பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / ஊட்டச்சத்துக் குறைபாடுகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊட்டச்சத்துக் குறைபாடுகள்

ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

புரத-ஆற்றல் ஊட்டச்சத்தின்மை

6 மாதத்தில் இருந்து 5 வயது வரையுள்ள குழந்தைகளைப் புரத-ஆற்றல் ஊட்டச்சத்தின்மை பொதுவாகப் பாதிக்கிறது. இக் கோளாறுக்கு, வளர்ச்சி குன்றுதல், தொற்று நோய்த்தடுப்பாற்றல் குறைவு, இளங்குழந்தைகளில் அதிக இறப்புவிகிதம் போன்ற  பல குறைந்தகால மற்றும் நீண்ட கால விளைவுகள் உண்டு. இதன் இருபெரும் வகைகள் மராஸ்மசும் குவாஷியோர்கரும் (marasmus and kwashiorkor) ஆகும். உடல் இளைப்பு (மராஸ்மஸ்) நீண்டகாலப் பட்டினியின் விளைவு. பாதிக்கப்பட்ட குழந்தை (அல்லது பெரியவர்) மிக ஒல்லியாக இருக்கும் (தோலும் எலும்பும்). பெரும்பாலான கொழுப்பும் சதையும் ஆற்றல் அளிப்பதற்காகக் கரைந்துவிட்டன.  உணவுப் பற்றாக்குறை காலத்தில் புரத-ஆற்றல் ஊட்டச்சத்தின்மையின் பொதுவான வடிவம் உடல் இளைப்பே. இதனோடு இணைந்த அறிகுறிகள் வருமாறு:

அ) மெலிந்த “வயதான முகம்”

ஆ) தோல் தொங்குதல் (புட்டத்தில் தளர்ந்த தோல் தொங்குதல்)

இ) பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாதிப்பையும் தாண்டி சுறுசுறுப்பாக இருப்பதாகத் தோன்றுதல்

ஈ) கீழ் உடல் உறுப்புகளில் நீர் வீக்கம்

உ) விலா எலும்புகள் வெளித்தெரிதல்

கவாஷியோர்கர் பொதுவாக 1-4 வயது குழந்தைகளையே பாதிக்கிறது. பொதுவாக, கால், பாதங்களில் ஏற்படும் நீர் வீக்கமே இதன் முக்கிய அறிகுறி. நாட்பட, கையிலும் முகத்திலும் நீர் வீக்கம் உண்டாகும். நீர் வீக்கத்தால் குழந்தைகள் குண்டாக இருப்பது போல் தோன்றும். பிற அறிகுறிகளாவன:

அ) முடியில் மாற்றங்கள்: நிறமிழப்பு, சுருள்முடி நேராகுதல், எளிதில் பிடுங்கி எடுக்கத்தக்கதாகுதல்.

ஆ) தோல் வெடிப்பும் நிறமிழப்பும்: சில இடங்களில் அடர் நிறம் வெளிர் நிறமாகலாம் குறிப்பாக தோல் மடிப்புகளில்; தோலில் மேற்புறம் உரியலாம் (குறிப்பாகக் கால்களில்); புண்கள் ஏற்படலாம்; வெடிப்புகள் தீப்புண்போல காணப்படும்.

இ) கவாஷியோர்கரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பொதுவாக உணர்வு குறைந்தும், சோகமாகவும், எரிச்சல் உடையவர்களாகவும் இருப்பார்கள். பசி இருக்காது; அவர்களை உண்ண வைப்பது கடினம்.

