பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவூட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவூட்டம்

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவூட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும், உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதால் உணவூட்டத் தேவைகள் மிக பெருமளவில் அதிகரிக்கின்றன. மற்ற எந்த காலத்தையும் விட கர்ப்பக் காலத்திற்கு முன் கொடுக்கப்படும் முழுமையான உணவூட்டம், மிக நல்லதொரு நீண்டக்கால விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. கர்ப்ப காலத்திற்கு முன், நல்ல உணவூட்டத்துடன் இருக்கும் பெண்மணிக்கு, கர்ப்பமடையும் போது அனைத்து சத்துக்களின் சேமிப்பு சிறப்பாக இருக்கும். எனவே வளரும் குழவியின் தேவைகள், கர்ப்பிணியின் உடல்நலத்தைப் பாதிக்காமல் பூர்த்தி செய்யப்படும். நல்ல உணவூட்டம் பெறும் குழவியே உடல்நலத்திலும், மூளை வளர்ச்சியிலும் சிறந்து விளங்கும். அது மட்டுமல்லாது கர்ப்பகாலத்திற்கு முன்னும், கர்ப்ப காலத்திலும் கொடுக்கப்படும் உணவூட்டம் பிரசவத்திற்குப் பிறகு சிறப்பான பாலூட்டுதலுக்கு உதவும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்

குழவி வளர்ச்சியடையும் போது ஒரு பெண்ணின் உடலில் நிறைய உடலியல் மாற்றங்கள், உயிரியல் வேதி மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் (hormone) மாற்றங்கள் ஏற்படும். இதனால் உணவூட்டத்தின் தேவைகளும், அவற்றை உடல் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் மாற்றங்கள் ஏற்படும். பல்வேறு வகையான மாற்றங்கள் பின்வருமாறு:

அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரித்தல் (Basal Metabolic Rate - BMR)

குழவியின் வளர்ச்சியின் காரணமாக முதல் மூன்று மாதங்களில் BMR 5 சதவீதம் அதிகரிக்கும், கர்ப்ப காலத்தின் கடைசிப் பகுதியில் மிக அதிகபட்சமாக 12 சதவீதம் அதிகரிக்கும்.

உணவு குழாய் மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

உணவுக் குழாய்களின் அசைவுகள் குறைவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இரைப்பையில் ஹைடிரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் சுரக்கும் அளவு குறைகிறது. கூடவே உணவுகுழலின் கீழ்பகுதியில் காணப்படும் குடல்வாய் சுருக்கி (0esophagal Sphincter) நெகிழ்ச்சியுற்றுக் காணப்படும். இதனால் இரைப்பையில் உள்ள உணவு மீண்டும் உணவுக் குழலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் நெஞ்சு எரிச்சலும், வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வும் ஏற்படும். இது குழவி வளர்ச்சியினால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக, அதிகமாக காணப்படும். பிற்பாதி கர்ப்பக் காலத்தில் இரும்பு, கால்சியம், B தொகுப்பு வைட்டமின்களின் தேவை அதிகரிப்பதற்கு ஏற்ப, அவற்றை முழுமையாக உறிஞ்சப்பட இயற்கையிலேயே உடலில் போதுமான மாற்றங்கள் ஏற்படும்.

ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள்

கர்ப்பகாலத்தில் கீழ்கண்டவாறு ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறது.

 • அட்ரீனல் சுரப்பி சுரக்கும் ஆல்டோஸ்டீரோன்.
 • புரோஜெஸ்டிரோன் அதிகமாக சுரந்து, வளரும் குழவிக்கு இடமளிக்க கர்ப்பப்பை தசைகளை விரிவடையச் செய்கிறது.
 • தைரோசின்.
 • பாராதைராய்டு ஹார்மோன்.

உடலில் காணப்படும் திரவங்களில் ஏற்படும் மாற்றங்கள்

 • இரத்தத்தின் கன அளவு 51% அதிகரிக்கிறது. வளரும் குழவிக்கு உணவுச் சத்துக்களை எடுத்து செல்லவும். குழவியின் கழிவுகளை வெளியேற்றவும் இந்த அதிகரிப்பு அவசியமாகிறது.
 • இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் போது, அதில் காணப்படும் பிளாஸ்மா புரதங்கள், ஹ9மோகுளோபின், இரத்த குளுக்கோஸ் மற்றும் நீரில் கரையும் வைட்டமின்களின் அடர்த்தி குறைகிறது.
 • சீரம் ஆல்புமினின் அளவுக் குறையும் போது, அது செல்களிடையே நீரைத் தேங்கச் செய்கிறது.
 • ஹ9மோகுளோபினின் அளவு அதிகரித்தப் போதும், அதன் அடர்த்தி இரத்தத்தில் 12-13கி/100மி.லி லிருந்து 11 கி / 100 மி.லி. ஆக குறைகிறது. இதற்கு ஹ9மோடைல்யூஷன் (haemodilution) என்று பெயர். (ஹீமோகுளோபின் நீர்த்துப் போதல்
 • எனவே கர்ப்பகாலத்தில் ஹ9மோகுளோபின் 10 கி/100 மி.லி. க்கு குறைவாகக் காணப்பட்டால் அது இரத்த சோகையாக கருதப்படுகிறது.

சிறுநீரகச் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள்

இரத்தத்தின் கன அளவு அதிகரிப்பதாலும், கிரியாட்டினின், யூரியா, குழவி மற்றும் தாயின் வளர்சிதை மாற்றத்தினால் உண்டாகும் கழிவுப் பொருட்கள் அதிகரிப்பதாலும், Glomerular filteration Rate GFR அதிகரிக்கிறது. இந்த வேலைப் பளுவைச் சிறுநீரக நெளிக் குழல்களால் தாங்க முடிவதில்லை. எனவே சாதாரணமாக மீண்டும் முழுவதுமாக உறிஞ்சப்படும் உணவு சத்துக்களின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வெளியேற்றப்படுகிறது. இதனால் சிறுநீரில் குளுகோஸ், அமினோ அமிலங்கள் மற்றும் நீரில் கரையும் வைட்டமின்கள் மிகச்சிறிய அளவில் காணப்படும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் எடை ஏற்றம்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் எடை ஏற்றத்தில் பாதிபகுதி குழவி, நச்சுக் கொடி மற்றும் ஆம்னியாடிக் திரவத்தால் ஏற்படுகிறது. மீதிப்பாதி, தாயின் இனப்பெருக்கத் திசுக்கள். திரவங்கள், இரத்தம், சேமித்து வைக்கப்படும் கொழுப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது. வயிற்று பகுதியிலும், தொடைப் பகுதியிலும் தோலுக்கடியில் சேமித்து வைக்கப்படும் கொழுப்பு, கர்ப்ப காலத்திற்கும் பாலூட்டும் காலத்திற்கும் தேவைப்படும் சக்தி சேமிப்பாக விளங்குகிறது.

முழுமையான கர்ப்ப காலத்திற்கு, ஒரு இயல்பான, ஆரோக்கியமான பெண்ணுக்கு சராசரியாக 125 கி.கி உடல் எடை கூடுதலாக இருக்க வேண்டும். அது 11 கிலோவிலிருந்து 13 கிலோ வரை இருக்கலாம். எடை கூடும் முறையும், மொத்த எடைக் கூடுதல் அளவுக்கு முக்கியமானது. முதல் மூன்று மாதங்களில் எடையானது சிறிதளவு கூடுகிறது (0.7 to 14கி.கி) அதற்கு பிறகு, சீராக 0.4 கி.கி/ வாரம் விரும்பத்தக்கது.

