பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வழுக்கை

வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் நோய் மேலாண்மை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஒருபகுதி அல்லது முழுமையாக முடியை இழத்தல் வழுக்கை அல்லது முடியுதிர்தல் எனப்படுகிறது. முடியிழப்பு கொஞ்சம் கொஞ்சமாக உண்டாகும். ஒருசில இடங்களில் ஏற்பட்டு பின் முற்றிலுமாகப் பரவும். ஒருவர் ஒருநாளைக்கு 100 முடிகள் வரை இழக்கிறார்.

பொதுவாக நோயால் வழுக்கை ஏற்படுவதில்லை. அது வயது, மரபு அல்லது இயக்குநீர் மாற்றங்களோடு தொடர்புடையது. ஆண்வழுக்கையாகும் விதமும் பெண்வழுக்கையாகும் விதமும் வெவ்வேறாக இருக்கலாம்.

காரணங்கள்

வழுக்கை விழுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் அடங்குவன:

முடிக் கோளாறுகள் (Hair Disorders)

 • மரபுவழி முடியுதிர்தல் அல்லது வழுக்கை: இது ஆண்மரபு வழுக்கை என்றும் அழைக்கப்படும். இதுவே முடியுதிர்தலுக்கான மிகப் பரவலான காரணம் என்று கருதப்படுகிறது. ஆண்களில் மரபுவழியான முடியிழப்பால், முடியெல்லை குறைந்துகொண்டே வரும்; மேலும் மண்டையோட்டின் உச்சியில் முடியிழப்பைக் காணலாம். ஆனால் பெண்களுக்கு முடியெல்லையில் மாற்றம் இருக்காது. முன்னந்தலையிலும் உச்சியிலும் முடி அடர்த்தி குறையும்.
 • சொட்டை : இது ஒரு தன்தடுப்பு நோய். மண்டையோட்டிலும் உடலின் பிற பாகங்களிலும் இதனால் முடியிழப்பு ஏற்படுகிறது. எல்லா வயதினருக்கும் இது வரும். முடி திட்டுத்திட்டாக உதிரும்.
 • வடு வழுக்கை: இது ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் வரலாம். இந்த அரிய வகைக் கோளாறினால் மயிர்க்கால்கள் சிதைவடைகின்றன. மயிர்க்கால்கள் இருந்த இடங்களில் வடு திசுக்கள் வளர்வதால் மறுவளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. மயிர்க்கால்களை அழிக்கும் அழற்சியைத் தடுக்கவே மருத்துவம் முனைகிறது.

நோய் (Disease)

 • அடிப்படையான மருத்துவக் காரணங்கள்: முடியிழப்பு ஏறத்தாழ 30 நோய்களுக்கு எச்சரிக்கை அறிகுறி என்று கருதப்படுகிறது. அடித்தளத்தில் இருக்கும் நோய்க்கு மருத்துவம் செய்யும்போது முடியுதிர்தல் தடுக்கப்படலாம். தைராய்டும், இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகையும் முடியிழப்புக்கு இட்டுச் செல்லும் மருத்துவக் காரணங்களாகும்.
 • சில புற்றுநோய்ச் சிகிச்சைகள்: கதிர்வீச்சு மருத்துவமும் சில வேதியற் மருந்துகளும் முடியுதிரச் செய்யலாம். முடியுதிர்தல் தற்காலிகமானதானாலும் சிகிச்சையின் இப்பகுதி வேதனை தருவதாகும்.
 • மண்டையோட்டுப் படர்தாமரை: பூஞ்சைத் தொற்றாலும் முடியுதிரலாம். இது குழந்தைகளுக்குப் பரவலாக இருக்கும். இதனால் வழுக்கையும் மண்டையோட்டில் செதிள்களும் உண்டாகலாம்.
 • முடிபிய்த்தலுணர்வு (Trichotillomania): இக்கோளாறுடையவர்கள் தங்கள் முடியைத் தாங்களே பிய்த்துக் கொள்வார்கள். தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளும் தொடர் உந்துதலோடு கூட இக்கோளாறினால் அவதிப்படுபவர்கள் கண் இமை, மூக்கு முடி, புருவம், உடலில் உள்ள பிற மயிர்கள் யாவற்றையும் பிடுங்கி எறிய உந்துதல் உள்ளதாக அடிக்கடி கூறுவர்.

மனவழுத்தமும் இயக்குநீர்களும் (Stress and Hormones)

 • மனவழுத்தம்: உடல் மன அழுத்தம் உடையவர்களுக்கும், பெரும் அறுவை மருத்துவம், அதிக காய்ச்சல், கடும் தொற்று அல்லது குளிர்காய்ச்சலுக்குப் பின்னும் கூட முடியிழப்பு ஏற்படலாம்.
 • இயக்குநீர் ஏற்ற இறக்கம்: இயக்குநீர் அளவுகளில் ஏற்படும் மாற்றமும் குறிப்பாகப் பெண்களுக்கு முடியிழப்பை உண்டாக்கும். பெண்தன்மை நீர்ம அளவுக் குறைவினால் இறுதி மாதவிடாய் காலத்திலும் மகப்பேற்றிற்குப் பின்னும் முடியுதிர்வது வழக்கமான ஒன்றே. இது தற்காலிகம் ஆனது. முடி மீண்டும் வளரும்.

உணவு (Diet)

 • எடை குறைவு: எடைப் பிரச்சினை உடையவர்களுக்கு முடியிழப்புப் பிரச்சினையும் இருக்கும். இத்தகைய முடியுதிர்தல் இயற்கையானதே. தகுந்த உணவும், தகுந்த எடையும் மீண்டும் முடி வளர்தலை ஊக்குவிக்கும்.
 • வைட்டமின் ஏ அதிகமாக இருத்தல்: மருந்து அல்லது ஊட்டச்சத்துக்கள் மூலம் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளெடுப்பது முடியிழப்புக்குக் காரணமாகும்.
 • புரதச்சத்து குறைவாக எடுத்தல்: உடலுக்குத் தேவையான அளவுக்கு புரதச்சத்து கிடைக்காத போதும் முடியுதிரும். முடிவளர்ச்சிக்கு ஓய்வளித்துப் புரதத்தை உடல் சேமிக்கும். இரண்டு மூன்று மாதங்களில் முடியிழப்பு கண்களுக்கத் தென்படும். தேவையான அளவுக்குப் புரதத்தை உண்ணும்போது முடி மீண்டும் வளரும்.
 • இரும்புச்சத்துக் குறைவு: இரும்புச்சத்தைக் குறைவாக எடுக்கும் போதும் முடியுதிரலாம். தானியங்கள், சோயாபீன்ஸ், பூசணி விதை, வெள்ளை பீன்ஸ், பருப்புகள், புதினா ஆகியவை இரும்புச் சத்து நிறைந்த மரக்கறி உணவுகள் ஆகும். கிளிஞ்சல், சிப்பி, உறுப்பிறைச்சி ஆகியவை இரும்புச் சத்துள்ள அசைவ உணவுகள்.
 • உண்ணும் கோளாறு: பசியின்மை, பெரும்பசி ஆகிய உண்ணும் கோளாறுகளினாலும் முடியிழப்பு உண்டாகலாம்.

மருந்து உட்கொள்ளுதல் (Medication)

முடியுதிர்தலை உண்டாக்கும் மருந்துகளில் அடங்குவன:

 • இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள்
 • அதிக அளவு வைட்டமின் ஏ
 • கீல்வாதம், மனச்சோர்வு, மூட்டுவீக்கம், இதயக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் மருந்துகள்.
 • குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகள்: குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்துவரும் அல்லது நிறுத்தும் சில பெண்களுக்கு முடியுதிரலாம். இது மரபு வழியாக முடியுதிரும் பண்பைப் பெற்ற பெண்களுக்குப் பொதுவாக ஏற்படுகிறது.

