பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை

தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இயற்கைப் பேராபத்துகளான நிலநடுக்கம், நிலச்சரிவு, சூறாவளி, வெள்ளம் மற்றும் சுனாமி போன்றவை இயற்கை இடர்பாடுகளால் நிகழ்கின்றன. ஒரு பகுதியில் மக்களால் தமது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத நிலைக்கு கொண்டு செல்லும் நிகழ்வு ஏற்படுமாயின் அது பேரிடர் எனப்படும். திட்டமிடுதலில் குறைபாடு சரியான முன்னேற்பாடு இன்மை. முறையான நெருக்கடி கால மேலாண்மையின்மை இவற்றால் மனிதர்கள், விலங்குகள், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றிற்கு பேரழிவு உண்டாகிறது. இந்த இயற்கைப் பேரழிவை, அதன் தாக்கத்தை சரியான முன்னேற்பாடுகள் மற்றும் பேராபத்து ஏற்படும்பொழுது தக்க சமயத்தில் விரைந்து உதவுவதன் மூலம் சரிசெய்யலாம் மேலும் அதன் தாக்கத்தையும் குறைக்க இயலும்.

அமைப்பு

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு 1300582 கிமீ ஆகும். அதன் கடற்கரைப் பகுதியின் நீளம் 1076 கிமீ. இது இந்தியாவின் மொத்த கடற்கரை நீளத்தில் 15 சதவிகிதம் ஆகும். கடற்கரைப் பகுதியில் வசிப்பவர்களில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக மீனவர்கள் . கடலிலிருந்து 1 கிமீ தூரத்திற்குள்ளும் 50 சதவிகிதத்திற்கு மேற்பட்டோரும் 2 கி.மீ தூரத்திற்குள்ளும் வசிக்கின்றனர்.

தமிழ்நாடு இயற்கையிலேயே சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் சுனாமி ஆகியவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகும் நிலவமைப்பைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் 8 சதவிகிதம் நிலப்பரப்பு ஓர் ஆண்டு காலத்தில் 5 முதல் 6 சூறாவளிகளால் பாதிக்கப்படுகிறது. சூறாவளி மற்றும் புயலின் தாக்கம் தமிழ்நாட்டின கிழக்குக் கடற்கரை பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் இதன் தாக்கம் அக்டோபர் நவம்பர் மாதங்களில் மிக அதிகளவாக உள்ளது.

பேரிடர்கள்

தமிழ்நாடானது பருவ மழைக்காலங்களில் பெரும் வெள்ளத்தையும், மேக வெடிப்பு மழையையும், சூறாவளி மற்றும் புயல் மழையால் ஏரிகள், அணைகள் உடைதல் போன்ற பிரச்சினைகளையும் சந்திக்கிறது. இதனால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெருமளவு உயிர் இழப்புகளும் ஏற்பட நேரிடு கிறது. நிலநடுக்கத்தால் உண்டாகும் சுனாமி பாதிப்புகளும் இதுனுள் அடங்கும். 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இதற்கு உதாரணமாகிறது. இச்சுனாமியால் கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள், பறவைகள், மீன்கள், வனவிலங்கினங்கள், மக்களின் இருப்பிடங்கள் ஆகியவை பெருமளவு பாதிக்கப்படுகிறது. பவளப்பாறைகள், மாங்குரோவ் காடுகள் போன்றவை தென் இந்தியாவில் பெரிய சேதத்திற்கு உள்ளாயின. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பின்னடைவும் ஏற்பட்டது. எரிபொருள், மின்சாரம் தொலைதொடர்பு முழுவதுமாக பாதிப்புக்கு உள்ளானது. இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளால் மனிதர்கள், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் மீது பெருமளவு தாக்கத்தை உளவியல் ரீதியாக உண்டாக்குகிறது.

