பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய ஆயுஷ் இயக்கம்

தேசிய ஆயுஷ் இயக்கம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மத்திய அரசின் சுகாதார குடும்பநல அமைச்சகத்தின் ஆயுஷ் துறை, பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்துவதற்கான தேசிய ஆயுஷ் இயக்கத்தை (NAM) தொடங்கியது. ஆயுஷ் (AYUSH) என்பது ஆயுர்வேதம்,  யுனானி,  சித்தமருத்துவம். ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளைக் குறிக்கும்.

பாரம்பரியமான இந்த மருத்துவ முறைகளை மக்களிடையே பிரபலப்படுத்தவும், இந்த மருத்துவ முறைகளுக்கான கல்விமுறையை வலுப்படுத்துவதும், இந்தத் துறை மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தவும், அம்மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிவகைகளைச் செய்வதும் தேசிய ஆயுஷ் இயக்கத்தின் நோக்கமாகும்.

தேசிய ஆயுஷ் இயக்கத்தில் மாநில அரசுகள் பங்கெடுத்துத் தீவிரமாகச் செயல்படுவதை ஊக்குவிப்பதற்காக, திட்டங்களின் அமலாக்கத்தில் தாராளப் போக்குகளும் சலுகைகளும் சேர்க்கப்பட்டன. தேசிய இயக்கம் போலவே மாநில அரசுகளும் தத்தமது சிறப்பு இயக்கங்களைத் தொடங்கவும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

நோக்கமும் பணிகளும்

 • நாடு முழுவதும் ஆயுஷ் மருத்துவ வசதிகள் எல்லாத்தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்குச் செய்தல்.
 • மக்களின் மருத்துவத் தேவைக்களுக்குப் பிரதான சேவையாக ஆயுஷ் மருத்துவ முறைகளை முன்னிருத்தி அவற்றை வலுப்படுத்துதல்
 • ஆயுஷ் மருத்துவமுறைகளில் தரமான கல்வியை வழங்கும் வகையில் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துதல்.
 • ஆயுஷ் மருந்துகளுக்குத் தரக்கட்டுப்பாடுகளை ஏற்கச் செய்து, அவற்றின் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்கச் செய்தல்.
 • ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  சமுதாய சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றின் வளாகங்களில் ஆயுஷ் மருத்துவமனைகளையும் ஏற்படுத்துவது. மற்றும், ஆயுஷ் மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தி, எல்லாத்தரப்பு மக்களுக்கும் ஆயுஷ் மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் கிடைக்க ஏற்பாடு செய்தல்.
 • ஆயுஷ் மருத்துவ முறைகளைக் கற்பிக்கும் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தி, மாநிலங்களின் அளவில் நிறுவன ரீதியான திறனை வலுப்படுத்துதல் மற்றும் ஆயுஷ் மருந்து விற்பனையகங்கள்,  மருந்து பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றையும் மேம்படுத்துவது.
 • சிறப்பான பயிர் சாகுபடி, முறைகளைக் கைக்கொண்டு, மருந்துத் தாவரங்கள் மற்றும் மூலிகைகள் வளப்பதற்கு ஆதரவு தருதல். அதன் மூலம் மருந்து தயாரிப்பதற்கு வேண்டிய தரமான மூலப்பொருள்கள் தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல். மூல பொருட்கள் தாவரங்கள் மற்றும் மூலிகைகளுக்கு தர அளவை நிர்ணயம் செய்து,  அவற்றுக்குத் தரச் சான்றிதழ் வழங்கவும்,  நல்ல முறையில் அவற்றைச் சேமித்து வைப்பதற்கான உத்திகளை பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுத்தல்.

இயக்கத்தின் கூறுகள்

மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருபது சதவீதம் கீழ்காணும் வசதிகளை ஏற்படுத்துவதற்குச் செலவிடப்படும். ஆயினும் எந்த ஒரு வசதியை ஏற்படுத்துவதற்கான, அல்லது மேம்படுத்துவதற்கான செலவும் மொத்த ஒதுக்கீட்டில் ஐந்து சதவீதத்திற்கு அதிகமாகக் கூடாது என்ற கட்டுப்பாடு உண்டு.

