பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கழிப்பறை வசதியின்மை

கழிப்பறை வசதி இல்லாமையால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

சுகாதாரம், அனைத்து மனிதர்களின் அடிப்படை உரிமை ஆகும். இந்தியாவில் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மக்கள் தொகை உள்ளது. இந்த மக்களுக்கு (கிட்டத்தட்ட 600 மில்லியன் மக்கள்), 55% கழிப்பறைகள் கூட இல்லை. மகாத்மாகாந்தி 1925-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரத்தைவிட சுகாதாரம்தான் முக்கியம் என்று பேசினார். ஆனால், சுகாதாரத்தில் நாம் முன்னேறுவதற்குப் பதில் பின்தங்கிவிட்டோம். இந்தியாவில் நகர்ப்புறங்களில் 63 சதவிகிதம் முறையான சுகாதாரம் இல்லை. கழிவுகள் ஆறுகள், கால்வாய்கள் அல்லது நகரங்களில் புறநகர் பகுதியில் வெளியேற்றப்படுகிறது.

ஆரோக்கியமான சூழல்

இந்தியாவில் இன்னமும் 50 சதவீதம் பேர் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர். தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் 70 முதல் 75 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதியில்லை. நகர்ப்புறங்களில் 25 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. வீடுகளில் கழிப்பறை வசதி இருந்தும் 40 முதல் 45 சதவீதம் பேர் அதைப் பயன்படுத்துவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்தான். தங்களுடைய சொந்த செலவில் கழிப்பறை கட்டுவோரில் பெரும்பாலானோர் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், தன்னார்வ அமைப்புகள், அரசின் மூலமாக கழிப்பறைகள் கட்டப்படும்போது பெரும்பாலானோர் அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கழிப்பறைகள் கட்டுவது பெரிய சவாலாக இருக்கவில்லை. ஆனால், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதோடு, அனைவரையும் பயன்படுத்தச் செய்வதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. கிராமங்களில் நோய் கிருமிகள் இல்லாத சுற்றுப்புறத்தை உருவாக்குவதற்கு 100 சதவீத மக்களும் கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும். கழிப்பறைகள் பராமரிப்பை எளிமைப்படுத்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் குறைந்த தண்ணீர் தேவைப்படும் கழிப்பறை அமைப்புகள் தேவைப்படுகின்றன. இதன் மூலம், கழிப்பறைகள் நீண்ட நாள்களுக்குப் பயன்படுபவையாகவும், சுற்றுச்சுழலுக்கு உகந்தவையாகவும் இருக்கும். இந்த துறையில் தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் 50 சதவீத மக்கள் (60 கோடி) இன்னமும் திறந்தவெளியில் மலம் கழிப்பது அவமானகரமானது. இந்த நிலையை ஒழித்து அனைவருக்கும் கழிப்பறை வசதியை அளிக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

நமது கிராமங்களில் நிலைமை இன்னும் மோசம், மூன்றில் இரண்டு விடுகளில் கழிப்பறைகள் இல்லை. பொது இடங்களையும், திறந்தவெளி இடங்களையும் நாம் கழிப்பறைகளாக பயன்படுத்துகிறோம். இந்தியாவில் உள்ள பாதி வீடுகளில் செல்போன்கள் உள்ளது, ஆனால் கழிப்பறை வசதிகள் இல்லை என்று புதிய கணக்கெடுப்பை வெளியிட்டார் சென்சஸ் பதிவாளர்-தலைமை ஆணையர். 246.6 மில்லியன் வீடுகளில் 46.9% தான் கழிப்பறை வசதி உள்ளது. மீதமுள்ளவர்களில் 3.2%பேர் பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். 49.8 சதவீதத்தினர் திறந்த வெளிகளை கழிப்பறைகளாக பயன்படுத்துகின்றனர்.

