பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு / மாசுபடுதல் – ஓர் கண்ணோட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாசுபடுதல் – ஓர் கண்ணோட்டம்

சுற்றுச்சூழல் மாசுபடுதல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நாம் அன்றாடம் மாசுபடுதல் பற்றிய செய்திகளை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கொண்டே இருக்கிறோம். மாசுபடுதலால் உலகில் வெப்பமயமாதலும், அண்டார்டிகாவிலுள்ள பனிமலைகள் உருகுதலும், ஒசோன் மண்டலம் சுருங்குவதாலும், சூரிய ஒளியின் அதிவெப்பம் புவியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதும், இவற்றால் வளங்களுடன் மனித வளமும் சீர்கேடு அடைவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே உள்ளன. அதிவேகமாகப் பெருகும் மக்கள் தொகையும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாம் பயன்படுத்தும் வாகனங்களின் புகையும் நிலம், நீர் மற்றும் காற்றின் இயற்புத்தன்மையை மாற்றி பல்வேறு பெளதீக, இரசாயன மற்றும் உயிரின மாற்றங்களை உருவாக்குகின்றன. இச்செயல்முறையை மாசுபடுதல்’ என்கிறோம். மாசுபடுதல் தொடர்ந்து நடைபெற்றால் புவியின் உயிரினம் அனைத்தும் விரைவில் அழியக் கூடிய அபாயமுள்ளது. எனவே மாசுபடுதல் மற்றும் மாசுபடுதலிலிருந்து புவியை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றிய கருத்துக்களை ஆசிரிய மாணாக்கர்கள் அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

காற்று மாசுபடுதல் (Air Pollution)

புவியில் உயிரினம் வாழ்வதற்கு வளிமண்டலம் இன்றியமையாதது. வளிமண்டலம் பல வாயுக்களின் கலவையாகும். இதில் நைட்ரஜன் 78.09% ஆக்சிஜன் 20.95, ஆர்கான் 0.93, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் சில குறைந்த அளவுள்ள வாயுக்கள் அடங்கியுள்ளன. மனிதனுக்கு மிகவும் அவசியமான ஆக்சிஜன் வளிமண்டலத்திலுள்ளது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 20,000 முறை சராசரி 16 கிலோகிராம் காற்றை ஆக்சிஜனுடன் வளிமண்டலத்தில் இருந்து பெற்று வெளிவிடுகிறான். இக்காற்று நாளுக்கு நாள் நச்சுக்காற்றாக மாசுபட்டுக் கொண்டே வருகிறது. மனிதன் சுவாசிக்கும் இந்த நச்சுக்காற்று அவனது உடல் நலத்தைப் பாதித்துக் கொண்டே வருகிறது. வளிமண்டலத்திலுள்ள காற்றில் கனிம மற்றும் கரிம வேதியியல் பொருட்களாக மாசுபடுத்தும் பொருட்கள் திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் வந்து கலக்கிறது. குறிப்பாக கார்பன்-டை- ஆக்ஸைடு, புளோரோ கார்பன், நைட்ரஜன் ஆக்ஸைடு, கந்தக கூட்டுப் பொருட்கள், அமோனியா, நைட்ரோகார்பன்ஸ் மற்றும் இத்துடன் கிரிப்டான், ஏரோசால் போன்றவைகள் மாசுக்களாக அதிகம் கலக்கிறது. மாசுபடுதலின் தன்மையும் அளவும் மாசுக்களின் தன்மை மற்றும் அளவைப் பொறுத்து அமைகின்றன. இது இடத்திற்கு இடம் மனிதனின் செயல்பாடுகளுக்குகேற்பவும், இயற்கை சூழ்நிலைக்கு ஏற்பவும் மாறுபடுகிறது. காற்று இரு வழிகளில் மாசுபடுகிறது.

அவையாவன,

இயற்கை நிகழ்வுகளால் காற்று மாசுபடுதல்

எரிமலை வெடித்தலால் வெளிப்படும் தூசி, சாம்பல், புகை, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் பல வாயுக்கள் வெளிப்படுவதாலும், விண்வெளியில் உள்ள எரிகற்கள், ஒன்றுடன் ஒன்று மோதி விழுவதால் தோற்றுவிக்கப்படும் தூசிகளாலும், செடிகளிலிருந்து வெளிப்படும் நீராவிப்போக்கின் காரணமாகவும், நுண்ணுயிர்களிலிருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு மூலமும், நிலம் மற்றும் கடலிலிருந்து வெளிவரும் உப்பு மற்றும் மண் பொருட்களாலும், காற்று மாசுபடுகிறது.

மனித நடவடிக்கைகளால் காற்று மாசுபடுதல்

 • வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் குப்பைகளை எரித்தல் மூலமாகவும், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்காற்று மூலமும்.
 • தொழிற்சாலைகளிலிருந்தும், சுரங்கங்களிலிருந்தும் பெரிய நகரங்களிலிருந்தும் குவிக்கப்படுகின்ற திடக் கழிவுப் பொருட்களினாலும்.
 • அணுக்கரு உலைகளிலிருந்து அணுசக்தி வெளியாவதாலும், அணுக்கரு பிளவு போன்றவற்றால் ஏற்படும் கதிர்வீச்சாலும்.
 • வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை, வெப்பம் போன்றவற்றாலும், காற்று மிக வேகமாகவும், அதிக அளவிலும் மாசுபடுகிறது.

காற்று மாசுபடுதலின் விளைவுகள்

காற்று அதிவேகமாக பன்மடங்கில் மாசுபடுதலால் கீழ்கண்ட விளைவுகள் ஏற்படுகின்றன.

வானிலை மற்றும் காலநிலை மாற்றம்

காற்று மாசுபடுதல் பல்வேறு வழிகளில் ஏற்படுவதன் காரணமாக நமது இருப்பிடத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும், உலக அளவிலும் காலநிலை மற்றும் வானிலையில் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்தும் மற்றும் நவீன பொருட்களிலிருந்தும் வெளியேற்றும் குளோரோ-புளோரோ கார்பன்கள், வளிமண்டலத்திலுள்ள ஒசோன்’ மண்டலத்தை வேகமாகப் பாதித்து வருகிறது. இதன் காரணமாக புவியின் மேற்பரப்பில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் விளைவாக ஆர்க்டிக், அண்டார்டிக் போன்ற இடங்களில் உள்ள பனிப்பாறைகளையும், பனிப்படிவுகளையும் உருக வைக்கிறது. இதனால் கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடலுக்கு உள்ளே உள்ள பல தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பசுமை இல்ல விளைவு

கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் பல வாயுக்கள் தொடர்ந்து வளிமண்டலத்தில் சேர்ந்து வருவதால் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல விளைவு அதிகமாக வருகின்றது.

