்கிய உணவான மீன் - நன்னீர் ஏரிகள் காணப்படும் இடங்களில் பெரும் அளவு கிடைக்கின்றன.
 5. ஏரிகள் அடங்கியுள்ள பகுதி, சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது. (உ.ம்) காஷ்மீர் ஏரி மற்றும் நைனிடால் ஏரி (இந்தியா).

நீர் வீழ்ச்சி

ஆறுகள் உருவாக்கும் நிலத்தோற்றங்களில் மிகவும் முக்கியமான நிலத்தோற்றம் நீர்வீழ்ச்சியாகும். ஆற்றின் போக்கில் மென்பாறைகளும், கடினப்பாறைகளும் அடுத்தடுத்து காணப்படின், கடினப்பாறைகள் குறைவாகவும் மென்பாறைகள் அதிகமாகவும் அரிக்கப்படுகின்றன. இதனால் மலைச்சரிவின் நீர் பிடிப்புப் பகுதியில் படிக்கட்டு போன்ற ஒரு நில அமைப்பு ஏற்படுகிறது. இதில் தோன்றுவதே நீர்விழ்ச்சி எனப்படும்.

அலைகள்

காற்றின் விசையால் கடலின் மேற்பரப்பில் ஒயாது அசைந்து கொண்டிருக்கும் நீர் அசைவுகள் 'அலைகள்' எனப்படும். கடலின் அசைவுகளில் நாம் பார்த்து ரசிக்க வல்ல அசைவு அலையே ஆகும்.

அலைநீளம்

அலையின் உயர்பகுதியை முகடு என்றும், தாழ்பகுதியை பள்ளம் என்றும் அழைப்பர். அடுத்தடுத்துள்ள இருமுகடுகளுக்கு இடையே உள்ள தூரமும், அடுத்தடுத்துள்ள இரு பள்ளங்களுக்கு இடையே தூரமும் சமமாகும். இத்தூரத்தை அலை நீளம் (Wave length) என்பர். முகடுக்கும் பள்ளத்திற்கும் உள்ள செங்குத்து உயரம் அலை உயரம் (Wave height) என்றும், ஒரு வினாடியில் ஒரு அலை எவ்வளவு தூரம் நகர்கின்றதோ அதுவே அலை வேகம் (Wave velocity) என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே இடத்தில் அடுத்தடுத்து வரும் இருமுகடுகள் தோன்ற எடுத்துக் கொள்ளும் நேரம் அலைக்காலம் எனப்படும். காற்றின் விசையால் அலைகள் தோன்றுகின்றன. காற்று நீர்ப்பரப்பின் மீது உராயும் போது காற்றின் விசை நீருக்குள் சென்று அலைகளை எழுப்புகிறது.

அலைகளின் வகைகள் :

அலைநீளத்தை வைத்து அலைகளை சிற்றலைகள் (Short Waves) நீளலைகள் (Long waves) என இரு பிரிவுகளாகப் பிரிப்பார். நீளலைகள் நிலத் தோற்றங்களை அமைக்க வல்லவை என்பதால் அவை ஆக்க அலைகள் என்றும் (constructive waves) சிற்றலைகள் அழிக்கும் திறனுடையன என்பதால் அவை அழித்தல் அலைகள் (Destructive Waves) என்றும் அழைக்கப்படுகின்றன.

ஒதங்கள்

சூரியன், நிலவு ஆகியவற்றின் ஈர்ப்பு விசைகளினால் தான் புவியில் உள்ள கடல் நீர்மட்டம் உயர்ந்து தாழ்கின்றது. இந்தக்கடல் மட்ட உயர்வு தாழ்வுகளையே ஒதங்கள் (Tides) என்று அழைப்பர்.

ஒதமும் முக்கிய கடலசைவாகும். உயர் ஒதம் தாழ்நிலங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி பேரிழப்பை ஏற்படுத்துகின்றது. ஒதங்களை மின் சக்தி தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.

கடலில் அலைகள் மட்டும் அல்லாது கடல் நீர் மட்டத்திலும் உயர்வு தாழ்வுகள் ஏற்படுகின்றன. ஒரு நாளில் கடல் நீர் மட்டம் இருமுறை உயர்ந்தும் இருமுறை தாழ்ந்தும் காணப்படும். இவற்றை ஒதங்கள் (Tides) என்கிறோம். இவ்வாறு கடல் நீர் மட்டம் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுவதற்குக் காரணம் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகும்.

