பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பேரழிவு

பேரழிவு பற்றிய சமுக அக்கறையைப் பற்றிய குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

பேரழிவு

ஆதிகாலம் தொட்டே மனிதன் இயற்கை சீற்றங்களுக்கு எதிராக போராடி வருகின்றான். அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மேம்பாடடைந்துள்ள இந்நூற்றாண்டிலும் கூட இப்போராட்டம் தொடர்கின்றது. உலகின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து பேரழிவுகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் பேரழிவுகளின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் போன்றவையே இதற்கு முக்கிய காரணங்களாகும். மனிதன் சதுப்புநிலக் காடுகள், பவளப் பாறைத் தொகுப்புகள் போன்ற இயற்கை பாதுகாப்பு அரண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் சூறாவளி மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு ஆளாக்கப்படுகிறான்.

பேரழிவின் உருவங்கள்

மனிதனின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மோசமான ஒரு உடனடி நிகழ்வே பேரழிவு ஆகும். இவை பல்வேறு வடிவங்களிலும் உருவங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றில் சூறாவளி போன்ற பேரழிவுகளை ஓரளவு முன்கூட்டியே கணிக்கமுடியும். ஆனால் பூகம்பம் போன்ற பேரழிவுகளை கணிப்பது கடினமாகிறது. இவை மனித சமுதாயத்தை பாதிப்பதோடு மட்டுமன்றி சுற்றுச்சூழலையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

இயற்கை சீற்றங்களும், பேரழிவுகளும் ஒன்றா?

பொதுவாக இயற்கை சீற்றமும், பேரழிவும் ஒன்றே என நாம் நினைக்கிறோம். ஆனால், பூகம்பம், எரிமலை, புயல்கள் போன்ற இயற்கை நிகழ்வுகளை இயற்கை சீற்றங்கள் என்றும், இந்நிகழ்வால் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் விளைவுகள் பேரழிவுகள் எனவும் வழங்கப்படுகின்றன. அதாவது இயற்கை சீற்றத்தின் தொடர் விளைவே பேரழிவு ஆகும்.

உதாரணமாக இயற்கை சீற்றமான பூகம்பம் மனித உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு பேரழிவு ஆகும்.

பேரழிவுகளின் வகைகள்

பேரழிவுகள் அவை உண்டாகும் காரணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை இயற்கை பேரழிவுகள், மனிதனால் ஏற்படும் பேரழிவுகள்.

இயற்கை பேரழிவுகள்

இது ஒரு இயற்கையான நிகழ்வு. இது மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. புவிநிலை சார்ந்த பேரழிவுகளுக்கு பூகம்பம், சுனாமி, நிலச்சரிவு/பனிச்சரிவு, எரிமலை போன்றவை ஒரு எடுத்துக்காட்டாகும்.

மனிதனால் ஏற்படும் பேரழிவுகள்

மனிதனின் செயல்பாடுகளால் உருவாகக்கூடிய நிகழ்வுகள் செயற்கை பேரழிவுகள் ஆகும். எண்ணெய்க் கசிவுகள், தீ, கதிரியக்க பேரழிவு, தீவிரவாத நிகழ்வுகள், விபத்துக்கள், போர் போன்றவை இதற்கு சில உதாரணங்கள் ஆகும்.

இயற்கை பேரழிவுகள்

 

1.பூகம்பம்

புவியின் மேற்பரப்பில் அடுக்கடுக்காக காணப்படும் பெரிய பாறைகள் புவிப்பாறை தட்டுக்கள் என்றழைக்கப்படுகின்றன. புவிமையப் பகுதியின் அதிக வெப்பத்தால் இப்பாறைத் தட்டுக்கள் சராசரியாக வருடத்திற்கு ஒரு மில்லி மீட்டர் என்ற அளவில் நகர்கின்றன. அவ்வாறு நகரும் பொழுது சில பாறைத்தட்டுக்களின் விளிம்புகள் ஒன்றோடொன்று மோதுகின்றன. இதனால் இப்பகுதியில் தொடர்ந்து அழுத்தம் அதிகரித்துக் கொண்டே வரும், இதனைப் பிளவு மண்டலம் என அழைக்கிறோம். இப்பகுதி, அழுத்தத்தின் உச்ச நிலையை அடையும் பொழுது, உடைந்து வெளியேறும் ஆற்றல் அதிர்வு அலைகளாக வெளிப்பட்டு, புவிமேற்பரப்பில் உருவாகும் அதிர்வே பூகம்பம் ஆகும். சிறு சிறு நில அதிர்வுகள் இதனை தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளது.