புகைமூட்டம் பரவல்

வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையான கார்பன் மோனாக்ஸைடு, கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் பனிமூட்டத்தோடு சேரும்பொழுது புகை மூட்டம் தோன்றுகிறது. இது மனித உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கிறது.

மழைப்பொழிவின் போது மழைநீருடன் கலந்து வரும் அமிலத்தையே ‘அமிலமழை என்று அழைக்கிறோம். இது பெரும்பாலும் சல்பர் ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகியவற்றால் தோற்றுவிக்கப்படுகிறது. நீரின் PH மதிப்பு 7.0 இருத்தல் நல்லது. இதற்குக் குறைவாக இருந்தால் நீர் அமிலத்தன்மை அதிகம் கொண்டதாக இருக்கும். இதற்கும் அதிகமாக இருந்தால் காரத்தன்மை கொண்டதாக மாறிவிடும். PH மதிப்பு 4.0க்கும், அதற்கும் கீழும் சென்றால் அந்நீரைப் பயன்படுத்தினால் மிகவும் மோசமான உடல் நலக்கேட்டைத் தோற்றுவிக்கும்.

மனிதனுக்கு ஏற்படும் உடல் நலச் சீர்கேடு

கார்பன் மோனாக்ஸைடு பெருமளவில் மாசுபடுத்தும் காரணியாகும். இது மனித இரத்தத்தில் உள்ள கீமோகுளோபினில் உள்ள மூலக்கூறுகளில் ஆக்சிஜனை விட சுமார் 200 மடங்கு வேகமாகக் கலக்கிறது. இதனால் நமக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

வளிமண்டலத்திலுள்ள ஒசோன்’ அடுக்கில் துளைகள் ஏற்பட்டுள்ளன. அத்துளைகளின் வழியாக வெளியேறும் சூரியக்கதிர்வீச்சில் உள்ள புறஊதாக் கதிர்கள் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் போன்றவற்றை தோற்றுவிக்கிறது.

தாவரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

ஒசோன் மண்டலம் தொடர்ந்து கார்பன் பொருட்களால் பாதிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புறஊதாக்கதிர்கள் தாவரமண்டலத்தை பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக தாவரங்களின் பச்சையம் தயாரிக்கும் திறன், தாவரங்களின் பெருக்கம் மற்றும் மண்ணின் ஈரத்தன்மை போன்றவை பெரிதும் குறைகின்றன.

ஆராய்ந்து வகைப்படுத்துதல். (எ.கா- வாகனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், தேவையற்ற பொருட்களை எரித்தல் போன்றவற்றிற்கான தீர்வுகளை சிந்தித்து அட்டவணையிடுதல்.

காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்துதல்

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதற்கான தொழில் நுட்ப வளர்ச்சியால், காற்று மாசுபடுதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இருப்பினும் அவற்றை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். நமது வாழ்க்கைக்கு உகந்த சூழ்நிலையைத் தோற்றுவித்தல் நமது கடமை. அதற்காகக் கீழ்க்கண்ட சில உத்திகளை நாம் கையாள வேண்டும்.

அவையாவன,

 1. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் ‘மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
 2. தொடர்ந்து மாசுபடுதல் நிலையையும், அளவையும் கண்காணித்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்தல்.
 3. அறிவியல் ரீதியில் மாசுபடுதலுக்கு காரணமாக உள்ள மூலப்பொருட்களை அறிந்து, அவற்றின் பயன்பாட்டினைக் குறைக்கச் செய்தல்.
 4. வளிமண்டலத்தில் மாசுப்பொருட்கள் சேராமல் இருக்க உரிய வழிமுறைகளை ஆராய்தல்.

நீர் மாசுபடுதல்

(Water Pollution) உயிரினங்களுக்கு மிகவும் அடிப்படையான தேவைகளுள் ஒன்று நீர் ஆகும். நாம் வாழும் உயிர்க்கோளமாகிய புவியில் உள்ள மொத்த நீரில் ஒரு சதவீதம்தான் சுத்தமான நீராக உயிரினங்களுக்கு கிடைக்கிறது. நிலத்தடிநீர் மூலம் பெருமளவு நீர் கிடைத்தாலும், வளர்ந்து வரும் மக்கள் தொகையின் காரணமாகவும், தொழிற்சாலைகளின் நீர்த் தேவைகள் அதிகரிப்பதாலும் நீரின் அளவு குறைவதோடு நீரின் தரமும் குறைந்து கொண்டே வருகிறது. நீர் மாசுபடுதலால், அதை உட்கொள்ளும் மனிதனும், விலங்கினங்களும் பல்வேறு உடல் நலக்கேட்டை அடைகின்றனர்.

நீர் மாசுபடுதல் கீழ்கண்ட வழிகளில் ஏற்படுகிறது.

இயற்கை

மண் அரிப்பு, எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு, உயிரினங்கள் அழுகிப்போதல் ஆகியவற்றால் நீர் மாசுபடுதல் ஏற்படுகிறது. ஆறுகள் அரித்து வரும் பொருட்களும், கடத்திவரும் பொருட்களும் நீரில் கலந்து நீர்தூய்மைக் கேட்டைத் தோற்றுவிக்கிறது.

மனித நடவடிக்கைகள்

மனிதனின் அன்றாட நடவடிக்கைகள் மூலம் நீர் மாசுபடுதல் அதிகமாக நடைபெறுகின்றது. இவை தொழிற்சாலைக் கழிவுகள், விவசாயக் கழிவுகள், பெருகிவரும் நகரமயமாதல், கலாச்சாரம், கட்டமைப்புகள் ஆகியவற்றால் ஏற்படுவன ஆகும். மேலும், நகரத்தின் சாக்கடைகள், விவசாயத்திற்கு பயன்படுத்தும் இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகள் மூலமாகவும், நிறைய மக்கள் சமய, கலாச்சார நிகழ்வுகளுக்கு ஒன்றும், குளங்களில் கால்நடைகளை குளிப்பாட்டுவதாலும், குப்பை கூளங்களை குளங்களிலும், ஆறுகளிலும் கொட்டுவதாலும் நீரின் தன்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

நீர் மாசுபடுதலை தோற்றுவிப்பவை

 • தொழிற்சாலைகளிலிருந்து வருபவை
 • விவசாயத்தின் மூலம் வருபவை
 • நகரத்தின் மூலம் வருபவை
 • இயற்கையின் மூலம் வருபவை

நீர் மாசுபடுதலின் வகைகள்

நீர் மாசுபடுதல் ஏற்படும் விதத்திலிருந்து அவற்றைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

 • நிலத்தின் மேல் உள்ள நீர்மாசுபடுதல்
 • ஏரிகளில் உள்ள நீர்மாசுபாடு
 • நிலத்தடி நீர் மாசுபடுதல்
 • கடல்நீர் மாசுபடுதல்

அரசு நிறைய புதிய திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தியும், மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம்தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.