கர்ப்பப்பை மற்றும் மார்பகம்

கர்ப்ப காலத்தில் எடையைக் குறைக்க எப்போதும் முயற்சி செய்யக் கூடாது. அதே சமயம் அதிக எடையேற்றமும், உறுப்புகளுக்கு அதிக சிரமத்தைக் கொடுக்கிறது. இதனால் டாக்ஸிமியா ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

கூடுதல் உணவூட்டத்தின் அவசியம்

நல்ல உணவூட்டம் பெற்று, சத்துக்களின் சேமிப்பும் உடைய தாயால்தான், தன்னுடைய உடல் நலம் பாதிக்கப்படாமல் தன் குழவியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அப்படிப்பட்ட தாயால்தான் எந்தவித பிரசவச் சிக்கல்களும் இல்லாமல், ஒரு ஆரோக்கியமானக் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.

உணவூட்டக் குறைவால் குழவிக்கு ஏற்படும் பாதிப்புகள்

நீண்ட கால, மிதமான உணவூட்டக் குறைவு மற்றும் இரத்த சோகை ஏற்பட்டால் குழந்தை இறந்து பிறப்பதற்கும் 2500 கிராமுக்கும் குறைவாக உடல் எடைக் கொண்ட குறைந்த பிறப்பு (Low birth weight) (LBW) பெருவாரியாக இத்தகைய குழந்தைகளைக் குறைவளர்ச்சி (premature) குழந்தைகளாகவும் அதாவது 37 வாரங்களுக்கும் குறைவாக கர்ப்ப காலத்தில் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பப்பையில் (Intra uterine growth Retardation IUGR) உடையவர்களாகவும் இருப்பார்கள். கர்ப்பப் பையில் வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் பிறப்புத் தேதிக்குரிய வளர்ச்சி அளவில் (Small for Date) (SFD) 40 வார கர்ப்ப காலத்திற்கு பிறகு பிறந்தும் உணவூட்டக் குறைவால் வளர்ச்சி தடைப்பட்டு குறைந்த எடை உடையவர்களாக இருப்பார்கள்

குறைந்த பிறப்பு எடை மற்றும் அதைச் சார்ந்த இளங்குழவி (Neonatalmortality கீழ்கண்டக் காரணங்களுள் ஏதேனும் ஒன்றோ அதற்கும் மேற்பட்டதோ காரணமாக இருக்கலாம்.

 • குறைந்த சமூகப் பொருளாதார குடும்ப நிலை.
 • தாயின் மோசமான உணவூட்ட நிலை.
 • சிறிய உடலமைப்பு உடையத் தாய்.
 • உயரத்துக்கு ஏற்றாற் போல் இல்லாம குறைந்த கர்ப்பக்கால உடல் எடை
 • உயிரியல் செயல்பாடுகளுக்கான முதிர்ச்சியின்மை (Biological immaturity) உதாரணம் 17 வயதுக்கும் குறைவானவர்கள்.
 • கர்ப்ப காலத்தில் குறைந்த எடையேற்றம்.
 • புகை பிடித்தல், மதுபானங்கள் அருந்துதல், போதைப் பொருட்களை உபயோகித்தல்.
 • தொற்று நோய்கள்.
 • கல்வியறிவின்மை, சத்துணவுப் பற்றிய போதுமான அறிவின்மை.
 • கர்ப்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனரீதியான ஆயத்த மின்மை.

உணவூட்டக் குறைவால் நச்சுக் கொடிக்கு ஏற்படும் பாதிப்பு

உணவூட்டக் குறைவு காணப்படும் பெண்களின் நச்சுக் கொடியில் குறைவான செல்களே காணப்படும். செல்களின் எண்ணிக்கைக் குறையும். நச்சுக்கொடியின் செயல்திறமையில் கீழ்கண்டப் பாதிப்புகள் ஏற்படுகிறது.

 • குழவிக்குத் தேவையானப் பொருட்களைத் தயாரிக்க முடியாது.
 • உணவுச் சத்துக்களைக் குழவிக்கு எடுத்துச் செல்ல முடியாது.
 • வளரும் குழவிக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்கள் சென்றடைவதைத் தடுத்து நிறுத்த முடியாது.

உணவூட்டக் குறைவால் தாயின் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கள்

உணவூட்டக் குறைவினால் பாதிக்கப்பட்ட தாய், குழவிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தன் உடல் திசுக்களினின்று தருகிறாள். கர்ப்பக் காலத்தில் பல்வேறு சிறிய ஆதாரப் பொருட்களான வைட்டமின் A, துத்தநாகம், இரும்பு மற்றும் போலிக் அமிலம் இவற்றின் குறைபாடு சாதாரணமாகக் காணப்படும். இதனால் கர்ப்பத்தின் போதும், பிரசவத்தின் போதும் சிக்கல் ஏற்படும். இதனால் குறைப்பிரசவமும் மற்றும் தாய்க்கு மரணமும் ஏற்படலாம்.

உணவூட்டக் குறைவால் இளங்குழுவிகளுக்கு (Infants) ஏற்படும் பாதிப்புகள்

குழவிப் பருவத்தில் ஏற்படும் உணவூட்டக் குறைவு இளங்குழவியின் உடல்நலத்தைப் பாதிக்கிறது. இத்தகையக் குழந்தைகள் குறைசத்து (deficiency) நோய்களான ரிக்கெட்ஸ், இரத்த சோகை போன்றவற்றாலும், நோய் எதிர்ப்புக் குறைவதால் தொற்று நோய்களாலும் பாதிக்கப்படுவர். எனவே கர்ப்பிணிப் பெண்ணின் கூடுதல் சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகவும் அவசியம்.

சக்தி

கீழ்கண்ட காரணங்களுக்காக கூடுதலான சக்தி கர்ப்பக் காலத்தில் தேவைப்படுகிறது

 • குழவியின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும்,
 • நச்சுக்கொடி மற்றும் தாயின் உடலில் திசுக்கள் வளர்வதற்கும்,
 • தாயின் உடல் அளவு அதிகரிப்பதால்,

50 கி.கி எடையுள்ள மாதிரி இந்தியப் பெண்ணின், (ICMR 1990) கர்ப்பத்தை எதிர்கொள்ளத் தேவையான முழு சக்திக்கான செலவு 73000 கிகலோரியாகும். பாலூட்டுதலுக்காக 4 கி.கி கொழுப்பு சேமித்து வைக்க உபயோகப்படுத்தும் 36000 கி.கலோரியும் இதில் அடங்கும். எனவே பாலூட்டத் தேவையான கூடுதல் சக்தி தேவைகளை சமாளிக்கவும், குழவியின் பிறப்பு எடையை உயர்த்தவும், புரதத்தினைக் கலோரி உண்டாக்கும் வேலையினின்று பாதுகாக்கவும் ஒரு தினத்துக்கு 300 கி.கலோரி கூடுதலாக பரிந்துரைக்கப்படுகிறது.

புரதம்

ஒரு நாளுக்கு கூடுதலாக 15 கிராம் வீதம், அதாவது 65 கிராம் புரதம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கூடுதல் புரதம் கீழ்கண்ட காரணங்களுக்காகத் தேவைப்படுகிறது. குழவியின் வளர்ச்சி, நச்சுக் கொடி வளர்ச்சி, கர்ப்பப்பை மற்றும் மார்பக வளர்ச்சி, தாயின் இரத்தத்தின் கன அளவு அதிகரித்தல், ஆம்னியாடிக் திரவ உற்பத்தி, பிரசவ வலி, பிரசவம், பிரசவத்திற்கு பிறகு மற்றும் பாலூட்டுவதற்கும் தயார்படுத்துதல்

கொழுப்பு

ICMR வல்லுநர் குழு கர்ப்ப காலத்தில் ஒரு நாளுக்கு 30 கிராம் கண்களுக்கு புலப்படும் கொழுப்பு உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மொத்த கலோரியில் லினோலியிக் அமிலத்தின் தேவையான அளவு 45 சதவிகிதம் அமைய, இந்த அளவு கொழுப்பு இருக்க வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குத் புலப்படும் கொழுப்பினால், சில முக்கிய கொழுப்பு அமிலங்களின் தேவைகள் ஈடு செய்யப்படுகிறது. எனவே முக்கிய கொழுப்பு அமிலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 30 கிராம் கண்ணுக்கு புலப்படும் கொழுப்பு பரிந்துரைக்கப்படுகிறது.

