பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு / மாசுபாட்டை தடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேலாண்மை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாசுபாட்டை தடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேலாண்மை

மாசுபாட்டை தடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

 

சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை ஏற்படுத்தும் தன்மைக்கொண்ட எந்த ஒரு பொருளும் சுற்றுச்சூழல் மாசு என்று அழைக்கப்படும். வேதிப் பொருட்கள், புவி வேதிப் பொருட்கள் (தூசு, வண்டல், மணல் உள்ளிட்டவை) உயிரினங்கள் மற்றும் அவற்றின் கழிவுகள் சுற்றுச்சூழலில் மோசமாக, விரும்பத்தகாத தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்படும் சக்திகள் (வெப்பம்) ஆகியவை சுற்றுச்சூழல் மாசுக்களில் அடங்கும். சுற்றுச்சூழல் மாசு என்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் அடர்த்தியாக கலந்திருக்கும் திட, திரவ மற்றும் வாயு பொருட்கள் ஆகும். உலோகங்கள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுளில் உள்ள இயற்கை மற்றும் செயற்கை பொருட்கள், அணுமின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கதிர் வீச்சுத் தன்மைகொண்ட கழிவுப் பொருட்கள், அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பம், கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்கள், கந்தக ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகியவையும் கழிவுப் பொருட்களாக இருக்கலாம். நாம் பயன்படுத்திவிட்டு வீசி எறியும் பொருட்களில் உள்ள மிச்சங்கள் கூட மாசுக்கள்தான். வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் மிச்சம் ஆகியவைதான் மாசுக்கள் உருவாகும் ஆதாரமாக திகழ்கின்றன. வேதிப்பொருள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் அவற்றின் அருகில் உள்ள ஏரிகள், ஆறுகள் போன்ற நீர் நிலைகள் மாசுபடுகின்றன. அதேபோல் சாலையில் செல்லும் ஊர்திகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை, தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் புகைகள் ஆகியவற்றால் வளிமண்டலத்திலுள்ள காற்று மாசுபடுத்தப்படுகிறது. பல்வேறு வகையான மனித நடவடிக்கைகளின் மூலம் வெளியாகும் மாசுக்களை உள்ளடக்கிய கழிவுப் பொருட்கள், வளிமண்டளத்தில் சேரும் வாயுவாகவோ அல்லது நீர் நிலைகள் மற்றும் தரைகளில் சேரும் பொருட்களாகவோ, நமது சுற்றுச்சூழலுக்குள் சேருகின்றன. இந்த மாசுக்கள் சுற்றுச்சூழலில் இயற்கை தன்மையை மாற்றி அதன் மூலம் மனித குலத்திற்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும், பிற பொருட்களுக்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மாசுபாட்டை தடுத்தல்

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பது இருவகைப்படும். ஒன்று சுற்றுச்சூழல் மாசுக்களை அவை எங்கிருந்து உருவாகின்றன என்பதை கண்டறிந்து அங்கேயே தடுப்பதாகும். மற்றொன்று சுற்றுச்சூழல் மாசுக்கள் உருவாவதை கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி அழித்தல் அல்லது குறைக்கும் வழிகள் ஆகும்.