முடி பேணும் பழக்கவழக்கங்கள் (Hair Care Practices)

 • முடி ஒப்பனை: முடிக்கு அடிக்கடி வண்ணம் பூசுவதாலும் முடி உடையலாம். தொடர்ந்து அல்லது முறையற்ற வகையில் முடிச்சாயம், ஜெல்கள், தளர்த்திகள், தெளிப்பான்கள் பயன்படுத்துவதாலும் முடி உடையும். தோல்மருத்துவர்கள் இப்பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்குமாறு ஆலோசனை கூறுகிறார்கள்.
 • முடியுலர்த்திகள், முடிநிமிர்த்திகள் போன்ற பொறிகள்: முடியுலர்த்தியைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது முடி சிதைவடையும். முடியுலர்த்தியில் இருந்து வெளிவரும் அதிவெப்பக் காற்று மயிர்த்தண்டில் உள்ள நீரைக் கொதிக்க வைப்பதால் முடி நொறுங்கத்தக்கதாக மாறி உடையும் அபாயம் ஏற்படும். முடியைத் தானாகவே உலர விட்டு பின் அலங்காரம் செய்து கொள்வதே இந்த அபாயத்தைத் தவிர்க்கும் வழி. தோல்மருத்துவர்கள் அதிக வெப்பத்தைப் பயன்படுத்தும் முடிநிமிர்த்தி, முடிசுருட்டிகளின் பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்துகிறர்கள்.
 • முடியூசிகள், கிளிப்புகள், ரப்பர் பேண்டுகள்: முடியை ஊசி, கிளிப், ரப்பர் பேண்ட் கொண்டு இறுக்கினால் முடி உடையும். இதைக் குறைக்க தொய்வான கிளிப்புகளைத் தலையின் பல இடங்களில் அணிந்தால் அழுத்தம் குறைந்து முடி உடைவது தவிர்க்கப்படும்.
 • தீவிரப் பேணல்: தொடர்ந்து ஷாம்பிடுதல், தலைவாருதல், பிரஷிடுதல் அல்லது இவற்றில் எது ஒன்றையாவது அழுத்தமாகச் செய்தால் முடி உடையும். முடி உடையும் நிலை வரும்போது முடி கரடு முரடாகவும் மெல்லியதாகவும் மாறும்.

நோய் கண்டறிதல்

மருத்துவ மற்றும் குடும்ப வரலாற்றைக் கேட்டறிவதன் மூலம் தோல்மருத்துவர் முடியிழப்பைக் கண்டறிகிறார். மேலும் தலையோட்டை கவனமாக ஆய்வதின் மூலமும் நிலைமையை அறிய முடியும்.

நோய் மேலாண்மை

நோயின் காரணத்தைப் பொறுத்தே வழுக்கையாதல் அல்லது முடியுதிர்தல் பிரச்சினைக்கு மருத்துவம் அமைகிறது.

மருத்துவர் குறிப்பின்றி கிடைக்கும் மருத்துவம்

 • மினாக்சிடில் (Minoxidil): இம்மருந்து தலையோட்டில் பூசப்படுகிறது. இது முடி பலவீனம் அடைவதைத் தடுத்து முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது ஒன்றே ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி மறு வளர்ச்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்து. ஒரு தோல்மருத்துவர் இதனுடன் வேறு ஏதாவதொரு சிகிச்சையையும் இணைத்துக் கொள்கிறார்.
 • லேசர் கருவிகள்: லேசர் ஒளியை வெளிவிடும் பிரஷ்கள், சீப்புகள் போன்ற மேலும் பல கைக்கருவிகள் முடிவளர்ச்சியைத் தூண்டுகின்றன. சிலருக்கு இக்கருவிகள் முடியை மேலும் இளமையாகத் தோன்றச் செய்யக்கூடும். FDA இவற்றை மருத்துவக் கருவிகள் என்று வகைப்படுத்துகிறது. இவைகள் மருந்துகளைப் போல கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப் படுவதில்லை. இக்கருவிகளுக்கு உள்ள நீண்ட நாள் பயன்களும் இவற்றின் பாதுகாப்பு அம்சமும் அறியப்படவில்லை.

