பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மண் தரமிழத்தல்

மண் தரமிழத்தல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மண்ணானது தனது பயன்பாட்டு திறனை இழத்தல், மண்தரமிழத்தல் எனப்படும். மண்ணினுடைய பௌதீக இரசாயண இயல்புகள் பயனபாட்டிற்கு ஒவ்வாத முறையில் மாற்றமடைதல் இதன் மூலம் குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் மண்ணனானது நீர் காற்று போன்றவற்றினுடைய செயற்பாடுகளினாலும் மற்றும் உவர்த்தன்மையடைதல் காரணமாகவும் தனது தரத்தினை இழக்கின்றது.

மண்ணரிப்பு

மண்ணும் போசனைச் சத்துக்களும் இயற்கைக் காரணிகளான ஓடும்நீர், காற்று, பனிக்கட்டியாறு போன்றவற்றாலும் மானிடக்காரணிகளான காடழிப்பு போன்றவற்றாலும் அரித்துச் செல்லப்படுதல் மண்ணரிப்பு எனப்படுகின்றது. மண்ணரிப்பு நடவடிக்கையில் அரித்தல், அரிக்கப்பட்ட மண்ணை கொண்டுசெல்லல், பின்னர் ஓர் இடத்தில் படியவிடல் ஆகிய செயற்பாடுகள் காணப்படுகின்றன.

மண்ணரிப்பினை ஏற்படுத்தும் இயற்கைக் காரணிகள்

கடும் மழைவீழ்ச்சி:- கடுமையான மழைவீழ்ச்சி ஒரு பிரதேசத்தில் ஏற்படுகின்றபோது அங்கு பெய்கின்ற மழைத்துளிகளின் பருமன் அதிகமாயிருக்கின்ற அதேவேளை மழைத்துளிகள் பூமியில் மிக்கவேகத்துடன் வந்தடைவதனாலும் மண்ணரித்தல் இடம்பெறுவதற்கு துணைநிற்கின்றது.

வெள்ளப்பெருக்கு

 • நதியானது தனது நீரின் கனவளவு அதிகரிக்கின்றபோது அந்நதியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளின் பரப்பளவும் அதிகரித்துக் காணப்படும். இதன்போது நதிப்படுக்கைகளையண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கினால் மண்ணரிப்பு இடம்பெற ஏதுவாகின்றது.
 • கடல் அலையின் தொழிற்பாடு:- கரையோரப்பிரதேசங்களில் கடலலையின் செயற்பாடு கரையோர மண்ணரிப்பிற்கு காரணமாகின்றது. அலைகள் கரையோர நிலத்திலுள்ள மண்ணை அரித்து கடல்பரப்பை அதிகரிக்கின்றதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தின் நிலப்பரப்பளவையும் குறைவடையச்செய்கின்றது.

காற்று

அதிக வரட்சியுடையதும் தாவரப்போர்வை குறைவான பிரதேசங்களிலும் காற்றின் மூலம் அதிகளவில் மண்ணரித்தல் இடம்பெறுகின்றது. பொதுவாக பாலைவனப்பிரதேசங்களில் அதிகளிவில் மண்ணரிப்பு நிகழ்கின்றது.

மண்ணரிப்பினை ஏற்படுத்தும் மானிடக் காரணிகள்

காடுகளை அழித்தல்

இன்று அதிகரித்துவரும் சனத்தொகை பெருக்கம் காரணமாக வளங்கள் அதிகளவில் நுகரப்படுகின்ற அதேவேளை குடியிருப்புகளுக்கான நிலங்களின் தேவையும் அதிகரித்து வருகின்றது. குடியிருப்புக்களை அமைத்துக்கொள்வதற்காகவும், விவசாய நடவடிக்கைகளுக்காகவும், வீதி மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. இத்தகைய பிரதேசமொன்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றபோது மண்ணரிப்பு ஏற்படுகின்றது.