நிலம் மாசுபடுதல் (Soil / Land Pollution)

உயிர்க்கோளத்தில் உள்ள உயிரினங்களுக்கு நீரைப் போன்று நிலத்திலுள்ள மண்ணும் அவசியமாக தேவைப்படும் பொருள் ஆகும். மண் வளமாக இருந்தால்தான் பயிர்கள் பெருமளவில் பயிரிட முடியும். வளமான மண்ணிலிருந்துதான் உயிரினங்களுக்கு தேவைப்படும் உணவுப் பொருட்களை விளைவிக்க இயலும். மண் தோன்றுவதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது. ஒரு 2 1/2"செ.மீ(அ) 1"மண் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மனித நடவடிக்கைகளாலோ அல்லது இயற்கை வழியிலோ மண்ணின் தரம் குறைந்தால் அதனை நிலம், மண் மாசுபடுதல் என்கிறோம். இது மண் அரிப்பினாலும் தாவரங்களில் உள்ள சத்துக்கள் குறைவதாலும், மண்ணில் உள்ள நுண் உயிரிகள் குறைவதாலும், ஈரப்பதமின்மையாலும் தோன்றுகிறது. மேலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றாலும் மாசுபடிந்த நீர் தேங்குவதாலும், காட்டுத் தீ ஏற்படுவதாலும், நகரங்களில் குவிக்கப்படும் கழிவுப் பொருட்களாலும் மாசுக்கள் அதிகமாக்கப்பட்டு வருகிறது.

நிலம் / மண் மாசுபடுதலை ஏற்படுத்தும் காரணிகளை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

 • பௌதீகக் கூறுகள்
 • மண் அரிப்பு, மழையளவு, வெப்பநிலை, காற்று, தாவரங்களின் பரவல், மண்ணின் தன்மை போன்றவைகளால்.
 • உயிரிகள் மூலம்
 • நுண்ணுயிரிகள், தேவையற்ற தாவரங்கள், வீட்டு விலங்குகளிலிருந்து வெளியேறும் நுண்ணுயிரிகள் போன்றவை.
 • தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகைகள், வாகனங்களில் இருந்து வரும் புகை, வீடுகளில் இருந்து வெளியேறும் புகை, அமில மழை போன்றவை.
 • விவசாய உற்பத்தியை பெருக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், மற்றும் மருந்துகள் போன்றவை.

பாதரசத்தால் ஏற்படும் மாசு

சமீபகாலத்தின் ஆய்வுகள், பாதரசத்தால் (Hg) ஏற்படும் சுகாதார கேடுகள் பற்றி வெளியிட்டிருக்கின்றன. தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காட்டுப்பகுதிகளில் மினமாட்டா (Minamata) என்ற நோய் நரம்புகளை வலுவிழக்கச் செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதரசத்தின் (Hg) விளைவுகள் இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் காணப்படுகிறது. மனித நடவடிக்கைகளாலும், புவி செயல்பாடுகளாலும், எரிமலை வெடிப்பாலும் வெளியில் வருகிறது. பாதரசம் மற்றும் பாதரசத்தால் ஏற்படும் விளைவு அதிகமாக இருந்தால், உணர்வின்மை (Loss of sensation), பார்வையிழப்பு (Blindness), நினைவின்மை (Coma), போன்ற நோய்களை தோற்றுவிக்கிறது.

உலகத்தில் மிக அதிகமான அளவு பாதரசம் (Hg) அடிப்பாறை அடுக்குகளிலும், ஆழ்கடல் படிவுகளிலும் காணப்படுகிறது. உலகத்தின் மொத்த பாதரசத்தின் அளவு 10"g எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் 10-15 சதவித பாதரச வெளிப்பாடு மனித நடவடிக்கைகளால் வெளியேறுகிறது. குறிப்பாக மின் மற்றும் மின் அணு தொழிற்சாலைகளால் வெளியேறுகிறது. இவற்றால் வரும் கழிவுகள் சுற்றுச் சூழலுக்கும் உயிர் வாழ்தலுக்கும் மிகுந்த இடையூராக அமைந்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள்

பிளாஸ்டிக் கழிவுகளினால் சூழ்நிலை அமைப்பிற்கும் மனித உடல்நலத்திற்கும் மிகுந்த கேடு விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 4-5 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் தோற்றுவிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் கீழ்க்கண்ட பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது.

 • பிளாஸ்டிக் கழிவுகள் அழிவதில்லை.
 • மண்ணில் நீர் வடிந்து செல்வதைத் தடுக்கிறது.
 • கழிவுநீர் குழாய்களையும், வீட்டிற்குப் பயன்படும் குழாய்களையும் அடைத்துக் கொள்கிறது.
 • பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும் போது நச்சு புகையும், வாயுக்களால் (Toxie fumes and gases) வெளியாகி மனித உடல்நலத்தைக் கெடுக்கிறது.
 • பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும்போது அதிகமான கரியமில வாயு வளிமண்டலத்தில் கலந்து புவி வெப்ப அதிகரிப்பை (Global Warming) அதிகப்படுத்துகிறது.

தடுப்பு முறைகள்

 • பிளாஸ்டிக் பொருட்களை குறைத்துக் கொள்ளுதல் (Reduce) மீண்டும் பயன்படுத்துதல் (Reuse) மறு சுழற்சியில் பயன்படுத்துதல் (Recycle)
 • பணை, தென்னை ஒலைகளால் செய்யப்பட்டப் பொருள்களை பயன்படுத்துதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு சாலைகள் போடும் புதிய தொழில் முறை கண்டறியப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

நிலம், மண் மாசுபடுவதால் மனிதனுக்கு மிகவும் அவசியமான உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் நிலங்களை பயன்படுத்த முடியாத நிலை கூட ஏற்பட்டுவிடுகிறது. மண்ணின் வளம் காக்க தகுந்த நடவடிக்கைகளோடு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமாகும்.

