பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு / சுற்றுச்சூழல் மாசு - விளக்கம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழல் மாசு - விளக்கம்

மாசுகளின் ஆதாரம், மாசுபாட்டின் வகைகள் போன்ற தலைப்புகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மாசுபடுதல்

மாசு என்றால் என்ன?

மாசு என்பது சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை சுற்றுப்புறத்தில் வெளியிடுவதாகும். பொதுவாக மனிதனின் செயல்பாடுகளால் சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கப்படும் பொருட்களை வெளியிடுவதே மாசுபடுதல் என்கிறோம். மனிதனின் நடவடிக்கைகளால் சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை வெளியிடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையே மாசுபடுதல் என்று அறியப்படுகிறது.

மாசுகளின் ஆதாரம்

 • இராசயன தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அணுக்கரு உலைக் கழிவுகள், கழிவுகள் குவிக்கப்படுதல், எரிப்பான்கள், பிவிசி தொழிற்சாலைகள், கார் உற்பத்தித் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், பெரிய வணிகரீதியாக செயல்படும் கால்நடை பண்ணைகளிலிலிருந்து உருவாகும் கால்நடை கழிவுகள்.
 • விபத்துகள் ஏற்படும் போது அணுக்கரு உலைகளும், எண்ணெய் கொப்பரைகளும் அதிக அளவிலான மாசினை ஏற்படுத்துகின்றன.
 • முக்கிய மாசுப் பொருட்களாவன, குளோரினேட்டட் ஹைட்ரோகார்பன்கள், உலோகங்களான லெட் (பெயிண்ட் –ல் காணப்படும் பொருள்), காட்மியம் (பேட்டரிகளிலுள்ள காட்மியம்), குரோமியம், துத்தநாகம், ஆர்சனிக் மற்றும் பென்சீன்.
 • இயற்கை பேரிடர்களின் போது மாசுபடுதல் அதிக அளவிலான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக ஹரிக்கேன் எனப்படும் புயல் வெள்ளத்தின் போது சாக்கடை கழிவு நீர் கலந்து தண்ணீர் மாசுபாடு, மூழ்கிய படகுகளில் இருந்து வெளியேறும் பெட்ரோலியப் பொருட்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களிலிருந்து வெளியேறும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் கடற்கரையோரம் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலில் இருந்து வெளியேற்றப்படும் பெட்ரோலியம் சார்ந்த கழிவுப்பொருட்கள் போன்றவைகளால் மாசுபாடு பெரும்பாலும் ஏற்படுகிறது.

மாசுபாட்டின் வகைகள்

காற்று, தண்ணீர் மாசுபாடு போன்ற மாசுபாடுகள் மற்றும் கதிரியக்கத்திறன் வாய்ந்த பொருட்களால் ஏற்படும் மாசுபாடுகள், ஒளி மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்றவை மாசுபாடுகளின் வகைகளாகும்.

ஒலி மாசுபாடு

சத்தம் என்பது ஒரு விரும்பத்தகாத ஒலியாகும். சத்தத்தினால் உண்டாகும் மாசுபாடு காற்று மாசுபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகக் தற்பொழுது அறியப்பட்டு வருகிறது.