சூரிய குடும்பத்தில் உள்ள புவிக்கு துணைக்கோளான சந்திரன் தான் புவிக்கு மிக அருகில் உள்ளது. அதன் ஈர்ப்பு விசை புவியின் மேல் உள்ள பொருட்களைத் தன்னை நோக்கி ஈர்க்கிறது. நிலப்பரப்பு திடப்பொருளாக இருப்பதால் சந்திரனின் ஈர்ப்பு விசையினால் எவ்வித மாற்றமும் அங்கு ஏற்படுவதில்லை. ஆனால் புவியின் நீர்ப்பரப்பு சந்திரனின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்படுகிறது. இதனால் கடல் நீர் மட்டம் ஒரு பகுதியில் உயர்ந்தும் ஒரு பகுதியில் தாழ்ந்தும் காணப்படுகிறது. கடல் நீர் மட்டம் உயர்வதை உயர் ஒதம் என்றும் தாழ்வதை தாழ் ஒதம் என்றும் குறிப்பிடுகிறோம். இது எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை கீழ்கண்ட படம் விளக்குகிறது.

உயர்ஓதம்

சந்திரனை நோக்கியுள்ள புவியின் பகுதியில் உள்ள கடல்நீர் சந்திரனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படுகிறது. சந்திரனை நோக்கியுள்ள பகுதியில் கடல் நீர் மட்டம் உயர்வதால் அப்போது ஏற்படும் சமமற்ற நிலையை ஈடுகட்ட புவியின் மறுபக்கத்திலுள்ள பகுதியிலும் கடல் நீர் மட்டம் உயர்கிறது. இவ்வாறு சந்திரனை நோக்கியுள்ள புவியின் பகுதியிலும் அதற்கு மறுபுறம் உள்ள பகுதியிலும் படத்தில் உள்ளது போல கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்படும். எனவே ஒரே சமயத்தில் இரு புறத்திலும் உயர் ஒதம் ஏற்படும்.

தாழ் ஓதம்

இரு உயர் ஒதங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளிலுள்ள கடல் நீர் உயர் ஒதப்பகுதிகளுக்குச் சென்றுவிடுகிறது. எனவே இரு உயர் ஒதங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கடல் நீர் மட்டம் தாழ்ந்து காணப்படும். புவி சுழல்வதால் சந்திரன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போலத் தோன்றுகிறது. சந்திரனைப் பின்பற்றிக் கடலில் ஒதங்களுக்களும் நகர்கின்றன. ஒரு நாளில் புவி ஒரு முறை சுழலுவதால் புவியிலுள்ள எல்லா பகுதியிலும் கடலின் நீர் மட்டம் ஒரு நாளில் இருமுறை உயர்ந்தும் இருமுறை தாழ்ந்தும் காணப்படும். புவியின் ஒரு பகுதி சந்திரனுக்கு நேராக வரும்போது ஒரு முறையும், அதற்கு மறுபுறம் வரும்போது ஒருமுறையும் அப்பகுதியில் கடல்நீர்மட்டம் உயரும். இரு உயர் ஒதங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் நீர்மட்டம் தாழ்ந்து காணப்படும். சூரியனுக்கும் ஈர்ப்பு விசை உண்டு. சந்திரனை விட சூரியன் அளவில் 400 மடங்கு பெரியது. ஆனால் புவியிலிருந்து சந்திரனைவிட 400 மடங்கு தொலையில் உள்ளது. அதனால் புவியின் மீது செயல்படும் சூரியனின் ஈர்ப்பு விசை, சந்திரனின் ஈர்ப்பு விசையை விட 24 மடங்கு குறைவு.

சந்திரனின் ஈர்ப்பு விசையுடன், சூரியனின் ஈர்ப்பு விசையும் சேர்ந்து செயல்படும்போது அதிகமான நீரை ஈர்க்கின்றது. எனவே சூரியனின் ஈர்ப்பு விசையும் சந்திரனின் ஈர்ப்பு விசையும் சேர்ந்து செயல்படும் போது கடல் நீர் மட்டம் சற்று அதிகமாக உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்படுகிறது. இவற்றையே நாம் அதி மித ஒதம் என்கிறோம்.

கடல்நீரில் ஒரு நாளில் இரு உயர் ஒதங்களும் இரு தாழ் ஒதங்களும் ஏற்படுகின்றன. இவ் வோதங்கள் நாளிரு ஒதங்கள்’ எனப்படும்.