கால்சியம்

வளர்ந்த பெண்மணிக்கு கால்சியம் 400 மி.கி/ தினம் தேவைப்படுகிறது. கர்ப்பக் காலத்தில் தேவை 1000 மி.கி/தினமாக அதிகரிக்கிறது. இவ்வளவு கூடுதல் கால்சியம், குழவியின் எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கும், பாலூட்டும் பருவத்தில் ஏற்படும் அதிக தேவையினால், தாயின் கால்சியம் வள ஆதாரங்களைப் பாதுகாக்கவும் தேவைப்படுகிறது. முழுமையாக வளர்ச்சியடைந்த குழவியின் உடலில் 30 கிராம் கால்சியம் படிகிறது. எனவே தாயின் தேவைகளையும் கர்ப்பத்தின் கூடுதல் தேவைகளையும் பூர்த்தி செய்ய ICMR, 1 கிராம் கால்சியம்/தினம் பரிந்துரைத்துள்ளது. போதுமான அளவு கால்சியம் உட்கொள்ளாவிடில் குழவியின் தேவைக்காக தாயின் எலும்புகளிலிருந்து கால்சியம் பிரித்தெடுக்கப்பட்டு, எலும்புகள் மிருதுவாகி தாய்க்கு ஆஸ்டியோபோரஸிஸ் எனப்படும் நோய் உண்டாகும்.

இரும்புச் சத்து

இரும்புச் சத்து தேவைகள் ஒரு நாளுக்கு 30 மி.கி-லிருந்து 38 மி.கி-யாக உயர்கிறது. இந்த கூடுதல் 8 மிகி கீழ்கண்ட காரணங்களால் தேவைப்படுகிறது.

அ. தாயின் உடல் திசுக்களின் பெருக்கம் சிவப்பணுக்களின் மொத்தப் பருமன் அதிகரித்தல், நச்சுக் கொடிக்குத் தேவைப்படும் இரும்புச்சத்தின் அளவு, பிரசவத்தின் போது ஏற்படும் இரத்த இழப்பு.

ஆ. குழந்தைப் பிறந்து 4-6 மாதங்களுக்கு நீடிப்பதற்குத் தேவையான இரும்புச்சத்தை குழவியின் கல்லீரலில் சேமிக்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தையின் முதல் உணவாகியப் பாலில் இரும்புச்சத்தின் அளவுக் குறைவாக காணப்படுகிறது. பொதுவாக குழவி பிறந்தவுடன், அவர்களின் இரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு 18-20 கிராம்/100 மி.லி.ஆகக் காணப்படும்.

அயோடின்

அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பதால் அயோடின் தேவைகளும் அதிகரிக்கிறது.

துத்தநாகம்

துத்தநாக குறைவு கர்ப்பத்தை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. இது இன்சுலினில் பகுதிப் பொருளாகக் காணப்படுகிறது. என்ஸைம்களிலும் காணப்படுகிறது. DNA மற்றும் RNA உருவாக்குதலில் பங்கெடுக்கிறது. இனப்பெருக்கத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே துத்தநாக குறைவு குழவி மரணத்தையும் குழவிக்கு குறை உருவாக்கத்தையும் (malformation) ஏற்படுத்தும். மேலும் கர்ப்பப் பையில் குழவியின் வளர்ச்சி விகிதமும் பாதிப்படைகிறது. கர்ப்ப காலத்தில் துத்தநாகத்தைக் குறைவாக உட்கொள்வதினால் குறைந்த எடைக் குழவிகள் உருவாதல் இரண்டு மடங்காகவும், பேறுக்காலத்திற்கு முன் பிரசவித்தல் மூன்று மடங்காகவும் உயருகிறது.

சோடியம்

திசுக்களிடையே திரவத்தின் அளவு அதிகரிக்கும் போது, சோடியத்தின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே சோடியம் கட்டுப்படுத்தப்பட்டால் உயிரியல் வேதிமாற்றங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படலாம். இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறையும் போது (ஹைப்போநேட்ரீமியா) (hyponatraemia) சிறுநீரகம் ரெனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து, சோடியத்தை வெளியேற்றாமல் தேக்கி வைத்து, உடலியக்கத்திற்கு கிடைக்காமல் செய்கிறது. உடலுக்கு சோடியம் கிடைக்காமல் அதிகம் களைப்புறும் போது, சோடியம் குறைவு ஏற்பட்டு உணர்ச்சியற்று மரத்துப்போதல் (edempsia), குறைவளர்ச்சி மற்றும் குறைந்த எடை குழவிகள் உருவாகும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே கட்டுப்பாடில்லாமல், எப்போதும் போல் சோடியம் உட்கொள்ள அறிவுரை வழங்கப்படுகிறது. நீர்த்தேக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் போது மட்டும் சோடியம் கட்டுப்படுத்தப்படுகிறது.

வைட்டமின்கள்

வைட்டமின்கள் A பிறந்த குழந்தையின் கல்லீரலில் சேமித்துவைக்க வேண்டிய அளவைப் பொருத்தே கர்ப்பக் காலத்தில் வைட்டமின் A தேவைகள் கணக்கிடப்படுகிறது. கர்ப்ப காலம் முழுவதும் 25 மை.கி/ தினம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. இது பரிந்துரைக்கப்பட்ட திட்ட உணவு அளவுகளை விட மிகச்சிறியனவாக இருப்பதால் கூடுதல் அளவுகள் பரிந்துரைக்கப்படவில்லை.

வைட்டமின் D

கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்துவதால் வைட்டமின் D அவசியமாகிறது. கால்சியத்தின் செயல் வடிவமாகிய கால்சிடியால் (Calcidiol) மற்றும் கால்சிடிரியால் (Calcitriol) சுலபமாக நச்சுக் கொடியை அடைந்து, குழவியின் கால்சியம் வளர்சிதை மாற்றத்திற்கு உதவி புரிகிறது. புற ஊதாக் கதிர்கள் (UV rays) நம் உடல் மீது படுவதாலேயே போதுமானளவு வைட்டமின் D தயாரிக்கப்பட்டுவிடுவதால், வைட்டமின் Dயின் தேவையான அளவு பரிந்துரைக்கப்படவில்லை.

கொழுப்பில் கரையும் பிற வைட்டமின்கள்

இரத்த உறைதலுக்குத் தேவையான புரோதிராம்பின் தயாரிக்க வைட்டமின் K மிகவும் அவசியம். இளங்குழவியின் இரத்தப் போக்கைத் (neonatalhaemorrhage) தடுப்பதில் மிகவும் உதவியாக இருப்பதால் தாயின் இரத்தத்தில் வைட்டமின் K அதிகமாக காணப்படுவது அவசியமாகிறது. இந்த வைட்டமினை அதன் இயற்கை அமைப்பில், ஊசி மூலமாக தாய்க்குப் பிரசவத்திற்கு முன்னதாகவோ அல்லது இளங்குழந்தைக்கு, பிறந்தவுடனோ கொடுப்பது நடைமுறையில் உள்ளது.

தையாமின், ரைபோபிளேவின் மற்றும் நயாசின்

ஒரு சாதாரணப் பெண்ணுக்கு எந்த அடிப்படையில் இவற்றின் தேவைகள் கணக்கிடப்படுகிறதோ அதே முறையில் தான் கர்ப்பிணிக்கும் கணக்கிடப்படுகிறது. அதாவது 0.5 மிகி/1000 கி.க. தையாமின் 0.6 மிகி/1000 கி.க. ரைபோபிளேவின் மற்றும் 6.6 மிகி/ 1000 கி.க. நயாசின் தேவைப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு கலோரித் தேவைகள் அதிகரிப்பதால் இந்த வைட்டமின்களின் தேவையும் அதிகரிக்கிறது.