பேரிடர்க்கான காரணிகள்

இயற்கை மற்றும் மனிதக் காரணிகளால் தூண்டப்பட்டும், புவிக்காலநிலை மாற்றம், இடத்தியல்பின் அம்சங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், மக்கள் தொகைப் பெருக்கம், நகரமயமாதல், தொழில்மயமாதல் மற்றும் நவீன அறிவியல் கருவிகள் உண்டாக்கும் மாசுபாடு போன்றவற்றாலும் பேரிடர்கள் உண்டாகின்றன. தொடர்ச்சியான பேரழிவு மற்றும் பாதிப்புகளால் அதிக அளவில் மனித உயிரிழப்பும் பொருளாதார இழப்பும், முன்னேற்ற தடையும் ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாறுபாடுகள் மற்றும் அதில் ஏற்படும் வேறுபாடுகள் ஆகியவை பேரழிவின் தாக்கத்தை அதிகமாக்குகிறது. இந்தியாவின் தென்பகுதியில் சுனாமிவந்தபோது கடற்கரை பகுதியில் வாழ்ந்த மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகினர். இம்மக்கள் சுனாமியால் ஏற்படும் பாதிப்பை மட்டுமல்லாது சூறாவளி, வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் சந்திக்க நேரிட்டது. மலைப்பகுதியில் வசிக்கும் மக்களோ நிலச்சரிவு, நில நடுக்கம், காட்டாற்று வெள்ளம் போன்ற இயற்கையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

பேரிடர் மேலாண்மைத் துறை

தற்காலத்தில் பேரிடர் மேலாண்மைத் துறையில் பெருமளவு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. அதாவது பேராபத்தின் போது மீட்டெடுப்பது. பொருளுதவி வழங்குவது மறுவாழ்வு அளித்தல் என்பதுடன், இப்பொழுது பேரிடர் மேலாண்மையில் முன்பாதுகாப்பு நடவடிக்கைகள் சேதத்தைக் குறைத்தல், தயார் நிலையில் இருத்தல் என்ற அம்சங்கள் இணைக்கப்பட்டு பேரிடர்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. பேரிடர் மேலாண்மையின் தரத்தையும், திறனையும் அதிகரிக்கும் பொருட்டு தேவான அடிப்படை வசதிகள், மனிதவள மேம்பாடு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் வருவாய், நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தனிப்பு துறையானது கொண்டுள்ளது. பேராபத்து மற்றும் அவசர சூழ்நிலையைச் சமாளிக்கவும், அவற்றைச் சரியான முறையில் எதிர்கொள்ளவும் அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. வருவாய் நிர்வாக ஆணையரின் கட்டுப்பாட்டில் பேரிடர் மேலாண்மைத் துறை செயல்பட்டு வருகிறது.

இந்தத் துறையானது முன் தயாரிப்பு உடனடிச் செயல்பாடு மற்றும் துயர்தணித்தல் எனுமாறு உறுதியான பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்பை நாட்டில் ஏற்படுத்த உதவுகிறது. ‘அரசின் கலை’ என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அவசர கால நிலையின் போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்ததுல், தேவையான உதவி, வசதிகளைப் பெறுதல் மேலும் மாநில மாவட்ட அளவில் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருத்தல் - போன்றவற்றிற்கான செயல் வடிவத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெருக்கடி காலத்தில் மேற்கொள்ள வெண்டிய நடவடிக்கைகள் பல்வேறு வகையான பேரிடர்கள், மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக பயிற்சிகள் வருவாய் மற்றும் நிர்வாகத் துறையினருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் துறையானது தொடர்ந்து பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, அவசியம், எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றை மக்களுக்குப் பயிற்றுவித்து வருகிறது. மாநில அளவிலும் பேரிடர் மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டு அதன் தலைவராக முதலமைச்சர் இருக்கிறார்.

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அதன் தலைவராக இருக்கிறார். மேலும், அவர் அனைத்து வள ஆதாரங்களையும் பயன்படுத்துக்கொள்ளவும் நிதி தேவைப்படின் அதனைப் பொது நிதியில் இருந்து எடுக்கும் அதிகாரமும் பெற்றுள்ளார். பேரிடர் ஏற்படும் பொழுது காவல், தீயணைப்புத்துறை பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம் என அனைத்து துறைகளும் ஒன்றிணைக்கப்பட்டு கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுகின்றன.