ஒலி எனப்படும் சத்தமானது காற்றின் மூலமாக பரவுவதால் அதன் அளவினை காற்றின் தர அளவீடுகளால் அளக்கமுடியும். சத்தத்தின் அளவுகோல் டெசிபல்களாகும். 90 டெசிபல்களுக்கும் அதிகமான ஒலி தொடர்ந்து மனிதர்கள் கேட்கும்பொழுது அது கேட்கும் திறனை பாதிப்பதுடன், நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்பையும் ஏற்படுத்தும். நகரங்களில் அதிகபட்ச ஒலி அளவு 45 டெசிபல்கள் – க்குள் இருத்தல் வேண்டும் என உலக சுகாதார அமைப்பு நிர்ணயத்துள்ளது. இந்தியாவிலுள்ள பெருநகரங்களில் சராசரியாக கேட்கப்படும் ஒலியின் அளவு 90 டெசிபல்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே சத்தம் அதிகமான நகரங்களில் மும்பை மூன்றாம் இடத்திலுள்ளது. புது தில்லியும் இதற்கு பின் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதிகப்படியான சத்தம் மனிதர்கள் எரிச்சலடையச் செய்வது மட்டுமல்லாமல், இரத்தத்தமனிகளை சுருங்கச்செய்வதால், அதிகப்படியான அட்ரீனலின் ஹார்மோன் சுரக்க தூண்டுகிறது. இதனால் இதயம் அதிக அளவு வேலை செய்யத் தூண்டப்படுகிறது. தொடர்ந்து அதிக சத்தத்தினை கேட்டுக்கொண்டிருந்தால் இரத்தத்தில் கொலஸ்ட்டிராலின் அளவு அதிகரித்து அதனால் நிரந்தரமாக இரத்தக்குழாய்கள் சுருங்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.

கழிவுகள் மற்றும் தண்ணீர் மாசுபாடு

நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் ஏரிகள், குளங்கள், ஆறுகள், கடல்கள் போன்ற நீர்நிலைகளில் கலக்கும் போது, அவை கரைந்துவிடும் அல்லது தண்ணீரில் மிதக்கும் அல்லது அடியில் தேங்கிவிடும். இதனால் தண்ணீரின் தரம் பாதிக்கப்படுவதோடு, நீர் நிலைகளிலுள்ள சூழலையும் பாதிக்கின்றன. இது மட்டுமன்றி மாசினை ஏற்படுத்தும் பொருட்கள் நிலத்தினால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீரினையும் பாதிக்கின்றன.

நீர் மாசுபாட்டினால் மனிதர்கள் பாதிக்கப்படுவதுடன், விலங்குகள் மற்றும் மீன்கள், பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. மாசுபாடடைந்த தண்ணீர் குடிப்பதற்கும், விளையாடுவதற்கும், விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படாமல் போகிறது. மேலும் ஆறுகள் மற்றும் ஏரிகளின் அழகையும் இது பாதிக்கிறது.

காற்று மாசுபாடு

தீங்கு விளைவிக்கும் பொருட்கள் காற்றில் கலப்பதால் ஏற்ப்படும் மாசுபாட்டினை காற்று மாசுபாடு என்கிறோம். காற்று மாசுபாட்டினால் மனிதர்களுக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்திற்கும் உடைமகளுக்கும் கேடு ஏற்படுகிறது. இது மட்டுமன்றி காற்று மாசுபாட்டினால் பூமிக்கு நன்மை செய்யும் ஓசோன் படலம் சேதப்படுத்தப்பட்டு காலநிலை மாறுபாடுகளையும் ஏற்படுத்துகிறது.

தொழிற்சாலைகள், வாகனங்கள், அதிகரிக்கும் மக்கள் தொகை, நகரமயமாக்கம் போன்றவை காற்று மாசுபடுதலை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களாகும். காற்று மாசுபாடு பல்வேறு விதமான காரணிகளால் ஏற்படுகிறது. இவற்றுள் எல்லா காரணிகளும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. பாலைவனங்களில் ஏற்படும் தூசு நிறைந்த புயல் காற்றுகள், காட்டுத்தீயினால் ஏற்படும் புகை, புற்கள் எரிவதால் ஏற்படும் புகை போன்றவை காற்றில் ரசாயனங்கள் மற்றும் தூசுக்கள் கலந்து காற்று மாசுபாடு ஏற்படக் காரணமாக அமைகிறது.