இரும்புச்சத்துக் குறைவு இரத்தச்சோகை

இரும்புச்சத்து விலங்கு மற்றும் தாவாரப் பொருட்கள் இரண்டிலுமே இருந்தாலும் விலங்குப் பொருட்களில் இருந்தே அது எளிதாக உடலால் உறிஞ்சப்படுகிறது. சிவப்பிறைச்சி (குறிப்பாக ஈரல்), கரும்பச்சைக் கீரைகள், பருப்புவகைகள், கிழங்குகள் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம். விலங்குணவின் மூலமும், உயிர்ச்சத்து சி கொண்ட உணவின் மூலமும் இரும்புச்சத்து அதிகமாக உறிஞ்சப்படுகிறது. தானியங்களிலும், தேனீர், காப்பியிலும் உள்ள சில பொருட்கள் இரும்புச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. தேனீரிலும் காப்பியிலும் உறிஞ்சலைத் தடுக்கும் பொருட்கள் அதிகமாக இருப்பதால் உணவோடு சேர்த்து அவற்றை அருந்தாமல் உணவுக்கு முன்னும் பின்னும் 2 மணி நேரம் இடைவெளி கொடுப்பது அவசியம். பெருகி வரும் இரும்புச்சத்துக் குறைவு இரத்தச் சோகையைக் குறைக்க இரும்புச்சத்தைக் கொடுப்பது தேவைப்படுகிறது.

ஐயோடின் குறைபாடு

ஐயோடின் சிறந்த ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். உணவில் ஐயோடின் குறைவாக இருந்தால் ஐயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் ஏற்படும் (IDD). இதனால் கர்ப்பம் கலைதல், குழந்தை இறந்து பிறத்தல், மூளைக்கோளாறுகள், உளவாற்றல் வளர்ச்சி குறைதல், பேச்சு, காது கோளாறுகள், குழந்தைகளுக்கு ஆற்றல் குறைவு ஆகியவை உண்டாகும். உலக அளவில் மனநிலை பாதிப்புக்கு ஐயோடின் குறைபாடே முழுமுதற் காரணமாகும். இது தடுக்கக் கூடியது. மண்ணில் ஐயோடின் சத்து குறைவாக இருக்கும் மலைப்பகுதி போன்ற இடங்களில் உணவிலும் ஐயோடின் சத்து குறைவாக இருக்கும். மேலும், சில உணவுகளில் தைராயிடு நோயூக்கிகள் (goitrogens) –– ஐயோடின் உறிஞ்சலையும் பயன்பாட்டையும் தடுக்கும் பொருட்கள் –– இருக்கும். அவற்றை உண்ணுமுன் நச்சுநீக்கம் செய்யவேண்டும். ஐயோடின் குறைபாட்டுக் கோளாறுகளைத் தடுக்க ஐயோடின் சேர்த்த உப்பைப் பயன்படுத்துவதே எளிய வழி.

உயிர்ச்சத்து ஏ குறைபாடு (Vitamin A Deficiency)

உலக அளவில் இளங்குழந்தைகளுக்கு ஏற்படும் தடுத்திருக்கக் கூடிய பார்வையிழப்புக்கு முதன்மைக் காரணமாகவும், சத்துணவு இன்மையால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் பிறந்த குழந்தைகள் மற்றும் இளங்குழந்தைகளின் இறப்புக்கு முக்கிய காரணமாகவும் உயிர்ச்சத்து ஏ குறைபாடு விளங்குகிறது. ஏழை சமூகங்களில் உணவின் மூலம் கிடைக்கும் ஏ உயிர்ச்சத்து பச்சைக் கீரைகள் (உ-ம். சிறுகீரை), காரட், பூசணி, மாங்காய், பப்பாளி போன்ற பச்சை-மஞ்சள் காய்கறிகளிலும் பழங்களிலும் இருந்து கிடைக்கிறது. குறிப்பாக சிவப்பு பாமாயிலில் அதிகம் உள்ளது. உயிர்ச்சத்து ஏ ஈரலில் சேமிக்கப்படுகிறது.