நீரோட்டங்கள்

நிலப்பரப்பில் ஒடும் ஆறுகள் போன்று, கடல்நீரிலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டு, குறிப்பிட்ட திசையிலிருந்து குறிப்பிட்ட திசையை நோக்கி தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கும் நீர்பகுதி நீரோட்டங்கள்’ எனப்படும். புவிஈர்ப்பு விசை, புவியின் சுழற்சி, வளிமண்டல அழுத்தம், காற்றின் வேகம், மழை வீழ்ச்சி, அழுத்தச் சரிவு, வெப்பநிலை வேறுபாடு, கடலின் உவர்ப்பியம், பனி உருகுதல், கடற்கரையின் அமைப்பு, கடலடி நிலத்தோற்றம் ஆகிய காரணிகளால் கடல் நீரோட்டங்கள் ஏற்படுகின்றன.

ஆறுகளைப் போலவே நீரோட்டங்களுக்கும் காலம், வேகம் எல்லாம் உண்டு. ஆனால் ஆறுகளை விட பன்படங்கு நீரை இவை கடத்துகின்றன.

கடல் நீரோட்டம் தான் பாயும் பகுதிகளின் காலநிலையையே மாற்றியமைக்கும் தன்மை கொண்டது. உதாரணமாக மேற்கு ஐரோப்பாவில் குளிர்காலத்தில் ஏற்படும், மழைக்குக் காரணம் வட அட்லாண்டிக் ஊர்மியே (North Atlantic Drift) ஆகும். இவ்வூர்மி இல்லையெனில் ஸ்காண்டிநேவியப்பகுதி கிரீன்லாண்ட் போன்று ஒர் உறைபனி நிலமாகவே இருந்திருக்கும். நீரோட்டங்கள் சத்துப் பொருட்களை எடுத்து வருவதோடு சத்துப் பொருட்கள் தீர்ந்து போன இடங்களில் மீண்டும், மீண்டும் புதுப்பிக்கவும் செய்கின்றன. இதனால் கடலின் மீன்வளமும் தாவர வளமும் பெருகுகின்றன. கிராண்ட் திட்டு கரைகளில் மீன்வளம் பெருகிக் காணப்படுவதற்கு நீரோட்டங்களே காரணமாகும்.

வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு நீரோட்டங்கள் வெப்ப நீரோட்டங்கள் குளிர் நீரோட்டங்கள் கடுங்குளிர் நீரோட்டங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. வெப்ப மண்டலத்திலிருந்து கிளம்பும் நீரோட்டங்கள் வெப்ப நீரோட்டங்களாகும். (உம்) பிளாரிடா நீரோட்டம், குரோஷியா நீரோட்டம், நார்வே நீரோட்டம்,பிரேசில் நீரோட்டம் உயர் அட்சக் கோடுகளிலிருந்து கிளம்பி புவியிடைக் கோடு நோக்கி ஓடி வரும் நீரோட்டங்கள் கடுங்குளிர்நீரோட்டங்கள் எனப்படும் (உம்) லாப்ராடர்நீரோட்டம், பெரு நீரோட்டம், பெங்குலா நீரோட்டம், மத்திய அட்சப் பகுதிகளிலிருந்து புவியிடைக் கோடு நோக்கி ஓடிவரும் நீரோட்டங்கள் குளிர்நீரோட்டமாகும்(உம்) கலிபோர்னியாநிரோட்டம், கானரீஸ்நீரோட்டம் முதலியன.

உலகில் மூன்று பெரும் பேராழிகளில் நீரோட்டங்கள் அமைந்துள்ளன. அவை, இந்தியப் பேராழிநீரோட்டங்கள், அட்லாண்டிக் பேராழிநீரோட்டங்கள்,பசிபிக் பேராழிநீரோட்டங்கள்.

கடல் வளங்கள்

கடலில் உள்ள வளங்கள் மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பயனுள்ளதாக உள்ளன. கடலில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவிலிருந்து புவியின் பெரும் பிராணியான திமிங்கலம் வரை உள்ளன. 150,000 வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அதில் 16,000 வகைமீன்களும்,20,000 வகை தாவரங்களும் அங்கு உள்ளன.

கடலில் உப்பு முதல் அனைத்து வகையான எல்லாக் கணிப்பொருட்களும் உள்ளன. உப்பு, மக்னீசியம், புரோமின், கந்தகம், பாஸ்பேட், மாங்கனீசு உருண்டைகள், தங்கம், நிலக்கரி தவிர இரும்பு, தகரம், பொட்டாசியம், யுரேனியம் மற்றும் குரோமைட் இருப்பதாககண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் தெழிற்சாலை வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன.

சக்திவளங்களான எண்ணெய் கடலுக்கு அடியில் கண்டங்களின் கண்டத்திட்டுப் பகுதியில் இருப்பதாக கண்டுள்ளனர். எனவே நமக்குத் தேவையான சக்தி வளங்களையும் கடல் அளிக்கிறது. ஒதங்களின் மூலம் ஒத சக்தியும் பெறப்படுகின்றது.

