பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இயற்கைப்பேரிடர்கள்

இயற்கைப்பேரிடர்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இயற்கைச் சீற்றங்களினால் புவியில் பெருமளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்படுவதையே "இயற்கைப் பேரிடர்” என்கிறோம். நிலநடுக்கம், எரிமலை, சுனாமி, இடி, மின்னல், புயல், வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு பணிச்சரிவு முதலியன இயற்கைப் பேரிடர்களாகும்.

நிலநடுக்கம் (Earthquake)

குறிப்பிட்ட நிலப்பகுதியில் குறைந்த நேரத்தில் புவியில் திடீரென ஏற்படுகின்ற (Tremor) அதிர்வே நிலநடுக்கம் ஆகும். நில அதிர்வுகள் பெரும்பாலும் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே நிகழ்கின்றன. சில சமயங்களில் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள்கூட நீடிக்கலாம். புவிக்குள்ளே நில அதிர்வு எந்த இடத்தில் தோன்றுகிறதோ அந்தப் புள்ளியே நிலநடுக்க மையம் (Focus) எனப்படும். நிலநடுக்க மையப்புள்ளிக்குச் செங்குத்தாகப் புவியின் மேற்பரப்பில் உள்ள புள்ளி நிலநடுக்க வெளி மையம் (Epicenter) எனப்படும்.

நிலநடுக்கம் என்பது, புவியின் உட்பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் அதிர்வுகள் ஆகும். இவை கீழ்க்காணும் காரணங்களினால் ஏற்படுகின்றன.

 1. நிலப்பலகைகளின் நகர்வு
 2. புவியின் உட்பகுதியில் ஏற்படும் பாறைப் பிளவு
 3. பாறைகளின் நகர்வு
 4. எரிமலை வெடிப்பு
 5. மிகப்பெரிய அளவில் கட்டப்படும் அணைகளின் அழுத்தம்
 6. சுரங்கத் தொழில்கள் மற்றும் நிலத்தடி நீர் வெகுவாகக் குறையும் அளவிற்கு மிகுதியாகப் பயன்படுத்துதல்

அதிர்வலைமாணி

நிலநடுக்கம், அதிர்வலைமாணி (Seismograph) என்னும் கருவியால் அளவிடப்படுகிறது. புவியில் ஏற்படும் அதிர்வுகளை இது பதிவு செய்கிறது. அதிர்வுகள் ரிக்டர் அளவை (Richter Scale) மூலம் மதிப்பிடப்படுகின்றன.

ரிக்டர் அளவையும் அதன் விளைவுகளும்

ரிக்டர் அளவை

விளைவு

O < 2

பொதுவாக உணர முடிவதில்லை

2 - 2.9

புலனால் மட்டுமே உணர முடியும்

3-3.9

சிலரால் மட்டுமே உணர முடியும்

4 - 4.9

பெரும்பாலானோர் உணரலாம்

5 - 5.9

பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

6 - 6.9

மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படலாம்

7 - 7.9

பேராபத்தை ஏற்படுத்தலாம்

> 8

மிகப்பெரிய நிலநடுக்கம் - நிலநடுக்க உப்பகுதியில் வாழ்கின்ற உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அழியலாம்

 

மிழ்நாட்டில் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய

நிலநடுக்கத்தால் ஏற்படும் பேரிடர்கள்

இடங்கள் (Earthquake -Prone Zones in TN)

தமிழ்நாடு மித (III) மற்றும் குறைந்த (II) அபாயநேர்வு மண்டலமாக வகை செய்யப்பட்டுள்ளது.

 

மித அபாய நேர்வு மண்டலம் (III):

அ. நீலகிரி, வேலூர், திருவள்ளுவர், சென்னை,

ஆ. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சில பகுதிகள்.

 

 • ஆறுகள் போக்கை மாற்றிக்கொள்வதால் அபாயநேர்வு மண்டலமாக  வெள்ளம் ஏற்படும்
 • மலைப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டால் நிலச்சரிவு ஏற்படும்.
 • காடுகளில் காட்டுத்தீயும், மனிதக்குடியிருப்புப் பகுதிகளில் தீவிபத்தும் நேரும்
 • கடலில் நிலநடுக்கம் ஏற்படின் சுனாமி தோன்றும்
 • எரிமலை வெடிப்பு நிகழலாம்

தாக்கம்

 • மனித உடல் மற்றும் மனதளவில் பாதிப்புகள்
 • தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் பகுதியாகவோ, முழுவதுமாகவோ பாதிக்கப்படுதல்
 • பொருளாதாரச் சீர்குலைவு

செய்யவேண்டியவை

 • DROP, COVER & HOLD ON முறையில் செயல்பட வேண்டும்.
 • மேசைக்கு அடியில் அதன் கால்களைப் பிடித்துக்கொண்டு அமர வேண்டும்.
 • மூலையில் சென்று பின்னந்தலையைப் பாதுகாக்கும் வண்ணம் பிடரியைக் கையால் மறைத்தபடி மண்டியிட வேண்டும்.
 • கண்ணாடிகள், கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும்
 • பழைய கட்டடமாக இருப்பின் விரைந்து வெளியே வரவேண்டும்
 • பதற்றமடையாமல் அமைதியாக இருக்க வேண்டும்

செய்யக் கூடாதவை

 • பதற்றமடைதல் கூடாது.
 • கட்டடம்/வீட்டைவிட்டு 30 வினாடிகளுக்குள் வெளியேற இயலுமானால் வெளியேறலாம்
 • இல்லையென்றால் வெளியேறக் கூடாது.
 • மின் தூக்கிகளைப் (Lift) பயன்படுத்துதல் கூடாது.
 • கதவு, கண்ணாடி ஜன்னல்கள், அலமாரிகள் அருகில் செல்லுதல் கூடாது.