தடுப்பு முறைகள்

அதிக அளவு உயிர்ச்சத்து கூடுதலாக அளித்தல்

தட்டமமைத் தடுப்பூசி

  • தாய்ப்பாலூட்டலை ஊக்குவித்தல். வயிற்றுப்போக்கை உள்ளடக்கிய நோய்களின் போதும் தொடர்ந்து அளிக்க வேண்டும்
  • பச்சைக் கீரைகள் மஞ்சள் காய்கறி பழங்களை அந்தந்தப் பகுதிகளில் விளைவித்து, விற்பனைசெய்து உண்ண ஊக்குவித்தல். விலங்குணவுகள் உயிர்ச்சத்து ஏ நிறைந்தவை
  • உயிர்ச்சத்து நிறைந்த உணவு, குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு
  • சுற்றுப்புறச் சூழல் சுத்தம் மற்றும் தனிநபர் சுகாதார நடவடிக்கைகள் குறிப்பாக வயிற்றுப்போக்கைத் தடுக்கும் விதமானவை.

உடல்பருமன்

உடலுக்குத் தேவையான அளவுக்கு மேல் எரிசக்தியை உள்ளெடுப்பதே அதிக எடைக்கும் உடல் பருமனுக்கும் காரணம். வாழ்க்கைமுறை தேர்வு, மரபுவழிக் காரணங்கள் ஆகியவற்றுடன் இவையும் பரவா நோய்களுக்கு பொதுவான ஆபத்துக் காரணிகளாகும்.

உடல் பருமன் பொது சுகாதாரத்துக்கு மிகவும் கவலையளிக்கும் வண்ணம் பரவலாகப் பலரையும் பாதிக்கும் மாபெரும் நோயாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 26 லட்சம் மக்கள் இதன் காரணமாக மரணம் அடைகின்றனர். 5 உலக முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 2.2 கோடி பேர் உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் 10-ல் ஒரு குழந்தை அதிக எடையோடு இருக்கிறது என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குழந்தைப் பருவ உடல் பருமனுக்கு பல காரணங்கள் உண்டு. மரபியல், நரம்பு உட்சுரப்பியல், வளர்சிதைமாற்றம், உளவியல், சூழலியல், சமூகப்பண்பாட்டியல் காரணிகளின் இடைவினைகளே குழந்தைப் பருவ உடல்பருமனுக்குக் காரணம். வளர்ந்த பின் ஏற்படும் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாதவிடாய்க் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், எலும்புக்கீல்வாதம், மனவழுத்தம் ஆகியவை குழந்தைப்பருவ உடல்பருமனோடு தொடர்புடையவை. வெளியுணவைக் குறைத்தல், ஆரோக்கிய உணவைத் திட்டமிடல், சமநிலை உணவு, பழங்களையும் காய்கறிகளையும் போதுமான அளவு உண்ணுதல், நார்ச்சத்துள்ள உணவு, மிகை எரிசக்தி மிகைக் கொழுப்பு உணவைத் தவிர்த்தல், உடல் செயல்பாடுகளை அதிகரித்தல், உடலுழைப்பற்ற நடத்தைகளைக் குறைத்தல் ஆகிய உணவு கட்டுப்பாடுகளோடு கூடிய நடவடிக்கைகளே உடல் எடை மற்றும் பருமனுக்கான சிகிச்சை முறைகளாகும்.

இன்றைய சூழ்நிலை

உணவுப் பழக்கத்தில் மாறுதலும் குறைந்த உடல் செயல்பாடும் உலகெங்கும் வளர்ந்துவரும் ஒரு போக்காகும். அளவுக்கு மீறிய உப்புச் சுவை சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெருகிவருகின்றன. அதிக எரிசக்தி, நிறைவுற்ற கொழுப்பு, கட்டற்ற சர்க்கரை அல்லது உப்பு/சோடியம் நிறைந்த உணவுகளை மக்கள் உண்ணுகின்றனர். போதுமான அளவுக்கு பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள முழு தானியங்கள் ஆகியவற்றை உண்ணுவதில்லை.