பைரிடாக்ஸின்

பைரிடாக்ஸின் தேவைகள் கர்ப்பக் காலத்தில் அதிகரிக்கிறது. 0.5 மி.கி/தினம் கூடுதலாக சேர்த்து 25 மி.கி/தினம் உட்கொள்ள வேண்டுமென்று ICMR குழு பரிந்துரைத்துள்ளது.

வைட்டமின் B, குழவியின் உடலில் காணப்படும் B, அளவைப் பொறுத்து இதன் தேவைகள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 0.3 மை.கி/தினம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ICMR கூடுதலாக 0.5 மை.கி/தினம் சேர்த்து ஒரு நாளுக்கு 15 மை.கி. வைட்டமின் B, கர்ப்பணிப் பெண்களுக்குத் தேவையென வரையறுத்துள்ளது.

போலிக் அமிலம்

ஒரு சாதாரண பெண்மணிக்கு 100 மை.கி/ போலிக் அமிலம் தேவைப்படுகிறது. ICMR, கர்ப்ப காலத்திற்கு 400 மை.கி/தினம் தேவையென்று கூறியுள்ளது. போலிக் அமிலம் கீழ்கண்ட காரணங்களுக்காகத் தேவைப்படுகிறது.

 1. கூடுதலான இரத்த உற்பத்தி (ஹெமட்டோபாய்சிஸ்) (haematopoiesis)
 2. வளர்ச்சியின் அடிப்படை ஆக்கக் கூறுகளாகிய DNA மற்றும் RNA தயாரிப்பு அதிகரிப்பு. பிறந்த குழந்தைகளுக்கு முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை நரம்புக்குழாய் குறைபாடுகளைத் தவிர்க்க, கருத்தரிப்பதற்கு முன்னும் கருத்தரித்த முதல் 12 வாரங்களிலும் போலிக் அமிலம் கூடுதலாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

வைட்டமின் C

குழவியின் வைட்டமின் C தேவைகள் மிகவும் குறைவாக இருப்பதால், கர்ப்பகாலத்தில் இதற்கான கூடுதல் அளவு எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒரு சாதாரண பெண்ணுக்கு வரையறுக்கப்பட்ட 40 மி.கி/தினம் என்ற அளவே பாதுகாப்பான அளவாக இருப்பதால் ICMR கூடுதல் அளவுகளைப் பரிந்துரைக்கவில்லை.

கர்ப்பிணிப் பெண்ணுக்கான சீருணவு (இலகுவான வேலை)

வ.எண். உணவு வகை அளவு (கிராம்) 1. தானியங்கள் 300 2. பயறுகள் 60 3. பால் (மி.லி) 500 4. கிழங்குகளும் வேர்களும் 100 5. கீரைகள் 150 6. காய்கறிகள் 100 7. பழங்கள் 200 8. சர்க்கரை 20 9. கொழுப்பு மற்றும் எண்ணெய் 30 அசைவ உணவு உண்பவர்கள் 30 கிராம் பயறுகளுக்குப் பதிலாக 50 கிராம் மாமிசம்/கோழிக்கறி/மீன்/முட்டை சேர்த்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் உணவூட்டம் எப்போதும் போல அடிப்படைக் கொள்கைகளின்படி உணவூட்டம் அமைந்திட வேண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் சத்துக்களின் தேவைகள் அதிகரிப்பதால், ஊட்டச்சத்து அடர்ந்த உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு கலோரி உட்கொள்ளும்போது, அந்த உணவு கூடவே அதிக பட்ச உணவுச் சத்துக்களையும் தருவதாக அமைய வேண்டும்.

கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் உடலியல் மற்றும் ஊக்கு நீரியல் மாற்றங்கள் ஏற்படுவதால், இவர்கள் மசக்கை (Morning sickness) என்ற நிலையால் பாதிக்கப்படுவர். அந்தக் காலங்களில் சிறிய அளவுகளில் உணவு அடிக்கடி கொடுக்கப்பட வேண்டும். திட கார்போஹைரேட் நிறைந்த உணவுப் பொருட்களாகிய ரொட்டி, பிஸ்கட் மற்றும் பழங்கள் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களைக் குமட்டலிருந்து விடுபடச் செய்ய முடியும். அதே சமயம், பொரிக்கப்பட்ட வாசனையுள்ள, மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

அதிகரித்துள்ளத் தேவைகளைச் சமாளிக்க, அந்தத் தாய் கூடுதலாக உணவு உண்ண வேண்டும். மூன்று வேளை முழு உணவு சாப்பிடுவதை விட இடையிடையே சத்துள்ள சிற்றுண்டி களைச் சாப்பிடுவதன் மூலம் உணவு உண்ணும் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். ஒரு நாளுக்கு 5-6 முறை உண்ணுவதாக அவர்களது சாப்பிடும் முறை அமைய வேண்டும். சிறந்த புரதம் அடங்கிய உணவுகளாகிய மாமிசம், பால், முட்டை, மீன் ஆகியவற்றை உட்கொள்ளுவதன் மூலம் புரதத் தேவையை சமாளிக்கலாம். குறைந்த விலையில் அதிக புரதம் தேவையெனில் சோயாமொச்சை, நிலக்கடலை ஆகியவற்றை சாப்பிடலாம். புரதத்தின் தரத்தை அதிகரிக்க தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றில் உள்ள தாவர புரதங்களுடன், சிறிதளவு மாமிசப் புரதம் கலந்து உண்ணலாம்.

இரும்புச்சத்தின் கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்ய முழு தானியங்கள், அவல், பொரி, உலர்ந்த பழங்கள், கீரைகள், முட்டை சத்து அதிகரிக்கப்பட்ட தானியங்கள், விலங்குகளின் உறுப்புகள் ஆகியவற்றை கொடுக்கலாம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களாகிய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கூடவே அதிகமான திரவங்கள் அடங்கிய உணவுப் பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் சாதாரணமாக வரக்கூடிய மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக மேற்கூறிய உணவுப் பொருட்கள் உண்ண வேண்டும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள்

குமட்டலும், வாந்தியும்

கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில், காலை வேளைகளில் அதிகமாகவும், மற்ற நேரங்களிலும் ஏற்படும் குமட்டலுக்கும், வாந்திக்கும் “மசக்கை” என்று பெயர். சிறிய அளவுகளில் அடிக்கடி உணவு உண்ணுவதன் மூலம் இதிலிருந்து மீளலாம். ஆனால் சில சமயங்களில் மசக்கை அதிகமாகி ஹைபர்எமிசிஸ் கிராவிடேரம் (hyperemesis gravidarum) மிக அதிக அளவில் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பர். அப்போது கர்ப்பிணிகளுக்கு கவனமாக உணவு அளிக்க வேண்டும். சில சமயம் குழாய் வழியாக உணவு அளிக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.

மலச்சிக்கல்

கர்ப்பப்பை விரிவடைவதால், குடலின் கீழ்பகுதிகள் அழுத்தப்படுவதாலும், நச்சுக் கொடியில் சுரக்கும் ஹார்மோன்கள், உணவுகுழல் பாதையின் தசைகளை இளக வைப்பதாலும், உடலியல் செயல்பாடுகள் குறைவதாலும் மல வெளியேற்றம் கடினமாகிறது. குறைந்த உடற்பயிற்சி மற்றும் செயல்பாடுகள், குறைவாகத் திரவம் உட்கொள்ளுதல், உணவில் போதிய நார்ச்சத்து இன்மை ஆகியவற்றின் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

அதிக திரவம் உட்கொள்ளுதல், நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்ணுதல் மலச்சிக்கலிலிருந்து விடுபட வழிவகுக்கும். சில சமயங்களில் குழவியின் பளுவாலும், சிரைகளின் மீது ஏற்படும் கீழ்நோக்கு அழுத்தத்தாலும் இரத்தக் கட்டிகள் (மூலம்) (haemorrhoids) ஏற்படும்.