வெளிப்புறம்  இருந்தால் - செய்ய வேண்டியவை

 • கட்டடங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும்.
 • வண்டியில் சென்றால், வண்டியை நிறுத்திவிட்டுத் திறந்தவெளிக்குச் செல்லவேண்டும்.
 • மலையடிவாரத்தில் இருந்தால், நிலச் சரிவிலிருந்தும், மலையிலிருந்து விழும் பாறைகளிலிருந்தும் காத்துக் கொள்ளப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
 • உறுதியான சுவர் அருகில் சென்று, தரையில் உட்கார்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு மனத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
 • கடற்கரையிலிருந்தால் கடலுக்கு எதிர்ப்புறமாக ஒட வேண்டும்.

நிலநடுக்கத்திற்குப் பின்

 • அபாயக் குரல் எழுப்பவேண்டும். மீட்புப்படைக்குத் தகவலளிக்கவேண்டும்.
 • மின் பொத்தான் (Electric Switch), தீப்பெட்டி ஆகியவற்றை பயன்படுத்தாமல் உலர் மின்கல கைவிளக்கைப் (Torch) பயன்படுத்தவேண்டும்.
 • பீதியடையாமல் அரசு அறிவிப்புகளைக் கவனிக்கவேண்டும்.
 • மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்புகளைத் துண்டிக்கவேண்டும்.
 • விலைமதிப்புள்ள பொருள்களைத்தேடி இடிபாடுகளுக்குள் செல்லக் கூடாது.
 • இடிபாடுகளுக்கிடையே நடக்க நேர்ந்தால் செருப்பு அணிந்து நடக்க வேண்டும்.
 • தொடர் அதிர்வுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும் காயங்கள் ஏற்பட்டிருப்பின் மருத்துவ உதவி கோரவேண்டும்.

எரிமலை வெடிப்பு

புவியின் உட்பகுதியில் ஏற்படும் அழுத்தத்தினால், புவிக்குள்ளே உள்ள தீக்குழம்பு புவியின் மேற்பரப்பை அடைவதையே "எரிமலை வெடிப்பு என்கிறோம். ஹவாய்த் தீவுகளிலுள்ள சில எரிமலைகள் எச்சரிக்கைக் கட்டமைப்பைக் (Buit-in-warning system) கொண்டுள்ளன. மேலெழுகிற தீக்குழம்பினால் அப்பகுதியில் நிலநடுக்கங்கள் சிறிய அளவில் ஏற்படுகின்றன.

எரிமலையின் விரிவாக்கத்தை அளக்க சாய்வுமானி (Tit meter), எரிமலையின் வெப்பநிலையை அளக்க வெப்பமானி, எரிமலையின் வாயுக்களை அளக்க வாயுப்பொறி ஆகியவற்றை நில இயலாளர் பயன்படுத்துகின்றனர்.

எரிமலையால் ஏற்படும் முதன்மைத் தாக்கம் (Primary impact)

 1. வழிந்தோடும் லாவாவினால் கட்டடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைகின்றன.
 2. அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

செய்ய வேண்டியவை

 • ஒவ்வொரு வீட்டிலும் பேரிடர் மேலாண்மைப் பெட்டி ஒன்று தயாராக வைத்திருக்க வேண்டும்.
 • செயல்படும் அல்லது உறங்கும் எரிமலை உள்ள பகுதியில் வாழ்ந்தால், அறிவிப்பு வந்தவுடன் வேறு இடத்திற்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும்.
 • எரிமலைத் தளங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். எரிமலைச் சாம்பல் அதிகமாக இருக்கும் போது முகமூடி அணிந்துகொண்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறவும்
 • உடலை வெப்பம் தாக்காதபடி தடித்த உடையை அணிந்துகொள்ள வேண்டும்.
 • கட்டடங்களில் கீழ் மற்றும் மிக உயரமான தளங்களில் சென்று தங்க வேண்டும்.
 • சத்தமிட்டு உதவி கேட்க வேண்டும்.
 • இயல்புநிலை திரும்பும்வரை குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • எரிமலைச் சாம்பலை வெளியேற்றுமாறு பொதுப்பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
 • எரிமலை வாயுக்கள் மற்றும் புகையால் கண்கள், மூக்கு, தொண்டையில் எரிச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
 • உள்ளுர் வரைபடம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், வெடிப்பின்போது பாதுகாப்பாக வெளியேறும் வழிமுறைகளை அறிந்துகொள்ள ஏதுவாகும்.

செய்யக்கூடாதவை

 • எரிமலை வெடிக்கும் பகுதியில் ஆபத்து இருப்பதனால், அருகில் உள்ள பாதைகளில் செல்லல் கூடாது.
 • எரிமலைக் குழம்பைத் தொடுதல் கூடாது.
 • எரிமலை வெடிப்பினால் பீதி அடைதல் கூடாது. எரிமலையிலிருந்து சாம்பல் வெளியேறுவதையும், அடுத்து என்ன நிகழும் என்றும் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தல் கூடாது.
 • வண்டிகளை இயக்குதல் கூடாது.

சுனாமி

கடல் அடியில் நிலநடுக்கம் ஏற்படுதல், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் வீழ்கற்கள் ஆகியனவற்றின் காரணமாகக் கடலில் ஏற்படும் பேரலைக்குச் சுனாமி என்பது பெயர்.