இது தவிர உள்ளாட்சி அமைப்புகளும் அரசு சாரா அமைப்புகளும் பேரிடர் காலங்களில் முக்கியப் பங்காற்றுகின்றன. பேரிடர்கள் ஏற்படும் சமயத்திலும் அதன் பின்னும் இந்த துறையானது அனைத்து வகையிலும் மக்களுக்கு உதவுகிறது. பின்னர் மறுசீரமைப்பிற்கு முறைப்படி படிப்படியாக உதவிகள் செய்கிறது.

காலத்திற்கு ஏற்ப பேரிடர் மேலாண்மைக்கான திட்டங்களை தயாரித்தல்

மாவட்ட அளவில் அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டு சிறந்த அளவில் செயல்பட, காலத்திற்கு ஏற்ப மேலாண்மைத் திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும். புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் முன் ஏற்கனவே பேரிடர்கள் ஏற்படுத்திய தாக்கங்களை ஆய்வு செய்து குறைபாடுகள் களையப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை ஒத்திகைகள் நடத்தப்பட்டு இக்குழு தயார் நிலையில் இருக்கிறது.

மாவட்ட மாநில அளவில் பேரிடர் நிவாரண மையங்களை மேம்படுத்துதல் :

இம்மையங்களின் முக்கியத்துவம் உணர்ந்து இதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் (கட்டிடமைப்பு உள்பட) வழங்கப்பட்டு பேரிடர் மேலாண்மை செயல்களுக்கு அதிக ஊக்கமும், ஆதரவும் அரசினால் வழங்கப்படுகிறது. போக்குவரத்து, தொலைத்தொடர்பு, அலுவலகத் தேவைகள் உடனுக்குடன் அமைப்புகளுக்கு வழங்கக்கோரியும் இதன் மூலம் சிறந்த முறையில் பேரிடர்களின் தாக்கங்களைக் குறைக்க இயலும் என்பதை அறிந்தும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் மாநில அளவில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான அவசரப்படையை உருவாக்கக் கோரியும் பேரிடர் மீட்புப் பயிற்சிகள் மக்களுக்கு அப்படைகளாலேயே வழங்கப்படும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு, அரசினால் அது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவசர நிலையை எதிர்கொள்வதில் மருத்துவமனைகளின் பங்கு

இந்தப் பேரிடர் மேலாண்மையில் மருத்துவமனைகளின் பங்கு இன்றியமையாதது ஆகும். இதனை வலுப்படுத்துவதின் மூலம் பேரிடரால் ஏற்படும் தாக்கத்தை மிகப்பெரிய அளவில் குறைக்க இயலும். அதற்காக ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இதற்கான முயற்சியானது பேரிடர் மேலாண்மைக் குழுவால் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

மாநில அளவில் பயிற்சி திட்டங்களில் முன்னேற்றம் கொண்டு வருதல் :

மாநில அளவில் அரசுத்துறையானது பேரிடர் மேலாண்மைக்கென பல பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதிகாரிகள், பணியாளர்களுக்கு இத்துறையில் நன்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பேரிடர் குறித்த அவர்களுடைய புரிதலை விசாலமாக்க அவர்களுக்கு விவசாயம், கிராமப்புற மேம்பாடு, சென்னை மாநகராட்சிப் பணிகள், தீயணைப்புத் துறைப் பணிகள் என பலவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாநில அளவில் தனிநபர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், தேசிய மாணவர் படை, சாரணர் படையினருக்கு மீட்புப் பணிகளில் பயிற்சி அளிக்கும் பொருட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளை நடத்துதல்

அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கான வழக்கமான பயிற்சித் திட்டத்துடன் பேரிடர் மேலாண்மை தொடர்பான பாடங்களும் இணைக்கப்பட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது

மாவட்ட அளவில் ஏற்பட்ட பாதிப்பை உற்று நோக்கலும், மதிப்பிடுதலும்

இது ஏற்கனவே பேரிடரால் மனித உயிர்கள், விலங்கினங்கள், பொருளாதாரம் இவற்றின் மேல் ஏற்பட்ட தாக்கத்தைக் கணக்கிட்டு இனிவரும் காலங்களில் பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கலாம்