கடலிலிருந்து உணவுப் பொருட்கள் தேவையான அளவு பெறப்படுகின்றது. மீன் ஒரு முக்கிய உணவுப் பொருளாகவும், மீன் எண்ணெய், மருந்து மற்றும் உரங்கள் தயாரிக்க மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றது. மீன் பிடிக்கும் தொழில் ஒரு முக்கியத் தொழிலாக வெப்ப மண்டலங்களில் பின்பற்றப்படுகிறது. உலகின் முக்கிய மீன் பிடித் தளங்கள் அனைத்தும் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளன. தவிர ஆழ்கடல்களும் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு உரிய தளங்களாக உள்ளன. இதிலிருந்து சீல், திமிங்கலம் போன்ற மதிப்புமிக்க மீன்கள் பிடிக்கப்பட்டு எண்ணெய், தோல் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

கடல் மழையைத் தரக்கூடிய ஒரு முக்கிய ஆதாரம் எனலாம். கடலிலிருந்து வீசும் காற்றுகளின் மூலம் கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதிகள் அதிக மழை பெறுகின்றன. மேற்கண்டவாறு கடலின் எண்ணற்ற வளங்கள் நம் வாழ்க்கைக்கு உறுதுணை புரிகின்றன. எனவே கடலை மாசுபடுத்தாமல் காப்பாற்றுவது நமது கடமையாகும்.

சுனாமி

ஒரே நாளில் உலகத்தை அச்சப்படவும், ஆச்சரியப்படவும் வைத்த சொல் சுனாமி. இந்த மூன்று எழுத்து சொல் இந்த நூற்றாண்டின் முக்கிய சொல்லாக வரலாற்றில் ஏறிவிட்டது. ஏற்கனவே பல நாடுகள் சுனாமியின் சீற்றத்தை சந்தித்திருந்தாலும் நமக்கு இது புதிது. இந்த நூற்றாண்டில் இவ்வளவு தகவல் தொழில் நுட்ப புரட்சி இருந்த போதிலும், விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆயிரக்கணக்ான உயிர்களை இழந்துள்ளோம். கடலுக்கடியில் ஏற்படுகிற பூகம்பம்தான் சுனாமியை உருவாக்குகிறது.

சீனப் பெருஞ்சுவரைவிட பிரமாண்டமானது இந்த சுனாமி அலைச்சுவர். இதன் நீள அகலத்தைச் சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். இது கடலைக் கடக்கும். கரையை மட்டுமே தாக்கும். பாம்பு போல பதுங்கி பதுங்கி கடற்கரை ஓரத்தில் மட்டும் படமெடுத்து தனது சீற்றத்தைக் காட்டும். சுனாமி அலைகள் கரை நோக்கி பயணம் செய்யும்போது கடல் சாதாரணமாகத் தோன்றும். கரையைத் தொட்டவுடன் தான் அதன் ஆற்றல் அசுர வேகத்தில் விஸ்வரூபம் எடுக்கும். அப்போது ஏற்படும் அலைகளின் சத்தம் பயங்கரமாக இருக்கும்.

சுனாமி என்றால் என்ன?

சுனாமி என்றால் ஆழிப்பேரலை என்று பொருள். இது கடலின் ஆழப்பகுதியிலிருந்து உருவாகிறது. இது பெரும்பாலும் கடலுக்கடியில் நிலநடுக்கத்தின் போது ஏற்படுவதால் நிலநடுக்கவிசையின் காரணமாக அதன் மேல் உள்ள தண்ணிர் இடம் பெயருகிறது. இதனால் பெரிய அலைகளாக கடலோரப் பகுதிகளுக்கு வருகிறது. இந்த அலைகளின் தொகுப்பே சுனாமி என்பதாகும்.

சுனாமி என்பது ஜப்பானியச் சொல் சு (Tsu) என்றால் ஜப்பானிய மொழியில் துறைமுகம் என்று பொருள்'னாமி" என்றால் அலை. இந்த அலைகள் துறைமுகங்களை தாக்கியதால் இதனை சுனாமி துறைமுக அலை) என்று அழைத்தனர் ஜப்பானியர். இந்தப்பெயரே இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டப் பெயராக வழங்கி வருகிறது.