பூமிக்குள் பூகம்பம் உருவாகும் பகுதி நிலநடுக்க கீழ்மூனைப்பகுதி எனவும், புவியின் மேற்பரப்பில் பூகம்பம் நிகழும் பகுதி மேல்மூனைப்பகுதி எனவும் அழைக்கப்படுகின்றன.

2. பூகம்ப தகவல்கள்

பழங்காலத்தில் மக்கள் பூமிக்கடியில் மிகப்பெரிய பாம்புகள், ஆமைகள், சிலந்திகள் போன்றவை நகர்வதாலேயே பூகம்பம் ஏற்படுவதாக நம்பி வந்தனர்.

ஒவ்வோராண்டும் சராசரியாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட சிறிய பூமி அதிர்வுகளும் (ரிக்டர் அளவுகோளில் 2.9க்கும் குறைவான அளவு) மிகப்பெரிய பூகம்பம் ஒன்றும் (8 க்கும் அதிகமான அளவு) ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய பூகம்பம் சிலி நாட்டில் 1960ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நிகழ்ந்தது. இது ரிக்டர் அளவுகோளில் 9.5ஆக பதிவானது.

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் 1201ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த பூகம்பமே, மனித வரலாற்றில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியதாகும். இது எகிப்து மற்றும் சிரியாவில் 1.1 மில்லியன் மக்களை பலிகொண்டது.

நிலவின் மேற்பரப்பிலும் மிகச்சிறிய அளவில் அதிர்வலைகள் உண்டாகின்றன. புவியில் ஏற்படும் அதிர்வலைகளோடு ஒப்பிடும்போது இவை மிகவும் வலுவற்றவை.

எரிவளையம் என்றழைக்கப்படும் பசிபிக் பாறைத் தட்டுப்பகுதி உலகிலேயே அதிக அளவு பூகம்பம் ஏற்படும் சாத்தியக்கூறு உள்ள இடமாகும்.

3. பூகம்பத்தை பதிவு செய்தல்

பூகம்பம் ஏற்படும்பொழுது பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் அதிர்வுகளை துல்லியமாக கண்டறிய உதவும் கருவி நிலநடுக்கமானி ஆகும். இக்கருவி பதிவு செய்யும் அதிர்வுகள் நிலநடுக்க பதிவுப்படம் என அழைக்கப்படுகிறது.

இப்பதிவு படத்தைக் கொண்டு விஞ்ஞானிகள் பூகம்பம் நிகழ்ந்த நேரம், நிலநடுக்க மையப் பகுதி, ஆற்றல் அளவு, பிளவு பகுதியின் வகை போன்றவற்றை துல்லியமாக கணிக்கிறார்கள்.

4. பூகம்பம் அளவிடுதல்

பூகம்பம் கீழ்க்கண்ட வழிகளில் அளவிடப்படுகிறது.

அளவு நிலநடுக்க பதிவுப்படத்தில் உள்ள மிகப்பெரிய அதிர்வலையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இதன் அலகு ‘ரிக்டர்’ ஆகும். இவ்வளவை புவியின் எப்பகுதியிலிருந்து பதிவு செய்தாலும் அது ஒரேயளவாக இருக்கும்.

தீவிரத்தன்மை - ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூகம்பத்தின் தீவிரத்தன்மை எவ்வளவு என்பது மெர்கல்லி என்ற அலகினால் குறிப்பிடப்படுகிறது. 1 மெர்கல்லி என்பது மிகக்குறைவான தாக்கத்தையும் 12 மெர்கல்லி என்பது பேரழிவையும் குறிக்கும்.