சுனாமி என்பது ஜப்பானியப் பெயர். ஜப்பானிய மொழியில் "சு" என்றால் துறைமுகம். நாமி என்பது அலையைக் குறிக்கும். இதற்குத் துறைமுக அலை" அல்லது துறைமுகத்தைத் தாக்கி அழிக்கும் அலை எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

தாக்கம்

 • மனிதர்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படுகிறது. நாட்டின் இயற்கை வளங்கள், தொழில்நுட்பங்கள், கல்வி மூலதனம், மனித வளம் மற்றும் நிதிநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது.
 • மூழ்குதல், கட்டடங்கள் இடிதல், வாயு வெடிப்பு ஆகியன மனித உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன.
 • படகு, பாலங்கள், மரங்கள், தொலைபேசி இணைப்புகள், மின் கம்பங்கள் முதலியவை பாதிக்கப்படுகின்றன.
 • சுனாமியால் மனித உயிர்கள் மட்டுமன்றிப் பூச்சிகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன.
 • மரங்கள் வேரோடு சாய்வதால் விலங்குகளின் வாழ்விடங்கள், பறவைகளின் கூடுகள் அழிக்கப்படுகின்றன. நிலத்தில் வாழும் விலங்குகள் மூழ்கி இறக்கின்றன.
 • சுனாமியால் தொழிற்சாலைகள், கப்பல்கள், படகுகள் பாதிக்கப்படுவதால் அவற்றிலுள்ள இரசாயன நச்சுகள் கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் இறக்கின்றன.
 • பவளப்பாறைகள், சதுப்புநிலக் காடுகள் பாதிப்படைகின்றன.
 • சுனாமி நில அமைப்புகளை மாற்றுகின்றன.
 • கடல்நீர் நிலப்பகுதிக்குள் புகுவதால் ஆறுகள், கிணறுகள், ஏரிகள், நிலத்தடி நீர் முதலிய நீர் ஆதாரங்கள் உப்பு நீராக மாறுகின்றது.
 • குடிநீர்க் குழாய்களும் பாதிக்கப்பட்டுக் குடிநீர் மாசடைகிறது.
 • விவசாய நிலங்களின் வளம் பாதிக்கப்பட்டு மீண்டும் பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது.
 • அணு உலைகள் சுனாமித் தாக்குதலுக்கு உள்ளானால், கதிர் இயக்கம் மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கும்.
 • தொற்றுநோய்கள் பரவுகின்றன.
 • காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.

சுனாமி பாதிக்கும் இடங்கள்

அனைத்துக் கடலோரப் பகுதிகளும் சுனாமிப் பாதிப்புக்கு உள்ளாகின்றன. எல்லாத்தாழ்நிலைக் கடற்கரைப் பகுதிகளும் சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

செய்ய வேண்டியவை

 • சுனாமி குறித்த முன்னெச்சரிக்கையினைத் தொடர்ந்து மக்கள் உடனடியாகக் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று விட வேண்டும்.
 • கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும். * சுனாமி நேரத்தில் பெரிய கட்டடங்களுக்கு அருகில் மற்றும் பாலங்களுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்.
 • விஷ உயிரிகளிடம், குறிப்பாக இந்த நேரத்தில் பாம்புகளின் தொல்லை இருக்கலாம்; கவனமாக இருக்க வேண்டும். வண்டியில் சென்றுகொண்டிருந்தால், வண்டியை நிறுத்திவிட்டு உயரமான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
 • உயரமான இடத்திற்குச் செல்ல முடியாத இடத்தில் மாட்டிக்கொண்டுவிட்டால், உறுதியான மரங்களில் ஏறிக்கொள்ள வேண்டும்.
 • சுனாமி ஏற்பட்டால் உடனே கடலோரத்தைவிட்டு வெளியேறும்படி சாலை வசதி, போக்குவரத்துகள் இருக்க வேண்டும். மேலும், செல்லும் வழியில் எந்தத் தடைகளும் இருக்கக்கூடாது.
 • சுனாமி எச்சரிக்கை மையத்திலிருந்து வரும் தகவல்களைத் தொடர்ந்து கேட்டு அறிய வேண்டும்.
 • அவசரக்கால அலைவரிசையைத் தொடர்ந்து கேட்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 • சுனாமிக்குப் பிறகு குடிநீரைப் பரிசோதித்த பிறகே குடிக்க வேண்டும். சுனாமிக்குப் பிறகு நாம் வீட்டை அடையும்போது எரிவாயுக் கசிவு (LPG Leakage), மின்சாரக் கசிவு (Electricity Leakage) போன்றவை இல்லை என்பதை உறுதிசெய்த பின்பே வீட்டிற்குள் செல்ல வேண்டும்.

செய்யக்கூடாதவை

 • கடலோரப் பகுதிகளில் இருக்கும்போது நில நடுக்கம் ஏற்பட்டால், சுனாமி எச்சரிக்கை வரும் வரை காத்திருக்காமல் கடலோரப் பகுதியைவிட்டு வெளியேறாது இருத்தல் கூடாது.
 • சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதும் கடலோரப் பகுதியை மக்கள் வேடிக்கை பார்க்கச் செல்லல் கூடாது.
 • மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக் கூடாது.
 • தொலைபேசியைத் தேவையற்ற நேரங்களில் பயன்படுத்தல் கூடாது.
 • பயம், பதற்றம் அடைதல் கூடாது. வதந்திகளை நம்புதல், பரப்புதல் கூடாது.

புயல் (Cyclone)

புயல் என்பது, கடலில் ஏற்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அல்லது குறைந்த அழுத்த மண்டலமாகும். புயலின் மத்தியில் குறைந்த அழுத்தமும் அதனைச் சுற்றி அதிக அழுத்தமும் உருவாகியிருக்கும். கடற்பகுதியில் தோன்றும் புயலானது நிலப்பகுதியைக் கடக்கும்பொழுது வலுவிழக்கிறது.

இந்தியா, அயன மண்டலப் புயலால் பாதிக்கப்படுகிறது. தென்னிந்தியக் கடற்கரைப் பகுதிகள் மற்றப் பேரிடர்களைவிடப் புயலால் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் பெரும்சேதத்திற்கு உள்ளாகின்றன. உலகில் புயலால் பாதிக்கப்படும் 6 முக்கியப் பகுதிகளுள் இந்தியக் கடற்கரைப்  பகுதியும் ஒன்று.