மாநிலத்தில் ஏற்படும் தீங்கு (அ) இடர்பாட்டை குறைத்தல்

  • பேரிடர் ஆபத்து உள்ள இடங்களில் இருக்கும் கட்டிடங்களுக்கான விதிகளை மீண்டும் ஆய்வு செய்து திருத்துதல், பேரிடர்களால் ஆட்டம் காணாத அளவுக்கு வீடுகள், வளாகங்கள் கட்டப்படவேண்டும் என்ற திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல், சூறாவளியால் பாதிக்கப்படும் கடற்கரைப் பகுதிகளில் தொலைத்தொடர்புக் கருவிகளை (நிலத்திற்கு அடியிலும் கூட) பொருத்துதல,. ஆதன் மூலம் முன் கூட்டியே அதன் தாக்கத்தைக் கண்டறிதல், கடற்கரைப் பகுதிகளில் உயிர் பாதுகாப்பு வளைங்களை ஏற்படுத்துதல், இதன் மூலம் காற்றால் ஏற்படும் ஆபத்துக்கள் தடுக்கப்படுகிறது.
  • பயிர்கள், கால்நடைகளுக்குச் சிறப்புக் காப்பீடு செய்தல். தமிழ்நாடானது, சூறாவளி, வெள்ளம், சுனாமி மற்றும் வறட்சி என பல வகையான இயற்கைச் சீற்றங்களை சந்தித்த அனுபவத்தைக் கொண்டுள்ளது. எனவே மேற்கண்ட முயற்சிகளின் மூலம் பேரிடர்களின் தாக்கங்களை ஓரளவு குறைக்க இயலும்.
  • தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் அதிக அளவிலான சூறாவளி, புயல், வெள்ளத்தைச் சந்திக்க நேரிடுகிறது. குறைந்த பட்சம் 7 மாவட்டங்கள் வறட்சியால் பெருமளவு பாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு-வின் 2023 திட்டமானது பரந்த விசாலமான இயற்கைத் தாக்கத்தைக் குறைக்கும் திட்டத்தையம், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் திட்டத்தையும் கொண்டுள்ளது. சூறாவளி மற்றும் புயலைத் தடுக்க கடற்கரைப் பகுதிகளில் சூற்றுச்சூழல் நடவடிக்கையாக மாங்குரோவ் காடுகள் வளர்க்கப்படுவது ஊக்குவிக்கப்படுகிறது. ஒவ்வொரு தாலுகா அளவிலும் இயற்கை சீற்ற பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவிலான பேரிடர் மீட்புப் படையும் உருவாக்கப்பட்டு, அதற்கு முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிய – ஆப்ரிக்காவிற்கான பிராந்திய அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட பேரிடர் எச்சரிக்கை முன்னறிவிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுளளது.

இது தகுந்த முறையான முன் எச்சரிக்கை மற்றும் முன் அறிவிப்புகளை கொடுப்பதன் மூலம், நாடுகளைப் பேரிடர் ஆபத்திலிருந்து காப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தவிர 12 வது ஐந்தாண்டு திட்டம், தமிழ்நாடு பார்வை 2023 ஆகியவற்றிலும் பேரிடர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலநிலையால் ஏற்படும் பேரிடர்களால் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பெரும் பாதிப்பை அடைகின்றன. எனவே 5 முதல் 10 நாட்களுக்கான காலநிலை கணிப்பின் மூலம் இந்தப் பாதிப்பை ஓரளவு குறைக்க இயலும். எனவே இடர்பாடு மேலாண்மையில் என்ற பிராந்திய பன்னாட்டுக் காலநிலை அமைப்பு, தமிழ்நாட்டிற்கு பெருமளவு உதவுவதாக உறுதியளித்துள்ளது.


தமிழக காவல்துறை பேரிடர் மீட்பு குழு

ஆதாரம் : அறம் ஐ.ஏ.எஸ் அகடாமி, சென்னை

3.08695652174
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Vimal Oct 28, 2019 11:52 AM

In sujith rescue operation why we suggest the hard rock breaking chemicals from the chemical experts.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top