நெஞ்செரிச்சல்

சில கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பத்தின் கடைசி காலங்களில் வயிறு நிரம்பியிருப்பது போலவும், நெஞ்சு எரிவது போலவும் இருப்பதாக கூறுவர். கர்ப்பப்பை விரிவடைந்து வயிற்றுப் பகுதியை நிறைத்துக் கொள்வதாலும், உணவுக்குழல் குடல்வாய் சுருக்கி விரிவடைந்து இரைப்பையில் உள்ள பொருட்களை மீண்டும் உணவுக் குழலுக்குள் செலுத்துவதாலும் இவ்வுணர்ச்சிகள் ஏற்படுகிறது. இரைப்பையில் சுரக்கும் ஹைடிரோகுளோரிக் அமிலம் உணவுடன் கலந்து மேல் நோக்கி மீண்டும் வருவதால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்குகிறது.

இரைப்பையில் அழுத்தத்தாலும், வயிற்றுப் பகுதியில் இடமின்மையாலும், வாயு ஏற்படுவதாலும் வயிறு நிரம்பி இருப்பது போல் தோன்றும். சிறிய அளவு உணவுகள் அடிக்கடி உண்பதாலும் உணவு வேளைகளுக்கிடையில் நிறைய திரவம் அருந்துவதாலும் இதனைத் தவிர்க்கலாம்.

நீர்த்தேக்கம் மற்றும் கால்களில் தசை பிடிப்பு

உடலியல் மாறுபாடுகளினால் கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் சிறிதளவு நீர்த்தேக்கம் கால்களில் ஏற்படும். கால்களிலிருந்து திரவத்தை இருதயத்திற்கு எடுத்துச் செல்லும் சிரைகளை, விரிவடைந்த கர்ப்பப்பை அழுத்துவதால் இந்நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. இந்த நீர்தேக்கத்திற்காக சோடியத்தைக் கட்டுபடுத்தவோ, பிறவகைத் திட்ட உணவாக மாற்றியமைக்கவோ தேவையில்லை. அதே போல் இரவு நேரங்களில் திடீரென்று தசைகள் சுருங்கி, தசை பிடிப்பு ஏற்படுவதும் உண்டு. கால்சியம் சமநிலை குலைக்கப்பட்டு, சீரம் கால்சியம் அளவுகள் குறைவதாலேயே இந்நிலை ஏற்படுகிறது.

பிக்கா (Pica)

உணவு அல்லாத சில தேவையற்றப் பொருட்களான மண், சாக்கு கட்டி (Chalk) மாவுப் பொருள் (Starch) ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்ச்சியே பிக்கா எனப்படும்.

இரத்த சோகை

28 வாரங்களுக்குப் பிறகு ஹீமோகுளோபின் அளவு 10 கிராம்/ 100 மி.லி ஆக இருந்தால் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரத்த சோகை ஏற்பட்டுள்ளது என்று கருதப்படும். ஹ9மோகுளோபின் அளவு 8 கிராம்/100 மி.லி ஆக குறையும் போது குறை வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதால் குழந்தையின் பிறப்பு எடை மிக அதிக அளவு குறையும், கர்ப்பப்பை வளர்ச்சி குறையும். செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஃபோலேட் (folate) தேவையும் அதிகரிக்கிறது. குறைவாக உண்பதால் ஃபோலேட்டின் அளவும் குறைகிறது. ஃபோலேட்டின் குறைவால் ஏற்படும் மெகலோ பிளாஸ்டிக் (Megaloblastic) இரத்த சோகையினால் குமட்டல், வாந்தி, பசியின்மை அதிகரிக்கும்.

கர்ப்பத்தினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் Pregnany Induced Hypertension (PIH)

கர்ப்பத்தினால் வரும் உயர் இரத்த அழுத்தம், மட்டுமின்றி, புரோட்டீனூரியா (Proteinuria) (சிறுநீரில் புரதம் வெளியாதல்) நீர்த்தேக்கம், வலிப்பு அல்லது இயல்பு நிலைக் கடந்த ஆழ்ந்த உறக்க நிலை (coma) ஆகிய அனைத்து நோய்குறிகளின் தொகுப்பு (Syndrome) நிலை கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஏற்படுகிறது. இதனுடன் உணர்ச்சியற்று போகும் நிலை (Eclampsia) மற்றும் அதற்கு முற்பட்ட நிலையும் (pre-eclampsia) அறிகுறிகளைப் பொருத்து மாறுபடும். இதில் உணர்ச்சியற்று மரத்து போகும் நிலை மிக மோசமான உடல் நிலையைக் குறிக்கும். சிஸ்டோலிக் அழுத்தம் 140 மி.மீ. Hg அல்லது டயஸ்டோலிக் அழுத்தம் 90 மி.மீ. Hg அல்லது இரண்டும் சேர்த்துக் காணப்படுவது PH ஆகும். 20-30 மி.மீ. Hg சிஸ்டோலிக் அழுத்தம் அல்லது 10-15 மி.மீ. Hg டயஸ்டோலிக் அழுத்தம் அதிகரித்தாலும் அல்லது இரண்டும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் ஆறு மணிநேர இடைவெளியில் ஏற்பட்டால் அது PIH என்று கணிக்கலாம்.

PIHன் வீரியத்தைப் பொருத்து புரோட்டீனூரியா வேறு படுகிறது. உணர்ச்சியற்று மரத்துப் போதலின் முன்னிலையுடன் கூடிய நீர்த்தேக்கத்துடன் மயக்கம், தலைவலி, கண் பார்வையியில் தொந்தரவு, முகத்தில் நீர்த்தேக்கம், பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். உணர்ச்சியற்று மரத்துப்போகும் நிலை மோசமாகும் போது, பிரசவ நேரத்தில் வலிப்பு ஏற்படும். சரியான சத்துணவே இதற்கான சிகிச்சையின் அடிப்படையாகும்.

கர்ப்பகால நீரழிவு (Gestational diabetes mellitus)

இரத்தத்தின் கன அளவு அதிகரிப்பதாலும், வளர்சிதை மாற்றத்தின் அளவு அதிகரிப்பதாலும் சிறிதளவு குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேறும். பெரும்பாலும் நிறையப் பெண்கள், பிரசவத்திற்குப் பிறகு சரியான குளுகோஸ் ஏற்புத் தன்மைக்கு (Glucose tolerance) மாறிவிடுவார்கள். ஆனால் இவர்களுக்கு 40 வயதுக்குப் பிறகு NDDM இன்சுலின் சாரத நீரிழிவு வகை) நீரிழிவு வர வாய்ப்பு அதிகம். நீரிழிவுக் காணப்படும் பெண்களுக்கு உணர்ச்சியற்று மரத்துப் போகும் நிலையும் அதிகமாக காணப்படும்.

மதுபானங்கள், கஃபேன் (Caffiene) போதைப்பொருட்கள் மற்றும் புகையிலையினால் ஏற்படும் ஆபத்துக்கள்

கர்ப்பக் காலத்தில் ஆல்கஹால் பானங்கள் அருந்துவதால், குழவியின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி அசாதாரணமாக காணப்படும். இதனால் குழவிக்கு, ஆல்கஹாலினால் ஏற்படும் Foetal Alcoholic Syndrome (FAS) ஏற்படும். FAS உடைய இளங்குழவிகள், குறைவளர்ச்சி மற்றும் குறைந்த பிறப்பு எடையுடன் காணப்படுவர். இவர்கள் சிறியத் தலை, தட்டையான நடுமுகம், மெல்லிய மேலுதடு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல் பாதிப்பு ஆகிய குறிப்பிட்ட உடலியல் குணாதிசயங்களுடன் காணப்படுவர்.