 • மூலப்பொருட்கள், எரிசக்தி, தண்ணிர் அல்லது பிற ஆதாரங்கள் ஆகியவற்றை மிகவும் சிறப்பாக பயன்படுத்துதல்.
 • முறையான பராமரிப்பின் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பது ஆகும்.
 • சுற்றுச்சூழல் மாசுக்களை அவற்றின் ஊற்றுக் கண்ணிலேயே கண்டறிந்து குறைப்பது என்பது கீழ்கண்ட நடைமுறைகளை கொண்டது ஆகும்.
 • மறுசுழற்சி, சுத்திகரிப்பு, அகற்றப்படுதல் ஆகியவை செய்யப்பட்டாமல் எந்த ஒரு தீங்கை ஏற்படுத்தும் பொருட்கள் அல்லது மாசுக்கள் அல்லது அசுத்தங்கள் சுற்றுச்சூழலிலோ அல்லது கழிவிலோ கலக்கும் அளவை குறைப்பது ஆகும்.
 • தீங்கை ஏற்படுத்தும் பொருட்கள், மாசுக்கள், அசுத்தங்கள் ஆகியவை வெளியேறுவதால் பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் தீமைகளை குறைத்தல்,
 • சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழி மாசுபாட்டை தடுத்தல் ஆகும். மாசுக்களை தூய்மைப்படுத்துவதற்கு முன்பாக அவை உருவாவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் மாசுபாட்டை தடுக்கும் முறை அதிக கவனம் செலுத்துகிறது. உற்பத்தியின்போது குறைந்த அளவில் மாசுக்களை வெளியிடும் பொருட்களை பயன்படுத்துதல், மாசுக்கள் வெளியில் கொட்டி பரவுவதை தடுக்க கவனத்துடன் செயல்படுதல், கருவிகளை நல்ல நிலையில் பராமரித்தல் மற்றும் பல்வேறு வகையான குறைந்த செலவு கொண்ட தொழில்நுட்பங்கள் மூலம் மாசுக்கள் உருவாவதை தடுக்க முடியும்.
 • கடந்த பல ஆண்டுகளாகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் எனப்படுபவை சுற்றுச் சூழல் மாசுபட்ட பிறகு அவற்றை தூய்மைப்படுத்துவது அல்லது சுத்திகரிப்பது என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
 • ஆனால் மாசுபாட்டை தடுத்தல் என்பது மனித செயல்பாட்டு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் மாசுக்கள் உருவாவதை அவற்றின் ஊற்றுக் கண்ணிலேயே தடுப்பது ஆகும். இதனால் குறைந்த அளவில்தான் மாசுக்கள் உருவாகின்றன. இந்த முறையில் மாசுக்கள் உருவாவது தவிர்க்கப்படுவதால் அவற்றை தூய்மைப்படுத்த தேவையில்லை என்பதை கருத்தில்கொண்டு பார்க்கும்போது இது சிறந்த அணுகுமுறையாக உள்ளது. மாசுபாட்டை தடுத்தல் என்பது சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி நடப்பதை தாண்டிய தன்னார்வ நடவடிக்கை ஆகும்.

மாசுபாட்டை தடுப்பதற்கான பொதுவான சில நடவடிக்கைகள் பின்வருமாறு:

 • உற்பத்தியின்போது குறைந்த அளவு மாசுபாட்டை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்துதல்.
 • மாசுக்கள் தரையில் கொட்டி பரவுவதை பரவாமல் தடுப்பதில் கவனமாக இருத்தல்.  கருவிகளை நல்ல முறையில் பராமரித்தல்.
 • பொருட்களை மறுவடிவமைப்பு அல்லது மறுவடிவாக்கம் செய்தல்.
 • கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களில் மாற்றம் செய்தல். நடைமுறைகள் அல்லது செயல்முறைகளில் மாற்றங்கள் செய்தல்.
 • வீடுகளை பராமரித்தல், வீடுகளை தூய்மைப்படுத்துதல், பயிற்சி ஆகியவற்றில் மேம்பாடு அடைதல் ஆகும்.

மாசுபாட்டை தடுப்பதால் ஏற்படும் நன்மைகள்

மாசுபாட்டை தடுப்பதால் கீழ்கண்ட நன்மைகள் உருவாகும். அவற்றின் விவரம் வருமாறு:

 • மாசுக்கள் உருவாவதை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நமது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
 • மாசுபாட்டை தடுப்பதன் மூலம் தூய்மைப் படுத்துதல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றுதலுக்கான செலவுகள் தவிர்க்க முடியும். வழக்கமாக தொழிற்சாலைகள் மாசுபாட்டை தடுக்கும்போது அதிக அளவில் பணத்தை சேமிக்க முடியும். மாசுபாட்டை தடுக்க தடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள சில நேரங்களில் சிறிது செலவாகலாம், ஆனால் இந்த செலவை, கழிவுகளை சுத்திகரிப்பதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் ஆகும் செலவுகளை மிச்சப்படுத்துவதன் மூலம் ஈடுகட்டிவிடலாம்.
 • மாசுபாட்டை தடுப்பதன் மூலம் விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள் ஆகியவற்றை குறைக்கலாம். அதுமட்டுமின்றி தொழிலாளர்களின் பாதுகாப்பையும், தொழிற்சாலை பற்றிய தோற்றம் மற்றும் நம்பகத்தன்மையும் ஏற்படுத்தலாம்.
 • மாசுபாட்டை தடுப்பது அப்பகுதியில் உள்ள சமுதாய மக்களுக்கு ஏற்படும் சுகாதார பாதிப்புகளையும் குறைக்கிறது.

மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள்

மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை நமது அன்றாட வாழ்வின் ஒர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். கழிவுகளை குறைப்பதற்கான வழிமுறைகளைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால், மாசுக்களை உருவாக்குவதை நம்மால் தவிர்க்க முடியும். ஒரு பொருளை (உணவு எடுத்துச்செல்லும் பைகள், மறுபயன்பாடு கொண்ட கொள்கலன்கள், துடைப்பதற்கான துணிகள்) அதிக பட்சமாக எத்தனை முறை பயன்படுத்த முடியுமோ அத்தனை முறை பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டியிருக்கும்போது, நடந்து செல்லுதல், இருசக்கர ஊர்திகளில் செல்லுதல், தனித்தனி மகிழுந்துகளில் செல்வதை தவிர்த்து முடிந்தவரை ஒரே மகிழுந்தில் குழுவாக செல்லுதல் போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். முடிந்தவரை சுற்றுச்சூழலை பாதிக்காத, நச்சுத்தன்மை இல்லாத பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்புகள், மருத்துவக் கருவிகள், தெர்மா மீட்டர்கள், ஆய்வக வேதிப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களில் பாதரசம் அதிக அளவில் உள்ளது. இந்தப் பொருட்கள் முறையற்ற வகையில் அப்புறப்படுத்தப்பட்டால் அவற்றில் உள்ள பாதரசம் நிலத்திலோ அல்லது நீரிலோ அல்லது காற்றிலோ கலக்கக்கூடும். பாதரசம் நமது சுற்றுச்சூழலில் நீண்ட காலத்திற்கு தங்கியிருக்கும் தன்மைக் கொண்டது ஆகும். மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இது நச்சு பாதிப்பை ஏற்படுத்தும். நமது உணவு சங்கிலியிலும் இது கலந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

பாதரசம் இல்லாத மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல், பாதரசம் கசிந்தால் அதை முறையாக தூய்மை செய்தல், பாதரசம் உள்ள பொருட்களை மறுசுழற்சி செய்தல், பாதரசம் உள்ள பொருட்களை முறையாக கையாண்டு அப்புறப்படுத்துதல் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலில் மாசு கலப்பதை தவிர்க்க முடியும்.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும், நிறுவனத்திலும் ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுச்சூழல் தணிக்கைகளை மேற்கொண்டு அதன் மூலம் தொழிற்சாலைகளில் உள்ள வசதிகள், சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

எரிசக்தித்துறை, வேளாண்துறை, நுகர்வுத்துறை, தொழில்துறை உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தன்மைக்கொண்ட அனைத்து மாசு ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் மாசுபாட்டை தடுக்கும் அணுகுமுறை பொருந்தும். ஈரப்பதம் கொண்ட நிலங்கள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் பிற முக்கிய ஆதாரங்களை சேதப்படுத்துவதுதான் மாசுக்களை உருவாக்குகிறது. இந்த வளங்களை பாதுகாக்க மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகும். மிகவும் நுண்ணிய தன்மைக்கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு ஏற்படுவதை தடுப்பதற்காக மேலாண்மை நடைமுறைகளில் மாற்றங்கள் செய்தல், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கடைபிடித்தல் ஆகியவையும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்கான தொழில்நுட்பங்களில் அடங்கும். மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மைக்கொண்டது அல்ல.

அணுகுமுறைகள்

வேளாண் துறையில் மாசுபாட்டை தடுக்க பல்வேறு வகையான அணுகுமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சில அணுகுமுறைகள் பின்வருமாறு:

 • தண்ணீர் மற்றும் வேதி இடுபொருட்களின் பயன்பாட்டை குறைத்தல்.
 • சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத பூச்சுக்கொல்லிகளை பயன்படுத்துதல் அல்லது இயற்கையாகவே பூச்சிகளை எதிர்க்கும் திறன்கொண்ட பயிர்வகைகளை சாகுபடி செய்தல்.
 • எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள பகுதிகளை பாதுகாத்தல்.

எரிசக்தித்துறையை பொருத்தவரை எரிபொருட்களை தோண்டி எடுத்தல், பிரித்தல், வேறு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், எரிபொருட்களை எரித்தல் ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை மாசுபாட்டை தடுக்கும் நடைமுறை குறைக்கும். எரிசக்தித்துறையில் மாசுபாட்டை குறைப்பதற்கு பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன.

 • எரிசத்தியை சிக்கனமாகவும், சிறப்பாகவும் பயன்படுத்துதல்.
 • வழக்கமான எரிபொருள் ஆதாரங்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத எரிபொருட்களை பயன்படுத்துதல்.
 • எரிசக்தித் தேவையை குறைக்கும் வகையில் வடிவமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல்.

நடைமுறையின்போதே மறுசுழற்சி செய்தல் என்று அழைக்கப்படும் சில நடைமுறைகளை மாசுபாட்டை தடுக்கும் நடைமுறைகள் என்று கூறலாம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படும் மறுசுழற்சி நடவடிக்கை மாசுபாட்டை தடுக்கும் நடைமுறைகளின் நன்மைகளை கொண்டிருக்கிறது. இதனால் எரிசக்தி ஆதாரங்களை சுத்திகரித்தல், அகற்றுதல் ஆகியவற்றுக்கு வேலையில்லாமல் போகிறது. அதுமட்டுமின்றி எரிபொருட்கள் மற்றும் வளங்களை பாதுகாக்க முடிகிறது.

போட்டி நிறைந்த 21 வது நூற்றாண்டில் எந்த ஒரு வணிகமாக இருந்தாலும் சரி அல்லது நிறுவனமாக இருந்தாலும் சரி உற்பத்தித்திறனை அதிகரிக்கக்கூடிய, கழிவுகளை குறைக்கக்கூடிய மாசுபாடு தடுப்பு உத்திகளை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

தூய்மை உற்பத்தி பயன்பாடு

வளங்களை கொள்முதல் செய்தல், பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது சேவைகளை வழங்குதல் போன்றவற்றை அதி உயர் திறமை, அதிக இலாபம், சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பு ஆகிய அம்சங்களுடன் செய்வதற்கான ஒருங்கிணைந்த தடுப்பு சுற்றுச்சூழல் மற்றும் வணிக உத்தியை தொடர்ந்து பயன்படுத்துவதுதான் தூய்மை உற்பத்தி ஆகும். தூய்மை உற்பத்தி என்பது நமது வணிக மற்றும் தொழில் நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதுடன் குறைந்த மூலப் பொருள் அல்லது வளங்களிலிருந்து கிடைக்கும் பயன்களை அதிகரிக்கச் செய்வது ஆகும். தூய்மையான உற்பத்தி முறையின் நோக்கங்கள் பின்வருமாறு:

கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்கள் உருவாவதை குறைத்தல்.

 • ஒட்டுமொத்த உற்பத்தி செலவை குறைத்து சந்தை சாதக நிலையை ஏற்படுத்துதல்.
 • வளங்களை பயன்படுத்துவதில் சிறப்பு திறனையும், பயன்பாட்டையும் அதிகரித்தல்.
 • தொழிலாளர்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைத்தல்.
 • தொழிற்சாலை அல்லது நிறுவனத்தின் பொதுவான தோற்றத்தை மேம்படுத்துதல்.
 • தூய்மை உற்பத்தி அணுகுமுறை என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடுக்கியதாகும். அவற்றில் முக்கியமான சில அம்சங்கள் பின்வருமாறு:
 • சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் ஒரு பொருளில் தேவையான மாற்றங்கள் செய்தல்.
 • உற்பத்திக்காக பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கு பதில் குறைந்த நச்சுத் தன்மைக்கொண்ட மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல்.
 • உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நடைமுறை மற்றும் தொழில்நுட்பங்களில் மாற்றங்களை செய்தல்.
 • மாசுக்களின் கசிவை குறைக்க பராமரிப்பு முறையை மேம்படுத்துதல்.
 • இயற்கை வளங்களை மீட்டெடுத்து மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு செய்தல்.

தூய்மை உற்பத்திக்கான செயல்திட்டம்

 • சூழலியல் பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் புவி வெப்பமயமாதல், கழிவுகளை கொட்டுவதற்கான இடங்கள் பற்றாக்குறை, நிலத்தடி நீர் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்தல், ஒசோன் படலம் சிதைந்து வருதல், மாசுபாடு காரணமாக மோசமான சுகாதாரக் கேடுகள் அதிகரித்து வருதல் போன்ற சில பிரச்சனைகள் தங்களுக்கு தாங்களே அதிகரிக்க தொடங்கியிருப்பதுதான். உலக சூழல் அமைப்பில் நமது இடத்தை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் மீளமுடியாத சுற்றுச்சூழல் பாதிப்பு சுழற்சியில் நாம் சிக்கிக்கொள்வோம். ஒவ்வொரு தலைமுறையும் கணிக்க முடியாத எதிர்காலத்தைதான் எதிர்கொள்கிறது. எனினும் பூமியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த தலைமுறையும் முன்வருவதில்லை. பூமியை பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தர வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதற்காக உங்களால் மேற்கொள்ளப்படக்கூடிய பல்வேறு செயல்பாடுகள் உள்ளன. அவற்றின் முக்கியமான சில பின்வருமாறு:
 • மரம், பருத்தி, கம்பளி போன்ற இயற்கை பொருட்களை மட்டுமே வாங்குங்கள். கண்ணாடி, அலுமினியம், டின், கார்ட் போர்டு ஆயிவற்றால் செய்யப்பட்ட கொள்கலன்களை மட்டுமே வாங்குங்கள். மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் வாங்குவதை தவிருங்கள்.
 • எதையெல்லாம் மறும்சுழற்சி செய்யமுடியுமோ அதையெல்லாம் மறுசுழற்சி செய்யுங்கள். ஏதேனும் ஒரு பொருளை பிரித்து போடும் போது அதில் ஏதேனும் ஒரு பாகத்தை பயன்படுத்த முடியுமா என்பதை சிந்ததித்து பாருங்கள். உள்ளூர் அளவிலான மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கும் சட்டங்களுக்கும் ஆதரவு தாருங்கள். மறுசுழற்சி செய்யும்போது அதனால் பணம் கிடைக்குமா என்று பார்க்காதீர்கள். மாறாக பயன்கிடைக்கும் என்பதை உணர்ந்து செய்யுங்கள்.
 • மறுசுழற்சி செய்யமுடியாத, குறைந்த அளவே மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு பயன்படுத்துங்கள், காகிதங்களில் இரு புறங்களிலும் எழுதுங்கள். மரப்பொருட்களை பிரிக்கும் போதோ அல்லது மரப்பொருட்களை செய்யும் போதோ மிஞ்சும் மரங்களை பயன்படுத்துங்கள். இயற்கை வளங்கள் தாராளமாக கிடைக்கின்றன என்ற மாயையில் நமது சமுதாயம் இருப்பதால், நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை முழுமையாக பயன்படுத்தக்கூடாது என்று எந்த கட்டாயமும் இல்லை. இயற்கை வளங்களை விரும்பம்போல பயன்படுத்திக்கொள்ளாலம் என்று கருதும் நமது மக்கள் அந்த வளங்களை தவறாக பயன்படுத்துகின்றனர்.
 • காகிதங்கள் போன்ற மரப்பொருட்களை வாங்கும் போது தேர்வு செய்து வாங்குங்கள்.
 • பொருட்களையும் அவற்றை பேக்கிங் செய்வதற்கான பொருட்களையும் வாங்கும்போது, எல்லா கழிவுகளையும் மறுசுழற்சி செய்யமுடியாது என்பதை கருத்தில்கொண்டு புத்திசாலி தனமாக செயல்படுங்கள். கழிவுகளை ஏற்படுத்தும் ஒவ்வொருவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவே அதற்கேற்றவாறு திட்டமிட்டு செயல்படுங்கள். ஒரு பொருளை வாங்கும்போது பயன்பாட்டிற்கு பிறகு அது எங்கு செல்லும், அது எங்கு அப்புறப்படுத்தப்படும் என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும். ஒரு பொருளை அப்புறப் படுத்துவதற்கு வாய்பில்லை என்றால் அதை வாங்கவேண்டாம்.
 • பொருட்களை வாங்கும் போது முடிந்த வரை மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை வாங்குங்கள்.
 • அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற மரங்களை நடுங்கள். அவை வளர்வதை நீங்கள் கண்காணியுங்கள். உங்கள் சமுதாயத்தில் ஆரோக்கியமான மரங்களை எவரேனும் வெட்டினால் அதற்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். தரைக்கு அடியில் குழாய்களை பதித்தல், நடைபாதை அமைத்தல் ஆகிய வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் பலி கொடுக்கப்படுகின்றன. சாய்க்கப்பட்ட மரங்கள் கூட வனவிலங்குகளுக்கு பயன்படும்.
 • உங்களின் மின்பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்துங்கள் அல்லது குறைந்த சக்தியில் எரியும் விளக்குகளை பொருத்துங்கள்.
 • உங்கள் வீட்டில் மின்சாரம் செல்லும் கம்பி மீதான தடுப்பை மேம்படுத்துங்கள். தண்ணிரை கொதிக்க செய்யும் கருவி மீதான தடுப்பையும் அதிகரியுங்கள்.
 • குளிர்ந்த சூழலில் வெப்ப நிலையை அதிகரிக்கும் கருவியை நிறுத்திவிட்டு ஸ்வெட்டரை அணிந்துக்கொள்ளுங்கள்.  உங்கள் காரை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
 • பொது வாகனத்தை பயன்படுத்துங்கள். குறைந்த தூரத்திற்கு செல்லும்போது காரை பயன்படுத்தாமல் மிதிவண்டியை பயன்படுத்துங்கள் அல்லது நடந்து செல்லுங்கள்.
 • உங்களுக்கு தேவையான மின்சாரத்தை சூரியஒளி, காற்றாலை போன்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரங்களில் இருந்து முடிந்தவரை பொற்றுக்கொள்ளுங்கள். சூரியஒளியில் இயங்கும் தண்ணிரை கொதிக்கவைக்கும் கருவி குறைந்த செலவுக்கொண்டதாகும்.
 • உங்களது வீட்டில் வீணாகும் உணவு பொருட்களை மக்கச்செய்து உரமாக மாற்றி உங்கள் வீட்டு தோட்டத்தில் பயன்படுத்துங்கள்.
 • உலக சூழலியலை பாதுகாப்பதற்காக போராடுவோருக்கு உதவிசெய்யுங்கள். தேசிய சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஆதரவு அளியுங்கள். இத்தகைய முயற்சிகளுக்கு அதரவு அளிப்போரின் எண்ணிக்கையில் தான் வலிமையும், சக்தியும் உள்ளது.
 • சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பேசுவது மட்டும்போதாது, செயல்படவும் வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால்தான் பூமியை அனைத்து வாசிகளுக்கும் ஆதரவு அளிக்கக்கூடிய முழுமையான அமைப்பாக மாற்றி பராமரிக்க முடியும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : டாக்டர். நவநீத கோபால கிருஷ்ணன், பேராசிரியர், ஆர். பன்னீர்செல்வம், அண்ணா பல்கலைக்கழகம்

3.08641975309
அண்ணாதுரை Dec 08, 2019 05:57 PM

மாசுபாடு தடுப்போம் வாழ்வில் வளம் பெறுவோம்

sabari Oct 16, 2019 06:20 PM

thankyou

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top