இந்தியாவின் நிலநடுக்க மண்டலங்கள்

இந்தியாவில் ஏறத்தாழ 55% நிலப்பகுதி நிலநடுக்கத்திற்கு உட்படும் பகுதிகளாகும். நிலநடுக்க தீவிரத்தன்மையின் அடிப்படையில், இந்திய துணைக் கண்டம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. இந்திய பூகம்பங்களில் சில

மனித வரலாற்றில் பேரழிவுகள் நீங்கா இடம் பெற்றுள்ளன. இந்திய வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ள நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பூகம்பங்களில் சில...

புராணங்களில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி ஆறு அதன் நீராதாரமான பனி மலைகளிலிருந்து பாறை தட்டுக்களின் நகர்வினால் பிரிக்கப்பட்டு முற்றிலும் வறண்டுபோனது.

இமயமலை பகுதிகளில் 1905ம் ஆண்டு ஏப்ரல் மாதம், காங்கரா பகுதியில் ஏற்பட்ட பூகம்பமே மிக பெரியது. இது 20,000 மனிதர்களையும், 53,000 கால்நடைகளையும் பலிகொண்டது.

1967ம் ஆண்டு கோய்னா பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டினாலும், 1997ம் ஆண்டு ஜபல்பூரில் உருவான பூகம்பம் தெஹரி அணைக்கட்டின் கட்டுமான பணிகளின் விளைவுகளாலும் ஏற்பட்டது என கணிக்கப்பட்டுள்ளது.

1993 செப்டம்பரில் மகாராஷ்ட்டிரா மாநிலம் லாத்தூர் பகுதியில் ஏற்பட்டது அண்மைகாலத்தில் ஏற்பட்ட பூகம்பங்களில் மிக பெரியது.

1999 மார்ச் மாதம் சமோலி பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் அங்குள்ள பத்ரிநாத் ஆலயம் மிகவும் பாதிப்புக்குள்ளானது.

2. பூகம்பத்தை தாங்கும் கட்டிடங்கள்

உலகின் பெரும்பாலான பகுதிகள் பூகம்பம் ஏற்படும் தன்மையுடையதாக இருப்பதால், பாதுகாப்பான கட்டிட வடிவமைப்பு மற்றும் பொருத்தமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவது பாதிப்பின் அளவைக் குறைக்கும்.

கோளவடிவக்    கட்டிடங்கள் பாதுகாப்பானது.

மரம், மூங்கில், எஃகு போன்றவற்றை பயன்படுத்துதல் பொருத்தமானது.

அடித்தளம் ஆழமாகவும், திடமாகவும் இருத்தல் அவசியம் இதற்கு பழைய கட்டுமானப்பொருட்களையும் பயன்படுத்தலாம்.

சுவர் இணைப்புகளில் பிணைப்புப் பட்டைகளைப் பயன்படுத்துவது எளிதான சிறந்த முறையாகும்.

உத்தரம் (குறுக்குக் சட்டங்கள்) அமைத்தல் அவசியம்.

கட்டிட அடித்தளத்தில் அதிர்வுகளைத் தாங்கும் அமைப்புகளை பொருத்துதல் அவசியம்.

3. ஆழிப்பேரலைகள் (சுனாமி)

கடற்தளத்தில் ஏற்படும் பூகம்பம், நிலச்சரிவு, எரிமலை ஆகியவற்றால் உருவாகும் தொடர் இராட்சத அலைகளே சுனாமி (ஆழிப்பேரலைகள்)

சுனாமி என்ற சொல் ஜப்பானிய மொழியில் துறைமுக அலைகள் என பொருள்படும் (சுனாமி - அலைகள்)

ஆழ்கடலில் உருவாகும் இவ்வலைகளுக்கு இடையேயான இடைவெளி 150 கி.மீட்டர் ஆகும். இவ்வலைகள் மணிக்கு 900 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன. அவை கரையை நெருங்கும்போது அதன் வேகமும் இடைவெளியும் குறைவதால் அதன் உயரம் அதிகமாகி கரையை அதிவேகத்தில் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் தொடர் அலைகளுக்கிடையேயான இடைவெளி நேரம் 5 நிமிடத்தில் இருந்து 40 நிமிடங்கள் வரை வேறுபடும். இவ்வலைகள் மணிக்கு 750 கி.மீட்டர் வேகத்திலும் 100 மீட்டருக்கு அதிகமான உயரத்திலும் கரையை தாக்குகின்றன.