 • யோகா,  இயற்கை மருத்துவம் உள்ளிட்ட ஆயுஷ்  நலநிலையங்கள்
 • தொலை மருத்துவம்
 • ஆயுஷ் மூலம் விளையாட்டுத்துறை மருத்துவம்
 • அரசு -தனியார் கூட்டுறவுடன் ஆயுஷ் துறையில் புத்தாக்க முயற்சிகள்
 • தனியார் நடத்தும் ஆயுஷ் மருத்துவக்கல்வி நிறுவனங்களுக்கு அவை வாங்கிய கடனுக்கான வட்டிக்கு அரசின் மானியம்  வழங்குதல்.
 • பரிசோதனை கட்டணங்களைத் திருப்பித்தருதல்.
 • தகவல் அறிவுறுத்தல்,  கல்விபுகட்டல்,  தொடர்புப் பரிமாற்றப் பணிகள்.
 • மூலிகைத் தாவரங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள்.
 • தாமே முன்வந்து சான்றுபெறும் திட்டம்.
 • மூலிகை தாவரங்களுக்கான சந்தையை மேம்படுத்துதல். தேவையான நேரத்தில் தக்கவாறு தலையிட்டு,  அரசாங்கமே மூலிகைகளை வாங்குதல்.
 • மூலிகாப் பயிர்களுக்கு பயிர்பாதுகாப்புத்திட்டம்.

ஆயுஷ் மருத்தவம் சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கான செலவு, கட்டமைப்பு வசதி மேம்பாட்டுச் செலவு,  ஆயுஷ் துறை மூலமாக வழங்கப்படும் மருந்துகளுக்கான செலவு ஆகியவற்றில் ஓரளவுக்கு மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்படும். இந்தப்பணிகளின் அமலாக்கத்தை ஒருங்கிணைத்துக் கண்காணிக்க இந்த ஏற்பாடு துணையாகும். மாநில அரசுகள்,  இத்துறையில் உள்ள பதவி இடங்கள் அனைத்தையும் நிரப்பிடவேண்டும். நடைமுறையில் உள்ள வழிகாட்டுதலின்படி மருந்துகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்யவேண்டும்.

தேசிய ஆயுஷ் இயக்கத்திற்கு ஆதரவான வசதிகள்

மத்திய மாநில நிலைகளில் ஆயுஷ் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிகழ்ச்சித்திட்ட நிருவாக அலகுகளை உருவாக்குவதற்கு நிதிஉதவி செய்யப்படும். நிகழ்ச்சிதிட்ட நிருவாக அலகுகளில் மேலாண்மை நிபுணர்களும்,  தொழில்கள் நிபுணர்களும் மாநில நிலையிலும் மத்திய நிலையிலும்  இருப்பவர்கள். இவர்கள் ஒப்பந்தபணிமூலம் பணியமர்த்தப்படுவார்கள் அல்லது சேவைகளை வழங்குபவர்கள் மூலம் நியமிக்கப்படுவார்கள்.

நிகழ்ச்சி திட்ட நிருவாக அலகுகளில் பணியமர்த்தப் படுபவர்களுக்கான ஊதியம்,  இயக்கம் செயல்படும் காலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிருவாகச் செலவுகளில் இருந்து வழங்கப்படும். இந்த தொழில்சார் நிபுணர்கள் மாநிலங்களில் ஆயுஷ் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நுட்ப ஆலோசனைகளை வழங்குவார்கள். இவ்ரகள் அனைவரும் ஒப்பந்தப் பணியில் இருப்பதால்,  இயக்கச் செயல்பாட்டுக் காலத்திற்கான ஊதியச் செலவிற்கான தனது பங்கை அளிப்பதோடு மத்திய அரசின் பொறுப்பு முற்றும் பெறும்.

தொழில்கள் நிபுணர்களின் ஊதியச் செலவைத் தவிர, அலுவலக நிருவாகச் செலவு, போக்குவரத்துப்படி,  எதிர்பாராத சில்லறைச் செலவு, கணினி போன்றவற்றுக்கான வருடாந்திர பராமரிப்புச் செலவு, பயணப்படி, பயிற்சிகள் அளிப்பதற்கான செலவு,  திட்டங்களை கண்கணித்து மதிப்பிடும் செலவு, தணிக்கைச் செலவு,  ஆலோசனைப் பணி மற்றும் ஆயுஷ் மருத்துவ மனைகளுக்கான கூடுதல் பணியாளர்களுக்கான செலவுகள் ஆகிவற்றுக்கும் மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி உதவியைப் பெறலாம். மாநிலங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியத்தில் நான்கு சதவீதத்திற்கு மேற்படாமல் இந்த இனங்களில் செலவு செய்யலாம்.

நிதி ஒதுக்கீடு ஏற்பாடுகள்

ஆயுஷ் சேவைகள், கல்வி நிறுவனங்கள்,  தரக்கட்டுப்பாடு மற்றும் மருந்துகளுக்கு,  வடகிழக்கு மாநிலங்கள்,  இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட்,  ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியமாக மொத்தச் செலவில் 90 சதவீதத்தை வழங்குகிறது. எஞ்சியுள்ள பத்து சதவீதச் செலவினை மட்டுமே  இந்த மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டவை தவிர மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசின் மானியம் 75 சதவீதம் மாநிலங்களின் பங்கு 25 சதவீதம்.