நிர்மல் பாரத் அபியான் திட்டம் அல்லது சுத்தமான பாரத இயக்கம்

திறந்த வெளியில் மக்கள் மலம் ஜலம் கழிப்பதை ஓழித்து, அனைத்து வீடுகளிலும், பொது இடங்களிலும் சுகாதராமான நவீன கழிப்பறைகளை அமைப்பதே இவ்வியக்கத்தின் நோக்கம். இப்புதிய திட்டம்,1999 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து “முழுமையான சுகாதார இயக்கத்திற்கு” மாற்றாக, பொதுமக்கள் ஆதரவுடன் 2014 முதல் இந்திய நடுவண் அரசு, மாநில அரசுகளின் உதவியுடன் இந்தியா முழுவதிலும், குறிப்பாக ஊரகப்பகுதி வீடுகளில் நவீன கழிப்பறைகளை கட்ட ஊக்குவிக்கிறது. ஊரக பகுதிகளில், வீடுகள், பள்ளிகள், அங்கன்வாடிகள், மக்கள் கூடும் பொது இடங்களில், கழிப்பறை வசதி நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம் மற்றும் ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகம் கட்டுதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கழிப்பறை வசதியில்லாமல் 60 கோடி இந்தியர்கள் சாலையோரங்களிலும், ரயில் தண்டவாளங்களின் இருபுறங்களிலும் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அமர்த்திருப்பது வாடிக்கையான காட்சியாகும். 60 கோடி இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்ற ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களைக் கேட்டால் புருவத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் புள்ளிவிபரங்களின்படி, சுமார் 55 சதவிகித இந்தியர்கள் காலைக்கடன்களைக் கழிக்க கழிப்பறைகளை நாடும் வசதியைப் பெறவில்லை.

மும்பை குடிசைப்பகுதிகளின் நிலைமையே மிக மோசமாக இருக்கிறது. அந்தப்பகுதிகளில் 81 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற நிலை உள்ளது. மேலும் சில இடங்களில் 273 பேருக்கு ஒரு கழிப்பறை என்று மோசமாகவும் இருக்கிறது. இத்தகைய பிரச்சனைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிக்கின்றன என்று யுனிசெப் அமைப்பு எச்சரிக்கிறது. ஒவ்வொரு நாளும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் ஐந்து வயதுகூட நிரம்பாத ஆயிரம் இந்தியக் குழந்தைகள் சராசரியாக உயிரிழக்கின்றனர் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இருட்டுக்காக பெண்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தொற்று நோய்கள், பாம்புக்கடி மற்றும் வன்முறையை எதிர்நோக்க என்று அவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் அன்றாடம் காத்திருக்கின்றன. சுகாதாரக் குறைவால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது.

அந்தப்பணத்தை கழிப்பறைகளை கட்டுவது போன்ற ஆக்கப்பூர்வமான அம்சங்களில் செலவழித்தால் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பது சுகாதாராத் துறை வல்லுநர்களின் கருத்தாகும். இந்தியாவில் கழிப்பறை வசதியில்லாதவர்களின் எண்ணிக்கை 60 கோடி என்கிற நிலையில் உலகம் முழுவதும் சுமார் 260 கோடிப்பேர் இந்த நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். திறந்த வெளியில் மலம் கழிப்பது, நமக்கு சகஜமான ஒரு விஷயம். ஆனால், அதனால், மிகப்பெரிய பிரச்சனையையும் நமது நாடு சந்தித்துக்கொண்டு இருக்கிறது என, சொன்னால் அதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், போதிய கழிப்பறைகள் இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், 2.4 லட்சம் கோடி ரூபாயை இந்திய பொருளாதாரம் இழந்து வருகிறது என்று, உலக வங்கியின் அங்கமான, நீர் மற்றும் சுகாதாரத்திற்கான இயக்கம் தெரிவித்து உள்ளது.

இவ்வாறு உள்ள சூழலை வரும் 2020க்குள் முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று, ஐ.நா.,வின் ‘மில்லெனியம் டெவலப்மென்ட் கோல்ஸ்’ திட்டத்தின் முன்வைக்கப்பட்ட இலக்கை இந்திய அரசும் ஒப்புக்கொண்டு உள்ளது. இதை நோக்கித்தான், கடந்த 1999ல், ‘நிர்மல் பாரத் அபியான்’ என்ற, திட்டத்தை மத்திய அரசு துவங்கியது. கழிப்பறை கட்டுவதற்கு மானியம் அளிப்பதும், கழிப்பறைகளின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