4. உங்களுக்குத் தெரியுமா?

  • கடலுக்குள் சுனாமி அலைகள் கடந்து செல்வதை கப்பலிலோ, படகிலோ பயணிப்பவர்களால் உணர முடியாது. விமானத்தில் இருந்து பார்த்தாலும் சுனாமி அலைகளை காண இயலாது.

உருவாகும் காரணங்கள்

சுனாமி உருவாவதற்கு மிக முக்கிய காரணம் பூகம்பமே ஆகும். கடலுக்குள்ளும் கடலுக்கு அருகிலும் ஏற்படும் பூகம்பங்களினால் சுனாமி உருவாகிறது.

கடலுக்குள் ஏற்படும் நிலச்சரிவுகளாலும் சுனாமி உருவாகிறது.

மிகப்பெரிய விண்கற்கள் கடலில் விழுந்து சுனாமி ஏற்படுவது மிக அரிதான ஓர் நிகழ்வு.

சுனாமியின் அறிகுறிகள்

கணிசமான தூரத்திற்கு கடல் உள்வாங்குதல்

கடலின் மேற்பரப்பு மற்றும் கரையோரப் பகுதிகளில் வாயுக்குமிழிகள் தோன்றுதல்

அழுகிய முட்டை (ஹைட்ரஜன் சல்பைடு வாயு), பெட்ரோல் அல்லது எண்ணெய் போன்று கடல்நீர் துர்நாற்றம் வீசுதல்.

வழக்கத்திற்கு மாறாக கடல் நீரின் வெப்பம் அதிகமாக இருத்தல்.

வழக்கத்திற்கு மாறாக அலைகளின் ஓசை பேரிரைச்சலாக இருத்தல்.

இந்திய துணைக்கண்டத்தில் சுனாமி உருவாகும் பகுதிகள்

பசிபிக் பெருங்கடல் போல் அல்லாது இந்திய பெருங்கடல் பகுதியில் மிகக் குறைந்த அளவே பூகம்பங்கள் உருவாகின்றன. இந்திய துணைக்கண்டத்தில் கீழ்கண்ட இடங்களில் சுனாமி உருவாக வாய்ப்புகள் உள்ளது.

அந்தமான் கடல்

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளுக்கிடையிலான 500 கி.மீட்டர் பகுதி

பாகிஸ்தானுக்கு தெற்கே அரபிக்கடல் பகுதியிலுள்ள 100 கி.மீட்டர் பகுதி.

டிசம்பர் 26, 2004ல் இந்தோனேசிய கடற்பகுதியில் 9.3 ரிக்டர் என்ற அளவில் பதிவான பூகம்பம் ஏற்படுத்திய சுனாமி அலைகள் சுமத்ரா தீவுகளை தாக்கியதோடு மட்டுமல்லாமல் ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களை சார்ந்த 14 நாடுகளை துவம்சம் செய்தது. இது 1,50,000 பேர்களை பலிகொண்டது.

சுனாமி எச்சரிக்கை மற்றும் கணிப்பு

கடலில் சுனாமி வருவதை கணிப்பது மிகக் கடினமானது என்ற போதிலும் சுனாமி எச்சரிக்கை மையங்களினால் கடலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து சுனாமியின் பாதை மற்றும் வேகத்தை கணித்து கூற முடியும். இவ்வசதியினால் முன்னெச்சரிகை நடவடிக்கையாக தாழ்வான மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற முடியும்.