மூலிகைத் தாவரங்களைப் பயிரிடுவதற்கான மானியம், வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றுக்கு நூறு சதவீதமாகும். மற்ற மாநிலங்களுக்கு இது 90 சதவீதமாக இருக்கும்.

மத்திய அரசிடம் இருந்து ஆயுஷ் திட்ட அமலாக்கத்திற்காக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது பல காரணிகள் கருத்தில் கொள்ளப்படும். மக்கள் தொகை அளவிற்கு 70 சதவீத முக்கியத்துவம் தரப்படும். அதிலும் அதிகாரம் பெற்ற செயல் குழு மாநிலங்கள் (EAG) என்று வகைப்படுத்தப்பட்ட பீகார்,  ஜார்க்கண்ட்,  சத்தீஸ்கர், மத்திய பிரதேசம்,  ஒடிசா,  ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம். உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மக்கள் தொகை அடிப்படைக்கு இரண்டு மடங்கு முக்கியத்துவம், தரப்படும். மலைப்பாங்கான மாநிலங்கள், தீவுப்பகுதிகளான யூனியன் பிரதேசங்களும் இவற்றை கருத்தில் கொள்ளப்படும்.

மாநிலங்களின் பின்தங்கிய அளவினைக் குறிக்கும் சராசரி தனிநபர் வருமானம் என்ற அளவுகோல் 15 சதவீத முக்கியத்துவம் பெறும்.

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் செயல்பாடுகள் அத்தியாவசியமானவை என்றும்,  விருப்பப்பட்டால் மேற்கொள்ளக் கூடியவை என்றும்,  இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டுள்ளன. மாநிலங்களின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் எண்பது சதவீதம் அத்தியாவசியமான செயல்பாடுகளுக்கும், மற்ற விருப்புறுதிச்  செயல்பாடுகளுக்கு இருபது சதவீதம் செலவிடப்படவேணடும். விருப்புறுதிச் செயல்பாடுகளில் எந்த ஒரு திட்டத்திற்கும் மொத்த ஒதுக்கீட்டில் ஐந்து சதவீத்திற்கு மேல் செலவிடக்கூடாது என்ற வரம்பும் இருக்கிறது.

செயல் திட்டம்

மத்திய ஆயுஷ் துறை ஒவ்வோராண்டும் டிசம்பர் 31  ஆம் தேதிக்குள் மாநில அரசுகளுக்கான அடுத்த ஆண்டிற்கான உத்தேச நிதிஒதுக்கீடு பற்றி தெரிவிக்கும். மார்ச் 31 ஆம் தேதிக்குள் மாநில அரசுகள் தமது பங்குத் தொகைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும். மாநில அரசின் ஆயுஷ் சங்கத்தின் நிருவாகக் குழு,  ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்,  மாநிலத்திற்கான வருடாந்திரத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். மே முதல் வாரத்தில், அந்த வருடாந்திரத் திட்டம், மத்திய அரசின் ஆயுஷ் துறையிடம் சமர்பிக்கப்பட வேண்டும்.

கண்காணிப்பும் மதிப்பீடும்

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் செயல்பாடுகளிக் கண் காணிக்கவும், மதிப்பிடவும் மத்திய அளவிலும் மாநில அளவிலும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படும். அதன்படி சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமைப் பிரிவு ஒன்று தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டு, மூன்று மேலானர்கள் நியமிக்கப்படுவர். மாநில அளவிலான பிரிவுகளில் தலா ஒரு மேலாளர் நியமிக்கப்படுவர்.

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உன்னிப்பாக்க் கண்காணிப்பதன் மூலம், செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முனனேற்றங்களை கண்டறிவதுடன்,  செயல்பாடுக்குத் தடையான காரணிகளை இனங்கண்டு,  அவற்றை எதிர்கொள்ளும் வழிவகைகள் மேற்கொள்ளப்படும். தேசிய ஆயுஷ் இயக்கம் செயல்பாட்டுக்கு வந்தபின் இரண்டாண்டுகள் கழித்து,  மூன்றாம் தரப்பினைக் கொண்டு சுயேச்சையான மதிப்பீடுகளும் மேற் கொள்ளப்படும்.

எதிர்பார்த்த விளைவுகள்

இந்தத் திட்டத்தினால்,  ஆயுஷ் மருத்துவ முறைகளைக் கற்பிக்கும் கல்வி நிலையங்களின் தரம் மேம்படுவதால்,  ஆயுஷ் கல்வியின் தரமும் உயரும். ஆயுஷ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஆயுஷ் மருந்துகளும் தாராளமாகக் கிடைப்பதால், அதிக அளவிலான மக்களுக்கு ஆயுஷ் மருத்துவ சேவைகள் கிடைக்கும்.


National Ayush Mission

ஆதாரம் : ஆயுஷ் அமைச்சகம்

Filed under:
2.95505617978
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top