முன்முயற்சிகள்

இந்தியாவில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபட்டை நீக்க இந்திய அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெற்ற பள்ளிகளில்   I-VIII ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் ஊட்டசத்தை மேம்படுத்த மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சமைத்த உணவு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 0-6 வயதுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டம் 1975 ஆண்டு தொடங்கப்பட்டது. கூடுதல் ஊட்டசத்து ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் பெண்களுக்கும் வழங்கப்படுகிறது. ராஜிவ்காந்தி பருவமடைந்த பெண்களுக்கான திட்டத்தின் கீழ் உணவுப்பொருள் வழங்கப்படுகிறது.

நுண்ணூட்டச் சத்துக்குறைவைத் தீர்க்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. உதாரணமாக, உயிர்ச்சத்து ஏ குறைவு நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு உயிர்ச்சத்து ஏ யும்,  ஆரம்ப நோய்கண்டறிதலும் இருந்தால் அதற்கு மருத்துவமும் அளிக்கப்பட்டன. இந்தியாவில் ஐயோடின் குறைவால் ஏற்படும் கோளாறுகளுக்குத் தேசிய ஐயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. சாதாரண உப்புக்குப் பதில் ஐயோடின் கலந்த உப்பு விநியோகிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. அண்மையில் தேசிய இரும்பு கூடுதல்சத்து அளிக்கும் முன்முயற்சி தொடங்கப்பட்டது. கூடுதல் சத்தாக இரும்பும் ஃபோலிக் அமிலமும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், 6-60 மாதக் குழந்தைகள், பள்ளியில் படிக்கும் அல்லது பயிலாத இளைஞர்கள் (10-19 வயது), பருவ வயது பெண்கள் ஆகியோருக்கு அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. வாரந்தோறும் இரும்பு மற்றும் போலிக் அமிலம் கூடுதலாக வழங்கும் திட்டம் ஒரு சமூக வாரியான முன்முயற்சி ஆகும். இது இளம் பிள்ளைகளுக்கு இருக்கும் இரும்புச் சத்து இரத்தச் சோகை நோயைத் தீர்க்கும் முயற்சி. அரசு, அரசுதவி, மற்றும் நகராட்சி பள்ளிகளில் VI-XII வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், அங்கன்வாடி மூலமாக பள்ளியில் படிக்காத பெண்பிள்ளைகளுக்கும் கொடுக்கப்படுகிறது.

எதிர்கால அணுகுமுறை

நாடு முழுவதும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து என்ற கருத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. ஆரோக்கியமான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் பெற, உணவு முறையில் இருக்கும் கலாச்சார வேறுபாடுகள், சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எல்லா வயதுடையோரையும் ஒன்றிணைக்கும் ஒரு பல்பிரிவு சார்ந்த ஆக்கபூர்வமான அணுகுமுறை தேவைப்படுகிறது. இம்முன் முயற்சி குடும்பத்திலும், குழந்தைக் காப்பகத்திலும், பள்ளியிலும் இருக்கும் இளம்பருவத்தில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். இதனால் ஆரோக்கியமாக உண்ணும் பழக்க வழக்கத்தின் அடிப்படையை சரியான வயதில் இட முடியும்.  எதிர்கால சந்ததிக்கும் கொண்டு செல்ல முடியும். கொள்கைகளை வகுப்பதின் மூலமும், சமூக மற்றும் ஆரோக்கியக் கல்வியை வளர்ப்பதின் மூலமும் உட்டச்சத்துள்ள உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Video Image3


உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடுகள்

ஆதாரம் : தேசிய சுகாதார இணையம்

3.06944444444
Latha Sep 09, 2019 09:57 PM

Supar very கருத்து

ஜோஜி A O ajojio@gmail.com Aug 30, 2019 08:12 PM

இந்தியாவின் ஒவ்வொரு மொட்டுக்களும் திடகாத்திரராக வளர அரசு முழுவீச்சில் ஊட்டச்சத்து இலவசமாக அளிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்!

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top