தமிழ்நாட்டில் புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் 13 கடற்கரை மாவட்டங்கள் அயன மண்டலப் புயலால் பாதிக்கப்படுகின்றன. இப்புயல் மே-ஜூன் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வீசுகிறது அம்மாவட்டங்கள் வருமாறு:

 • திருவள்ளூர்
 • சென்னை
 • காஞ்சிபுரம்
 • விழுப்புரம்
 • கடலூர்
 • நாகப்பட்டினம்
 • திருவாரூர்
 • தஞ்சாவூர்
 • புதுக்கோட்டை
 • இராமநாதபுரம்
 • தூத்துக்குடி
 • திருநெல்வேலி
 • கன்னியாகுமரி

புயலின் தாக்கம்

புயல் எப்பொழுதும் பலத்த காற்றுடன் பெருமழையை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக,

 1. மரங்கள் சாய்தல்
 2. வடிகால் பாதித்தல்
 3. மின்சாரத் துண்டிப்பு
 4. நீர் தேங்குதல்
 5. நோய்கள் பரவுதல்
 6. பயிர்கள் அழிதல்
 7. மண் அரிப்பு
 8. கட்டடங்கள் சிதைவடைதல் மற்றும்
 9. உயிர்ச்சேதங்கள், பொருட்சேதங்கள் முதலியன ஏற்படுகின்றன. புயலின் பாதிப்பால் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான மக்கள் உயிரிழக்கின்றனர்.

புயல் வருவதற்குமுன் செய்ய வேண்டியவை

 • தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
 • பழைய கட்டடங்களில் வசிப்பவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
 • உடைமைகள், ஆவணங்கள் மற்றும் அணிகலன்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
 • பேட்டரியால் இயங்கும் வானொலிப் பெட்டி, பிளாஸ்டிக் டார்ச் விளக்கு, மண்ணெண்ணெய் விளக்கு முதலியவற்றைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும்
 • முதலுதவிச் சாதனங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
 • குறைந்தது ஏழு நாளுக்குத் தேவையான உணவுப் பொருள், எரிபொருள், குடிநீர், உயிர்காக்கும் மருந்து முதலியவற்றைச் சேமித்தல் வேண்டும். மேலும் கால்நடைகள், செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்தல் வேண்டும்.

செய்யக்கூடாதவை

 • புயல் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்துதல் கூடாது.
 • புயல் எச்சரிக்கை விடுத்தபின், அவ்வப்போது திறந்தவெளியில் நின்று வேடிக்கை பார்த்தல்  கூடாது.

செய்திகளில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது என்றும், ஒவ்வொருமுறையும் ஒவ்வோர் எண் சொல்கிறார்கள் அல்லவா ? அதன் விளக்கம்தான் என்ன ?

பொதுமக்களுக்குப் புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அவற்றுக்கான குறியீடுகள் குறித்த விளங்கங்களையும் பார்க்கலாம்.

குறிப்பு: தொலைதொடர்பு வசதிகள் பற்றிய அறிவு மக்களுக்கு இல்லாத காலத்திலேயே வழிகாட்ட கலங்கரை விளக்கமும், எச்சரிக்கை கூண்டுகளையும் வைத்தே மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

புயல் வீசும்பொழுது செய்ய வேண்டியவை

 • வீட்டிற்குள் அமைதியாக இருத்தல் வேண்டும்.
 • மின் பொருள்களையும், சாதனங்களையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.
 • வண்டியில் பயணிக்கும்பொழுது வண்டியைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு வண்டிக்குள்ளேயே இருக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை

 • மேல் தளத்தில் இருத்தல் கூடாது.
 • கைப்பேசி / தொலைபேசியைப் பயன்படுத்துதல் கூடாது.
 • பழுதடைந்த கட்டடங்கள், பாலங்கள் மற்றும் மரங்களுக்குக் கீழ் நிற்றல் கூடாது.
 • கதவுகள், ஜன்னல்களின் அருகில் இருத்தல் கூடாது.
 • மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லல் கூடாது.

புயலுக்குப் பின் செய்ய வேண்டியவை

 • நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீர் வடிய தற்காலிகக் கால்வாய் அமைக்க வேண்டும்.
 • நோய்ப் பரவலைத் தடுப்பதற்காகக் கொதிக்க வைத்த நீரையே பருக வேண்டும்.
 • புயலில் சிக்கியவர்களுக்கு உடனடி முதலுதவியும், மருத்துவச் சிகிச்சையும் அளிக்க வேண்டும்.
 • உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் சொல்லப்படும் குறிப்புகளைக் கவனிக்க வேண்டும்.
 • தொங்கும் பலகைகள், இரும்புக் கம்பிகள் ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும்.
 • புயல் அபாயம் முற்றிலும் நீங்கிவிட்டதை உறுதிசெய்த பின்னரே வெளியில் வர வேண்டும்.

செய்யக்கூடாதவை

 • சுற்றுப்பயணம் செல்லுதல் கூடாது.
 • தொங்கிக் கொண்டிருக்கும் அல்லது தரையில் கிடக்கும் மின்சாரக் கம்பிகளைத் தொடுதல் கூடாது.