நடுக்கடலில் சுனாமி அலைகளின் 'அலைநீளம் மிக அதிகமாக இருக்கும் அலையின் வேகமும் அதிகமாக இருக்கும் சுனாமியின் வேகம் மணிக்கு 350 கி.மீலிருந்து 850 கி.மீ. வரை இருக்கும். சுனாமி சரையைத் தாக்கும்போது அதன் உயரம்1 மீட்டரிலிருந்து 50 மீட்டர் வரை இருக்கும். கரையை நெருங்கும் ஒரு சுனாமி அலைக்குப் பின்னால் இன்னொரு சுனாமி அலை 100 அல்லது 200 கிமீட்டருக்கு அப்பால் வந்துகொண்டிருக்கும். இதுபோல ஒவ்வொரு அலையாக தொடர்ந்து கரையை நோக்கி வந்து கொண்டேயிருக்கும்.

நிலநடுக்கமும் சுனாமியும்

நிலநடுக்கமும், சுனாமியும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. கடலில் நில நடுக்கம் ஏற்பட்ட பின் சுனாமி அலை உருவாகத் தொடங்கிவிடும். இது சுனாமி உருவாகும் இடத்திற்கும், கடற்கரைக்கும் இடையில் உள்ள தூரத்தின் அளவைப் பொருத்தது. கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் லேசான நில அதிர்சி ஏற்பட்டால் கூட உடனே கரையை விட்டு தள்ளிச் சென்று விட வேண்டும். ஏனெனில் அதே நேரம் கரைக்கு அப்பால் ஆழ்கடலில் ஏதேனும் ஒரு இடத்தில் நில அதிர்வின் மையப்பகுதி இருந்தால், சுனாமி அலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

சுனாமி தோன்றுவதை அது தோன்றிய உடனேயே கண்டறிய முடியும். பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான் சுனாமி அடிக்கடி ஏற்படுகிறது ஒரு நூற்றாண்டிற்கு சராசரியாக 6 முறை ஏற்படுகிறது. எனவே அங்கெல்லாம் சுனாமி தாக்குதல் பற்றி எச்சரிக்கை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

2004 டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை,மலேசியா, மாலத்தீவு, இந்தியா, அந்தமான் நிக்கோபார், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பங்களாதேஷ், சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளைத் தாக்கியது.

சுனாமி தகவல் மையம்

சுனாமி தகவல் மையங்களாக, பன்னாட்டு சுனாமி தகவல்மையம் (International Tsunamic Information Centre) பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (Pacific Tsunamic Warning Centre) மையங்கள் அமெரிக்காவில் செயல்பட்டு வருகின்றன.

ரிக்டர் அளவு கோலில் 75 அளவுக்கு மேல் ஒரு நில அதிர்வு பதிவான உடனேயே சுனாமி கண்காணிப்புப் பற்றிய செயல்பாடுகள் தானாகவே தொடங்கிவிடும். அதன்பின் சுனாமி உண்மையிலேயே ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி அலை அளவைநிலையங்களிலிருந்து (Tida Gauge Station) விவரங்கள் எச்சரிக்கை மையத்தால் கோரப்படுகின்றன. சுனாமி இயக்கம் எதுவும் இல்லை என்று அலை அளவை நிலையங்கள் தெரிவித்துவிட்டால் சுனாமி கண்காணிப்பு உடனடியாக நிறுத்தப்படுகிறது. சுனாமி இயக்கம் இருப்பதாக இந்த நிலையங்கள் உறுதி செய்து விட்டால் அடுத்த 14 மணி நேரத்தில் சுனாமி தாக்க வாய்ப்புள்ள எல்லா இடங்களுக்கும் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

சுனாமியிலிருந்து தப்பிப்பது

பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகள் குளிர், புயல், மழை போன்ற பருவகால மாற்றங்களால் ஏற்படுவது இல்லை. இருப்பினும் குறுகிய நேரத்தில் ஏற்படும் இந்த அபாயத்தை பேரிடர் மேலாண்மை மூலம் நம்மைக் காத்துக் கொள்வது அவசியம்.

முடிவுரை

இந்த உலகம் மிகப் பெரியது. அதைவிடப் பெரிய அறிவாற்றலை இயற்கை மனிதனுக்கு வழங்கியுள்ளது. இந்த ஆற்றலைக் கொண்டு இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். நாம் இயங்குவது போல பூமிக்குள்ளும் ஒர் இயக்கம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதைத் தான் நிலநடுக்கங்கள், சுனாமிகள் நமக்கு உணர்த்துகின்றன. இயற்கையில் உள்ள வளங்களை பேணிப் பாதுகாப்பதும் இயற்கை சீற்றங்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதும் மிகவும் இன்றியமையாததாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை

Filed under:
3.23255813953
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top