1952-ஆம் ஆண்டு ஹானலூலுவில் சுனாமி ஏற்பட்ட பொழுது முன்னெச்சரிக்கை மையத்தின் அறிவிப்பினால் பல்லாயிரம் உயிர்கள் காக்கப்பட்டன. கடந்த ஜுன் மாதத்திலிருந்து (ஜுன், 2006) இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி கண்காணிப்பு மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.

1. பசுமை பாதுகாப்பு வளையம்

சதுப்புநிலக்காடுகள், பவளப்பாறைகள், கடற் தாவரங்கள், தென்னை மற்றும் சவுக்கு போன்ற தாவரங்களை கடலோரப் பகுதியில் வளர்ப்பதால் அவை கடலின் பேரலைகள் மற்றும் சூறாவளி போன்றவற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் கவசமாக இருந்து வருகின்றன. வளைகுடா பகுதியில் உள்ள சதுப்புநில காடுகள் சுனாமி போன்ற ஆழி பேரலைகளினால் ஏற்படும் அழிவை கட்டுபடுத்துவதோடு கடல்நீர் உட்புகுதலையும் தடுக்கின்றன.

கடலோரப்பகுதிகளில் சுற்றுலா தளங்கள் அமைத்தல், இறால் பண்ணை அமைத்தல் மற்றும் பல கட்டுமான பணிகளுக்காக கடலோர தாவரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. 2004-ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மிக மோசமாக இருந்ததற்கு கடலோர பகுதியிலிருந்த அலையாத்தி காடுகள் அழிக்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணமாகும். இத்தாவரங்களை அழிக்காமலிருந்திருந்தால், அவை பல கிராமங்களை அதிக அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கும். கடற்கரை சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக 1991ஆம் ஆண்டிலேயே கடலோரப் பகுதிகளை முறைப்படுத்தும் விதிமுறைகள் இந்திய அரசால் உருவாக்கப்பட்டன. இந்த விதிமுறைகளின்படி கடலிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தொலைவிலான கடற்கரைப் பகுதி பாதுகாப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில விதிமுறைகளை முறையாக செயல்படுத்தாத காரணத்தினால் இந்திய கடலோரங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

டிசம்பர் 26, 2004ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கடலோரங்களில் இயற்கைப் பாதுகாப்பு அரண்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

2. இயற்கை அரண்கள்

கடற்கரையோரங்களில் காற்று முகமாக காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் மரங்களை வரிசை வரிசையாக நட்டு வளர்த்தல் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும். இவை

சராசரியாக 50% காற்றின் வேகத்தை குறைக்கிறது.

கடலோர பகுதிகளில் மண்ணின் பிடிப்புத்தன்மையை அதிகரிக்கிறது.

சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும்போது கடலோர குடியேற்றபகுதிகளை அழிவிலிருந்து காக்கின்றது.

நிலத்தடி நீரை தக்க வைத்து, நீர் மட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

வன விலங்குகள், பறவைகளுக்கு உறைவிடமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் உணவையும் அளிக்கிறது.

நிலச்சரிவு

உயரமான இடங்களிலிருந்து மண், பாறைகள், சகதி போன்றவை திடீரென கீழ்நோக்கி சரிதல் நிலச்சரிவு என அழைக்கப்படுகிறது. மரம், செடி, கொடிகள் மற்றும் புல், புதர் போன்றவை பெருமளவில் அகற்றப்படும் பொழுது மலைகள், குன்றுகள் போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. நிலச்சரிவானது தொடர் மழை, பூமி அதிர்ச்சி, எரிமலை வெடிப்பு, காட்டுத் தீ போன்ற இயற்கை நிகழ்வுகளாலும் பல்வேறு தேவைகளுக்காக மலைகளைக் குடைதல், தகர்த்தல் போன்ற மனித செயல்பாடுகளாலும் ஏற்படுகின்றன.

காடு வளர்ப்பு மற்றும் நிலச்சரிவு

நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணி காடழிப்பே ஆகும். மலைச்சரிவுகளில் மரங்களை வெட்டுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. அதிக மழை அல்லது பூகம்பத்தின் காரணமாக நிலச்சரிவு ஏற்படுகிறது. இவ்வகை அழிவை தடுக்க அதிக அளவில் மரங்களை நட்டு காடுகளை வளர்த்தலே சிறந்த வழியாகும்.