புள்ளிவிவரங்கள்

  • இந்தியாவில், ஏறத்தாழ ஆறு கோடி குழந்தைகளின் வளர்ச்சி குன்றியுள்ளது. இவர்களைதான் நம் எதிர்கால சொத்தாக, இந்தியாவின் பாலமாக கொண்டாடுகிறோம்
  • ஒவ்வொரு ஆண்டும், ஏறத்தாழ இரண்டு லட்சம் இந்திய குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கின்றனர். கழிப்பறைகள் இருந்தால் இது, சுலபமாக தடுக்கப்படலாம்.
  • சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பதால், ஒவ்வொரு ஆண்டும் 1,200 கோடி ரூபாய் அளவிற்கு சுற்றுலா துறையில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
  • பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததால், பாட்டில் குடிநீர் வாங்குவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 600 கோடி ரூபாய் வீண் கூடுதல் செலவாகிறது
  • நீர்நிலைகளின் அருகே மலம் கழிக்கப்படுவதால், குடிநீர் சுத்திகரிப்பதற்கு செலவு அதிகரிக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும், 11,200 கோடி ரூபாய் இழக்கப்படுகிறது.
  • சுகாதாரமற்ற குடிநீர், கழிப்பிடங்களால் ஏற்படும் உடல்நல குறைவால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் 21,700 கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
  • அரசுக்கு கூடுதல் மருத்துவ செலவாக 21,200 கோடி ரூபாய் ஏற்படுகிறது

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நல்ல கழிப்பறை வசதி இல்லாதுபோனால் தனிமனித ஆரோக்கியம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அதனால் மிகப்பெரிய சேதம் நாட்டுக்கு உண்டாகிறது. ஆரோக்கியமற்ற குடிமக்கள் பொருளாதார இழப்புக்கு வழி வகுக்கின்றனர். ஒருமாநிலத்தின் வளர்ச்சி என்பது தொழிற்சாலைகளைத் திறப்பதோடு நின்று போவதில்லை. 2020க்குள் தமிழகத்தை முழுமையான கழிப்பறை வசதி கொண்ட மாநிலமாக மாற்றினால், அதுவே உண்மையான கவுரவமான வளர்ச்சி. அரசு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும், அதை பயன்படுத்துகிற, பராமரிக்கிற பொறுப்பு பொதுமக்களைச் சார்ந்ததுதான். தற்போது அரசாங்கம் ஏற்படுத்தித் தருகின்ற பொது சுகாதார வளாகங்களை, பொதுமக்கள் எவ்வளவு மோசமாகப் பராமரிக்கின்றனர் என்பதை கிராமங்களுக்கு சென்று பார்ப்பவர்கள் அறிந்திருக்கக்கூடும். ஒரு கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டால், ஒரு சில வாரங்களிலேயே யாரும் அணுக முடியாத, ஒரு பகுதியாக அந்த இடம் மாறிவிடுகிறது. அந்த அளவுக்கு அவற்றை பொதுமக்கள் வைத்திருப்பது வேதனையளிக்கும் உண்மையாகும்.

இந்தியாவில் ஏறக்குறைய பாதி வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைபேசி (பெரும்பாலும் செல்போன்) உள்ளது என்பது 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் நடைபோட்டாலும், கழிப்பறையைப் பொறுத்தவரை ஏறக்குறைய இதே நிலைமைதான். தகவல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளது என்பதற்காக மகிழ்ச்சிகொள்ளும் அதே நேரத்தில், சுகாதாரம் குறித்த அடிப்படை விஷயத்தில் இன்னமும் நாம் பின்தங்கியே கிடக்கிறோம் என்பது வேதனைதான். இந்தியாவில் உள்ள 47.2% வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி போய்ச் சேர்ந்துள்ளது. 63% வீடுகளுக்கு செல்போன் சென்று சேர்ந்துள்ளது. ஆனால், கழிப்பறை மட்டும் திறந்தவெளியாகவே இருக்கிறது என்றால் இதற்கு காரணம், மக்களின் அறியாமை, அலட்சியம் ஆகியவைதான். பெருநகரங்களில் வசிக்கும் நடைபாதைவாசிகளில் பெரும்பாலோர் கட்டணக் கழிப்பறைகளையே பயன்படுத்துகின்றனர். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம்தான் இன்னும் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு சென்று சேரவில்லை. இந்தியாவில் உள்ள 25 லட்சம் கிராமங்களில் வெறும் 25,000 கிராமங்கள் மற்றும் கழிப்பறை வசதிகளைக் கொண்டவையாக, திறந்தவெளியைப் பயன்படுத்தாத கிராமங்களாக உள்ளன.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top