অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மூல நோய்க்கு நல்ல மருந்து காட்டுக்கருணை

மூல நோய்க்கு நல்ல மருந்து காட்டுக்கருணை

நாம் மலம் கழிக்க தாமதப்படுத்தும்பொழுதும் அல்லது மலவாயில் இறுக்கம் ஏற்படும்பொழுதும் மலக்கடலில் தங்கியுள்ள மலமானது இறுகி, சுற்றியுள்ள மலக்குடல் திசுக்களையும், நுண்ணிய ரத்தக்குழாய்களையும் அரிக்க ஆரம்பிக்கின்றன.

மலத்திலுள்ள பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளும், அமோனியா, பொட்டாசியம், நைட்ரஜன் போன்ற வேதிப்பொருட்களும் மலக்குடலை சேதப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி மியூகஸ் என்னும் சளிச்சவ்வையும் பாதித்து மலக்குடல் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு ஏற்பட்ட வீக்கமானது மலக்குடலின் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தத்தை தேங்கவைத்து, குழாய்களை வெடிக்கவைத்து விடுகின்றன. அத்துடன் அந்த ரத்தக்குழாய்களில் குழிப்புண்களோ, வளர்ச்சிகளோ ஏற்பட்டு மூலமாக மாறுகின்றன. சில நேரங்களில் ரத்தக்கசிவை ஏற்படுத்த ரத்த மூலமாக மாறுகின்றன. வீக்கங்கள் மற்றும் சதை வளர்ச்சிகள் வெளியே பிதுங்கி, உள் மற்றும் வெளிப்புறமாக மாறுகின்றன. இவ்வாறு கவனிக்கப்படாத குழிப்புண்களானது மலவாய்பகுதியை சுற்றியுள்ள சதைகளை குடைந்து, தோலைவிட்டு வெளியேறி, துளைப்புண்களாக மாறி, பவுத்திர நோயாகவும் உருவெடுக்கின்றன.

இதனால் மூலநோயாளியாக மாறி, உட்காரவும் எழவும் சிரமப்பட்டு அன்றாட காலைக்கடன்களை கழிக்கவே பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. மூலநோய் வராமல் தடுக்க நார்ச்சத்து மிகுந்த, கொழுப்புச்சத்து குறைந்த, காரமில்லாத உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் நீண்டநேரம் அமருவதை தவிர்த்து, போதுமான நீர் அருந்தவேண்டும். புரோட்டா, அசைவ உணவுகள், பொரித்த உணவுகளையும், இரவில் வயிறுமுட்ட உணவு உண்பதையும் தவிர்க்க வேண்டும். மலத்தையும் அபான வாயுவையும் அடக்கக்கூடாது. வாயுவை பெருக்கக்கூடிய கிழங்குகளையும், வறுத்த காரமான பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

கீரை, காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும். விரைவில் தூங்கி அதிகாலை எழ வேண்டும். கணினி, சமையல் வேலை போன்ற உஷ்ணத்தைப் பெருக்கக்கூடிய பணிகளை போதுமான இடைவெளி விட்டு செய்ய வேண்டும். மூலத்தை நீக்கி, மூலநோய் வராமல் காக்கும் அற்புத கிழங்கு காட்டுக்கருணை. இதன் வேர்கிழங்கில் 76 சதவீதம் ஸ்டார்ச் அமைந்துள்ளது. மூலநோயில் தோன்றும் கட்டி, வீக்கம், சீர் மற்றும் கழிச்சலை நீக்கக்கூடியவை. ஆசனவாய் பகுதியிலுள்ள தோலில் தோன்றும் சிறு சிறு வெடிப்புகளையும் ஆற்றக்கூடியவை.

காட்டுக்கருணை, காராக்கருணை, புளியம்பிரண்டை, நாப்பிரண்டை, மருள்கிழங்கு, கற்றாழை வேர், சமையல் கருணை, மாம்பருப்பு, தோல் நீக்கிய சுக்கு, கடுக்காய்த்தோல், கொடிவேலி வேர்ப் பட்டை, கோரைக்கிழங்கு, சரக்கொன்றை புளி ஆகியவற்றை சம அளவு எடுத்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் போட்டு உலர்த்தி இடித்து, சலித்து, லேசாக நெய்யில் பிசறி, இளவறுப்பாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இத்துடன் 2 பங்கு கருப்பட்டி தூளையும் கலந்து வைத்துக்கொள்ளலாம். இந்தச்சூரணத்தை காலை மற்றும் இரவு 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர மூலநோய் நீங்கும். சிலருக்கு லேசாக நாக்கில் அரிப்பு ஏற்படலாம். இதனை தவிர்க்க காட்டுக்கருணை, காராக்கருணை, நாப்பிரண்டை, சமையல் கருணை, கோரைக்கிழங்கு ஆகியவற்றை நல்லெண்ணெயில் லேசாக வதக்கி, பின் பொடித்து லேகியமாக செய்து கொள்ளலாம். சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் கருணை லேகியத்தை வாங்கி 5 முதல் 10 கிராமளவு தினமும் 2 வேளை சாப்பிடலாம்.

ஆதாரம் : தினகரன் ஆரோக்கியம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate