பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு / வேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தாக்கம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தாக்கம்

வேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தாக்கம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இந்தியக் கிராமங்களில் வசிப்பவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளைச் சார்ந்துள்ளனர். நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 13.9 சதவீதமாக உள்ளது. அதனால் தான் வேளாண் துறை இந்திய நாட்டின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்க வேண்டுமானால் வேளாண் துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். ஆனால் கீழ்க்கண்ட புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது வேளாண் துறையின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டியும், பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியும் உள்ளது.

 • உலக மக்கள் தொகையில் 18 சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் சுமார் 21.60 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்கள் உள்ளன.
 • உலகிலுள்ள கால்நடைகளில் 15 சதவீதம் நம் நாட்டில் தான் உள்ளது.
 • உலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் 2 சதவீதத்தையும், உலகின் காடுகள் மற்றும் பசுமை நிறைந்த நிலங்களில் 1.5 சதவீதத்தையும் இந்தியா கொண்டுள்ளது.
 • இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 96.65 சதவீதத்தினர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர்.

நம் நாட்டில் அதிகப்படியான மக்கள் சார்ந்துள்ள துறை என்பதாலும், நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது என்பதாலும் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் பாசனத் திட்டங்கள், விவசாயக் கடன் இலக்கு போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் வேளாண்மை தொழிலை சார்ந்திருப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இந்திய விவசாயிகளில் 48 சதவீதத்தினர் கடனில் சிக்கியிருப்பதாகவும், பாசன வசதி பெறும் நிலப்பரப்புகளின் அளவு குறைந்து வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்புக்கான காரணங்கள்

லாபகரமானதாக விளங்கி வந்த வேளாண்மை தொழில் பாதிக்கப்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளே முக்கிய காரணங்களாகும். ஏனெனில், இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தான் வேளாண்மையில் பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் தட்பவெப்ப நிலையில் மாற்றம், அதனால் வேளாண்மையில் உற்பத்தியும், உற்பத்தி திறனும் குறைதல் என ஒன்றோடொன்று தொடர்பு கொண்டதாக வேளாண்மை உள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் காரணமாக புவி வெப்பம் அதிகரித்து கடந்த நூறாண்டுகளில் காற்று வெப்பநிலை 0.76 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் தட்பவெப்ப நிலைக்கான பன்னாட்டுக் குழுவின் அறிக்கையில் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலான இயற்பியல், உயிரியல் அமைப்புகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக இந்தியாவில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வேளாண் உற்பத்தியில் 10 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்று இவ்வமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுக்கள் காற்றில் கலந்து தட்பவெப்ப நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. காற்றில் கலக்கும் மாசுப்பொருட்கள் வாயு மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை அதிகரிக்கிறது. இதனால் சூரியனின் ஊதா நிற கதிர்களின் வெப்ப வீச்சு அதிகரித்து வாயு மண்டலத்தின் அடிப்பகுதி வெப்பமடைந்து பூமி வெப்பமயமாகி வருகிறது. இதனால் நமது வேளாண்மை முறை பாதிக்கப்படுகிறது.

மேலும் பூமி வெப்பமயமாதலால் கி.பி. 2100ஆம் ஆண்டுக்குள் வெப்பநிலை சுமார் 5.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும். உலக நீர், சுற்றுச்சூழல் முறைகள், கடல் மட்ட அளவு, பயிர் உற்பத்தி மற்றும் பிற வேளாண் பணிகள் என ஒன்றோடொன்று தொடர்புபட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளை இது பெரிதும் பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் மாசுபாடு

 • தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் தொகை அதிகரித்து வரும் இன்றைய சூழலில் நீர் மாசுபாடு என்பது பெரும் சவால் நிறைந்த ஒன்றாகிவருகிறது. தொழிற்சாலைகள் மற்றும் தனிமனித நடவடிக்கைகளால் நீர் மாசடைந்து வருகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் விவசாய விளைநிலங்களில் கலப்பதால் நீர் மாசடைந்து நாளடைவில் நிலத்தடி நீரும் மாசடைகிறது.
 • அதிகப்படியான தண்ணீர் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை, உரம், தோல் பதனிடுதல், துணி நெசவாலைகள், காகிதக்கூழ் தயாரித்தல் போன்ற தொழிற்சாலைகளில் இருந்து அதிகப்படியான அளவில் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இவையாவும் அந்தந்த பகுதிகளில் உள்ள சிறியது முதல் பெரிய அளவிலான ஆறுகளில் கலக்கிறது. இந்த ஆறுகளின் மூலம் நீர்ப்பாசன வசதி பெறும் நிலங்களில் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் நாளடைவில் உற்பத்தி திறனையும் பாதிக்கிறது. இந்த சூழ்நிலை அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளது.
 • சிறிய நகரங்கள் முதல் பெருநகரங்கள் வரையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆறுகள் மற்றும் நதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கிறது. இந்தியாவில் ஒடும் பெரும்பாலான நதிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள சிமெண்ட, சர்க்கரை, உரம், ரசாயணம், தோல் பதனிடும் மற்றும் காகிதக்கூழ் தொழிற்சாலைகளின் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் நாளடைவில் விவசாயம் செய்வதற்கான தரத்தை இழந்து வருகிறது.
 • மேலும், அதிகரித்து வரும் மக்கள் தொகைப் பெருக்கம், நகர்மயமாதல் போன்றவற்றால் கழிவுகளின் அளவும் அதிகரித்து வருகிறது. இந்தக் கழிவுகள் அந்தந்த பகுதிகளில் நிலப்பகுதிகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றில் கொட்டப்படுகிறது. நீண்டகாலமாக ஒரே இடத்தில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளால் நாளடைவில் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு உள்ளாகிறது.
 • இவ்வாறு மாசுபாடடையும் நீர் நாளடைவில் விவசாயத்திற்கு தரமற்றதாகி விடுகிறது. இதனால் பாசன வசதி பெற்ற விளைநிலங்கள் காலப் போக்கில் மழையை நம்பியதாக மாறிவிடுகிறது. இந்தியாவில் விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் சுமார் 60 சதவீத நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி இல்லாமல், இந்திய விவசாயம் தொடர்ந்து மழையை நம்பியதாகவே உள்ளது.
 • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் அளவுக்கு வேளாண் துறை வளர வேண்டுமானால் மழையை நம்பி விவசாயம் நடைபெறும் பகுதிகளில் அதிகப்படியான விளைச்சல் எட்டப்படுவது அவசியமாகும். ஆனால் மழையை நம்பிய விவசாயத்தில் பருவ மழை பெய்வதில் மாற்றங்கள் ஏற்படும்போது அது உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது.

காற்று மாசுபாடு

 • தொழில்மயமாதல் காரணமாக அதிகரித்து வரும் தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்களின் பெருக்கம் காரணமாக அவற்றிலிருந்து வெளியேறும் வாயுக்கள் காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்துகிறது. சிமெண்ட், சர்க்கரை மற்றும் உரத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்ஃபர்டை ஆக்ஸைடு போன்றவை காற்றில் கலந்து வேளாண் நிலங்கள் மீதும், வேளாண் பயிர்கள் மீதும் படரும்போது நாளடைவில் அவற்றின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுவதுடன் அத்தகைய நிலங்கள் காலப்போக்கில் விளைச்சலுக்கு தரமற்றதாகிவிடுகிறது. இவ்வகையான தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள வேளாண் விளைநிலங்கள் மட்டுமின்றி தாவரங்கள், மரங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
 • அத்துடன் தனிமனித நடவடிக்கைகளாலும், காடுகள், தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ போன்ற பேரிடர் விபத்துக்களில் எரிதலின்போது வெளியாகும் புகையில் உள்ள வாயுக்கள் காற்றில் கலந்து அப்பகுதிகளில் உள்ள நிலங்கள், பயிர்கள், தாவரங்கள் போன்றவற்றில் படர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 • மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக அதிகரித்து வரும் வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள் விளைநிலங்களையும், வேளாண் பயிர்களையும், பாதிக்கிறது. இவ்வகையில் மட்டுமின்றி தொழிற்சாலைகளின் கழிவுகள் ஓரிடத்தில் கொட்டிவைக்கப்படும் போது அவை காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நில மாசுபாடு