சேனைப் பயிர்ச்செய்கைக்காக காடுகளை அழித்தல்

சேனைப்பயிர்ச்செய்கை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் காடுகளை வெட்டி அவற்றை எரித்து சாம்பலாக்கி அதன் மூலம் கிடைக்கின்ற பசளையை பயன்படுத்தி மழை நீரை பயன்படுத்தி பயிர்செய்யப்படுகின்ற ஒரு முறையாகும். இதன்போது குறிப்பிட்ட பகுதியில் நேரடியாக நிலத்தில் மழைபெய்கின்றபோது தாவரப்போர்வை இன்மையால் மண்  தின்னலுக்குட்படுகின்றது. உதாரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய பிற்போக்கான ஒரு பயிர்ச்செய்கை முறையினால் மண்ணரிப்பு ஏற்படுகின்றது.

உயர் பிரதேசங்களில் கட்டடம் அமைத்தல்

கடல் மட்டத்திலிருந்து உயரமான மேட்டுநிலங்களில் அல்லது மலைச்சாய்வுகளில் கட்டடங்களை அமைப்பதற்காக குறிப்பிட்ட நிலம் கட்டட நிர்மாணிப்பிற்கு ஏற்றவாறு தாவரப்போர்வைகள், மற்றும் உயர்ந்த பகுதிகள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்படுகின்றன. இதனால் அத்தகைய உயர்பிரதேசங்களில் இலகுவில் மண் அரித்துச் செல்ல வசதியேற்படுகின்றது.

மட்பாதுகாப்பு அணைக்கட்டுக்களை அகற்றுதல்

வெள்ளப்பெருக்கிற்கு உட்படுகின்ற பகுதிகளில் நதியின் நீரானது வெளிப்பாயாதவாறு பாதுகாக்கின்ற வெள்ளப்பாதுகாப்பு அணைக்கட்டுகளை சிறப்பாக பராமரிக்காமல் விடுகின்றபோதோ அல்லது அவற்றை அகற்றுகின்றபோதோ நதியினால் மண்ணரிப்பு ஏற்பட வழிஏற்படுகின்றது.

கீழ்வளரிகள் மற்றும் மூடு தாவரங்களை அகற்றுதல்

கீழ்வளரிகள் மற்றும் மூடுதாவரங்கள் நீர் மேற்பகுதியினால் ஓடிச்செல்கின்றபோது நீரை மாத்திரம் வடியவிட்டு அடையல்களையோ அல்லது மண்பொருட்களையோ எடுத்துச்செல்லாது பாதுகாக்கக் கூடியவை. இத்தகைய மூடுதாவரங்களை அகற்றுகின்றபோது பிரதேசத்தின் மட்காப்புதிறன் அற்றுபோக மண்ணரிப்பு ஏற்படுகின்றது.

அளவுக்கதிகமாக மந்தைகளை மேய்த்தல்

அளவுக்கதிகமாக மந்தைகளை மேய்க்கின்றபோது முளைத்துவருகின்ற மிகச்சிறிய புற்கள் கூட மந்தைகளால் உண்ணப்பட்டுவிடுகின்றன. இதனால் புல்வெளிகள் அற்றுப்போய் மண்ணரிப்பு ஏற்படுகின்றது.

சுரங்க அகழ்வுகள்

 • சுரங்க அகழ்வின்போது பாரிய கிடங்குகள் அல்லது குழிகள் ஏற்படுகின்றன. இக்குழிகளின் அருகிலுள்ள பிரதேசங்களிலிருந்து மழைகாலங்களில் குழிகளை நோக்கி மழைநீர் ஓடிவருகின்றபோது. இதனால் அயற்பிரதேசம் மண்ணரிப்பிற்கு உள்ளாகின்றது.
 • மண்ணின் தின்னலுக்கு தாக்குப் பிடிக்க முடியாத விவசாய முறைகள். உதாரணமாக பொருத்தமற்ற சாய்வுகளில்  உருளைக்கிழங்கு பயிர்செய்கைகளை மேற்கொள்ளல்.

மண்ணரிப்பினால் ஏற்படும் பாதிப்புக்கள்

குறுங்கால உற்பத்தித் திறனில் ஏற்படும் தாக்கம்

 • பயிர்விளைவில் ஏற்படும் இழப்பு
 • உள்ளீடுகளில் ஏற்படும் இழப்பு
 • நீர் இழப்பு
 • மேலதிக முகாமைத்துவ நடவடிக்கை
 • காலம் தாழ்த்திய விதைப்புக்கள்

நீண்ட கால அடிப்படையில் உற்பத்தித் திறனில் பாதிப்பு

 • மண்ணின் மேற்படை இழக்கப்படல்
 • மண்ணின் நீர் கொள்ளளவு திறனில் குறைவு
 • மண்ணின் சேதனப் பொருளின் அளவு குறைதல்
 • தாழ்வு நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு
 • நீர்த்தேக்கங்களின் கனவளவு குறைவடைதல்.
 • நீர்சார்ந்த உயிரினங்கள் பாதிக்கப்படும்.