வெள்ளப் பெருக்கு (Flood)

அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு’ என்கிறோம். அதிக மழைப்பொழிவு, புயல், பனி உருகுதல், சுனாமி மற்றும் அணைக்கட்டுகள் உடைதல் ஆகிய காரணங்களால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் இடங்கள்

தென்மேற்குப் பருவக் காலங்களில் மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும், வடகிழக்குப் பருவக் காலங்களில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில்

 • சென்னை,
 • திருவள்ளூர்,
 • காஞ்சிபுரம்,
 • கடலூர்,
 • நாகப்பட்டினம்,
 • திருவாரூர்,
 • தஞ்சை,
 • திருச்சி

ஆகிய மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் சுமார் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்தியாவில் மொத்தம் 175 வெள்ள முன்னறிவிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

வெள்ளப் பெருக்கின் தாக்கம்

 • கழிவுநீர் வடிகால் அமைப்பு அழிக்கப்படுதல்
 • நீர் மாசுபடுதல்
 • மண் அரிப்பு ஏற்படுதல்
 • வண்டல் படிதல்
 • நீர் தேங்குதல் வேளாண்மை நிலங்கள் மற்றும் கால்நடைகள் அழிக்கப்படுதல் உயிர்ச்சேதங்கள் ஏற்படுதல்
 • தொற்றுநோய் பரவுதல்

வெள்ளப்பெருக்குக் காலம் தொடங்குவதற்குமுன் செய்ய வேண்டியவை

 • வசிக்கும் பகுதி வெள்ளத்திற்கு உட்பட நன்மை கொண்டதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
 • வெள்ளத்திற்கு உட்படுமாயின், இனிவரும் காலங்களில் கட்டடம் கட்ட / வீடு கட்ட மாற்றுப் பொருள்கள் பயன்படுத்த வேண்டும்.
 • எடுத்துச் செல்லத்தக்க (Ham) வானொலிப் பெட்டி, உலர் மின்கல கைவிளக்கு (Torch) மற்றும் கூடுதல் பேட்டரிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
 • குடிநீர், உலர் உணவு வகைகள், உப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சேமித்து வைக்க வேண்டும்.
 • மண்ணெண்ணெய், மெழுகுவத்தி, தீப்பெட்டி மற்றும் துணிகளையும், மதிப்புமிக்க பொருள்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நீர் புகாத பைகளைப் பயன்படுத்த வேண்டும்.
 • குடை மற்றும் மூங்கில் கொம்பு ஒன்றை வைத்திருக்க வேண்டும். முதலுதவிப் பெட்டி மற்றும் பொருள்களைக் கட்டுவதற்குத் திடமான கயிறு ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
 • வேளாண்மை நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் வழிந்தோடக் கால்வாய்கள் வெட்ட வேண்டும்.
 • ஆற்றின் கரைகளை உயர்த்த வேண்டும். குறிப்பாகக் குளங்கள் மற்றும் ஏரிகளைத் தூர் வாருதல் வேண்டும்.
 • தாழ்வான பகுதியில் அமைந்துள்ள கட்டடங்களுக்குள் நீர் உட்புகாமல் இருக்க, மணல் மூட்டைகளை நுழைவுப் பகுதியில் வைக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், கால்நடைகளுடன் உயரமான பகுதிகளுக்கு இடம் பெயர்தல் வேண்டும்.
 • வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டால் மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் எனப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • பயிர்ப் பாதுகாப்புத்திட்டம் (Crop insurance) தொடர்பான அறிவை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.
 • பேரிடர் மீட்புக் குழுவின் தொலைபேசி எண்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை

 • வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையை அலட்சியப்படுத்துதல் கூடாது. வெள்ளப்பெருக்குக் காலத்தில் சுற்றுப் பயணம் செல்லுதல் கூடாது. வெள்ளத்தில் நீந்த முயற்சி செய்தல் கூடாது.
 • வண்டிகளை இயக்குதல் கூடாது.
 • துண்டித்த மின்சாரத்தை உடனே இணைத்தல் கூடாது.

வெள்ளப்பெருக்கின்போது செய்யவேண்டியவை

 • மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும்.
 • வீட்டிலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டாலோ, வீட்டிலேயே தங்கியிருந்தாலோ, கழிப்பிடத் துளை மீதும், குளியலறை / துணி துவைக்கும் அறையின் கழிவுநீர் வெளியேறும் துளை மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
 • பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் விரைந்து வெளியேற வேண்டும்.
 • குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.
 • Beaching Powder கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
 • உணவுப் பொருள்களை நன்கு மூடி வைக்க வேண்டும்.
 • சமையல் எரிவாயுக் கசிவு ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே தீக்குச்சிகள், மெழுகுவத்தி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

செய்யக்கூடாதவை

 • காட்டாற்று வெள்ளத்தின்போது தரைப் பாலத்தைப் பயன்படுத்துதல் கூடாது.
 • வயிற்றுப்போக்கு இருந்தால் அதிக உணவை உட்கொள்ளல் கூடாது.
 • வெள்ளத்தில் ஏதேனும் பொருள்கள் மிதந்து சென்றால், அவற்றை எடுக்க முயற்சி செய்தல் கூடாது.

வறட்சி (Drought)

மழைப்பொழிவு இன்மையால் நீண்ட காலமாக நிலவும் வறண்ட காலநிலையை வறட்சி’ என்கிறோம். வறட்சியின் தன்மையானது ஈரத்தன்மைக் குறைவு, கால அளவு, பாதிக்கப்பட்ட பகுதி ஆகியவற்றைப் பொருத்துள்ளது.

தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்கள் வறட்சியால் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. அவை:

1. இராமநாதபுரம்

2. புதுக்கோட்டை

3. சிவகங்கை

4. விழுப்புரம்

தாக்கம்

 • குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படுதல் மனிதர்கள், கால்நடைகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் பெருமளவில் பாதிக்கப்படுதல்
 • வேளாண்மை பாதிக்கப்படுதல்
 • வேளாண்மை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்படுதல்
 • நீர்மின்உற்பத்தி குறைதல்
 • தொழிற்சாலைகள் முடங்குதல்
 • பஞ்சம், பட்டினி ஏற்படுதல்
 • ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுதல்
 • இறப்பு விகிதம் அதிகரித்தல்
 • அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அழிந்துபோதல்
 • மக்கள் இடம் பெயர்தல்
 • காடுகள் அழிதல்
 • வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு, மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு வந்து அச்சுறுத்துதல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 • நீர் வடிப்பகுதி மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ளுதல்
 • தாவரத் தடுப்புகள் அமைத்தல்
 • ஓடைத் தடுப்புகள் அமைத்தல்
 • பண்ணைக் குட்டைகள் ஏற்படுத்துதல்
 • மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு
 • தொடர்குழி அமைத்தல் பழமரக் கன்றுகள் வளர்த்தல் வேளாண்காடுகள் வளர்த்தல் தீவனப் பயிர் மேம்பாடு செய்தல் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் நீர் வீணாக வழிந்தோடுதலைத் தவிர்த்தல்
 • கால்வாய் சீரமைத்தல்
 • ஏற்கெனவே உள்ள அமைப்புகளைச் சீரமைத்தல்
 • சொட்டு நீர்ப்பாசன முறையைப் பின்பற்றுதல் கலப்புப் பயிர் வேளாண்மை செய்தல் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துதல்
 • கடல்நீரைச் சுத்தப்படுத்தி வேளாண்மைக்குப் பயன்படுத்துதல்
 • கழிவுநீரை மறுசுழற்சிக்கு உட்படுத்தி வேளாண்மைக்குப் பயன்படுத்துதல்
 • வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர்களைப் பயிரிடுதல்
 • பொது நிலங்களில் உள்ள தடுப்பணை, ஊருணி மற்றும் குளத்தைத் தூர் வாருதல
 • நீர் அதிகம் உறிஞ்சும் தாவரங்களை அப்புறப்படுத்துதல் (எடு-வேலிகாத்தான், கருவேலமரம், தைலமரம்)

நிலச்சரிவு

புவிஈர்ப்பு விசையினால் உயரமான சரிவு மிகுந்த பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி நிலத்தின் மேற்பகுதியில் உள்ள மண், சேறு, கற்கள், பாறைகள் முதலியவை நகருகின்றன. இவை பெரும்பாலும் அதிகமான மழைப்பொழிவு, தொடர்ச்சியான மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், எரிமலை போன்றவற்றுடன் இணைந்து நடக்கும்.

நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும், தவிர்க்கவும் இயலாது. ஆனால், நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையால் அதன் தாக்கத்தைக் குறைக்க இயலும்.

நிலச்சரிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

 • நிலையற்ற நில அமைப்பு
 • கனத்த மழை மற்றும் திடீர் வெள்ளம்
 • நீர் தேங்குதல் மற்றும் நீர்க்கசிவு ஏற்படுதல்
 • தொடர் படிவுகள் (மண், குப்பையும் கூளங்களும், இன்னபிற. )
 • நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு
 • காடுகளின்அழிவு
 • நகரமயமாதல்
 • சரிவுகளில் சாலைகள் அமைத்தல்

நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள்

 • இமயமலைப் பகுதிகள்
 • நீலகிரி மலைக்குன்று - மிகக் கடுமையான ஆபத்து மண்டலம்
 • மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதை
 • கொடைக்கானல், கோத்தகிரி, வால்பாறை
 • கொல்லிமலை, பச்சமலை, சேர்வராயன் மலை (தமிழ்நாட்டில் நீலகிரி தவிரப் பிற பகுதிகள் மிதமான, குறைந்த ஆபத்து மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன)

நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு செய்ய வேண்டியவை

 • நிலச்சரிவு பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
 • முன்னெச்சரிக்கை நிலைகளைத் தயார்படுத்த வேண்டும்.
 • நிலச்சரிவுத் தடுப்புத்திட்டம் தயார் செய்தல் வேண்டும்.
 • நிலச்சரிவு ஏற்படும் பகுதியில் பாதுகாப்புச் சுவரை ஏற்படுத்துதல் வேண்டும்.
 • உகந்த வடிகால் வசதி ஏற்படுத்துதல் வேண்டும்.
 • மலைச்சரிவுப் பகுதிகளில் படிக்கட்டு விவசாயம் மேற்கொள்ள வேண்டும்.
 • நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் ஆழமாக வேரூன்றக்கூடிய மரங்களை நட வேண்டும்.
 • வீடுகளைச் சுற்றி மண், கற்கள் விலகிச்செல்ல ஏதுவாக மாற்றுப்பாதை அமைத்தல் வேண்டும்.

நிலச்சரிவின்போது செய்ய வேண்டியவை

 • மண்சரிவு ஏற்பட்டுத் தெருக்கள் அடைக்கப்பட்டால் உடனடியாகத் தப்பிப்பதற்கு இரண்டு, மூன்று மாற்றுவழிகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக வெளியேறுதல் வேண்டும்.
 • நிலச்சரிவினால் வீடு சேதமடையும்நிலை ஏற்பட்டால் உறுதியான மேசை, கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கிக் கொள்ளவேண்டும்.
 • மெதுவாகச் சரியும் நிலச்சரிவில் மாட்டிக்கொண்டால், தலைமீது கைவைத்து உடலைப் பந்துபோல் சுருட்டிக்கொள்ள வேண்டும்.
 • நிலச்சரிவு ஏற்படும் பகுதியில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டும்.
 • உடனடி மீட்புப் பணிக்காகத் தீயணைப்பு, காவல்துறை மற்றும் மருத்துவத் துறைகளுக்குத் தெரிவிக்கவேண்டும்.