கஃபேன் (Caffiene) நச்சுக்கொடியைக் கடந்து, குழவியின் இரத்த சுற்றோட்டத்துடன் கலக்கக் கூடியது. அதிகமாக காபி குடிக்கும் கர்ப்பிணி பெண்களுக்குக் குறைப்பிரசவம், குறை வளர்ச்சிக் குழந்தைகள் அல்லது பேறு காலத்திற்கு முன் பிறக்கும் சிறிய அளவு குழந்தைகள் போன்ற ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

கர்ப்பக்காலத்தில் மருத்துவத்திற்காகவும் அல்லது பொழுது போக்கிற்காகவும் போதைப் பொருட்கள் உபயோகப் படுத்துவது நிறையப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஹெராயின், LSD, மரிஜூவானா போன்ற பொழுதுபோக்கு போதைப் பொருட்களின் உபயோகத்தால், கர்ப்பத்தில் குறைந்த எடை குழவி உண்டாதல், குறுகிய அல்லது மிகவும் நீண்ட பிரசவ வேதனை, மற்றும் கர்ப்பத்தில் குழவிக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் மருத்துவர் ஆலோசனையின்றி உட்கொள்ளப்படும் மருந்துகள் குழவிகள் சரியாக உருவாகாமல் போகும் தன்மையை ஏற்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் புகைப்பிடிப்பதால் நச்சுக் கொடியில் அசாதாரண மாற்றங்கள், குழவி வளர்ச்சிப் பாதிக்கப்பட்டு குறைவளர்ச்சி, குறைந்த பிறப்பு எடை குழந்தை ஏற்படுதல் போன்ற ஆபத்துக்கள் உள்ளது. நச்சுக்கொடிக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, அதனால் அதனுள் செல்லும் ஆக்ஸிஜன் மற்றும் உணவுச்சத்துக்களின் அளவும் பாதிக்கப்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது.

மிகவும் சீக்கிரமாக இளம் வாலிப வயது, teen age) அல்லது மிகவும் தாமதமாக (35 வயதுக்கு மேல் அல்லது இரண்டு வருட இடைவெளிக்கும் குறைவாக கர்ப்பம் தரிப்பது தாய், சேய் இருவரின் நலத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏற்றதும் அல்ல.

பாலூட்டும் காலம்

போதுமான ஊட்டச்சத்துக்கள் பாலூட்டும் காலத்தில் தாய்க்கு கொடுக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் குழந்தை பிறந்தது முதல் சில மாதங்களில் தன்னுடைய ஊட்டச்சத்து தேவைகளுக்காகத் தாயின் பாலையே சார்ந்துள்ளது. முழு வளர்ச்சியடைந்த, வேகமாக வளரும் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளைத் தாய்தான் பூர்த்தி செய்ய வேண்டும். தன்னுடைய தேவைகளையும், குழந்தையின் கூடுதலான தேவைகளையும் பூர்த்தி செய்ய, அவளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. கர்ப்பகாலத்தில் கொடுக்கப்படும் திருப்திகரமான திட்ட உணவு, ஊட்டச்சத்துக்களின் சிறப்பான சேமிப்பிற்கும், திருப்திகரமான பாலூட்டத்திற்கும் வழிவகுக்கும். பாலூட்டும் காலத்தில் ஊட்டச் சத்துக்கள் குறைவு ஏற்பட்டால், அது சுரக்கும் பாலின் அளவையும், தரத்தையும் பாதிக்கும்.

தாய்ப்பால் சுரக்கும் விதம்

ஹார்மோன் மாற்றங்களால் மார்பகத்தின் அளவும், முலைக்காம்பின் அளவும் பெரிதாகும். கர்ப்ப காலத்தில் நச்சுக்கொடியில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், மார்பக சுரப்பிகளை வேகமாக வளர்ச்சியடையச் செய்யும். அதிகளவில் சுரக்கும் புரோஜஸ்டீரோன் சுரப்பி செல்களை, பால் சுரக்கும் செல்களாக மாற்றுகிறது. குழந்தை பிறந்த தருணத்தில் மார்பக வளர்ச்சி முழுமையுற்று, பால் உற்பத்திக்கு தயாராகிவிடுகிறது. ஈஸ்ட்ரோஜனும், புரோஜஸ்ட்ரோனும் மார்பக வளர்ச்சியை முழுமையடையச் செய்தாலும், மார்பகம், பால் உற்பத்தியை குழந்தை பிறக்கும் வரை தடை செய்கிறது. கர்ப்ப காலத்தில் நச்சுக் கொடியில் சுரக்கும் ஹார்மோன்கள், பிட்யூட்டரியில் சுரக்கும் பால் சுரப்பிற்கு காரணமான ஹார்மோன்களில் செயலாற்றலைக் குறைக்கின்றன. இதனால் பால் சுரப்பதில்லை. பிரசவத்தின் போது நச்சுக்கொடி, திடீரென்று வெளியேற்றப்படுவதால், நச்சுக்கொடி சுரக்கும் ஹார்மோன்களும் அதனுடன் வெளியேறுகின்றன. இதனால் லாக்டோஜெனிக் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, பால் உற்பத்தியையும், சுரப்பையும் உண்டு பண்ணுகிறது. பால் உற்பத்தி மற்றும் சுரப்பு குறிப்பிட்ட இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது.

அ. புரோலாக்டின் ரிப்ளெக்ஸ் (புரோலாக்டின் இயல் (Prolaction reflex)

குழந்தை மார்பு காம்பை உறிஞ்ச ஆரம்பித்தவுடன், நரம்பு தூண்டுதல் தண்டு வடம் வழியாக ஹைப்போதலாமஸை அடைகிறது. ஹைப்போதலாமஸ் முன் பிட்யூட்டரியைத் தூண்டுவதால் புரோலாக்டின் சுரக்கிறது. புரோலாக்டின் இரத்த ஓட்டத்தின் மூலம் மார்பகத்திலுள்ள சுரப்பிகளின் சிற்றறைகளுக்கு சென்று பால் உற்பத்தியை தூண்டுகிறது.

ஆ. லெட் டவுன் ரிப்ளெக்ஸ் (பால் வெளியேற்றும் இயல் (Let down reflex)

குழந்தை உறிஞ்ச ஆரம்பித்தவுடன், நரம்பு தூண்டுதல் பின் பிட்யூட்டரியை அடைகிறது. இங்கு தான் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. ஆக்ஸிடோசின் மார்பகத்திலுள்ள சுரப்பிகளின் சிற்றறை தசை செல்களை சுருங்கச் செய்கிறது. இதனால் அவை கசக்சி பிழியப்பட்டு, தாய்பால் முலைக்காம்பு வழியாக பீச்சப்படுகிறது. உணர்ச்சிப்பூர்வமான மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புக்கள் மற்றும் தொடு உணர்ச்சிக்கு, லெட்டவுன் ரிப்ளெக்ஸ் மிகவும் நுட்பமாகச் செயல்படக்கூடியது. தாயின் உணர்ச்சிகள், குழந்தையின் அழுகுரல், குழந்தைப் பற்றிய நினைவுக் கூட இந்த நரம்பியக்கத்தைத் தூண்டக் கூடியது. அதே போல படபடப்பு, பயம் மற்றும் பதட்டம் இந்த நரம்பியக்கத்தைத் தடைசெய்யக் கூடியது. எனவே பால் கொடுக்கும்போது தாய் இயல்பாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டு இயல் நரம்பியக் கங்களும் அடுத்தடுத்து நடைபெற்று பாலை வெளிப் படுத்துகின்றன. பிட்யூட்டரியிலிருந்து லாக்டோஜெனிக் ஹார்மோன்கள் சுரக்கும்வரை, கருவணு வெளியிடலுக்கு காரணமான பாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன் ஆகியவை போதுமான அளவு சுரக்காது. இதனால் பாலூட்டுதல் ஒரு இயற்கையான கருத்தடையாக அமைகிறது.