மண்ணரிப்பினை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகள்

 • புற்கள் மூடுதாவரம் என்பவற்றை வளர்த்தல்.
 • மட்பாதுகாப்புக்கு அணைக்கட்டுக்களை கட்டுதல்.
 • மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
 • காடழிப்பு மற்றும் மட்பாதுகாப்பற்ற விவசாய முறைகளை தடை செய்தல்.
 • நில முகாமைத்துவ முறைகளைக் கடைப்பிடித்தல்.
 • SALT (சாய்வு விவசாய நில தொழில்நுட்பம்) முறையைப் பின்பற்றுதல்.
 • கூட்டு முகாமைத்துவ திட்டங்களை ஏற்படுத்தல்.
 • சமஉயரக்கோட்டு அடிப்படையில் உழுதல்.
 • படிக்கட்டு முறைவிவசாயத்தை மேற்கொள்ளல்.
 • நேர்கோட்டுப் பயிர்ச்செய்கை முறை.
 • மந்தைகளை சுழற்சிமுறையாக நிலங்களில் மேயவிடல்.

மட்பாதுகாப்பு முறைகள்

 • கல்படிக்கட்டுக்கள்
 • சமவுயர அணைகள்
 • நிர்வெளியேற்ற வடிகால்
 • இருக்கை வடிவிலான படிக்கட்டுக்கள்

விவசாய ரீதியான மட்பாதுகாப்பு முறைகள்

 • சமவுயரக்கோட்டு விவசாயம்
 • மரவேர்க் காப்பு
 • உழுது பயிரிடலைக் குறைத்தல்
 • மூடுபயிர்களை வளர்த்தல்

உயிரில் ரீதியான மட்பாதுகாப்பு முறைகள்

 • புல் தடுப்புகள்
 • மரவரிசை வேலி

மண்ணரிப்பை அளவிடும் முறைகள்

 • மண்ணரிப்பினை அளவிடுவதற்கும் கணிப்பதற்கும் என பல்வேறு வகையான சமன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் சில முக்கியமான முறைகள் இங்கு தரப்படுகின்றன.
 • ஆண்டு சராசரி மண் இழப்பினை அழவிடுவதற்கு 1965 இல் உருவாக்கம் பெற்றதுடன் அது 1978 ஆம் ஆண்டுகளில் Wischmeier, Smith போன்றோரால் முன்வைக்கப்பட்டது.

சாய்வு விவசாய நில தொழில்நுட்பத்தை (SALT METHOD) பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் :-

 • சாய்வான விவசாய நிலங்களில் மண்ணைப் பாதுகாப்பதற்கான செலவு குறைந்ததொரு முறையாக விளங்குகின்றது.
 • தற்போது நடைமுறையிலுள்ள உற்பத்தி முறையுடன் உயிரியல் ரீதியான அரித்தல் கட்டுப்பாட்டு முறைகளை ஒன்றிணைக்கும் ஒரு முறையாக உள்ளது.
 • நிலவளங்களின் நிலைபேண் பயன்பாட்டினை இம்முறை பிரதான நோக்காகக் கொண்டிருக்கின்றது.
 • பல்வேறு பிரதேசங்களுக்கு பிரயோகிக்கக் கூடியதாகவுள்ளது.
 • குறைந்த செலவில் இலகுவாக அமைக்க முடியும்.
 • மண் அரித்தலைக் கட்டுப்படுத்துகின்றது.
 • மண்ணின் வளத்தை மேம்படுத்துகின்றது.
 • செயற்கை உரங்களின் பாவனையை குறைக்கின்றது.
 • வறண்ட பருவங்களில் விலங்குகளுக்கான உணவினை வழங்குதல்.

ஆதாரம்: அக்‌ஷயன் BA

2.94230769231
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top