பரிந்துரைக்கப்படும் மருந்துகள்:.

ஃபினாஸ்டெரைடு: (Finasteride) ஆண்களின் முடியிழப்பிற்கான மருந்தாக FDA இதை அங்கீகரித்துள்ளது. இது மாத்திரையாகக் கிடைக்கிறது. மிகப் பெரும்பாலானோர்க்கு (88%) முடியுதிரும் வேகத்தைக் குறைக்கிறது. பல ஆண்களுக்கு (66%) முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. ஓர் ஆண் இயக்குநீரான டிஹைடிரோடெஸ்டோஸ்டெரோன் (dihydrotestosterone (DHT) சுரப்பதைத் தடுத்து இம்மருந்து செயலாற்றுகிறது.

 • கோர்ட்டிகோஸ்ட்டெராய்ட் (Corticosteroid): உங்கள் உடலில் உள்ள அழற்சியினால் முடியுதிர்ந்தால், தோல்மருத்துவர் தலையோட்டிற்குள் கோர்ட்டிகோஸ்ட்டெராய்ட் என்ற மருந்தைச் செலுத்தலாம். சொட்டைக்குக் காரணமான அழற்சியை இது தடுக்கிறது. கோர்ட்டிகோஸ்ட்டெராய்ட் வளர்வினை ஊக்கமருந்தில் (anabolic steroid) இருந்து வேறுபட்டது.

வழிமுறைகள் (Procedures)

உங்கள் முடியுதிர்வின் அளவைப் பொறுத்தே ஒரு தோல்மருத்துவர் கையாளவேண்டிய வழிமுறையைப் பரிந்துரைக்கிறார். சிறந்த பலனைப் பெற ஒரு தோல் மருத்துவர் பின் வரும் முறைகளுள் ஒன்றைப் பயன்படுத்துகிறார்:

 • முடிமாற்று சிகிச்சை: தலையோட்டில் முடி வளர்ச்சி நன்றாக உள்ள இடத்தில் தோல் எடுக்கப்பட்டு முடி தேவைப்படும் பகுதிக்கு மாற்றப்படுகிறது.
 • தலையோடு குறைப்பு: முடியற்ற பகுதி வெட்டி அகற்றப்பட்டு முடி உள்ள பகுதி அருகில் கொண்டுவரப்பட்டு வழுக்கைப்பகுதி குறைக்கப்படுகிறது. இவ்வறுவை மருத்துவம் தனியாகவும் முடிமாற்று சிகிச்சையோடு சேர்த்தும் செய்யப்படுகிறது.
 • தலையோடு விரிவாக்கம்: கருவிகளைத் தலையோட்டிற்குள் செலுத்தி 3-4 வாரங்கள் வரை வைத்து தோல் நீட்சி அடைய வைக்கப்படுகிறது. தலையோட்டைத் தளர்வாக்க தலையோடு குறைப்பு அறுவைக்கு முன் இம்முறை கையாளப்படுகிறது. முடியுள்ள பகுதியை நீட்சி அடைய வைத்து வழுக்கைப் பகுதியைக் குறைக்கவும் இம்முறை தனியாகவும் கையாளப்படுகிறது.
 • தலையோட்டுப் பட்டை: முடியுள்ள ஒரு பகுதி அறுவை மருத்துவத்தால் அகற்றப்பட்டு முடி தேவைப்படும் இடத்தில் வைக்கப்படுகிறது.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.93548387097
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top