ஒலி மாசுபடுதல் (Noise Pollution)

அதிகமான சப்தத்தின் காரணமாக மனிதனுக்கு ஏற்படும் மனச்சோர்வு (Discomfort) மற்றும் மன அமைதியின்மை (Restlessness) யையே ஒலி மாசுபடுதல் என்கிறோம். இது இயற்கையாகவும், மனித நடவடிக்கைகள் மூலமாகவும் தோற்றுவிக்கப்படுகிறது. மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்வளர்ச்சி மற்றும் நகரமயமாதல் போன்ற மனித செயல்பாடுகளால் ஒலி மாசு தோற்றுவிக்கப்படுகிறது.

அதிக அழுத்தமும் தீவிரமும் கொண்ட ஒலியைத்தான் மாசுபட்ட (Noise) ஒலியாகக் கருதப்படுகிறது. ஒலி அளவானது டெசிபல் (Db) என்ற அலகால் அளவிடப்படுகிறது.

கீழ்கண்ட அட்டவணையை உற்றுநோக்கவும்.

0 - 30 Db - மிகவும் மெதுவான ஒலி (Whispering)

50-55 Db - தூக்கத்தை கலைக்கும் சப்தம்

60 - 90 Db - சாதாரணமாகப் போடும் சப்தம்

90 - 95 Db - மாற்ற முடியாத நரம்பியல் தாக்கத்தை தோற்றுவிக்கும் சப்தம்

150-160 Db - சில விலங்குகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சப்தம்

ஒலி மாசுபடும் விதத்தை வைத்து கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.

இயற்கையாகத் தோன்றுபவை : இடி, மிக வேகமாக வீசும் காற்று, புயல், ஆலங்கட்டி மழை, இடியுடன் கூடிய காற்று, நீர் வீழ்ச்சி, அதிக மழை போன்றவை.

உயிரினங்களால் தோன்றுபவை விலங்கினங்களின் சப்தம், மனிதர்களின் நடவடிக்கைகள் (சப்தமாக சண்டையிடுதல், பாடுதல், சிரித்தல்) போன்றவை.

செயற்கையாகத் தோன்றுபவை : மனிதனின் செயல்பாடுகளான மிகுந்த சப்தத்துடன் இசைக்கருவி வாசித்தல், பட்டாசு வெடித்தல், விமான ஒலி, தொழிற்சாலைகளிலிருந்து வரும் ஒலி, வாகனங்கள் தோற்றுவிக்கும் ஒலி போன்றவை.

ஒலி மாசுபடுதலினால் ஏற்படும் விளைவுகள்

நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவுக்கு மேல் ஏற்படும் ஒலிகள் சிறிய இடர்பாடுகளிலிருந்து நிரந்தரமாக காதுகேளாமை நிலைக்குத் தள்ளிவிடும் தன்மை கொண்டது. எனவே இந்த விளைவுகளைத் தோற்றுவிக்காத வண்ணம் நமது ஒவ்வொரு செயல்களையும் கண்காணித்து நடந்து கொள்வது அனைவருக்கும் நலமானது.

நகரமயமாதல்

வளர்ந்து வரும் மக்கள் தொகைப் பெருக்கமும், தேவையும் மனிதர்களை நகரத்தை நோக்கி குடி பெயரச் செய்கிறது. இதன் காரணமாக நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது நிறைய சூழ்நிலைக்கேடுகளை தோற்றுவிக்கிறது. நகரத்தில் கட்டிடங்களுக்கு பயன்படுத்தும் பொருட்களாலும், நடைபாதைகளாலும் இங்கு நிலவும் வெப்ப சமநிலை பாதிக்கப்படுகிறது. மேலும் காற்றின் சுழற்சியையும் இது பாதிக்கிறது. நகரத்தில் வெளிவரும் புகை மற்றும் பல கழிவுப் பொருட்களின் காரணமாக காலநிலையும் பாதிக்கிறது. காற்று மிகவும் வேகமாகப் பாதிக்கப்பட்டு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காற்றில் கலக்கும் மாசுக்களால் பார்க்கும் திறன் (Visibility) மிகவும் குறைந்து வருகிறது. வாகனங்களிலிருந்து வரும் புகை தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, வீடுகளிலிருந்து வரும் புகை, மற்றும் குளோரோ புளோரோ கார்பன் போன்றவைகள் பனியுடன் சேரும்போது புகை மூட்டத்தை தோற்றுவிக்கிறது. இது மிகவும் நச்சுத் தன்மை கொண்டது. சில நேரங்களில் உயிரிழப்பு நேரிடவும் இது காரணமாக அமைகிறது.

சுற்றுச்சூழலின் தரம் குறைதல்

சுற்றுச் சூழலின் தரம் குறைதல் என்பது சூழ்நிலையில் தான் வசிக்குமிடத்திலும் அந்த பகுதியிலும் உலக அளவிலும் இயற்கை மாற்றங்களாலும் மனித நடவடிக்கைகளாலும் குறைந்து கொண்டே வருகிறது.

பசுமை இல்ல விளைவு

கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தின் ஒரு போர்வை போல படர்ந்து புவியிலிருந்து வெளியில் செல்லும் வெப்பத்தைத் தடுத்து தொடர்ந்து வெப்ப நிலையை புவியில் அதிகரிக்க செய்கிறது. இதனை பசுமை இல்ல விளைவு (Green house effect) என்று அழைப்பர். இந்த நிலைக்குக் காரணமாக இருக்கும் வாயுக்கள் பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாயுக்கலவை சூரிய கதிர்வீசலை ஊக்குவிக்கிறது. ஆனால் புவியிலிருந்து வெளியில் செல்லும் (Long Waves) கதிர்வீச்சை எடுத்துக் கொள்கிறது. இதனால் புவியின் மேற்பரப்பும் அதற்கு அருகாமையில் உள்ள வளிமண்டலமும் தொடர்ந்து வெப்பமடைகிறது.

காடுகள் அழிதல்

காடுகள் மனிதனுக்கு பல வழிகளில் மிகுந்த உதவிபுரிகிறது. நமக்குத் தேவையான கச்சாப் பொருட்களையும், மரங்களையும் தருவதோடு, விலங்குகள், பறவைகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றிற்கு வாழிடமாக அமைந்தள்ளது. மேலும் காடுகளால் வளிமண்டலத்திற்கு ஆக்ஸிஜன் சேர்க்கப்படுகிறது. மண் அரிப்பு தடைசெய்யபடுகிறது மற்றும் மழைப் பொழிவதற்கு உதவுகிறது. ஆனால் மனிதன் விவசாயம், மேய்த்தல் தொழில் போன்றவற்றை நிலையாகச் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே காடுகளுக்கு ஆபத்து நிகழ ஆரம்பித்து விட்டது. அதிவேகமாக கட்டுங்கடங்காமல் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் காரணமாகக் காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது. இதனால் உடனடியாக மண் அரிப்பு ஏற்படவும், சூழ்நிலை சமநிலையில் மாற்றம் ஏற்படவும் வழி உண்டாகிறது.