பால் உற்பத்திக்கான தூண்டுதல் நிகழ்ச்சி

குழந்தை பாலை உறிஞ்சுதல்

 • ஹைப்போதலாமஸ்
 • பிட்யூட்டரி M
 • பின்பிட்யூட்டரி
 • முன்பிட்யூட்டரி
 • புரோலாக்டினைச் ஆக்ஸிடோசினைச் சுரத்தல்
 • கர்ப்பபை அதனுடைய இயல்பான சுரப்பி சிற்றறைகளில் பால் உற்பத்தியை அளவுக்கு திரும்ப உதவுகிறது
 • தூண்டுதல் சுரப்பி சிற்றறைகளில் தசை செல்களை சுருங்கச் செய்து பாலை வெளியேற்றுகிறது

தாய்பாலில் அடங்கியுள்ள சத்துக்கள்

பிரசவம் ஆனவுடன் மிகக்குறைந்த அளவில் கெட்டியான, மஞ்சள் நிறமான, பிசுபிசுப்பான திரவம் சுரக்கும். இதற்கு கொலஸ்டிரம் என்று பெயர். இதில் எதிர் உயிரி அணுக்களும் வைட்டமின் A யும் அதிகம் உள்ளது. எனவே இதை வீணாக்காமல் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். பால் கொடுக்க ஆரம்பித்த சில நாட்களில் தாய்க்கு பிசுபிசுப்புத் தன்மை குறைந்த, வெள்ளை நிறமான முழுமையான பால் சுரக்கிறது. இது ஊட்டச்சத்துக்களைப் பொருத்தளவில் ஒரு முழுமையான உணவு. ஆரோக்கியமான தாய்க்கு ஒரு நாளைக்கு 850 மி.லி பால் சுரக்கிறது. இதை உற்பத்தி செய்ய அவருடைய ஊட்டச்சத்து தேவைகள் ஏராளமாக அதிகரிக்கிறது.

பாலூட்டும் காலத்தில் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்

ஒரு பெண்ணுக்கு ஒரு நாளுக்கு 850 மி.லி. பால் சுரக்கும் என்ற கணக்கின்படியும், அதிலுள்ள சத்துக்களின் அளவைப் பொருத்தும் ICMR பாலூட்டும் தாய்க்கு ஊட்டச்சத்துக் களைப் பரிந்துரை செய்துள்ளது. பால் சுரக்கும் அளவு ஆரம்பத்தில் அதிகரித்து ஆறு மாதம் வரை அந்த அளவு நீடிக்கும் பிறகு படிப்படியாக குறைந்துவிடும். எனவே ஊட்டச்சத்து தேவைகள், பாலூட்டும் காலத்திற்கு இரண்டு பிரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 0 - 6 மாதங்கள் ஒரு பிரிவு எனவும் 6 - 12 மாதங்கள் மற்றொரு பிரிவு எனவும் பாலூட்டும் தாய்க்கான பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

சக்தி

பாலூட்டும் தாய்க்கு பால் உற்பத்திக்காக கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. இந்த கூடுதலாகத் தேவைப்படும் சக்தியின் அளவு, சுரக்கப்படும் பாலின் அளவு, பாலில் கிடைக்கும் சக்தியின் அளவு, உணவிலிருந்து கிடைக்கும் சக்தியை, பாலில் கிடைக்கும் சக்தியாக மாற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஒரு நாளுக்கு சுரக்கும் பாலின் சரியான அளவு 850 மி.லி/தினம் என்றும் பாலில் கிடைக்கும் சக்தியின் அளவு 65 கி.கலோரி/100மி.லி என்றும், உணவிலிருந்து கிடைக்கும் சக்தியை, பாலில் கிடைக்கும் சக்தியாக மாற்றும் ஆற்றல் 80% என்றும் கணக்கில் கொண்டு தினசரி கூடுதல் சக்தி தேவை, பாலூட்டும் முதல் ஆறு மாதங்களுக்கு 550 கி.க/தினம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு தரக்கூடிய சக்தியின் அளவையும் கருத்தில் கொண்டு இது கணக்கிடப்பட்டுள்ளது.

பொதுவாக நிறைய இந்தியத் தாய்மார்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்து பாலூட்டுவர். ஆனால் அப்போது பாலின் சுரப்புக் குறைந்து விடும். எனவே 6-12 மாதங்களுக்கு கூடுதல் சக்தித் தேவை 400 கி.க/தினம் என்று ICMR பரிந்துரைத்துள்ளது.

புரதம்

தாய்ப்பாலில் 115 கிராம் புரதம்/100 மி.லி உள்ளதால் பால் உற்பத்திக்காக, புரதத்தின் தேவையும் அதிகரிக்கிறது. பாலூட்டும் காலத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு 25கிராம்/தினம் 6-12 மாதங்களுக்கு 18 கிராம்/தினம் கூடுதலாக புரதம் பரிந்துரைக்கப்படுகிறது.

கொழுப்பு

ICMR தினசரி 45 கிராம், கண்களுக்குப் புலப்படும் கொழுப்பு உண்ணலாம் என்று கூறியுள்ளது. பாலிலுள்ள மொத்தக் கொழுப்பின் அளவு, தாயின் திட்ட உணவைப் பொருத்து அமைவது இல்லை.

ஆனால் பாலில் உள்ள கொழுப்பின் கூட்டமைப்பு, தாயின் உணவைப் பொருத்து மாறுபடுகிறது. மேலும் பாலூட்டவதற்குத் தேவையான கூடுதல் சக்தித் தேவையைச் சமாளிக்கத் தேவையான சக்தி அடர்வினை கொழுப்பு தருகிறது.

கால்சியம்

தாய்பாலில் 30-40 மி.கிகால்சியம்/100 மி.லி காணப்படுகிறது. ஒரு நாளுக்கு 850 மி.லி பால் உற்பத்தியாவதால் 300 மி.கி கால்சியம், தாய்ப்பாலில் காணப்படுகிறது. எனவே 300 மி.கி கால்சியத்தை தினமும் உற்பத்தியாகும் தாய்ப்பாலில் தக்க வைக்க, கூடுதல் கால்சியம், உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்கும் கால்சியத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன், பாலூட்டும் தாய்க்கு 60% மட்டுமே உள்ளதால் ICMR தினசரி 1000 மி.கி கால்சியம் பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கிறது.

இரும்புச்சத்து

பெரும்பாலான தாய்மார்களுக்கு பாலூட்டும் காலத்தில் மாதாந்திர தீட்டு சுற்று ஏற்படுவது இல்லை. (Lactational amenorrhea) தீட்டுச்சுற்று இல்லாதக் காரணத்தால் நாள் ஒன்றுக்கு 1 மி.கி இரும்புச்சத்து சேமிக்கப்படுகிறது. இந்த சேமிப்பே, தாய்பாலில் காணப்படும் மிகக் குறைந்தளவு இரும்புச்சத்தின் அளவை சமாளிக்கப் போதுமானது. எனவே பாலூட்டும் தாயின் இரும்புச் சத்து தேவை ஒரு சாதாரணப் பெண்ணுக்குரியத் தேவையான 30 மி.கி/தினம் ஆகும்.