காற்றில் மாசுபாடு ஏற்படுத்தும் காரணிகள் மற்றும் அவற்றின் ஆதாரம்
 • கார்பன் மோனாக்சைடு ஒரு நிறமற்ற, வாசனையற்ற வாயுவாகும். கார்பனை அடிப்படையாகக் கொண்ட பெட்ரோல், டீசல் மற்றும் மரங்கள் போன்ற எரிபொருட்கள் முழுவதும் எரிக்கப்படாதபோது கார்பன் மோனாக்ஸைடு உருவாகிறது. இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்கள் (சிகரெட்) எரியும் போதும் கார்பன் மோனாக்சைடு வாயு வெளியிடப்படுகிறது. இவ்வாயு இரத்தத்தில் கலக்கும் பிராணவாயுவின் அளவினைக் குறைக்கிறது. மேலும் நம்முடைய செயல்பாடுகளையும் குறைத்து நம்மை குழப்பத்திலும், துக்கத்திலும் ஆழ்த்துகிறது.
 • கார்பன் டைஆக்சைடு ஒரு முக்கியமான பசுமை இல்ல வாயுவாகும். இவ்வாயு மனிதனின் செயல்பாடுகளான கரி, பெட்ரோலியப்பொருட்கள், இயற்கை எரிவாயு போன்றவற்றை எரிக்கும்போது வெளியிடப்படுகிறது.
 • குளோரோபுளூரோ கார்பன்கள் பெரும்பாலும் அறை குளிர்விப்பான்களிலிருந்தும், குளிரூட்டும் இயந்திரங்களில் இருந்தும் வெளியேறி காற்று மண்டலத்தில் கலக்கிறது. இப்பொருட்கள் காற்றில் கலக்கும்போது இவை காற்று மண்டலத்திலுள்ள ஸ்ட்ரோஸ்பியர் எனப்படும் அடுக்கினை சென்றடைகின்றன. பிறகு அந்த அடுக்கிலுள்ள இதர சில வாயுக்களுடன் கலந்து, பூமியினை சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தின் அளவினை குறைக்கின்றன.
 • கந்தகம் பெட்ரோல், டீசல், கந்தக பாட்டரிகள், பெயிண்டுகள், கூந்தல் சாயங்கள் போன்றவற்றில் கந்தகம் இருக்கிறது. இது மனிதர்களின் நரம்பு மண்டலம், சீரண மண்டலத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. சில மனிதர்களில் இது புற்று நோயினையும் ஏற்படுத்துகிறது.
 • ஓசோன் படலம் வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் உள்ளது. இந்த முக்கியமான வாயு, தீங்கு விளைவிக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியினைப் பாதுகாக்கும் கேடயமாக உள்ளது. ஆனால் பூமியின் பரப்பில் இது தீமையினை ஏற்படுத்தும் வாயுவாகும். வாகனங்களும், தொழிற்சாலைகளும் ஓசோனை காற்றில் வெளிவிடும் முக்கிய காரணிகளாகும். ஓசோன் மாசுபாடு நமது கண்களில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, எரிச்சலையும் ஏற்படுத்தும். மேலும் நிமோனியா மற்றும் சளி போன்ற நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியினையும் குறைக்கிறது.
 • நைட்ரஜன் ஆக்சைடு புகை நிறைந்த பனி மற்றும் அமில மழை ஏற்பட காரணமாக இருக்கிறது. பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற பொருட்கள் எரிக்கப்படும் போது இவ்வாயு உருவாகிறது. குளிர் காலத்தில் குழந்தைகள் சுவாச மண்டலம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவதற்கு நைட்ரஜன் ஆக்சைடு ஒரு காரணியாக அமைகிறது.
 • காற்றில் மிதக்கும் துகள்கள் புகை, தூசு, ஆவி போன்றவை காற்று மண்டலத்தில் நீண்ட நேரம் இருக்கும். மேலும் இவை புகை மண்டலத்தினை உருவாக்கி பார்க்கும் தன்மையினையும் குறைக்கிறது. மிகச்சிறிய அளவிலான துகள்கள் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரலில் தேங்கி சுவாச மண்டல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
 • சல்பர் டை ஆக்சைடு வாயு நிலக்கரி எரிக்கபடும் போது பெரும்பாலும் அனல் மின் நிலையங்களில் வெளியிடப்படுகிறது. சில தொழிற்சாலைகளின் செயல்பாடுகளான பேப்பர் தயாரித்தல், உலோகங்கள் உருக்கப்படுதல் போன்ற செயல்பாடுகளின் போதும் சல்பர் டை ஆக்சைடு வாயு வெளியிடப்படுகிறது. இது புகை கலந்த மூடுபனி மற்றும் அமில மழை ஏற்படக் காரணமாகிறது. மேலும் நுரையீரல் நோய்களையும் சல்பர் டை ஆக்சைடு ஏற்படுத்துகிறது.