வெப்ப மண்டலப்பகுதியிலும், மித வெப்பமண்டலப் பகுதியிலும் உள்ள நிறைய வளர்ந்து வரும் நாடுகள் விவசாயத்திற்காக மிகுந்த காடுகளை இழந்துவிட்டது. இந்தியா இதற்கு விதிவிலக்கு அல்ல. ஒரு நாட்டிற்கு அதனுடைய புவியியல் பரப்பில் 33 சதவிகிதம் காடுகளாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நிலையில் 20.4 சதவிகிதம் குறைவாகவே உள்ளது. இதனை ஈடுகட்ட காடுகள் வளர்க்கப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் தோற்றுவிக்க வேண்டும். உலக அளவில் 7.3 பில்லியன் ஹெக்டர் அளவு வெப்பமண்டலக் காடுகள் ஒவ்வொரு வருடமும் அழிந்து வருகின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கு 14 ஹெக்டேர் காடுகள் அழிந்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 1.3 பில்லியன் ஹெக்டர் அளவு காடுகள் குறைந்து கொண்டே வருகின்றன.

காடுகள் அழிவதற்கான முக்கியக் காரணங்கள் :

 1. விவசாய விரிவாக்கம்
 2. மலைக் காடுகளில் விவசாயம் செய்தல்
 3. மேய்த்தல் தொழில்
 4. விறகிற்காக அழித்தல்
 5. கட்டுமானப் பொருட்களுக்காக அழித்தல்

காடுகள் அழிவதால் ஏற்படும் விளைவுகள்

காடுகளை அழிப்பதன் மூலம் உயிரினச் சமநிலை மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும் வளிமண்டலத்தில் ஈரப்பதம், வெப்பநிலை, மழை அளவு போன்றவை மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. காடுகள் அழிவதால் மிகவும் அரிய மூலிகைகள், பழங்கள், தேன் போன்ற இயற்கை வளங்கள் மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த விளைவுகளை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. மண்ணின் தரம் குறைதல் மற்றும் மண் அரிப்பு ஏற்படுதல்.

2. காலநிலை மாற்றங்கள்

3. இயற்கை வாழ் உயிரினங்கள் அழிதல்

4. மாசுபடுவதைத் தடுக்கும் நிலை குறைந்து செல்லுதல்

காடுகளை பாதுகாத்தல் (Conservation of Forests)

சூழ்நிலை சீர்கேட்டைத் தடுத்து மனிதன் நலமுடன் வாழத் தகுந்த சூழலை ஏற்படுத்த கீழ்கண்ட செயல்முறைகளை மேற்கொள்வது இன்றைய முக்கியத் தேவையாகும்.

 1. காடுகள் அழித்தலைத் தடுத்தல்
 2. காடுகளை வளர்த்தல்
 3. அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

உலகின் மொத்த தூய்மையான நீரில் 1/5 பங்கையும், புவியில் உள்ள தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றில் 30 சதவிகிதத்தையும் கொண்டுள்ள அமேசான் ஆற்றுப்படுகை, அதிகரித்து வரும் வெப்பநிலையாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும் எதிர்வரும் 2030ல் சுமார் 60 சதவிகிதம் காடுகளை இழந்து விடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மரம் வளர்த்தலின் பயன்களையும், காடுகளால் நலம் பெரும் பலன்களைப் பற்றியும், நல்ல விழிப்புணர்வையும், உதவிகளையும் செய்வது அவசியம்.

புவியின் வெப்பம் அதிகரித்தல்

கடந்த 1000 ஆண்டு கணக்கின்படி புவியின் வெப்பநிலை அதாவது தரைக் காற்றின் வெப்பநிலையானது பத்தாண்டுகளிலிருந்து நூறாண்டுகளுக்குள் + 0.69 C என்ற விதத்தில் வேறுபட்டு அதிகரித்து வருகிறது. கடந்த 140 வருடங்களில் உலக அளவு கணக்கின்படி 0.45 + 0.159 C என்ற விதத்தில் உள்ளது. இந்தியாவில் சராசரி வெப்பநிலை (Minimum Temprature) 19 ஆம் நூற்றாண்டில் சுமார் 0.2 லிருந்து 0.69 C ஆக உயர்ந்திருக்கின்றது கடந்த 10 ஆண்டுகளில் 0.2 முதல் 0.3°C ஆக உயர்ந்திருக்கிறது என கணக்கிடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் 20 ஆம் நூற்றாண்டுதான் அதிக வெப்பநிலை உயர்வைக் கொண்டதாக அமைந்துள்ளது.

புவியின் வெப்பம் அதிகரித்தலுக்கு மிகவும் முக்கிய பங்கு வகிப்பது கார்பன் டை ஆக்ஸைடு, ஒசோன், மீத்தேன், குளோரோபுளோரா கார்பன், கார்பன்- டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு இவைகள்தான் பசுமை இல்ல விளைவுகளைத் தோற்றுவிக்கும் வாயுக்கள் ஆகும். இதனால் ஒசோன் படலம் மிக வேகமாத் தாக்கப்படுகிறது.

தற்போது உலக அளவில் அதிகமாக வளர்ந்து வரும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகளின் கழிவுகள் (E-Waste) ஒரு பெரும் மாசுபடுதல் பிரச்சினையாக உருவாகி வருகிறது. இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, போன்ற நகரங்களில் இவ்வகைக் கழிவுளின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