வைட்டமின்கள்

வைட்டமின் A தாய்ப்பாலில் காணப்படும் வைட்டமின் Aயின் அளவைக் கொண்டே, கூடுதல் தேவை அமைகிறது. சராசரியாக 300 மை.கி. வைட்டமின் A தாய்ப்பாலில் சுரக்கிறது. எனவே ICMR கூடுதல் தேவையான 350 மை.கி. பரிந்துரைக்கிறது. அதாவது நாள் ஒன்றுக்கு தேவைப்படும் ரெட்டினால் அளவு 950 மை.கி ஆகும்.

தையாமின், ரைபோபிளேவின் மற்றும் நயாசின்

கலோரி மற்றும் புரதத் தேவைகள், பாலூட்டும் காலத்தில் அதிகரிப்பதால் இந்த வைட்டமின்களில் தேவையும் அதிகரிக்கிறது. கூடுதலாகத் தேவைப்படும் சக்தியின் அளவை அடிப்படையாகக் கொண்டு, இந்த வைட்டமின்களின் தேவையைக் கணக்கிட்டாலே பாலில் சுரக்கும் அளவை சமாளிக்கப் போதுமானது. எனவே பெரியவர்களுக்கு கணக்கிடும் முறையே இங்கும் கையாளப் படுகிறது. அதாவது 0.5மி.கி/1000 கி.க. 0.6மி.கி/1000 கி.க மற்றும் 6.6 மி.கி/1000 கி.க முறையே தையாமின், ரைபோபிளேவின் மற்றும் நயாசின் தேவைப்படும் அளவாகும்.

பைரிடாக்ஸின்

ICMR கூடுதலாக 0.5 மி.கி/தினம் பரிந்துரைக்கிறது. அதாவது கர்ப்பிணிக்கு கொடுக்கும் அளவான 25 மி.கி/தினம் போதுமானது.

போலிக் அமிலம்

தாய் பாலில் காணப்படும் போலேட் அளவு 2.5 மை.கி. ICMR இதன் அடிப்படையில் 50 மை.கி. தனித்த போலேட் பரிந்துரைக்கிறது. வைட்டமின் C அஸ்கார்பிக் அமிலம் நல்லூட்டம் உள்ள இந்தியத் தாய்க்கு சுரக்கும் பாலில் 20 மி.கி வைட்டமின் C காணப்படுகிறது. இந்த அளவுடன், சமைக்கும் போது 50% வைட்டமின் C வீணாவதைக் கருத்தில் கொண்டு அந்த அளவையும் சேர்த்து நாள் ஒன்றுக்கு கூடுதலாக 40 மி.கி வைட்டமின் C வீதம் 80 மி.கி வைட்டமின் C தேவை என்று ICMR பரிந்துரைத்துள்ளது.

இலகுவான வேலை செய்யும் பாலூட்டும் தாய்க்கான சைவ சீருணவு

 1. தானியங்கள் 330
 2. பயறுகள், பருப்பு வகைகள் 90
 3. பால் (மி.லி) 500
 4. வேர்களும் கிழங்குகளும் 100
 5. கீரைகள் 150
 6. காய்கறிகள் 100
 7. பழங்கள் 200
 8. சர்க்கரை 20
 9. கொழுப்பு மற்றும் எண்ணெய் 30 அசைவம் உண்பவர்கள் 30 கிராம் பருப்பு வகைகளுக்குப் பதிலாக 50 கிராம் மாமிசம்/மீன்/கோழிக்கறிமுட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

பாலூட்டும் காலத்திற்கான திட்ட உணவு

பாலூட்டும் தாய்க்கு, அதிக அளவில் பால் உற்பத்தியாகவும் பால்சுரக்கவும், உடலை வளர்க்கும் உணவுகள், உடலைப் பாதுகாக்கும் உணவுகள் மட்டுமன்றி சக்தி தரும் உணவுகளும் கூடுதலாக தேவைப்படுகிறது. அடிப்படை திட்ட உணவுக் கொள்கைகள் மட்டுமல்லாது கீழ்கண்ட வழிமுறைகளையும் பின்பற்றுவது அவசியம்.

 • பால் உற்பத்திக்கு அதிக அளவு திரவம் குடிப்பது அவசியம். எனவே பால், பழச்சாறு, பால் கலந்த பானங்கள் மற்றும் நிறையத் தண்ணீர், போதுமான திரவத் தேவைக்காக குடிக்கச் சொல்லி பாலூட்டும் தாயை வலியுறுத்த வேண்டும்.
 • பாலூட்டும் காலத்தில் பெருவாரியான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம். எந்த உணவையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வாசனை மிகுந்தப் பொருட்களும், மசாலாப் பொருட்களும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் அவை, சுரக்கும் தாய்ப்பாலிலும் அந்த வாசனையைக் கடத்தி குழந்தை பாலை குடிக்காமல் ஒதுக்கும் நிலை ஏற்படலாம். இப்பொருட்கள் தாய்க்கு வயிற்று கோளாறுகளை (gastric distress) ஏற்படுத்தலாம்.
 • பாலூட்டும் போது, எடுத்துக் கொள்ளப்படும் அனைத்து மருந்துப் பொருட்களும் அப்படியே உறிஞ்சப்பட்டு, தாயின் இரத்த ஓட்டத்தில் கலந்து பாலிலும் சுரக்கக் கூடியது.
 • எனவே பாலூட்டும் தாய்மார்கள் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது கண்டிப்பாக மருத்துவரின் கண்காணிப்பில் உண்ண வேண்டும்.
 • உணவுச் சத்துக்களின் தேவை அதிகரிப்பதால் உணவின் அளவும் அதிகரிக்கிறது. எனவே உணவு வேளைகளை 5-7 ஆக அதிகரித்து, முழு உணவு வேளைகளுக்கிடையில் சிற்றுண்டிகளை வழங்கலாம்.

தாய்க்குப் போதுமான திட்ட உணவு கிடைக்காதபோது ஏற்கனவே அவள் உடலில் உள்ள சேமிப்புகளிலிருந்து சத்துக்கள் உறிஞ்சப்பட்டு பால் உற்பத்தி சீராக வைக்கப்படுகிறது. இதனால் ஊட்டச்சத்துக் குறைவு அவள் குழந்தைக்கு ஏற்படுவதற்கு முன், தாய்க்கு ஏற்பட்டு விடுகிறது. வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த சில தாய்மார்களுக்கு குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவிற்குப் பாலூட்டும் ஆற்றல் காணப்படும். இரவில் அடிக்கடி குழந்தையைப் பாலுறிஞ்ச செய்வதால் நியூரோஹியூமோரல் ரிப்ளெக்ஸ் (neurohum0ral reflex) அடிக்கடி தூண்டப்பட்டு அதிக சுரப்பு ஏற்படலாம். எனவே அந்த தாய் ஊட்டச்சத்து குறைவால் மிகுதியாகப் பாதிக்கப்படலாம்.

எனவே போதுமான திட்ட உணவு தாயின் ஊட்டச்சத்து நிலையை சிறப்பாக வைப்பதுடன், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தேவையான சிறப்பான பால் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்க்கான உணவுப் பொருட்கள்

பால் உற்பத்திக்கு உதவும் உணவுகளே காலக்டோகாக்ஸ் (Galaactogogues) எனப்படும். பூண்டு, பால், பாதாம், பருப்பு ஆகியவை பால் உற்பத்தியை அதிகரிக்கும்.

உடலை வளர்க்கும் உணவுகளாகிய மீன் மற்றும் மாமிசம் பால் உற்பத்தியை அதிகரிப்பதாக, பாலூட்டும் தாய்மார்களிடையே நடத்திய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

ஓமம், (ajwain) வெந்தயம் சேர்க்கப்பட்ட விசேஷ தயாரிப்புக்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுக்கப்படுகிறது. இவை இரும்பு, புரதம், கால்சியம் மற்றும் B தொகுப்பு வைட்டமின்களைக் கொடுக்கவல்லது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மையம்

3.01333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top