 • இந்தியப் பொருளாதாரம் அடிப்படையில் ஒரு வேளாண்மைப் பொருளாதாரமாகும். மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நிலம் அழிக்கப்படும் நடவடிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் குறைவான நிலப்பரப்பைக் கொண்டு அதிகமான உற்பத்தியை எய்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக அதிகப்படியான மகசூல் வேண்டி ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள், பயன்படுத்தப்படுகிறது. இதனால் குறிபிட்ட கால இடைவெளியில் நிலம் தனது தன்மையை இழந்துவிடுகிறது.
 • பொருளாதார வளர்ச்சி காரணமாக நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே குறைந்த நிலப்பரப்பில் அதிகப்படியான மக்கள் வாழ்ந்துவரும் சூழலில் அன்றாடம் நேரக்கூடிய குப்பைகளைக் கொட்டுவதற்கு நிலம் தேவைப்படுகிறது. அவ்வாறு ஓரிடத்தில் கொட்டி வைக்கப்படும் குப்பைகளால் அப்பகுதிகளில் காற்று, நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் நிலமும் மாசடைகிறது.
 • புதிய நீர்மின் திட்டங்கள், அணைக்கட்டுகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்குவதற்காக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதுடன், வனப்பகுதிகளும் அழிக்கப்படுகிறது. அத்துடன் மக்கள் தொகைப்பெருக்கம், நகர்மயமாதல் போன்றவற்றால் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனாலும் அப்பகுதிகளில் நில அரிப்பு ஏற்பட்டு நிலப் பகுதிகளில் வேளாண் உற்பத்தித் திறன் தண்மை கொண்ட மண் வகைகள் இல்லாமற் போகிறது. அவ்வாறான பகுதிகள் நாளடைவில் விவசாயத்திற்கு தரமற்றதாக மாறிவிடுகிறது.

குறையும் வேளாண் வளர்ச்சி

 • இப்படி பல்வேறு வகையான மாசுபாடுகள் வேளாண் துறையில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனால் வேளாண் துறையில் எதிர்பார்த்த அளவிலோ, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிலோ வளர்ச்சியை எட்ட முடிவதில்லை. ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் போதும் வேளாண் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.
 • நம் நாட்டைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்த நிலங்களில் 83.5 சதவீத நிலத்தை சிறு மற்றும் குறு விவசாயிகள் வைத்துள்ளனர். பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள். அதனால், மாசுபாடுகளால் பாதிக்கப்படும்போது வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவோ, அவற்றிலிருந்து மீண்டுவரவோ அவர்களால் முடிவதில்லை.
 • இப்படி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் வேளாண் தொழிலை விட்டுவிட்டு நகர்புறங்களுக்கு இடம்பெயரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கிராமப்புற மக்கள் தொகை 10 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பும் கிராமப்புற மக்கள் தொகை குறைந்துவருவதைக் காட்டுகிறது. விவசாயத்தை நம்பி கிராமங்களில் வாழ முடியாத நிலையில் நகரங்களுக்குச் செல்கின்றனர். பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று வேளாண் துறையில் 4 சதவீத வளர்ச்சி ஏற்படும் வகையில் வேளாண்மைக்கான ஒதுக்கீடு ஆக்கபூர்வமான வழிகளில், அனைத்து விவசாயிகளையும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். வேளாண்மையை லாபகரமாகதாக மாற்றுவதும், அதனைச் சார்ந்திருப்பவர்களை தொடர்ந்து அதிலேயே ஈடுபடவும், தக்கவைப்பதும் இன்றைய தேவையாகும். பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டிய மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாதுகாக்கப்பட்ட விவசாய முறைக்கு இந்த நேரத்தில் உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : முனைவர். எல்.கே. வேலாயுதம், உதவி பேராசிரியர் மற்றும் தொடர்பு அலுவலர் பெ. சுப்ரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக படிப்பு மையம், அரியலூர்

3.0625
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top