புவியின் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள்

புவியில் செயற்கை வெப்பம் அதிகரித்து வருகிறது. பனிப்பிரதேசம் உருகி நிலப்பரப்பு கடலில் மூழ்கி வருகிறது. இதனால் 300 கோடி மக்கள் தண்ணிர் இன்றி பரிதவிக்கும் பேராபத்து ஏற்படப் போவதாக சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆணையம் எச்சரித்துள்ளது. காற்றில் கரிமத்தின் அளவு அதிகரித்ததால், பூமியில் படரும் சூரியனின் வெப்பப் பிரதிபலிப்பு அதிகரித்தது. செயற்கை வெப்ப அதிகரிப்பாலும் கோடைக்காலத்தில் ஆண்டுதோறும் வெப்பத்தின் அளவு கூடி வருகிறது. முன்னர் மரங்கள் அதிகம் இருந்தது. காற்றில் கரியமிலத் தன்மை குறைந்திருந்தது. இக்காரணங்களால் வெப்பப் பிரதிபலிப்பு குறைந்திருந்தது. அப்போது காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் நீராவியாகும் அளவும் குறைந்திருந்தது. ஆனால், இன்று வெயில் அளவு குறைவாக இருந்தாலும் வெப்பப் பிரதிபலிப்பு அதிகரித்திருப்பதாக மனிதர்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வெப்பம் உணரப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கரிமத்தின் அதிகரிப்பால் புவியில் செயற்கை வெப்பம் அதிகரித்துவிட்டது. இதைக் குறைக்காவிட்டால் உலகின் பனிப்பிரதேசங்கள் முழுவதும் உருகி கடல் மட்டம் 80 மீட்டர் அளவிற்கு உயரும். இதனால், தமிழகத்தில் திருச்சிக்கு கிழக்கே உள்ள பகுதி கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான நதிகள் பனிப்பிரதேசங்களில் உற்பத்தியாகின்றன.

வெப்ப அதிகரிப்பால் இந்தியாவின் கங்கோத்திரி பனிமலை கடந்த 25 ஆண்டுகளில் 850 மீட்டர் பனிப்பிரதேசத்தை இழந்து விட்டது. இதே அளவுக்கு செயற்கை வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்து பனிப்பிரதேசம் உருகத்தொடங்கினால் 30 முதல் 50 ஆண்டுகளில் பனிமலைகள் அனைத்தும் உருகிவிடும்.

உலகில் உள்ள மொத்த நீர்வளம் 4,895 கோடி டிஎம்சி. இதில் பயன்படுத்தக் கூடிய நீர்வளம் 124 கோடி டிஎம்சி. இதில் 68.7 சதம் அதாவது 85 கோடி டிஎம்சி நன்நீர் பனிப் பிரதேசங்களில் உள்ளது.

செயற்கை வெப்பத்தினால் பனிமலைகள் உருகத் தொடங்குவதை தடுக்காவிட்டால், 2025ம் ஆண்டு 300 கோடி மக்களுக்கு உலகில் தண்ணீர் கிடைக்காமல் போய்விடக்கூடிய அவல நிலை ஏற்படும்.

இமயமலையில் 1.7 லட்சம் டிஎம்சி பனிநீர் உள்ளது. இவை உருகி வருவதால் எதிர்காலத்தில் நதிநீர் இணைப்பே சாத்தியமில்லாது போய்விடும்.

புவி வெப்பமடைவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

புவிவெப்பமடைதலின் காரணமாக வன விலங்குகளும், சுற்றுச் சூழலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அறிவியல் அறிஞர்களால் 1970-ல் இருந்து வெளி வந்த கட்டுரைகளை ஆராய்ந்து பார்த்ததில் 90 சதவீதத்திற்கும் மேலான சுற்றுச்சூழல் கேடுகளும் இடையூறுகளும் மனித நடவடிக்கைகளினால்தான் நடந்து வருகிறது என கூறுகின்றனர். அண்டார்டிகாவில் குறைந்து வரும் ‘பெங்குயின் எண்ணிக்கை மற்றும் ஆப்பிரிக்க ஏரிகளில் குறைந்து வரும் மீன்களின் எண்ணிக்கை, பறவைகளின் இடமாற்றம் போன்றவை மிக முக்கியமான புவி வெப்பமடைதலால் ஏற்படும் பிரச்சனைகளாகும். கிட்டத்தட்ட 28,800 விலங்குகள் மற்றும் தாவர வகைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வளர்ச்சிகளிலும் பெருத்த மாற்றத்தை தோற்றுவித்திருக்கிறது.

அகில உலக இயற்கை பாதுகாப்பு கழகம் (The International union for the Conservation of Nature) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 1226 வகை பறவையினங்கள் ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது என குறிப்பிடுகிறது. இந்தியாவில் சுமார் 88 வகை பறவைகள் ஆபத்து நிலையில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணினி மற்றும் இணைய வளைப்பின்னல் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம்:

ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனத்தைச் சார்ந்த 'கார்ட்னர்' என்பவர் தனது ஆய்வின்படி, தகவல் தொழில்நுட்பத்துறை புவியில் மொத்த கரியமில வாயு (CO2) பங்களிப்பில் 2% பங்கை வகிக்கிறது என தெரிவிக்கிறார். ஹார்வார்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் அலெக்ஸ் விஸ்நர் கிராஸ் இந்த துறையில் அதிகமான ஆய்வுகளை நடத்தி வருகிறார். அவர் தேடுதல் (Browsing) கிட்டத்தட்ட 0.02 கிராம் அளவு கார்பனை ஒவ்வொரு வினாடியும் வளிமண்டலத்திற்கு செல்கிறது எனக் கூறுகிறார். இது எவ்வாறு நிகழ்கிறது என்றால் இணையதளம் (Website), சேவையகம் (servers) ஆகியவை உபயோகிப்பாளர்களின் கணினிகளால் இணைக்கப்படுகிறது. இச்செயல் நடைபெற மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின்சாரம், நிலக்கரி, இயற்கை வாயு போன்ற எரிபொருட்கள் பயன்படுத்துவதாலேயே பெறப்படுகின்றது. அப்போது கரியமில வாயு வளிமண்டலத்திற்கு கடத்தப்படுகிறது. இது புவிவெப்பமடைதல் செயலுக்கு ஒரு காரணமாக அமைகிறது.

இந்தியாவில் மாசுபடுதல் அதிகமாக உள்ள இடங்கள்

இந்தியாவில், மத்திய சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு வாரியம் (The Central Polution Control Board (CPCB)) 24 மிக முக்கியமான மாசுபடுதல் பிரச்சினை உள்ள இடங்களை கண்டறிந்துள்ளது. அந்தந்த மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அவற்றுள் சில இடங்களும் அங்கு உள்ள மாசுபடுதல் பிரச்சினைகளும் கீழே தரப்பட்டுள்ளது.