செய்யக்கூடாதவை

 • நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் வீடுகளைக் கட்டுதல் கூடாது. மரங்களை வெட்டுதல் கூடாது.
 • நிலச்சரிவுப் பகுதியிலிருந்து அவசரமாக வெளியேறும்போது அதிக உடைமைகளை எடுத்துச் செல்லுதல் கூடாது.
 • வீட்டிலுள்ள மின்சாரத்தை, எரிவாயுவைப் பயன்படுத்துதல், கதவு, சன்னல்களைத் திறத்தல் கூடாது.
 • தாழ்வான, பாதுகாப்பற்ற பகுதிக்குச் செல்லுதல் கூடாது.
 • நிலச்சரிவு ஏற்படும் பகுதிக்குச் செல்லுதல் கூடாது.
 • தவறான தகவல்களைக் கொடுத்தல் மற்றும் வதந்திகளை நம்புதல் கூடாது.
 • கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பகுதிக்குச் செல்வதற்குச் சாலை வழியைப் பயன்படுத்துதல் கூடாது.

பனிச்சரிவு (Avalanche)

நீரின் வெப்பநிலை 0° செல்சியசைவிடக் குறையும்போது, நீர் பணிக்கட்டியாக மாறுகிறது. உயர்ந்த மலைப்பகுதி மற்றும் உயர் அட்சப்பகுதியில் வளிமண்டலத்தில் உள்ள நீர்த்திவலைகள் குளிர்ந்து பணிப்பொழிவு ஏற்பட்டுப் பணிப்படிவுகளாகப் படர்ந்திருக்கும். சாய்வும் சரிவுமாக உள்ள மலைப்பகுதிகளில் படர்ந்திருக்கும் பணிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகள் சரிவது பணிச்சரிவு என அழைக்கப்படுகிறது.

பணிச்சரிவு ஏற்படுவதற்கான காரணங்கள்:

 • சரிவான நிலஅமைப்பு
 • பனி அடுக்குகளின் கட்டமைப்பு
 • பனி உருகுதல்
 • எரிமலை வெடிப்பு செயற்கையானஅதிர்வுகள்
 • துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு)
 • தாவரங்களைஅகற்றுதல்
 • பணிச்சறுக்கு விளையாட்டு
 • மழைப்பொழிவு போன்றவை

இந்தியாவில் பணிச்சரிவு ஏற்படும் மாநிலங்கள்

 1. ஜம்மு - காஷ்மீர்
 2. சிக்கிம்
 3. அருணாச்சலப் பிரதேசம்
 4. இமாச்சலப் பிரதேசம்
 5. உத்தரகாண்ட்

தாககம்

 • பனிச்சரிவு மனிதர்களை, விலங்குகளை இழுத்துச்சென்று புதைத்து மரணத்தை ஏற்படுத்துகிறது.
 • வண்டிகள் மற்றும் சிறிய வீடுகள் புதைபடுவதுடன், மரம் மற்றும் அதன் கிளைகள் முரிந்து சாய்க்கப்படுகின்றன.
 • போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் காடுகள் போன்றவை புதைகின்றன.
 • பணிச்சரிவு போக்குவரத்தைப் பாதிக்கிறது.
 • வேளாண் பகுதிகளிலுள்ள பயிர் மற்றும் தாவரங்களை இழுத்துச் செல்வதோடு மண் அரிப்பை ஏற்படுத்தி மண்ணின் வளத்தைக் குறைக்கிறது.

பணிச்சரிவுப் பகுதியில் செய்ய வேண்டியவை

 • பணிச்சரிவு ஏற்படும் பகுதியின் பருவம், நேரம் தெரிந்துகொள்ள வேண்டும்.
 • நீரின் உறைநிலையைவிட வெப்பநிலை உயரும்போது, பனிச்சரிவுப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும்.
 • பனிச்சரிவுப் பகுதிகளில் கட்டடங்கள் பனிச்சரிவு நகர்வு உயரத்திற்குமேல் தூண்களை நிறுத்திக் கட்ட வேண்டும்.
 • பனிச்சரிவு உள்ள பகுதிகளில் விரைவாக இடர்ப்பாடுகளைப் பற்றிய விசாரணை, தகவல் தொடர்புச் சாதனம் மூலம் மேற்கொள்ள வேண்டும். கட்டடங்கள், சாலைகள் அமைக்கும்போது நைலான், இரும்பு வலைகளைப் பயன்படுத்திக் கட்ட வேண்டும்.
 • தடுப்புச் சுவர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • பனிச்சரிவுப் பகுதியில் சாலையில் உள்ள பனியை முற்றிலும் அகற்றிவிட்டுப் போக்குவரத்தை மேற்கொள்ளுதல் வேண்டும்.
 • பணிச்சரிவு ஏற்படும்போது பனிச்சரிவு இல்லாத உயரமான இடத்திற்கு விரைவாகச் செல்ல வேண்டும்.
 • தரைத்தளக் கட்டடங்களின் கதவு, சன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
 • தேவைப்படும் நேரங்களில் காவல்துறை, தீயணைப்புத் துறை, இராணுவம் மற்றும் மருத்துவத்துறை போன்றவற்றை உதவிக்கு அழைத்தல் வேண்டும்.
 • பணிச்சரிவு நிகழ்ந்த பகுதியில் மீண்டும் பணிச்சரிவு வர வாய்ப்புள்ளதால், மீட்புப் பணியைப் பாதுகாப்பாக மேற்கொள்ளுதல் வேண்டும்.

பணிச்சரிவுப் பகுதியில் செய்யக் கூடாதவை

 • உலக வெப்பமயமாதலை ஏற்படுத்தக்கூடிய செயல்களை மேற்கொள்ளுதல் கூடாது.
 • கோடைக்காலம், அதிகப் பணிப்பொழிவு, பனிப்புயல் போன்றவை நிகழும்போது பணிச்சரிவுப் பகுதிக்குச் செல்லுதல் கூடாது.
 • பனிச்சரிவு நிகழும் காலங்களில் விவசாயம் மேற்கொள்ளுதல் கூடாது.
 • பணிச்சரிவு உள்ள பகுதியில் பணிச்சறுக்கு விளையாட்டு மேற்கொள்ளுதல் கூடாது.
 • வீட்டின் கூரை சமதளமாக இருத்தல் கூடாது.