இரசாயன மாசுபாடுகள்

இரசாயன மாசுபாடுகள் கீழ்க்கண்ட காரணிகளால் ஏற்படுகிறது

 • மனித செயல்பாடுளால் வெளியிடப்படும் கழிவுகள்
 • தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள்
 • கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் இருந்து ஏற்படும் கசிவுகள்
 • மனித செயல்பாடுகளால் வெளியேற்றப்படும் கழிவு நீர்
 • விபத்துகள், விபத்துக்களால் கடலில் கலக்கும் பொருட்கள்
 • எண்ணெய் கிடங்குகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள்
 • சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்
 • விவசாயக்கழிவு நீர்

எல்லோரும் கவனத்தில் கொண்டுள்ள இரசாயன மாசுகள், நிரந்தரமாக இருக்கும் மாசுக்களாகும். இப்பொருட்கள் கடலின் உணவுச்சங்கிலியினை ஊடுருவி, உணவுச்சங்கிலியின் மேல் அடுக்கான கடல்வாழ் உயிரினங்களில் அதிகமாக தேங்குகின்றன. நிரந்தரமான மாசுக்கள் – பூச்சிக்கொல்லிகள் – டிடிடி, தொழிற்சாலை இரசாயனங்கள்- பிசிபி போன்றவை.

மாசுபாட்டினைத் தடுக்கும் எளிய வழிகள்

ஒலி மாசுபாட்டினை குறைத்தல்
 1. உங்களுடைய தொலைக்காட்சிப்பெட்டிகள் மற்றும் மியூசிக் சிஸ்டத்தில் சப்தத்தின் அளவினை குறைவாக வைக்கவும்
 2. தேவையானபோது மட்டுமே காரில் ஒலிப்பானை உபயோகிக்கவும்
 3. ஒலிபெருக்கிகள் உபயோகிப்பதைத் ஊக்குவிக்கக்கூடாது
 4. மேளம், பட்டாசுகள் போன்றவற்றை திருமண ஊர்வலங்களில் உபயோகிப்பதைக் குறைக்கவும்
 5. ஒலி மாசுபாட்டினைக் கட்டுப்படுத்த சட்டத்தினை முறையாக பின்பற்றவும்
காற்று மாசுபாட்டினை குறைத்தல்
 1. வீடுகள், தொழிற்சாலைகள், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையின் அளவினை குறைந்த அளவாகக் குறைத்தல்
 2. பட்டாசுகளை உபயோகிப்பதைத் தவிர்த்தல்
 3. குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடவும், எரிக்காதீர்கள்
 4. எச்சில் துப்புமிடத்திலோ அல்லது ஓடும் சாக்கடைகளிலோ எச்சிலைத் துப்பவும்
 5. காற்று மாசுபாட்டினைக் குறைக்கும் அனைத்து சட்டங்களையும் பின்பற்றுங்கள்
தண்ணீர் மாசுபாட்டினைக் குறைத்தல்
 1. குப்பைகளை பொதுக்குழாய்கள், கிணறுகள் மற்றும் இதர நீர் ஆதாரங்களுக்கு அருகில் கொட்டக்கூடாது
 2. பொதுத் தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தக்கூடாது
 3. புனிதமான சிலைகளைக் கரைக்க அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கரைக்கவும்
 4. தண்ணீர் மாசுபாட்டினைத் தடுக்கும் அனைத்து சட்டங்களையும் பின்பற்றவும்
இரசாயனங்களால் ஏற்படும் மாசினைக் குறைத்தல்
 1. இரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களையும், பாலித்தீன் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பருத்தியால் செய்த பைகளையும், பாலியெஸ்டருக்கு பதிலாக சணலையும் உபயோகிக்கவும்
 2. பாலித்தீன் பைகளை முறையாக அழிக்கவும்
 3. நிறைய செடிகளையும், மரங்களையும் நடவும்
 4. இரசாயனங்களால் ஏற்படும் மாசுபாட்டினைக் குறைக்க அனைத்து சட்டங்களையும் விதி முறைகளையும் பின்பற்றவும்
நிலத்தை பயன்படுத்தும் முறைகளும் அதனால் நிலத்தடி நீருக்கு ஏற்படக்கூடிய அபாயங்களும்