இடம் மற்றும் மாநிலம் பிரச்சினை

 1. பத்ராவதி (கர்நாடகா) நீர் மற்றும் காற்று மாசுபடுதல்
 2. செம்பூர் (மகாராஸ்டிரா) தொழிற்சாலைக் கழிவுகள், இரசாயணப் பொருட்கள் போன்றவை
 3. டிக்பாய் (அஸ்ஸாம்) நீர் மற்றும் காற்று மாசுபடுதல்- எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தால் ஏற்படுவது.
 4. மண்டி கோபிந்கார் (சண்டிகர்) நீர் மற்றும் காற்று மாசுபடுதல்.
 5. பெரிய கொக்கி (கேரளா) நீர் மற்றும் காற்று மாசுபடுதல் - இரசாயன தொழிற்சாலைகள், வாகனங்கள், கழிவுப்பொருட்கள் குவித்தல் போன்றவைகளால்
 6. கலா ஆம்ப்(இமாச்சல பிரதேசம்) நீர் மற்றும் காற்று மாசுபடுதல்
 7. மணலி (தமிழ்நாடு) நைட்ரேட் (Fouride), போன்றவற்றால் நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளது. மேலும் பாதரசம், குரோமியம் போன்றவற்றின் கழிவுப் பொருட்களாலும் மாசுபடுதல்
 8. வட ஆற்காடு (தமிழ்நாடு) தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் மற்றும் ஒடும் நீர் ஆகியவை அதிகமாக மாசுபட்டுள்ளது.
 9. பாலி (ராஜஸ்தான்) நீர் மாசுபடுதல்- சிறு நெசவுத்தொழில் (Textile Industries)
 10. பர்வானு (இமாச்சல பிரதேசம்) நீர் மற்றும் காற்று மாசுபடுதல் - தொழிற்சாலை மற்றும் கழிவுப்பொருட்கள்
 11. பட்டஞ்சேறு பல்லாரா (ஆந்திரபிரதேசம்) நீர் மற்றும் காற்று மாசுபடுதல்
 12. சிங்கரெளலி (மத்திய பிரதேசம்) காற்று மாசுபடுதல் அனல்மின் நிலையம், சிமெண்ட், தொழிற்சாலை போன்றவற்றால் டால்சர் (ஒரிஸ்ஸா) குடிநீரில் கடின உலோகங்கள் கலந்துள்ளது. நந்த்ரா, பிராமணி ஆறுகளின் நீரை உடனடியாகப் பயன்படுத்த முடியாது.
 13. வாப்பி (மகாராஷ்டிரா) நீர் மாசுபடுதல்
 14. விசாகப்பட்டினம் (ஆந்திரப்பிரதேசம்) நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுதல். மாசுபடுதல் மனித உடல்நலத்தையும், சுற்றுப்புற சூழ்நிலையை மட்டும் பாதிப்பதில்லை. அந்தந்த இடங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிகளும் தடைபெற்று ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கிறது. இதற்கான விழிப்புணர்வையும் தடுப்பு நடவடிக்கைகள் எந்தெந்த வகையில் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் ஒவ்வொருவருக்கும் விளக்கப்பட வேண்டும்.

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை பல துறைகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு செயல்பாடாகும். இதில் அரசு நிர்வாகம், அறிவியல் வல்லுநர்கள், திட்டமிடுபவர்கள், தன் ஆர்வத்தொண்டு நிறுவன தொண்டர்கள், பொது மக்கள் போன்ற அனைவரும் பங்கேற்று செயல்படவேண்டும். இந்த செயல்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல், பேரிடர் நிகழ்வின் போது, பேரிடர் நிகழ்ந்து முடிந்த பின்பு போன்ற பல நிலைகளை உள்ளடக்கியது. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகும். எனவே இதனைப் பற்றிய தெளிவான கருத்துக்களையும், செயல்பாடுகளையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

பேரிடர் நிலைகள்

முன்னெச்சரிக்கை செய்தல்

பேரிடர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ள இடங்களில் முழு கவனத்தோடு தொடர்ந்து உற்று நோக்கி தேவைப்படும்போது மக்களுக்கு தெரிவிப்பது அவசியமான ஒன்று. இதனால், தேவையான பொருட்கள், உதவிகள் போன்றவற்றை தயார் செய்து கொள்ளவும், உரிய நேரத்தில் உதவி செய்யவும் இது மிகவும் அவசியமாகிறது.

தயார் நிலையில் இருத்தல்

இதன் மூலம் பேரிடரால் தோற்றுவிக்கப்படும் தாக்கத்தின் அளவை குறைக்கவும், உரிய காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இது அவசியமாகும்.

பேரிடரை மட்டுப்படுத்துதல்

பேரிடரை மட்டுப்படுத்துதல் நடவடிக்கை, பேரிடருக்கும் வளர்ச்சிக்கும் இடையே உள்ள ஒரு சாதகமான தொடர்பு நிலையாகும். நிறுவனங்கள், சமூகம், தனி நபர்கள், தங்களது வளங்களைப் பயன்படுத்தி பேரிடரால் ஏற்படும் இடையூறுகளை செயல்திட்டங்கள் மூலம் மட்டுப்படுத்துகின்றனர். நல்ல திடமான கட்டிடங்களை உருவாக்க தொழில் சம்பந்தப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல், விவசாயத்தில் மாற்றங்களை செய்தல், மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை தோற்றுவித்தல் போன்றவை சில மட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளாகும். விவசாயத்தில் பேரிடர் மட்டுப்படுத்துதல் நிகழ்வுகளைச் செய்தல் மிகவும் அவசியமாகும். குறிப்பாக பேரிடர் நிகழ்ந்தவுடன் அதற்கான செயல்கள் கால தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். இதில் பொதுமக்களுக்கு உள்ள விழிப்புணர்வு மற்றும் அரசின் நிலை போன்றவை மிக அவசியமாகும்.

மட்டுப்படுத்துதலின் உத்திகள் :

 • நிலப் பயன்பாட்டை சீராக்குதல்
 • கட்டிடங்கள் கட்டுதலில் நவீன முறைகளை பயன்படுத்துதல்
 • அவசரக் காலத் திட்டங்கள்
 • முன்னெச்சரிக்கையும், எதிர்பார்ப்புகளும்
 • தகவல் பரிமாற்றம்.
 • இடர்பாடுகளை பட்டியலிடுதல் மற்றும் சிக்கலை ஆய்வு செய்தல்
 • விழிப்புணர்வையும், தேவையான பயிற்சிகளையும் அளித்தல்
 • காப்பீட்டுத் திட்டங்கள்

அவசரக் காலக் கட்டம் :

இது பேரிடர் நிகழ்ந்தவுடன் உள்ள காலக்கட்டமாகும். நிகழ்வு நடந்த இடத்தில் உடனடியாக மக்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள், அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்தல், தற்காலிக நிவாரண இருப்பிடங்கள், தண்ணிர், உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்தல், தொற்று நோய்கள் பரவாது தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல் போன்றவை நடைபெற வேண்டும்.