எரிமலை

எரிமலை வெடிப்பது பூமியில் நடக்கக்கூடிய அற்புத புவியியல் நிகழ்ச்சியாகும். பூமியானது உட்கரு, மையப்பகுதி (அ) நடுப்பகுதி, புறப்பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவியின் மேற்பரப்பிலிருந்து வரும் தொடர் அழுத்தத்தினால் மையப்பகுதியின் வெப்பநிலை எப்பொழுதும் மிக அதிகமாகவே இருக்கும். இவ்வெப்பமானது அதனை அடுத்த நடுப்பகுதியிலுள்ள பாறைப் பகுதியில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதால் இக்கடினப்பாறைகள் உருகி குழம்பாக மாறுகின்றது. இது பாறைக் குழம்பு அல்லது மேஃமா என அழைக்கப்படுகிறது. இதன் அளவு அதிகரிப்பதாலும், இச்செயல்பாடுகளினால் உருவாகும் வாயுக்களால் ஏற்படும் அழுத்தத்தினாலும் பாறைக் குழம்பானது புவியின் மேற்பரப்பைத் துளைத்துக் கொண்டு பீரிட்டு வெளியேறுவது எரிமலை என அழைக்கப்படுகிறது. இவ்வாறாக புவியின் உட்பகுதியிலிருந்து மேற்பரப்பில் பரவும் பாறைக்குழம்பு லாவா என அழைக்கப்படுகிறது. சில சமயங்களில் இந்த லாவா எரிமலையின் வாய் பகுதியிலே குளிர்ந்து அடைப்பை ஏற்படுத்திவிடும். இவ்வகை எரிமலை மீண்டும் வெடிக்கும் போது பாறைக் குழம்பு ஊற்றுப்போல பொங்கி எழும் வாய்ப்புள்ளது. இப்பாறைக் குழம்பானது உடைந்த பாறைக் கற்கள் மற்றும் சாம்பலையும் கொண்டிருப்பதால் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

1. எரிமலைகளின் வகைகள்

உயிருள்ள எரிமலைகள்: குறிப்பிட்ட கால இடைவெளியில் வெடித்து சிதறும் எரிமலைகள்.

தூங்கும் எரிமலைகள்: நீண்ட காலமாக அமைதியாக இருப்பவை. ஆனால் எந்த நேரத்திலும் பாறைக் குழம்பை கக்கும் தன்மையுடையவை.

இறந்த எரிமலைகள்: மிகப் பழமையானவை. மீண்டும் உயிர்பெற வாய்ப்பில்லை என உறுதி செய்யப்பட்டவை.

2. முன்னறிவிப்பு

பூகம்பத்தோடு ஒப்பிடும் பொழுது எரிமலை மிக மெதுவாக ஏற்படும் இயற்கைப் பேரழிவாகும். எரிமலையில் பாறைக் குழம்பானது மிகக் குறைந்த வேகத்திலேயே மேல்நோக்கி நகரும். இவ்வாறு நகரும்போது மிக சிறிய பூமி அதிர்வுகள் ஏற்படும். பாறைக்குழம்பு வெளியேறும் முன் வாயுக்கள் வெளியாவது மிக முக்கிய அறிகுறி. எனினும் எரிமலை வெடித்துச் சிதறும் சமயத்தைத் துல்லியமாகக் கணக்கிட இயலாது.

உலகிலுள்ள உயிருள்ள எரிமலை பகுதிகள்

எரிவளையம்’ என அழைக்கப்படும் பசிபிக் மகா சமுத்திரத்தின் விளிம்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, நியூகினியா, நியூசிலாந்து, சிலி, பெரு, ஈக்குவடார், கொலம்பியா ஆகிய நாடுகள் அதிக பாதிப்பான பகுதியில் அமைந்துள்ளன.

மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் மத்திய கிழக்கு இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஈரான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை எரிமலைகளால் ஏற்படும் மறைமுக பாதிப்பு பகுதியில் உள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய பிளவு பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான எரிமலைகள் எத்தியோபியா மற்றும் கென்யாவில் காணப்படுகின்றன.

வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி நாடுகளான கலிஃபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன், பிரிட்டிஷ், கொலம்பியா, யூகான், அலாஸ்கா, பாஜா கலிஃபோர்னியா ஆகிய நாடுகளிலும் உயிருள்ள எரிமலைகள் காணப்படுகின்றன.

எரிமலை வெடிப்பினால் ஏற்படும் விளைவுகள்

எரிமலைக் குழம்பு வழிந்தோடும் பாதையில் எதிர்படும் எந்தப் பொருளையும் எரித்து சாம்பலாக்கிவிடும்.

சீதோஷண நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி கனமழை, பலத்த காற்று போன்றவற்றை உருவாக்கும்.

பாறைக்குழம்பு நீர்பரப்புள்ள இடங்களை அணுகும் போது நீர் அமிலத்தன்மையடையும்.

எரிமலைச் சாம்பலானது காற்றில் கலந்து சுவாசிக்க இயலாத தன்மையை ஏற்படுத்தும். மிகவும் அடர்த்தியான புகை பரவும் பொழுது இவை சூரியக் கதிர்களையே மறைத்துவிடும் திறம் பெற்றவை.

விஷத்தன்மையுள்ள வாயுக்கள் மற்றும் மூச்சுத் திணறவைக்கும் மேகக்கூட்டமும் உருவாகும்.

எரிமலைக்கு அருகாமையில் உள்ள பகுதி முழுமையாக புகை மற்றும் சாம்பலினால் மூடப்படும்.

கோடை காலமற்ற ஆண்டு

1816-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தோனேஷிய தீவுக் கூட்டத்திலுள்ள “கம்பாவா” என்ற தீவில் வெடித்துச் சிதறிய “டம்போவா” எரிமலை பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இவ்வெரிமலை சுமார் ஒன்றரை மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு சாம்பல் மற்றும் புகையை வெளிவிட்டதால் 92,000 உயிர்களை பலிகொண்டதோடல்லாமல் சூரியக் கதிர்களையே மறைக்கும் அளவிற்கு மிகவும் அடர்த்தியாகப் படர்ந்து சீதோஷண நிலையிலும் மோசமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இதனால் அவ்வாண்டை, “கோடை காலமற்ற” ஆண்டு என சரித்திரம் வர்ணிக்கிறது.

1. சூறாவளி

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சூறாவளி என அழைக்கப்படுகிறது. பொதுவாக சூறாவளியானது

இடிமழை  - பலத்த காற்று  - கடல் கொந்தளிப்பு  - வெள்ளம் ஆகிய நிகழ்வுகளோடு தொடர்புடையது

2. பெயர் காரணம்

1840-ம் ஆண்டு ஹென்றி பிடிங்கடன் என்பவர் முதன் முதலில் சூறாவளி (சைக்லோன்) என்ற பெயரைப் பயன்படுத்தினார். இது “சுழன்று நகரும்” எனப் பொருள்படும் “கைக்லோன்” என்ற கிரேக்கப் பதத்திலிருந்து உருப்பெற்றது.

3. சூறாவளி உருவாகுதல்

சூறாவளி உருவாக கடல்நீரின் வெப்பநிலை 260 செல்சியஸ் ஆக இருத்தல் அவசியம். இதனால் இந்நிகழ்வு பெரும்பாலும் பூமத்தியரேகைப் பகுதிகளிலேயே ஏற்படுகின்றது. பெரும்பாலும் இவை இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சீதோஷணநிலை மாற்றங்களால் கடல் பகுதியில் உருவாகும் வெப்பக் காற்று எடை குறைவாக இருப்பதால் மேல் நோக்கி நகர்கிறது. இதனால் இப்பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. மேல் செல்லும் வெப்பக்காற்று நீர்த்திவலைகளோடு சேர்ந்து குளிர்ந்து மழை மேகங்களாகிறது. வெப்பக் காற்று மேல்நோக்கி செல்லும் பொழுது ஏற்படுத்திய காலியிடத்தை குளிர்ந்த காற்று வேகமாக அடைகிறது. பூமியின் தொடர் சூழற்சியின் காரணமாக, நகரும் காற்று மண்டலம் உட்புறமாக வளைந்து சுழன்று மேல் நோக்கி மிகுந்த வேகத்தில் எழும்புகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் வேகமானது ஒரு பெரும் வளையமாக உருவெடுத்து சுமார் 2000 கி.மீ பரப்பளவிற்கு பரவும் தன்மை கொண்டது.