மின்னல் மற்றும் இடி (Lingtning and Thunder)

மின்னல்

மின்னல் என்பது, வளிமண்டலத்தில் ஏற்படும் அயனிகளின் உராய்வு காரணமாக ஏற்படும் ஒளியாகும். இவ்வொளியை அடுத்துப் பெரிய சத்தத்தையும் நம்மால் கேட்க இயலும். மின்னல், ஒரு மேகமும் இன்னொரு மேகமும் உராயும்போதும், மோதும் போதும் ஏற்படுகிறது. இத்தகைய மின்னலும் இடியும் மழைதரும் வகை (cumulonimbus) மேகங்களுக்குள் ஏற்படுகிறது.

இடி

இடி என்பது மின்னல் அலைகளால் அதிர்வுகள் ஏற்பட்டு மின்னல் வந்த பிறகு சத்தத்துடன் கேட்க முடிகிற ஓர் இயற்கை நிகழ்வாகும். மின்னல் வரும்பொழுது ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி, அது கீழே இறங்கும்போது சத்தத்தை உண்டாக்குகிறது.

மின்னல்களின் வகைகள்

 • ஒரு மேகத்திற்குள் உருவாகும் மின்னல் : மின்னல் மேகத்தினுள் ஏற்படுகிறது.
 • ஒரு மேகத்திற்கும் மற்றொரு மேகத்திற்கும் இடையில் உருவாகும் மின்னல் : மின்னல், ஒரு மேகமும் இன்னொரு மேகமும் உராயும்போதும், மோதும் போதும் ஏற்படுகிறது.
 • மேகத்திற்கும் புவிப்பகுதிக்கும் இடையில் உருவாகும் மின்னல் : மேகத்திலிருந்து மின்னலானது புவியை நோக்கி வந்து தாக்குகின்றது. இம்மூன்று வகையைத் தவிர, மேலும் பல வகைகளில் மின்னல் தாக்குதல்கள் ஏற்படுகின்றன.
 • முத்துக்களைக் கோத்துத் தொங்குகின்ற தோற்றமுடைய மின்னல் : இவை மேகத்திலிருந்து புவி நோக்கி வருகின்ற மின்னல்
 • பந்து போன்ற தோற்றமுடைய மின்னல் : மின்னல் இடியோடு பந்து போன்ற அமைப்புடன் புவியை வந்து அடையும்.

தாக்கம்

மின்னல் ஏற்படுகிற பகுதியில் காற்றின் வெப்பம் மிகுந்து காணப்படுகிறது. சுமார் 9982222”c ஆக இருக்கும். மின்னல் நம்மை நேரடியாகத் தாக்கும் தன்மை உடையது. உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. மனிதனுக்கு அருகில் உள்ள எந்தப் பொருளையும் தாக்க வல்லது. பின்பு வெளிச்சம் வந்து தரையினைத் தாக்கி, நெருப்பை ஏற்படுத்துகிறது.

மின்னல் மற்றும் இடி வரும்பொழுது செய்ய வேண்டியவை

 • முதலில் பாதுகாப்பான இடம்தேடி ஒதுங்க வேண்டும்.
 • பாதுகாப்பான இடம் இல்லையெனில், குத்துக்காலிட்டு அமர்ந்து பாதங்களை நெருக்கமாக வைத்துக் கொண்டு உடலில் உள்ள உலோகப் பொருள்களை நீக்க வேண்டும்.
 • வண்டிகளில் சென்றுகொண்டு இருந்தால் வேகத்தைக் குறைக்க வேண்டும். மரங்களுக்கு அடியிலோ, மின்சாரக் கம்பிக்கு அடியிலோ செல்லாமல் நல்ல மேற்கூரை உள்ள இடத்தில் ஒதுங்க வேண்டும்.
 • நீரில் நீந்திக்கொண்டிருந்தால் உடனே வெளியேற வேண்டும்.
 • படகில் இருந்தால், கரையிலுள்ள கூடாரத்திற்கு எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்லுதல் வேண்டும். கதவுகளை மூடிவிட்டுச் சன்னல் திரைகளை இறக்கவேண்டும்.
 • வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளில் இணைக்கப்பட்டிருக்கும் மின்சார இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும்.
 • கணினித் தொடர்பையும் துண்டிக்க வேண்டும்.
 • தொலைபேசியைப் பயன்படுத்தும்பொழுது அவசரத்திற்குச் சுருக்கமாகப் பேச வேண்டும்.

செய்யக் கூடாதவை

 • செயற்கை இழைக் கூடாரங்களை அமைத்தல் கூடாது.
 • மரத்தின் அடியில் ஒதுங்குதல் கூடாது.
 • தரையில் படுத்தல் கூடாது.
 • உயரமான பகுதியில் ஏறிநிற்றல் கூடாது.
 • குடைகளைப் பயன்படுத்துதல் கூடாது.
 • பட்டம் விடுதல் கூடாது.
 • மீன் பிடிக்கும் உலோகக் கம்பிகளைப் பயன்படுத்துதல் கூடாது.
 • பெரிய உலோகக் கம்பங்கள், வேலிகள், துணி உலர்த்தும் கம்பிகளுக்கு அருகில் செல்லுதல் கூடாது.
 • மிதிவண்டிகளிலும் திறந்த வண்டிகளிலும் செல்லுதல் கூடாது.
 • அலைபேசியைப் பயன்படுத்துதல் கூடாது.
 • குளியல், ஷவர் அல்லது மற்ற மின்சாரச் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
 • வெற்றுத்தரைகளில் வெறும் கால்களோடு நிற்கக் கூடாது.

ஆதாரம் : தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை

3.03883495146
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top