மறுவாழ்வு அளித்தலும், கட்டிடங்களை உருவாக்குதலும்

மறுவாழ்வு அளித்தல், பேரிடர் நடந்த இடத்தில் மக்களுக்கு உடனடியான தேவைகளையும், வசதிகளையும் செய்து தருதல் போன்றவை மிக முக்கிய செயல்களாகும். மேலும் அங்குள்ள மக்கள் மிக விரைவில் தங்களது நடவடிக்கைகளை, தொழில்களை தொடர வேண்டிய உதவிகளை போர்கால நடவடிக்கைகள் மூலம் செய்து தருதல். இது ஒரு உடனடி உதவிக்கும், எதிர்கால நிரந்தர நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள முன்னேற்ற நடவடிக்கையாகும்.

மறுவாழ்வு அளிக்கப்பட்ட சில காலங்களில் மீண்டும் அந்தப் பகுதியில் நிரந்தர கட்டிடங்கள் மற்றும் தேவையான உருவாக்கும் செயல்கள் நடைபெற வேண்டும். திடமான, நிரந்தரமான வசதிகளை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் செயல்படுத்துதல் மிக அவசியமாகும். மேலும் இத்திட்டங்கள், எதிர்கால இடையூறுகளையும், வளர்ச்சிப் பணிகளையும் கணக்கில் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

பேரிடர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்

இந்தியாவில் அதிக அளவில் இயற்கை பேரிடர்கள், நில மற்றும் காலநிலை அமைப்புக்கு ஏற்ப நடக்கின்றன. வெள்ளப் பெருக்கு, புயல், வறட்சி, நிலநடுக்கம், நிலச்சரிவு, போன்றவைகள் அடிக்கடி நிகழ்கின்ற ஒன்றாகும். இந்தியாவில் சுமாராக 60% நிலப்பரப்பு, நிலநடுக்கத்திற்கு உட்பட்டதாகவும், 40 மில்லியன் ஹெக்டேருக்கு மேலான நிலப்பரப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும், 8% நிலப்பரப்பில் புயல் தாக்கும் நிலையும், 68% நிலப்பரப்பில் வறட்சி ஏற்படுகின்ற நிலையும் உள்ளது. பேரிடர் ஏற்பட்டவுடன் செய்கின்ற நிவாரண பணியைவிட, பேரிடரைத் தடுப்பதற்கும், பேரிடர் தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளும் பணிகளே மிக அவசியமான ஒன்றாகும்.

இந்தியாவின் பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் ஆவணத்தில், பேரிடர் மேலாண்மை என்ற தனித்தலைப்பில் ஒரு பகுதி முழுவதும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பேரிடர் மேலாண்மையில் இந்தியாவின் புதிய திட்டங்கள்

 1. மாநில துயர் நிவாரண துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 2. பேரிடர் மேலாண்மை கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
 3. பேரிடர் பற்றிய விழிப்புணர்வு பள்ளிக் கலைத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
 4. தேசிய நிலநடுக்க விபத்துக் குறைப்பு செயல்திட்டம் நடைமுறையில் உள்ளது.
 5. புவியியல் தகவல் முறை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை (Development of GIS based National Data Base to Disaster Management)
 6. திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் கல்வி - அரசுப்பணியாளர்கள் பல்வேறு துறையிலிருந்து அழைக்கப்பட்டு அவர்களுக்கு இப்பயிற்சியானது கொடுக்கப்படுகின்றது (Capacity Building, Training of Education).

இந்தியாவில் பேரிடர் மேலாண்மையின் தகவல் வலை அமைப்புகள் (Disaster Management Network in India) (The Ministry of Human Affairs) பேரிடர் மேலாண்மை துயர் துடைப்பு மற்றும் பொறுப்பு ஆகியவற்றிற்கு மையமாக விளங்குகிறது.

இம்மையம் கீழ்கண்ட குழுக்களை உள்ளடக்கி பேரிடர் மேலாண்மை குறித்த முடிவுகளை எடுக்கின்ற பொறுப்புகளை பெற்றுள்ளது.

 • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு (National Crisis Management Committee - NCMC) under the chairmanship of the cabinet Secretary.)
 • மத்திய துயர் நிவாரண துணைக் குழு- நிலைமையை ஆய்வு செய்து மத்திய/மாநில அரசுகளுக்கு உரிய செயல் வடிவத்தைக் கொடுக்கும்.
 • தொழில் நுட்பத் துறைகளான வானிலை ஆய்வு மையம், மத்திய நிர்வாகக் குழு (வெள்ளப்பெருக்கு), இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் நிறுவனம், அணு மற்றும் உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் போன்றவை தேவையான தகவல்களை தந்து உதவுகிறது.

பேரிடர் மேலாண்மையில் மாநில அரசின் அமைப்புகள்

 • மாநில முதன்மை செயலர், மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தலைமை வகிக்கின்றார்.
 • மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நீதிபதி / துணை கண்காணிப்பாளர் போன்றவர்கள் இந்தப் பணிகளில் ஒருங்கிணைப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் பணிபுரிகிறார்கள்.
 • தேவையான காலங்களில் பாதுகாப்புப் படையினர் இப்பணிகளுக்கு உதவ வழி வகை செய்யப்பட்டுள்ளது.

முடிவுரை

மனிதனின் முன்னேற்றத்திற்கும், தேவைக்கும் ஏற்ப பலவழிகளில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து பெருகிக் கொண்டே வருகிறது. தற்போதுள்ள பாதிப்பால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து உலகநாடுகள் அனைத்தும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது நாடுகளில் இதனை தடுக்க, சீராக்க பல வழிகளைப் பின்பற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மிகத் தீவிரமாக இது குறித்து செயல்பட்டால் ஒழிய இந்த புவியைக் காப்பாற்றுவது மிகவும் கடினமாகும். கல்வி நிறுவனங்களின் எல்லா நிலைகளிலும், அதன் தகுதிக்கும் நிலைக்கும் ஏற்ப இது குறித்த பாடங்களையும், விழிப்புணர்வையும் தர வேண்டும். தனியார் துறைக்கும், பொதுமக்களுக்கும் இது பற்றிய முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் பற்றி விளக்கத்தை போர்க்கால அடிப்படையில் தரப்பட வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும், இது குறித்து அறிந்து தனது செயல்பாடுகளை தகுந்தவாறு மாற்றிக் கொண்டால் மட்டுமே இந்த மாசுபடுதல் செயலை ஒரளவிற்குக் கட்டுப்படுத்த முடியும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை

3.01587301587
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top