நிலப் பயன்பாடு

நிலத்தடி நீர் மாசுபடுதலை தோற்றுவிக்கக் கூடிய காரியங்கள்

குடியிருக்கும் இடங்கள்

 • கழிவுகள்
 • நிலம் மற்றும் ஓடைகளில் சாக்கடை தண்ணீர் கலப்பது
 • சாக்கடை தண்ணீர் குட்டைகள்
 • கழிவு நீர் வெளியேறுதல், திடக் கழிவு அகற்றுதல், நிலத்தை நிரப்பும் கழிவுகள்
 • சாலை மற்றும் நகர கழிவுகள், வான் வெளியிலிருந்து விழுபவை

தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள்

 • உபயோகப்படுத்தப் பட்ட நீர், கழிவு பொருட்கள்
 • நிலம் மற்றும் ஓடைகளின் கழிவுநீர்
 • குளங்கள் மற்றும் குழாய் வடி நீர் மற்றும் எதிர்பாரா விதமாக ஏற்படும் தெளிப்புகள்
 • கழிவுகளை கிணற்று நீரில் விடுதல்
 • வான் வெளியிலிருந்து விழுபவை
 • கழிவுகளை சரியாக கையாளாதிருத்தல்
 • பொருட்களை உபயோகிக்கும் போது கீழே சிந்துதல் மற்றும் வெளியேறுதல்

சுரங்கங்கள்

சுரங்க தண்ணீர் வெளியேற்றம்
உபயோகப்படுத்தப் பட்ட நீர், கழிவுகள்
சுரங்க திடக் கழிவுகள்
சேகரிப்பு நிலையங்களில் ஏற்படும் எண்ணெய் தெளிப்புகள்

கிராம பகுதிகள்

 • வேளாண் வேதிப்பொருட்களை உபயோகித்து சாகுபடி செய்தல்
 • கழிவு நீர் கொண்டு பாசணம் செய்தல்
 • மண் உவர்தண்மை
 • கால்நடை வளர்ப்பு

கடற்கரை பகுதிகள்

உப்பு தண்ணீர் உட்புகுதல்


சுற்றுச்சூழல் பாதுகாப்பு

மூலம் : மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 2007

3.16666666667
கார்த்திக் AK Mar 19, 2018 10:14 PM

மிகவும் எளிமையான கருத்துக்கள்

Anonymous Dec 18, 2017 03:30 AM

மிகவும் நன்று

Sreenithi Oct 22, 2017 07:13 AM

Nice

Mosas Jul 31, 2017 07:36 AM

Super

ரஹ்மான் Jul 18, 2017 12:02 PM

பள்ளியில் பாடம் எடுக்கச் சிறப்பாக உள்ளது .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top