காலியான இக்காற்று மண்டலத்தின் மையப்பகுதி “சூறாவளிக்கண்” என வழங்கப்படுகிறது, சூறாவளியின் போது உருவாகும் மழை மேகங்கள் குறுகிய காலகட்டத்தில் அதிக அளவு மழையையும் பலத்த காற்றையும் கொண்டு வரும். இச்செயல்பாடு சூறாவளிக்கண்ணிலிருந்து சுமார் 20-30 கி.மீ. தொலைவு வரை இருக்கும். இதன் வேகம் மணிக்கு சுமார் 200 கி.மீ வரை இருக்கும்.

இந்தியாவில் சூறாவளி பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள்

உலகிலேயே சூறாவளி பாதிப்பு அதிகமுள்ள பகுதி இந்தியா ஆகும். இந்தியாவில் வங்கக்கடற்கரை பகுதி, மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், அரபிக்கடல் பகுதியிலுள்ள குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களும் சூறாவளிப் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாகும்.

1. ஒரிசா சூறாவளி

1999-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி ஒரிசா மாநிலக் கடற்கரையை மணிக்கு 350 கி.மீ வேகம் கொண்ட பலத்த சூறாவளி தாக்கியது. இது சுமார் 1 கோடி மக்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.

2. சூறாவளியின் மாற்று பெயர்கள்

அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் உருவாகும் சூறாவளி “ஹரிக்கேன்” எனவும், பசிபிக் மகா சமுத்திரத்தில் உருவாவது “டைஃபூன்” எனவும், இந்திய பெருங்கடல் பகுதியில் உஷ்ணமண்டல சூறாவளி (சைக்லோன்) என்றும் மாற்றுப் பெயர்களில் வழங்கப்படுகிறது.

இயற்கையின் பாதுகாப்பு

சூறாவளி போன்ற அதிவேக காற்றையும், அதனால் ஏற்படும் அழிவையும் தடுக்க கடலோரங்களில் காற்றின் வேகத்தை தடுக்கும் சக்தியுடைய தாவரங்களாகிய பனை, சவுக்கு மற்றும் தென்னை மரங்களை வரிசை வரிசையாக நட்டு வளர்த்தல் அவசியம். சூறாவளி ஏற்படும் சமயத்தில் இம்மரங்கள் காற்றின் வேகத்தைக் குறைக்கும் அரண்களாக செயல்பட்டு அதிக அழிவு ஏற்படுவதை தடுக்கும்.

ஆதாரம் : சி.பி. ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம்

3.1724137931
Anonymous Aug 08, 2020 09:25 PM

இரசாயனத்தால் ஏற்படும் இயற்கை சீர்கேடுகள் பற்றி வந்திருக்கலாம்

முத்தாரம் Dec 17, 2018 11:15 PM

அறிவுக்கு விருந்து. நன்று. நன்றி

மா .நந்தினி Jan 27, 2018 07:07 PM

பேரழிவை பற்றிய இத்தொகுப்பு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.நிறைய கருத்துக்களை அறிந்து கொள்ளும் விதமாக அமைந்தது .தனித்தனியாக பேரிடர்களை தடுக்கும் வழிமுறைகள் இருந்தால் இன்னும் பயனாக இருக்கும் .விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்து இருக்கும் .பேரிடர் பற்றிய குறிப்புகளை கொடுத்ததற்கு நன்றி .....

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top